Tuesday, September 08, 2020

கபிலரும் சாங்கியமும் - 4

“நன்றாய்ந்து, நீள்நிமிர்ந்த, சடையைக் கொண்ட முதுமுதல்வன் வழியில் போகாதவர், 24 கூறுகளை ஒன்றாகப் புரிந்து முற்றும் உணர்ந்து, ஒப்பின்றிச் செய்த  அவனுடைய முதுநூலோடு, இகல் (மாறுபாடு) கொள்கிறார். அப்படி இகல்கொண்டவரின் செருக்கைச்  சாய்க்கவேண்டி, இகல்கொண்டோரின் மெய்போலும் பொய்யை உணர்ந்து, அப்பொய்யின் பக்கம் சாராது மெய் கொண்டு, 21 தருக்க முறைகளில் முட்டின்றிப் போகிய உரைசான்ற சிறப்பின் உரவோர் மருகனே!” என விண்ணந்தாயனின் சிறப்பைக் கூறும்படி முதல் பகுதிக்குப் பொருள் கொண்டால், சரியான விளக்கம் நமக்குத் தானாகவே கிட்டும்.  

இங்கே 24 கூறுகள் கொண்டதெனக் கூறப்படுவது ஈசனிலாச் சாங்கியமே. (25 கூறுகள் கொண்டது இதற்கெதிரான ஈசான சாங்கியம்.) அக்காலத்தில் சாங்கியத் துணையின்றி எந்த வகை மெய்யியல் உரையாடலும் நிகழவே யில்லை. தவிர, சாங்கிய வழி உரையாடாத (சாருவாகர் தவிர்த்த) சமயவாதி  எவனும் பொ.உ.மு. 800க்கு அப்புறம் நாவலந்தீவில் இருந்ததுங் கிடையாது. சாங்கிய நூல் இத் துணைக்கண்டத்தில் கபிலம் எனவும் அழைக்கப்பட்டது. கபில முனிவனைச் சிவனோடும் (உருத்திரனோடும்)  கூடப் பொருத்தினார். ”கபிலனின்” சொற்பிறப்பை அலசினால் இது புரியும். நம்பா மதங்களுங் கூட சிவனின் இன்னொரு தோற்றமான “ஆதிநாதனை” முதல் தீர்த்தங்கரனாய் ஏற்றன. (வேதமும், வேதாந்தமும் ஆதிநாதனை ஏற்கா.) 

எந்தச் சிக்கும் தன் முடிக்கு வாராதபடி முடியை நன்றாயாய்ந்து நீள்நிமிர் சடையாய் அதையாக்கிக் கட்டிக்கொண்ட ஆதிநாதனைப் பல சமயங்களும் ஏற்றுக்கொண்டன. ஆதிநாதனின் அடையாளமான புல்வாய்க் கலைமான் தோலை பல முனிவரும் இடையிலுடுத்தினர். விண்ணந்தாயனும் உடுத்துவார். பாட்டுத்தலைவனான விண்ணந்தாயனைச் சிலர் விஷ்ணுதாசன் என மொழி பெயர்ப்பர். எனைக் கேட்டால் அதற்கு வாய்ப்பில்லை  பொ.உ.மு. 100 களில் விண்ணு எனும் முழுமுதல் கருத்தீடு முற்றிலும் உருவாகியிருக்கவில்லை. மாயோன்/திருமால், வாசு தேவன், கண்ணன், இராமன் ஆகியோரின் கருத்தீடுகள் இருந்தன.  இவ்வுருவகங்களைப் பிணைத்த மொத்த விண்ணவக் கருத்தீடு கொஞ்சங்கொஞ்சமாய் உருவாகிக் கொண்டிருந்தது. ”விண்ணுவிற்கு அடியான்” என்பது சற்று முந்திரிக் கொட்டையான காலப் பிறழ்ச்சி. பொ.உ. 300/400க்கு அப்புறம் பாகவத மதம் உருவான பின்தான், அது நிலை கொண்டது.  

அப்படியெனில் விண்ணந்தாயனை எப்படிப் பொருள் கொள்ளலாம்?  ஔவை. சு, துரைசாமியார் ”விண்ணன் அவன் பெயர். தாயன் அவன் தந்தை பெயர்” என்பார், சாலை விண்ணனைக் குறிக்கும் தனிப்பாடல் ஒன்று அவர் தொகுத்த தமிழ்நாவலர் சரிதையில் உண்டு. ”விண்ணனும்” பொருந்துப் புகல்வதென்றே தோன்றுகிறது., மாறாக ”விள்நன்>விண்ணன்” என்பதன் வழி, மெய்யியல், அறவியல்  போன்ற படிப்பறிவுகளை, வாத-எதிர்வாதங்களை விளக்குவோன் எனப் பொருள்கொள்ளலாம். தாயம்= கூட்டம். விண்ணந்தாயன்= விளக்குவோர் கூட்டத்தான். scholar. அறிஞர் கூட்டத்தாரில் பெரும்பாலோர் கலைமான் தோலாடை  பூண்டவர், பூணூல் அணிந்தவர், பெரும்படிப்புக் கொண்டவர். அத்தனை caricature-உம் பாவில் பேசப்படும், 

அது சரி. கௌண்டின்யன் என்ற பெயர் எப்படி எழுந்தது? (கோழியூர்= உறையூர், கோழியர்= சோழியர். சோழிநாட்டான்/சோணாட்டான் என்பது கோழிநாட்டான்/ கோணாட்டான் ஆகலாம். பாகதத்தில்  இது கோணாட்டிண> கோண்டிண என்றாகிச் சங்கதத்தில் கௌண்டிண்ய ஆகும். மீளக் கடன் வாங்கிக் கௌணியன் என்போம். கௌண்டின்யன் எனப்படுவோர் எல்லோருமே பார்ப்பனராகத் தேவையில்லை. (விண்ணந்தாயன் ஒரு பார்ப்பான் என்பது உண்மை) அவன் சோழநாட்டான் என்பதே கௌண்டின்யன் எனும் பெயர் வெளிப்படுத்துகிறது. சோழியன் எனப் பின்னால் தமிழ்நாட்டில் சொல்லப்பட்டவரும் பெருமானக் கௌண்டிய கோத்திரத்தாரும் உறவுள்ளவரே.

[இங்கே வேறொரு கௌண்டியக் குழப்பத்தையும் சொல்லத்தான் வேண்டும். மணிமேகலையில் நாகநாட்டு இளவரசி பீலிவளையை நெடுமுடிக்கிள்ளி விருப்பங்கொள்வான் காதல்மணம் முடிப்பான். நாக நாடு என இதில் சொல்லப்படுவது பெரும்பாலும் சுமத்ரா ஆகவோ, கம்போடியா ஆகவோ இருக்கலாம் என்பது தெ.கி. ஆ. தொன்மங்களைப் படித்தால் விளங்கும்.. தென்.கி. ஆ, வின் இளவரசியை மணம் முடித்தவனை அவர்கள் நாட்டுக் கதையில் கௌண்டின்யன் என்பார். இதைக் கேட்டவுடனேயே நம்மூர் வரலாற்றாசிரியரோ ”கௌண்டின்யனா, பார்ப்பான்” என்று கதைப் போக்கைத் திருப்பிவிடுவார். அப்படியெனில் மணிமேகலைக் காப்பியத்தில் வரும் பீலிவளைக் கதை தவறா? அதில் பார்ப்பனனே வரவில்லையே? சோழ இளவரசன்தானே பேசப்படுகிறான்?  - என நான் ஆழமாய் மறுத்துக் கேட்பேன். 

மேலேநான் பரிந்துரைத்த சொற்பிறப்பை ஓர்ந்துகாணின், சோழன் நெடுமுடிக்கிள்ளியைக் கோணாட்டான்>கௌண்டின்யன் என அழைக்கலாம். பிற்றைச் சங்கதமொழித் தாக்கத்தில்  “கம்போடியக் கௌண்டின்யன் ஒரு பார்ப்பான்” எனத் தவறாய் முடிவு செய்திருக்கலாமே? எல்லாச் செய்திகளையும் சங்கதம், பார்ப்பனர் என தென்கிழக்கு ஆசிய வரலாற்று ஆய்வாளர் அலசுவதால் உருவாகும் தவறு இதுவாகும். இதன் தொடக்கம் நீலகண்ட சாத்திரியார் ஆவார். அவரைத் துபாசி ஆக்கி அத்தனை மேலை யாசிரியரும் உரையாடுவார். பெரும்பாலான மேலையர் உரைகளின் உள்ளே துலங்குவது துபாசியர் கருத்தே. சங்கதப் பார்வை பல இடங்களில் நம்மைக் கவிழ்க்கும் என்பதற்கு இதுவும் ஓர் காட்டு. தென்கிழக்கு ஆ.சிய வரலாற்றை மீள்பார்வை செய்வது கட்டாயம் தேவை. எதெல்லாம் தமிழோ, அதெல்லாம் சங்கதத்திற்கு என பெரிதும் மடைமாற்றம் செய்யப்பட்டுள்ளது.   

கௌண்டின்யரென்பார் வழமையான வேதநெறியோடு ஓரளவு முரண் கொண்டவர். இவர் வேள்வி செய்வார். ஆனால் இந்திரன் போன்ற வேதத் தெய்வங்களை முன்னிறுத்தாது, சிவனையே தம் வேள்வியில் முன் நிறுத்துவார். சிவ சமயக் குரவரில் ஒருவரான ஞானசம்பந்தரும் கூட ஒரு கவுண்டின்யரே. தஞ்சைத் தமிழ்ப்பல்கலைக் கழகம் வெளியிட்ட, அ.ச.ஞான சம்பந்தனின் “பெரிய புராணம் - ஓர் ஆய்வு” என்ற நூலைப்படித்தால் பார்ப்பனரிலுள்ள கவுண்டிண்ய கோத்திரத்தின் விதப்பு பற்றிய தெளிவு ஏற்படும். (அருமையான நூல். படியுங்கள்.) அதேபொழுது புறம் 166 இன் பாட்டுக்கான என் விளக்கம், அ.ச.ஞா. வின் விளக்கத்திலும் வேறுபட்டது. 

இனிப் பறம் 166 இன் 2 ஆம் பகுதிக்கு வருவோம்.  வாதங்களால்  பெற்ற செல்வங் கொண்டு விண்ணந்தாயன் இரந்தோர்க்குக் கொடையும் கொடுக்கிறான்.  ”உன் கொடைவினைக்கு வேண்டி, நீ பூண்ட, மேட்டு வயல் கலைமானின் தோலாடையும், அரிய தோளிலிட்ட பூண்ஞாணும் மிசைந்து பொலிய, மறங்கடிந்த  அரும்படிப்பால், அறம்புகழ்ந்த   வலைசூடி, சிறுநுதலும். பெரிதகன்ற அல்குலும், குறைந்தசொல்லும், பெருகிய கூந்தலும் கொண்ட, நின் நிலைக்குத் தக்க உன் துணைவியர் தமக்கமைந்த வெவ்வேறு தொழில்களை கேட்டு நிற்க” எனப் பொருள் அமையும். இந்த அடிகளில் பார்ப்பனருக்குப் பலதார மணம் பேசப்படுகிறதா எனில் இல்லை என்பேன். பல்வேறு துணைவியரை மனைவியர் என்று கொள்ளத் தேவையில்லை. பார்ப்பன மாளிகையில் வெவ்வேறு பணிகள் செய்யும் பெண்கள் இவர் எனலாம்.  இங்கே துணைவியரின் உருவம், அழகு, படிப்பு, சொல்கேட்டு நிற்றல் போன்றவை விதந்து பேசப்படுகின்றன. 

அடுத்து புறம் 166 இன் 3 ஆம் பகுதியில் விண்ணந்தாயன் கொடைச்சிறப்பு விவரிக்கப்படும்  “காடோ எனும்படி, நாட்டில் எமைவாட்டும் ஏழ்மையிடம் மோதிக்கொண்டிராது, அருமையாய் விளங்கும் இப் பெருங்காலத்தில்,  ’நீரும் நாணும்படி நெய்போல் உயர்ந்தவற்றை அளவற்று வழங்கியும், எண்ணற்றவர் தம்முள் நாணியபடி பலவற்றை வேண்டினும்,  மண் நாணும்படி அவற்றை ஈந்து புகழ் பரப்பியும், எம்மோடு விருந்துற்ற நின் திருந்திய மேம்பட்ட நிலையை’ யாம் காண்கிறோம், அம்ம ! " என்று பொருள் கொள்ளலாம். வேள்விப் பொருளை இங்கு வலிந்து உரையாசிரியர் வருவிக்க வேண்டியது இல்லை. ஏனோ சிலர் அப்படிச் செய்கிறார். பார்ப்பனர் பலர் அற்றுவிகம், செயினம், புத்தம் போன்ற நெறிகளில் ஈடுபட்டு இருக்கையில் ஈசனிலாச் சாங்கியத்தில் ஒரு விண்ணந்தாயன் இருக்கக் கூடாதா? எல்லாப் பார்ப்பனரையும் வேதநெறி பேணுவோராய் ஏன் கொள்ளவேண்டும்?  

அடுத்து 4 ஆம் பகுதி: இதில் ஆவூர் மூலங்கிழார் தம் ஊரை விவரிக்கிறார். ”மேற்கே பொன்போன்ற வெளிச்சம் படு நெடுவரையில் இடியும் முகிலும் வில்போல் தெறித்துவரும் மழையால், பூவிரியும்  புதுநீர் புரண்டுவரும் காவிரியால் புரக்கப்படும் தண்புனற் தோட்டமான எம்மூரின் ஆங்கண், உன்கொடையால் உண்டும் தின்றும் ஊர்ந்தும் நாங்கள் ஆடுவோம் என்று எண்ணிச் செல்கிறேன், அந்த மேகங்களைச் செல்லவிடாது, மழை மேலிருந்து கீழே பெய்யும்படி நீண்ட நெடுவரையும், மூங்கில் வளரும் இமயம்போல, நீ நிலமிசை நின்று நிலைப்பாயாக” என்பது அதன் பொருளாகும். வேள்வியைப் பேசியிருந்தால் இதுபோன்ற ஓர் முடிப்பு வருமா, என்ன? இது down to earth விவரிப்பு. சங்கப் பாடல்களில் இப்படித்தான் அமையும். துறக்கம் பற்றிப் பேசும் உவநிற்ற முடிவு அமையாது.  

ஆக ஈசனிலாச் சாங்கியத்தைப் பயன்படுத்தி மெய்யியல் சொற்போரில் வென்ற பார்ப்பன வாகை புறம் 166 இல் பேசப்படுகிறது. (இதுபோன்ற எடுத்துக் காட்டு வடபுல இலக்கியங்களில் எங்கும் கண்டதில்லை. அங்கெலாம் ஈசான சாங்கியமே பேசப்படுகிறது.) இதைப் போய் வலிந்து வேண்டுமென வளைத்து மாற்றி வேதநெறிக்கு முட்டுக் கொடுக்க முனைவது முற்றிலும் முறையற்றது என்றே எனக்குத் தோன்றுகிறது. அற்றுவிகத்தின் நேரடித் தற்பக்கக் (சுபக்கக்) கூற்றுகள் தமிழில் மட்டுமே  இருப்பது போல் ஈசனிலாச் சாங்கியத்தின் தற்பக்கக் கூற்றும் தமிழில்தான் உள்ளது. புறம் 166 மட்டும் இல்லாது போயின், நாமும் எதிர்ப்பக்கத்தில் (பரபக்கத்தில்) இருந்தே உருவகித்துப் பேசிக் கொண்டிருப்போம். 

அன்புடன்,

இராம.கி.


No comments: