Saturday, July 18, 2020

பொதினி / பழனி

பொதினி / பழனி பற்றிக் கேட்டிருப்பதற்கு என் மறுமொழி. என் புரிதலையே நானிங்கு சொல்லுகிறேன். இது சிலருக்கு ஏற்பாகலாம், ஏலாதும் போகலாம்.

“பழம் நீ” எனும் சுவையான மாம்பழத் தொன்மத்தை நான் நம்புகிறவன் இல்லை. அது பொருந்தப் புகலும் மூதிகக் கதை. நம்பிக்கையால், சமயக் கருத்தாளர் அதோடு ஒத்துப் போகலாம். நானும் அதைக்கேட்டுப் புன்முறுவல் பூத்து, எம் பிள்ளைகளுக்குக் கதையாய்ச் சொல்லவும் செய்வேன். ஆனாலும் வரலாற்று உண்மையெனக் கொள்ளேன். ஏனெனில், பழனி பெயருக்கு முன்னால், பொதினி என்ற பெயரும், திரு ஆவினன்குடி என்ற பெயரும் அவ்வூருக்கு இருந்ததை அறிவேன். ”பழனி” எப்போதெழுந்ததென என்னாற் சொல்ல முடியவில்லை. முருகாற்றுப் படையில் அப்பெயரில்லை. ஆவினன் குடி என்றே அங்கு சொல்லப் பெறுகிறது.

நக்கீரர் காலத்திலோ, ஏன் உரை எழுதிய நச்சினார்க்கினியர் காலத்திலோ கூட, பழனி என்ற பெயர் சொல்லப் படவில்லை. வேள் ஆவிக் குடி என்னும் பொருள் பொதினியை ஆவியரோடு சேர்த்துச் சொன்ன அகம் முதற் பாடலோடு பொருந்துவதால், பொதினி என்ற பெயர் முதலில் இருந்து, பின் அது ஆவிநன் குடியானது என்ற முடிவிற்கு வருகிறோம். அகநானூறு, முருகாற்றுப் படையினும் முந்து தொகுப்பப் பட்ட சங்க நூலாகும். திரு முருகாற்றுப் படையைச் சங்க காலத்தின் கடைசிக்குத் தள்ளுவார் உண்டு. நான் அம்முடிவிற்கு இன்னும் வந்தவன் இல்லை.

இனிப் பொதினியின் பொருளைப் பார்ப்போம். பழனிக்கு நீங்கள் போய் இருப்பீர்கள். அங்கிருக்கும் இயற்கை நம்மைச் சற்றே கூர்ந்து கவனிக்க வைக்கும். பின்னாலிருக்கும் மலைத் தொடரை இன்று பழனி மலைத்தொடர் (1800 - 2500 மாத்திரி உயரம்) என்கிறோம். கோடைக்கானலிலிருந்து பழனிக்கு நீண்ட மலைப்பாதை உண்டு. கோடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயிலில் இருந்து, வானம் தெளிவாயிருந்தால், பழனிக் குன்றைக் காண முடியும். சுற்றிவளைத்து வரும்போது அதிகத் தொலைவாய்த் தெரிந்தாலும், நேரே இறங்கினால், குறிஞ்சியாண்டவர் கோயிலிலிருந்து 16/18 அயிர மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவே பழனிக் குன்று இருக்கும்.

பழனிக் குன்று அம்மலைத் தொடரின் விளிம்பாகும். பழனி ஊரே கூட கிட்டத் தட்ட 325 மாத்திரி உயரத்தில் மேட்டு நிலத்திற்றான் இருக்கிறது. பழனி மலைத் தொடர் எங்கணும் மழைக் காலத்தில் பெருகிவரும் அருவிகளும் ஓடைகளும் மிகுதியானவை. மலைத்தொடரின் வடக்குச் சரிவில் ஓடிவரும் நீர் பல கிளையாறுகளாய் அமைகிறது. அவற்றில் பழனி நகருக்கு மிக அருகில் ஓடிவரும் சண்முக ஆறும் ஒன்றாகும். அது பின் ஆன்பொருநை (=அமராவதி) ஆற்றில் சேருகிறது. வழிந்துவரும் மழைநீரைத் தேக்கி வைத்தால், பழனிக் குன்றிற்கு அருகிலேயே நன்செய் வேளாண்மை செய்ய முடியும், ஓரளவுக்கு தன்னிறைவான குடியிருப்பை (குடி என்றசொல் செயற்கைக் குடியிருப்பை உணர்த்தும் சொல்) ஏற்படுத்த முடியுமென எண்ணி, வேள் ஆவிக் குடியினரே ஓரு பேரேரியை பொள்ளித்து (தோண்டிச்) செயற்கையாய் உருவாக்கியிருக்கலாம். பொள்ளித்த ஏரி பொய்கை எனப் படும். அங்குள்ள ”சரவணப் பொய்கை” மூதிகத்தை முன்வைத்து இன்றும் பணம்பண்ணும் காட்சி உண்டு.

அந்த ஏரி பழனியின் இருப்பை, பொருளியலை, உறுதிசெய்யும் அமைப்பு ஆகும். ஊருக்கே கூட அந்த ஏரியாற் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பதே என்கருத்து. வேள்ஆவிக் குடி ஏரி என்பதற்கு வடமொழிச் சார்பு கொடுத்து, வேளாவிப் புரி ஏரி என்று சொல்லிப் பின் வேயாவிப் புரி ஏரி. ஆக்கி இன்றைக்கு வையாபுரி ஏரி என்று மேலும் திரித்துச் சொல்கிறார். அந்த வேளாவி ஏரி தன் பரப்பளவில் மிகவும் பெரியது. அச்செயற்கை ஏரி யின்றேல், பழனி நகரேயில்லை.

பொள்தல்>பொள்ளுதல் = தோண்டுதல். பொளுநிய?பொளுனிய ஏரி பொளினி.  ளகரம் டகரமாவதும், தகரமாவதும் பேச்சுத் தமிழிலுள்ள பழக்கம். பொளினி>பொதினி. இனிப் பொள்ளுவதும் பள்ளுவதும் ஒரே பொருள்தரும் வினைச்சொற்களே. பள்தல்>பள்ளுதல்>பளுனுதல்>பழுனுதல் = பள்ளம் தோண்டல். பழுனி>பழனி என்பதும் பொய்கைப் பொருளைக் குறிப்பதாய் அகரமுதலிகள் குறிக்கும். பழனம் என்பதும் பொய்கையைக் குறிக்கும். திரு + ஆவினன் குடியை திருவாவினன் குடி என்றுசொல்லி வாவிக்கும் பொய்கைப் பொருளை ஒருசிலர் காட்டுவதுண்டு.

எப்படியோ, 3 சொற்களுக்கும் (பொதினி, திருவாவினன் குடி, பழனி என்ற 3 சொற்களுக்கும்) ஏரிப்பொருள் தானாக அமைந்திருக்க வழியில்லை. ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும். பெரும்பாலான பழைய தமிழக ஊர்ப் பெயர்கள் இயற்கையை/ நிலத்தை ஒட்டிய செயற்கையோடு சேர்ந்து அமைந்திருப்பதும், நம் கருதுகோள் சரியாக இருக்கலாம் என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. பின்னால் ஏரியில் இருந்து குன்றிற்கும், பின் நகருக்கும் இப் பெயர் நகர்ந்திருக்கலாம். முடிவில் மலைத் தொடரையே நாம் பழனி மலைத் தொடர் என்று குறிக்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: