Monday, February 17, 2020

browser

இந்த நிரலியைத் தமிழில் ”உலாவி அல்லது மேலோடி” என்றழைப்பது (https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF) பலருக்கும் பழகியிருக்கலாம். ஆங்கிலத்தில் browse (v.) என்ற சொல்லிற்கு mid-15c., brousen, "feed on buds, eat leaves or twigs from" trees or bushes, from Old French broster "to sprout, bud," from brost "young shoot, twig, green food fit for cattle or deer," probably from Proto-Germanic *brust- "bud, shoot," from PIE *bhreus- "to swell, sprout" (see breast (n.)). It lost its -t in English perhaps on the mistaken notion that the letter was a past participle inflection. Figurative extension to "peruse" (books) is 1870s, American English” என்று வரையறை சொல்வர்.

வரையறை படித்தால் தமிழில் நாம் பயிலும் ”உலாவி” பொருத்தமாய்த் தெரியவில்லை. ஒரு தோட்டத்தில் இருக்கும் வெவ்வேறு செடிகள், மரங்கள், கொடிகளிலிருக்கும் தேனைத் தேடிப் போய் வெவ்வேறு மலர்களின் மேல் அமர்ந்து உறிஞ்சிய தேனீ, தேனடையில் கொண்டுவந்து தேனைச் சேர்ப்பது போல் இச்செயல் நிரலி வேலைசெய்கிறது. ஒப்புமையின் முழுமையைச் சற்று ஓர்ந்து பாருங்கள். செயல்நிரலி என்பது தேனீக்கு ஒப்புமை. நாம் தேடும் உள்ளுருமம் (information) என்பது தேனுக்கு ஒப்புமை உள்ளுருமம் கிடைக்கும் இடங்கள் செடி, மரங்கள், கொடிகளிற் பொலிந்து இருக்கும் மலர்களுக்கு ஒப்புமை. மலர்கள், மட்டுமின்றி, மொட்டுகள், இலைகள், கொட்டைகளென பலவற்றிற்கும் பொதுப்பெயர் ”பொலிவுகள்” என்பதாகும்.

browser என்ற நிரலிக்கு இணையாக, வெறுமே உலாவி/மேலோடி என்பது தட்டையாக அழைப்பதாய் எனக்குத் தென்படுகிறது. தேன்சேகரிப்பு ஒப்புமை எனக்கு உலாவியில் கிடைக்கவில்லை. ஆங்கிலச் சொல்லிற்கு இணையான ஆழ்ந்த பொருள் வேண்டுமெனில் நம்மூரின் பயிரியலுக்குள் வரவேண்டும். .புல்>பொல்>பொலி. பொலிதல் = செழித்தல். பெருகல், மிகுதல், விளங்கல், வயலில் விளைந்து கிடக்கும் பயிர்மணிகளைப் பொலி என்பது நம் ஊராரின் வழக்கம். இயற்கையில் விளைந்தோ, செயற்கை நுட்பங்களை இயற்கையோடு சேர்த்து விளைவிக்கப்பட்டோ கிடைக்கும் பொருள்கள் எல்லாம் நமக்குப் ”பொலிவுகளே”. இது ”விளைவுகள்” என்ற சொல்லின் இன்னொரு வடிவம். பொலிவு = மலர்ச்சி, அழகு, செழிப்பு, பருமை, மிகுதி,

அறுவடையன்று அறுத்த கூலமணிகளை அம்பாரமாய்க் குவித்துவைத்து அளந்துபோடும் போது ”பொலியோ பொலி” எனக் கூக்குரலிடுவர். தூற்றாத நெற்குவியல் பொலி எனப்படும். விளைவின் அளவும் பொலி எனப்படும். கீழேவரும் இலக்கியக் காட்டுகளையும் பாருங்கள்.

”பொலியு மால்வரை” - தேவார 236.8
”கழுநீர் பொலிந்த கண்ணகன் பொய்கை” - மதுரைக்காஞ்சி 171
மார்பில் ....... பொலிந்த சாந்தமொடு - பதிற்றுப்பத்து, 88, 30
“பொலிந்த வருந்தவத்தோற்கே” புறநானூறு. 1
”பொலிக, பொலிக, பொலிக” திவ். திருவாய். 5,2,1
வழிவழி சிறந்து பொலிமின் தொல் பொ.422.
”பொலிந்த தாமினிபோரென லோடும்” - கம்பரா. தானை. காண் 2 

புணர்ச்சிச் சினைக்குப் பயன்படும் பெருத்த காளை/எருது/கடா, பொலி காளை/பொலியெருது/ பொலிகடா எனப்படும்.  பொலிவுகளிலிருந்து தேன் ஈர்ப்பதால், இழுப்பதால், உறிஞ்சுவதால், தேன்சேகரிப்பைப் பொலிவீர்ப்பு எனலாம். அது அப்படியே browse இற்கு பொருந்துமென எண்ணுகிறேன்.

பல்வேறு browser களை பொலிவீர்ப்பி நிரலிகள் அல்லது பொலிவீர்ப்பிகள் எனலாம். எல்லா இடங்களிலும்  பொருளோடு பயன்படுத்தமுடியும். ”உலாவி” சிறிது தான். ஆனால்  அது ”என்ன செய்கிறது?” என்பதை வலிந்து பொருள் கொள்ளவேண்டும். இங்கே பொலிவு ஈர்ப்பி என்னும் போது பொருள் சட்டென விளங்கிப் போகும். கூட்டுச்சொல் அவ்வளவு பெரிதில்லை.

என் பரிந்துரை உங்கள் சிந்தனைக்கு.

அன்புடன்,
இராம.கி.

No comments: