Tuesday, June 01, 2021

medium

பலரும் இதை ஊடகம் என்றே மொழிபெயர்க்கிறார். சிலகாலம் முன்புவரை நானும் அப்படிப் புழங்கி இருந்தாலும், இப்பொழுதெல்லாம் அதை மாற்ற வேண்டுமென்றே நினைக்கிறேன்.

பெரும்பாலான இடங்களில் மிடையம் என்ற சொல்லையே நான் இப்பொழுது புழங்குகிறேன். ஏனென்றால் ஊடுதல் (to go in between or to osmose) என்ற வினை, ஒன்றின் ஊடே செல்லுதல் என்றே பொருள் கொள்ளும். இது வேதிப் பொறியியல் (chemical engineering), மற்றும் பூதி வேதியலில் (physical chemistry) osmosis என்ற செலுத்தத்திற்குச் (process) சரியாகப் பொருந்தி வரும். நுணுகிய துளைகள் இருக்கும் ஒரு படலத்தின் (film) வழியே சில மூலக்கூறுகள் (molecules) ஊடுவது உண்டு. அந்தச் செயல் ஊடுகை (osmosis) என்று இந்த இயல்களில் சொல்லப் படும். அந்த ஊடுகைக்குத் துணை போவது ஊடகம் (osmotic membrane) என்னும் மெம்புனை(membrane)யாகும். அந்த ஊடுகைக்கு எதிராக, அதாவது கரைபொருளுக்கு (solute) மாறாகக் கரைமத்தையே (solvent) ஊட வைக்கும் செலுத்தத்தை எதிர் ஊடுகை (reverse osmosis) என்று சொல்வார்.

medium என்பதற்கு ஈடாக, மிடையம் என்று நான் சொல்லுவதற்குக் காரணம் மிடைத்தல் என்பது மேற்பட்டுத் தெரிதல் என்று பொருள்படுவதால் தான். மிடையும் மேடும் ஒருபொருட்சொற்கள். மேட்டில் இருந்து எழுந்தது மேடை எனும் சொல். ஒரு குமுகாயத்தில் ஏற்படும் நிகழ்ச்சிகளை மேற்படுத்திக் காட்டுவது, மிடைத்துக் காட்டுவது மிடையம். இங்கே இவர்கள் வெறுமே விளக்குப் போட்டு நமக்குக் காட்டுகிறார்கள். "பொதுவாக மிடையக்காரர்கள் நிகழ்வுகளின் ஊடே சென்று செலுத்தம் செய்வது உகந்தது அல்ல" என்றே பலரும் சொல்லுகிறார்கள்.

தவிர அகநானூற்றின் ஒரு பகுதிக்குப் பெயரான மணிமிடைப் பவளம் என்ற சொல்லையும் இங்கே ஓர்ந்து பார்க்கலாம். மணிகளுக்கு இடையே கிடக்கும் பவளம் என்று அதற்குப் பொருள். மிடையம் என்பது குமுகாயத்தின் இடையே கிடக்கும் ஒரு நிறுவனம் தான்.

இப்படி இதைப் பற்றி நான் எழுதிக் கொண்டே போகலாம். எனக்கென்னவோ மிடையம் என்ற சொல் media-விற்குச் சரியான பொருள் தருவதாகவே படுகிறது. ஆனால், எந்தச் சொல் நிலைக்கும் என்று முன்கூட்டிச் சொல்ல நான் யார்? என்னால் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும்.

அன்புடன்,
இராம.கி.

No comments: