Friday, February 14, 2020

கூழ்முட்டை

ஒரு முறை முனைவர் இராசம்,, கலிபோர்னியாவில் தன் வீட்டுக்கருகில்  உள்ள துருக்கிக் குழந்தையோடு விளையாடிப் பழகியதைச் சொல்லி ”பாட்டி”யென தன் மழலை நண்பனைக் கூப்பிட வைத்ததையும், அவன் மூலம் தெரிந்துகொண்ட தமிழ் போல் ஒலிக்கும் துருக்கி மொழிச் சொற்கள் சிலவற்றையும் மடற்குழுவில் விவரித்தார். துருக்கி மொழியில் yumurta என்பது முட்டையைக் குறிக்குமெனச் சொல்லி, அதைத் தமிழ்ச்சொல்லான கூமுட்டையோடு தொடர்புண்டா என வினவினார். அப்படியெனக்குத் தோன்றவில்லை. சில மாற்றுக் கருத்துக்களைச் சொல்ல விழைந்து, முதலில் முட்டை, கூழ்முட்டை பற்றிச் சொன்னேன். 

முட்டை ஓட்டிற்குள் மஞ்சளும், வெள்ளையுமான 2 கருக்களுமே பாகுமை (viscosity) மிகுந்த, ஒன்றிற்கொன்று கலவாத, நீர்மங்களாகும் (liquids). (மண்ணெண்ணெய் தண்ணீரின் மேல் மிதப்பதை இங்கு எண்ணிப் பாருங்கள்.) தவிர, வெள்ளைக்கருவை ஓட்டோடு ஒட்டாதுபிரிக்கும் ஒரு படலமும் (membrane) உண்டு. கோழி முட்டையிடும்போது மஞ்சள்கரு மீச்சிறிதாயும், வெள்ளைக் கரு பெரிதாயும் இருக்கும். அடைகாக்கும்போது, தாய்க்கோழி தரும் வெம்மையைக் கொண்டு வேதிப் பொருள்களை வெள்ளைக்கருவிலிருந்து எடுத்துக்கொண்டு மஞ்சள்கரு வளர்கிறது. பனிக்குடம் போலிருக்கும் வெள்ளைக்கரு நாளடைவிற் குறைந்து, மஞ்சள்கரு பெரிதாகி, உறுப்புகள் வளர்ந்து உருவெடுத்து குஞ்சுபொரிக்கும் நேரத்தில் முட்டையுடைகிறது.

முட்டைகளைக் கிடங்கிற் காக்கையில் குலுக்கலின்றி, சற்று குளிரோடு முட்டைகளை வைப்பது தேவையாகும். ஒருவேளை தவிர்க்க முடியாத தீவிரக் குலுக்கலும், சற்று வெதுப்பும் வாய்த்துவிட்டால், மஞ்சள், வெள்ளைக் கருக்கள் தனித்தனி நீர்மங்களாயின்றி ஒன்று இன்னொன்றோடு கலங்கி விரவி முட்டை கெட்டுவிடும். அப்படிக் கலங்கித் தங்கிய முட்டைகள் சரியாகப் பொரிக்கா. தேவை யில்லா வேதி வினைகளால் சாப்பிடவுஞ் சுவைக்கா. உடம்பிற்கும் கெடுதலும் விளையும். ”எவ்வளவு நேரம் கலங்கிய தன்மை இருந்தது?” என்பதே அப்போது முகனக் கேள்வியாகும். அத்தகைய வற்றைக் கூழ்முட்டைகள் என்பார். கூழ்தல் = கலங்குதல் (to emusify). இதுவே பேச்சு வழக்கில் கூமுட்டையாகும். கலங்கிய மதியாளனையும் கூமுட்டையென்று வழக்கிற் சொல்வதுண்டு. இது வசவுப் பேச்சில் வெளிப்படும். 

சிலபோது செயற்கையாகவும் முட்டையுள்ளீட்டால் கூழ்மத்தை (emulsion) உருவாக்குவோம். ஆனாற் சிறிதுந் தேங்கவிடாது, சுட்டோ, வேகவோ, (கிளறியோ, கிளறாமலோ) பொரிக்கவோ செய்வோம். காட்டாக, ஓர் ஏனத்தில் முட்டைக்கருக்களை இட்டு [தேவைப் பட்டால் வெங்காயம், தக்காளி, குருக்கிழங்கு (carrot), மிளகாய், கொஞ்சம் உப்பு போன்றவற்றையிட்டுச்] சிறு கரண்டியால் கலக்கி (ஏனத்தில் 2 கருக்களும் ஒன்றோடொன்று மயங்குவதைக் காணலாம்.) கலவையை தோசைத் தட்டில் வார்த்து முட்டைத் தோசையாய்ப் (omelet) சுடுகிறோமே? இது தோசை வார்க்குமுன் செயற்கையிற் செய்வதாகும்.

முற்றிலுங் ’கொற்றிய முட்டை (scrambled egg; கொற்றுதல்>கொத்துதல்; கொத்துப் பரோட்டா போன்றது ஆனால் இது உதிரியாய் விழுது போலிருக்கும். சாப்பிடச் சுவையானது. நம்மூரில் அவ்வளவு விரும்பமாட்டார். மேலையர் விரும்புவார்.)’ செய்யும்போதும் மிக வேகமாய்க் கலக்கி முற்று முழுதாய்க் கூழ்மமாக்குவோம். கலக்கமில்லாது தட்டில் வார்த்து, வெள்ளைக்கருவை மட்டும் அரைவேக்காட்டிற் சுடவைத்து, மஞ்சள்கருவை பாதி நீர்மமாயிருக்கும் படியே தோசைத்தட்டிலிருந்து எடுத்தால் அதற்கு அரை வேக்காட்டு முட்டை (half-boiled egg) என்று பெயர். அடுத்து, ஏனத்தில் நீரிட்டுக் கொதிக்க வைத்து அதில் முட்டையை வேகவைத்தால் ’கொதி முட்டை (boiled egg)’ கிடைக்கும். முட்டைச் செய்மங்களில் இன்னும் பல்வேறு வகைகளுண்டு. 

இனிக் கோழி பற்றி வருவோம். தமிழில் இச்சொல் கிண்டும், கிளறும் பொருளில் எழுந்தது. (குள்>கொழு>கோழி = நிலத்தையும் குப்பையையும் கிளைத்துப் புழுவைத்தேடும் பறவை. கொழு = நிலத்தைக் உழும் காறு. கொழு>கொழுதுதல்>கோதுதல் = மயிர் குடைதல்; குள்>கிள்>கிளர்>கிளறு. இப்பொருளில் ஏராளஞ் சொற்களிருக்கின்றன.) இது போகப் புள்ளென்ற பொதுப் பறவைச் சொல்லும் விதப்பாகக் கோழியைக் குறிக்கும். எல்லாப் பறவைகளும் இரைதேடும் போது புள்ளிக் (குத்திக்) கொண்டிருப்பதால் பறவைகளுக்குப் புள்ளென்ற சொல் வந்தது. இச்சொல்லிற்கிணையாக இந்தையிரோப்பிய மொழிகளில் fowl என்பது காட்சியளிக்கும். Old English fugel "bird, feathered vertebrate," from Proto-Germanic *fuglaz, the general Germanic word for "bird" (cognates: Old Saxon fugal, Old Frisian fugel, Old Norse fugl, Middle Dutch voghel, Dutch vogel, German vogel, Gothic fugls "a fowl, a bird"), perhaps a dissimilated form meaning literally "flyer," from PIE *pleuk- (see fly (v.1)).

ஆங்கிலத்தில் இச்சொல்லைப் போக்கடித்த bird என்ற சொல் தமிழின் பறதைக்கு இணையானது. [பறவெனும் வினை, சிறகுகள் அடித்துக்கொண்டெழும் படபட/பறபற/பதபத ஒலிக்குறிப்பில் உருவான சொல்லாகும். (பார்க்க என் ”இறைவன்” கட்டுரை.) பறப்பது பறவை. பற+வ்+ஐ என்பதில் வரும் வ் உடம்படுமெய்க்கு மாறாக த் எனுஞ் சாரியை வந்தால் பற+த்+ஐ என்றாகிப் பறவை, பறதையாகும். இம்முடிப்பு இற்றைத்தமிழில் வழக்கில்லை. பறவைக்கிணையாய் இன்னொரு ஈற்றால் பறனையென்ற சொல்லை அட்லாண்டா சந்திரசேகரன் உருவாக்கினார். இப்பொழுதெல்லாம் அதையே வானூர்திக்கு (plane) மாற்றாகப் பயன்படுத்துகிறேன். பகுபகு என்ற படபடப்பொலியிலிருந்து உருவான பக்கியும் பறவையைக் குறிப்பதே. பாலியிலும் பாகதத்திலும் இச்சொல் அப்படியே பயிலும் சங்கதத்தில் பக்ஷி ஆகும். இதைத் தமிழில் மீண்டுங் கடன்வாங்கிப் பட்சியாக்குவோம். அதற்குப் பக்கியையே பயன்படுத்திப் போகலாம். தமிழுக்குக் கொஞ்சமாவது நெருக்கமாய் இருக்கும்.]
   
இன்றெல்லோருக்கும் பழகிய நாட்டுக்கோழி காட்டுக்கோழி/சாம்பற்கோழியிலிருந்து மாந்த இடையுற்றால் உருவானது. (சாம்பங்கோழி, சம்பங்கோழியென்றும் பேச்சுவழக்கிற் திரியும். பெரும்பாலான அகரமுதலிகள் சம்பங்கோழியையே பதிவாக்குகின்றன. பழைய நூற்றாண்டுப் புரிதல்களுக்கும் இற்றைப் புரிதல்களுக்கும் பெரும் இடைவெளியுண்டு. பல்துறை அறிஞர்களை பயன்படுத்தி உருவாகாத, அரைகுறைத் தமிழ் அகரமுதலிகளைப் பலகாலம் நான் குறைகூறி வந்திருக்கிறேன்.) இக்காட்டுக்கோழியை (ம.காட்டுக்கோழி; க.காடுகோழி; தெ. தெள்ள அடவி கோடி; து.காடுகோரி; மரா. (அ)ராண் கொம்ப்டி; கோண்டி. பர்தா கொம்ரி; இராசசுத்தானி. கொம்ரி; இந்தியில் ஜங்லி முர்கி) விலங்கியலில் Gallus sonneratii என்றும் பொதுவழக்கில் சாம்பற் காட்டுக்கோழி (grey junglefowl) என்றும் அழைப்பார். (இந்திச்சொல்லைத் தவிர மற்றவையெல்லாமே கோழியின் திரிவுகள் தான். இந்திச்சொல் <உருது<பெர்சியன் என்று விரியும். அதைக் கீழே பார்ப்போம்.)

’உலகமெங்கும் chicken என்று அழைக்கப்படும் கோழி’யின் மூதாதை தென்னிந்தியாவிற்கே சொந்தமென்றும் இதன் எவ்வளர்ச்சியே (evolution) மாந்தப் பரவலில் பல நாடுகளுக்கும் போனதென்றும், அறுதியாய் விலங்கியலார் சொல்வார். நம்மூர்க் குக்கன்/குக்கணம்/குக்குடம் தான் chicken க்கு இணையாகும். (குக்குடத்தைச் சிலர் அறியாது சங்கதச் சொல்லென்று சொல்வார். ’குக்குக்கெ’ன்று ஒலி யெழுப்புவதால் அப்பெயர் எழுந்தது. Old English cicen (plural cicenu) "young fowl," which by early Middle English had came to mean "young chicken," then later any chicken, from Proto-Germanic *kiukinam (cognates: Middle Dutch kiekijen, Dutch kieken, Old Norse kjuklingr, Swedish kyckling, German Küken "chicken"), from root *keuk- (echoic of the bird's sound and possibly also the root of cock (n.1)) + diminutive suffixes.)

கோழி பற்றிய தமிழ்ச்சொற்கள் பலவும் பல மொழிகளுக்குக் கடனாய்ப் போயிருப்பதில் வியப்பில்லை. இன்றைக்கிருக்கும் நாட்டுக்கோழிகளின் கால்களிலும் மற்ற சினையுறுப்புக்களிலும் இழையும் மஞ்சள்/பொன் நிறச் சாயலுக்கும் தமிழகத்திலிருந்த சாம்பற்காட்டுக்கோழியே காரணமாகும். சமயங்களில் இக்கோழி காட்டிலுலவும் செங் காட்டுக்கோழியோடும் (red junglefowl) கூடிக் கலப்பினங்களை உருவாக்கும். செங் காட்டுக்கோழியின் தலைக்கொண்டையும், தாடிச்சதையும் கடுஞ்சிவப்புக் காட்டிநிற்கும். சிவப்பும் மஞ்சளும் விரவிய கோழியை, உடம்பெல்லாம் ஆங்காங்கே மஞ்சளையும் குங்குமத்தையும் (காடிச் செறிவில் - acidic concentration -மஞ்சள், களரிச் செறிவில் - alkaline concentration - குங்குமம்) பட்டையாய்ப் பூசிய சாம்பவர்கள் தங்கள் மருதநிலத்தில் விரும்பி வளர்த்ததும், அவரின் பேரூர் கோழியூர் (உறையூர்) என்றானதும், இன்னொரு துறை சாம்பாபதி>சம்பாபதி (காவிரிப்பூம்பட்டினம்) என்றானதும் வியப்பில்லை. அவரே கோழியர் (என்ற சோழியர்) இன்ற இனக்குழுவும் ஆனார். மருதநிலத்தில் கோழியும் எருமையும் முகன்மை உயிரிகளாகும்.

அளவிற்கு மீறிய மாந்த இடையூற்றால், மஞ்சள் சாயலே இல்லாத வெள்ளைக்கால் கோழிகள் (white leg-on chicken) பண்ணைக் கோழிகளாய் (broilers) வளர்க்கப்பட்டு, பல்வேறு கொழுப்புச் சத்துகளைக் கொடுத்து வேதிப்பொருள்களால் கொழுக்கவைத்து, அவை நோயில் இறந்துவிடாதிருக்க நோய்த்தடுப்பு (antibiotic) மருந்துகளைக் கொடுத்து (இந்தக் கோழிக்கறியை மாந்தர் சாப்பிடும் போது அளவிற்கு மீறிய நோய்த்தடுப்பு வேதிகளை மாந்தர் உடலுக்குள்ளும் ஏற்றி, அதன் மூலம் வெருவிகள் (viruses), பட்டுயிரிகள் (bacteria) ஆகியவை எந்த நோய்த்தடுப்பு மருந்திற்கும் கட்டுப்படாது ஆக்கி) ஒரே கந்தரகோளம் ஆக்கிவிட்டார்கள். கூடியமட்டும் பண்ணைக்கோழிகளைச் சாப்பிடாமல் நாட்டுக்கோழிகளைச் சாப்பிடுவதே நல்லது என்பது பலருக்கும் புரியமாட்டேம் என்கிறது. இந்த மஞ்சற்சாயல் போன கோழிமுட்டைகள் முற்றிலும் வெள்ளையோட்டோடு பளிச்சென்றிருக்கும் நாட்டுக்கோழி முட்டைகள் சற்று புகர்/குரால் நிறத்தோடு அளவிற் சிறியதாய்க் காட்சியளிக்கும். பண்ணைக்கோழி முட்டையின் மஞ்சட்கரு வெளிர் மஞ்சளாய்க் காட்சியளிக்கும். நாட்டுக்கோழி முட்டையின் மஞ்சட்கரு சற்று சந்தனநிறத் தோற்றங்காட்டும் மஞ்சளாய் இருக்கும்.

கோழி முட்டையால் இற்றை மாந்த இனம் பெரிதும் வளங்கொண்டதும் உண்டு; சீரழிந்ததும் உண்டு. இனி yumurta விற்கு வருவோம். துருக்கிமொழி பின்னொட்டுப் புழங்கும் மொழி. (தமிழும் 100க்குத் 99 பின்னொட்டுக்கள் புழங்கும் மொழிதான். மிக அரிதாய் முன்னொட்டுக்கள் புழங்கும்.) துருக்கிமொழி அல்தாயிக் கொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் மங்கோலியன், மஞ்ச்சு, சப்பானீய மொழிகளையும் சேர்ப்பர். yumurta என்பதில் ta என்பது இற்றைத் துருக்கி மொழியில் பின்னொட்டாகும். The addition of suffix -da/-ta என்பதற்கு in on at என்ற பொருளையே சொல்கிறார்கள். காட்டாக, என்பது odada [oda-da] in the room என்றும், yatakta [yatak-ta] என்பது on the bed என்றும் பொருள்படும்.தமிழில் இல் என்று பொருளை ta விற்கு இணையாகக் கொள்ளலாம்.

அடுத்து yumurta என்பது Old Turkic இல் yumurtka, yumurga என்றும், Proto-Turkic இல் *jumurtka ‎(“egg”) என்றுமாகும். இதனுள் murg/murk என்ற சொல் நடுவே அடங்கியுள்ளது. அது பெர்சியனில் பறவை/கோழி (murg in persian bird, fowl) என்றே பொருள்கொள்ளும். இன்னொருசொல்லாக சிம்முர்க் என்றசொல் கழுகுப்பறவையைக் குறிக்கும். ஆங்கிலத்திலும் இது கடன்வாங்கப்பட்டுள்ளது. [Simurgh Etymology: from Pers. سیمرغ simurgh, from Pahlavi sin "eagle" + murgh "bird." Cf. Avestan saeno merego "eagle," Skt. syenah "eagle," Arm. ցին cin "kite.". a supernatural bird, rational and ancient, in Pers. mythology. தமிழிலும் உயரப் பறக்கும் பருந்திற்குச் சேணம் என்றும் பெயருண்டு. சேண் = உயரம். சிம்முர்க்கை இங்கு சொன்னதின் காரணம் முர்க் என்ற சொல் பறவை என்ற பொதுப்பொருளில் புழங்குவதைக் குறிப்பதற்குத் தான். துருக்கிக்கும், ஈரானுக்கும் அருகில் உள்ள பல்வேறு இன மக்களும் murgh என்ற பெயரையே கோழிக்குப் பயன்படுத்துகிரார். அது ஈரானுக்கும் கிழக்கில் ஆப்கனித்தான், பாக்கித்தான் (உருது), வட இந்தியா (இந்தி) வரை பரவியுள்ளது. நீங்கள் எந்த வட இந்திய உணவுக்கடைக்குப் போனாலும் முர்க் பன்னீர், முர்க் மொசெல்லம், முர்க் கறி என்று விதவிதமாய்ச் சொல்வர். இந்த முர்க் என்ற சொல் எப்படியெழுந்ததென்று என்னால் இன்னுந் தெளிவாய்ச் சொல்லமுடியவில்லை. கோழி இங்கிருந்து தான் போனது. ஆனால் முர்க் என்ற பெயர் இத்தனை நாடுகளில் எப்படிப் பரவியது? வியந்து கொண்டிருக்கிறேன். அதேபொழுது, இதற்குப் பறவை என்ற பொருள் இருப்பது புரிகிறது.

அடுத்தது முன்னால் வரும் yu/ju என்னும் வினைச்சொல். கூகுளாண்டவர் மூலமாய்ச் செய்தி தேடியதில் கீழுள்ள செய்திகள் தெரிந்தன.

The stem may be derived from Common Altaic *úmu 'to bear, give birth' q. v., see АПиПЯЯ 58, 281, Дыбо 10, Лексика 149. The Turkic form, however, must have also been influenced by PA *nā̀mo 'testicle' (and/or *ǯi̯ŏmu `round'), which explains initial *j-.
altet-prnum,altet-meaning,altet-rusmean,altet-turc,altet-mong,altet-tung,altet-reference,

Egg, Proto -Altaic *omu(r)-tkV
Middle Mongolian omdegen (o with umlaut) < Proto-Mongolian *Omdegen
Literary Manchu UmxanCf:Proto Turkic *jumurtka (>Turkish yumurta), Proto-Japanese *um - (> Japanese umu 'give birth' u with umlaut

அதாவது ”கோழியில் (இருந்து) வெளிவந்தது” என்றே yumurta விற்குப் பொருளாகிறது. அதாவது இச்சொல் அடிப்படையானதல்ல. சுற்றிவளைத்து விளக்கம்போல் எழுந்த சொல் வரையறை. இது தற்செயலாக நம்முடைய முட்டையோடு ஒலிப்புக்காட்டுகிறது. அவ்வளவுதான்.

நம்முடைய முட்டை (ஓட்டால்) மூடிய கோளமான பொருளைச் சொல்லும் பொதுச்சொல். அது கோழிக்கான விதப்புச்சொல் அல்ல. வாத்து முட்டை, கோழிமுட்டை, குருவிமுட்டை என்று பல்வேறு முட்டைகளுக்குப் பொதுவான சொல். அப்படியானால் yumurta என்பது துருக்கிமொழியில் கோழிமுட்டையைமட்டுங் குறிக்கிறதா என்றாலில்லை. எப்படித்தமிழில் எள்நெய்>எண்ணெய் என்ற விதப்புச் சொல் இன்று மண் எண்ணெய், தேங்காய் எண்ணெய் நல்ல எண்ணெய், விளக்கு எண்ணெய் என்று கூட்டுச்சொற்களில் ”எண்ணெய்” என்று பொதுப்பொருளை உருவக்குகிறதோ, அதுபோல yumurta என்பது தன் (கோழி) விதப்புத்தோற்றம் இழந்து பொதுத்தோற்றம் காட்டுகிறது.

just egg.

அன்புடன்,
இராம.கி. 

பி.கு. இது ஒரு பொதுவான புலனம் என்பதால், நான் வழக்கமாய் அனுப்பும் 3 மடற்குழுக்களுக்கும் அனுப்புகிறேன். என்னைப் பொறுத்துக்கொள்ளுங்கள்.

No comments: