Monday, June 28, 2021

secret

நம்முடைய செயற்பாடுகளில் ஒரு சிலவற்றை எல்லாரோடும் பொதுவாய்க் கலந்து செய்கிறோம்; அதேபொழுது, சிலவற்றைப் பிரித்துத் தனியே வைத்து, எல்லோரும் அறியாத வகையால், மறைவாகச் செயலாற்றிக் கொள்ளுகிறோம். பொதுக் கருமங்கள் பொதுவை (common) ஆகவும், தனியே வைப்பதைச் செகுத்து வைத்தல் என்றபொருளில் செகுதை எனவும் சொல்லலாம். இதைத் தான் ஆங்கிலத்தில் secret என்கிறார்கள். 

secret: செகுதை, செகுத்து வைத்தல்

1378 (n.), 1399 (adj.), from L. secretus "set apart, withdrawn, hidden," originally pp. of secernere "to set apart," from se- "without, apart," prop. ஓon one's ownஔ (from PIE *sed-, from base *s(w)e-; see idiom) + cernere "separate" (see crisis). The verb meaning "to keep secret" (described in OED as "obsolete") is attested from 1595. Secretive is attested from 1853. Secret agent first recorded 1715; secret service is from 1737; secret weapon is from 1936. 

secret என்பதைச் சொல்லத் தமிழில் இன்னும் மூன்று சொற்கள் இருக்கின்றன. ஒன்று கமுக்கம், மற்றொன்று கரவம், மூன்றாவது மந்தணம். 

சம்சாரம் ஒரு மின்சாரம் படத்தில் மனோரமா "கம்முன்னு கிட" என்று சொல்லுவார் பாருங்கள், அந்தக் கம்மென்று இருத்தல் என்பது பலர் அறியப் பேசாதிருத்தல். கமுக்கம் என்ற சொல் கம்முதலில் பிறந்த பெயர்ச்சொல்.

அடுத்த சொல்லான கரவம் என்பது மறைத்தல் பொருளில் வரும் கரத்தல் வினையில் இருந்து கிளைத்த பெயர்ச்சொல். கரவம்> கரகம்> கரஹ்யம்> ஹரஹ்யம்> ரஹ்யம் என்று வடமொழி நோக்கித் திரியும். தமிழகத்தில் இருந்து வடக்கே போகப் போக ககரம் ஹகரமாகிப் பின் அதுவும் மறைவது பல சொற்களில் நடந்திருக்கிறது. முடிவில் ரஹ்யம் ரஹஸ்யம் ஆனது பலுக்க எளிமை கருதியே.

மூன்றாவது சொல்லான மந்தணம் என்பதும் மறைவுப் பொருள் கருதியே. 

செகுதையில் இருந்து இன்னொரு சொல்லும் விரியும். நம்முடைய செயற்பாடுகளில் செகுதையானவற்றை நம்பிக்கையானவருக்கு மட்டும் சொல்லி வினையாற்றுவது உலகில் பலருக்கும் உள்ள பழக்கம். இப்படிச் செகுதைகளைக் கையாளுபவர் செகுதையர். ஆங்கிலத்தில் secretary என்று சொல்லுவார்கள். Secretary is one who keeps secrets. செகுதையைக் காப்பாற்ற வேண்டியவர் அதைப் பொதுவையாக்கி விட்டால், அப்புறம் நம் கதி அதோ கதி தான்.

ஒரு ஊரின் நிலங்களைச் செகுத்து "இன்னார் இந்தப் பக்கம் வசிக்கலாம், இதுபோன்ற செயல்களைச் செய்யலாம்" என்று அமைத்து வருவது sector என்னும் செகுத்தியாகும். (பகுத்து வந்த பாத்தியைப் போலச் செகுத்து வந்தது செகுத்தி.) 

இனி, "இது இதோடு கலக்கக் கூடாது" என்று தனித்து வைக்கும் செயலை segregate: செகுத்தாக்கல் என்று சொல்வார்.

1542, from L. segregatus, pp. of segregare "separate from the flock, isolate, divide," from *se gregare, from se "apart from" (see secret) + grege, ablative of grex "herd, flock." Originally often with ref. to the religious notion of separating the flock of the godly from sinners. Segregation (1555) is from L.L. segregatio, from L. segregatus; in the specific U.S. racial sense it is attested from 1903; segregationist is from the 1920s. 

அப்படிச் செகுத்து வைக்குப் பட்ட பகுதியை segment = செகுமம் என்றும் சொல்லலாம்.

முடிந்தால் http://valavu.blogspot.in/2007/04/2.html என்ற வலைப்பதிவைப் படித்துப்பாருங்கள்.

அன்புடன்,

இராம.கி.

No comments: