Wednesday, December 16, 2020

குருதயமும் (heart) குருதியும் (blood) - 3

 (குருதி, எருவை, இரத்தம், உதிரம்), (சுடுவன்), (புண்ணீர்), (செந்நீர், சோரி, சோணிதம்), (நெய்த்தோர், கறை  என்ற 11 சொற்களை blood இன் தொடர்பாகத் திவாகரத்தின் 554 ஆம் நூற்பா குறிக்கும். மேலும், செம்பால், புலானீர் என்ற 2 சொற்களை பிங்கலமும், சூடாமணி நிகண்டும் குறிக்கும். அச்சொற்களை 5 தொகுதிகளாய்ப் புரிந்துகொள்ளலாம்) 

முதல்வகைச் சொற்களான குருதி, எருவை, இரத்தம், உதிரம் என்பவை குருதி யோட்ட ஒலியால் எழுந்தவை. நெஞ்சில் காதுவைத்துக் கேட்டால், குளுகுளு> குடுகுடு> குருகுரு ஒலிக்குறிப்பில் இரத்தவோட்டத்தை உணர்வோம். இதன்வழி ஓர்ந்தால், குரு-தல் வினை, ஓடுவினைக்குப் பகரியாகலாம். குருதும் (=ஓடும்) நீர்மம் குருதியாகும். படுதல்> படுவுதல் ஆவது போல், குருதலின் பொருள் கெடாது, குருவுதlலாகலாம்; குருவுதல்>கெருவுதல் என்றும் திரியலாம். கெருவதலிற் ககரங்கெட்டு, எருவுதல்>எருவை ஆகும். குருத்தல்> கெருத்தல்> இருத்தல்> இரத்தல் திரிவில், ககரங்கெட்டு இரத்தமாகும். (இரத்தம் X அரத்தம் வேறுபாட்டிற்குக் கீழே வருவேன்.) அடுத்துக் குளுகுளு>குடுகுடு என்பது குதுகுது ஆகலாம். ”குதி” வினை இதனிற் பிறக்கும். குதி> குதிர்> உதிர்> உதிரம் என்பதும் ககரங்கெட்டு உருவானதே. 

குருதிக்கான எல்லாச் சொற்களையும் செந்நிற வழிப் பெற்றதாய் ஒருகால் எண்ணினேன். https://valavu.blogspot.com/2020/07/blog-post.html, இப்போது என் புரிதல் மாறி விட்டது, எல்லா விலங்குக்குருதிகளும் சிவப்பில்லை. இருக்க வேண்டியதும் இல்லை. ”அரத்தம் சிவப்பு” என்பது வேட்டுவ மாந்தப் புரிதலில் முகன்மைக் குறிப்பில்லை. சிவப்பு, மாந்தருக்கு நேர்ந்த விதப்பு. விலங்குக் குருதிகள்  சிவப்பு (red), ஊதா (blue), பச்சை (green), மஞ்சள் (yellow), நரங்கை (orange), நீலம் (violet) எனப் பல நிறங்களிலும், நிறம் இலாதும் உண்டு. சில விலங்குகளின் அரத்தங்களில் செம்மைக் கோளங்களும் (hemoglobin), சிலவற்றின் அரத்தங்களில், வேறுவகை உய்ப்பு நிறமிகளும் (respiratory pigments), இன்னும் சிலவற்றில் உய்ப்பு நிறமிகளே இல்லாமலுமுண்டு, ஆனால் எல்லா விலங்குகளும் அரத்தவழி அஃககம் நகர்த்தும் (to transport oxygen) திறன் கொண்டவை.  விலங்குகளை வேட்டையாடிய மாந்தன் இதை உணர்ந்திருப்பான். சிவப்பால் குருதிக்குப் பெயர் வந்தது என்பது பட்டறிவிலாப் பார்வை. 

அடுத்தது சுடுவன். வெட்டுற்ற உடலில் வெளிவரும் குருதி, சுற்றுச்சூழல் வெம்மையை விடச் சற்றதிகம் சூடு காட்டும். சுடும் காரணத்தால் ஏற்படும் சொல் சுடுவன். புண் என்பதை 2 விதம் புரிந்துகொள்ளலாம். ஒன்று, புல்> புள்> புண்= திரண்ட தசை. இன்னொன்று புண் = வெட்டுக்காயம். புண்ணில் இருந்து வெளிப்படுவது புண்ணீர். 4 ஆம் தொகுதி மாந்தக் குருதியின் சிவப்பு நிறத்தால் எழுந்தது. செம் எனும் முன்னொட்டுப் பொருள் குருதியால் எழுந்ததல்ல; எரி/தீ குறித்த சுல் எனும் வேர்ச்சொல்லால் எழுந்தது. செந்நீர், செம்பால் போன்றவை சுல்> செல்> செள்> செய்> செய்ம்> செம் என்றெழுந்தவை. சுல்> சுள்> சொள்> சோள்> சோர்> சோரி= செங்குருதி. சுல்> சுள்> சொள்> சோள்> சோண்> சோணிதம்= செங்குருதி. சோணமலை= அருண மலை. சோணேசன்= அருணேசன்= அண்ணாமலையான், செந்நீர், செம்பால், சோரி, சோணிதம் போன்றவை மாந்தக் குருதி குறிக்கும் விதப்புச் சொற்கள்; குருதிக்கான பொதுச்சொற்கள் அல்ல. 

அடுத்தது நெய்த்தோரும், கறையும். உடம்புவிட்டு வெளியேறும் குருதி, நெய்ப் பசை காட்டும். துவர்தல்= ஒட்டல், உலர்தல். தரையில் விழுந்த குருதித்துளி தரையில் ஒட்டிக் காய்ந்து போகும். நெய்த்துவர்> நெய்த்தோர்.  இனி, காய்ந்த குருதி கறுத்துக் கறையாகும். அடுத்தது புலால்நீர். இதுவும்  ஒலிக்குறிப்பில் எழுந்ததே. (முதற்பகுதியில் ”குளுக், பளுக்” எனும் ஒலிக்குறிப்பைச் சொல்லி பளுக்கை blood-ஓடு தொடர்புறுத்தினேன். ”புலபுல” என்பது விரைவுக் குறிப்பு. “புலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்” என்பார் பட்டினத்தார். (178 ஆம் பாட்டு) (”பொலபொலென ஓடிவந்தான்”). புலவுதல்= ஓரிடம் விட்டு விலகல். தலைவி தலைவனை விட்டு, ஊடலால் விலகினாள்: புலவியது (= இடம்விட்டு விலகியது) புலவு= குருதி ‘புடை அவிழ்ந்த கூந்தல் புலவுத்தோய (சீவக 293) புலவு, புலா  என நீளும். புலா ஆலியது (=நிறைந்தது) புலால். (உடல் தசைக்கு நுண்குழாய் முலம் சத்துக் கொணர்வது குருதி.  புலால் நீர் = புலானீர் = குருதி.  குருதி போகத் தசையையும் அதன் திரட்சிப் பொருளில் புலவு, புலால் என்ற சொற்களால் அழைப்பர்.

புலாலுக்குப் புலை என்றும் பெயருண்டு, புலை= ஊன் ”புலையுள்ளி வாழ்தல்” இன். நாற். 13. புலைசு= புலால். புலைத்தொடர்பால், புலையன்/ஞன், புலைச்சி என்ற சொற்கள் எழுந்தன. கொல்லாமை விழைந்த செயினம் புலைத் தொழிலை  இழிவாய்ப் பார்த்தது. செயினம் மறுக்கவிழைத்த உத்தர மீமாஞ்சையும், சிவமும், விண்ணவமும், சமயப் போட்டியில் வெற்றி பெற, இதேநிலை எடுக்கும் தேவைக்குத் தள்ளப்பட்டன. சாதிநிலை இறுகிய பொ.உ. 3 ஆம் நூற்றாண்டில், இதுபோன்ற தவறான கண்ணோட்டங்கள் தமிழ்க் குமுகாயத்தில் பதிந்து போயின. புலத்து என்னும் இந்தையிரோப்பியச் சொல்லிற்கும் மேலே காட்டிய புலவு, புலா, புலால், புலை போன்ற சொற்களுக்கும் ஏதோவொரு உறவு இருப்பது போல் தான் தெரிகிறது. 

blood (n.) Old English blod "blood, fluid which circulates in the arteries and veins," from Proto-Germanic *blodam "blood" (source also of Old Frisian blod, Old Saxon blôd, Old Norse bloð, Middle Dutch bloet, Dutch bloed, Old High German bluot, German Blut, Gothic bloþ), according to some sources from PIE *bhlo-to-, perhaps meaning "to swell, gush, spurt," or "that which bursts out" (compare Gothic bloþ "blood," bloma "flower"), from suffixed form of root *bhel- (3) "to thrive, bloom." But Boutkan finds no certain IE etymology and assumes a non-IE origin. இதே கருத்தை பேர்பெற்ற ஆங்கிலச் சொற்பிறப்பியலார் Skeat உம் சொல்வார், 

Blood, gore (E) M.E. blod,blood Chaucer, C.T. 1548,A. S. blud (Grein). + Du. bloed. + Icel. blod. + Swed. blod. + Goth. bloth. + O. H. G. pluot, ploot. A. S. blowan, to blow, bloom, flourish (quite a distinct word from blow, to breathe, puff, though the words are related); cf. Lat. flarere, to flourish; see Curtius, i. 375. See Blow (2). ^f Blood seems to have been taken as the symbol of blooming, flourishing life. Der. blood-hound, blood-shed, blood-stone, blood-y, blood-i-ly, blood-i-ness ; also bleed, q. உண்மை எங்கோ ஒளிந்துகொண்டு உள்ளது.

இனி அரத்தம் என்ற சொல்லிற்கு வருவோம். இது எரி/தீக் கருத்தில் சுல்> உல்> உல> அல> அர என்ற வளர்ச்சியில் சிவப்புப் பொருளில் உருவானதாகும்.  ”அரத்தம் உடீஇ அணி பழுப்ப பூசி” என்பது திணை150:144/1. இதில் சிவப்பு ஆடை பேசப்படுகிறது, “அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ” - சிலம்பு, மது:14/86, “பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன்” - சிலம்பு, மது:22/46 என்ற இரு காட்டுகளில் சிவப்புப் பட்டாடை பேசப்படுகிறது. இதுவரை அரத்தம் = குருதி என்ற பொருளைக் காணோம்.   அடுத்து, 8 ஆம் நூற்றாண்டு சீவக சிந்தாமணியில் 

இன் அரத்த பட்டு அசைத்து இந்திரற்கும் புகழ்வு அரிதே - சிந்தா:1 173/4

அரத்த வாய் பவள செம் தாள் பெடை அன்னம் அழுவது ஒத்தாள் - சிந்தா:5 1385/4

பரவி ஊட்டிய பஞ்சு அரத்த களி - சிந்தா:12 2396/2

அள்ளி ஏந்திய அரத்த அல்குலார் - சிந்தா:13 2685/

அரத்தகம் அகம் மருளி செய்த சீறடி அளிய தம்மால் - சிந்தா:12 2459/1

அட்டு ஒளி அரத்தம் வாய் கணிகை அல்லது - சிந்தா:1 98/2

அ நுண் துகில் கல் அரத்தம் அல்குல் அது வருத்த - சிந்தா:7 1783/1

அல்லலுற்று அரத்தம் ஆர்ந்த சீறடி தொழுதிட்டானே - சிந்தா:9 2084/4

அஞ்சன நிறம் நீக்கி அரத்தம் போர்த்து அமர் உழக்கி - சிந்தா:10 2239/1

உகிர் வினை செய்து பஞ்சி ஒள் ஒளி அரத்தம் ஊட்டி - சிந்தா:12 2540/

என்ற எல்லாக் குறிப்புகளிலும் சிவப்பு நிறமே பேசப்படுகிறது. குருதி பற்றிய பேச்சே காணோம். அதாவது அரத்தத்திற்கு 8 ஆம் நூற்றாண்டுவரை குருதிப் பொருள் கிடையாது போலும்.  முதன்முதல் கம்பனின் இராமகாதையில் தான் இரத்தமும் அரத்தமும் தம் பொருளில் ஒன்று கலக்கின்ற்ன. 

அரத்த நோக்கினர் அல் திரள் மேனியர் - பால:14 37/1

வாள் அரத்த வேல் வண்டொடு கொண்டைகள் மயங்க - அயோ:1 53/3

அகல் மதில் நெடு மனை அரத்த ஆம்பல்கள் - அயோ:4 176/3

புக்கிலாதவும் பொழி அரத்த நீர் - கிட்:3 48/3

அண்ணல் அ இராவணன் அரத்த ஆடையன் - சுந்:3 40/3

பொங்கு அரத்த விழியோர் புடை சூழ - யுத்1:11 10/4

அண்ணல் வாள் அரக்கர்-தம் அரத்த பங்கிகள் - யுத்2:15 103/2

சேப்புற அரத்த செ வாய் செம் கிடை வெண்மை சேர - யுத்3:25 15/2

நீள் அரத்தங்கள் சிந்தி நெருப்பு உக நோக்கும் நீரான் - ஆரண்:10 164/2

அரத்தம் உண்டனையே மேனி அகலிகைக்கு அளித்த தாளும் - பால:21 5/1

பொங்கு அரத்தம் விழி வழி போந்து உக - ஆரண்:7 22/2

கம்பனுக்கு முன்னால் இரத்தம் வேறு, அரத்தம் வேறு என்பது வியப்பைக் கொடுக்கிறது.  திவாகரம் கூட அரத்தம் என்பதைச் “செங்குவளை, பவளம், அரக்கு, சிவப்பு” என்பதற்கே ஒப்பு ஆக்கும். பிங்கல நிகண்டே அதன்  3078 ஆம் நூற்பாவில், “கடம்புஞ் சுடுவனும் கழுநீர்ப் பெயரும் அரக்கும் செந்நிறமும் அரத்த மாகும்” என்று முதன்முதல் சுடுவனை அரத்தத்தோடு சேர்க்கும்.  இரு வேறு சொற்பிறப்பில் உருவான சொற்கள் பிங்கலத்தின் காலமான 10 ஆம் நூற்றாண்டில் தான் ஒன்றாகியுள்ளன. இன்றோ, ”இரத்தமே தப்பு” என்று சொல்லும் நிலைக்கு நம்மில் சிலர் வந்துள்ளோம். (நானும் ஒருகால் அப்படி எண்ணினேன். இப்பொழுது தவறென உணர்கிறேன்.) இருவேறு சொற்கள் ஒன்றானதை நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். 

இனி அடுத்த பகுதியில் தசை பற்றிய விளக்கங்களையும், குருதய உள்ளுறுப்புகளையும், குளுகல்(clotting)பற்றியும், இந்தையிரோப்பியன் மொழிகளிலுள்ள குருதி தொடர்பான சொற்களையும் பார்ப்போம்.

அன்புடன்,

இராம.கி.


1 comment:

இ.பு.ஞானப்பிரகாசன் said...

மிகவும் வியப்பான தகவல்கள்! வழக்கம் போலவே உங்கள் ஆழ்ந்த ஆராய்ச்சி! நன்றி ஐயா!