Tuesday, January 14, 2020

பாசண்டச் சாத்தன் - 7

சாத்தனின் சொந்தவூரை நமக்குச் சரியாய்  அடையாளங் காட்டுவது புறம் 395 ஆம் பாட்டாகும்.


இதைப் பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரர். இதிற் பாடப்பட்டோன்: சோழநாட்டு பிடவூர் கிழார் மகன் பெருஞ் சாத்தன் என்பவனாவான். இப் புறப்பாட்டின் திணை: பாடாண். இதன் துறை: கடைநிலை. இப்பாடல் தவிர, பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையையும், நெடுநல்வாடையையும், அகநானூற்றில் 17 பாடல்களையும், குறுந்தொகையில் 7 பாடல்களையும், நற்றிணையில் 7 பாடல்களையும், புறநானூற்றில் 3 பாடல்களையும் நக்கீரரே பாடியுள்ளார். கீழே முழுப் பாட்டையும் சற்று பொறுமையுடன் ஆழ்ந்து படியுங்கள்.

மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டுக்
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்
பழஞ் சோற்றுப் புக அருந்திப்                                         5
புதல் தளவின் பூச் சூடி,
அரில் பறையாற் புள்ளோப்பி,
அவிழ் நெல்லின் அரியலா ருந்து;

மனைக் கோழிப் பைம்பயி ரின்னே,
கானக் கோழிக் கவர் குரலொடு,                                  10
நீர்க் கோழிக் கூப்பெயர்க் குந்து;

வே யன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளிகடி யின்னே;
அகல் அள்ளற் புள்ளிரீஇ யுந்து;                                        15

ஆங்கப் பலநல்ல புலன் அணியும்
சீர்சான்ற விழுச் சிறப்பில்,
சிறுகண் யானைப் பெறலருந் தித்தன்
செல்லா நல்லிசை உறந்தைக் குணாது,
நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர் 20
அறப்பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!

என,
முன்நாள் நண்பகல் சுரன்உழந்து வருந்திக்,
கதிர்நனி சென்ற கனையிருள் மாலைத்,
தன்கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலில்,
தீங்குரல் . . .....கின் அரிக்குரல் தடாரியொடு, 25
ஆங்கு நின்ற எற் கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதுங் கூறான்,
அருங்கலம் வரவே அருளினன் வேண்டி,
ஐயென உரைத்தன்றி நல்கித், தன்மனைப்
பொன்போல் மடந்தையைக் காட்டி,இவனை 30
என்போல் போற்று என் றோனே; அதற்கொண்டு,
அவன்மறவ லேனே, பிறர்உள்ள லேனே;

அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
குள மீனோடும் தாள் புகையினும்,         35
பெருஞ்செய் நெல்லின் கொக்குஉகிர் நிமிரல்
பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த,
விளைவுஒன்றோ வெள்ளம் கொள்க!

என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
ஆங்குஅமைந் தன்றால்; வாழ்க, அவன் தாளே! 40
   
எனும் பாட்டின் பொருளுக்குள் போகுமுன் 8 ஆம் வரியின் ”ஆருந்து”, 11 ஆம் வரியின் ”கூப்பெயர்க்குந்து”, 15 ஆம் வரியின் ”இரீஇயுந்து” என்ற பால் விகுதியில்லா வினைமுற்றுகளைப் பாருங்கள். சங்க காலத்தில் இப்படிப் பால் விகுதியொடும், அது இல்லாமலும் வினைமுற்றுகளைப் பயின்றுள்ளார். இன்று பால்விகுதி இல்லாது தமிழில் வினைமுற்றைக் காண்பது அரிது. அதுவே மலையாளத்தில் மிகுதி. ஆருந்நு, கூப்பெயர்க்குந்நு, இரீஇயுந்நு என்று அங்கு சொல்வார். “ஆயாள் வந்நு” என்கிறாரே? சங்க இலக்கியம் புரிய மலையாள மொழியறிவு துணை செய்யும்  அவரும் நம்மைப்போல் சங்க இலக்கியத்தின் பிறங்கடைகள் தாம். (அவரும் அதை உணரவில்லை. நாமும் மறுத்துக் கொண்டேயுள்ளோம்.) இனிப் பாட்டின் பொருளுக்கு வருவோம்.  வரிகளைச் சற்று முன்பின்னாக்கியே இங்கு பொருளை அறியவேண்டும்.

பாடலினூடே உறையூர்ச் சோழனான தித்தனின் பெயர் வரும். தித்தன், நக்கீரரின் காலமாய் இருக்கத் தேவையில்லை. அவருக்கு முன்னும் இருக்கலாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியனையும் அவனுக்கு முந்தைய இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனையும் நக்கீரர் பாடியுள்ளார். (நன்மாறனின் தந்தை வெற்றிவேல் செழியனோ, அன்றி வேறொருவனா என நாம் அறியோம். ஒரு வேளை வெற்றிவேற் செழியனின் பின் கொற்கையில் இவனிருந்தானோ என ஐயுறுகிறோம்.)  தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் மாந்தரஞ் சேரல் இரும்பொறை இருந்தது, இன்னுஞ் சிலப் புறப்பாடல்களால் தென்படும்.

”சிலம்பின் காலம்” நூலில் நான் செய்த கணிப்பின்படி செங்குட்டுவனுக்கு 25, 30 ஆண்டுகள் கழித்தே மாந்தரஞ்சேரல் இரும்பொறை மாந்தரத்தில் ஆட்சிக்கு வந்தான் என்று புலப்படுகிறது.  அதனால் தலையாலங்கானத்து நெடுஞ்செழியனும் கூடச் செங்குட்டுவ்னுக்குப் பின் வந்தவனே. இக் கணிப்பில் தமிழறிஞர் பலரோடும் நான் முரண்படுவேன். தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனை கி.மு.300/400க்கும் (அவ்வளவு மட்டுமல்லாது கி.மு. 600க்குக் கூடச்) சிலர் கொண்டுபோவார். நான் ஆய்ந்தவரை அப்படித் தோன்ற வில்லை. அவன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியனுக்கு இரண்டாம் தலைமுறையாகவே தென்படுகிறான். பெரும்பாலும் மதுரை கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியின் மகனாய் அவன் தோற்றுகிறான். இந்த மாறன் வழுதி ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனின் மகனாகலாம். 

இச்செய்திகளை எல்லாம் ஒருங்கு சேர்த்தால், உறையூர்ச் சோழனான தித்தன், நக்கீரருக்குச் சற்று முந்தைய காலத்தில் இருந்திருக்கலாம் என்ற முடிவிற்கே வரவேண்டியுள்ளது. தித்தன் பற்றிய என் கால ஆய்வை “சிலம்பு ஐயங்கள்” என்ற தொடரில் குறித்தேன்.  29 தொகுதிகள் கொண்ட  அம் முழுத்தொடரை என் வலைப்பதிவின் வழிப் படிக்க இயலாவிடினும் குறைந்தது https://valavu.blogspot.com/2019/09/20.html என்ற 20 ஆம் பகுதியையாவது  படியுங்கள். இத் தித்தனே, சிலப்பதிகாரம் அடையாளங் காட்டும் மணக்கிள்ளி ஆகிறான். இவன் சேரரின் மணவீட்டைச் சேர்ந்தவன், இவனே செங்குட்டுவனின் தாய் ஐயை/நற்சோணையின் தந்தையும் ஆவான்,  இவன் பெயர் எப்படி எழுந்தது என்று பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: