Friday, February 28, 2020

பல்லக்கு - 1

அண்மையில்  மயிலாடுதுறை தருமபுரத்தின் புது ஆதீனகர்த்தர் தவத்திரு. மாசிலாமணி தேசிகர் பல்லக்கின் வழி செய்த  பட்டினநுழைவுகள் (2019 திச.13 இல்  தருமபுரத்திலும்,  2019 திச. 24 இல் வைத்தீசுவரன் கோயிலும், பின் திருநள்ளாறு கோயிலிலும்) பரபரப்பை உண்டாக்கின. பிப் 12 இல் திருப்பனந்தாள் காசிமடத்திலும் இப்படியே தேசிகர் நுழைவாரென்றதும், தி, க, வும், நீலப்புலிகள் இயக்கமும், வி, சி, க. வும் ”மனிதனை மனிதர் பல்லக்கில் தூக்கும் அடிமை முறையில் பட்டின நுழைவு  கூடாது.  மீறினால் கறுப்புக்கொடி காட்டி முற்றுகைப் போராட்டம் நடத்துவோம்” என்றார். தீவிர எதிர்ப்பை உணர்ந்த தேசிகர் பல்லக்கில் வருவதைத் தவிர்த்து, மாலை 7 மணிக்குச்  சகட்டில்  (car) வந்திறங்க,  காசிமடம்  முத்துக்குமாரத் தம்பிரான் வரவேற்க, பட்டின நுழைவு நடையில் முடிந்தது.   ”பல்லக்கில்லை” என முன்பே அறிவித்ததால், போராட்டக்காரரும் தம் போராட்டத்தை விலக்கி, ஆதீனகருத்தருக்கு நன்றி சொல்லிக் கலைந்து போனார்.

இச்செய்தி படித்தவுடன், எம்மூரில் நெடுநாட்கள் (அகுதோபர் 22 , 1957 இல்) முன்நடந்த  பழம்நிகழ்வு  ஒன்று நினைவுக்கு வந்தது. அதுநாள் வரை (தென்னை  ஓலைத் தட்டிகள் வேய்ந்த,  உலாவகைப்  பேச்சரங்குகளே (touring talkies) எம்மூரில் உண்டு. குறிப்பிட்ட நாளன்று (செங்கல், கற்காரை, ஆசுபெசுடாசால் கட்டப்பட்ட) ’அழகப்பா’ என்ற நிலைத் திரையரங்கம் (permanent theatre) தொடங்கியது, முதல்படமாய் SS Rajendran உடன் தேவிகா அறிமுகமான ”முதலாளி” வெளிவந்தது.  பிற்பகலில் திரண்ட கூட்டத்தில், சரவற்பட்டு  நுழைந்து, வங்கு (bench) நுழைசீட்டு வாங்கி விட்டோம்.  இதே நாளில் எம்மூருக்குச் சிருங்கேரி சாரதா பீடத்துச் சங்கராச்சாரியர் பல்லக்கில் வருகை தந்தார். அந்நாளுக்கு முன் வெள்ளிப் பல்லக்கை நான் பார்த்ததில்லை. ஊர்ப்பெரிய மனிதர் பலரும் அடுத்தூரிலிருந்து சங்கராசாரியர் அமர்ந்த பல்லக்கைத் தூக்கிவந்து எம் சிவன்கோயில் மண்டபத்தில் வைத்தார்.

[ஓர் இடைவிலகல். பொதுவாக காஞ்சி சங்கரருக்கும், சிருங்கேரி சங்கரருக்கும் ஆகாதென்பர். அல்லிருமை (அத்வைத) நெறியாரில் பெரும்பாலோர் சிருங்கேரி நாடுவர். கும்பகோணத்தில் இருந்த சிருங்கேரித் துணைமடமே ஒருகாலத்தில் முரண்டுபிடித்து விலகிப் புதுச்சடங்கு உருவாக்கிக் காஞ்சிக்குக் குடிபெயர்ந்தாரெனச் சிருங்கேரியார் கூறுவார். காஞ்சி தவிர்த்த 4 சங்கர மடங்களில் சாரதா பீடம் சற்று வேறுபட்டது. சிருங்கேரியார் விசயநகரப் பேரரசருக்கு அரசகுருவாய் இருந்தவர். எனவே பல்லக்கு, அணிகலன், பீதாம்பரம் என ஆடம்பரக் காட்சி கோலாகலப் படும்.  எம் ஊருக்கு அன்றுவந்த சாமியார் இற்றைச் சிருங்கேரியாருக்கும் முந்தையர். அவரோடு அற்றைக் காஞ்சி சந்திரசேகரை ஒப்பிட்டால் காஞ்சியார் எளிமையாகவே தெரிவார். இதற்கு மாற்றாய், இருவரின் சீடரைக் காணில், காலஞ்சென்ற செயேந்திரர் இற்றைச் சிருங்கேரியாரையும் விட ஆடம்பரமாயும், அல்லிருமை குறைந்தும் ஆன்மீகமுரைப்பார்.  இற்றைச் சிருங்கேரியாரோ மிக எளிமையானவர், இற்றை விசயேந்திரரை விட, ஆன்மீகக் கூட்டம் அவருக்கு இன்று அதிகமாகும். மரபுப் பரப்புரையும் பொருளுள்ள கதைகளும் அவரிடம் அதிகம் வெளிவரும்.]

1957 அகுதோபர் 22 ஆம் நாள் நிகழ்வை அல்லவா, சொல்லிக் கொண்டிருந்தேன்? மாலை 6 மணி அளவில் வயதான கூட்டம் கோயில் மண்டபத்திலும், இளைஞர் கூட்டம் திரையரங்கிலும் நிரம்பி வழிந்தது. பாத பூசை நடந்து, சாமியாரை வணங்கி, தெளிநீர் (தீர்த்தம்) பெற்று, திருநீறு பூசிய பின்தான் திரையரங்கம் செல்லலாமென எம் தாத்தா சொல்லிவிட்டார். தாத்தா சொல்லை மீற எம் போன்ற சிறுவருக்கு ஆற்றல் போதாது. ஆனாலும் மாலை மணி 6-15 க்குக் கோயில் மண்டபத்தில் இருப்புக் கொள்ளவில்லை.  படம் தொடங்கியிருக்கும் என்ற படபடப்பு வேறு. ஒரு வழியாக முட்டித் திணறிச் சாமியாரிடம் தெளிநீர், திருநீறு வாங்கித் திரையரங்கிற்கு ஓடி நுழைகையில் படத்தில் 10, 15 நுணுத்தங்கள் ஓடிவிட்டன,

ஏரிக் கரையின்மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே என்னக்கொஞ்சம் பாருநீயே!
அன்னம்போல நடைநடந்து சென்றிடும் மயிலே
ஆசைதீர நில்லுகொஞ்சம் பேசுவோம் குயிலே
 
என்ற பாடல் நேரத்தில் (https://www.youtube.com/watch?v=bmGnB9Z3nHg) நாங்கள் நுழைந்தோம். அருமையான வெண்டளை பயிலும் பழம்பாட்டு. கே.வி. மகாதேவன் இசையில் திகட்டும். ’முதலாளி’ படத்திற்கும், “ஏரிக்கரையின் மேலே” பாட்டிற்கும்,  பல்லக்கில்வந்த சிருங்கேரியாருக்குமாக, என் மூளையில் எப்படியோ தொடர்பு பதிந்துவிட்டது.   இனி இப் பதிவிற்கு வருகிறேன். பல்லக்கின் சொற்பிறப்பென்ன? வேறு சொற்கள் யாவை? எது மிகவும் தமிழரிடம் புழங்கியது?



10000 ஆண்டுகளுக்கு முன் இருக்கலாம். முல்லைத் தலைவன் கொஞ்சங் கொஞ்சமாய் கோனாகி, அரசனாகிய காலம். ஆநிரைகளைக் கவர்ந்ததோடு, ஆதிக்கம் சேரத் தொடங்கிய காலம். கோனின் அவை கூடியபோது அதுவரை கல்லில் அமர்ந்து பழகிய கோன், மூங்கில், மரத்தில் செய்யப்பட்ட கட்டிலில் அதிகம் உட்காரத் தொடங்கினான், கட்டப்பட்டது கட்டில், முல்லை மந்தைகளை மேய்த்த வண்ணம் ஓரிடம் விட்டு ஓரிடம் இனக்குழு நகர்கையில், கட்டிலும் நகர்ந்தது. அதிகாரம் கூடிய காலத்தில், தான் நடப்பதற்கு மாறாய், கட்டிலில் கோன் உட்கார,  தண்டுகொண்டு அது தூக்கி நகர்த்தப் பட்டது. இனமக்கள் தம் தலைவனைச் சுமப்பது அதிகார வெளிப்பாடே ஆயினும், வருக்கக் குமுகாயத்தில் அது நடந்தது. அரசுகட்டில் எனும் கருத்தீடு இப்படிப் பெரிதாகிக் கொண்டிருந்தது. எல்லா முல்லை நிலத்தாரும் அரசு கட்டில் என்ற பொதுப்பெயரை உருவாக்கிவிடவில்லை. ஒரு சிலரே பொதுப்பெயர் ஏற்படுத்தினார்.

மேலை நாட்டில் அரசுகட்டிலைத் throne என்பார். The oversized, bejeweled chair on which a king or queen sits is called a throne. Monarchs — kings and queens — sit on thrones on special ceremonial occasions, and so do religious figures such as bishops and popes. ஆங்கிலச் சொற்பிறப்பியலில் throne (n.) c. 1200, trone, "the seat of God or a saint in heaven;" c. 1300 as "seat occupied by a sovereign," from Old French trone (12c., Modern French trône), from Latin thronus, from Greek thronos "elevated seat, chair, throne," from suffixed form of PIE root *dher- "to hold firmly, support" (source also of Latin firmus "firm, steadfast, strong, stable," Sanskrit dharma "statute, law"). From late 14c. as a symbol of royal power. Colloquial meaning "toilet" is recorded from 1922. The classical -h- begins to appear in English from late 14c என்று வரையறை செய்வார்.

உ என்பது ஆணிவேர்ச் சொல்லில் உயரம், உங்கம் போன்றவை தோன்றின. இதன்வழி தகர முதலெழுத்தில் பிறந்த துங்கம் என்பது உயர்வைச் சுட்டியது.  (எந்தத் தமிழ் அகரமுதலியையும் தேடிப் பாருங்கள். இது தமிழில்லை எனில், அப்புறம் தமிழைத் தூக்கி ஓரங் கட்டிவிடலாம்.) தூங்குதல் = உயரத்தில் இருந்தல். தூங்கு கட்டில்/ மஞ்சம் = உயரத்தில் உள்ள கட்டில், தூங்கெயில் = உயரத்தில் உள்ள கோட்டை. (வானிலுள்ள கோட்டை என்று பல உரைகாரர் நம்மை நெடுநாள் புரியவிடாது செய்துவிட்டார் (தூங்கெயில் எனும்  என் கட்டுரைத் தொடரைத் தேடிப்படியுங்கள்.  முதற்கட்டுரையை மட்டும் நானிங்கு அடையாளங் காட்டுகிறேன். http://valavu.blogspot.com/2018/10/1.html. மொத்தம் 7 பகுதிகள் கொண்டது.)  துங்கம் என்பது உயர்ந்த பீடம். திருவோலக்க மண்டபத்தில் அரசன் அமரும் பீடம் உயர்ந்தேயிருக்கும்.  துங்கத்திற்கும் throne க்கும் உள்ள உறவு வியக்கற்பாலது. தமிழிய மொழிக்ளுக்கும் இந்தையிரோப்பியனுக்கும் நான் உறவு சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கேட்கத்தான் பலரும் தயங்குகிறார். சங்கதத்திலும் இச்சொல் உண்டு. तुङ्ग (m.tuGga) - துங்கம்,

வழக்கம்போல் ஆய்வுக் குறைச்சலில் இந்தியச் சொற்களுக்கு சங்கதமே அடிப்படை என ஆங்கிலச் சொற்பிறப்பியலார் சாதிப்பார். நான் அப்படிச் சொல்லேன்.  தமிழைப் போல் பீடமும் சங்கதத்தில் உண்டு. पीठ (n.pITha) - பீடம், भद्रपीठ (n.bhadrapITha) - பத்ரபீடம். பத்ரம் கண்டு வியக்க வேண்டாம்  தமிழில் ”அரசன் பட்டமேறினான்” என்கிறோமே, அதுவும் பீடப் பொருள் கொள்ளும். பட்டம் சங்கதத்தில் பத்ரமாகும். பத்ரபீடம் என்பது இரட்டைக் கிளவி.  गर्त (m.garta)- கருத்தம், என்பது ”கருத்தா அவையில் அமருமிடம்”. கருவறையில் இருப்பவர் கருத்தா. இறைவனும் மன்னனும் அக்காலத்தில் ஒன்று போல் கருதப்பட்டார். கருவறை போல் கருத்தம் - centre. இது தவிர அமருமிடம்  அமல்->அவல்- என்ற தமிழ்ப் பகுதி, அவசனம்>ஆசனம் என இருபிறப்பியைத் தோற்றுவிக்கும். அதன்வழி सिंहासन (n.siMhAsana) - சிம்மாசனம்,  सिंहविष्टर (siMhaviSTara) - சிம்மவிஸ்தாரம்,  वरासन (n.varAsana) வராசனம், भद्रासन (n.bhadrAsana) - பத்ராசனம், नृपासन (n.nRpAsana) நிர்ப்பாசனம்,  राजासन (n. rAjAsana) அரசாசனம் என்ற சொற்கள் சங்கதத்தில் எழும்,  இவை எல்லாமே கூட்டுச்சொற்கள்.

இனிக் கட்டலை யாக்கலென்றுந் தமிழில்  சொல்வர். (காஞ்சியின் அகத்துக் கரும்பருத்தி யாக்கும் தீம்புனலூர - அகம்.156, 6-7)  இயத்தலில் (=பொருத்தல்) விளைந்தது யாத்தல்  யாழ்>யாழ்க்கை> யாட்கை> யாக்கை = எலும்பு, தசை, நார் எனக் கட்டப்பெற்ற உடல். (மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு - குறள் 948; வடிந்த யாக்கையன் -புறம் 180-6) செய்யுள்கட்டப் பயனாவது யாப்பிலக்கணம்.  (மொழிபெயர்த்த அதர்ப்பட யாத்தல். தொல்.பொருள்.652); யகரமுதற் சொற்களோடு சகர முன்னொட்டைப் பலுக்கிச் சொல்வளர்ச்சிகள் ஏற்பட்டுள்ளன.

யாக்கை> சியாக்கை>சேக்கை ஆனது. சே(ர்)க்கை என்றாலும் கட்டிலே. (”நுரைமுகந்தன்ன மென்பூஞ் சேக்கை - புறம் 50). இதேசொல் தங்குமிடம் என்ற பொருளிலும்(புற்றடங்கு அரவில் செற்றச் சேக்கை - மணிமே. 4:117), பறவைக்கூடு என்ற பொருளிலும் (மாலும் அயனும் ஊரும் படர்சிறைப் புண்மாகம் இகந்து வந்திருக்கும் சேக்கை எனவும் - பெரியபு. சண்டே.4:5) வலை எனும் பொருளிலும் (புளிஞர் சேக்கைக் கோழிபோல் குறைந்து= சீவக. 449)  பயின்றுள்ளது. சே(ர்)க்கை செய்கை என்றும் சொல்லப்படும். இயற்கை அல்லாது  செய்யப்பட்டது செயற்கை.  சேக்கையை மஞ்சம் என்றும் தமிழில் குறிப்பர். मञ्च (m.maJca) மஞ்சம் எனும் சங்கதப் புழக்கம் அப்படியே தமிழ் போல் அமையும். தமிழிலிருந்து சங்கதம் புழங்கிய சொற்கள் மிகப்பல.

அன்புடன்,
இராம.கி.

No comments: