Monday, December 28, 2020

Kidney

----------------------------

kidney யைச் சிறுநீரகம் என்றே பொதுப்புலனில் சொல்வர். அதுவும் பொருத்தம் இலாத உப்புக்குச் சப்பாணிச் சொல் தான். (இயக்குநர் என்பது மாதிரி அச் சொல். இயக்குநர் என்பார் operator-ஆ, director- ஆ? ) அது என்ன சிறுநீர்? உடலில் இருந்து வேறேதும் பெருநீர் வெளியாகிறதோ? - என்ற கேள்வியெழும்.  சிறுநீர் என்பது ஒருசில உப்புகள் கரைந்த பால்மமே (plasma) அதை உமரிநீர் எனலாம். (உப்புக்கு இன்னொரு பெயர் உமரி) உமரிநீரைக் கையாளும் உறுப்பு = உமரி நீரகம். சிறுநீரகத்தை விட இது பொருத்தமான சொல். ஆனால் மருத்துவத்தில் பயனாகும் Nephrologyக்கு இது உதவாது. உமரிநீரகத்திற்குச் சரியான உடற் கூற்றுப் பெயரொன்றை நாம் தர வேண்டும். முயன்றால் கிடைக்கும். “கலைச் சொல்லே வேண்டாம்; எமக்குச் சிறுநீரகம் போதும்” என்று பாமரத்தனம் நாடுவோர்க்கு நான் சொல்வது விளங்காது.

பல்வேறு சிறு தூம்பு (tube)களும் அதைச்சுற்றி ஒரு கூடுங் (shell) கொண்டது உமரிநீரகமாகும். தூம்புகளின் வழிச்செல்லும் அரத்தத்தின் வேதிப்பொதுள் (chemical potential) தூண்டலால்,  சிவப்பணு , வெள்ளணு, ஒருசில பெருதங்கள் (proteins) ஆகியவற்றைத் தவிர, மிஞ்சியுள்ள பால்மம், உப்புகள் போன்றவை தூம்புப் படலம் (tube membrane) வழி, நூகமாய் (நுண்ணிதாய்) ஊடுறுவி, கூட்டுப் பக்கம் [ஊடுதலை ஊறுதல் எனலாம்] உமரி நீராய் வெளிப்படும், எனவே  உமரி நீரகத்தை நூவூறகம் என்பது மிகச் சிறந்த சொல்லாகும்.]

------------------------------------

என்று https://valavu.blogspot.com/2020/04/case.html இடுகையில் நான் சொன்னேன். இன்று வேறு ஏதோ தேடியபோது, ”நம்முடைய குழந்தை மருத்துவ முறையிலே ரோசனை, கஸ்தூரி முக்கியமானவை. ரோசனை என்பது பசுவினுடைய அட்ரினல் கிளாண்ட். கஸ்தூரி என்பது கஸ்தூரி மானுடைய அட்ரினல் கிளாண்ட். இக்கிளாண்ட்களை மருந்துகளோடு சேர்த்துக் கொடுத்தால் குழந்தைக்கு நோய்யெதிர்ப்புச் சக்தி உருவாகும்” என்ற பேரா. தொ. பரமசிவனின் கருத்தை திரு. ஒப்பிலாமணி அழகரின் பதிவில் படித்தேன்.  தொ.ப.வின் எந்த நூலில் இது வருகிறதென்று எனக்குத் தெரியவில்லை.  என் சிந்தனை ”ரோசனை” என்ற சொல்லின் தமிழ்த் தொடர்பு பற்றியது.  

கோரோசனைக்கு, ”பசு வயிற்றில் எடுக்கும் மஞ்சள்நிற மணப்பண்டம்” என அகரமுதலிகளில் சொல்வார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் ”கோ+அரிசனம் (மஞ்சள்)” என்று பிரித்து ”மாட்டின் மஞ்சள்நிற மணப் பொருள்” என்பார்.  ”கோரோசனை= மாட்டின் adrenal gland" எனும் Multi-disciplinary பார்வையை அங்கு கொடுப்பதில்லை. புதலியல், விலங்கியல், உடலியல் என எதையும் நமக்கு விளக்கிச் சொல்லார்.  இது ஒரு குறை. நம்மூர் அகரமுதலி எடுவிப்போர், பெரும்பாலும் மொழியறிவு கொண்ட சிறு குழுவினர் மட்டுமே. எடுவிப்போர் குழு (editors grpup)பெரிதாய் இருக்கும் ஆங்கில அகரமுதலிகளில் இக்குறைபாடு இருக்காது. கோரோசனைக்குப் பொருள்சொல்ல, அகராதிக் குழுவுக்கு நாட்டு மருத்துவ அறிவு வேண்டும் . 

ரோசனை என்ற சொல் எப்படி எழுந்தது? உல்>அல்>அர்>அரி = அழல், பொன், மஞ்சள் ஆகியவற்றின் நிறம். சிவப்புக் கலந்த அழல் நிறம் என்றுங் குறிப்பர்.  ”அரித்தேர் நல்கியும்” என்பது பெரும்பாண் 490 . அரித்தேர் = பொற்றகடு வேய்ந்த தேர். தவிர அரி= மடங்கல் என்பது மஞ்சள்நிற சிங்கத்தைக் குறிக்கும். அரன்= அழல்நிறச் சிவன், ”அரோகரா” என்பது சிவனை வேண்டிக் கூக்குரல் எழுப்புவது. அரக்கு = பொன் கலந்த சிவப்பு. அரியனம்>அரிசனம் = மஞ்சள். அரியகம்>அரிசகம் = மஞ்சள்நிறச் சரக்கொன்றை.  அரியாசம் = நறுமணச் சரக்கு (சிலம்பு 5:14 விற்கான அரும்பத உரையில் வரும் குறிப்பு.) அருணன் என்றாலும் அழல் நிறத்தவனே. ஐம்பூதங்களில் ஒன்றான நெருப்பெனும் பூதத்தை உணர்த்தும் சிவலிங்கம் அருணமலை>அண்ணாமலையில் உள்ளது. “அண்ணாமலைக்கு அரோகரா!” என்பது சிவநெறியார் முழக்கம்.  

சிறுநீரகம், உமரிநீரகம், நூவூறகம் என்று நாம் சொல்லும் உடலுறுப்பு அருணை நிறத்தில் உள்ளதால் அதை அருணையென்றும் சொல்லலாம். பேச்சு வழக்கில் அருணை= அருயனை> அருசனை> ரோசனை என்றமையும்.  வடபால் மொழிகளிலும் இக் கோரோசனை பயிலும்.  பேச்சுவழக்கில் ”கோரோசனை” என்கையில், நல்ல தமிழில், மாந்தனுக்குரிய உமரிநீரகத்தை “அருணை” என்று பயிலக்கூடாதா? kidney க்கு  உமரிநீரகம், நூவூறகம், அருணை என 3 சொற்கள் நம்மிடமிருந்தும், ”சிறுநீரகத்தை” ஏன் பயில்கிறோம்? தெரிய வில்லை.   

ஆங்கிலத்தில் renal (adj.) 1650s, from French rénal and directly from Late Latin renalis "of or belonging to kidneys," from Latin ren (plural renes) "kidneys," a word of of uncertain etymology, with possible cognates in Old Irish aru "kidney, gland," Welsh arenn "kidney, testicle," Hittite hah(ha)ari "lung(s), midriff." Also possibly related are Old Prussian straunay, Lithuanian strėnos "loins," Latvian streina "loins." "The semantic shift from 'loins' to 'kidneys' is quite conceivable" [de Vaan]என்று சொல்வர். “uncertain etymology” என்பதைக் கூர்ந்து கவனியுங்கள். 

அருணை கொண்டு, ஒருசில கூட்டுச்சொற்களுக்கும் வழிகாணலாம். renal disease= அருணை நோய், renal failure= அருணைப் பழுது. renal calculi= அருணைக் கற்கள். renal function= அருணை வங்கம். adrenal gland= அருணையடிச் சுரப்பி. (அருணையை அடுத்துள்ள சுரப்பி). renin = அருணையம் (அருணையடிச் சுரப்பியில் உள்ள ஊறல் -hormone).

அன்புடன்,

இராம.கி. 




No comments: