Wednesday, June 15, 2022

9,90,900

”9,90.900 என்பவற்றை ஒன்பது, தொண்ணூறு, தொள்ளாயிரம், என்று நாம் சொல்வது தப்பு , தொண்டு, தொண்பது, தொண்ணூறு என்றே சொல்ல வேண்டும், அப்படித் தான் சங்க காலத்தில்  நம் முன்னோர் கூறினார்” என்பது ஓர் ஆதாரமற்ற கூற்று, அரைகுறைப் புரிதலோடு இணையமெங்கும் இக் குறிப்பு சுற்றிக் கொண்டு மீள மீள வருகிறது, இல்லாத சிக்கலை இருப்பது போல் உரைக்கும் போலியுரையார் எவரும் மூல நூல்களைப் பாரார் போலும். தான்தோன்றித் தனமாய்த் தனக்குத் தோன்றுவதை எல்லாம் அடித்து விடுவதும்.  விவரந் தெரியாதோர் அதைக் கண்டு அசந்துபோய், இப் போலி விளக்கம் சரியோ என எண்ணத் தலைப்படுவதும் தொடர்கிறது. நண்பர் ஒருவர் ”இது சரியோ?” என்று எண்ணத் தலைப்பட்டு தம் முகநூல் பக்கத்தில் ஒரு முறை, இடுகை இட்டிருந்தார். அவர் போல் பலரும் இப்போலியைச் சரியென எண்ணக் கூடும். உண்மையை அறிக நண்பரே!. 

முதலில் தொண்டு, ஒன்பதைப் பார்ப்போம்.. தொல்காப்பியத்தில்  தொண்டு என்பது ஓரிடத்திலும், ஒன்பது என்பது வேற்றுமையுருபுகளுடன் 15 இடங்களிலும் (ஒன்பஃது - 2 , ஒன்பதிற்று - 1, ஒன்பதின் - 1, ஒன்பதும் - 3, ஒன்பாற்கு - 2, ஒன்பான் - 6 என) வருகின்றன. இதே போல் சங்கநூல்களில்  தொண்டு ஓரிடத்திலும், (ஒன்பதிற்று - 4, ஒன்பதிற்று ஒன்பது - 1, ஒன்பது - 3 என) ஒன்பது 9 இடங்களிலும் வருகின்றன. சொல்லாட்சி காணின், ஒன்பது என்ற பெயர் எங்கும் 90 ஐக் குறிக்க வில்லை. ஆகத் தொண்டும் ஒன்பதும் 9 எனும் ஒரே எண்ணைக் குறிக்கும் சம காலச் சொற்களே. இப்பெயர்கள் வந்துள்ள அடிகளை உங்கள் பார்வைக்குக் கீழே தந்துள்ளேன்.

தொல்காப்பியம் 

-------------------------

  தொண்டு (1)

தொண்டு தலையிட்ட பத்து குறை எழுநூற்று - பொருள். செய்யு:101/3

   ஒன்பஃது (2)

னகர தொடர்மொழி ஒன்பஃது என்ப - எழுத். மொழி:49/2

ஒன்பஃது என்ப உணர்ந்திசினோரே - பொருள். செய்யு:101/4

    ஒன்பதிற்று (1)

உள எனப்பட்ட ஒன்பதிற்று எழுத்தே - எழுத். தொகை:28/2

    ஒன்பதின் (1)

இரு பாற்பட்ட ஒன்பதின் துறைத்தே - பொருள். புறத்:21/24

    ஒன்பதும் (3)

அ பால் ஒன்பதும் அவற்று ஓர்_அன்ன - சொல். பெயர்:14/6

அ வகை ஒன்பதும் வினையெஞ்சு கிளவி - சொல். வினை:31/3

ஒன்பதும் குழவியொடு இளமை பெயரே - பொருள். மரபி:1/4

    ஒன்பாற்கு (2)

நூறு என் கிளவி ஒன்று முதல் ஒன்பாற்கு - எழுத். குற்.புண:67/1

  ஈறு சினை ஒழிய இன ஒற்று மிகுமே -    67/2

ஒன்று முதல் ஒன்பாற்கு ஒற்று இடை மிகுமே - எழுத். குற்.புண:70/2

    ஒன்பான் (6)

ஒன்று முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:32/1

ஒன்பான் ஒகர-மிசை தகரம் ஒற்றும் - எழுத். குற்.புண:40/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:54/1

ஒன்பான் முதல் நிலை முந்து கிளந்து அற்றே - எழுத். குற்.புண:58/1

ஒன்பான் இறுதி உருபு நிலை திரியாது - எழுத். குற்.புண:65/1

இரண்டு முதல் ஒன்பான் இறுதி முன்னர் - எழுத். குற்.புண:75/1

சங்க நூல்கள் 

-------------------------------

    தொண்டு (1)

ஆறு என ஏழு என எட்டு என தொண்டு என - பரி 3/79

    ஒன்பதிற்று (4)

ஒன்பதிற்று இரட்டி உயர் நிலை பெறீஇயர் - திரு 168

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பதிற்று தட கை மன் பேராள - பரி 3/39

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் - பரி 11/3

    ஒன்பதிற்று_ஒன்பது (1)

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

    ஒன்பது (3)

ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - திரு 183

ஒன்பதிற்று_ஒன்பது களிற்றொடு அவள் நிறை - குறு 292/3

ஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த - அகம் 125/20

---------------------------------------

இனி சொற்பிறப்புகளுக்கு வருவோம். தமிழில் சுழி, ஒன்று, இரண்டு, மூன்று, ஐந்து, பத்து, நூறு, ஆயிரம். இலக்கம்/நெய்தல், கோடி/குவளை, ஆம்பல், சங்கம். தாமரை, வெள்ளம் ஆகிய சொற்களே அடிப்படை எண்ணுச் சொற்களாகும். வெள்ளத்திற்கு மேல் எந்த எண்ணையும் நான் தமிழ்வழியே கண்டதில்லை. வெள்ளத்திற்குக் கீழுள்ள சொற்கள் எல்லாம் இவற்றைக் கொண்டு உருவானவையே. முதலில் 4 இன் பெயரைப் பார்ப்போம். 

I, II, III, IV, V, VI, VII, VIII, IX, X என்று உரோமன் முறையில் எழுதுகிறாரே? அதை வைத்தே கூட இதைச் சொல்லலாம். உரோமனில் அடிக்குறியீடுகள் I, V, X, L, C, D, M என்று அமையும். இவற்றின் மதிப்பு 1, 5, 10, 50, 100, 500, 1000.  இவற்றை வைத்தே சில மரபுகளோடு (அதாவது விதிகளோடு) மற்ற எண்களை உரோமனில் கட்டுவார். I, II, III வரை கோடுகளை ஒன்றன்முன் ஒன்றாக வலப்பக்கமிட்டு வருவதற்குக் கூட்டலென்று பெயர். நாலென வரும்போது நாலு கோடுகளிடாது ஒரு V ஐ இட்டு அதன் இடப்பக்கம் கோடிட்டு IV ஐக் குறிப்பார். ஆக இடப்பக்கம் கோடிடுவதன் பொருள் கழித்தல் ஆகும். அதாவது 5 இலிருந்து 1 ஐக் கழித்தால் 4. ஆறிற்கு மறுபடியும் வலப்பக்கம் கோடிட்டு VI, VII, VIII என 6, 7, 8 ஐக் குறிப்பர். அடுத்து ஒன்பதின் குறியீடாய் நாலில் நடந்தது போல் X ஐக் குறித்து அதன் இடப்பக்கம் கோடிட்டு ஒன்பதை IX என்று குறிப்பார். இதன் பொருள் பத்து - ஒன்று. இதே முறையில் தான் தமிழிலும் சொற்பொருள் வழி காட்டுகிறார். 

5 என்பது கை என்ற சொல்லில் எழுந்தது. கையில் குறைந்தது நாலு. நலிந்தது/நால்ந்தது என்ற சொல் குறைந்ததைக் குறிக்கும். நால்ங்கை>நான்கை>நான்கு என்பது தமிழில் ஏற்படும் இயல்பான திரிவு. இதை இன்னும் சுருக்கிக் கை/கு-வைத் தொக்கி நாலு என்றும் சொல்கிறோம். ஆகக் கூட்டல் முறை மட்டும் தமிழில் எண்ணுப் பெயர் வளர்ச்சியைக் காட்டவில்லை. கழித்தல் முறையும் நம் எண்ணுப் பெயர்களில் பயில்கிறோ. 6,7,8 என்ற சொற்கள் எழுந்த வகையை நான் இங்கு பேசவில்லை. மாறாக, நேரே ஒன்பதிற்கு வருவோம்.  இதிலும் கழித்தல் முறை பயில்கிறோம்.

10  வந்தபின், 9  ஏற்படுவது இயல்பு. பத்தை விட ஒல்லியானது (குறைந்தது) ஒன்பது, ஒலிந்த பத்து> ஒல்ந்த பத்து> ஒன்பத்து>ஒன்பது. இதே எண்ணை இன்னொரு வகையிலும் சொல்லலாம். பத்தில் தொண்டியது (துவள்>தொள்> தொண்டு>தொண்டியது - குறைபட்டது) என்றும் அணுகலாம். தொள்ந்த பத்து> தொண்பத்து> தொண்பது என்பதும் சரியே. பது என்பதை உள்ளூறப் புரிந்துகொண்டு தொண்டு என்ற சொல்லும் எழும். இன்னொரு வகையில் சொன்னால், துவள்ந்து>துவண்ட பத்து, தொண்பது. தொள்ளும் ஒல்லும் ஒரே பொருள. எப்படிக் கையைத் தொகுத்து நால்/நாலு, நான்கைக் குறித்ததோ, அப்படியே துவள்> தொள்> தொண்டு என்பதும் ஒன்பதைக் குறித்தது. தொள்ளுவது= துளைபட்டது. பத்தில் தொள்ந்தது = குறைந்தது; மறவாதீர். தொள்பட்டது  செயப்பாட்டு வினை. தொண்டு செய்வினை.  

ஒன்பது தொண்டு என்ற இரண்டுமே தமிழில் ஒரேபொருள் குறிக்கும் சொற்கள் தாம். சங்கதத்திலும் மேலை மொழிகளிலும் கூட நொய்ந்தது (குறை பட்டது) என்பது நொவம்>நவம் என்றும் ஆங்கிலத்தில் நவம்>நவன்>நயன்>nine என்றும் ஆகும். சிந்தனை முறை 2 மொழிக்குடும்பங்களிலும் ஒன்றே. தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பியத்திற்கும் ஏதோ ஒரு தொல்பழங் காலத்தில் உறவு இருக்கலாம் என நான் சொல்வதை இப்போதாவது உணர்க. .

தொள் எனும் முன்னொட்டு குறைபட்டது என்று பொருள் தருவதால் நூற்றுக்கு முந்தைய பத்து தொள்+நூறு = தொண்ணூறு ஆயிற்று. அதேபோல ஆயிரத்திற்கு முந்தைய நூறு தொள்ளாயிரம் ஆயிற்று. 

தொள் இலக்கம் அல்லது தொள் நெய்தல் = தொண்ணெய்தல், என்பதை இப்போது தொண்ணுறாயிரம் என்கிறோம். இதேபோல் தொள்கோடியை தொண்ணூறு இலக்கம் என்கிறோம். தொள்ளாம்பல், தொள்சங்கம், தொள்தாமரை, தொள்வெள்ளம் போன்றவற்றையும் வேறு வகையில் அழைக்கலாம்.  

இரு விதிவிலக்காய் 9000 என்பது பயன்படுவதும் ஒரு காரணங் கருதித் தான். பத்தாயிரம் என்பதற்கு தனிச்சொல் தமிழில் கிடையாது. (சங்கதத்தில் உண்டு. நியுதம் என்பார்.) எனவே தமிழில் ஒன்பதாயிரம் என்பது ஒன்பதையும் ஆயிரத்தையும் சேர்த்துப் பெருக்கல் வழியில் உரைக்கிறோம்.

     

  


1 comment:

Anonymous said...

தகவலுக்கு நன்றி ஐயா !!!