Wednesday, June 08, 2022

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர்

பண்டிதர், சாஸ்திரி, தீக்ஷிதர், பகதூர் என்ற பெயர்களுக்கான தமிழ் மூலங்கள் உண்டா என்று நண்பர் ஒருவர் ஒரு முறை கேட்டிருந்தார். பகதூர் என்பது  இசுலாமிய அரசர், தனக்குத் தெரிந்த ஊர்ப் பெரியவருக்குக் கொடுக்கும் பட்டம். இதன் சொற்பிறப்பு எனக்குத் தெரியாது. மற்ற மூன்றிற்கும் தமிழ்த் தொடர்பு உண்டு, கீழே விளக்கியுள்ளேன்.

படுதல்> பட்டித்தல்> ப(ட்)டி> படி என்பது சொல்வளர்ச்சி. படிப்பு என்பது பொதுவாக இன்னொருவர் போட்ட தடத்தில் நாம் போவதையேக் குறிக்கும். பழைமையைக் குறிக்கும் பண்டு என்ற சொல்லும் கூட முன்னே போட்ட தடத்தைக் குறிப்பது தான். பண்டிதர் என்ற சொல்லுங் கூட அவ்வழி வந்தது தான். (பண்டிதர் என்பதை வடசொல் என்றே நம்மில் பலர் பிறழப் புரிந்து கொள்கிறோம்.) பெரிதும் படித்தவர் பண்டிதர் என்பது தான் அடிப்படைப் பொருள். அவருடைய படிப்பு பண்டிதம் எனப்படும். பண்டித அறிவைக் கடன் வாங்கி பாண்டித்யம் என்று வடமொழி திரித்துக் கொள்ளும். இதைப் பற்றித் தெள்ளிகை என்ற என் கட்டுரைத்தொடரில் சொல்லியுள்ளேன். படிப்போடு தொடர்பான பல செய்திகளை அது சொல்லும்.  

https://valavu.blogspot.com/2007/02/1.html

https://valavu.blogspot.com/2007/02/2.html

https://valavu.blogspot.com/2007/04/3.html

இத்தொடரைக் கிடுக்கி, எசு இராமச்சந்திரன் என்ற தொல்லியலார் சங்கதச் சார்பில் என்னை மறுத்துரைத்தார். அதற்கு மறுமொழியாய், ”ஓதி” என்ற மறுப்புக் கட்டுரைத் தொடரும் எழுதினேன்.

https://valavu.blogspot.com/2007/02/1_27.html

https://valavu.blogspot.com/2007/02/2_27.html

https://valavu.blogspot.com/2007/02/3_28.html

படித்துப் பாருங்கள்.

அடுத்து வருவது சாஸ்திரம்/ சாஸ்திரி. ஒரு குறிப்பிட்ட புலனம் பற்றிய செய்திகளைப் பற்றி ஒருங்கே சேர்த்துச் சொல்வது சாற்றம் எனப்படும். “அவர் என்ன சாற்றினார்?” என்று கேட்பதில்லையா? சாற்றம் நம் பேச்சு வழக்கில் சாத்தமாகி (சாத்தன் என்ற சொல்லை நினைவுகூருங்கள்.) சாஸ்தம் என்று வட மொழியில் திரியும். அது மேலுந்திரிந்து சாஸ்திரம் என்றாகும். சாஸ்திரம் அறிந்தவன் சாஸ்திரி. ஏது சாற்றம் என்பது logic. அது ஹேது ஸாஸ்த்ரம் என்று சங்கதமாற்றம் அடையும். பல சாற்றங்கள் இப்படிச் சாஸ்திரங்களாகியுள்ளன. கப்பல் சாஸ்திரம் என்பது கப்பலைப் பற்றிய சாற்றம்.

இதற்கடுத்தது தீக்ஷிதர் என்ற சொல்லைப் பார்ப்போம். இச்சொல்லின் விளக்கம் சற்று நீளமானது. 

தீக்ஷிதர் என்பார், வேள்வி செய்தலை முன்னுறுத்தும் முன்குடுமிப் பார்ப்பார். மற்ற பெருமானரைப் போலன்றி, தீமூட்டி நெய்யூற்றிச் செய்யும் வேள்வி முறையை பெருமானமாய் (ப்ரமாணமாய்)க் கொண்டவர். வேள்வியைத் தம் கடமையாய் ஏற்றுப் போற்றிச் செய்பவர். அடிப்படையில் பூருவ மீமாம்சை வழியினர். உத்தர மீமாம்சைக் கொள்கையை ஏற்றவரில்லை. தமிழகத்தில் இவர் நுழைந்தது சங்க காலத்தில் என்றே சொல்லலாம். வடக்கே அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நம்பா மதங்கள் செழித்து வளர்ந்த காலத்தில் வடக்கில் இருந்த மன்னர் சிறிது சிறிதாய் வேள்வி முறைகளில் இருந்து நழுவினார். எனவே  வேறிடங்களை நோக்கி முன்குடுமிப் பார்ப்பார் நகர வேண்டியதாயிற்று. தமிழ் வேந்தரில் ஒரு சிலர் கொஞ்சங் கொஞ்சமாய் இவர்பக்கம் சாய்ந்தார். எனவே பூருவ மீமாஞ்சை இங்கு கால் கொள்ளத் தொடங்கியது. 

வேள்வியின் போது, வேள்வி செய்விக்கும் எல்லாப் பெருமானரும், வேள்வி செய்யும் உடையவரை ( = எஜமானரை- யஜுர் வேதத்தில் அப்படித்தான் பெயர் குறிப்பார்.) ஒரு சூளுரை (சங்கல்பம்) செய்யும்படி, சொல்வார். வேள்வி செய்யும் பலரும் ஐயர் சொல்வதை என்னவென்று அறியாமல் சொல்வார். சூளுரை என்பது, “இதைக் கடைப்பிடிப்பேன்” என்று உறுதி செய்வது தான். அவர் காட்டும் தீவத்தின் மேல் தீண்டி இச்சூளுரையைச் செய்ய வேண்டும்/ இது போன்ற சூளுரைகள் அவ்வளவு உறுதியில்லாதவை. எனவே யாரும் கண்டு கொள்வதில்லை ஆனாலும் தீயையும் நீரையும் தீண்டியே இது போன்ற சூளுரைகள் செய்யப்படுகின்றன. ஐம்பூதங்களில் இரண்டான தீயும் நீரும் சூளுறைகளுக்குச் சான்றுகளாகின்றன.   

தீ என்பது வேதநெறிக்கு முகன்மை. நீர் என்பது ஆகம நெறிக்கு முகன்மை, இன்றிருக்கும் சிவநெறி தீயையும், நீரையும் சேர்த்தே சூளுரை கூறலுக்குப் பயன்படுத்தும். எல்லாச் சிவன் கோயில்களிலும் ஓரளவு இது நடந்தே தீரும். (பெருமாள் கோயில்களில் ஆகமம் அதிகம், வேள்வி குறைச்சல்.) 

தீக்கிதர் என்பார் இதில் சற்று தீவிரமானவர், ஒரு குறிப்பிட்ட அகவையில் தேவையான நூல்களைப் படித்த பின்னர், இதற்கென்று சிறப்பாக ஒரு வேள்வி நடத்தி, அந்த வேள்வித் தீயைத் தீண்டி இது போல் ஒரு சூளுரையை ஏற்பார், அதன் வாசகம் தராமல், அடிப்படைப் பொருளை மட்டும் இங்கு சொல்கிறேன். “வேதநெறி வழுவாமல் பூருவ மீமாம்சைப்படி நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையை, சொல்லியே இளம் பெருமானர் தீக்கை பெறுகிறார், தீக்கிதரும் ஆகிறார். 

தீக்கை என்பது தமிழ்ச்சொல் தான். துல்> தில்> திள்> தீள்> தீட்டு, தீண்டு போன்ற சொற்களும், துல்> தொல்> தொலி, தோல் போன்ற சொற்களும். துள்> தொள்> தொள்ளு> தொடு போன்ற சொற்களும், தொள்> தொள்கு> தொட்கு> தொக்கு என்பதும், தீக்கையொடு தொடர்புள்ளவை. தீட்கு> தீக்கு>  தீக்கை என்பது touch என்பதைக் குறிக்கும். தீக்கை பெற்றவரைத் தீக்கையர் என்னாது தீக்கை எனும் பெயர்ச்சொல்லில் இருந்து ”தீக்கித்-தல்” என்ற இன்னொரு வினைச் சொல்லை உருவாக்கித் தீக்கித்தார்> தீக்கிதர்> தீக்ஷிதர் எனச் சங்கதத்தில் இச்சொல் திரியும். (இது போன்ற உருவகம் மடி> மரி> மரணம்> மரணித்தல் என்றும். கல்> கற்பி> கற்பனை> கற்பனித்தல் என்ற சொற்களிலும் அமையும். தீக்கித்தல், மரணித்தல், கற்பனித்தல் போன்றவை அரைகுறைத் தமிழறிவில் எழுந்த சொற்கள்.)

தீக்கிதர் தில்லைச் சிற்றம்பலத்தில் மட்டுமிருப்பவரல்ல. இந்தியாவெங்கணும் இவருண்டு. [ஏன் நம்மூரிலேயே திருமறைக்காடு, ஆவுடையார் கோயில், திருப்பிடவூர் (திருப்பட்டூர்) போன்ற ஊர்களில் இருந்தார். இன்னும் சிலவும் உண்டு.  இன்று தில்லையரைத் தவிர மற்றோர் நம்மூரில் தீக்கிதர் என்று தம்மைச் சொல்லிக் கொள்வதில்லை.] அவர் எல்லாருமே வேள்வி நடத்தத் தகுதியுள்ளவர் என்பது பொருள். மோனியர் வில்லியம்சில் “to consecrate or dedicate one's self (esp. for the performance of the soma-sacrifice) என்றே தீக்ஷைக்குப் பொருள் தருவார். தீக்கிதர் சங்கதத்தின் மேல் சற்று அதிகப் பற்று கொண்டவர். தமிழ் மேல் உள்ள நெகிழ்ச்சி குறைவு தான். இருப்பினும் சிவநெறியில் பெரிய குருவான உமாபதிசிவம் என்பார் தீக்கிதர் கொடிவழியில் வந்தவர் தான். தீக்கிதருக்கும் ஆரத்தி காட்டுதலுக்கும் தொடர்பில்லை. ஆரத்தி காட்டுவது சிவச்சாரியார். இவர் வேறு வகைப் பெருமானர். சிவதீக்கை பூண்டவர்.

சிவ தீக்கை என்பது சிவநெறியின் வழி நடப்பது, இதிலும் தீயை, நீரைத் தீண்டி, “சிவநெறி வழுவாமல் ஆகமம் சொல்வதன் படி  நான் நடந்து கொள்வேன். இன்னின்ன செய்வேன், இன்னின்ன செய்யமாட்டேன்” என்று சூளுரைரையைச் சொல்லியே இளம் பெருமானர் சிவ தீக்கை பெறுகிறார்,  இவரைச் சிவாச்சாரி என்பார். தமிழ் மேல் நெகிழ்ச்சி கொண்டவர்.  

இற்றைச் சிவநெறி என்பது ஆகம நெறி கூடியும்  வேதநெறி ஊடு வந்தும் ஏற்பட்ட விந்தையான கலவை. ஆனாலும் சிவநெறியார் வேதநெறியை ஒரு கட்டுக்குள் வைத்திருக்கவே முயல்வர். அவருக்கு ஆகமமே முதல் ஆகும், வேதம் என்பது பிறகே. ஆகம நெறி என்பது வழிபாட்டு நடைமுறை குறித்தது. 

நண்பர்களே! பொதுவாய் ஒரு சொல்லுக்குப் பொருள் சொல்லும்போது அருள்கூர்ந்து இடம், பொருள், ஏவல் பாருங்கள். கொஞ்சம் கேள்வி கேளுங்கள். 

அன்புடன்,

இராம.கி.


No comments: