Wednesday, January 22, 2020

பாசண்டச் சாத்தன் - 15

ஐயனார் வரலாற்றை (குறிப்பாகப் பிடவூரில் பிறந்ததை, அவர்நூல் இங்கு அரங்கேறியதை) ஆய்ந்தறியக் கல்வெட்டுகளுள் போகவேண்டும். திருப் பிடவூரில் சங்ககாலத்திற்கும் முந்தைய, இரும்புக்காலஞ் சேர்ந்த, கருப்பு- சிவப்பு மட்பாண்டச் சில்லுகள்  கிடைத்துள்ளன. ஆனால் இதுவரை யாரும் அங்கு தொல்லாய்வு நடத்தியதில்லை. எதிர்காலத்தில் ஒருவேளை நடந்தால், சங்க காலத்திற்கும் (கி.மு.600-கி.பி.250) முந்தைச் செய்திகளை நாமறிய முடியும். சங்ககாலப் புறநானூற்றுப் பாவை (இது பெரும்பாலும் கி.மு. 2 ஆம் நூற்றாண்டு) சில இடுகைகளுக்கு முன்னால் கண்டோம். அதிற்றான் அறப்பெயர் சாத்தன் என்ற பெயர் நமக்குத் தெரிந்தது. அவன் புத்தனும் இல்லை, மகாவீரனும் இல்லை. பெரும்பாலும் தமிழ் வேளிர்மகன்.

பல்லவர் கல்வெட்டுகள் முன்சொன்னது போல் இந்தவூர்க் கோயில்களில் இல்லை. ஆனால் கட்டுமானங்கள் உள்ளன. இனிச் சோழர், போசளர், பாண்டியர், விசயநகரக் கல்வெட்டுகளுக்குள் அலசுவோம்.  இவ்வலசலுக்குத் துணையாக, தமிழ்நாடு அரசுத் தொல்லியல் துறை 2017-18 இல் வெளியிட்ட, “திருப்பிடவூர்-திரணி” என்ற நூலைப் பாருங்கள். அதில் பல்வேறு பிடவூர்க் கல்வெட்டு வாசகங்கள் தரப்பட்டுள்ளன.   எழுத்துப்பிழைகளும், சொற் பிழைகளும், தொடர்ப்பிழைகளும் மலிந்தாலும், அருஞ்செய்திகளைக்  கொடுப்பதால், அதை வாங்கிக் கையில் வைத்துக்கொள்வது நல்லதே. (அடுத்த பதிப்பில் துறையினர் பிழைகளைக் களைய வேண்டுகிறேன்.)  இக்கட்டுரையில் முழுக் கல்வெட்டு வாசகங்களை நான் குறிக்கவில்லை. தேவையான தொடர்களை மட்டுமே காட்டுகிறேன். முழுதும் வேண்டுவோர் குறிப்பிட்ட தொல்லியல் துறை நூலைப் படியுங்கள்.  1,2,3,..... எனவரும் கல்வெட்டு எண்க்ள் இந்நூலில் உள்ளன.


பிடவூரின் முதற்கல்வெட்டு (ARE 587/1908) ஐயனார் சிலையின் பீடப் பலகையாய், இராசேந்திரன் I இன் 6 ஆம் ஆட்சியாண்டைச் (கி.பி1018) சேர்ந்ததாய், காட்சியளிக்கிறது. சோழ மெய்கீர்த்தி பாதியும், உத்தமசோழ மிலாடுடையார் என்பார் கோயிலுக்கு வழங்கிய கொடையும் இதில் குறிப்பிடப்படும். கல்வெட்டின் மீதே சிலைகளைப் பதித்து கல்வெட்டு மறைக்கப் பட்டதால் முழுதும் படிக்க முடியவில்லை. இருப்பினும் 2 கேள்விகள் எழுகின்றன. உண்மையிலே இங்கு இப்போதுள்ள ஐயனார் சிலை, பழஞ்சிலையா? அதற்கெனத் தனிப் பீடம் இல்லாதா போகும்? அவக்கரமாய் இராசேந்திரசோழன் கல்வெட்டைக் கீழேவீழ்த்திப் பீடமாக்குகிறாரெனில், அது அரச நிருவாகம் செய்ததுபோல் தெரியவில்லையே? இராசேந்திரன் பிறங்கடை அரசு தம் மதிப்பிற்குரிய  முன்னோன் கல்வெட்டை இப்படிக் கையாளுமா? பொருள் வயதி (வசதி) இல்லா உள்ளூர்ச் சபையார் செய்தது போல் தெரிகிறதே? தவிர இங்குள்ள எந்தக் கல்வெட்டிலும் பூரணை, பொற்கலைத் திருமேனிகள் சேர்ந்திருந்ததைக் குறிப்பிடவே இல்லையே? ஒருவேளை சிலை மாற்றம் ஏதும் இங்கு நடந்ததா? - தெரியவில்லை.  பிரமன் சிலை ஞாவகம் வருகிறது.

அடுத்து ஐயனார் கோயில் வடகீழ் மண்டபத்தின் 2 தூண்களிலுள்ள இராசாதி ராசன் கல்வெட்டிற்குப் (ARE 602/1908) போவோம் . இவன் காலம்  கி.பி. 1012 - 1044. பொதுவாகத் தமிழக அரசரின் ஆட்சிக்காலக் கணக்கு இளவரசுப்பட்டம் கட்டியதில் தொடங்கி, இறப்புவரை நீளும். இக்கல்வெட்டில் ஐயனாரைக் குறிப்பிடும்போது, “(திருப்பிட)வூர்ப் பிள்ளையார் திருவேப்பந் தெற்றி உடையார்க்கு” என்றுவரும். 'பிள்ளை' என்பது இளந்தோற்றத்தாரைக் குறிக்கும். பிள்ளையார் என்பது விநாயகன், முருகன், (ஹரிஹரன் எனப் பட்ட) ஐயன் என அனைவர்க்கும் உரிய அழைப்புச்சொல். திருவேட்பம்> திருவேப்பமாகும். ஒரு போருக்குமுன், கருமம் செய்யுமுன், அரசர், வணிகர், பொதுமக்கள் போன்றோர், ஐயனாரை வணங்கித் தாம் வேட்டதை (வேண்டியதை) நடத்தித்தரச் சொல்வார். இன்றும் நாட்டுப்புறங்களில், ஐயனாரைக் குலதெய்வமாக்கும் பொதுமக்களிடம், அப்பழக்கமுண்டு. வேட்பம்= வேண்டுதல்.

தெற்றி = திண்ணை (’இலங்குவளை மகளிர் தெற்றியாடும்”- புறம் 53), தெண்டு, திண்டு, திட்டு, திட்டி, திட்டை, மாடம், மேடு (புற்றுந் தெற்றியும் சாடும். தென்னக. கல்வெட்டுத் தொகுதி எண் 111, 410), அரங்கம் போன்ற வற்றைக் குறிக்கும் சொல். தெற்றியிலக்கை= ஊர்ப் பொதுவில் ஒரு பகுதியை மேட்டிடமாகச் செய்து பயன்படுத்துவோர் செலுத்தும் வரி. சீர்காழியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள திருநாங்கூர்த் திருத்தெற்றி யம்பலம், 108 திவ்ய தேசங்களில் ஒன்று. செங்கண்மால் இங்கே கிடந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். ”சீராரு/ சேழுயர்ந்த/சீரணிந்த மணிமாடம் திகழும் நாங்கூர்த் திருத் தெற்றி அம்பலத்தென் செங்கண் மாலே”, என்று விதவிதமாய்த் திருமங்கையாழ்வார் தம் பாசுரங்களில் பேசுவதால் மேலேயுள்ள தெற்றியின் பொருள் மிகச் சரி.

எனவே திருவேப்பந் தெற்றியுடையாரே இன்று அரங்கேறிய ஐயனாராய்ச் சொல்லப்படுகிறாரென விளங்கிக் கொள்கிறோம்.  (வியப்பு எது தெரியுமோ? அரங்கம் என்ற சொல்லே எந்தக் கல்வெட்டிலும் இங்கு வரவில்லை.) கல் வெட்டை எழுப்பித்தவனாய் ”உத்தங்க(த்)துங்க வளநாட்டுக் குன்றக் கூற்றத்து, பெரும்பழுவூர்ப் பிடாகை மே(ய்)ச்சன் குளத்திருக்கும், தபஸி தெற்றியாதித்தனான ஒத்தகளொத்த பிச்சன்” என்று சொல்லப்படும். ஆக ஒரு தவசி (அற்றுவிகனோ? தெரியாது.) எழுப்பிய தானம் பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. தெற்றியாதித்தன் என்ற பெயர் ஐயனார் கோயிலிருந்த இடத்தைக் குறிக்கிறறது. ”தக்கோர் ஏற்ற பித்தன்” எனும் பொருளில் ”ஒத்துகள் ஒத்த பிச்சன்” என்ற விளிப்புப் பெயர் எழுந்திருக்கலாம். . 

அடுத்த கல்வெட்டு (ARE 50/1908) கோபுர நுழைவாயில் இடப்புற நிலைக் கல்லிலுள்ள  இராசேந்திரன் I இன் 31 ஆம் ஆட்சியாண்டு சேர்ந்தது. இதை எழுப்பியவனும் தெற்றியாதித்தனே. நாலாங் கல்வெட்டை (ARE 49/1908) எழுப்பித்தவன் மதுராந்தக இளங்கோ வேளான். ஐந்தாங் கல்வெட்டு (ARE 605/1908) முன்சொன்னதுபோல் பிரமபுரீசர் குளக்கரையின் வடபுறம் உள்ள ஏழுமுனியீசர் திருநிலைவாயிலின் நிலைக்கல்லில் பொறித்துள்ளது. இது விக்கிரம சோழன் காலத்து (கி.பி. 1118-1135) 12 ஆம் ஆட்சியாண்டில் எழுந்தது. இக்க்ல்வெட்டில் தெற்றி(க்) கூத்தன் என்ற பெயர் ஐயனாரின் பெயர்கொண்ட வேளான் ஒருவனைக் குறிக்கிறது.

கூத்தனென்றவுடன் நம்மிற்பலரும் தில்லை நடவரசனையே (=நடராஜாவையே) எண்ணுமாறு கட்டிப் (conditioned) பட்டுள்ளோம். எப்போதுமே அப்படி இருக்கத் தேவையில்லை. தெற்றியில் கூத்தாடும் பழக்கம் ஐயனாருக்குமுண்டு என்பது இக்கல்வெட்டால் விளங்குகிரது. ”ஆடல், பாடல் என்பவை அற்றுவிகத் தோற்றுநரான மற்கலிக்கும் உகந்தது” என்பதை புத்த, செயின ஆவணங்கள் வழியும் அறிகிறோம். ஆடல், பாடல் செய்ததை அந்நெறிகள் அற்றுவிகத்தின் குறையாயும் சொல்லின. இங்கே தமிழ்ச்சான்று மறுபக்கத்தைக் காட்டுகிறது. தெற்றிக் கூத்தனுக்கு இன்னொரு பெயராய் ”அம்பலங் கோயில் கொண்டான்” என்றும் வரும். ”தெற்றியம்பலத்தைக் கோயில்கொண்டான்” என்று ஐயனார் இங்கு சொல்லப் பெறுகிறார். இதே கல்வெட்டில் சிவன் கோயில் இறைவனின் பெயர் ”திருவனந்தீசர்” என்றும் சொல்லப்படும்.

ஆறாங் கல்வெட்டு (ARE 48/1908) 2 ஆம் குலோத்துங்கன் காலத்தது (கி.பி 1137). இது ஐயனார் கோயில் மண்டபத்துத் தென்சுவரில், வாயிலின் வலப் பக்கத்தில், இருக்கிறது. இதில் ஐயனார் பெயர் ”திருப்பிடவூர் உடைய பிள்ளையார்” எனவரும். கல்வெட்டு எழுப்பியவர் ஒரு நானாதேசிப் பெருந் தட்டான். 7 ஆம் கல்வெட்டில் ஐயனார் பற்றிய புதுச்செய்திகள் இல்லை, 2  வரிகளுக்கு மேற்பட்ட வாசகம் அதில் சிதைந்துள்ளது. 8 ஆம் கல்வெட்டில் (ARE 602/1908) மடப்பள்ளி மண்டப உட்புறத் தூண் விட்டத்தில் உள்ளது) சிறுபுலியூர் வேளானின் பெயராய்க் ”கூத்தாடும் தேவன்” என்பது வரும். தெற்றிக்கூத்தனின் இன்னொரு விவரிப்பு போலும். மகாமண்டபத் தென் சுவரில், வாயிலின் வலப்பக்கமுள்ள 9 ஆம் கல்வெட்டில் (ARE 509/1908) ”பிள்ளையார் திருவேப்பந் தெற்றி உடையார்” என்பதே ஐயனாரின் பெயராய் வரும்.  பத்தாம் கல்வெட்டின் வாசகம் தொல்லியல் துறை நூலில் இல்லை.

அன்புடன்,
இராம.கி.

No comments: