Monday, September 07, 2020

கபிலரும் சாங்கியமும் - 3

மூலப்பகுதி போக ஈசனிலாச் சாங்கியத்தில் வெளிப்படும் உறுப்புகளாய் 23 ஐச் சொல்வர்.  இயற்கையைப் புரிந்துகொள்ள உதவும்  உட்கருவிகளாய் மான் (அ) புத்தி (மன்னுவது மான்), தான்/புறம் என்று பிரிக்கும் அகந்தையை, நல்லது/ கெட்டது பிரிக்கும் மனம் எனும் 3 ஐ முதல் தொகுதியாகவும், “மெய், வாய், கண், மூக்கு, செவி” எனும் ஐம்புலன்களை (ஞான எந்திரங்களை) 2 ஆம் தொகுதியாகவும், ”வாக்கு, கை, கால், எருவாய், கருவாய்” எனும் ஐ ஆற்றுக் கருவிகளை (கரும எந்திரங்கள்; வாய்க்கு உண்ணுங் கருமம், வாக்குக் கருமம் என 2 கருமங்கள் உண்டு. முன்னது ஐம்புலனிலும், பின்னது ஆற்றுக் கருவியாகவும் கொள்ளப் படும். எருவாய் = ஆசனவாய்; கருவாய்= reproductive tool) 3 ஆம் தொகுதி யாகவும், ”காயம், காற்று, தீ, நீர், நிலம்” எனும் ஐம்பூதங்களை 4 ஆம் தொகுதியாகவும், ”ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ” எனும் தன்மாத்திரைகளை (தானறி அளவைகளை) 5 ஆம் தொகுதியாகவும் சொல்வர்.  மொத்தத்தில் 23 சாங்கிய உறுப்புகள்.

மேலே பயின்றுவரும் ”தன்மாத்திரைகள்” என்ற சொல்லும் (மாத்தல் = அளத்தல்; மாத்திரை = அளவை), காயமெனும் 5 ஆம் பூதக் குறிப்பும். வாய்/வாக்கு எனும் சொல்லாட்சியும் சாங்கியப் பிறப்பிடம் தமிழகமே என்பதை உணர்த்தும். 23+ மூலப்பகுதி என 24 உறுப்புக் கொண்ட ஈசனிலாச் சாங்கியத்தோடு, ”புருஷன்/ஆதன்” எனும் இன்னொரு வெளிப்படாததைச் சேர்த்து 25 உறுப்புகள் ஆக்கி, ஈசானச் சாங்கியம் என்பது எழும். (புருஷன் என்பது ஓர் இடைச்செருகலாகவே வடமரபில் இணைக்கப்பட்டு பின் ஈசான சாங்கியம் உருவானதைச் சாரக சங்கிதை என்ற நூல் தெளிவாக விளக்கும். ‘சாங்கியத்தில் புருஷன்’ எனும் தலைப்பில் ஆராய்ந்த தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவும், ”புருஷன் என்பது ஓர் இடைச் செருகலே” என்பதை உறுதிப் படுத்துவார்.

மாந்த உடலுறுப்புகளையும், செய்தொழில்களையும், தானறி அளவைகளையும், பேரண்ட உறுப்புகளையும் ஐந்தைந்தாய் வரிசையிட்டு, இவற்றை அளந்தறியும் மான் (=அறிவு = புத்தி), அகந்தை, மனம் ஆகிய எண்ணக் கருவிகளைச் சேர்த்து ஓர் தொகுதியாக்கி, இதுவரை வெளிப்படாத மூலவியற்கைக்கும், பேராதனிற்கும் உள்ள இடையாற்றங்களை ஈசானச் சாங்கியம் விரிவாய்ப் பேசும். இவை போக மான், அகந்தை, மனம்  ஆகிய வற்றின் வெவ்வேறு வெளிப்பாட்டுத் தரங்களாய் சாற்றுவ (சாத்வ), ஆற்றுவ (ராஜஸ), தாழும (தாமஸ) என்ற முக்குணங்கள் சொல்லப்படும் . இன்னும் பிற்காலத்தைய ஈசான சாங்கியம் இம்முக்குணங்களை பெருமியதாய்க் கொண்டு (primitives) சேர்த்து 28 உறுப்புகளாகவும் பேசும்.

முதலில் உருவான 24 உறுப்புக் கொண்ட ஈசனிலாச் சாங்கியத்தின் மூல வடிவை புறம் 166 ஆம் பாடல் பதிவு செய்யும். இது சோணாட்டு பூஞ்சாற்றூர் (காவிரி மண்டலத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரை என்னும் ஊர்) பார்ப்பான் கௌணியன் விண்ணதாயனை ஆவூர் மூலங்கிழார் பாடியது என்பர். (கிழார் என்றவுடன் ”ஏதோ நிலச்செழிப்புள்ள பண்ணையார், இவரேன் புலவராக இருந்தார்?” என எண்ணவேண்டாம்.  நிலத்திற்கு உரிமையுள்ள, பணமிலாக் கிழாரும் முன் இருந்துள்ளார்.) இதே புலவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும் புறநானூற்றில் பாடுவார். கிள்ளிவளவன் காலத்தை அடையாளங் காணமுடிந்தால், விண்ணந்தாயன் காலத்தையும் அறியலாம். அப்படி அறிவது புறம் 166 ஆம் பாட்டின் பொருளைத் தவறின்றிப் புரிந்து கொள்ளப் உதவும். ஆவூர் மூலங்கிழார் பாட்டை வேத நெறிக்கு அணி செய்வதாய்ப் புரிந்தவரே மிகுதி. உ.வே.சா.விற்குக் கிடைத்த 14/15 ஆம் நூ. புறநானுற்றுரையுங் கூட அது போல்  புகலும். எனக்கு அப்படித் தோன்ற வில்லை. (இதே பழைய உரை மாற்றுக் கருத்தையும் தொட்டுக் காட்டும். ஆனால் விளக்காது.) 

கிள்ளிவளவன் என்பான் செங்குட்டுவனின் மாமன் மகனாவான். செங்குட்டுவனின் தாய் நற்சோணை உறையூரைத் தலைநகராய்க் கொண்ட வளநாட்டைச் சேர்ந்த ஞாயிற்றுச் சோழனின் மகள். ஞாயிற்றனை ஆதித்தன் என்றும், அதன் முதற்குறையைத் தித்தனென்றும் சொல்வார். தித்தன் பட்டமேறிய பின், முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளி என அழைக்கப்பட்டான். இவன் மகன் தித்தன் வெளியன் என்பான், வேற்பல் தடக்கை பெரு நற்கிள்ளி, போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி, இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என மூவிதமாய் அழைக்கப்பட்டான்  (பல்யாகப் பெருவழுதியோடு சேர்த்து இவனையும் வேத நெறி போற்றியதாய்ச் சாடிய தமிழறிஞர் அதிகம்.) செங்குட்டுவனின் தாய்மாமனை வேறொரு கட்டுரையில் விரிவாய்ப் பார்ப்போம்.   

தித்தன் வெளியனுக்கும் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் நடந்த போரில்  இருவருமே  இறந்து போனார். தித்தன் வெளியனின் மகனே குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆவான். தந்தை இறந்தபோது கிள்ளி வளவன் மிகச்சிறியன். அவன் பங்காளிகள் 9 பேருடன் அவனுக்காகப் போரிட்டு உறையூர் அரசைக் கிள்ளிவளவனுக்குச் செங்குட்டுவனே பெற்றுத் தருவான். இச்செய்தி சிலம்பின் வஞ்சிக் காண்டத்தில் மிகத் தெளிவாக வரும். பெரும்பாலும் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் ஆட்சிக் காலம் பொ.உ.மு.75-50 க்குள் இருக்கலாம். எனவே கௌணியன் விண்ணந்தாயனின் காலமும் ஏறத்தாழ இதுவே என்று சொல்லலாம்.   கீழே 4 பகுதிகளாய் 34 அடிகளைப் பிரித்துள்ள புறம் 166 ஆம் பாட்டை முதலில் படியுங்கள். 

நன்றாய்ந்த நீள்நிமிர்சடை

முதுமுதல்வன் வாய்போகாது,

ஒன்றுபுரிந்த ஈரிரண்டின்,

ஆறுணர்ந்த ஒருமுதுநூல்

இகல்கண்டோர் மிகல்சாய்மார்,                          5

மெய்யன்ன பொய்யுணர்ந்து,

பொய்யோராது மெய்கொளீஇ,

மூவேழ் துறைபும் முட்டின்று போகிய

உரைசால் சிறப்பின் உரவோர் மருக!


வினைக்கு வேண்டி நீபூண்ட                                  10

புலப்புல்வாய்க் கலைப்பச்சை

சுவல்பூண்ஞான் மிசைப்பொலிய;

மறம்கடிந்த அருங்கற்பின்,

அறம்புகழ்ந்த வலைசூடிச்,

சிறுநுதல், பேரகல் அல்குல்,                                 15

சிலசொல்லின் பலகூந்தல், நின்

நிலைககொத்தநின் துணைத்துணைவியர்

தமக்கமைந்த தொழில்கேட்பக்;


காடு என்றா நாடு என்று ஆங்கு

ஈரேழின் இடம்முட்டாது,          20

நீர்நாண நெய்வழங்கியும்,

எண்நாணப் பலவேட்டும்,

மண்நாணப் புகழ்பரப்பியும்,

அருங்கடிப் பெருங்காலை,


விருந்து உற்றநின் திருந்து ஏந்துநிலை, 25

என்றும், காண்கதில் அம்ம, யாமே! குடாஅது

பொன்படு நெடுவரைப் புயல்ஏறு சிலைப்பின்,

பூவிரி புதுநீர்க் காவிரி புரக்கும்

தண்புனற் படப்பை எம்மூர் ஆங்கண்,

உண்டும் தின்றும் ஊர்ந்தும் ஆடுகம்; 30

செல்வல் அத்தை யானே; செல்லாது,

மழைஅண் ணாப்ப நீடிய நெடுவரைக்

கழைவளர் இமயம்போல,

நிலீஇயர் அத்தை, நீ நிலமிசை யானே?  

===============================

வாகைத்திணை, பார்ப்பன வாகைத்துறை சேர்ந்த இப்பாடலில் சமயம்/ மெய்யியல் தொடர்பான சொற்போரில் ”நாவலோ நாவல்” என்று கூவி பார்ப்பனன் மற்றாரின்மேல் பெற்ற வெற்றி  குறிப்பிடப் படுகிறது.  ”கேள்வியால் சிறப்பெய்தியானை வேள்வியான் விறல் மிகுத்தன்று” என்று புறப்பொருள்  வெண்பாமாலை பார்ப்பன வாகைக்கு இலக்கணஞ் சொல்லும். அதாவது, “பல்வேறு நூல்கள் கேட்டுச் சிறந்தானை வேள்வி கூடிய பார்ப்பனன் தன் வாதத் திறமையால் மிகுத்துப் பெறும் வெற்றி” என்பது பொருள். (இக் காலத்தில் பட்டி மண்டபம், வழக்காடு மன்றம் என்கிறாரே? அதுபோன்ற சொற் போர் இது. ஆனால் மெய்யியல் தொடர்பானது. கூடிநின்று வாதங் கேட்போர் வென்றார்க்குப் பொன்னும் பொருளும் கொடுப்பது அற்றை வழக்கம். (இன்றும் உரைக்குப் பணங்கொடுக்கும் வழக்கமுண்டு.)  சொற்போரில் பெற்ற வாத வெற்றி என்னாது, வேதநெறிக்குச் சான்றாய் ஏன் இப்பாவை உரையாசிரியர் கொண்டார்? விளங்கவில்லை.  

பாடலின் காலமான பொ.உ.மு. முதல் நூற்றாண்டில், எப்படிப் பார்த்தாலும் வேதத்தைத் ”த்ரயீ” என்றே சொல்ல முடியும். அது ”சதுரி” ஆக மேலும் 200 ஆண்டுகள் பிடிக்கும். இவ் வரையறை அறியாத 14/15 ஆம் நூ. உரைகாரர் அவர் காலப் புரிதலில் 4 வேதம் என்று கொண்டார் போலும்.  ஆறங்கங்கள் என்பவை வேதத்தைப் படித்துப் புரிந்துகொள்ளும் வழிமுறைகளே ஒழிய, மெய்யியல் கூறுகள் அல்ல, மணிமேகலை 27, 100-103 அடிகளும் சரியாகவே சமயக் கணக்கர் திறங்கேட்ட காதையில் வேதவாதி வழி, இதைக் கோடிட்டுக் காட்டும். 

”கற்பங் கை சந்தங் கால் எண் கண்

தெற்றென் நிருத்தம் செவி சிக்கை மூக்கு

உற்ற வியாகரணம்  முகம்பெற்று” 

இதில் இயல் (கற்பம்) என்பது கையாகவும், இசை (சந்தம்) என்பது காலாகவும். கணக்கு (எண்ணுகை, சோதியம்) என்பது கண்ணாகவும், நாடகம் (நிருத்தம்) என்பது செவியாகவும் , பயிற்சி (சிக்கை/ சிட்சை) என்பது மூக்காகவும், இலக்கணம் (வியாகரணம்) என்பது முகமாகவும் இங்கு உருவகிக்கப்படும். ஆறங்கம் என்பது இவ்வகையில் உடற்கருவிகளைக் குறிக்கும் ஒரு குறியீடே.  ”ஒன்றுபுரிந்த ஈரிரண்டின், ஆறுணர்ந்த ஒரு முதுநூல்” என்பதற்குப் பொருள்சொல்ல 4 வேதம் 6 அங்கங்களை ஏன் உரைகாரர் நுழைக்க முயல்கிறார்? - என்பது புரியவில்லை. நான் புரிந்துகொண்டவரை, ஈரரண்டின் ஆறு என்பது 2*2*6 என்று பெருக்கல் வழி 24 ஐயே குறிக்கும். வேள்விப் பொருளுக்கு மாறாக, சாங்கியத் தருக்கப்பொருள்களைக் கொண்டால் இதில் குழப்பமே இல்லை. 14/15 ஆம் ஆண்டு உரையாசிரியர் ஓரோ வழி அப்படியும் பொருள் கொள்ளலாமெனத் தெளிவாகச் சொல்கிறார்  ஆனால் 20 ஆம் நூற்றாண்டு உரைகாரர் எவரும் இதற்கு முயலவே இல்லை.   21 ஆம் நூற்றாண்டில் வாழும் நாமாவது சற்று முயல்வோம்.

அன்புடன்,

இராம.கி.


No comments: