Monday, June 13, 2022

உதயம், மதியம், அஸ்தமம், ராத்திரி

இது 2007 இல் மார்ச்சு 14 இல் சொல் ஒரு சொல் என்னும் வலைப்பதிவில் இட்டது. சேமிப்பிற்காக இங்கு மீண்டும் இடுகிறேன்.

======================

 சொல் ஒரு சொல்லை விடாது படித்து வருகிறேன். பெரும்பாலும் பின்னூட்டு இடாமல் படித்துப் போய்விடுவதுண்டு. இப்பொழுது, உதயம், மதியம், அஸ்தமனம், ராத்திரி என்ற நான்கு சொல்லை இங்கு கொடுத்துச் சிறுபொழுதுகள் பற்றிப் பேசியிருக்கிறீர்கள். என்னுடைய இடையூற்றைப் பொறுத்துக் கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன்.

இது போன்ற சொற்கள் பெரும்பாலும் இருபிறப்பிகள். அவற்றின் கருக்கள் தமிழாய் இருக்கும், வெளித்தோற்றம், முடிப்பு ஆகியவையோ வடமொழியாய் நிற்கும்.
உத்தல் என்பது தோன்றுதல், விடிதல், உயர்தல் என்ற பொருளைக் குறிக்கும் நல்ல தமிழ் வினைச்சொல் தான். அதன் திரிவான உற்றது என்ற சொல்லை நாம் புழங்குகிறோம், இல்லையா? உற்றது என்றால் ஏற்பட்டது என்றுதானே பொருள்? ஒளி தோன்றியது, ஏற்பட்டது என்பதைக் குறிப்பது தான் உத்தல் என்னும் வினை. சூரியன் உற்றினான் என்றால் = சூரியன் தோன்றினான்.

உற்றுதல்>உற்றித்தல்>உத்தித்தல்>உதித்தல் என்ற வளர்ச்சி நமக்கு உரியது தான். சூரியன் உதித்தான் என்பதும் நாம் சொல்லக் கூடியது தான். (பொழுது என்பது கூட முதலில் கதிரவனைக் குறித்துப் பின்னால் தான் காலத்தைக் குறித்தது.) ஆனாலும் உதயம் என்ற அந்த முடிவில் எங்கோ வடமொழிச் சாயல் தெரிகிறது. என்ன என்று அறுதியாகச் சொல்ல முடியவில்லை. இந்த இருபிறப்பிச் சொற்கள் எல்லாமே இப்படித்தான்; ஒருவகையில் பார்த்தால் தமிழாய்த் தெரியும்; இன்னொரு வகையில் பார்த்தால், வடமொழித் தோற்றம் கொள்ளும்.

அடுத்து மதியம் பற்றிச் சொல்லியிருந்தீர்கள். நண்பகல் என்பது நள்ளிய பகல் என்றே பொருள் கொள்ளும். நள்ளுதல் என்பது குத்தப் பட்டது, நிலைக்கப் பட்டது என்ற பொருளை இங்கு காட்டும். "நட்டமே நிற்கிறான் பார்" என்று சிவகங்கைப் பக்கம் சொல்லுவார். (நட்டப் பட்ட ஒரு நிலம் நாடு.) ஒரு வட்டத்தின் மையத்தில் நட்டப் பட்டது நடுவம். நண்பகல் என்பதும் நடுப்பகல் என்பதும் ஒன்றுதான். பகலை ஒதுக்கி வெறுமே இடம், பொருள், ஏவல் பார்த்து நடுவம் என்றும் சொல்லலாம். அது காலத்தைக் குறிக்கிறது என்று உரையாட்டில் புரியுமானால் சுருக்கச் சொல்லைப் புழங்குவதில் தவறில்லை.

**பொதுவாக தமிழிய மொழிகளுக்கும், வடபால் மொழிகளுக்கும் (=இந்தையிரோப்பிய மொழிகளுக்கும்) நடக்கும் ஒலிமாற்றத்தில் நம்முடைய நகரம் அங்கு மகரமாகும். நம்முடைய டகர, றகர, ழகர, ளகரங்கள் அங்கு தகர, ஷகரங்களாய் மாறி ஒலிக்கும். நம் நடு அங்கே மது என்றாகும். [இந்த விதியைப் பின்பற்றித் தான், minute -இன் இணையான "நுணுத்து" என்ற நம் சொல்லை மீட்டெடுத்தோம்]; நகர, மகர இணைகளை நான் ஒரு பட்டியல் போட்டே சொல்ல முடியும். நடுவம் ம(த்)தியம் என வடமொழியில் ஆனது ஒரு இயல்பான மாற்றம் தான். (யகரம், ரகரம் ஆகிய ஒலிகள் வடமொழிப் பலுக்கில் இது போன்ற சொற்களில் உள்நுழையும்.) நடுவ அண்ணம் (approximately middle time) என்பது நடுவத்திற்கு அண்மையில் உள்ள காலம்; இதையே வடமொழிப் பலுக்கலில் மத்திய அண்ணம் = மத்திய அண்ணம் = மத்தியாண்ணம்>மத்தியானம் என்று சொல்லுவார்கள். இதிலும் பார்த்தீர்களா? அடிப்படை தமிழ், ஆனாலும் வடமொழித் தோற்றம்.**

இனி அஸ்தமனம் பற்றிப் பார்ப்போம். கயிறு அறுந்தது என்றால் இரண்டாய்ப் போனது; அவளுக்கும் எனக்கும் உறவு அற்றுப் போனது என்றால் உறவு இல்லாமற் போனது என்று பொருள். வேலையற்ற நிலை = வேலையில்லாத நிலை; அற்றம் என்ற சொல்லுக்கு பொருள் இல்லாத நிலை என்றுதான் பொருள். நாம் சுழியம், சுன்னம் என்று சொல்லுகிறோமே, அந்த zero விற்கு இன்னொரு சொல் அற்றம். nothingness. அற்றல் என்ற வினைக்கு இல்லாது போதல் என்றே பொருள். அல்லன் என்றால் இல்லாதவன் என்றுதான் பொருள். அற்றலுக்கும் அல்லலுக்கும் ஒரே வேர் தான். அல் என்னும் அடிவேர். அற்றல்>அத்தல் என்றும் பேச்சுவழக்கில் சொல்லப் படும். "என்ன அவனோடு பேச்சு? அவனுக்கும் நமக்கும் ஆகாதுன்னு ஆயிப் போச்சுல்ல; அத்துவிடு".

அத்தமானம் = இல்லாத நிலை. வருமானம், பெறுமானம், கட்டுமானம் என்பது போல் இங்கே அத்தமானம். மானுதல் என்பது அளத்தல்; மானம் என்பது நிலையைக் குறிக்கும் பெயர்ச்சொல். மேலே கூறிய மானங்கள் எல்லாம் கூட்டுச் சொற்கள். இங்கே ஒளி இல்லாத நிலை; சூரியன் மறையும் நிலை. அத்தமானம் வடமொழிப் பலுக்கில் அத்தமனம்>அஸ்தமனம் என்று ஆவது மிக எளிது. ஆக அடிப்படை நம் மொழியில் தான் இருக்கிறது. இன்றையத் தோற்றம் கண்டு நாம் வடமொழியோ என்று மயங்குகிறோம். அவ்வளவுதான்.

இதே போல இராத்திரிக்குள்ளும் நம்முடையது உள் நிற்கிறது. ஒருவன் என்பதற்கு பெண்பாலாய் ஒருத்தி (பழைய புழக்கம்), ஒருவள் (புதிய புழக்கம்) என்று சொல்கிறோம் அல்லவா? அதேபோல இருள்தல் என்ற வினையில் இருத்து இருள்வு, இருட்டு என்ற இரு பெயர்ச்சொற்கள் பிறக்கும். இருள்வு மருவி இரவு என்று ஆகும். இருட்டு வடக்கே போக இருத்து>இருத்தி என்றாகிப் பின் பலுக்கல் திரிந்து ரகரம் நுழைந்து இரத்தி>இராத்தி>இராத்ரி ஆகும். முன் இரவு, பின் இரவு என்பதை முன்னிருட்டு, பின்னிருட்டு என்று நாம் சொல்ல முடியுமே?

நான் இந்தப் பின்னூட்டை முடிக்குமுன் சிறுபொழுதுகள் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். ஒரு நாளை நான்கு பொழுதாகப் பிரிப்பது பொதுவாக மேலையர், மற்றும் வடமொழியாளர் பழக்கம். ஆறு பொழுதாய்ப் பிரிப்பதே பழந்தமிழ்ப் பழக்கம். (என்னுடைய காலங்கள் தொடரை இங்கு நினைவு படுத்துகிறேன்.) நம்மூர் வெதணத்திற்கு (climate) அது சிறப்பாக இருக்கும்.

6AM - 10AM = காலை; morning; ஒளி கால் கொண்டது காலை. காலுதல் = ஊன்றுதல்
10AM - 02PM = பகல்; noon; பொகுல் என்பது உச்சி; பொகுல்>பொகுள்>பொகுட்டு என்பதும் உச்சி தான்.
02PM - 6PM = எற்பாடு; எல் (கதிரவன்) படுகின்ற (=சாய்கின்ற) நேரம் எற்பாடு. இந்தச் சொல்லை முற்றிலும் இந்தக் காலத் தமிழில் தவிர்த்துவிட்டோம். இது ஒரு பெரிய இழப்பு. இந்தச் சொல் இல்லாமல் பகலையும், மாலையையும் கொண்டுவந்து போட்டு பேச்சில் குழப்பிக் கொண்டு இருக்கிறோம்.
6PM - 10PM = மாலை; மலங்குதல் = மயங்குதல்; ஒளி மலங்கும் நேரம் மாலை. (கவனம் மாலை என்பது 6 மணிக்கு மேல்தான்; மாலை 4 மணி என்று சொல்லுவது பெரும் பிழை; ஆனாலும் பல தமிழர்கள் எற்பாட்டைப் புழங்காததால் மாலையைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலத்தில் evening என்பது சரியாகவே பயன்படுகிறது.)
10PM - 2AM = யாமம், இரவு, night, யா என்னும் ஓரெழுத்தொரு மொழிக்கு இருட்டு, கருமை என்ற பொருள் உண்டு. யா வில் பிறந்த பலசொற்கள் ஆழமான பொருள் உள்ளவை. யாமத்தை ஜாமமாக வடமொழி மாற்றிக் கொள்ளும்.
2AM - 6AM = விடியல், வைகறை twilight ஒளி விடிகிறது; இருள் வைகிறது; இரண்டின் வேறுபாட்டையும் தெளிவாக உணர வேண்டும்.

இது போக நண்பகல் 1200 noon, நள்ளிரவு, நடுயாமம் midnight பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. மாலை, யாமம், விடியலை மும்மூன்று மணிகளாய்ப் பிரித்து முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் யாமம் என்று சொல்லுவது ஒரு சிலரின் பழக்கம்.

அன்புடன்,
இராம.கி.
March 14, 2007 12:50 AM

2 comments:

யாழினி said...

நெடுநாள் ஐயத்திற்கு விளக்கம் கிடைத்தது. நன்றி ஐயா.

ந.குணபாலன் said...

வெள்ளாப்பு, வெள்ளென என்ற சொற்களை வைகறை என்ற பொருளிலும்
செக்கல், மம்மல் என்ற சொற்களை அந்தி/ மாலை என்ற பொருளிலும்
பிற்பகல் 4-6 மணிப் பொழுதைப் பின்னேரம் என்றும் ஈழத்தமிழ்ப் பேச்சுவழக்கில் சொல்வதுண்டு.