Monday, February 10, 2020

விஷயம்

விஷயம் என்ற சொல் பார்ப்பதற்கு வடமொழி போல் தோற்றினும், அதனுள் பொதிந்துள்ளது தமிழ் வேரே ஆறுமுக நாவலர் முனைப்பில் கிரந்த எழுத்தைத் தவிர்க்க விழைந்து அதே நேரம் வடசொற்களை விடத்தெரியாச் சிவநெறித் தாக்கத்தில் ஈழத்தமிழர் பலரும் விஷயத்தை விடயமாக்குவார். இதற்கு மாறாக ”விஷயம்” எழுந்த வகையை அலசியிருக்கலாம். இதன் மாற்றுச் சொல்லை நான் புகன்று 15, 20 ஆண்டுகளாயின. இணையத்தில் அதைச் சிலர் புழங்கினும், அவ்வளவாகப் பரவவில்லை என்றே சொல்ல வேண்டும். இது போன்ற சொற்பிறப்புச் செய்திகளை எங்கோ ஓரிடத்தில் எழுதிச் சேமிக்கும் படி பல நண்பர் சொல்லி யிருக்கிறார். ஆனால் ”வலியது நிலைக்கும்” என்று சொல்லி நான் நகர்ந்து விடுவதுண்டு. நண்பர் கூற்றை எத்தனை நாள் ஒதுக்குவது? எனவே கட்டுரையாய்த் தொகுக்கிறேன்.
புள்>பிள்>விள் என்ற வேர் ”பிள, பிரி, உடை” எனும் பொருள் சுட்டும் விள்ளித் தின்னும் பழம் விளம்பழம். இதில் இரு வகை உண்டு. கூவிளமென்பது சங்கதப் பலுக்கில் வில்லுவம்> வில்வமாகும். சிவனுக்கு உகந்தது என்பார். இந்தி, அசாமி, வங்காளி, மராத்தியில் bael. குசராத்தியில் பீலி. Aegle marmelos புதலியற் (Botanical) பெயர். கருவிளம் என்பது விளாம்பழமாகும். கபிப்ரியா, கபித்தம் என்ற சங்கதப் பெயரோடு, wood apple, Feronia elephantum என்றுஞ் சொல்வர். (பிள்ளையார் சதுர்த்தி, கலைவாணி பூசை, தமிழ் ஆண்டுப் பிறப்பு, பொங்கல் நாட்களில் விருந்தினருக்கு விளாம்பழந் தருவது ஒரு காலத்தில் தமிழ் மரபு.) யாப்பில் நிறைச்சீருக்குக் கூவிளம், கருவிளம் என்று பெயர்கள் உண்டு. இவற்றின் அடையாளந் தெரியாது பலரும் வாய்ப்பாடு சொல்வர். வடக்கே விளையும் கூவிளமும், தெற்கே விளையும் கரு விளமும் இனிய கனிகள். அதிக இனிப்பிற்கு வெல்லஞ் சேர்த்துக் குடிப்பதுமுண்டு. பல்வேறு மருத்துவ குணங்களை இரண்டிற்குஞ் சொல்வர். (இங்கு விரிக்கின் அவை பெருகும்.) 2 பழங்களுக்கும் பசுமை தோய்ந்த மஞ்சள் நிற ஓடுகள் உண்டு. உடையும் பழங்களாதலால் விளவம் பழங்களாயின. (விளவல் = உடைதல்.) கூம்பிய விளம் கூவிளமாயிற்று.(கூவிள இலை கூர்வேலாகும்.) விளா மரப்பட்டை கருநிறம் எனவே உருண்டை விளம் கருவிளம் ஆயிற்று. முள்ளுள்ள 2 மரங்களும் வறள்நிலத்தில் வளரக் கூடியவை பழத்தின் பெயர் அந்தந்த மரத்திற்குப் பெயரானது. மாம்பழப் பெயர் மரத்திற்கு ஆக வில்லையா?
விள்ளலின் இன்னொரு வடிவம் விண்டல். விண்டிய பழம் இரண்டாகும். விண்டு மலைத் தொடர் = இந்திய நாட்டை வடக்கு, தெற்கு எனப் பிரிக்கும் மலைத் தொடர். விண்டிய மலை என்னுஞ் சொல் வடவர் பலுக்கில் விந்திய மலையாகும். 2500 ஆண்டுகளில் விண்டிய மலையின் பொருள் மறந்தோம். (வெங்காலூர்க் குணா நமக்குச் சொல்லா விட்டால் இதைப் பலருமறியார்..) விளத்தல்= விலக்கல். விள்>விள>விளவு. விளவல் = உடைதல். to get split, to burst asunder. விளவு= நிலம், மலை முதலியவற்றின் பிளப்பு. விளாசல்= தரையிற் போட்டு அடித்தல். ”பிதிரை விள்” எனில் to solve as a riddle or conundrum என்று பொருள். விள்ளில் விளைந்த சொற்கள் கணக்கற்றவை. விள்ளியது விளையம்> விளயமாகும். ஒரு பக்கம் விளைதற் கருத்தில் விளைந்தது என்றும், இன்னொரு பக்கம் இரண்டான செய்தியுங் குறிக்கும். எத்தனையோ விளை பயிர்களில், கரு வளர்ச்சியில், ஒன்று இரண்டாவதே புதுத் தோற்றக் காரணம். வாழையடியில் ஒன்று இரண்டாகி கன்றெனத் தோற்றங் கொள்ளும்.
விள்> விடு ஆகிப் பிரிதலைச் சுட்டும். விடுதல், விடுதலை விடுப்பு, விடுபாடு, விடை என்று பிரிதற் பொருளில் நிறையச் சொற்களுண்டு. விள்> விடு> வெடு> வெடுக் என்பது சட்டெனப் பிரியும் செயலைக் குறிக்கும். வெடு> வெடி, விரிந்து சட்டெனப் பிரியும் பொருளைக் குறிக்கும். விள்>(வெள்)> வெட்டு = பிரி. வெட்டு> வேட்டு வெடிக்கும் பொருளைக் குறிக்கும். விள்> விடு> விடர்= மலை வெடிப்பு, குகை. விள்> விடு> வீடு= விட்டிருக்கும் இடம். விட= மிகவும், காட்டிலும். “அதை விட இது பெரிது.”. ஒன்றை ஒதுக்கி இதைப் பார்த்தால் இது பெரிதென்று பொருளாகும். விட என்பது விடுதற் பொருளிற் கிளைத்தது. விள்> விர்> விரி = பிளத்தல், வெடித்தல்; விரி> விரியம் = பிளவு. இது விரிசமென்றும் பேச்சு வழக்கிற் சொல்லப்படும்., விரிசலும் பிளவே.
விரிசயம் என்பது 2 தமிழ்ச்சொற்களின் வடபாற் பிணைப்பு. விர்சயம்> விர்ஸயம்> விஷயம் என்பது மிகச் சாத்தார வடமொழி பலுக்குத் திரிவு. இது போல், உருநமெனும் உச்சிச் சூடு ஸகர இடைநிலை பெற்று உர்ஸ்நம்> உர்ஸ்ணம்> உஷ்ணமாகும். கருநன் எனும் என் பெயர் க்ருஸ்நன்> க்ருஷ்ணனாகும், சுருக்கெனும் இஞ்சி வேர் சுர்ஸ்க்கு> சுஷ்கு ஆகும். விருடை என்னும் மாடு வ்ருஷமாகும்; விண்ணைக் குறிக்கும் விருணு> வ்ருஸ்ணு>வ்ருஷ்ணு ஆகும். ஏராளமான தென் சொற்கள் இதுபோற் திரிவு காட்டி வட சொற்களாகும். இவற்றினுள் வினைச் சொல் அடையாளந் தெரிந்தால் தமிழ் அடையாளத்தை நாம் காட்டிவிட முடியும். விள் என்ற வினைச்சொல் தெரிந்ததால் இங்கு விரிசயத்தைக் கண்டுபிடித்தோம். .
விரித்தம் என்பதும் விரிசலே. விரித்தம்>விர்த்தம்> வித்தமாகி விதத்திற்கு வழி செய்யும். விதம் = வேறுபட்டது. மாதிரி, வகை, பிரிவு. ஒவ்வொன்றும் ஒருவிதம் என்று வெவ்வேறு வகைகளைப் பிரிவுகளைச் சொல்கிறோம். விதத்தை ஏற்படுத்துஞ் செயல் வித்தாயம். வடவர் பலுக்கு முறையில் இது வித்யாயம்> வித்யாசமாகும். தாயக்கட்ட விளையாட்டில் 92 இல் நிற்கும் நீங்கள் 96 ஆங் கட்டத்தில் தாயங் கொள்ள (=தங்கிக் கொள்ள) 4 போட வேண்டுமெனில், அது சிறப்பான தாயம். அதை அடையும் வரை தாயக் கட்டையை வீசியிருக்க வேண்டியது தான். ஓராட்டத்தில் 10 விதத் தேவைகள் ஏற்படலாம். ஈறாறு போடு என்றால் எவ்வளவு நேரம் ஆகுமோ? மேலே (96-92) = 4 என்ற வித்தாயம் போட வேண்டியதால் சூதில் தேவையான, சிறப்பான தாயம் வித்தாயம் எனப்பட்டது. வித்தாயம் = difference. வேறுபாடு என்பதற்கான இன்னொரு நல்ல தமிழ்ச் சொல். விதிர் என்றாலும் difference தான். விதத்தல் = சிறப்பாதல். விதந்தோதல் = சிறப்பாக எடுத்துச் சொல்லல். விதப்பு = சிறப்பு. விதப்புக் கிளவி = சிறப்பு மொழி. விதப்பு விதி = சிறப்பு விதி. வித விடுதல் = சிறப்பித்துரைத்தல். விதிர்+ஏகம் = விதிரேகம் = வேறுபாடு கொள்ளல், எதிர்மறை, வேற்றுமையணி. விதுலம்/விதுரம் = ஒப்பின்மை. விதுலன்/ விதுரன் = ஒப்பு இல்லாதவன். (மகா பாரதத்தில் திருதிராட்டிரன், பாண்டு ஆகியோரின் (மாற்றாந் தாய் வழித்) தம்பி. விதண்டை = பிறர் கூற்றை மறுத்துத் தன் கொள்கை நாட்டாது வீணே கூறும் நிந்தை வாதம், பகை
விஷயம் என்பதை வெறுமே எழுத்துப் பெயர்ப்பால் விடயமாக்கிச் சொல்வதை விட, மூலம் போய் விதயம் ஆக்குவது நல்லதென்று முந்நாளிற் கூறி யிருந்தேன். விதத்தல் = வேறுபடுத்திக் காட்டல் (to differentiate, to speciate, to classify) என்றே பொருள் படும். விதமென்ற தன்வினைப் பெயர்ச்சொல் போல, விதயம் என்ற பிறவினைப் பெயர்ச் சொல்லுங் கிளைக்கும். விதயம் = செயல், புலன், புலனால் அறியும் பொருள், நூல் நுதலிய பொருள், காரணம், பயன்
special = விதப்பான, விதப்பானது
speciality = விதப்பு, விதுமை
specialist = விதப்பாளர், விதுமையாளர்
specialize = விதத்தல்
species = விதங்கள்
specific = விதப்பான
specify = விதப்பித்தல்
specification = விதப்பம், விதப்பிக்கை
specimen = விதமம்
specious = விதக்கக்கூடிய
speculate = விதந்தாடு
விடயம் என்று கொண்டால் இவ்வளவும் விதக்க முடியாது. ஊன்சர (sausage) மொழி போலத் துணைவினை போட்டு பண்ணித்தமிழ் செய்து கொண்டிருக்க வேண்டியது தான். விள் என்ற வேர் இதோடு நின்று விடாது. விர்> விறு> வீறு. வீறல்= பிளத்தல், வெட்டுதல் என்று நீளும்..வீறியது வேறு உறும். வீற்று = வேறுபடுகை, துண்டு. விறு> வெறு> வேறு = பிரிந்தது, பிறிது, கூறுபாடு. வேறு> வேற்று> வேற்றுமை என்றமையும். விளமென்றாலே அடம் பிடித்தவன், அகங்காரம் பிடித்தவன் என்று சிவகங்கை மாவட்ட வழக்கில் பொருள் கொள்வர். விளம் பிடித்தவனுக்கு எதையுஞ் சொல்லி விளக்க முடியாது. அவன் ஒரு விதம். விளமென்றால் நஞ்சென்றும் பொருளுண்டு. விளம்> விஷம் ஆவது சங்கதப் பலுக்கல். விளவாது பங்கு கொள்வது, பிறர்க்குப் பங்கில்லாமற் கொண்டது விளாப்பு எனப் படும். விஷேஷம் என்பது விதப்பமாகும் (மேன்மை, சிறப்பு, மிகுதி, வகை); விஷேடித்தல் = விதப்பித்தல் (சிறப்பித்தல், மிகுதியாதல், அடைகொடுத்துக் கூறல்) என்று பொருள் கொள்ளும். விஷேடியம் = விதப்பியம் (அடையடுத்த பொருள்). விதப்பியம் (விஷேடியம்) என்ற கொள்கையை உருவாக்கியவரே தமிழர் தான். அதைப் பற்றி எழுதத் தொடங்கினால் இன்னும் நீளும்.
முடிவாக இரு வேறு பயன்பாடுகள் சற்று விலகினாற் போலுண்டு. அவையும் விள்ளெனும் வேர்ச்சொல்லின் தொகுதி தாம். ஒரு விதமாய் விதந்து கூறுபவன் சில போது நகையும் வரவழைப்பான். விதூஷகன் = விதந்தகன் (நகைச்சுவை விளைப்போன்) இன்னொரு பக்கம் விதந்து கூறுபவன் விதண்டையாளனாயும் (விதூஷணம் = பெருநிந்தை) இருப்பான்.
அன்பன்,
இராம.கி.

1 comment:

ந.குணபாலன் said...

பங்கில்லாமற் கொண்டது விளாப்பு எனப்படும்,
மெத்த நன்றி ஐயா. இப்ப புழக்கத்திலை அருமையாய் கேட்கிற ஒரு சொல் ஞாவகத்துக்கு வந்தது.
எடுத்துக்காட்டாக ஒரு கூற்று:
அவர் நயினார் தனி விளாப்பிலை முழுப் பழத்தையும் மற்றவையளுக்கு தராமல் திண்டுபோட்டார்.