Thursday, December 03, 2020

Guitar, Sitar, Viola, Violin, Piano and Trumpet

 அண்மையில், ”guitar, violin, piano, sitar, trumpet முதலிய இசைக் கருவிகளின் தமிழாக்கம் என்ன?” என்று ஒரு நண்பர் கேட்டிருந்தார். பொதுவாய் மேலை யிசைக் கருவிகளுக்குத் தமிழ்ப்பெயர் காணுவது கடினம். தவிரப் பைம்புலத்தில், ஆங்கிலத் தாக்குற்ற இளைஞர் இக்கருவிப் பெயரை ஆங்கிலத்திலேயே புழங்க விரும்புவார். அதுதான் “கெத்”தா இருக்காம்! ”கருவியே வெள்ளைக்காரர் தந்தது; பெயர் மட்டும் தமிழிலிருந்து என்ன வாழுமாம்? - என்ற பேச்சும் எழுகிறது அப்படியோர் அடிமைத்தனம் ஊறிக் கிடக்கிறது. இந்நிலையில் இக்கருவிகளுக்கான பெயர்களை தமிழிற் சொல்ல யாரும் துடிப்பதில்லை. முதன் முறையாக இந்நண்பர் கேட்டதும் வியந்தேன். ”சரி, முயல்வோம்” என முனைந்தேன். 

guitar என்பது sitar இல் பிறந்ததாகவே பலரும் சொல்வார். sitar (n.) 1845, from Hindi sitar, from Persian sehtar "three- stringed," from si "three" (Old Persian thri-; see three) + tar "string," என்பார்.  சித்தாரில் 3 தந்திகள் மட்டும் உளதாவெனில், இற்றை நிலையில் அப்படியில்லை.  இந்தியாவில் ஏழும் ஏழுக்கு மேலும் சித்தார்த் தந்திகள் எண்ணிக்கையுண்டு. தவிர, ”தார்” ஈறு, தந்தியைத்தான் குறிக்கிறதா என்பதும் விளங்கவில்லை. தும்புரு, guitar, violin, sitar, viola,  Middle Eastern tambourines, வீணை போன்ற கருவிகள் எல்லாமே அடிப்படையில் lute வகைத் தந்திரிகளே. குழிப் பத்தரும் துளை மரத்தண்டும், பல்வேறு எண்ணிக்கையில் தந்திகளும் என தந்திரிக் கருவிகள் விதப்புறும், இக்கருவிகளுக்குத் தும்புருவே முந்துநிலை. தும்புரு (தும்பு +உரு) என்பது தமிழில் tube-shape ஐக் குறிக்கும் . அப்புறம் தந்து இருக்கும் கருவி தந்து + இரி. ) 

சித்தாரின் தோற்றம் இந்தியாவில் தொடங்கி, நடுஆசியாவிற்கு நகர்ந்ததெனச் சிலரும், ”ஈரான்/ நடு ஆசியாவின் (Sāsānian Iran, Middle East, Caucasus, and Central Asia) tanbur கருவியில் தொடங்கி dutār (“2-strings”), setār (“3-strings”), and cartār (“4-strings”) என வளர்ந்து, 15, 17 ஆம் நூ. வில் இந்தியா நகர்ந்ததென வேறு சிலரும்  சொல்வார். (தும்புருத் தந்திரி பற்றிய சொல்லாட்சி காணின், சித்தாரின் இந்தியத் தோற்றமே சரியெனத் தோற்றும்.)  இந்தியத் துணைக்கண்டத்தில் இரவிசங்கர், விலாயத்கான் என 2 வேறு இந்துசுத்தானிப் பள்ளிகள், தும்புரு, தபலை(>தபலா) இணைந்த சித்தார் இசையில், பெரும்பங்கு வகிக்கின்றன. கதக் நாட்டியத்திலும் பின்னிசையாய் சித்தார் முழங்கும்,  அளவு (size), வடிவம் (shape), தந்திகளின் எண்ணிக்கை (number of strings), தொனிசேர் கட்டகம் (tuning system) எனப் பலவற்றிலும் 2 பள்ளியாரின் சித்தாரும் வேறுபடும்  

தும்புருவை ஒத்து (சுருதி)க் கருவி என்பார். இசைநிகழ்வினூடே, தொடக்க சுரத்தையும், பொருந்து சுரங்களையும்  தொடர்ந்தொலித்து நிறைக்கும். (தம்புரா, தம்புரு, தம்பூர், தம்பூரி, தம்பூரு என்றும் சொல்வர்.) 1730 ஆம் ஆண்டில் எழுந்த குற்றாலக் குறவஞ்சி 5 ஆம் பாட்டில் ”கனக தம்புரு கின்ன ரங்களி யாசை வீணை மிழற்றவே” என்ற அடி தும்புருவைப் பேசும்.  ”இணையிலா இன்னிசை யாழ் கெழுமி இன்ப தும்புருவும் நாரதனும் இறைஞ்சி ஏத்த” என்பது நாலாயிரப்பனுவல் பெருமாள் திருமொழியின் (:651/1) முதலடி, ”நன் நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும் தம்தம் வீணை மறந்து” என்பது நாலாயிரப் பனுவல் பெரியாழ்வார் திருமொழி 3 ஆம்பகுதி 6 ஆம் பத்து 6 ஆம் பாட்டு. 2 பாட்டிலும் தும்புரு என்பது தும்புருக் கருவி கொண்ட தேவ பாணன். ”தும்புருக் கருவியும் துன்னி நின்றிசைப்ப” என்பது கல்லாடம் 81 ஆம் பாட்டு 18 ஆம் அடி.. இதேபாட்டில், 1000 தந்திகள் கொண்ட நாரதப் பேரியாழும், 9 தந்தி கொண்ட தும்புரு வீணையும், 100 தந்திகள் கொண்ட கீசகப் பேரியாழும், பேசப்படும்.  பாட்டில்வரும் தும்புரு வீணையின் விவரிப்பு சித்தாருக்கு நெருங்கிய தோற்றம் காட்டும். 

இதுபோக, “பாடுவார் தும்புருவும் நாரதாதி பரவுவார் அமரர்களும் அமரர்_ கோனும்” என்பது 7 ஆம் நூ. அப்பர் தேவாரம் 6 ஆம் திருமுறை 25 ஆம் பதிகம் திருவாரூர் திருத்தாண்டகத்தில் 8 ஆம் பாட்டில் தும்புரு முனிவர் பற்றிய குறிப்புண்டு. ஆக 1400 ஆண்டுகளுக்குமுன் தும்புரு ,  9 தந்திகள் அடங்கிய தும்புரு வீணை ஆகியன பற்றிய குறிப்புகள் தமிழிலுள்ளன.  எனவே சித்தாருக்கு நெருங்கிய இசைக்கருவியின் காலம் 1400 ஆண்டுகள். இவ்வளவு முந்தைக்குறிப்பு ஈரானிலுண்டா? தெரியவில்லை. இப்போதைக்கு எனக்குத் தெரிந்தவரை, தமிழ்க்குறிப்பே காலத்தால் முந்தையது.

திவாகரம் 1235 இல் யாழின் பெயர் குறிப்பிடுகையில், தந்திரி, வீணை, கின்னரம். விபஞ்சிதம், கோடவதி, வல்லரியோடு 6 தந்திகள் கொண்ட அறுசர யாழும் குறிக்கப்படும்.  இயம் என்ற சொல் தமிழில் இசைக்கருவிகளைக் குறிக்கும் பொதுச்சொல் ஆகும். பல்லியம். ஆமந்திரிகை போன்றன  orchestra வைக் குறிக்கும்.

தந்திரி பற்றி மேலே பேசினோம் வீணை இன்றுமுளது. கின்னரம் = கில்லும் நரம் (கிளரும் நரம்பு). mandalin போல் ஒன்றிற்கு அது பொருந்தலாம். விபஞ்சிதம், இது தமிழா, சங்கதமா தெரியவில்லை.   கோடு (=துளையுள்ள தண்டு) பதிந்தது கோடபதி>கோடவதி; அரித்தல் = இடைவிட்டு நடுங்கும்படி, அதிரும்படி, ஒலித்தல் வல்+அரி = வல்லரி; தந்தியைச் சுண்டி ஒலிய வைப்பதை வல்லரி-த்தல் எனலாம். அரித்தலைக் குயில்- தல் = குயிற்றல் = இழைத்தல், சுதித்தல், சுண்டுதல், தெறித்தல், விதுத்தல் (= விதிர்த்தல், விதுலல்) என்றும் சொல்லலாம் 

தும்புருவைத் துவர்ப் (-துளைப்) பொருளில் துவரை என்றுஞ் சொல்லலாம். கூர்ச்சரத்தில் துவரையம்பதி துவாரகை எனப்பட்டது. கருநாடகத்திலும் ஒரு துவாரசமுத்திரம் இருந்தது. துவரைக் கடற்கரையில் ஒரு தோரணம் இருந்ததாய்த் தொன்மமுண்டு, (துவர்>தோர்>தார்; தோர்+அணம் = தோரணம்). தோரணத்திற்கு இன்னொரு பெயர் கவாடம். கன்னியாற்றங்கரையில் இரண்டாம் சங்கம் இருந்ததாய்ச் சொல்லப்படும் கவாடபுரத்திலும் இதேபோல் கடற்கரையில் ஒரு தோரணம் இருந்ததாம். ஆக guitar, sitar ஆகியவற்றில் வரும் tar என்பது துவரை தான். துளையுள்ள தண்டு.   தும்புரு போன்ற சொல்லாட்சி.   

இதுவரை சொன்ன செய்திகளின் அடிப்படையில் 4 தந்திரிகளைக் கீழ்க்கண்ட படி அழைக்கலாம். இவை தமிழ் முறையில் பொருளும், இந்தையிரோப்பியப் பிணைப்பும் காட்டும். guitar என்பதைக் குயில் துவரை (தெறிக்கக் கூடிய தந்திகள் கொண்ட துவரை) என்றும், sitar என்பதைச் சுதித் துவரை (சுதிக்கக் கூடிய துவரை) என்றும், viola என்பதை விதுலம் (விதுலக் கூடிய பெரிய தந்திரி) என்றும், violin என்பதை விதுலி (விதுலக் கூடிய சிறிய தந்திரி. விதுலி = fiddle. உரோமானியப் பலுக்கலில் விதுல் என்பது வியுல் என்றாகி viol) என்றும் சொல்லலாம்.

இனித் தும்புரு வகை சேராத இன்னொரு வகைத் தந்திரியும் உண்டு. இதில். 2,3 சுர மண்டிலங்கள் சாரும் வகையில்(ஒவ்வொன்றும் 12 தந்திகள் கொண்டது. 3 மண்டிலம் எனுபோது) 36 தந்திகள் கூட அமையலாம். இத் தந்திகளை வெவ்வேறு பிட்டிகை (pitch) களில் சின்னஞ்சிறு சுத்தியல்கள் கொண்டு அடிக்கும் போது வெவ்வேறு சுரங்களை வெளிப்படுத்தும். ஒவ்வொரு சுத்தியலையும் வெவ்வேறு மாழைக் கயிறுக:ளால் பொத்தான்களோடு பிணைத்து, எல்லாப் பொத்தான்களையும் ஒரு பலகையில் அணையுமாறு செய்வது பலகணை [ piano (n.) "percussion musical instrument in which tones are produced by blows of hammers upon stretched strings, the hammers being operated from a keyboard," 1803, from French piano (18c.), Italian piano, shortened form of pianoforte. Essentially, the pianoforte is a large dulcimer with a keyboard; Historically it replaced the clavichord and harpsichord, which were keyboard-instruments more akin to the harp than to the dulcimer.]

கடைசியில் வருவது தந்திரிக் கருவியே அல்ல. அது ஊது கருவி. அதுவும் தூம்பு கொண்டது தான். சிறிய தூம்புகளைத் தமிழில் தூம்புழை என்றழைப்போம். trumpet = தூம்புழை.

இக்கட்டுரை இசைக்கருவிகள் செய்யும் அடவு (design), கட்டுமானம் (construction), இசைநுணுக்கம் ஆகியவற்றை விளக்கும்படி எழுந்ததல்ல.  தமிழோடு பொருளால் பொருந்தும்படி இணைச்சொல் விளக்கந் தரும் கட்டுரை. எனவே சுருங்கச் சொன்னேன்.

அன்புடன்,

இராம.கி.


No comments: