Wednesday, August 28, 2019

Candi Borobudur- பொதியிலார் சாமிநடையும், வைகறையும் - 2

 அடுத்து Borobudur- க்கு அவருவோம். மலாய் மொழியில் பெயரடை என்பது பெயருக்கு அப்புறம் வரும். ”நல்ல பையன்” என்பது மலாய் மொழியில், “பையன் நல்ல” என்றாகும். சிவன்கோயில்,  “கோயில்சிவன்” என்றாகும். இத் தொடர் கட்டமைப்பை நினைவில் கொண்டால் boro பெயர். budur, Boro விற்கான பெயரடை என்பது புலப்படும். Boro விற்குத் தமிழில் அடித்தொடர்பு உண்டா எனில் உண்டு. மேலே வரும் விக்கிப்பீடியாக் குறிப்பில் Dutch archaeologist A.J. Bernet Kempers இன் கருத்து ஈர்க்கிறது. சாவா மொழியில் ”விகாரை” boro ஆகியிருக்கலாம் என்பார். ”விகாரையைப்” பொருத்தமின்றி வி-காரம் (=வேறுபட்ட தோற்றம்) என்ற சொல்லோடு தொடர்புறுத்தி மோனியர் வில்லியம்சு காட்டும்.  பாலி அகரமுதலிகள் விகாரை= புத்த பிக்குகள் தங்குமிடம் என்னும். நடுவில் ஒரு கூடமும் சுற்றிலும் துறவிகள் தங்கச் சிறு அறைகளும் கொண்டது விகார்/விகாரை ஆகும்.

”விகார்”, “பிகார்” என்று பாலி/பாகதத்தில் புழங்கும். (இற்றைப் ”பீகார்” மாநிலப் பெயரும் இதே மாற்றொலிப்புத் தான்.) விகாரின் பயன்பொருள் கொடுத்த பாலி அகரமுதலிகள் சொற்பிறப்புத் தாரா. சங்கத அகரமுதலியோ தவறான சொற்பிறப்பு காட்டும். பாகதம், தமிழ் இவற்றிடைய நிறையக் கொடுக்கல் வாங்கல் உண்டு. பாகதமே வடதமிழாய் இருக்கலாமென்று பாவாணர் உரைப்பார். வள் எனும் தமிழ்வேருக்கு வளை-தல், சாய்-தல் பொருளுண்டு. இன்றுங்கூட வீட்டுக்குவந்த விருந்தினரை, “வேண்டுமெனில் கொஞ்சநேரம் சாயுங்களேன்?” என்று சொல்வதில்லையா? ”சாய்ந்து அமருங்கள், ஓய்வெடுங்கள், அல்லது படுத்துக் கொள்ளுங்கள், மொத்தத்தில் தங்குங்கள்” என்பதே அதன்பொருள்.

வள்>வய்>வை என்பது தமிழில் தங்குதலைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி.   ”அப்பொருளை இங்கே வை” என்பது இருத்தலைக் குறிப்பது.  வைகுதல் = தங்குதல். (”நெடுந்திமிற் றெழிலோடு வைகிய தந்தைக்கு”- அகநா. 60); வைகல்= தங்குகை.  கழிகை (”மத்துக் கயிறடா வைகற்பொழுது நினையூஉ”- பதிற்று. 71, 16), நாள் (சூரியன் தங்கும் நேரம்;  “இன்னா வைகல் வாரா முன்னே செய்ந்நீ  முன்னிய வினையே”- புறநா.363.), தங்கும் வேளை (”மாதவி தன்னோடு அணைவுறு வைகலின் அயர்ந்தனன்”- சிலப் 3, 173); வைகலும் = நாள்தோறும் (”அடிசில் பிறர் நுகர்க வைகலும்” - புற.வெ.,ஆ/ 10, 8); வைகறை = விடியல் (”வைகறை மலரும் நெய்தல்”- ஐங்குறு. 188)  இதுபோக, வைகறை என்ற சொல்லிற்கு தங்குமிடம் என்ற பொருளும் உண்டு. 

இனித் தமிழுக்கும் வடபால் மொழிகளுக்குமான இடையாற்றம் பார்ப்போம். விகர, வேகாரத்தில் தொடங்கும் வினைகளில் பெயர்கள் பிறக்கையில் வடபால்மொழிகளில் அவை வைகாரமாகும். ”வித்” இல் வேதம் பிறந்ததாயும் வேதத்திலிருந்து 2 ஆம் நிலைப்பெயராய் வைதிகம் பிறந்ததாயுஞ் சொல்வர். விகானசத்திலிருந்து வைகானச ஆகமம் பிறந்ததாம். நம்மூர்ச் சிவத்தைக் கடன்வாங்கிச் சைவமாக்குவர். விண்ணவம் வைணவமாகும்.. இதுபோல் பல்வெறு இகரவழிக் கடன்சொற்கள் வடமொழிச் சொற்களை ஐகாரத்தில் தோன்றவைக்கும். கடன்வாங்கையில் சிலசொற்கள் தவறாய்த் திரிவதும் உண்டு. வைகறையை 2 ஆம் நிலை சங்கதப்பெயராய்க் கொண்டு விகாரதி எனும் முதல்நிலை வினையாகவும் விகாரெனும் முதல்நிலைப் பெயராகவும் தவறாய்த் திரிப்பர். தமிழ்நாட்டின்  ஏராளம் இறைவர் இறைவி பெயர்களும் இதுபோல் தவறாய்ச் சங்கதத்தில் மாறியுள்ளன. wrong translation and wrong transliteration. இத் தவறான பெயர்களை அறியாமல் பயன் படுத்துகிறோம். ஆழ்ந்து பார்த்தால், பெரும்பாலும் boro என்பது நம்மூர் வைகறை (வைகு + அறை) >விகாரையைக் குறிக்கவே வாய்ப்புண்டு.

இனி புதூருக்கு வருவோம்.  புத்தமதத்தின் பல்வேறு பிரிவுகளை இருபெரும் பிரிவினுள் அடக்குவார். ஒன்று பழையது, புத்தருக்குச் சற்றே பிந்தையது; பொ.உ.மு. 473க்கு அப்புறம் எழுந்தது, கொஞ்சம் கட்டுப்பெட்டியானது. இதைத் தேரவாதம் என்பார். (மாற்றார் இதை ஈனயானம் சிறுபான்மையர் வழி என்றும் உரைப்பார். தேரவாதத்தார் இதைச் சொல்லார் ) நமக்கு நன்கு தெரிந்த இற்றைத் தேர வாத நாடுகள் இலங்கையும் மியன்மாரும் ஆகும். தேரவாதத்திற்கு மாற்றாய் புத்தருக்கு  வெகுநாட்கள் கழித்து பொ.உ .200 களில் மகாயானம் (பெரும்பான்மையர் வழி) எழுந்தது. புத்த நிலைக்கு முந்தை நிலையான போதிசத்துவ நிலையின் இருப்பை இந்தவழி பெரிதும் நம்பும்.  தேரவாதம் பாலியைப் பயன்படுத்த மாகாயானம் பாலி கலந்த சங்கதம் பயனுறுத்தும், “எதிர்காலத்தில் அமிதவ புத்தர் என்பவர் எழுவார். அவர் இப்போது போதிசத்துவராய் வேறெங்கோ உள்ளார்” என்றும் அவர் பெயர் ”அவலோகிதர்” என்றும் மகாயானம் நம்பும்.

உலகில் சீனம் (திபெத் இதில் சேர்ந்தது. ஆனால் மகாயானத்தின் வேறு வகையான வயிரயானம்/வஜ்ரயானம் அங்கு பின்பற்றப் படுகிறது.), சப்பான், தாய்லந்து, கம்போடியா, வியத்நாம், லாவோசு போன்ற நாடுகளில் மகா யானமே  பெரிதும் புழங்குகிறது. தமிழ்நாட்டிலும் தேரவாதம் பாண்டி நாட்டிலும், சோழநாடு, தொண்டைநாடு போன்றவற்றில் மகாயானமுமே பொ.உ.200-1000 வரை பரவிச் சிறந்தன. பொ.உ.400-800 களில் தமிழகக் காஞ்சியும், ஆந்திர அமராவதியுமே இந்தியாவில் மகாயானத்தின் சிறப்பான நகரங்கள்/கருவிடங்கள் ஆகும். தமிழக, ஆந்திர, கலிங்கக் கடற்கரையில் இருந்தே மகாயானம் உலகெங்கும் பரவியது. “நெல்லும், தமிழரும் தென்கிழக்காசியாவும்” என்ற தொடரில் தமிழகக் கடல்வழித் தொடர்புகள் பற்றிப் பேசினேன். இந்தோனேசியாவோடும் மலேசியாவோடும் பெரிதும் உறவுகொண்ட இந்தியப் பகுதி தமிழ்நாடே. இந்தோனேசியாவிலும் இசுலாத்திற்கு முன்னர் சிவநெறி, புத்தநெறிகள் பரவியிருந்தன. அங்குள்ள பழங்கட்டுமானங்கள் தமிழர் தொடர்பைப் பெரிதும் உறுதி செய்கின்றன. சைலேந்திரர் தமிழர் தொடர்பால் மகாயானக் கருத்தியலில் ஆழ்ந்து இருந்ததாலேயே “Borobudur” ஐக் கட்டியுள்ளார்.

மகாயானத்தில் அவலோகிதர் என்ற கருத்தீடு ஆழமானது (பார்க்க: https://en.wikipedia.org/wiki/Avalokite%C5%9Bvara) இந்த அவலோகிதரின் இருப்பிடமாய் நம் பொதியமலையையே பல்வேறு ஆய்வாளர் குறிப்பிடுவர். திபெத்தின் வயிரயானம் பொதியிலை பொத்தாலா/பொத்தாரா என்னும். லகர, ரகர வேறுபாடு நாட்டுக்கு நாடு வேறுபடும். இந்தியாவிலேயே வடமேற்கில் ரகரம் பயிலும் சொற்கள் வடகிழக்கில் லகரமாகும். பொதியில், மேற்குத் தொடர்ச்சிமலையின் தென்பகுதி. தவிர பொது+இல்= அம்பலம், கோயில் என்றும் பொருள் கொள்ளும்.  ”தூங்கெயில்” தொடரில் (https://valavu.blogspot.com/2018/10/1.html, https://valavu.blogspot.com/2018/10/2_27.html), அவலோகிதர் பற்றிச் சொன்னேன்.

அவலோகிதர் என்ற பாகதச்சொல் சங்கத் தமிழில் பயின்ற ஆந்தையாரின் மொழிபெயர்ப்பாய்த் தெரிகிறது. தூங்கெயில் தொடரிலிருந்து தேவை ஆனவற்றைக் கீழே வெட்டியொட்டியுள்ளேன். அவலோகிதத் தேடலுக்கு மணிமேகலைக்கும் வீரசோழியத்திற்கும் போகவேண்டும், ”உலகிற் பலரும் மாறாது புகழ்ந்து ஓங்குயர் விழுச்சீர் கொண்ட புகார்மூதூரின் பண்பு மேலும் மேம்படுவதாய், ஓங்குயர் பொதியமலையின் அருந்தவன் உரைத்தபடி, தூங்கெயிலெறிந்த தொடித்தோட்செம்பியன் வானவரரசனை வணங்கி, 28 நாள் இந்திரவிழாவின் போது புகாரில் தங்கியருளக்” கேட்பதாய் மேகலை நூலின் விழாவறை காதை அலங்காரமாய்த் தொடங்கும். 
-----------------------------------
இதில் வரும் பொதியமலை அருந்தவனைச் சங்கதத்தாக்கில், உரைகாரர் பலரும் அகத்தியன் என்பார். பலரும் இதைக் கேள்வி கேட்டதேயில்லை. ”அது சரியா? தேரவாதத்தில் இல்லெனினும், மகா யான, வயிரயானப் (வஜ்ர யானப்) பாதைகளிற் புத்தர்பாராட்டும் அவலோகிதனாய் அவன் ஏன் இருக்கலாகாது?”- என்றுநான் கேட்பேன். இதன் தொடர்பாய், 11/12 ஆம் நூற்றாண்டு  வீர ராசேந்திர சோழனின் காலத்தைச்சேர்ந்த புத்தமித்திரர் வீரசோழியம் 2 ஆம் பாயிரத்தில் வரும் .

ஆயுங் குணத்து அவலோகிதன் பக்கல் அகத்தியன் கேட்டு
ஏயும் புவனிக்கு இயம்பிய தண்டமிழ் ஈங்குரைக்க
நீயும் உளையோ எனில், கருடன் சென்ற நீள்விசும்பில்
ஈயும் பறக்கும்! இதற்கு என்கொலோ சொல்லும்? ஏந்திழையே!

என்ற பாட்டைக் கவனியுங்கள். இதில், ”அவலோகிதனிடங் கேட்டு தண்டமிழ் ஓதிய அகத்தியனுக்குங்கீழ் புத்தமித்திரர் தன்னை இறுத்திக்கொள்வதைப்” பார்த்தால், என் கருத்து ஒன்றும்  புதிதல்ல. பலரிடம் இன்றிருக்கும் மித மிஞ்சிய அகத்தியப் பெருமிதங்கள் சங்கதம்-->தமிழென்ற ஒற்றைவழி உறவுபார்க்கும் அகத்தியதாசரின் வழிப்பட்டுத் தமிழில் வழங்குகின்றன.

அவலோகிதன் யார்? தமிழில் அவன் பெயரென்ன? என்பது அடுத்தகேள்வி. உல்>ஊல்>ஊள்>ஊளை= ஆந்தையோசை. உல்லுகம்>உலூகம், என்பது பாலியில் ஆந்தையைக் குறிக்கும். ஊளை, ஊளி, உலூக, owl- என்பவை தொடர்புள்ளவை. (இரவில் உணவுதேடுந் துறவியை வேதமறுப்பாளர் ஆந்தையரென்பார். இன்றும் இரவில் அலைவோரை தமிழரும் ஆந்தை என்போம். அதேபொழுது, இரவு உணவைச் செயினநெறி ஏற்காது. ’அந்தை’க்கு அச்சனென்றும் ”அந்தன்> அந்தனர்>அந்தணர்= பெரியவர்” என்றும் இரா.இளங்குமரன் சொல்வார்.) உலூக>உலூகித என்பது ஔலோகித> அவ லோகித என்று வடமொழியில் திரியும்

இளங்கீரந்தை, பொதுக்கயத்துக் கீரந்தை, எயினந்தை, கோட்டியூர் நல்லந்தை, சாத்தந்தை என்ற சங்ககால அந்தைப் பெயர்களையும், அஞ்சில் ஆந்தை, ஓதலாந்தை, சிறைக்குடியாந்தை, பிசிராந்தை எனும் ஆந்தைப் பெயர்களையும் பார்த்தால், பொதியில் அவலோகிதன் ஏன் பொதியில் ஆந்தை ஆகக்கூடாது? அந்தை>ஆந்தையென்ற இயற்சொல் வளர்ச்சி ஆதன்+தந்தை= ஆந்தை என்பதைவிடப் பொருந்துவதாய்த் தோன்றுகிறது. இன்றுங்கூடக் கிறித்துவப் பாதிரியை அச்சன் என்றே மலையாளத்தில் சொல்வர். அதேமரபில், பிசிராந்தையார் ஏன் பிசிரைச் சேர்ந்த  ஐயனார் கோயிலின் ஆன்மத் தந்தையாய், அற்றுவிக அறிவராய், ஆகக்கூடாது? ஓர்ந்துபாருங்கள். ஆந்தையார் என்பது இயற்பெயர், தொழிற்பெயர் என்பதுபோற் தெரிய வில்லை. இது ஒருவேளை உறவுப் பெயராய், மதிப்புப் பெயராய் இருக்கலாமே? ஒருமுறை அப்படி எண்ணிப்பார்ப்போமே? நம் பார்வை மாறுமே?
--------------------------------------
மேலே சொன்ன வழியில் பார்த்தால் பொதியில் ஆந்தையார் பொதியில் அவலோகிதர் ஆவார்.  சுருங்கச் சொன்னால் பொதியிலார்>பொதியார் என்றுமாவார்.  எனவே Candi Borobudur என்பது ”பொதியார் விகாரைச் சந்நிதி” என்று பொருள்படும்.  அதாவது ”பொதியிலார் சாமிநடையும், வைகறையும்” இங்கே பேசப்படுகின்றன. என் வாழ்நாளில் கம்போடியாவின் அங்கோர் வாட்டைப் பார்த்துவிட்டேன். எப்படியாவது ஒருமுறை Candi Borobudur பார்க்க வேண்டும். ”பொதியில் ஆந்தையார் சாமிநடை” என்பது தமிழரின் தாக்கம். ஆனால், தென்கிழக்கு ஆசியர் கட்டுமானம். (எந்நாளும் வரம்பு மீறாதீர். இணையத்தில் அங்கோர்வாட்டைத் தமிழர் கட்டினார் என்ற தவறான செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. அதைப் பரப்புவோர் தம் உண்மை மீறலை உணரவேண்டும்.)

அன்புடன்,
இராம.கி.

No comments: