Friday, January 17, 2020

பாசண்டச் சாத்தன் - 10

பாசண்டச் சாத்தருக்கான, தொல்லியல் ஆய்வைத் தொடர்வோம். 96 வகைச் சமய சாத்திரங்களை அறிந்த ”பாசண்டச் சாத்தன்” என்பது ஒருவேளை மற்கலி கோசாளரைக் குறித்ததோ எனச் சிந்திக்கக் காரணமுண்டு. முதலில் வருவது கோசாளரெனும் அவர் பெயர். வடபுல மொழிகள் வழி, இதைக் கோசாலர் என்று கொண்டு, ”மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார்” என்பதும், கோசாலி புத்தா/புத்ரா என்றாக்கி மற்கலியின் தந்தைவழி காரணங் காண்பதும் ”மங்க்கலி” என்றாக்கி, பாணர்வழி சொல்வதும் தமிழ்ப் பின்புலம் தெரியாமல் சொல்வதும், இழித்துச் சொல்வதுமாகும். மகாவீரருக்கும், புத்தருக்கும் மேற்குடித் தோற்றங்காட்டி, மற்கலியைக் கீழிறக்கும் மனப்பான்மையில் எழுந்த முயற்சிகளை செயின, புத்த ஆவணங்கள் வழி தெரிந்து கொள்ளலாம். அற்றுவிகத் தமிழ்த் தோற்றம் தெரியாமல் அதன் திரிவான “ஆசீவிகத்திற்கு” வடபால் மொழிகளின் வழியே இழிபொருள் சொன்னது போல் இதுவும் அமையும்.


தமிழ் அடிப்படையில் கோசாளர், குடிப்பெயரன்று. தொழிற்பெயர். களிமண் கலயங்கள், பொம்மைகள் செய்யும் குயவரைக் குசவர்>கொசவர்> கொசவாளர்> கோசாளர் என்பது தமிழ்ப் பேச்சில் இயல்பு. குயவு என்றசொல், குயப்பு>குசப்பு>கொசப்பு எனவும் திரியும். சென்னை மணலிக்கருகில் ”கொசப்பூர்” என்ற ஊருண்டு. ஒருகாலத்தில் அதுவொரு  சதுர்வேதி மங்கலம். (சென்னை அண்ணாநகர் அருகுள்ள திருமங்கலமும்  சதுர்வேதி மங்கலமே.) வடசென்னைப் பக்கச் சதுர்வேதி மங்கலங்களை விற்ற பெருமானர் பிற்காலம் மயிலாப்பூர், திருவல்லிக்கேணி எனத் தென்சென்னை நகர்ந்து விட்டார். பழவூர்கள் வெவ்வேறு குழுவினரால் நிறைந்துவிட்டன.)


குயவரைக் குலாலர், கும்பகாரர், மட்பகைஞர், வேட்கோ என்றும் அழைப்பர். குயவரை நினைவுறுத்தும் ”கோசாளர்” குறிப்பால், மற்கலி குயவர் குடியைச் சேர்ந்தவர் என்ற பொருளில்லை. வடக்கே குயவர் பெயரைப் பெற்றார். அவ்வளவுதான். 16 ஆண்டுகள் குயவரோடு அவர் சாவத்தியில் தங்கியதாகவே புத்த, செயினக் குறிப்புகள் சொல்கின்றன. சாத்துக் காவலனாய் ஒரு வேளிர் மகனாய் அவர் சொந்த நாட்டில் அறியப்பட்டாலும், போன இடத்தில் குயவர் மனையில் தங்கிக் கோசாளர் ஆனார். குயவர் தொடர்பு இன்றைக்கும் நீள்கிறது. இன்றும் ஐயனார் கோயில்களில் குயவரே பெரும்பாலும் பூசாரி. சாத்தனுக்கு நேர்ந்துவிட்ட யானை, குதிரைப் பொம்மைகளையும் குயவரே செய்கிறார். இன்னொரு கருத்தும் இங்கு நினைவிற்கு வருகிறது.  மேலே கருங்குளம் பறைநாச்சியம்மன் கோயிலில் உள்ள குதிரைப் பொம்மை வரிசையைக் காணுங்கள்.

அக்காலத்தில்  மருதநிலப் பழந்தமிழர் தம் இறப்பின்பின் பெருந்தாழிகளிலே அடக்கம் செய்யப்பட்டார். அவரின் ஈமத்தாழிகளைச் செய்ததும் குயவரே. இன்றுங்கூட சில சாமியாரும், ஒருசில பெரியவரும் அமர்ந்த நிலையிலேயே அடக்கம் செய்யப் படுகிறார். தவிர, மற்கலி கோசாளர் தம் நெறிச் சாவகர் அனைவரையும், அவரவர் பிறப்பையும், இறப்பையும் கொண்டாடச் சொன்னார் .  இன்றும் தமிழகத்தில், குறிப்பாக வட தமிழகத்தில், பூமாலை, பிய்த்துப் போடல், அலங்காரம், பறையிசை ஆட்டம், பாட்டமெனக் கோலாகலமாய் இறப்பு கொண்டாடப் படும். ஒரு காலத்தில் நகரங்களில் இடுகாட்டில் தாழிகளே நிறைந்திருந்தன. இதுவரை நடந்த ஆதிச்ச நல்லூர் ஆய்வு பெரும்பாலும் தாழிகளைப் பற்றியதே.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?  5
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்     10
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

என்ற புறநானூறு 228 ஆம் பாட்டு. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை ஐயூர் முடவனார் பாடியது. கிள்ளிவளவனை இடுவதற்குப் பெரிய கலம் செய்யுமாறு குயவனை வேண்டி, அதன்வழி வளவனைப் போற்ருகிறது. (பாட்டின் பொருளைத் தேடி அறிந்துகொள்க!) இந்தக் கிள்ளிவளவனே செங்குட்டுவனின் மாமன் மகன். இவனுடைய 9 பங்காளிகளுடன் போரிட்டுத் தான், இவனை உறையூர் அரசுகட்டிலில் செங்குட்டுவன் ஏற்றுவான். அடுத்த பாட்டு: புறம் 32  இது சோழன் நலங்கிள்ளியைக்  கோவூர் கிழார் பாடியது. நலங்கிள்ளி, குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு, நெடுங்காலம் கழித்து வந்தவன்.

கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்           5
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.        10

பாட்டின் உட்டே வேட்கோ= வேள்+கோ என்பது குயவரைக் குறிக்கும். (பாட்டின் பொருளைத் தேடி அறிக.) பல சங்கப்பாடல்களில்  குயவரைக் குறிக்கும் குறிப்புகளுள்ளன. இன்னும் தேடின், பல பாக்கள் கிடைக்கும். அரிக்கமேடு, ஆதிச்சநல்லூர், அழகன்குளம், பொருந்தல், கொடுமணம், கீழடி போன்ற இடங்களில் தொல்லியல் வழி இன்று காணப்பெறும்  கருப்பு/சிகப்புப் பானைகள், தாழிகள் போன்றவை அற்றைக் குயவரின் சிறப்பைக் கூறுகின்றன.  அற்றைக் குமுகாயத்தில் குயவர் சிறப்பான பங்கு வகித்திருக்க வேண்டும்.  அவர் ஐயனாருக்கே சேவை செய்யபவராய் குமுகத்தில் பணிபுரிந்திருக்கிறார். இன்று பெருங்கோயில்களில் பார்ப்பாருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு, ஐயனார் கோயில் வேளகாரருக்கும்  இருந்தது/இருக்கிறது.

வேளார் என்பது தமிழ்முறைப்படி, பூ, சந்தனம், மஞ்சள், திருநீறு, நீர் முதலிய ஆகுதிகளைக் கொண்டு ஐயன் திருமேனியில் தெறித்து, படையலை நிவந்து (நிவதம் தமிழ் தான். நிவத்தல் = உயர்த்தல். வேளார் உயர்த்திக் காட்டியே ஐயனை அருச்சிப்பார். உயர்த்தியே தீவங் காட்டுவார். இதே பழக்கம் சிவ, விண்ணவ நெறிக் கோயில்களிலும் ஆகம வழி உண்டு, ஆகமத்திற்கு நீரே முகன்மை. இதுவே தமிழ்முறை) ஐயனை ”வேண்டும்” பணி செய்வதாகும். (வேள்+ந்+து + அல் = வேண்டல்).  தெய்வங்களுக்கு நீர் முறை தவிர்த்து, வெவ்வேறு ஆகுதிகளை நெருப்பில் இட்டுச் சமர்ப்பிப்பது வேதநெறி வழக்கம். வேள்வி என்பதும் “எனக்கு அதைக் கொடு, இதைக் கொடு” எனும் வேண்டல் தான். வேளும் குயவரும் வேளும் பார்ப்பாரும் ஒரே செயல்தான் செய்கிறார். குயவர் தமிழ்முறையோடு நின்றுகொள்வார். சிவநெறியில் தமிழ்முறையோடு  செய்ய சிவாச்சாரியரும். வேதமுறை பயில “ஸ்மார்த்தப்” பெருமானரும் இருப்பார். எந்த ஸ்மார்த்தரும் இறைப் படிமத்தைத் தொட்டுவிடமுடியாது. அந்த உரிமை சிவாச்சாரியாருக்கு மட்டுமே உண்டு. அதேபோல் ஐயனாரைத் தீண்டும் உரிமை வேளாருக்கு மட்டுமேயுண்டு. 

அன்புடன்,
இராம.கி.

No comments: