Saturday, November 28, 2020

”சைவம், வைணவம்” என்னாது ”சிவம், விண்ணவம்” என்று ஏன் நாம் சொல்லவேண்டும்?

திரு. சிவக்குமார் என்பார் முகநூலில் “சிவ_சமயம் சைவ_மதமானது எப்படி? விண்ணவ_சமயம் வைணவ_மதமானது எப்படி?” என்று கேட்டிருந்தார். இதுபோன்ற கேள்விகள் பலருக்கும் இருக்கின்றன.  அதற்கான விளக்கம் இது. 

தமிழ்போல் ஒட்டுநிலை மொழிகளில் (agglutinative languages) ஒரு பெயரை இன்னொரு பெயரோடு சேர்ப்பதற்கும் வேற்றுமைகளைப் பயன்படுத்துவது உண்டு. அப்போது முதல் பெயரடியை அப்படியே வைத்து அடுத்து வேற்றுமை உருபுகளையும் தேவைப்பட்டால் சில தொடர்களையும் நுழைத்துப் பின் இரண்டாம் பெயரை வைப்போம். சுருக்கம் கருதிப் பின்னால், வேற்றுமைகளைத் தொகுக்கும் போது இலக்கணம் அறியாத சிலர் தடுமாறுவர். முதலில் 3 இகரமுதல் சொற்களைப் பார்ப்போம். 

காட்டு: சிவநெறி = சிவனைச் சார்ந்த நெறி என்பதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”சிவநெறி” என்போம். (சிவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார். நெறியைப் போன்று மதமும் தமிழே. சமயமும் தமிழே. நெறி, சமயம் ஆகியவை தமிழோடு நின்றன. மதம் வடமொழிக்குக் கடன் போனது. அதைத் தவிர்க்க வேண்டாம். கடன்போன சொற்களை எல்லாம் நாம் தவிர்க்கத் தொடங்கினால் நமக்குத் தான் இழப்பு. 

விண்ணவநெறி = விண்ணவனைச் சார்ந்த நெறி. மாயோன்= கருத்தன். ”புவி நிலவுகின்ற பெருவெளியும் அவனே” எனுமுணர்வு நம்மில் சிலருக்குண்டு. விரிந்த பெருவெளியானை விரி> விரிநன்> விண்ணன் என்பதும் தமிழே. விண்ணனை விண்+ அவன் = விண்ணவன் எனலாம். விண்>விண்டு, விண்ணு என்றும் இச்சொல் நீட்சி பெறும். விரிநன்= விரிநு+அன் என்றுணர்ந்து ”விரிநு” என்பதைக் கடன்வாங்கி, ”ஷ்” நுழைத்து, விரிஷ்நு>விஷ்ணு என வடவர் சொல்வர். இது அவருடைய ஒலிப்புப் பழக்கம். விண்ணவ நெறி என்பதில் ”ஐ” வேற்றுமை உருபையும், ”சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி விண்ணவ நெறி என்போம். (விண்ணவ எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை இரண்டாம் வேற்றுமைத் தொகை என்பார்.

பித்த நிலை = பித்தனின் கலங்கிய நிலை. இதில் இன் எனும் ஐந்தாம் வேற்றுமை உருபையும், ”கலங்கிய” என்ற தொடரையும் தொக்கி ”பித்தநிலை” என்போம். (பித்த எனும் பெயரடியை நாம் திரிப்பதில்லை.) இப்பழக்கத்தை ஐந்தாம் வேற்றுமைத் தொகை என்பார். பித்த நிலை = பித்த ஸ்திதி (sthitiḥ) என்று சங்கதத்தில் ஆகும். 

அடுத்து  3 உகரமுதற் சொற்களைப் பார்ப்போம்.

குரவத் துரியன் = குரவ குலத்தைச் சார்ந்த துரியன். குரவர்= பெரியவர். சிவநெறிக் குரவர் என்று சம்பந்தர், அப்பர், சுந்தரர், மணிவாசகரைச் சொல்கிறோமே? எண்ணிப் பாருங்கள். குருக் குலம் என்பது 3000 ஆண்டுகளுக்கு முன்னால் பஞ்சாபுப் பகுதியில் இருந்த பெரிய குலம். அதைக் குரு குலம் என்றே சொல்லிவந்தார். (தமிழில் க் சேரும். சங்கதத்தில் சேராது.) அதில் உறுப்பினரைக் குரவா என்பார். தமிழில் குரவர் எனலாம். குரவத் துரியன் என்பது ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும் அத்து எனும் சாரியையும், ”குலஞ் சார்ந்த” எனும் தொடரையும் தொக்கி. ”குரவத் துரியன்” என்கிறோம். துரியன் ஒரு குரவன். 

புத்தநெறி = புத்தனைச் சார்ந்த நெறி. புத்தன் = போதி மரத்தின் அடியில் ஞானம் (புலனறிவு) பெற்றவன். புத்தர். புத்தம் = புலனறிவு = ஆசையே, பற்றே, புலனுகர்ச்சியே துன்பத்தின் காரணம் என்னும் புரிதல். இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”புத்தநெறி” என்போம். 

குமரம்>குமாரம் என்பது முருகனைச் சார்ந்த நெறி. குமரன் = முருகன், ”குமாரன்” என்று நீட்டிச் சொன்னது சங்கதம் போனது. ”குமரன்” தமிழில் தங்கியது. இதில் ஐ எனும் இரண்டாம் வேற்றுமை உருபையும், ”சார்ந்த” என்ற தொடரையும் தொக்கி ”குமாரநெறி” என்போம்.  

இனி வடமொழி இலக்கணத்திற்கு வருவோம். இதில் வேற்றுமை உருபுகளையும், இடைவரும் சொற்றொடர்களத் தொக்குவதும் போக, பெயரடியையும் திரிப்பார். பெயரடியைத் திரிப்பது சங்கதத்தில் ஒரு முகனப் பழக்கம். இகரமுதல் அதன் வருக்கமான ஐகாரமாயும். உகரமுதல் அதன் வருக்கமான ஔகாரமாயும். அகரமுதல் ஆகாரமாயும் அங்கு திரியும்.

சிவமதம் சங்கதத்தில் சைவமத என்றும். விண்ணவமதம். சங்கதத்தில் வைஷ்ணவமத என்றும், பித்த ஸ்திதி (sthitiḥ), சங்கதத்தில் பைத்ய ஸ்திதி என்றும்,  குரவத் துரியன் சங்கதத்தில் கௌரவ துரிய என்றும், புத்தமதம் சங்கதத்தில் பௌத்தமத என்றும், குமரமதம் சங்கதத்தில் கௌமார மத என்றும் திரியும்.  

நாம் ஏன் சங்கத இலக்கணம் பின்பற்ற வேண்டும்?  நாம் தமிழ் இலக்கணம் பின்பற்றுவோம். அதிலேயே கூட நாம் பெரும் தப்புகள் செய்கிறோம். நம் மொழியை நாம் சரியாகக் கையாள வேண்டாமா?

அன்புடன்,

இராம.கி.

  


No comments: