Friday, September 25, 2020

திரை

 திரை (screen) என்பதன் சொற்பிறப்பு பற்றிய  அண்மையில் ஒரு கேள்வி எழுந்தது. ”தெரிதலில் திரை பிறந்ததா?” கிடையாது. அது ”திரைச்சீலை” என்னும் கூட்டுச் சொல்லின் முற்பாதியாகும். நாளாவட்டத்தில் பிற்பகுதியைத் தொகுத்துத் திரை என்பது ஆகுபெயராய் திரைச்சீலைக்கு ஆனது. இதுபோல் பல சொற்கள் தமிழில் ஆகும் ”நல்ல பையன்/மாந்தன்” என்ற சொல்லில், முன் பத்திகளில் பையன்/மாந்தனைப் பற்றிச் சொல்லியிருந்தால் பின்னால் ”நல்லவன்” என்ரு சொன்னாலும் பொருள் புரிந்துபோகும். ஒவ்வொரு முறையும் பையன்/மாந்தன் என்று சொல்லத் தேவையில்லை. அதுபோல் நான்மாடக் கூடல் என்பது மதுரைக்கு ஒரு பெயராகும். பின்னால் நான்மாடத்தைத் தொகுத்துக் கூடல் என்றே சுருங்கச் சொல்வர். இதேபோல் நீர்க்கடல் = நீர்த்தொகுதி (ஐல சமுத்ரம்) என்பதில் நீரைத் தொகுத்துக் கடல் என்றே சொல்கிறோம். அது எப்படி? நீர் என்பது இங்கே உள்ளே மறைந்து நிற்கிறது.. இதுபோன்ற கூட்டுச்சொற்களில் முதற்சொல் மறைகிறதா? இரண்டாம் சொல் மறைகிறதா - என்பது பேச்சு வழக்கைப் பொறுத்தது.

திரைத்தல் = திரக்குதல் = அலைபோல் மடித்துக் கொள்ளுதல். மேடையில் இருக்கும் சீலையை இழுத்துச் சுருக்கும் போது அது திரைத்துக் கொள்ளும் கடல் அலையும் இது போல் மடித்து ஒடுங்குவதால், அலை திரைகிறது. திரங்குகிறது. திரங்கும் அலைகள் உள்ள இடம் திரங்கம் பாடி. திரங்கம்>தரங்கம் = அலை.

நாளாவட்டத்தில் திரை என்ற சொல் பேச்சுவழக்கில் திரைச்சீலையைச் சுருங்கக் குறிக்கத் தொடங்கிவிட்டது. ”பொழுது” என்ற சொல் நேரத்தை எப்படிக் குறிக்கிறது? ஓர்ந்து பாருங்கள். நம்மைச் செலுத்துகிறவன் கடவுள் எனப்பட்டான் கடவுதல் = செலுத்துதல். ஒருகாலத்தில் இது சமயத் தலைவனுக்கும், இறைவனுக்கும் ஆன சொல் , இன்று இறைவனுக்கு மட்டும் ஆனசொல்.  நூற்றுக்கணக்கான சொற்கள் நம் மொழிமரபில் இதுபோல் சுருக்கம் தெரிவிப்பதாய் உள்ளன.  இடமும் மரபும் பார்த்துப் புரிந்துகொள்ள வேண்டும்  

No comments: