Tuesday, June 22, 2021

கருமி - கஞ்சன்- கம்மி

கருமி - கஞ்சன்- கம்மி என்பது பற்றி  27 சனவரி 2018 இல் எழுதியிருக்கிறேன். ஆனால் என் வலைப்பதிவில் அதைப் பதியாது விட்டிருக்கிறேன். இப்பொழுது அதே கேள்வி இன்னுரு வடிவில் தமிழ்ச்சொல்லாய்வு முகநூல் குழுவில் கேட்கப் படுகிறது. எனவே மீண்டும் பதிகிறேன். 

-----------------------------------

சிலநாட்கள் ஊரிலில்லாததால், உடன் பங்குபெறவியலாது, நாட்கழித்து மறுமொழிக்கிறேன். பொறுத்துக்கொள்க. ”கம்மி தமிழ்ச் சொல்லா?” என்றிங்கு கேட்கப்பட்டது. தமிழ்ச் சொற்களுக்கெனத் தனி வரலாறுகளுண்டு. பொதுவாக ஒற்றைச்சொல்லையும், சொல்லின் எழுத்துத் திரிவுகளையும் உறவுமொழிகளில் மேலோடப்பார்த்து யாரும் முடிவிற்கு வருவதில்லை. பொருள்வளர்ச்சி, புதுப்பயன்பாடுகள், சிறு மாற்றங்கள், குடும்பமொழிகள், வேற்றுமொழிகளெனப் பலவற்றையும் நூணிக் கவனித்து, ”உன்னிக்கும் சொற்பிறப்பிற்கு இயலுமையுண்டா?” என்று பண்டுவனின் கூர்ப்போடு அலசிப் பார்த்தே ஒரு முடிவிற்கு வருகிறோம். மாற்றுப்பார்வைகளை எடுத்து வைக்கையில் திறந்தமனத்துடன், பரிந்துரைத்த சொற்பிறப்பு வரிசையை மீளாய்வு செய்கிறோம். “தாட்பூட் தஞ்சாவூரெ”ன்னுங் கண்கட்டு மாகைப் போக்கும் (magic trend) ”புராணிகப் பாங்கும்” தமிழ்ச்சொற்பிறப்பியலிற் கிடையாது. ஒருசொல்லுக்கு முடிவுசொல்ல ஏராளஞ் சொற்களைச் சலிப்பது இயல்பே.  

ஓர் உயிர்/பொருள்/நிகழ்வு தோன்றுகையில் ”கருவுற்ற”தென்கிறாரே? அதன் பொருள் என்ன? குருத்தல் வினை குல்லெனும் வேர்ச்சொல்லிற் தோன்றற் பொருளில் கிளைத்தது. பனை, தென்னை. வாழை, தாழைக் குருத்துகளைக் கொழுந்தென்பார். குருத்தெலும்பு= இளவெலும்பு. குருத்தோலை= இளவோலை; குரும்பை= பனை தெங்கு, ஈச்சு போன்றவற்றின் பிஞ்சு. குருமன்/மான்= ஒரு சார் விலங்கு, பறவைகளின் இளமைப்பெயர். குருகு= விலங்கின் குட்டி. [குழந்தை/ குழவி என்றவை கருவின் வெளிப்பாடு. ரகரமும், ல/ழ/ள க்களும் தொடர்புடையவை.] ”குருவி”க்குச்  சிறு பறவை என்றே பொருள். கைபேசிக் கோபுரங்களில் உலவும் நூகையலைகளால் (microwaves) இக்காலத்திற் குருவியினம் குழம்பி அவற்றின் எண்ணிக்கை குறைவதாய்ச் சொல்வர். இது உண்மையா? தெரியாது. ஆனாற் சென்னைப் பெருநகரில் குருவி குறைந்து போய் விட்டது. குருவிக்கண்= சிறுகண்/துளை; குருவித்தலை= சிறுதலை; குரீஇ= குருவியின் அளபெடை. குரீஇப்பூளை= சிறுபூளை. (குருவி மட்டுமின்றி சிறுமையுங் குரீஇ.) 

குருளை= இளமை, நரி, நாய், பன்றி, மான், புலி, முசு, முயல், யா:ளி ஆகியவற்றின் குட்டி. குருவின் இடையுகரம் போய் அகரஞ் சேர்ந்தாலும் குள்ளச் சொற்களுண்டு. குரங்கல்= குறைதல்; குரம்பை= சிறுகுடில். தோன்றல், இளமை, சிறுமை, குறுமை என்று படிப்படியாகப் பொருள்திரியும். குரு>குறு வளர்ச்சியில் குறில், குறுக்கம், குறுக்கு, குறுகு போன்றவை குள்பொருள் காட்டும். குறு>குறை>குறைவு என்றும் திரியும். குறு>குன்று>குன்றல் என்றுமாம். குன்று/குன்றம்= சிறுமலை. குருவிற்கு ஒருபக்கம் பெருமைப் பொருளெனில் இன்னொருபக்கம் குறுமைப்பொருள் இருந்தேவந்தது.

குருவின் முதலுகரந் திரிந்து கரு ஆகினும் குள்ளப்பொருள் தொடரும். முட்டை/பிள்ளைக் கரு சிறியதே. கருவாலி = ஒருவகைக் குருவி; கருவல்= குட்டையாள். கருவன்= செறுக்கன் (மலையாளத்தில் சிறு என்பதச் செறுவென்று பலுக்குவர்.). கரைசலைக் காய்ச்சும்போது நீர் ஆவியாகி, கரைசல் செறியும் (concentrate), வெள்ளம் (volume) குறையும். காய்ச்சலைக் கருக்கல் (=குறைத்தல்) என்றுஞ் சொல்வர். உடம்பை 4 பாகம் ஆக்கையில் கருந்தலை என்பது கால் பாகங் குறிக்கும். கருநெல்லி = சிறுநெல்லிக்கு இன்னொரு பெயர். அரிநெல்லி/அருநெல்லி என்றுஞ் சொல்வர். சிறுசெங்குரலி எனும் மலைக்கொடி கருந்தாமக் கொடி எனப்படும். கருவின் இன்னொரு திரிவாய் கர என்றாகும். கரப்புக்குடிசை = சிறுகுடிசை.

பருக்குநிலை பருமு நிலை ஆவது போல், கருக்குநிலை கருமு நிலையாகும். கருமன்/கருமி = குறைத்து ஈகிறவன். கருமி தமிழில்லையென்பார் கஞ்சனைத் தமிழென்பார். நானறிந்த வரை இரண்டும் ஒரே பொருள் கொண்ட தமிழ்ச் சொற்களே. மு.சண்முகம் பிள்ளையின் தமிழ்-தமிழ் அகரமுதலி “செயல்களைச் செய்பவன், தீவினையான்/பாவி, ஈயான்” என 3 பொருள் சொல்லும். முதற்பொருள் கரமெனும் கைச்சொல்லிற் பொருந்தும். 2 ஆவது கரிமத் திரிவு. 3 ஆம் பொருளில், கருமி= மெலிவு, குறைவு, இழிவு, கொஞ்சம். எத்தனை விழுக்காடாயினும் குறைவு குறைவு தான். ஈயாதான் என்பது முற்றிலும் கொடை மறுத்தது. பேச்சுத் தமிழில் இன்னொரு பழக்கமுமுண்டு. இரண்டாமெழுத்தாய் இடையின ரு,லு,ழு,ளு பயில்கையில் அதற்குமாறாய் இனமெய்யிட்டு மூன்றாமெழுத்தை அழுத்துவார். தமிழ் போல் பாகதத்திலும் மெய் மயக்கமுண்டு. (பாவாணர் பாகதத்தை வடதமிழென்றே சொல்வார். அக்கூற்றில் உண்மையுள்ளது. விரிக்கின் பெருகும். வில்லியம் ஜோன்ஸ், மாக்சுமுல்லர், எல்லிசு, கால்டுவெல் ஆகியோரை விலகேம் என்று முன்முடிவு கொண்டோருக்கு இப்புதையல் கிடைக்காது.) மெய்ம்மயக்கம் கொண்ட சொற்கள் சிலவற்றைக் காண்போம்.

 கருமி>கம்மி=குறைவு; கம்முதல்=குறைதல்; கம்மை=சிறுகீரை; குழுமி>கும்மி=கைகொட்டிப் பாடியாடும் கூத்து; கும்முதல்=கூடுதல். ஆட்களுங் கூடுவர், கைகளுங் கூடும்; கொம்மியென்றுஞ் சொல்லப்படும். சருமம்>செருமம்>செருமன்>செம்மான்= சக்கிலியன், சருமம்=தோல், வெய்யிலில் நின்றாற் சுருங்குகிற, உலர்கிற, உடலை மூடும் போர்வை. சருமகன்/சருமகாரன்= சக்கிலியன்; செம்மாத்தி= சக்கிலியப் பெண்; செம்மாளி= செம்படவர் தரிக்கும் செருப்புவகை. செருப்பு= மிதியடி, செருத்தல்= மாட்டுமடி; [சருமம் தமிழே. பலருஞ் சங்கதமெனத் தவறாய் எண்ணுவர். செருப்பு தமிழெனில் சருமம் வடமொழி ஆகுமா? 1000 முறை மாட்டைத் தெய்வமென இந்துத்துவர் சொன்னாலும். மாட்டுக்கறியும், தோலும் மாந்தர் வாழ்வில் ஆழ்ந்த பங்கை வகிக்கத் தான் செய்தன மாட்டுத்தோலின்றி மிதியடிகள் இல்லை. மதங்கம்>ம்ருதங்கமும் இல்லை.]

 அடுத்தது செம்மறி. இன்று சிலர்க்குச் சிரைத்தல் வினை இழிவாய்த் தோன்றலாம். ஆனால் மாந்தர்க்கு அதுவொரு இயல்தொழில். சிரையைக் (shear) ”கத்திரித்துக் கொள்”எனச் சுற்றி வளைத்துச் சொல்வது அறியாமை. குறிப்பிட்ட ஆடுகளின் மேனி மயிரைச் சிரைத்து நூலாக்கி கம்பலி/கம்பளி ஆடைசெய்வார். சிரைக்கும் மயிர்கொண்ட மறி சிரைமறி. பேச்சு வழக்கில் சிருமறியாகி, சிம்மறி*>செம்மறி ஆகும். செம்மறி என்பது சிவப்பு மறியல்ல. இனிச் சிகைகொண்ட விலங்கை சிகையம், கேசரியென்பார். இது மூக்கொலி உற்றுச் சிங்கமானது. வடக்கே சிம்ஃகம்>சிம்ஹம் எனப் பலுக்கிப் பாகத மெய்ம்மயக்கில் சிம்மமானது. சிங்கம்>சிம்ஃகம்>சிம்மம். செருமாப்பு> செம்மாப்பு = இறுமாப்பு; (செரு/செருக்கு = அகந்தை, ஆணவம், பெருமிதம்). 

இன்னும் சொற்களுண்டு. செருகுதல்>செருமுதல்>செம்முதல் = மூடல்/அடைத்தல். செரிமித்தல்>செருமித்தல்>செம்மித்தல்/செமித்தல். (செரினத்தை சீரனம்>ஜீரணம் என்று வடவொலிப்பில் ஆக்கி சிலர் அதைத் தமிழில்லை என்பார்.) செருமல்>செம்மல்= தலைவன் (செரு= சிறுபோர். படைத்தலைவனே செம்மலாகும் தகுதியுற்றவன்.) செம்மொழி என்றசொல்லும் கூட மெய்ம் மயக்கில் எழுந்ததே. எல்லா வளமும் பெற்ற செழுமையான மொழியை classical language என்று சொன்னார். செழும் மொழி>செம்மொழியானது. செழுமை யென்று தேடினால் சான்றுகள் கிடைக்கும். செம்மொழியென்று தேடினால் சங்க இலக்கியத்தில் சான்றுகள் கிடைக்காது. அதே போல் தெம்மாங்கும் மெய்ம்மயக்கச் சொல்லே. தெழித்தல் = முழக்குதல், ஆரவாரித்தல், ஒலித்தல். தெள்ளேனம் கொட்டோமோ? - என்ற மாணிவாசகர் கூற்றை எண்ணுங்கள். தெழிமாங்கு>தெழுமாங்கு>தெம்மாங்கு.  ஒலித்தல், ஆரவாரித்தல், முழங்குதல். அடுத்தது தும்மல் பற்றியது. தும்மும்போது, காற்றுஞ் சளியும் சேர்ந்து மூக்குள் மேலெழும். துளுமல் என்பதும் அதே பொருள் காட்டும். துளுமல்> தும்மல் = மேலெழுந்துவரல்

இனி அறங்குறிக்கும் தருமம்>தம்மம் (தள்>தரு>தா என்பது முற்றிலும் தமிழே. தருமத்தைச் சங்கதமென்றும், தம்மத்தைப் பாகதமென்றும் சொல்வது வீண் முயற்சி. இந்தையிரோப்பிய மொழிகளில் இது போன்ற சொல்லேயில்லை.) பருமை>பம்மை= பதுமை, பெருத்த நிலை. சிவனைக் குறிக்கும் பெருமான், மெய்ம்மயக்கத்தில் பெம்மானாகும். பொருமலி>பொம்மலி= பருத்தவன், தடித்தவன்; (பொம்மல் = பொலிதல்). பொருமல்>மொம்மல் = பொலிவு, பூரிப்பு, மிகுதி, பருமன் சற்று வேறுபட்டதை இனிப் பார்க்கப்போகிறோம். தேங்காய், பருப்பு, மிளகாய், மிளகு போன்ற கறிப் பொருள்களை அழுத்தும்போது அவை அரைபடும். அழுபடுவதை அழுமுதலென்றுஞ் சொல்வர். அழுமுதல்>அம்முதல் = அரைபடல்; அழுமி>அம்மி = அரைகல். அம்முதல் என்பது இன்னும் வளர்ந்து அமுங்குதலென்ற சொல்லை உருவாக்கும். அழுக்கமும், அமுக்கமும் உறவு கொண்டவை. இதுபோல் இழிந்தது கீழ்மைப்பொருள் உணர்த்தும். கீழ்வாய் இலக்கப் பின்னமான இழிமி>இம்மி = சிறு எண், சிறு நிறை என்று பொருள் கொள்ளும். அடுத்தசொல் பெருத்த இலக்கிய ஆட்சி கொண்டது. வாருங்கள் எனப் பொருள்படும் “வருமின்’ மெய்ம்மயக்கத்தில் வம்மின் ஆகும். வருமை = மணமகட்கு பெற்றோர் வழி வரும் சீர். இது திரிந்து வம்மையாகும். நெஞ்சு விரிந்து மூச்சிழுத்து அழுவது, விரிமல் என்றும் விம்மலென்றுஞ் சொல்லப் படும்.

அடுத்தது சற்று சிக்கலானது. அதற்கு முன் மலம் (=மதம்) என்ற சொல்லைப் புரிந்துகொள்ள வேண்டும். மதத்திற்கு நெறியென இன்று பொருள் சொல்வார். அதன் முதற்பொருள் மயக்கமே. மதி/நிலவை ஒட்டியே மயக்கப்பொருள் வந்தது. மதியென்பது மனக்கவலையை விதப்பாய்க் குறிக்கும். நில்மதி>நிம்மதி ஆகி மனக்கவலையின்மை குறிக்கும். சங்கதம்/பாகதத்தில் நில்>நிர் ஆகும். பலரும் நில்லை மறந்து, நிர்ரைப் பிடித்துத்தொங்கி, நிர்ரெனத் தொடங்கின் சங்கதச்சொல்லென்பார். நாமும் மயங்கி நிற்போம். நில், நிற்பு, நிப்பாட்டு ஆகிய சொற்களுக்கு stop பொருள் உண்டு தானே? நின்றுபோனது இன்மையைச் சுட்டுமே? நிர்மலம் = மனக்கவலையின்மை; இவ்வளவு சொற்களை ஏன் இங்கு சொன்னேனெனில், மெய்ம்மயக்கம் என்பது தமிழில் பரந்ததென்று காட்டுவதற்குத்தான்., 

முடிவாக் கம்ம என்ற சொல் சங்க இலக்கியத்தில் மிகமிக நாட்பட்ட (குறைந்தது 2300 ஆண்டுகள் முற்பட்ட) நற்றிணையிலும், குறுந்தொகையிலும் வரும். இதன்பொருள் மெலிந்த, குறைந்த என்பதே. ஐதே கம்ம யானே ”விரைவாய் நான் மெலிவேனாக!” - நற்.143-1; ஐதே கம்ம இவ்வுலகு படைத்தோனே ” இவ்வுலகு படைத்தவனே! விரைவாய் நான் மெலியட்டும்” - நற்.240-1; ஐதே கம்ம யானே, கழி முதுக்குறைமையும் பழியும் என்றிசினே - குறுந் 217 6-7 ”மிகப் பெரியவரும், சிறியவரும் பழிப்பாரோ என்றபடி நான் விரைந்து மெலியட்டும்” - குறுந் 217.6-7. ஐதே கம்ம, மெய்தோய் நட்பே “மெய்தோய் நட்பு விரைந்து மெலியட்டும்” - குறுந்.401,6   

இதற்கப்புறமும் கம்மி தமிழில்லை என்று சொல்லுவோமா?

அன்புடன்,

இராம.கி.


No comments: