Friday, August 30, 2019

சிலம்பு ஐயங்கள் - 8

அடுத்து திருவரங்கம், திருவேங்கடம் பற்றிப் பேசிவிட்டு மதுரைக்கான 3 வழிகளுக்குச் செல்லப்போகிறோம். தீது தீர்ச் சிறப்பின் தென்னனை வாழ்த்திய மாமுது மறையோனிடம் ”யாது நும்மூர்? யாது ஈங்கண் வரவு?” என்று கோவலன் கேட்க,

நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப்
பால்விரித்து அகலாது படிந்ததுபோல்
ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறல்
பாயற் பள்ளி பலதொழுது ஏத்த
விரிதிரைக் காவிரி வியம்பெருந் துருத்தித்
திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும்

என்று 35-40 ஆம் வரிகளில் அரங்கத்தம்மானைப் பற்றி மறையோன் கூறுகிறான். மலைப் பாம்பின் மேற்பக்கம் முழுக் கருப்பாகவும், கீழ்ப்பக்கம் வெண்மையாகவும் இருக்கும். இத்தகைப் பாம்பு சுற்றிச் சுற்றி வளைத்து பாயற்பள்ளி அமைப்பது, எப்படியிருக்கிறதாம்? நெடிய பொற்குன்றத்தின் எல்லாப் பக்கங்களிலும் விரிந்து கருமேகம் படிந்ததுபோல் இருக்கிறதாம். இங்கே ஆயிரந் தலைகள் என்பது உயர்வுநவிற்சி (இயற்கையில் எப்போதாவது இருதலைப் பாம்புகள் பிறப்பதுண்டு.) விரியும் குறு அலைகளையுடைய அகன்ற பெரும் துருத்தியின் (காவிரியில் திருவரங்கத் தீவு இன்றும்  துருத்திக்கொண்டு தான் உள்ளது) பாயற்பள்ளியில் எல்லோரும் தொழுது ஏத்தும்படி திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் - என்ற விவரிப்பு நளினமானது. அடுத்து,

வீங்குநீர் அருவி வேங்கடமென்னும்
ஓங்குயர் மையத்து உச்சி மீமிசை
விரிகதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போல
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையின் ஏந்தி
நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம்பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்

என்ற 31-51 ஆம் வரிகள் வேங்கடத்துச் சிறப்பைக் கூறுகின்றன. வேங்கடம் என்பது நண்பர் நூ.த.லோ.சு. சொன்னபடி சிலம்பின் காலத்தில் வேங்கடம் (வேகுங் கடம் வேங்கடம். இன்றுள்ள இராயல சீமையிற் பாதியை இது குறிக்கும்.) என்ற பரப்பையும் வேங்கடத்துள் நிற்கும் 7 மலைகளையுங் குறிக்கும். வேங்கடத்திற்கு மேலுள்ள நல்ல மலையைச் சுற்றியுள்ள பகுதியும் வேகுங் கடம் தான். ஆனால் சங்க காலத்தில் அது மொழிபெயர் தேயமென்ற பெயரைக் கொள்ளும். மாமூலனார் நிறையப் பேசியுள்ளார். மொழிபெயர் தேயம் இன்னும் வடக்கே போய் நூற்றுவர் கன்னர் (சாதவா கன்னர்) அரசைத் தொடும்.  [வெங்காலூர்க் குணா பேசிய ”விந்தமலைக்” குறிப்பை  வேறு ஒரு கட்டுரையில் பேசுவேன்  வேங்கடத்திற்கு முற்றிலும் புதிய பார்வையை அவர் கருத்து நல்குகிறது. வேங்கடம் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. தமிழர் பலரும் சரியாக உணரக்கூடவில்லை.]

இன்றும் திருவேங்கட மலைக்குள் போகும்போது ஒரு வறண்டுபோன அருவியைப் பார்க்கலாம். (கோயில் நிருவாகத்தார் மறுபடியும் அதைப் புதுப்பிக்க முயல்கிறார். கோயிலுக்குச் செல்வங் கொட்டி வழியும் போது இதுபோல் அருவியைப் புதுப்பிக்க முடியாதா, என்ன? அக்காலத்தில் அது வீங்குநீர் அருவியாய் இருந்தது போலும். அம்மலையின் உச்சியில் ஒரு பக்கம் ஞாயிறும், இன்னொரு பக்கம் திங்களும் ஓங்கி நிற்க இடைப்படும் இடத்தில் ஒளி பொருந்திய கோடியுடையை உடுத்தி வானவில்லைக் கையிற் தரித்து நல்ல நிறங் (கருநிறம்) கொண்ட மேகம் நின்றது போல் பகைவர் அணங்கிப் போகும் (ஆட்பட்டுப் போகும்) ஆழியையும், பால்வெண் சங்கத்தையும் தன் தகைபெறும் தாமரைக்கையில் ஏந்தி நலம் கிளர்த்துகின்ற ஆரத்தை மார்பிற் பூண்டு, பொற்பூ ஆடையிற் பொலிந்து (பொற்பூ ஆடையைத்தான் பீத அம்பரம் என்று ஆண்டாளும் ஆழ்வாரும் சொல்லிச்சொல்லிக் குதுகலிப்பர்) தோன்றிய செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் - திருவரங்கத்தை விட இது இன்னும் நளினமான விவரிப்பு.

இந்த இரு இடங்களையும் காணவந்தேன்.  நான் குடமலை மாங்காட்டில் உள்ளேன். தென்னவன் நாட்டுச்சிறப்பும் செய்கையும் கண்மணி குளிப்பக் காண்டேன் ஆதலின் வாழ்த்திவந்திருந்தேன் இதுவே என் வரவு என்று மாங்காட்டு மறையோன் சொல்லுகிறான்.

இதில் கவனிக்கவேண்டியது திருவரங்கத்தையும், வேங்கடத்தையும் பார்க்க வந்த மாங்காட்டு மறையோன், மதுரைக்குச் செல்லும் 3 வழியையும் விவரிக்கும் போது திருமால்குன்றம் பற்றி ஓரளவு மட்டுமே நிறைவின்றிச் சொல்வான். அதில் அரங்கம் வேங்கடம் போல் ஆழ்ந்த உணர்வு கலந்திருக்காது. ஏதோ நிறைவில்லாதது போல் தெரியும். பேரா. தொ.பரமசிவன் தன் முனைவர் பட்ட ஆய்வேட்டில் திருமால் குன்றம் என்பது ஒருகாலத்தில் புத்த ஆராமமாய் இருந்திருக்கலாமென்று பல்வேறு வகையில் நிறுவுவார். (அருமையான ஆய்வேடு, பொத்தகமாயும் வெளிவந்தது. தமிழினி வெளியீடு.) அப்படி ஆகின் இம்மாற்றம் கி.மு.75 க்கும் முன் நடந்திருக்க வேண்டும். எத்தனையோ புத்த, செயின, அற்றுவிகக் கோயில்கள் சிவ, விண்ணவக் கோயில்களாய் மாற்றம் பெற்றுள்ளன. அவற்றில் இதுவும் ஒன்றோ என்னவோ?  (எங்கெல்லாம் மொட்டை போடுகிறோமோ, அங்கெலாம் சமய மாற்றங்கள் ஏதோவொரு காலத்தில் பெரும்பாலும் நடந்திருக்கலாம். திருப்பதி மொட்டையும், “அக் கோயிலின் தோற்றம் என்ன?” என்று நம்மைக் கேள்வி கேட்க வைக்கிறது. வேறு பெருமாள் கோயில்களில் இது நடப்பதே இல்லையே?)       

இனி மூன்று வழிகளுக்கு வருவோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: