Saturday, August 31, 2019

சிலம்பு ஐயங்கள் - 9

இப்பொழுது நாம் பார்க்கப்போகும் வரிகள்

தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு
மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி
கூறு நீ”யெனக் கோவலற்கு உரைக்கும்

என்பதாகும். தீயில் திறங்காட்டுவது என்பது யாகம் நடத்துவதே. அக் காலத்தில் யாகஞ் செய்யக் குறைந்தது நால்வர் தேவை. இக்காலத்தில் ஒருவரே 2 வேலைகள் செய்வதும், ஒரே வேலையை இருவர் செய்வதும் நடக்கிறது. ஒவ்வொரு யாகத்திலும் கூர்ந்து கவனித்தால் பொறுப்புப் பகிர்வது தெரியும். முதலாமவர் ஓதி (Hotri; நம் ஓதியே சங்கதத்தில் நம் ஓத்ரி> நம்மோத்ரி>நம்மூத்ரி> நம்பூத்ரி ஆகலாம். முன்குடுமி நம்பூதிகள் சேர நாட்டிலும், சோழியர் சோழ, பாண்டிய நாடுகளிலும் தங்கினார். சங்க காலத்தில் முன்குடுமிச் சோழியரே மிகுதி. இற்றைக் காலத்தில் சென்னைப் பக்கம் ஓதியை வாத்தியார் என்பர்.). இரண்டாமவர் அடுத்தவர் (= நெருங்கியவர்; assistant; சங்கதத்தில் Adhvaryu. யாகத்தின் பூதிக-physical-வேலை செய்பவர்); மூன்றாமவர் உடுகலி (Udgatri; உடன்பாடி; கனபாடிகளும் இவ் வகை தான். கலித்தல்=பாடுதல். கலித்தொகை= பாட்டுத் தொகுதி; கலித்தம்> கயித்தம்>கீதம். அன்று சங்கத கீதம் பாடுவது சாமம் ஓதுவதே.) நாலாமவர் பெருமானர் (Brahmin; யாகம் நிர்வகிக்குங் கண்காணி) மாங்காட்டுப் பார்ப்பான் இந்த 4 வகைகளில் ஏதோவொரு வகையாவான். பணஞ் செலவளித்து யாகஞ் செய்பவர் இயமானர்> இசமானர்>எசமானர் ஆவார். ஆக ஒரு யாகத்திற்கு இயமானர், ஓதி, அடுத்தார், உடுகலி, பெருமானர் என்று 5 பேர் வேண்டும். எல்லாம் தமிழ்ப்பெயர் தான். சங்கத ஒலிப்பிற்கு மாற்றிக் கொண்டார். பெருமானரின் பின்னுள்ள தமிழ்ப்புலத்தை அவரும் உணரார்; நாமும் உணரோம். 

”மாமறை முதல்வ! மதுரைக்கு செந்நெறி (= சரியான வழி) எது?” எனுங் கோவலனுக்கு
:
கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தான் நலந்திருகத் தன்மையிற் குன்றி
முல்லையுங் குறிஞ்சியும் முறைமையிற் திரிந்து
நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்
காலை எய்தினீர் காரிகை தன்னுடன்

என்று மறையவன் மறுமொழி தொடங்குவான். மாமறை முதல்வ என்பது இங்கு ஓதியைக் கூரிக்கலாம். கோத்தொழிலாளர் = bureaucrats; வேத்தியல் = governance. கோவலனென்ற இயற்பெயர் பற்றி முன்பே சொன்னேன். சென்ற பிறப்பில் பரதன் என்பது இவனுடைய இயற்பெயர்; தொழிற்பெயரோ கோவலன் (கோ வலன் = கோத்தொழிலாளன்) ஆனது; இப்பிறப்பில் கோவலன் இயற்பெயர்; தொழிற்பெயர் பரதன் (= விலை சொல்வான்; trader/import-exporter) ஆனது. கோவலன் பெயருக்கு அடுத்து 2 ஆஞ் சொல்லிலே கோத்தொழிலாளரென மேலே ஆள்வதைக் கண்டுமா, சிலருக்குக் கோவலன் பெயரின் வார்த்தை விளையாட்டுப் புரியவில்லை? ஓர்ந்து பாருங்கள். விதியோ, வினையோ, எதுவாயினும் சமணருக்கு அறநெறி சொல்ல முற்பிறவிக் கதைகள் தேவை. இல்லெனில் பிறவிச் சுழற்சியை எப்படி உணர்த்துவது, அற்றுவிப்பது, செயிப்பது, போதிப்பது?

கோவலன்-கண்ணகி-மாதவி பெயர்விளக்கத்தை முன்னொரு கட்டுரையிற் சொன்னேன். (என் நூலிலும் உண்டு.) பொறுமையோடு படிக்காது, வறட்டுப் பிடிவாதமாய், “இராகவையங்கார் சொன்னார்; இவர் சொன்னார்; கிருஷ்ணன், இலக்குமியே கோவலன், கண்ணகிக்குப் பொருள்” என அடம் பிடித்து, விண்ணவச் சாயலைச் சிலம்பிற்குச் சார்த்தித் தானுங் குழம்பி மற்றோரையும் குழப்புவர்க்கு என்ன சொல்லி என்ன பயன்? விட்டுவிட வேண்டியது தான். எரி விண்கல் பற்றிச் சொல்லும்போது ”எறிந்த” என்றே சொன்னேன். ஆயினும் ”எறிந்த”வை விட்டு ”எரிந்த” என்று பொருள் கொள்வாருக்கு என்ன சொல்ல? நகர வேண்டியது தான். ரகர, றகறங்களுக்கு வேறுபாடு அறியாமலா பொருளெழுத வருவேன்? கட்டுரைத் தொடரைக் கவனமெடுத்து ஆழப் படிப்போருக்கு உறுதியாகச் சொல்கிறேன். சிலம்பைப் புரியாது பழந்தமிழர் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. அதுவோர் அரிய திறவு கோல். உ.வே.சா.விற்கு நாமெலோரும் நன்றி சொல்ல வேண்டும்..மேல் வரிகளுக்கு வருவோம்.

ஒரு கொற்றவன் கோத்தொழிலாளரோடு கோடினால் (= விலகினால்) அவனுடைய வியல்நிலம் வேத்தியல் இழந்து போகுமென்ற கருத்து மிக முகன்மையானது. (இதை அருத்த சாற்றமும் அழுத்திச் சொல்லும். இன்றும் அமைச்சர் இந்திய ஆட்சிப் பணியாளரோடு கோடிக் கொண்டால் நாடு அதோ கதி தான்.) அதுதான் கதை நடந்த காலத்திற் பாண்டி நாட்டில் நடந்தது. கோத்தொழிலாளர் அரசனுக்கு எச்செய்தியுஞ் சொல்லவில்லை. (தமிழகம் அறிந்த ஒரு வணிகனின் மகன் கோட்டைக்குள் நுழைந்துள்ளான். ”அவன் யார்? எதற்கு வந்தான்?” என்ற செய்தி கூட அரசனுக்கு அறிவிக்காது ஒரு கோட்டைத் தளபதி இருக்கமுடியுமா? Intellignce officials- ஏ பாண்டிநாட்டில் இல்லையா? கோவலன் என்ன சுப்பனா, குப்பனா? ”பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த ஒருதனிக் குடிகளோடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான்” மகனல்லவா? இன்றைக்கு அம்பானியின் மகன் மும்பையில் அடையாளந் தெரியாது போகமுடியுமா?” படித்துப் பார்த்தால் சற்று முரணாய்த் தெரியவில்லையா? ”கோவலன் யார்?” என்று தெரியாமல் கோட்டைக்குள் நுழைந்தான் என்பது பாண்டிய நாட்டில் “வேத்தியல்” குலைந்து கிடந்ததையே உணர்த்துகிறது.

பின்னால் அரசனிடம் வழக்காடையில் கணவன்பெயர் சொல்லாமல் ”மாசாத்துவான் மருமகள்” என்று தானே கண்ணகி தன்னை அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்? அப்படியாயின் மாசாத்துவான் 3 நாடுகளிலும் அரசுத் தொடர்பாளர்க்குத் தெரிந்தவனாகவே இருப்பானல்லவா? ஆயினும் கோவலன், கண்ணகியாரென்று அரசனுக்குத் தெரியவில்லையாம். Isn’t it something wrong with governance? பாண்டியன் எப்படி எதையும் விசாரிக்காமல் பொற்கொல்லன் பேச்சை நம்பிக் கோவலனைக் கொன்று சிலம்பு கொணரச் சொன்னான்? வழக்குரைகாதையில் அல்லவா, அரசனுக்குத் தன்தவறு புரிகிறது? எனவே பாண்டிய அரசின் நிர்வாகம் அரசனுக்குப் பல செய்திகளைச் சொல்லவில்லை என்று தோன்றவில்லையா?.அரசனும் எதையுங் கேட்கவில்லையே? அரச நடைமுறையில் ஏதோ அடிப்படைத் தவறுள்ளது போல் ஆகவில்லையா? அதைத்தான் இங்கே உருவகமாய் வைத்து இளங்கோ சொல்கிறார்.

பின்னால் கட்டுரைக் காதையில் மதுராபுரித் தெய்வம் மதுரையில் கண்ணகிக்கு முன் நடந்த கலகங்களையும், மக்கள் மன்னனை எதிர்த்த கதையையும் ”ஆடித்திங்கள் மதுரை அழற்படும்” என்ற தானறிந்த முந்தையச் செய்திகளையும் அழற்பாடு சற்று தணிகையிற் சொல்லும். பஞ்ச காலமென நான் சொன்னதற்கு அதுவுமொரு காரணம் மக்களுக்கு அரசன் மேல் ஏராளங் கோபம் இருக்கும் எனில் அது பஞ்சகாலம் தான். இல்லெனில் கண்ணகிக்கு நடந்த நிகழ்ச்சியை வினையூக்கியாய் வைத்து மதுரை எப்படி எரியூட்டப்படும்.? இலக்கிய அழுத்திற்காக இளங்கோ அதைக் கொங்கையில் விளைந்ததாய்ச்  சொல்லலாம். (அதை ஒழுங்காய்ப் புரிந்துகொள்ள வேண்டாமா?) அதை விடுத்து தான் மதிக்கும் நாகசாமி ”சிலம்பைப் புதினம்" என்று சொன்னதால், “கொங்கையிற் பாசுபரசா இருந்தது?” என்று நண்பர் நா.கணேசன் ஈரோட்டுப் பெரியாரை துணைக்கொண்டால் நாம் எங்கே போய் முட்டிக் கொள்வது? மஞ்சட் கண்ணாடி போட்டுப் பார்த்தால் உலகம் மஞ்சளாய்த் தான் தெரியும். "ஆமாங்க! கண்ணகி ஒரு terrorist. இப்பொழுது உங்கள் மனம் மாறியதா? சிலம்பு ஒரு முட்டாள்தனமான புதினம்.” என்று சொல்வதை இவர்போன்றார் எதிர்பார்க்கிறார் போலும். நாகசாமிக்காகச் சிலம்பின் மதிப்பைக் குறைப்பதில் நா. கணேசன் போல் சிலருக்கு அவ்வளவு ஆர்வம். சரி விளக்கத்திற்கு வருவோம்.
      .
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி, வேத்தியலிழந்த வியனிலம்போல, இங்கே வெங்கதிர் வேந்தன் வேனலங் கிழவனோடு கோடிக்கொள்கிறானாம்.

புவி சூரியனைச் சுற்றும் வலயத்தில் ஓராண்டில் 4 முகனநாட்கள் உண்டு என்று முன்னாற் சொன்னேன். அவற்றில் 2 ஒக்கநாட்கள். மற்று இரண்டில் ஒன்று வேனில் முடங்கல் (summer solstice. இற்றைக் காலங்களில் சூன் 21 இல் நடைபெறும். சிலப்பதிகாரக் காலத்தில் சூலை 15 இல் நடைபெற்றது.) இன்னொன்று பனிமுடங்கல் (winter solstice. இற்றைக் காலங்களில் திசம்பர் 22 இல் நடைபெறும். சிலம்புக் காலத்தில் இது பொங்கலுக்கு அருகில் ஏப்ரல் 14 இல் நடைபெற்றது.) கோடை உச்சமென்பது வேனில் முடங்கலே. வேனில் முடங்கலும், பனி முடங்கலும் புவியின் நாலாம் அசைவான நெற்றாட்டத்தால் (nutation) நெடுங்காலப் பாதிப்பிற்கு உள்ளாகும். அதாவது அவ்வியக்கத்தால் வேனில் முடங்கல் ஒரு சுழற்சிப் பருவத்தை ஒட்டி மிகச் சூடும், குறைவான சூடுமாய் ஆகிவிடும். இந்த நெடுங்கால மாற்றம் போக 12 ஆண்டிற்கு ஒரு முறை சூரியனில் தோன்றும், மறையும் சூரியப் புள்ளிகளாலுங் கோடை கூடுவதுங் குறைவதுமுண்டு. சூரியப்புள்ளிகளால் ஆகும் சூட்டுக் காலத்தையே பஞ்சகாலம் என்றார். அது பெரும்பாலும் தாது ஆண்டிலும் (தாது+12, தாது+24, தாது+36, தாது+48) ஆண்டுகளிலும் நடைபெறுவதாய் ஒரு கணக்கும் உண்டு.

ஏதோவொரு காரணத்தால் வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தான் நலந் திருகத் (தான் நலந் திருகிப்போக= அளவிற்கு மீறிய கோடை கூடிப் போக) தன்மையிற் குன்றி (எல்லா ஆண்டுமுள்ள வளம் தருந் தன்மையிற் குன்றி) ”முல்லையுங் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்“ என்று இளங்கோ சொல்வார். பல தமிழறிஞரும் இம் 3 வரிகளைப் பாலை வரையறையாகக் கொள்கிறாரே ஒழிய, என்ன காலமென்பதிற் கோட்டை விடுகிறார். எல்லாக் காலங்களிலும், முல்லையுங் குறிஞ்சியும் திரிந்து பாலை ஆகாது. இவ்வாண்டு நல்ல மழை பெய்து,. ஏரி-குளங்கள் நிறைந்தன; அடுத்தாண்டு இளவேனிற் காலத்திலும் கோடையிலுங் கூட சிலபோது மழை பெய்கிறது; இந்நிலையில் அடுத்தாண்டு பாலை ஏற்படுமா? ஏற்படாது.

இங்கே ஒரு கட்டியம் (condition) இருக்கிறது. அதைப் பலரும் மறந்து விடுகிறார். வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் ”தான் நலம் திருக தன்மையிற் குன்றிய” காலத்திற்றான் பாலை ஏற்படும். இப்பொழுது சூரியப் புள்ளிகளைப்பற்றி ஓர்ந்து பாருங்கள். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனின் நலம் திருகிக் கொள்கிறது. தன் வளந்தரும் தன்மையிற் குன்றிப் போகிறது. (மேலையர் 11 இலிருந்து 12 ஆண்டுகள் என்று துல்லியக் கணக்குச் சொல்வார். இந்திய வானியல் அன்றைக்கிருந்த அறிவில் 12 ஆண்டுகள் என்றது.) இதைத் தான் பஞ்ச காலம் என்கிறோம். மாங்காட்டுப் பார்ப்பான் கோவலனைப் பார்த்து, “என்னைய்யா, பஞ்சகாலம் ஏற்படுஞ் சமயத்தில் பெண்டாட்டியோடு இங்கே வந்திருக்கிறாய்?  உங்களூர் போல நீர்வளம் கூடிய நாடு இது அல்லப்பா? இது வறுபடும் நாடு” என்கிறான். அடுத்த பகுதிக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.   

No comments: