Saturday, September 21, 2019

சிலம்பு ஐயங்கள் - 24

வேறு

”உன்னை முற்றும் நம்பினேன்; நீ நம்பிக்கை காட்டினாயா?” என ஆற்றுவரியில் மாதவி தொடங்குகிறாள். இனி 3 தாழிசையாலான சார்த்துவரி வரும். இது கோவலனோடு அவள் செய்யும் நேர் உரையாட்டு. முதல் இரு வரிகளில் ”மாலை”பற்றிய கேள்வியும், அடுத்த இரு வரிகளில்.”எங்களூரை எப்படி எண்ணிணாய்? முயன்றால் எதையுங் கண்டு விடுவோம்” எனும் விடைக்கூற்றும் வருகிறது..

28.
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வாவேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர்ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ்கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரேஎம்மூர்.

29
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம்ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப்பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரேஎம்மூர்.

30
உண்டாரை வெல்நறா ஊண்ஒளியாப் பாக்கத்துள் உறைஒன்றுஇன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம்ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல்நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க மாதர் கடல்து஡ர்க்கும் புகாரேஎம்மூர்.

ஐய, திங்களின் வாள்முகங் கொண்ட வசந்த மாலையிடம் செவ்வாய் மணி முறுவல் பெறுவது ஒவ்வாதெனினும், முத்துவாங்குவது போல் மன்மதனாய் நாளும் நீர் வந்தீர். நறுமணங் கொண்ட இக் கழிக்கானலில் (பிச்சாவரம் போன்ற இடம்) வீங்கிய ஓதத்தால் வந்து சேரும் முத்துக்களுக்கு கானற்பூ மாலைகளால் விலைசொல்வோர் போல் மீளுகின்ற புகார் எம்மூராகும். (”எங்களைக் குறைத்து மதிப்பிடாதே. முத்திற்கும் விலையுண்டு. இச் செய்தியை எப்படியோ அறிந்தேன்” என்கிறாள். எப்படி என்பதை இளங்கோ கடைசி வரை சொல்லவேயில்லை.)

ஐய, வன்பரதர் பாக்கத்தில். மறையிடங்களிற் கூடுவாரை (வசந்த மாலையோடு மறையிடங்களில் நீ கொண்ட உன் கூடலை), மகளிரின் சிவந்த கைகளில் வளைகள் கழலுவதை, ஏழையோம் நாங்கள் எங்கு எப்படி அறிகோம் என எண்ணினையோ? நீரீற் கிடக்கும் மீன் மேல் நிறைமதி முகம் தெரிவது போல் நீள்புன்னையரும்பிப் பூப்பாரங் கிடக்கும் கொம்பின் மேல் வெள்ளையன்னம் ஏற (நீ அவளோடு கூடியதையறிய), ஆம்பற்பூவின் ஊடே வண்டுகள் ஊதுவது எம்மூராகும். (வெளியே தெரியாத ஒன்றைச் சிலரறிந்து தம்முள் பேசிக்கொள்வது அம்பலாகும். இது அலருக்கு முந்தைய நிலை. இங்கு அம்பல் ஆம்பலாய் நீண்டு சிலேடை ஆனது. வண்டுகள் போல் அம்பலினூடே ஊதி அறிந்து கொள்வது எம்மூராகும். ஆம்பலந் தீங்குழல் என்பதும் நெய்தல் நிலத் திறப்பண் தான். இதை இந்தளம் என்பர். இந்தோளம் என்பது இற்றைப் பெயர்.சுரவரிசை சக1ம1த1நி1 என்றாகும்.)

ஐய, உண்டாரை வெல்லும் நறவும், ஊணும் ஒழியாத பாக்கத்துள் (கணிகையர் வீட்டை இங்கு உருவகஞ் செய்கிறாள்), ஒரு மருந்தின்றி அமையாத காமநோயை மாதருக்குத் தருகிறாய் என்பதை எங்கு எப்படி நாங்கள் அறிகோமென எண்ணினாயோ? புண்தோயும் நீண்ட வேலால் குத்தப்பட்ட யானை விழிகளில் நீர்மல்க, சேர்த்து வைத்த வண்டலைக் கடல்திரைகள் அழித்தும், மாதர் தம் கைகளால் மணல்முகந்து கடல்தூர்க்கும் புகாரே எம்மூராகும்.
 
வேறு

அடுத்தது திணைநிலைவரியாகும். நெய்தல்திணையில் நடக்கும் இரங்கலும், இரங்கல் நிமித்தமும் இங்கு 6 தாழிசைகளிற் பேசப்படுகின்றன. தலைவி தன் நிலைக்குத் தானே இரங்குகிறாள்.

31
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.

32
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்.

33
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ?

34
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று என்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று என்செய்கோ?

35
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.

36
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்.

வளைந்த சுரிகளாற் (waves) பின்னிய ஐம்பாற்சடையாளே! துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிநண்டையும் நோக்கி, பூக்கொத்துக்கள் செறிந்த சோலையில் என்னையும் நோக்கி, உணர்வொழிந்து போன (ஓவென்ற அலைச்சத்தங் காட்டும்) நீர்ச்சேர்ப்பனின் இயல்பை நான் உணரமாட்டேனா, என்ன? (உன் போக்கை நான் அறியமாட்டேனா?)

அழகிய மென்கொத்துக்களை உடைய அடப்பங் கொடிகளே! அன்னங்களே! தாமும், தம் தண்ணருளும் தம்குதிரை பூட்டிய தேருமென எம்மைநினையாது போனாரோ? அப்படி விட்டகன்றாலும், நம்மை மறந்தவரை நாம் மறந்து விடுவோமோ, என்ன? (நீ என்னை நினையாது தவறு செய்ததை நான் மறந்துவிடுவேனா, என்ன?)

இனிய கள்திளைக்கும் வாயுடைய நெய்தல் மலரே! வருத்தம் மிகுவிக்கும் வசந்தமாலையாற் புலம்பும் என் கண்ணைப்போல், துன்பம் கலக்கையில் துயில்பெறுவாயோ? நீ காணும் கனவில் வன்கணாரின் காடுகள் வரக் காண்பதை அறியாயோ?  (எதிர்காலத்த்தில் துன்பம் மிகப் போகிறது)     

தெளிந்த நீர் ஓதமே! பறவையின் இயல்போல் விரைவாகிச் சென்ற குதிரை பூட்டிய தேர்ச்சக்கரம் போனவழியெலாம் நீ சிதைத்தாய்! மற்றென்ன செய்கோம்? அப்படிச் சிதைத்தும் அலர்தூற்றி உள்ளாரோடு எதையும் உணராது இங்குள்ளாய்! மற்றென்ன செய்கோம்? (தப்புச் செய்த பிறகும் உன்னோடு இங்குள்ளேனே?)

நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தேரின் சக்கரம் ஊர்ந்தவழி சிதைய ஊர்க்கின்ற கடலோதமே! பூந்தண் பொழிலே! புணர்ந்தாடும் அன்னமே! ஈர்ந்தண் துறையே! ”(வசந்தமாலையோடு சேர்வது) தகாது” என்று நீவீர் சொல்லமாட்டீரா?

கடலோதமே! நம்மோடு பொருந்திய காதலரின் நெடிய திண் தோள் ஊர்ந்த வழி ஊர்ந்தாய்; இருப்பினும் வாழி! மற்று எம்மோடு உறவு தீர்ந்ததுபோல் தீர்ந்து விட்டீரோ? வாழி (என்னை விட்டு முற்றிலும் வசந்தமாலையோடு சேர்ந்துவிட்டீரோ?)

அன்புடன்,
இராம.கி.

No comments: