Friday, February 28, 2020

பல்லக்கு - 2

இனி நிலைக் கட்டிலுக்கு மாறாய், நகர்த்தியெடுத்திச் செல்லும் கட்டிலுக்கு வருவோம்.  அரசுகட்டிலுக்கும் பல்லக்கிற்கும் உள்ள தொடர்பு தமிழ்ச் சொற்களை ஆயும் போது தான் கிட்டியது. இதைச் சங்கதம் உட்பட்ட இந்தையிரோப்பியன் மொழிகள் வெளிப்படுத்தவில்லை. அவை வெறும் படுக்கையோடு பல்லக்கைத் தொடர்புறுத்தும். ஆழ்ந்து ஓர்ந்தால் அது சரியில்லை. பல்லக்கிற்கும் பல்வேறு வண்டிகளில் இருக்கும் கூடுகளையும் பார்த்தால் ஒற்றுமை புலப்படும். பல்லக்கில் விலங்கிற்கு மாறாய் மாந்தரே பயன்படுகிறார்.   

சிவிகை என்ற பழஞ்சொல்லிற்கு வருவோம். செய்கையிலிருந்து, செய்விக்கை எனும் பிறவினை வழிப்பிறந்த பெயர்ச்சொல் அதே பொருளில் உருவாகும்  செய்விக்கை>செவிகை> சிவிகை எனப் பலுக்கத் திரிவில் இது மாறும். முந்தைக் காலப் பேரிலக்கியங்களில் சிவிகையே, பெரிதும் பயன்பட்டது.  கீழ்வரும் காட்டுகளை பேரா. பாண்டியராசாவின் http://tamilconcordance.in/ மூலம் அறிந்தேன். ”அறத்து ஆறு இது என வேண்டா சிவிகை   பொறுத்தானொடு ஊர்ந்தான் இடை” என்பது குறள் 4:7. குறளின் காலம் சிலப்பதிகாரத்திற்கு 100 ஆண்டுகளாவது முந்தையது என்பது பல அறிஞரின் கணிப்பு. சிலம்பின் காலம் கி.மு. 75 என்பது என் கணிப்பு. எனவே குறளின் காலம் என் கணிப்பில் பொ.உ.மு. 175. ”வையமும் சிவிகையும் மணி கால் அமளியும்” என்பது சிலம்பின் மதுரைக்காண்டத்தில் 14/126 இல் வரும் வரி. அடுத்து “சகடமும் தண்டு ஆர் சிவிகையும் பண்ணி” என்பது பரிபாடல் 10/17 இல் வரும் வரி (பரிபாடல் காலம் பெரும்பாலும் கி.மு.50 ஆகலாம் என்று என் சிலம்பின் காலம் நூலில் கூறினேன்.)

சிந்தாமணியில் ”சிவிகை” 7 இடத்திலும்  [போந்து காய் பொன் சிவிகை நல் போதகம் - சிந்தா:4 858/3; இரும் களிறு எய்த ஓட சிவிகை விட்டு இளையர் ஏக - சிந்தா:4 975/2; திரு மணி சிவிகை ஏறி செம்பொன் நீள் மாடம் புக்காள் - சிந்தா:9 2069/3; காய் கதிர் சிவிகை செற்றி கலந்தவை நுரைகள் ஆக - சிந்தா:10 2178/2; சீரிய துறவொடு சிவிகை ஏறினார் - சிந்தா:13 2628/3; கடி நிரை சிவிகை ஏறி கதிர் மணி குடை பின் செல்ல - சிந்தா:13 2650/2; சேய் நிற சிவிகை சேர்ந்தான் தேவர் கொண்டு ஏகினாரே - சிந்தா:13 2998/4], ”சிவிகைகள்” ஓரிடத்திலும் [தொழு தகு சிவிகைகள் சூழ போய பின் - சிந்தா:13 2630/2] ”சிவிகையின்” ஓரிடத்திலும் [மாட மா மணி சிவிகையின் மயில் என இழிந்தார் - சிந்தா:12 2379/3], ”சிவிகையும்” ஈரிடங்களிலும் [திருந்து பொன் தேரும் செம்பொன் சிவிகையும் மிடைந்து தெற்றி - சிந்தா:4 972/1; சூழி யானையும் துளங்கு பொன் சிவிகையும் உடையான் - சிந்தா:12 2386/3] பயின்று வந்துள்ளன.

இதேபோல் கம்பராமாயணத்தில், “சிவிகை” 4 இடத்திலும் [சென்றன தரள வான் சிவிகை ஈட்டமே - பால:14 18/4; மாவினில் சிவிகை தன் மேல் மழை மத களிற்றின் வைய - ஆரண்:10 169/3;துன்னின சிவிகை வெண் கவிகை சுற்றின - கிட்:11 121/4; தேரினில் சென்றனன் சிவிகை பின் செல - கிட்:11 122/4], “சிவிகை-தன்” ஈரிடங்களிலும் [ஐ_இருநூறு சூழ ஆய்மணி சிவிகை- தன் மேல் - பால:14 63/3; குரு மணி சிவிகை-தன் மேல் கொண்டலின் மின் இது என்ன - பால:14 64/3] “சிவிகையில்” ஈரிடங்களிலும் [சிவிகையில் அன்னம் ஊரும் திசைமுகன் என்ன சென்றான் - பால:14 70/4; தேர் மிசை வருவாரும் சிவிகையில் வருவாரும் - பால:23 35/1], “சிவிகையின்” ஈரிடங்களிலும் [இழிந்த தாயர் சிவிகையின் ஏற தான் - அயோ:13 71/1; வேந்தர் ஆதி சிவிகையின் வீங்கு தோள் - அயோ:14 12/3], ”சிவிகையும்” ஓரிடத்திலும் [தேரும் மாவும் களிறும் சிவிகையும்   ஊரும் பண்டியும் ஊருநர் இன்மையால் - அயோ:11 34/1,2] பயில்கின்றன.

பெருங்கதையில்  சிவிகை  மூன்றிடங்களிலும் [மல்லர் பூண்ட மாட சிவிகை பல் வளை ஆயத்து பைம்_தொடி ஏறலும் - உஞ்ஞை 38/255,256; சிலத மாக்களொடு சிவிகை வருக என - மகத 13/11; வாயிலுள் வைத்த வண்ண சிவிகை ஏறல் நன்று என கூறி வைத்தலின் - மகத 13/42,43], ”சிவிகையில்” என்பது மூன்றிடங்களிலும் [தொகு வேல் முற்றம் சிவிகையில் போந்து - உஞ்ஞை 36/131; கை புனை சிவிகையில் கஞ்சிகை நீக்கி - உஞ்ஞை 47/199; சிறப்பு உடை மாதரை சிவிகையில் தரீஇ - வத்தவ 7/15], ”சிவிகையொடு” ஈரிடங்களிலும் [சே ஒளி சிவிகையொடு சே_இழைக்கு ஈய - மகத 22/71; திரு கிளர் சிவிகையொடு சிலதரை விடுத்தலின் - மகத 22/108]

“சிவிகையும்” ஏழிடங்களிலும் [ செண்ண சிவிகையும் தேரும் வையமும் - உஞ்ஞை 37/269; கை புனை சிவிகையும் கச்சு அணி மாடமும் - உஞ்ஞை 38/43; ஊர்தியும் பிடிகையும் சீர் கெழு சிவிகையும் வையமும் தேரும் வகை வெண் மாடமும் - உஞ்ஞை 42/17,18; வையமும் சிவிகையும் கை புனை ஊர்தியும் - உஞ்ஞை 44/115; தேரும் வையமும் சிவிகையும் பண்டியும் - இலாவாண 12/35; திரு மணி சிவிகையும் பொரு வினை படாகையும் - மகத 23/33; பிடியும் சிவிகையும் பிறவும் புகாஅள் - வத்தவ 15/114] “சிவிகையுள்” நாலிடங்களிலும் [பளிக்கு மணி சிவிகையுள் விளக்குறுத்தது போல் - உஞ்ஞை 42/64; கஞ்சிகை சிவிகையுள் கரணத்து ஒடுங்கி - உஞ்ஞை 47/172; கட்டளை சிவிகையுள் பட்டு அணை பொலிந்த - மகத 13/46; திரு அமர் சிவிகையுள் சுமந்தனர் கொணர்ந்து - வத்தவ 16/3] பயில்கின்றன. இதுபோக கலிங்கத்துப் பரணி, வில்லிபாரதம், தேவாரம் போன்றவற்றிலும் காட்டுகள் உண்டு.

நாளாவட்டத்தில் முல்லை வாழ்க்கையின் முடிவில் மருத ஒருங்கிணைப்பு தோன்றிய பின் சிவிகைகளின் ஆக்கம் பல்வேறாயின. பாதி மூடியது, முற்றிலும் மூடியது, மணிகள் இழைத்தது, வளைந்து நெளிந்த தண்டு கொண்டது, மூங்கில் தண்டால் ஆனதென சிவிகைகளின் அடவுகள் பல வாறாய் விரிந்தன. கீழே தருமபுர ஆதீனம் வந்த தண்டிகை(ப் பல்லக்கைக் காணுங்கள். தண்டிகை  விதப்பால் அந்தப் பல்லக்கு அப்பெயர் பெற்றது.  கூர்ந்து பார்த்தால் தண்டில் தொங்கிவரும் கட்டில் போல் அது தெரியும். இதைத் ”தொங்கு மஞ்சம்” என்றும் சொல்வார்.



அடுத்து யாணமென்ற சொல்லும் கட்டைக் குறிக்கும். யாணத்தில் கூட்டுச் சொற்கள் உண்டு.  ஒட்டியாணம் = ஒட்டில் (=இடுப்பில்) கட்டும் அணிகலன், கலியாணம் = ஆரவாரத்தோடு மணமக்களை கட்டுவிக்கும் விழா. யாணும் தொழில்வினைஞர் யாணர் ஆவார். கல்தச்சர், மரத்தச்சரென இருவரையும் இச்சொல் குறித்தது. யாத்தலை வைத்து  யாத்திரை (= கட்டப் பட்ட செலவு - preplanned trip) என்ற சொல்லும் எழுந்தது. யாணம்>யானம் ஆகிக் கட்டப்பெற்ற ஊர்தி/சிவிகைகளைக் குறித்தது. “வாகன யானம் கண் மிசைக் கொண்டார்” என்பது பெரியபுராணம் தடுத்தாட். 20 ). யானமென்ற சொல் கட்டப்பட்ட மரக்கலத்தையும் (சூடாமணி நிகண்டு) குறிக்கும்,   யானம் என்பது யானிகம்>ஆனிகம்>அனிகம் என மேலும் திரிந்து பல்லக்கைக் குறிக்கும்.

இனிப் பல்லக்கு என்ற தலைப்பிற்கு வருவோம். இது தான் இன்று பரவலான சொல். அட்டப்பல்லக்கு, குமாரப்பல்லக்கு, கூட்டுப்பல்லக்கு, சிங்கமுகப் பல்லக்கு, தந்தப்பல்லக்கு, பச்சைப்பல்லக்கு, பூப்பல்லக்கு, பூம்பல்லக்கு, பெட்டிப்பல்லக்கு, முத்துப்பல்லக்கு, மூடுபல்லக்கு, மேனாப்பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, அரத்தினப் பல்லக்கு, அந்தூல்பல்லக்கு, கூடாரப்பல்லக்கு என விதம்விதமாய் பல்லக்குகள் அமையும். பல்லக்கு, பல்லாக்கென்றும் சொல்லப்படும். பொருளை ஆழ ஓர்ந்தால், பல்லாக்கு பெரும்பாலும் முதலாயும் பல்லக்கு பிறகும் எழுந்த சொற்களோ எனத் தோன்றுகிறது.



பல்லக்கின் மென்திரிவாய் பல்லங்கம் எழும். பாகதத்தில் பல்லங்க/ பரியங்க என்றும், கன்னடத்தில் பரியங்க, பல்லக்கி என்றும், மலையாளத்தில் பல்லக்கென்றும் புழங்கும். தமிழ் அகரமுதலியில் ”அங்கம்” கட்டிலைக் குறித்து வரும். ”அணையங்கம் மீதே” என்பது திருப்புகழ் 128. ”தந்தப் பல்லக்கும் சிவிகையும் தாங்கி” என்பது தொண்டை. சத. 87.  “எழுவாப் பல்லாக்கு ஆளாக்கினான் பல்கலை தேர்வேந்தனும்” என்பது இன்னிசை.14.  “பல்லக்கு” 300/400 ஆண்டுகளுக்கு முன் தமிழில் பல்லக்கு இருந்ததா என்பது கூட ஐயமே. 16 ஆம் நூற்றாண்டுச் சூடாமணி நிகண்டு, “வையம், தண்டிகை, அனிகம், யானம்” என்பவற்றை மட்டுமே பல்லக்கிற்கு இணையாய்க் காட்டும்  அதிலும் வையம் என்பது கூட்டுவண்டியைக் குறிப்பதால், பல்லக்கைக் குறிக்க வாய்ப்பில்லை. சகடம், வையம், பாண்டில் போன்ற கூட்டுவண்டிகளில் இருக்கும் கூடும் (chasiss) சிவிகை எனப்படும்.

பரியங்க என்பதைப் பரி+அங்கம் என்று ஒருசிலர் பிரிப்பர்  நம் வீடுகளில் இன்று புழங்குகிறோமே, sofa க்கள், அவற்றில் கைகளை இருபக்கம்  வைக்கவும், ஓரளவு முதுகைச் சாய்ந்துகொள்ளவும் (முற்றிலும் சாய்ந்து கொள்ளும் கட்டில் அரசனுக்குச் செய்வதாகும்.) அணைவு கொடுத்திருப்பர். இப்படி 3 பக்கம் பரிந்து (சுற்றி) ஓரளவு அணைவு கொடுப்பதை ”அர்த்த பரியங்க ஆசனம்” என்று செயின நூல்கள் கூறும்  (முழுதும் பரிவதை பரியங்க ஆசனம் என்பார்.) அவர்களின் தீர்த்தங்கர உருவங்கள் இதுபோன்ற ஆசனத்தில் அமர்ந்திருப்பதாய் உருவங் காட்டுவர். எல்லாப் பக்கமும் அணை கொடுத்தது (நாலு பக்கத்தோடு, கூரையும் சேர்த்தது) பரியங்கம் எனப்படும், இப் பரியங்கத்திலிருந்து தமிழ்ப் பல்லக்கு வந்தது என்று சிலர் தலைகீழ்ப் பாடம் படிப்பார். இது தவறு.

பல்லாக்கைப் பல்+ஆக்கு என்று பிரிக்கவேண்டும். யாக்கு>ஆக்கு = கட்டப் பட்டது. முன்னால் சொன்னோமே தூக்கிப் போகும் கட்டில் அதுவே ஆக்கு எனச் சொல்லப்படுகிறது. முன்னொட்டான பல், பல்லுதல் வினையின் பகுதி. பல், வினைத்தொகையாய் இங்கு நிற்கிறது. இப்பகுதியையும் ஆக்கையும் சேர்த்து பல்லாக்கெனும் கூட்டுப்பெயர் உருவாகும். பல் வேருக்குப் பல்லுதல்/பற்றுதல் பொருளுண்டு. சுவரில், கூரையில், பல்லி/பற்றிக் கொண்டு போகும்.  பல்+து = பற்று>பற்றி>பத்தி>பக்தி. பற்று>பத்து>பத்தம் = கட்டு. பற்றியது>பத்தியது = பொருந்தியது. பத்தி>பதி = உறைதல், பற்றுதல், இடம், ஊர் போன்ற பல பொருள்களுண்டு.. பதிதல்>பதித்தல் = நிலத்தில் காலால் பொருத்தல். பத-த்தல்>பாதம் = நிலம் பற்றும் உறுப்பு.  பாதம்,, பாதுகை, பாதை என்று இன்னும் பல சொற்களைச் சொல்லலாம். பல்லாக்கு>பல்லக்கு பாகதத்தில் நுழைந்த பின்னர், லகர>ரகரத் திரிவில் பர்யங்க ஆகி, மூலம் புரியாது நாம் செயின நூல்களைக் கடன் வாங்கையில் பரியங்கமானது. இதேசொல் சங்கதத்திலும் பரவியது. பல்லக்கிற்கு இணையான ஒலிச்சொல் வேறெந்த இந்தையிரோப்பியனிலும் கிடையாது. அதுவே தெற்கிருந்து சங்கதம் கடன்பெற்றது என்பதைக் காட்டும்.       
   
ஆங்கிலத்தில் பல்லங்கு என்பது palanquin (n.) என்று புழங்கும். "a covered litter, generally for one person, used in India and elsewhere in the East, borne by means of poles on the shoulders of four or six men," 1580s, from Portuguese palanquim (early 16c.), from Malay and Javanese palangki "litter, sedan," ultimately from Sanskrit palyanka-s "couch, bed, litter," from pari "around" + ancati "it bends, curves," related to anka-s "a bend, hook, angle," and meaning, perhaps, "that which bends around the body." Some have noted the "curious coincidence" of Spanish palanca, from Latin phalanga "pole to carry a burden." "The final nasal appears to have been a Portuguese addition as in mandarin, and is often absent from the forms given by early travellers ..."  என்பது ஆங்கில வறையறை..

மேலையரிடம் உள்ள சொல்லான litter (n.) இன் சொற்பிறப்பையும் பாருங்கள். c. 1300, "a bed," also "bed-like vehicle carried on men's shoulders" (early 14c.), from Anglo-French litere "portable bed," Old French litiere "litter, stretcher, bier; straw, bedding" (12c.), from Medieval Latin lectaria "litter," from Latin lectus "bed, lounge, sofa, dining-couch," from PIE *legh-to-, suffixed form of root *legh- "to lie down, lay." கட்டிலில் விழுந்தான் என்று நாம் சொல்வதை ஆங்கிலத்தில் "to lie on the bed" என்பர். lie>litter என்பதில் தகரம் எப்படிச் சேர்ந்தது? வியப்பில்லையா? விகரம் மறைந்தால் litter இன் உறவு புரியும்.

யானையில் வைக்கும் அம்பாரி தொட்டி எனப்படும்.  தொள்லப்பட்டது தொட்டி, தொட்டியில் சிறியது தொட்டில். தொள்>தோளி. வடநாட்டில் டோலி என்கிறாரே, அது இதுதான். தொள்ளப்பட்ட மரத்துண்டில் இன்னொருவரை உட்காரவைத்து இருவரோ, நால்வரோ துக்கிச் செல்வது தோளி எனப்படும், இதுவும் பல்லக்கு போன்றதே. தோளியின் இன்னொரு வகை நீரில் மிதக்கும். அர்த்த பரியங்கத்திற்கும், தோணிக்கும் தண்டு தவிர்த்தால் வேறுபாடில்லை. ஒன்று தோளில் தொக்கப்படுகிறது. இன்னொன்று நீரில் மிதக்கிறது. ஆந்தோணி = அழகிய தோளி என்பதும் பல்லக்கைக் குறிக்கும்.  சிலர் பாடையையும் தண்டுப் பல்லக்குப் போல்  அமைப்பார்.   பல்லக்கைக் குறித்த ஏனைய தமிழ்ச் சொற்களைப் பற்றி https://ta.quora.com/pallakku-enral-enna-atan-veru-tamilp-peyarkalait-tara-mutiyuma என்ற பதிவைப் பார்த்தேன். அதில் கொடுத்த அந்தளம், கச்சு, ஓகம் என்ற சொற்களை எங்கும் நான் கண்டேனில்லை.

பல்லக்கை இந்தக் காலத்தில் புழங்குவது தவறு தான். எப்படி மாந்தனை மாந்தன் இழுக்கும் rikshaw, cycle rikshaw போன்றவை அழிந்தனவோ அதுபோல் பல்லக்கும் அழியவேண்டியது தான். ஆனால் கோயில் புழக்கம் தொடரலாம்  என்றே  இன்னும் நினைக்கிறேன். சப்பரமும் பல்லக்கும் இல்லாமல் கோயில்விழாக்களை  எண்ணிப் பார்க்கமுடியவில்லை.

அன்புடன்,
இராம.கி.



No comments: