Tuesday, July 21, 2020

நிகண்டு

அண்மையில் வழக்குரைஞர் Murugesan Maruthachalam நிகண்டின் பெயர்க் காரணம் பற்றித் தமிழ்ச்சொல்லாய்வில் ஓர் இடுகை இட்டிருந்தார். ”தமிழ் நிகண்டை வடசொல் என்போர் உளர். நிகர் சொற் கண்டு சுருக்கமாக நிகர் கண்டு. மிகச்சுருக்கமாக நிகண்டு ஆனது. நீண்டதொடர் நூல்சுருணை நூற்கண்டென்பர். சொற்கள் தொடராக இருந்தால் சொற்றொடர். சொற் கண்டு. நிகரான சொற்கண்டு நிகண்டு. கற்கண்டு - இனிப்பு. கற்கண்டு - கண்டு கற்றல்.. நிகண்டு தமிழே” என்பது அவர் மொழி. நான் வேறுபடுவேன். நிகண்டு பற்றி வேறு பலரும் இவருக்கு முன் கேட்டிருந்தார். அப்போதெலாம் வெவ்வேறு வேலைகளால் ஆழ்ந்ததால், மறுமொழியாது இருந்தேன். இப்போது முயல்கிறேன்

முதலில் பொறுமையோடு, மணிப்பவள நடையில் இருக்கும் திருவரங்கக் கோயிலொழுகின் அருங்கதை ஒன்றைப் படிப்போமா?    இந்த அரிய பொத்தகம் (முதற்பகுதி) ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ. கிருஷ்ணம் ஆசார்யர் வெளியிட்டது.  [214, கீழை உத்தர வீதி (விக்ரம சோழன் திருவீதி), திருவரங்கம் திருச்சி 620006] பக்கம் 84-86. ”சுந்தர பாண்டியத் தேவர் கைங்கர்யம்” என்பது குறிப்பின் தலைப்பு. கி.பி.1250- 84 இல் இருந்த முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் பற்றியது. பிற்காலப் பாண்டியரில் பென்னம்பெரு வெற்றி பெற்றவன் கிட்டத்தட்ட முழுத் தமிழ்நாடும் அவன் கையில் வந்து சேர்ந்தது. (இவன் முன்னோன் மாறவர்மன் சுந்தரபாண்டியனும், இவனும் சோழ குலத்தையே இல்லாது செய்தார். திருவரங்கக் கோயிலுக்கு ஏராளம் திருப்பணி செய்திருக்கிறான்.

”சுந்தரபாண்டியத் தேவர் சேரன் சோழன் வல்லாளதேவன் (ஹொய்சாள மன்னர்கள்) முதலானாரை ஜயித்து, ”எம்மண்டலமு கொண்ட பெருமாள்” என்ற விருது செலுத்தி, அந்த த்3ரவ்யங்களாலே, ராஜமாஹேந்த்ரன் திருவீதி முதலாக, இந்நாலு வீதியும் இருபத்துநாலு துலாபுருஷ மண்டபமுங் கட்டி துலாபா4ரந் தூக்கி, திருமுகத்துறையிலே ஒரு நிறையாக இரண்டு ஓடங் கட்டி, அதில் ஒரு ஓடத்திலே தச்சு முழத்திலே ஏழு முழமிருக்கிற பட்டத்தானையின் மேலே தானும் தன்னுடைய ஆயுத4ங்களுடனேயிருந்து ஒரு ஓடத்திலே அந்த மட்டத்துக்குச் சரியாக ஸ்வர்ணம் முத்து முதலான நவரத்திநங்களும் ஏற்றி, ஆனை துலாபுருஷந் தூக்கி......” என்று அச் செய்தியின் சொற்றொடர் நீண்டு போகும்.

நமக்குத் தேவை ”துலாபுருஷம்” என்பதைப் புரிந்து கொள்வதே. (கஜ துலா பாரம் என்றும் கோயிலொழுகு சிறப்பிக்கும்.) இன்றும் பெரிய பெருமாள் கோயில்களில் நடக்கும் துலாபாரம் பார்த்திருப்பீர்கள்.. 40 கிலோ அரிசி கொடுக்க, ஒரு பலங்கையில் 40 கிலோ கல்லையிட்டு, இன்னொரு பலங்கையில் அரிசியைக் கொட்டி துலை சமமாக, நிகராக, நிற்கும் அளவு அரிசியைச் சொரிவர். 40 கிலோ கல்லிற்கு நிகரான அரிசி கொடையாகும். ஒரு யானை+ சுந்தர பாண்டியன்+ ஆயுதங்கள் அளவிற்குத் தங்கம், (முத்து போன்ற ஒன்பான் மணிகள்) இடவேண்டுமெனில். துலையில் இது நடவாது. இரு ஓடங்களைக் காவிரியில் நிறுத்தி மிதக்கவிட்டு, பாண்டியன் இதைச் செய்துள்ளான். ஆர்கிமிடிசு விதி அவனுக்குத் தெரியாதிருக்கலாம். ஆனால் செய்து காட்டல் (demonstration) நடந்திருக்கிறது. ஓர் எடைக்கு நிகரான பொருள் காணும் அழகைப் பாருங்கள்.

சரி இரு வேறு கோடுகளிடையே  அல்லது பரப்புகளிடையே ஒப்பிட வேண்டுமா? ”அளந்து பார்” என்போம். ”எதற்கு எது நிகர்?” என்று தெரிந்து விடும்.  நீட்டளவு என்பது தமிழில் அடிப்படை அளவு. பரப்பளவை வழிநிலை (derived) அளவையாகக் கொண்டு, சதுரக் கருத்தீட்டால் பரப்பு அளப்பார். ஒரு கோல் = 5.5 அடி. ஒரு தண்டம் = 11 அடி. ஒரு தண்டச் சதுரம் = 121 ச.அடி. (வடக்கே 144 ச.அடி. நடுக்கிழக்கு நாடுகளிலும், மீட்டருக்கு முந்தைய கால இரோப்பிய நாடுகளிலும்) ஒரு தண்டச் சதுரத்தைக் குழி என்போம். பின்னால் மா, வேலி போன்ற பரப்பளவுகள் வரையறுக்கப்படும்.

இதேபோல் முப்பரிமான அளவையை நீர்மங்களன்றிக் கூலம்,  பருப்பு,  துகள்/குருனைகளுக்குச் செய்யமுடியாது. ஏனெனில் கையாளும் துகளியல்பு பொறுத்து மொத்தைத் திணிவு (bulk density) மாறும். குருனைகளும், அவற்றின் இடையுள்ள காற்றுவெளியும் படுத்தும்பாடு இதன் காரணமாகும் .  இதற்கும் மேல் இன்னொரு பலக்குமையும் (complexity) உண்டு. ஏனத்துள் துகளை அழுத்தியடைத்தால் மொத்தைத் திணிவை மேலும் மாற்றலாம்.  பொதுவாய் அடைவு (packing) வேறுபாட்டுக் காரணமாய், வெள்ள (volume) அளவீட்டிற்கு  ஒரு செந்தர முறை  வேண்டும். இல்லெனில் ஒவ்வொரு முறையும் முப் பரிமானக் கொண்மை (capacity)மாறும்.

நிகரிமை என்பது மேற்சொன்ன அளவீடுகளில் மட்டுமின்றி, நாம்கொள்ளும் விலைமதிப்பிலுமுண்டு. நாணயம் புழங்காக் காலத்தில் ஒரே மதிப்புக் கொண்டவற்றை ஏதோவகையில் மாற்றிக் கொண்டார். காட்டாக, 10 மூடை உப்பும் ஒரு மூடை நெல்லும் ஒரே மதிப்பு என்பது ஒருகால மரபு. இன்றிது மாறலாம், பின்னால் சோழி, முத்து, பவளம், தங்கம், வெள்ளி, தாள் போன்றவையும் வெவ்வேறு நாணயங்களும் மதிப்பைக் காட்டுதற்கு நிகராக வந்தன. ஆக, ஒவ்வொரு ஒப்புமைக்கும் அடியில் ஓர் அலகு இருக்கிறது. நீளம், கொண்மை, எடை, விலைமதிப்பு என இந்த அலகுகள் மாறும்.

சொற்களை ஒப்பிடும் போதும் இதுபோல் அலகுகள் மாறலாம்.  கோடி, கோடிகம் , படாம், கோசிகம், கூறை, பஞ்சி, சாடி, நீவியம், சீரை, சம்புடம், கலை, கலிங்கம், சூடி, காடிகம், புட்டம், தூசு, காழகம், வட்டம், ஆடை, ஆவரணம், தானை, அறுவை, அம்பரம், ஆசாரம், மடி, பரிவட்டம், சேலை, வத்திரம், உடுக்கை, வாசம், இலக்காரம் என்னும் 31 சொற்களை ”சூடாமணி நிகண்டின்” வழி, புடவை எனும் அலகால் ஒப்பிடலாம். ஒவ்வொரு நிகண்டு நூலிலும் இதுபோல் 1000க் கணக்கான அலகுகளுண்டு. நிகண்டிற்கு நிகண்டு அலகுகள் மாறுபடலாம். அந்தந்த அலகில் ஒப்பிடும் சொற்களை நிகண்டில் பட்டியலிட்டிருப்பார்.

நிகண்டில் வருவது 2 வகைச் செய்திகள். 1. சொற்கள் தொகுக்கப்படும் அலகுகள். 2. ஒவ்வோர் அலகிற்குமான சொற்கள். சில அலகுகளில் ஓரிரு சொற்கள் தேறும்,. சில அலகுகளில் அதிக எண்ணிக்கை இருக்கும். சரி, நிகர் சொற்களைத் தொகுக்கும் நூலை நிகரி எனலாமே? ஏன் நிகண்டெனப் பெயரிட்டார்?  வடசொல்லென வழக்கம்போல் சிலர் உரிமை கொள்கிறாரே? 2 கேள்விகளையும் ஆழமாய்ப் பார்ப்போம். குறைந்தது 2700 ஆண்டுப் பழமையான தொல். பொருள். உவம இயலின் 11 ஆம் நூற்பா, 5 ஆம் வரியில், ”நிகர்ப்ப” என்பது வரும். இச்சொல் எப்படி அங்கு எழுந்தது?

நுல்> நுள் என்ற வேர்  பொருந்தற் பொருளில் 2 வகைகளில் சொற்கள் வளர்ச்சி காட்டும் நுள்> நள் என்பது ஒரு வகை. நள்ளல், நளி, நட்பு, நடி, நடம், நட்டம், நாடகம், நணி, நணுங்கு, நயம், நசை, நத்து போன்றவை இவ் வகை சாரும். இவற்றை வேறு கட்டுரையில் பார்க்கவேண்டும்.  நுள்> நிள் என்று திரிவது இன்னொரு வகை. நுள்> நிள் > நிர்> நிரத்தல் = நெருங்கல், கலத்தல், பரத்தல், நிரம்புதல்; நிள்> நிர்> நிரல் = வரிசை அடுத்தடுத்துப் பொருந்தலால் வரிசையாகும். நிள்> நிர்> நிரை = வரிசை; நிள்> நிர்> நிரவு> நிரவல் = வரிசை, சமனாக்கல்; நிள்> நிர்> நிரம்பு> நிரம்புதல் (=நிறைதல்); நிரை> நிறை; நிள்> நிர்> நெர்> நெரு = காலத்தால் நெருங்கிய; நெரு> நெருநல்> நென்னல் = காலத்தால் நெருங்கிய நேற்று; நிள்> நெர்> நெரி> நெரிசல் (ஒருவரை ஒருவரும் நெருக்கி ஏற்படும் நிலை); நெரு> நெருங்கு (நெருவின் வளர்ச்சி); நெரு> நேர்> நேர்தல்  happening.

நெரு> நேர்> நேர்த்தி =பொருந்தியமையும் அழகு; நெரு> நேர்= ஒப்பு; நேர்> நேரம்= பொருந்துங் காலம்; நெள்> நெய்= ஒரு துகள் இன்னொன்றோடு பொருந்தி வழலுதல்,  வார்ப்பும் (warp) ஊடும் (weft) என நூல்களமையும் முறை; நெய்> நெய்த்துவர் = சிவப்பாய் நெய்போல் அமையும் அரத்தம்; நெய்> நேயம்> நேசம் = பொருந்திக் கொள்ளும் அன்பு; நெய்> நெய்ஞ்சு> நெஞ்சு = நெய்த்தோர் கையாளும் குருதயம் (heart) இருக்கும் பகுதி.; நெய்> நெய்தல், நெசவு = வார்ப்பும் ஊடும் பின்னிக் கொள்வது. இதே வளர்ச்சியில் நிள்> நிழு> நிகு> நிகழ் என்பது காலத்தால் கண்முன்னே பொருந்துவது. அடிப்படையில் இறந்த காலமும் எதிர்காலமும் மட்டுமே உண்டு. நிகழ் காலம் என்பது நம் வசதிக்குத் தக்க நாம் பொருத்திக் கொள்ளும் காலம். ஒரு நொடி, ஒரு நுணுத்தம் (minute), ஒரு மணி, ஒரு நாள், ஒரு மாதம், ஓர் ஆண்டு என்று நம் சிந்தனை கூறுபோட்டுக் கொள்ளும். அப்பொருத்திற்குத் தக்க நிகழ்காலம் மாறும்.

நிகு> நிகள்> நிகர் = ஒப்பு.  இதில் நிகள்தல் என்றசொல்  வருமா? - என்பது இன்னொரு கேள்வி. பொதுவாக ளகரமோ, லகரமோ தான் ரகரமாய்த் திரியும். அவ்வகையில் நிகள் என்பது ஓர் இயலுமை. இதற்குக் காட்டு முன்னால் சொன்ன கோயிலொழுகில் உள்ளது. அதே பொத்தகம் முதல் பகுதி பக்கம் 40-44 இல் வரும் ”நந்தசோழன்  கைங்கர்யத்தில்” உறையூர் நகரம் நிகளாபுரி எனப்படும். நிகளாதல் = நிகரில்லாது ஆதல். ஈடு இணையற்ற ஊர் என வெற்றிப்பொருள் சொல்வதற்காக அவ்வூர் நிகளாபுரி என்ற பெயர் பெற்றது. (உறந்தை, திருக்கோழி, கோழியூர், குக்குடபுரி, வாரணபுரி, உரகபுரம் என்ற பெயர்களும் அதற்குண்டு). எனவே நிகள்தல்> நிகர்தல் என்பது சரிதான். கோயிலொழுகில் இச்சொல் பயின்றாலும் நம்மூர் அகர முதலிகளில் இது ஏறவேயில்லை. இப்படி எத்தனை சொற்களைப் பதிவு செய்யாது போனோமோ? நான் படித்தவரை, மணிப்பவள  நூல்களுக்குள்  அருமையான தமிழ்ச்சொற்கள் பல உள்ளன. நாம் தாம் அறியாமையால் அவற்றை ஒதுக்கி இழக்கிறோம்.

நிகளல் என்பது இறந்தகாலத்தில் நிகள்ந்தது> நிகண்டது என்றும், நிகழ் காலத்தில் நிகள்கிறது என்றும், எதிர்காலத்தில் நிகளும் என்றும் வரும்.  வேள்ந்தது> வேண்டது என்பது போல், கள்ந்தது> கண்டது போல், கொள்ந்தது> கொண்டது போல், நிகண்டது என்பது முற்றிலும் சரி. நிகண்ட சொற்கள் நிகருற்ற சொற்கள் தாம். நிகண்டு நூல் = நிகர்ச் சொற்கள்  அடங்கிய நூல். ஜலசமுத்ரத்தில்/நீர்க்கடலில், ஜலத்தை/நீரை விட்டு,  சமுத்ரம்/கடல் என்று பயில்வது போல்,  நிகண்டுநூல் நிகண்டாய் நின்று உரியபொருளை  உணர்த்துகிறது. கோயிலொழுகு படிக்காவிடில் நிகண்டின் சொற்பிறப்பு எனக்குப் புரிந்திருக்காது.

சரி, வடமொழி என்று சொன்னாரே? அதையும் பார்த்துவிடுவோம்.  எடுகோட்டில் உள்ள மோனியர் வில்லியம்சு போய்ப் பார்த்தால், நிகண்ட் என்பதற்கு,

निघण्ट
(H1) नि-घण्ट [p= 546,2] [L=108157] m. ( √ घण्ट् , to speak? ; cf. घण्टा , a bell) a collection of words , vocabulary Cat.
[p= 546,2] [L=108158] N. of a दानव Katha1s.

என்று நி+கண்ட் என்று சொல்லுடைத்துப் போட்டிருப்பார்.  கண்ட் என்பதைத் தாது என்பார். (அடிப்படையில் அதன் பொருள் தொண்டை). இங்கே பேசுதல் என்று கேள்விக் குறியோடு போட்டிருப்பர். அதாவது பேசுதலாய் இருக்குமோ என ஊகிக்கிறார். கண்டா எனில் மணி. இங்கே நிகரான சொல் தொகுதி எனும் பொருளே வரவில்லை. என்னைப் பொறுத்தவரை a collection of words , vocabulary Cat என்பது பயன்பாட்டைப் பொறுத்து, குருட்டாம்போக்கில் சொற்பிறப்பு சொல்ல முயல்வதாகும் அவருக்கு நிகண்டின் சொற்பிறப்புத் தெரியவில்லை. எனவே தோன்றிய ஊகத்தைச் சொல்கிறார். சொற்களை உடைத்துப் பொருள்சொல்வது சங்கத அகரமுதலிகளின் இயல்பான வழக்கம். இதை ஏற்பதும் ஏற்காததும்  உங்கள் உகப்பு. நான் ஏற்கமாட்டேன். என் முடிவில் நிகண்டு என்பது தமிழே. ஒவ்வோர் அலகிற்கும் நிகரான சொற்றொகுதிகள் அடங்கிய நூல் என்பது அதன் பொருள்.

அன்புடன்,
இராம.கி. 

3 comments:

K.Ramakrishnan said...

ஆய்வு நன்று

கு.இராமகிருட்டினன் said...

ஆய்வு நன்று

VIVEKANANDAN said...

நிகழ்திரட்டு அகழாய்வு அகணடது.நன்றி