Saturday, August 24, 2019

சிலம்பு ஐயங்கள் - 2

 அடுத்து மனையறம்படுத்த காதைக்கு வருவோம்.

”தூமப் பணிகளொன்றித் தோய்ந்தா லெனவொருவார்
காமர் மனைவியெனக் கைகலந்து--நாமந்
தொலையாத இன்பமெலாந் துன்னினார் மண்மேல்
நிலையாமை கண்டவர்போல் நின்று.:

\                                                                       - வெண்பா

இந்தப்பாவில் ”நாமம் தொலையாத இன்பம்” என்பது ”அழகு கெடாத இன்பம்” அல்ல. நாமம் என்பதற்கு நிறைவு என்ற பொருளுமுண்டு. அதுதான் இங்கு சரிவரும். கொஞ்சங்கூட நிறைவு அடையாத கலவியின்பத்தை இருவரும் பெறுகிறார் என்று இந்த வெண்பா கூறுகிறது. இது சற்று நளினமான பாட்டு. இத் திறந்த அவையில் இதை விவரித்துச்சொல்லத் தயக்கமாயிருக்கிறது. இந்த வெண்பா இளங்கோ எழுதியதாவென்று தெரியாது. பொதுவாகக் காதைகளின் பின்வரும் வெண்பாக்களை இளங்கோ எழுதியதாய் நான் கொள்வதில்லை. நாலாயிரப் பனுவலிலும், பன்னிரு ஆழ்வார்களின் பாசுரத் தொகுதிகளின் பின்னே இதுபோன்று "போற்றி வெண்பாக்கள்" வரும். அவையெல்லாம் நாலாயிரப்பனுவலைச் சேர்ந்தவையல்ல. ஆனால் பாடஞ் சொல்லிக்கொடுக்கும்போது அவற்றையும் சேர்த்துச் சொல்லித்தருவார்கள். சிலம்பில் இப்படி வரும் வெண்பாக்களை ”பொருள் சுருக்கும் வெண்பாக்கள்; வேறு யாரோ எழுதியவை” என்று கொண்டு நகரவேண்டும்.

மூன்றாவதாய்க் கடலாடு காதையில் வசந்தமாலை பற்றிய கேள்விக்கு வருவோம். இதை நான் விளக்குவதைக் காட்டிலும், திரு. ஆ. பழநி எழுதிய “சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” என்ற நூலை (தமிழினி வெளியீடு, முதற்பதிப்பு 2007) tamizhininool@yahoo.co.in என்ற முகவரிக்குக் கேட்டெழுதி வாங்கிப் படியுங்கள். மிக அருமையான நூல். சிலம்பினுள் ஆழ்ந்து பலரும் அறியாத ஓர் உண்மையை அவர் எடுத்தோதுகிறார். அவர் நூலை அறியாதோர் கட்டாயம் வாங்கிப் படிக்கவேண்டும்.

கண்ணகியை விட்டுவந்த கோவலனுக்கு மாதவியோடு மட்டும் தொடர்பு ஏற்படவில்லை. நேரடியாய்ச் சொல்லாவிடினும் பூடகமாய் அங்கங்கே குறிப்போடு இளங்கோ இதைச் சொல்வார். அவனுக்கு வசந்தமாலையோடும் தொடுப்பு ஏற்படுகிறது. மாதவி எப்படியோ அதை நாள்கழித்து இலேசு பாசாய் அறிந்துகொள்கிறாள். கடலாடுகாதையில் வசந்தமாலை வருந்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ”கோவலன் - வசந்தமாலை உறவு தகாதது, முறையற்றது” என்று கோவலனுக்கு உணர்த்துவதற்காகத் தான் கானல்வரிப் பாட்டே எழுகிறது. ”காவிரியை மட்டுமா சோழன் கொண்டான்?, கன்னியையும் தான் கொண்டான்?” என்று தொனிக்க கோவலன் மாற்றுப் பாட்டைப் பாடுகிறான். இங்கே மாதவி காவிரிக்கு ஒப்பாகிறாள்; வசந்த மாலை கன்னிக்கு ஒப்பீடாகிறாள். கோவலன் புகாரை விட்டுப் பிரிந்தது மாதவியாலும் அல்ல; கண்ணகியாலும் அல்ல. மாதவின் முன்னேயே கோவலனின் குட்டு வெளிப்பட்டு விட்டது. மாதவி தன் குறிப்பால் அதைக் கேட்கிறாள். கோவலனால் அதற்கு விடைசொல்ல முடிய வில்லை. தன்னைத் திருத்திக்கொள்ளவும் முடியவில்லை. அவனுக்குச் சினமெழுகிறது தான் ஊர் மேய்வதைத் தன் காமக்கிழத்தி கேட்டுவிட்டாளே எனக் கோவங்கொண்டு புகாரைவிட்டு ஒரேயடியாய் விலகுகிறான். அதேபொழுது ”இவ்வளவு தவறுகள் நடந்தும் தன் மனைவி தன்னை மன்னித்து ஏற்றுக்கொண்டாளே?” என்று மனந்திருந்தி மதுரைக்கு வருகிறான். மதுரைக்கோட்டைக்குள் வந்ததும் அவன் முதற்பார்வை கணிகையர் வீதியைத் தான் நாடுகிறது. நாய்வாலை நிமிர்த்தவா முடியும்?

திரு. ஆ. பழநி சொன்ன எல்லாக் கருத்துக்களை நான் ஏற்காவிட்டாலும், அவர் காட்டிய கோணம் ஒரு புதிய புரிதலை எனக்களித்தது. இன்னும் ஆய்ந்து பார்க்க வேண்டும். அவர் சொல்வது பெரும்பாலும் சரியாய் இருக்குமென்றே இப்போதெல்லாம் எண்ணுகிறேன். இதைக் காடுகாண் காதையிலும் பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: