புறநானூற்றில் ஈசனிலாச் சாங்கியம் பார்த்த நாம் அடுத்துப் பரிபாடலில் பேசப்படும் ஈசானச் சாங்கியத்தைக் காண்போமா? (கவனங் கொள்க. பரிபாடலின் காலம் பொ.உ.மு.50. விண்ணன் தாயன் பாடலுக்கு ஒரு தலை முறை அடுத்தது.) ஈசான சாங்கியத்தின் வழி திருமாலைக் குறித்த பரிபாடல் 3, 77-80 ஆம் அடிகள் வெளியிடும் அழகு வியக்கவைகிறது. எண்களின் வழியே சாங்கியம் படிக்கும் போது நம்மை அசத்துகிறது. இன்னொன்று சொல்ல வேண்டுமே? zero விற்காகத் தமிழில் வெளிவந்த முதற்சொல்லாய் ”பாழ்” இதில் பயில்கிறது. பூழ்> போழ்> பாழ் என இச்சொல் எழுந்தது. பூழியத்தை இற்றைத் தமிழர் பூஜ்யம் என்கிறார். சங்கதம் பழகுதற்கு மாறாய், பூழ்/பூழியம், சுழி./சுழியம், அற்றம் என ஏதோவொரு தமிழ்ச் சொல்லைத் தமிழர் பழகலாம். தமிழ்ச்சொல் வாய்க்குள் நுழையக் கடினமாகவா இருக்கிறது? சுழி/சுழியத்தின் வட திரிவான சூன்யத்தை ஏன் பயில்கிறோம் என்றும் எனக்குப் புரியவில்லை
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” [– பரிபாடல், 3:77-80]
இதன் பொருளை உரையாசிரியர் பரிமேலழகரைப் பின்பற்றி நம் சொற்களில் சொல்லலாம். ‘பாழ்’ எனும் ஆகுபெயர் மூலவியற்கையையும், ’கால் ’எனும் ஆகுபெயர் காயம், காற்று, தீ, நீர், நிலன் எனும் ஐம்பூதங்களையும், ’பாகு ’ கருமத் தொழிலால் பாகுபடும் ’வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்” எனும் கரும எந்திரங்களையும், ‘ஒன்று ’தொடங்கி ’ஐந்து ’ வரை, ’ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் ஆகிய 5 தன்மாத்திரைகளையும், ’ஆறு’ என்பது ’கண், நா, செவி, மூக்கு, தோல்’ எனும் ஐம்புலன்களையும் (ஞான எந்திரங்களையும்) ஆறாவதாய் மனத்தையும், ‘ஏழு’ மூளையில் எழும் அகந்தையையும், ‘எட்டு’ எண்ணும் மானையும், ‘தொண்டு ’ தொள்ளும் ஆதனையும் குறிக்குமென்பார். (மனம், அகந்தை, மான் எனும் மூன்றின் இருப்பிடம் மூளை) இவ்விவரிப்பின் கீழ் நால்வகை ஊழியில் எண்ணியதை நவிற்றும் சிறப்புக் கொண்டவன் திருமால் என்றும் சொல்லப்படும்.
5 ஊழிகளையும், அவற்றின் நடப்புக் காலங்களையும் சொல்லி இப்பேரண்டப் பிறப்பை பரிபாடல் 2, 1-15 ஆம் அடிகள் விவரிக்கும். இதுபோலும் வியத்தகு கூற்றைச் சங்கத இலக்கியங்களில் காண்பது அரிது. இற்றை அறிவியலோடு பெரிதாய்ப் பொருந்தும்.
தொல்முறை இயற்கையின் மதியொ.
----------------------- மரபிற்று ஆக
பசும்பொன் னுலகமும் மண்ணும் பாழ்பட
விசும்பில் ஊழி ஊழ்ஊழ் செல்லக்
கருவளர் வானத்து இசையின் தோன்றி 5
உருஅறி வாரா ஒன்றன் ஊழியும்
உந்துவழி கிளர்ந்த ஊழ்ஊழ் ஊழியும்
செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு
தண்பெயல் தலைஇய ஊழியும், அவையிற்று
உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு 10
மீண்டும் பீடுயர்பு ஈண்டி அவற்றிற்கும்
உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்
நெய்தலும், குவளையும், ஆம்பலும். சங்கமும்
மைஇல் கமலமும் வெள்ளமும் நுதலிய
செய்குறி ஈட்டம் கழிப்பிய வழிமுறை
என்பவை அவ்வடிகளாகும். தொன்முறையில் இயங்கிய திங்கள் மண்டிலமும் , ஞாயிற்று மண்டிலமும் தத்தம் மரபினின்று விலகி, விண்மீன்களும் கோள்களும் சிதறிப் பாழ்பட, அப்படிப் பாழுற்றவை ஊழிக்காலத்திற்கும் விரியும் விசும்பில் தோய்ந்து விலகிச்செல்ல, பின் ஏதோவொரு கட்டியத்தால் நடக்கும் விரிவு நின்றுபோய்ச் சுருங்கிக் கருவாகி வளருமாம். ( குறிப்பிட்ட அளவுக்குப் பேரண்டம் விரிந்து மீளச் சுருங்குவதை பெருஞ்சுருக்கு/ பெரு வெடிப்பு (big crunch/ big bang)> விரிவு> மாற்றம் > சுருக்கு> பெருஞ் சுருக்கு/ பெரு வெடிப்பு (big crunch/ big bang) எனும் தொடர்செலுத்தமாய் (continuous process) விவரிக்கலாம்.). பெருவெடிப்பின் போது பேரோசையும் தோன்றுமாம். தமிழில் விசும்போடு ஓசை தொடர்புடையது என்றே சொல்வர். பெருவெடிப்பில் மிஞ்சிய cosmic murmur ஐ இன்றும் கூடக் கேட்கலாமென இற்றை அறிவியல் சொல்லும். பாட்டின் முதலைந்து வரிகளில் இப் புரிதல் கிட்டுகிறது.
பெருவெடிப்பிற்கு அப்புறமான முதலூழியில் எவ்வுருக்களும், விண்மீன்களும், கோள்களும் உருவாவதில்லை. இக்காலத்தில் முன்னி (proton),மின்னி (electron).நொதுமி (neutron) போன்ற அணுவிலும் கீழான துகள்களே உருவாகின்றன. (பாவின் 6 ஆம் அடி) இது நெய்தல் காலம் நடக்குமாம் (13 ஆம் அடி). நெய்தல் காலத்தை இலக்கம் = 10^5 ஆண்டுகள் எனலாம். (https://valavu.blogspot.com/2018/08/7.html). இவ்வூழிக்கும் அடுத்த ஊழியில் நீரகம் (hydrogen), எல்லியம் (helium) என்று வளிகள்/காற்றுகள் உருவாகின்றன. இந்த ஊழி குவளை = கோடி ஆண்டுகள் நடக்குமாம். இதன்பின் தீயால்/சூட்டால் விரவிய ஊழி ஆம்பல் (10^9) ஆண்டுகள் நடக்குமாம்.
இதற்கடுத்துப் பனியொடு தண்பெயல் தவழும் ஊழி சங்கம் (10^12) ஆண்டுகள் நடக்குமாம். இந்த ஊழியின் முடிவில் புவி முழுக்க நீர் வெள்ளமே இருந்தது என்று இற்றை அறிவியல் சொல்லும். பின் இன்று இருக்கும் கடல் அளவைப் போல் மூன்று மடங்கு நீர் நிலத்தின் மண்ணுறல்களோடு வினைபுரிந்து மண் உள்ளீட்டில் இறங்கி மேலேயுள்ள நிலம் வெளிப்பட்டது என்று இற்றை அறிவியல் கூறும் இதை அப்படியே 10-12 ஆம் அடிகள் கூறும். நிலம் வெளிப் பட்ட காலம் தாமரை (10^13) ஆண்டுகளும், பின் வெள்ளம் (10^14) ஆண்டுகளும் ஆகுமாம். இந்த விவரணை நம்பக் கூடியதா, கற்பனையா என்பது தெரியாது. ஆனால் இப்படித்தான் 2050 ஆண்டுகளுக்கு முன் நம்மவர் கருதுகோள் இருந்திருக்கிறது.
பரிபாடல் 3 இல் சொன்ன சாங்கியச் செய்தியை பரிபாடல் 13, 14-22 ஆம் அடிகளும் திருமாலை ”அடுபோர் அண்ணல்” என்றழைத்து வேறுமுறையில் உரைக்கும்.
“சுவைமை, இசைமை, தோற்றம், நாற்றம், ஊறு,
அவையும் நீயே, அடு போர் அண்ணால்!
அவையவை கொள்ளும் கருவியும் நீயே;
முந்து யாம் கூறிய ஐந்தனுள்ளும்,
ஒன்றனில் போற்றிய விசும்பும் நீயே;
இரண்டின் உணரும் வளியும் நீயே;
மூன்றின் உணரும் தீயும் நீயே;
நான்கின் உணரும் நீரும் நீயே;
ஐந்துடன் முற்றிய நிலனும் நீயே
அதனால் நின் மருங்கின்று மூவேழ் உலகமும்
மூலமும் அறனும் முதன்மையின் இகந்த
காலமும்...........................................................”
– பரிபாடல், 13:14-25]
கூர்ந்து கவனித்தால், இப் பரிபாடல் வரிகளில் மனம், அகந்தை, மான் தவிர மற்றவை குறிக்கப்படும். நீயே என்பதில் இறைவனே ”புருஷனாய்ச்” சொல்லப் படுவான். இதில் மூலவியற்கை மூலமாகும். பேரண்ட ஒழுங்கும், கால காலமாய்த் தொடக்கிலிருந்து நகரும் பாங்கும் விவரிக்கப்படும். “ஓசை, ஊறு, ஒளி, சுவை, நாற்றம் எனத் தன்மாத்திரைகளாய் உணரப் படுவதும் நீயே! ’வாக்கு, பாதம், கை, எருவாய், கருவாய்’ என்னும் ஆற்றுக் கருவிகளும் நீயே! ’கண், நா, செவி, மூக்கு, தோல்’ எனும் ஐம்புலன்களும் (ஞானக் கருவிகளும்) நீயே! முன்னே யாம் கூறிய 5 தன்மாத்திரைகளில் ஓசையெனும் ஒன்றால் அறியப்படும் வானும் நீயே! ஓசை, ஊறெனும் இரண்டால் அறியப்படும் காற்றும் நீயே! ஓசை. ஊறு, ஒளி எனும் மூன்றால் அறியப்படும் தீயும் நீயே! ஓசை, ஊறு ஒளி, சுவை எனும் நாலால் உணரப்படும் நீரும் நீயே! ஓசை, ஊறு. ஒளி, சுவை, நாற்றமெனும் ஐந்தால் உணரப்படும் நிலனும் நீயே.! அதனால், நின் பக்கலிலுள்ள மூவேழ் உலகமும் அதன் மூலமும், அறனும், தொடக்கத்தில் இருந்து இறங்கிய காலமுமாய் நின்று நிலைக்கும்” என்பது இவ்வடிகளின் பொருளாகும்.
வடபுலத்து நூல்களிலும் ஈசான சாங்கியம் வெளிப்படும். காட்டாக சூர்ய சித்தாந்தத்தில் ,
வாஸுதே3வ: பரம் ப்3ரஹ்ம தந்மூர்தி: புருஷ: பர: |
அவ்யக்தோ நிர்கு3ண: சா’ந்த: பஞ்சவிம்சா’த் பரோ(அ)வ்யய: || [– ஸூர்ய ஸித்3தா4ந்தம், 12.12]
என்ற சொலவம் வரும். திருவாய்மொழி 10.7.10 இல் நம்மாழ்வார், .
“மங்க வொட்டுன் மாமாயை திருமாலிருஞ்சோலைமேய
நங்கள் கோனே. யானேநீ யாகி யென்னை யளித்தானே
பொங்கைம் புலனும் பொறியைந்தும் கருமேந்திரியும் ஐம்பூதம்
இங்கு இவ்வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே” [– திருவாய்மொழி, 10.7.10]
என்ற பாசுரத்தின் மூலம் 25 +1 உறுப்புகள் கொண்ட ஈசான சாங்கியத்தை பேசுவார்.
அன்புடன்,
இராம.கி.