Tuesday, August 20, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 3

ஆறாவது சொல்லான குருவிற்கு வருவோம். 

குல்>குள்>குரு என இச்சொல் வளரும். குல் எனும் வேர்ச்சொல், அடிப்படையில் தோன்றல் வினையைக் குறிக்கும். பின் முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற் செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்று பல்வேறு பொருட்பாடுகளை உணர்த்திச் சொற்களை உருவாக்கும். 

குல்லல்= தோன்றல். அன்றாட வாழ்க்கையில் குலம் என்கிறோமே? அது குல்லலில் எழுந்ததே. lineage என்பது அதன்பொருள். குல்>குழு= சேர்ந்து கொண்டது. இதைக் குழுவியது என்றுஞ்சொல்வார். குல்>குரு-த்தலில் எழுந்த பெயர்ச்சொல்  குருத்து என்பதாகும். ”வாழை, பனை, தென்னை, மரஞ் செடி கொடிகள்” எனப் பல்வேறு குருத்துகளை அன்றாட  வாழ்விற் சொல்வோம். குருத்து= sprout குருகெனினும் குருத்தென்றே பொருள். குருந்தென்றும் அமையும். குரு>குரும்பு>குரும்பை= தென்னை, பனங்காய்களின் பிஞ்சு. குரு= கொட்டை;  குழு>கொழு>கொழுந்து என்பது துள்>துளிர்> தளிரைக் குறிக்கும். குரல்= கூலக் கதிர். பூங்கொத்து என்றும், தினை, வாழை ஆகியவற்றின் தோகை என்றுஞ் சொல்வர்.  குரு>கூர்>கூலம் என்றும் தொடர்பு சொல்லலாம்.

குரல்>குரற்புல்>குரப்புல்= தருப்பைப் புல்= dharba grass. (பார்ப்பனத் துறவியர் மட்டுமின்றி) எல்லாத் துறவிகளும் தருப்பைப்புல் தடுக்கில் அமர்வராம்.  குரம்= தருப்பை;, குரமுளை= எல்லாவகை வித்துகளினின்றும் தோன்றும் முளை, குருக்கு= பிரம தண்டுச் செடி prickly poppy நெருஞ்சி முள்ளுக்கும் குருக்கென்ற பெயர், அதன் கூர்மையாலுண்டு, இன்னொருவரை வையும் போது  “உன் வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க!” என்பாருண்டு.  சரி தாவரங்களுக்கு மட்டுமே குள்/குழு/கொழு என்ற அடிச்சொல் அமைந்ததா எனில் இல்லை. பல்வேறு உயிரிகள், விலங்குகளுக்கும் கூட அமைந்தது என்றே சொல்லவேண்டியுள்ளது.. 

குரு என்பது, கருவென்றும் திரியும். முட்டைக்குள்ளும் கருவுள்ளதே? குட்டிகள் பிறக்கும்போது  ஆண்விந்தும்,  பெண்முட்டையும் சேர்ந்து கருவாகிறது. கருவைச் சூல் என்கிறோமே?; குழவி, குழந்தை தொடர்பான சொற்களும் குல், குள், குழவில் எழுந்தவையே. அடிப்படையில் இவை இளமை குறிக்கும் சொற்கள்.  குழகு, குழகனும் குழந்தைப் பெயர்களே. குள்>குள்+து=குட்டு> குட்டி என்பதும் தோன்றல் கருத்தில் எழுந்ததே. குள்+ந்+சு>கு(ள்)ஞ்சு என்பதும் தோன்றல் கருத்து வளர்ச்சியே. குருள்>குருளை= குட்டி. ஆங்கிலத்தில் girl. குருத்துக் குழந்தை= அப்போது பிறந்த குழந்தை just-born kid; உடலில் பொக்குளம் ஏற்பட்டு எழுகிறதே? அதையும் குருத்தலென்பார். குரு குருத்தல் = வேர்க்குரு உண்டாதல், நமைத்தல், அம்மைக் கொப்புளமும் எழுவதும் குருத்தல் தான். குருப்பு = பரு; புண், குருப்பித்தல்= பருவுண்டாதல். குருமை= பருமை, பெருமை;  குருக்கல்= குரு (பொக்குளம்) உணடாதல்.

குழுத்தல்= பருத்தல், பெருத்தல். பெருத்தல் என்பது இரு பரிமானத்திலும், முப் பரிமானத்திலும் நடக்கலாம். பருமன் என்பது முப் பரிமானம். பரப்பு என்பது இரு பரிமானம். குழு>குழித்தல் என்பது இரு பரிமானச் சொல். குழுத்தல், குழுமுதல் என்பது, கூடலிற் தொடங்கி சொற்பொருள் வளர்ச்சியிற் குழித்தல் ஆகும். குழுத்தலின் திரிவான கொழுத்தல் திண்மப் பருமனையும் (solid expanse), குழித்தலின் திரிவான கொழித்தல் நீர்மப் பருமனையுங் (liquid expanse) குறிக்கின்றன. குழித்தல் என்ற சொல், முதலில் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குவதற்குப் பயனாகிப் பின் எல்லா எண்களையும் பெருக்குதற்கு ஆகியது. (சதுரத்திலிருந்து செவ்வகம் போய்ப் பரப்பைக் காணும் சிந்தனை விரிவை இங்கு அறியலாம்.)  காலங் காலமாய் தமிழகத்தின் செந்தரக் குழி என்பது 16 சாண் சதுரம் = 121 சதுர அடி.  (18 சாண் சதுரம், 12 சாண் சதுரம் போன்றவையும் சிலவட்டாரங்களில் சில காலங்களில் இருந்துள்ளன. 1 சாண்= 8.25 அங்குலம்; 16 சாண்= 132 அங்குலம்= 11 அடி.) குழியிலிருந்தே மா, வேலி என்ற பெரிய பரப்பளவைகள் உருவாகின.

இனிக் குருவின் பெருமைப் பொருளுக்கு வருவோம். குரு+அவன்= குரவன்= தலைவன்; குரு>குரம்>குரத்தி= தலைவி; இச்சொல் குருவின் மனைவி, குருப்பதவி ஏற்றிருப்பவள், சமணப் பெண்துறவி ஆகியோரையுங் குறிக்கலாம். ஐங்குரவர்= அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோரைக் குறிக்கும். பொதுவாய், குரு என்பது அறிவாசிரியனைக் குறிக்கும். சிவ சமயக் குரவர் நால்வர். என்பார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பாரே அவராவர். குரவடிகள்= சமண ஆசிரியத் துறவி, குரவு= ஆசிரியத் தன்மை. குரிசில்= பெருமையிற் சிறந்தோன். வள்ளல். தலைவன், குரு= ஐங்கரணன் (பஞ்சாங்கக்காரர். இக்காலத்தில் பெருமானர் வாத்யார் என்றழைப்பார்), வியாழக் கோள்.  சிவன்கோயிலில் இறைவன் திருமேனிக்கு அலங்காரஞ் செய்து ஆகமம் பேணி, திருநீறு அளிப்பவர், (இவர் பெருமானர் மட்டுமென்று பொருளில்லை. சிவ வேளாளராகவும், வேளகாரர்/குயவராகவும் கூட இருக்கலாம். )  தவிர, குரு என்பதற்குக் குருகுலத் தலைவன், அமைச்சன், அயன் (பிரம்மன்) என்ற பொருட்பாடுகளும் உண்டு.  குழு>கெழு>கெழுமை>கிழமை>கிழவன்>கிழான் = உரியவன், தகைவன், கணவன், மருதநிலத் தலைவன் ஆகிய சொற்களும் இதே தொடர்பிள் கிளைத்தவை தாம்.

குரு என்பது பருமன், கனமென்ற பொருளின் நீட்சியாய் வடமொழியில் நிரையசையைக் குறிக்கும் வாய்ப்பாடாகும். நெடில், நெடிலொற்று, குறில், குறிலொற்று என்ற நாலையும் இரு மாத்திரையளவு கூடிய அசையாய் (வடமொழியொட்டி தமிழுக்கு இலக்கணஞ்சொன்ன) வீரசோழியம் அடையாளங்காட்டும்.  (இது நிரையை நிறையெனத் திரித்துப் புரிந்து கொண்டதன் பலன் ஆகும்.) குரு= நிறை ஆகி,  அதன் நீட்சியான குருவம் gravity என்ற பொருளைத் தந்தது.  குருவேற்றக் கொள்கை= gravitation theory.

சரி,  ”குரு தமிழா?” எனில் தமிழ் என்றே சொல்வேன்.. ”சங்கதத்தில் guru ஆகிறதே?”- எனில் மறுக்க முடியவில்லை. அதேபொழுது சில சொற்களின் தொடக்கம் அதிர்ந்து voiced வகையில் ஒலிப்பதாலேயே, சட்டெனச் சங்கதம் என்றுவிட முடியாது.  ஏனெனில், மேற்சொன்ன தோன்றல், முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற்செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்ற இத்தனை பொருட்பாடுகளையும் பல்வேறு சங்கதச் சொற்கள் உணர்த்துவதில்லை. ஆனால் தமிழ்ச் சொற்கள் உணர்த்துகின்றன. மேலே கூறிய தமிழ்ச் சொற்களின் வளம், அகல்வரிசையைக் காணும்போது, தோற்றம் அங்கு தானா என்பதில் இன்னும் ஐயமுண்டு.  தமிழுக்கே ஆதாரம் அதிகம்.

ஏழாவது சொல்லான ஞானம் தமிழ் என்பதைச் சொல்லாய்வறிஞர் ப.அருளி தன்னுடைய, “யா” என்ற நூலில் மிக விரித்துச் சொல்லியுள்ளார். அதற்குமேல் சொல்வது கூறியது கூறலாகும். நண்பர் அந்த அருமையான நூலை வாங்கிப் படியுங்கள்.  உங்க்ளைப் போன்றோர் புரந்தால் தானே தமிழ்முயற்சிகள் நடக்கமுடியும். நம்மில் பலரும்  அதையேன் செய்யத் தயங்குகிறோம்?

அடுத்த பகுதியில் முடிவிற்கு வந்துவிடுவேன்.

அன்புடன்,
இராம.கி.

2 comments:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் ஐயா! குரவர், குரிசில் ஆகிய சொற்களையும் அவற்றின் பொருள்களையும் ஒப்பிட்டுப் பார்க்கையில் குரு என்பதும் இதன் அடியொற்றிய இன்னொரு சொல்லே என்பதை உணர முடிகிறது. தங்கள் விரிவான ஆழமான விளக்கத்துக்கு நனி நன்றி!

ந.குணபாலன் said...

நெருஞ்சி முள்ளுக்கு குருக்கு என்றும் பெயருண்டென்று அறியும்போது;
“குறுக்காலை போக” என்று திட்டுவதன் விளப்பம்
“நெருஞ்சியிலே போக” என்பதாக இருக்கலாமோ என்றெண்ணத் தோன்றுகிறதே!