”கபிலர்->கபில், கபில வஸ்து.. நம்மிடமிருந்து இச்சொல் வடக்கே சென்றதற்கு ஏதேனும் வரலாறுண்டா ?” என்ற கேள்வியை நண்பர் நாக.இளங்கோவனின் முகநூல் பக்கத்தில் புறம் 53 ஐ விளக்கிய இடுகையில் 2020, 16 ஆகத்தில் இன்னொரு நண்பர் விசுவநாதன் எழுப்பினார். ”கபிலர்” என்ற சொல்லின் வேரை விளக்கும்படி நண்பர் இளங்கோவனும் கேட்டிருந்தார்.
பல்வேறு கபிலர் நம் வரலாற்றில் இருந்தார். அவரில் சிலரை, குறிப்பாகச் சாங்கியத் தொடர்பான ஆதிக்கபிலர் பற்றி, இங்கு பார்ப்போம். ”கபிலரின்” சொற்பிறப்பைக் கடைசியில் அலசுவோம். பலருமறிந்த சங்ககாலக் கபிலர் பற்றிச் சொல்ல நிறைய உண்டெனினும், அவர் பற்றிய செய்திகள் ஏராளம் இணையத்தில் உள்ளதால், சிலவற்றையே இங்கு சொல்ல விழைகிறேன்.
1. சங்கநூல்களில் 235 பாடல்கள் பாடிய கபிலரின் காலம் பெரும்பாலும் பொ.உ.மு. 197-143 ஆகலாம். பதிற்றுப்பத்தில் 7 ஆம் பத்தைப் பாடி, செல்வக் கடுங்கோ வாழியாதனிடம் (பொ.உ.மு. 164-140) நூறாயிரம் காணம் பொன்னும், "நன்றா" மலை மீதேறி அவன் கண்ணுற்ற அளவு கொடுத்த நாட்டையும் கபிலர் பரிசிலாகப் பெற்றுள்ளார்.
கபிலரோடு பரணரையும் சேர்த்தே தமிழறிஞர் சொல்வர். அதேபொழுது பரணரைவிடக் கபிலர் மூத்தவராகவே தெரிவார். பரணர் காலம் பெரும்பாலும் பொ.உ.மு.180-123 ஆகலாம். ”பரணரைப்” பாணரென்றும் பழஞ்சுவடிகளில் படிக்கலாம். பாணரெனில் அவர் இயற்பெயரெது? - எனக்கு விடை தெரியாது. அதே பொழுது, கபிலர், பரணர், மாமூலர், இளநாகர், ஔவையார் ஆகியோரை ஒதுக்கிக் காணின், சங்க இலக்கியம் மெய்யாய் வறிதாகி விடும்.
2. புறம் 200 ஆம் பாட்டில் ”யானே பரிசிலன் மன்னும் அந்தணன்” என்றும், புறம் 201 இல் ”அந்தணன் புலவன்” என்றும் கபிலர் தன்னை அடையாளங் காட்டிக் கொள்வார். "புலனழுக்கற்ற அந்தணாளன்" என மாறோக்கத்து நப்பசலை (புறம் 126, 174) கபிலரைப் பாராட்டுவார். [பெருங்குன்றூர்க் கிழாரும் (பதிற்.85), பொருந்தில் இளங்கீரனாரும் (புறம் 53) கபிலர் புலமையைப் பாராட்டுவார்.]
தந்தையை இழந்த பாரிமகளிரை ஓர் அந்தணர் வீட்டில் இறுத்தியது, “மகட் கொடைக்கு ஆட்படாதிருக்க” என்றே பலருஞ் சொல்வர். இக்கூற்றுகளைப் பார்க்கையில், அந்தணர் என்பது இங்கு பார்ப்பனரைக் குறிப்பதாகவே கொள்ளலாம். தமிழ் நாவலர் சரிதையில், கபிலர் பாடியதாய்
பீடுடைப் பிடியின் கேடேய்க் கும்மே வாடிலோ,
பைந்தலைப் பரதவர் மனைதொறும் உணங்குஞ்
செந்தலை யிறவின் சீரேய்க் கும்மே
என்று எத்தொகைநூலிலும் வாராத தனிப்பாட்டு ஒன்றுண்டு. இதன் சிறப்பு கருதி, 12 ஆம் நூ.திருவாலவாயுடையார் புராணத்தின் 27 ஆம் பகுதியான ஞானோபதேசம் செய்த திருவிளையாடலின் 3 ஆம் பாட்டிலும் (கீழ் வருவது) இதே செய்தியை பெரும்பற்றப் புலியூர் நம்பி மேற்கோளாய்க் குறிப்பார். (17 ஆம் நூ திருவிளையாடல் புராணத்தை விட, திருவாலவாயுடையார் புராணம், கற்பனை குறைந்து, உண்மைச் செய்திகள் மிகுந்தது.) .
காதல்கூர் பனுவல் பாடும் கபிலனார் பிறந்த மூதூர்
சோதிசேர் வகுள நீழல் சிலம்பொலி துலங்கக் காட்டும்,
வேதநா யகனார் வாழும் வியன்திரு வாத வூரால்
எனும் திருவாலவாயுடையார் புராணப் பாட்டின் வழி மாணிக்க வாசகர் பிறந்த அதே பாண்டித் திருவாதவூரில் சங்கக் கபிலரும் பிறந்தாரென அறிகிறோம். ஒரு வேளை மாணிக்கவாசகர் போல், கபிலரும் அமாத்திய (அமைச்ச) குலத்தில் பிறந்தாரோ, என்னவோ? எனக்குத் தெரியாது. ஏனெனில் வாசகர் போலவே இவரும் அரசர் செயல்களின் ஊடே எளிதில் புகுந்து வெளிவருகிறார்.
பொ.உ. மு.143 இல், திருக்கோவலூருக்கு அருகில் தென்பெண்ணை ஆற்றின் நடுவில், கபிலர் குன்றில், உண்ணா நோன்பிருந்து கபிலர் இறந்தார் என்பர் ஏன் நோன்புற்று உயிர் துறந்தாரென நமக்கு விளங்கவில்லை. ஏனெனில் பாரி மகளிரை விச்சிக் கோனுக்கும், இளங்கோவேளுக்கும் மணம் முடிக்க இயலா நிலையில் நோன்புற்றார் என்பது நம்பமுடியவில்லை. பின்னால் பாரிமகளிரை யாரோ ஒரு பார்ப்பனன் மணந்தான் என்பதும் ஊகமாகவே தெரிகிறது.
3. ”சிலம்பின்” காலம், செங்குட்டுவன் காலம், நெடுஞ்சேரலாதன் காலம் ஆகியவற்றைக் கணித்தே புகழூர்க் கல்வெட்டு குறிக்கும் செல்வக் கடுங்கோ வாழியாதனின் காலத்தை நாம் கணிக்க முடியும். வாழியாதன் காலத்தைக் கொண்டே கபிலரின் காலங் கணிக்கிறோம்.
தவிர, ஓர் ஆரிய அரசனுக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கக் குறிஞ்சிப்பாட்டு பாடினாரே, அது பெரும்பாலும் கடைசி மோரியன் பெருகதத்தனுக்கே (ப்ரகத்ரதன்; பொ.உ.மு.187-185) என ஆய்வுவழி தெரிகிறது. இவனை யாழ்ப் பெருமதத்தன் என்னும் குறிப்புமுண்டு. இப் பிராமணன் குறுந்தொகையில் 184 ஆம் பாட்டைப் பாடினான். கலிங்கக் காரவேலனின் (பொ.உ.மு. 185-173) சம காலத்திலும் கபிலர் இருந்துள்ளார். அந்துவஞ் சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரை மீட்டதையும் பார்த்துள்ளார்.
4. சங்ககாலக் கபிலரால் பாடப்பெற்றோர் அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன், ஓரி, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக் கோன், வேள்பாரி, வையாவிக் கோப்பெரும்பேகன், மேற்சொன்ன பெருக தத்தன் ஆகியோராவார்.
கபிலர் பாடல்களில் வேள்பாரித் தொடர்பால் பாடியதே அதிகம். சங்க இலக்கியத்தின் பெரும்பாலான பாடல்கள் பொ.உ.மு. 200 இலிருந்து பொ.உ.100 க்குள் எழுந்திருக்கலாம் என்றே சொல்ல முடிகிறது இதற்கும் முந்தையப் பாடல்களும் சங்க இலக்கியத்தில் உள்ளன.
சங்க இலக்கியக் காலத்தைப் பெரும்பாலும் பொ.உ.மு 600 இலிருந்து பொ.உ.150 வரை நான் கொண்டு செல்வேன். பொ.உ.மு.300 - பொ.உ.300 என்ற காலத்தை நான் ஏற்பதில்லை..
மேற்சொன்ன கபிலர் தவிர, தொல்கபிலரென இன்னொருவரும் இருந்தார். அவர் பாடியதாய், அகம் 282, குறு, 14, நற். 114, 276, 328, 399 என 6 பாக்களுண்டு. அவையெலாம் வேந்தரையோ, வேளிரையோ பேசாதுள்ள சங்க காலத் தொடக்கக் குறிஞ்சிப் பாக்களாய்த் தோற்றும். பொ.உ.மு.600 க்கும் முந்தைய சன(=ஜன)பதக் காலப் பாக்களாய் அவையிருக்கலாம்). ஆழ்ந்து படித்தால் தொல்கபிலர், பாரி காலத்திற்கும் முந்தையராய்த் தோற்றுகிறார்.
இவ்விரு கபிலர் போக, ஆவூர் மூலங்கிழார் பாடிய, கௌணிய விண்ணந் தாயனைக் குறித்த, புறம் 166 ஆம் பாடலில் ”சாங்கியக் கபிலர் பற்றிய செய்தியும்” பெயரின்றி வரும்.
தொல்கபிலரும் சாங்கியத் தோற்றுநரான ஆதிக் கபிலரும் ஒருவரா? - என்பது தெரியாது. (இருப்பினும் ”தொல்” எனும் முன்னொட்டு எதைக் குறித்தது? - என்ற கேள்வி நம்மைக் குறுகுறுக்க வைக்கிறது.) அடுத்த பகுதியில் சாங்கியக் கபிலர் பற்றி நிறையவே பேசுகிறேன்.
அன்புடன்,
இராம.கி.
3 comments:
சங்க கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் மகதத்தை ஆண்ட நந்தர்கள் அவர்களுக்கு பிறகு மகதத்தை ஆண்ட மௌரியர்களின் தமிழக படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.பரணர் தன் இள வயதில் கரிகாலன் பற்றி பாடியுள்ளார்.சேரர்களில் கரிகாலனால் நெடுஞ்சேரலாதன் வெல்லப்பட்ட பிறகு சில காலம் கழித்து அறியனை ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். செங்குட்டுவன் பற்றி பரணர் பாடியுள்ளார். இதன் மூலம் கரிகாலன் சேரனை விட சில வருடம் முதியவன் என்பது தெளிவாகிறது. சேரன் செங்குட்டுவன் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு ஆகும் இதற்கு சான்று கூறுங்கள் ஐயா.
ஐயம் தீர்தமைக்கு நன்றி ஐயா.
Post a Comment