Friday, February 14, 2020

விவசாயி

விவசாயி என்பது நேரடியாய்த் தமிழில்லை. அது தமிழ்வேரில் தொடங்கி ஒருவகை உருவம் பெற்றுப் பின் சங்கத வழித் திரிந்துவந்த சொல். இதைப் புரிந்துகொள்ள என்னுடைய சாத்தன் -1  என்னும் கட்டுரையைச் சற்று ஆழ்ந்து படியுங்கள். (http://valavu.blogspot.com/2018/07/1.html 4 வகைத் தொழிலார் இயற்கையாகவே புதுக் கற்கால நாகரிகத்த்தில் எழுந்தார். அக்கட்டுரையில் இருந்து கீழே  சில பத்திகளை  வெட்டியொட்டிப் பின் மறுமொழிக்கிறேன்.

---------------------------------
புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ..உ. மு 3000/2000 க்கும் முன்னர்) .குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தலெனத் திரிந்த பொழுது, கூர்த்த கல்முனைகொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை வெட்டித்தின்றதும். மீன்களைக் குத்திக்கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். பிழை பட்டுச் சரிசெய்யும் முறையில் செம்பும், இரும்பும் ஆக்கும் நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 3000/2000 க்கு அருகில், மாழை முனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக் குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவர்க்கே சொந்தமென உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக் கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக் கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதம் எழுந்தது. (வில் அடையாளம் சேரருக்கு.) விலங்குகளையும், வேற்று மாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலை நின்று, வில்வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியென ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவின் இழப்பைக் குறைத்து, மாற்றாரின் இழப்பைக் கூட்டப் பழந் தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகை செய்தது. இதற்கப்புறம் நேரடிச் சண்டையிற் கொலை செய்யச் சூலம்/வேலை விடச் செம்பு/ இரும்பால் ஆன அரிவாள்/கத்தி என்பது வாகாய் ஆனது. ஆதிச்ச நல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதங்களை நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு. 2000க்கும் முந்தையது. (இப்போது பொ.உ.900 என்று சொல்வதை நான் நம்பவில்லை. மேலும் ஆய்வுகள் நடக்கவேண்டும் என்று எண்ணுகிறேன்.) இரும்பு செய்தது பொ.உ.மு.1500/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து மோதின.

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறருங் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்து போனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இன குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். ஆயுதவழி பார்த்தால் முதல் வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். முதல்வகையார் மிகநிறைந்தும், அடுத்தார் இன்னுங் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவரேதோ வடக்கிருந்து வந்தார் என்பது ஒரு தலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்து சேர்ந்தவர் இணைந்து கொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார். வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்த இடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.

சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்>வார்மர்> வர்ம என்றும் சங்கதம் கையாளும்) இதேபோல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்று ஆக்கும். (தமிழில் நாம் அவரை அம்பின் வாயிலாய் வாணிகர் என்போம்.) சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). ”வேலைப் பகிர்வில்” தொடங்கிய தொழிற் பிரிவு நெடுங்காலங் கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசுக் காலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப் பட்டது. முட்டாள் தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்க காலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் இல்லாது போகும். அப்பன் வேலையை மகன் செய்வது இன்று மிகக் குறைந்துபோனது. ஆனாலும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினரென எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர்கள் வேறாகலாம். ஆனால் கருத்தீடு ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒரு குழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர்(>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் என்பார் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.
------------------------------------------------

இந்தப் பின்புலத்தோடு உங்கள் கேள்விக்கு வருகிறேன்.  முன்சொன்னது போல்  வில் என்பது தமிழ். வில்லில் அம்பு விடுவது வித்தை>விச்சை எனப் பட்டது. விச்சையர் பழங்குடிவாழ்வில் காவலுக்கும், விலங்குகளைக் கொன்று இறைச்சி தருவதற்கும் பொறுப்பானவர். ஒரு விலங்கு வேட்டையில் சூலத்தாரும், விச்சையரும் சேர்ந்தே போவர். நாளாவட்டத்தில் விலங்குளைத் தேடிப் போவதிலும் விட சில குறிப்பிட்ட விலங்குகளை தம் குழுவிற்கு அருகிலேயே வளர்த்து, அவற்றின் பாலைப் பருகி, தேவையான பொழுது வளர்த்த விலங்குகளையே கொன்று சாப்பிடுவது பழங்குடியினருக்கு வாய்ப்பாகப் போனது. முல்லை வாழ்க்கை இப்படித்தான் இயல்பாய்ப் பிறந்தது. மாடு, ஆடு, கோழி போன்ற குறிப்பிட்ட விலங்குகள் சாப்பிடுவதற்காகப் பயிரிடத் தலைப்பட்டார். அதை விச்சையரும், சூலத்தாருமே கவனித்துக் கொண்டார்.

இக்கவனிப்பில் பயிர் வளர்க்க, விச்சையார் தம் அம்பாலும், சூலத்தார் தம் சூலத்தாலும் நிலத்தைக் குத்திக் கிளறினார். விச்சையர் வேலை இருவேறு பகுதிகளானது. ஒருவர் வணிகராய் மாறினார் (அதையே சாத்தன் தொடரில் விவரித்தேன்.) இன்னொருவர் சூலத்தாரில் இன்னொரு பகுதியோடு சேர்ந்து உழவரானார். சங்கத வழிமுறை அவரை விதப்பான விச்சையாராகியது. வி-விச்சைய> வி-விசைய>விவசைய>விவசாய என்று அச்சொல் வளரும். இது சங்கதவழியில் ஏற்பட்ட வளர்ச்சி. தமிழ் வழியில் இதே ஆட்கள் வேலாளர்> வேளாளர் ஆனார். தமிழ் வழியில் இது வேளாண்மை எனப்பட்டது. சங்கத வழியில் இது விவசாயம். சங்கதச் சொல்லின் உள்ளே நம்முடைய வில்/வித்தை.விச்சை போன்றவையும் விதப்பு>வி என்ற கருத்தும் அடங்கியுள்ளன. ஆனால் விவசாயம் என்பது முடிவில் வடசொல் தான். நான் வேளாண்மை என்பதையே பயில முயல்வேன்.

தமிழ்த்தேசியர் விவசாயி என்ற சொல்லைத் தவிர்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி,

2 comments:

பொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்) said...

விவசாயம், விவசாயி தமிழ்ச் சொற்கள் தான் ஐயா.

மீ (=மிகுதி) + பசுமை + ஆயம் (=வருமானம், ஈட்டம்) = மீபசாயம் >>> விவசாயம் = மிகுதியான பசுமையை ஈட்டுதல்.

மேற்காணும் சொற்பிறப்பு முறைப்படி விவசாயம் தமிழென்றே தோன்றுகின்றது.

உங்களின் விரிவான விளக்கத்திற்கு நன்றி ஐயா.

Unknown said...

வேளாண்மையே தமிழ் சொல் விவசாயம் வடசொல்லே நன்றி அய்யா