Sunday, September 06, 2020

கபிலரும் சாங்கியமும் - 2

 சங்கம்>சாங்கியம் என்றவுடன் பலரும் வடமொழி நாடியே திரும்புவார். அப்படியாகத் தேவையில்லை. சங்கத்தின் வளைபொருளை  http://valavu.blogspot.com/2018/08/5.html இலும்,  கூட்டப்பொருளை http://valavu.blogspot.com/2018/08/6.html இலும், எண்ணிக்கைப் பொருளை, http://valavu.blogspot.com/2018/08/7.html இலும் பேசினேன். தென்கடற் சங்கு, வளைவில் கிளைத்த சொல். தொல்தமிழர், நெடுங்காலம் சங்கூதியே தம் கூட்டத்தைச் சேர்த்தார். இன்றும் இம்மரபு நாட்டுப்புறங்களிலுண்டு.  அடுத்து, சம்முதல்=  கூடல்; சேர்தல்; சம்>சங்கு>சங்கம்= கூட்டம்  என்றெழுந்தது  மூன்றாவதாய், கூட்டநீட்சியில், ”எண்ணிக்கை” எழுந்தது. 

[எண்ணிக்கைப் பொருளை, 10^12 என ஆய்ந்தறிந்தேன். இக்காலத்தில் இலக்கங்கோடி என்கிறாரே, அதற்கான ஒற்றைச்சொல் சங்கம். அதைப் பயனுறுத்த எத்தனைபேர் நம்மில் அணியம் ஆவோம்? தெரியவில்லை. ”பாமரர் பழகாச் சொல்லை இராம.கி. பரிந்துரைக்கிறார்” என்று நொள்ளை சொல்லவே பலரும் அணியமாவார். பழஞ்சொல் அறியாதார், அறிந்தவரைக் குறை சொல்வது இங்கு வழக்கமாகிப் போனது. இலக்கங் கோடி என்றோ, ட்ரில்லியன் என்றோ சொல்வது சரியெனவும் சிலர் இக்காலத்தில் வாதாடுகிறார். மொத்தத்தில் தமிழ்நடை வளரக் கூடாது என்பதில் சிலர் பிடிவாதமாய் உள்ளார்,. கடைசி வரை சவலைப் பிள்ளையாய்த் தமிழ்நடை சீரழியட்டும் என்றாக்குவதில் பலருக்கும் விருப்பம் போலும்.]       

சங்கத் தொகுதிக்குள் அடங்கும் உறுப்புகளைச் சாங்கங்கள் எனலாம். இதிலும் எண்ணவியலும் (countable)சாங்கம், எண்ணவியலாச் சாங்கம் என 2 வேறு வகைகள் உண்டு. குறிப்பிட்ட வகைச் சாங்கங்களை எண்கள் என்கிறோம். காட்டாகப் பதின்ம வகை எண்களை (1,2,3,4,5,6,7,8,9,10... ) என்கிறோம். இதுபோல் இரும வகை, பதினறும வகை எனப் பலவும் உண்டு. சங்கம் என்பது கொத்தையும் (set), சாங்கம் அதன் உறுப்புகளையும் (members) குறிக்கும். அகரமுதலிகளில் சாங்கம் = ஒழுங்கு,  உறுப்புகள் அனைத்தும், முழுதும், தொகுதி என்று பொருள் சொல்வார். இன்னொரு வகையிலும் சாங்கத்தின் கூட்டப் பொருளை அணுகலாம். அதுவும் அறியவேண்டியதே. 

சார்-தல் என்பது “அடு-த்தல், சேர்-தல், கல-த்தல், கூடு-தல், ஒ-த்தல்” போன்றவை குறிக்கும் தன்வினையாகும்.  ஒத்த குணங்கொண்ட உறுப்புகள் சா(ர்/ல்)ந்த தொகுதி (அ) கொத்தைச்  சா(ர்/ல்)தி எனலாம். தன்வினையில் பிறந்த சா(ர்)தி போல். பிறவினைப் பெயர்ச்சொல் சார்த்தியாகும். ஆங்கில set ஓடு, சாதி/கொத்து தொடர்புற்றது.  முற்காலத்தில் தாவரம், நீர்வாழ்வன. ஊர்வன, பறப்பன. விலங்கு, மாந்தர், தேவர் என்ற 7 பிரிவுகளையே பழந்தமிழர் கணக்கில் கொண்டார். தொல்காப்பியம் மரபியல் ”நீர்வாழ் சாதி” என்று வெளிப்படையாகவே “சாதி” என்ற சொல்லைக் குறிக்கும். தேவர் எனும் பிரிவு தவிர்த்த,  மற்ற 6 இயற்கைச் சாதிகளுக்கு தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கும். (தேவர் என்பார் எல்லாமும் பொருந்திய மேலுலகத்தார். இக்குறிப்பு நம்மிடமும் இருந்தது. ஆரியரிடமும் இருந்தது. இது ஒரு hypothetical construct.)

ஒன்று அறிவதுவே உற்று அறிவதுவே

இரண்டு அறிவதுவே அதனொடு நாவே

மூன்று அறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கு அறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்து அறிவதுவே அவற்றொடு செவியே

ஆறு அறிவதுவே அவற்றொடு மனனே

தாவரம் 20 இலக்கம், நீர்வாழ்வன 10 இலக்கம், ஊர்வன 11 இலக்கம், பறப்பன 10 இலக்கம், விலங்கு 10 இலக்கம், மாந்தர் 9 இலக்கம், தேவர் 14 இலக்கம் என 7 சாதிகளின் விதப்புகள் பற்றி ஒருவித வகைக் கணக்கும் சொல்வார். இவ் விதப்புகளை யோனிவேற்றம் (species. யோனிபேதம் - சங்கதம்) என்றுஞ் சொல்வதுண்டு, மேற்கூறிய 7 சாதிகளுள்ளும் மேலும் உட்சாதி பிரிப்பதைச் (காட்டாக மாந்தருள்ளும் சாதி பிரிப்பதைச்) சங்கத் தமிழர் ஏற்றதில்லை. ”பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனக் குறள் தெளிவாய்ச் சொல்வதால், ஒத்த மாந்தரை பிரிக்கும் இக்காலச் ”சாதிப்” பயன்பாடு அடிப்படையில் முறையற்றது. இருப்பினும் இற்றைக் குமுகம் ”சாதியால்” பிளவுபட்டுள்ளது.

இக்காலத்தில் ”சாதி” விலக்கப்பட்டவரைச் (கூட்டத்தில் இல்லாதவரைச்) சாங்கமிலார் என்பார். தவிர, சாங்கரர்= (கூட்டத்தில்) கலந்து போனவர்,  சாங்கரம்= கலப்பு. என்ற சொற்களும் கூட இக்காலம் பயில்கின்றன. (கொத்துத் தேற்றம் -set theory- விவரிக்கையில் ”சாதி” என்ற சொல்லை நான் பயனுறுத்துவதில்லை.) “சாதிச்” சடங்குகளைப்  பேச்சுவழக்கில் சாங்கியம் என்பர்.. (”அது எங்களின் சாங்கியம் இல்லை”) சங்கதத்தில், ”சாங்க உப அங்கம்” என்பது,  ”துணையுறுப்புகளும் முழுதும்” என்ற பொருளைக் குறிக்கும். சாதிக்குத் தொடர்பில்லாது, அதேபொழுது உடலுறுப்பைக் குறிக்கும்  ”அங்கம்”, அலங்கத்தின் இடைக்குறையில் எழுந்தது. (http://valavu.blogspot.com/2018/07/organ.html)

சாங்கம் = கூட்டம், எண்ணக்கூடியது எனும் பொருளின் தொடர்பாய், சாங்கியம் என்ற சொல் ”எண்ணிக்கைக்கு உட்படுவது” எனும் பொருள் கொண்டு, ”கபில மெய்யியல்” குறிக்கப்படும். (கபிலர் உருவாக்கிய மெய்யியல்). ”சாங்கியத்தை” வடமொழிச்சொல் எனச் சில ஆய்வர் எண்ணி, அதை ”எண்ணியம்” என்பார். சால்தல் தமிழானால், சாங்கியமும் தமிழ் என்பதே என் கருத்து, (எண்ணை நெடுநாள் பழகியதால், ”சாங்கத்தைப்” நாம் பயில்வதில்லை.)  சாங்கியம் பற்றி சற்று விரிவாய்ப் பார்ப்போம். நம்மைச் சுற்றிய பேரண்டத்தில் வெளிப்பட்டதற்கும் வெளிப்படாததற்கும் ஆன இடையாற்றத்தைச் சாங்கியம்  விளக்க முயலும். வெளிப்படாததை வரையறுக்கும் வகையில்,  2 வேறு சாங்கியங்கள் உண்டு. 

முதலிலெழுந்த ஈசனிலாச் சாங்கியம்  (சங்கதத்தில் நிரீஸ்வர சாங்கியம்.)  ”வெளிப்படாதது (non-manifest)” எனும் புரிதலில் மூல இயற்கையை மட்டுமே குறிக்கும்.  தமிழில் இதைப் பகுதி என்றும். சங்கதத்தில் ப்ரக்ருதி என்றுஞ் சொல்வர். வெவ்வேறாய் மூலவியற்கையைப் பகுத்து நுகரக் கூடுமாதலால், மூலப்பகுதி எனும் விதப்புப்பெயர் மூல இயற்கையைக் குறிக்கத் தமிழில் எழுந்தது. (இலக்கணத்தில் வினைப் பகுதி என்கிறோமே? அதையும் இங்கு ஒப்பிட்டு நினைவு கொள்க). 2 ஆவதாய் எழுந்த சாங்கியத்திற்கு ஈசானச் சாங்கியம் (ஈஸ்வர சாங்கியம்) என்று பெயர் . 2 ஆம் வகைச் சாங்கியத்தில்  மூல இயற்கையும் பேராதனும் (சங்கதம் புருஷன் என்னும்; பெருமாதன் பரமாத்மா ஆவான்) வெளிப்படாதனவாகச் சொல்லப்படும்.  

ஆதனைச் சில நெறிகள் நம்பும். சில நம்பா. வேதம் நம்பாத சாருவாகம் (உலகாய்தம்) ஆதனை மறுக்கும். அற்றுவிகமும் செயினமும் பெருமாதனை மறுத்துத் தனி உயிராதன்களின் (ஜீவ ஆத்மாக்களின்)இருப்பை மறுக்கா. புத்தமோ பெருமாதனை முற்றிலும் மறுத்துத் தனி உயிராதன்களைச் சில விளக்கங்களில் மறுத்து, சிலவற்றில் மறுக்காது. வேதநெறியின் 2 வகைகளில் ஒன்றான பூருவிக மீமாஞ்சை பேராதனையும் உயிராதன்களையும் ஏற்காது. உவநிற்றங்கள் (உபநிடதங்கள்) வழிப் பட்ட உத்தர மீமாஞ்சையோ, பேராதனை ஏற்கும். தெற்கின் சிந்தாந்த சிவமும், திரு விண்ணவமும் பேராதனையும் தனி உயிராதன்களையும் ஏற்கும். பேராதனுக்கும் தனி உயிராதன்களுக்குமான உறவுநிலை சொல்வதில் சிவமும், விண்ணவமும் வேறுபடும். 

சாங்கியம் பற்றி ஏராளம் சொல்லலாம். ஆனால், மெய்யியலில் ஈடுபாடு இல்லாதாருக்கு அது கடினமாகலாம். எனவே விவரங்களைத் தவிர்க்கிறேன். சாருவாகம், பூருவிக மீமாஞ்சை தவிர்த்த இந்திய நெறிகள் எல்லாமும் உடல், உயிர்/ஆதன்  பிரிப்பையும், இவ்வுலகில் இயலக்கூடிய 84 இலக்க யோனிவேற்ற உடல்களில் உயிர்கள் பிறப்பதையும் நம்பும்.  திருமந்திரத்திலும், சில உவ நிற்றங்களிலும் (உபநிடதங்களிலும்) கூட, இவ்வெண்ணிக்கை சொல்லப் படும். எல்லா  84 இலக்க வகைப் பிறப்புகளிலும் ஓர் உயிர் பிறந்தே ஆக வேண்டிய தேவையில்லை. ஒவ்வொரு பிறப்பிலும் செய்யும் நல்வினை / தீவினைகளுக்கு ஏற்ப, மொத்தப் பிறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியுமெனச் சில நெறிகள் கூறும்; குறைக்கமுடியாதென வேறு சில நெறிகள் கூறும். எந்தெந்த நெறிகள் பிறவிச் சுழற்சியை (இறந்து பிறப்பதை) மறுக்க வில்லையோ, அவை ஆன்மாவை ஏற்றன என்றே பொருள். 

ஆழ்ந்து ஓர்ந்தால், ஏதோவொரு வழியில் மேற்சொன்ன நெறிகளெலாம் தம் மெய்யியல் புரிதலில், பொ.உ.மு 800 க்கும் முன் எழுந்த ஈசனிலாச் சாங்கியத்திற்குப் பெரிதுங் கடன்பட்டவையே. ஈசனிலாச் சாங்கிய விளக்கநூல்கள் அனைத்தும் இற்றைநிலையில் செரிக்கப்பட்டு விட்டன. 2 ஆம் வகை ஈசானச் சாங்கியம் சுங்கர் காலத்து எழுந்தது. இற்றைச் சாங்கிய நூல்களெல்லாம் ஈசானச் சாங்கியம் சார்ந்தவையே. அவற்றின் முதல் நூல் (பொ.உ.5 ஆம் நூ) ஈஸ்வர கிருஷ்ணரின் சாங்கிய காரிகை என்பர். (பார்க்க: Classical SAmkhya. Gerald James Larson, Motilal Banarsidass Publishers,Delhi 2011). தமிழில் ஆவூர் மூலங்கிழாரின் புறம் 166 ஆம் பாட்டில், கௌணிய விண்ணந்தாயன், ஈசனிலாச் சாங்கியத்தைக் கையாண்டு அதன் எதிரிகளின் மேல் வெற்றி கொண்டதாய்ப் பாராட்டிப் பேசும். (கீழே பார்ப்போம்.)   

அன்புடன்,

இராம.கி.


No comments: