Wednesday, September 04, 2019

சிலம்பு ஐயங்கள் - 12

பழமதுரைக்குச் சற்று முன்னுள்ள கானுறைத்தெய்வம் அதன் கோட்டத்திற்கு அருகில் கோவலனை ஒரு சோதனைக்கு உட்படுத்துகிறது. அவனுடைய மறைந்த பக்கத்தைக் காப்பியம் படிப்போருக்குப் படம் பிடித்து வெளிப் படுத்துகிறது. சிலம்பை ஆழ்ந்து படிக்காது, கோவலன் கண்ணகி, மாதவியோடு மட்டுமே புகார்க் காண்டத்தைப் பொருத்தியவர் இன்னொரு பங்காளரும் இதனுள் பொதிந்தது கண்டு சற்று அதிர்ந்து போவார். ”இதை எப்படி உணராது போனோம்?” என்ற கேள்வியெழும். இளங்கோ ஒரு தேர்ந்த காப்பிய ஆசிரியன். 

கானுறை தெய்வங் காதலிற் சென்று
நயந்த காதலின் நல்குவன் இவன் என
வயந்த மாலை வடிவில் தோன்றிக்
கொடிநடுக் குற்றது போல ஆங்கவன்
அடிமுதல் வீழ்ந்தாங்கு அருங்கணீர் உகுத்து
வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின்
கோவலன் செய்தான் கொடுமையென்று என்முன்
மாதவி மயங்கி வான்துயர் உற்று
மேலோர் ஆயினும் நூலோர் ஆயிலும்
பல்வகை தெரிந்த பகுதியோர் ஆயினும்
பிணியெனக் கொண்டு பிறக்கிட்டு ஒழியும்
கணிகையர் வாழ்க்கை கடை போன்ம் எனச்\
செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண்
வெண்முத்து உதிர்ந்து வெண்ணிலாத் திகழும்
தண்முத்து ஒருகாழ் தன்கையாற் பரிந்து
துனியுற்று என்னையும் துறந்தனள் ஆதலின்
மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது
எதிர்வழிப் பட்டோர் எனக்காங்கு உரைப்பர்
சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன்.
பாத்தரும் பண்பநின் பணிமொழி யாது என

என்ற வரிகளைப் படித்தால், கானல்வரியின் பின் கோவலன் மாதவியிடம் இருந்து விலகியதன் பொருள் விளங்கும். மாதவி இளஞ்சிவப்பு. நிறத்தாள் குருக்கத்திப் பெயராள். (குருகு, குருக்கத்தி, குருங்கு, வசந்த மல்லிகை, வசந்த மாலை, வசந்தி, வாசந்தி, புண்டரவம், வாலாகினி, எருக்கத்தி சோகைநீக்கி, கத்திகை, காந்தி, அதிகத்தி, அதிகாந்தி, அதிகம், அதிமத்தம், அதிகமாலி, முத்தம், முத்தகம், அதிமுத்தம், அதிமுத்தகம், மாதவி என்று ஏராளமான பெயர்கள் குருக்கத்திக்கு உண்டு. தமிழரைப் பெரிதும் மயக்கிய ஒரு பூ குருக்கத்தியாகும். இக்காலத்தில் இதைப் பொருட்படுத்துவார் அரிது. இதை விளைவிப்பதும் அரிது. தமிழர் தம் மரபிலிருந்து விலகி நெடுநாட்கள் ஆகி விட்டன போலும்.)

மாதவி கண்கள் கண்ணகியைப் போன்றவை. அதே போது அழகுக்கண்ணகி மாநிறத்தாள்; (சிவப்பு - கருப்பு ஊடாட்டம் தமிழரிடை மிக அதிகம்.) செந் நிறக் கோவலன் மாநிறக் கண்ணகியோடு குடும்பம் நடத்தியது பெரும் பாலும் 5 ஆண்டுகள் இருக்கும். கானல்வரியின் போது கோவலனுக்கு அகவை 21, கண்ணகி மடந்தைக்கு 17, மாதவி மங்கைக்கு 13. (இந்த அகவைக் கணக்கை ”சிலம்பின் காலத்தில்” காரணத்தோடு விவரித்திருப்பேன்.) மாதவியோடு கோவலன் இருந்தது ஓராண்டிற்குள் தான் இருக்கும். அதற்குள் பிள்ளை பிறந்துவிடுகிறது. மேகலை பிறந்த ஓரிரு மாதங்களில் கோவலன் மாதவியிடம் இருந்து பிரிந்து விடுகிறான்.) 6 மாதப் பிள்ளைத்தாய்ச்சியோடு உடலுறவு தவிர்ப்பது தமிழர் குமுகாயத்தில் ஒரு விதக் கட்டுப்பாடு. அளவிற்கு மீறிய காம உணர்வு கொண்ட கோவலனால் இதைத் தாங்கிப் பிடிக்க முடிய வில்லை. மாதவியறியாமல், வசந்தமாலையோடு தொடுப்பு ஏற்படுகிறது. அதை இளங்கோ வெளிப்படையாய்ச் சொல்லவில்லை. ஆனாற் குறிப்பால் உணர்த்துகிறார். நாம்தான் சிலம்பைக் கூர்ந்து படிக்காது உள்ளோம்.

நாட்கழித்து இலேசுபாசாக அதையறிந்த மாதவி கோவலனுக்கும் வசந்த மாலைக்கும் ஏற்பட்ட உறவைத் தவறென்று கானல்வரியில் குறிப்பால் உணர்த்துகிறாள். (மேலே சொன்னேனே? வசந்த மாலைக்கும் குருக்கத்திப் பொருளுண்டு. பசந்த காலத்தில் மலர்வது வசந்த மாலை. பசந்தம்>வசந்தம்) அதற்கான குறிப்புகள் சிலம்பிலேயுள்ளன பலரும் எண்ணுவது போல் கானல்வரி ஏற்பட்டது கண்ணகியால் அல்ல. இல்லக்கிழத்தி கேள்வி கேட்டாளா? இல்லையா? தெரியாது. ஆனால் காதற் கிழத்தி கானல்வரியிற் கட்டாயம் கேட்கிறாள். ”தன்னை மாதவி ஐயுறுகிறாள்” என்ற குற்ற உணர்ச்சியோடு தான் ”கண்டு கொள்ளாதே” என்று பொருள்படும்படி,

”கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயற்கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பென்று அறிந்தேன் வாழி காவேரி”

என்று கோவலன் உரைக்கிறான்.

”கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி”

என்று மாதவி இசைப்பாட்டு (எசப்பாட்டு) பாடி, “எனக்கு எல்லாந் தெரியும். உன் செங்கோல் வளைந்து விட்டதே?” என்று உவமையால் உணர்த்துகிறாள். இதைக் கேட்ட ஓர் ஆணாதிக்க வாதிக்குக் கோவம் வாராதா என்ன? ”என் மனைவியே என்னைக் கேள்வி கேட்டதில்லை. கணிகை இவள் கேட்கிறாளே?” என்று கோவப் பட்டு ஆணாதிக்கக் கோவலன் மாதவியை விட்டு விலகுகிறான். (ஆ.பழநியின் ”சிலப்பதிகாரக் காப்பியக் கட்டமைப்பு” நூலைப் படியுங்கள். கானல்வரி ஓர் இசைப்பாட்டென நகர்வோரே மிகுதி. ஆனால் கதைப் போக்கை மாற்றுவதே கானல்வரி தானென்று பழநி அலசியது போல் வேறு எவரும் அலசி நான் பார்த்ததில்லை. சிலம்பை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டோர் மிகவும் குறைவென நான் ஏன் சொன்னேன் என்று இப்பொழுது புரிகிறதா?) சிலம்பைப் புரியாதவர் நிறையப் பேர் இருக்கிறார்.

கோவலன் வீட்டுக்கு வருகிறான். நடந்தது எதையும் அவன் தன் மனைவிக்குச் சொல்லவில்லை. அவளுங் கேட்கவில்லை. ”சீரழிந்து போனவனை இனியும் சீர்கெட விடுவதிற் பலனென்ன? தானும் உடனிருக்கப் புதுவிடத்திற் வணிகம் தொடங்கலாமே?” என்றே கண்ணகி புகாரை விட்டு நீங்குகிறாள். எல்லோருஞ் சொல்வது போல் கண்ணகி ஒன்றும் முட்டாளல்ல. அவள் ஒரு பெண்ணியக்க வாதியும் அல்லள். ஒரு சட்டாம்பிள்ளையும் அல்ல. வெறும் சாத்தாரப் பெண். ஆனாற் புத்திசாலி. அலைந்து திரிந்து வந்தவனை மேலும் ஏதோ சொல்லி விரட்டுவதில் பொருளுண்டோ? உள்ளமை நிலையைப் அவள் புரிந்து கொள்ள வேண்டாமா? அவள் மேலும் அழுது புலம்பி உதவி கேட்டுப் பெற்றோரிடம் போகவில்லை. மாமன், மாமியிடமும் போக வில்லை. தானே துணிந்து தன் வாழ்வில் முடிவெடுக்கிறாள். ”தன்னால் அவனை மாற்ற முடியும்” என்று உறுதியாக நம்புகிறாள். ஊரை விட்டுச் செல்லமுயலும் கோவலனுக்குச் சிலம்பு தந்து ஊக்குவிக்கிறாள். Given the circumstances, this is the most sensible thing to do. After all nobody is perfect. Had she not lived with him for 5 years? Of course he meandered. But he has now come back and wants to re-start his life through a second chance. Why not make a try?

கோவலனுக்கு முன்னால் வயந்த மாலையின் வடிவில் தோன்றி, “என்னை நயந்த காதலால் நான் கேட்பதை நல்குவான்” என்று கொடி நடுக்குற்றது போல் அவன் காலடியில் விழுந்து அருங்கண்ணீர் உகுத்து,

”[வேனிற் காதையில் தாழைமடலில் எழுதி என் வாயிலாய் முன்னனுப்பிய]
வாசமாலை (மாதவி)யின் மாற்றம் (மடல்) உன்னை மறைமுகமாய்க் குத்திக் கிளறியதாற் கோவப்பட்டாயோ? எந்தத் தீமையையும் நான் உனக்குச் செய்ய வில்லை. (நம்முள் நடந்ததை மாதவியிடம் சொல்லவில்லை.) அவளிடம் (கானல் வரியின் வழி) நீ தப்பாகப் பேசினாய், எனவே ’கொடுமை செய்தாய்’ என அவள் புரிந்துகொண்டாள்.

பெருந்துயருற்று அவள் என்முன் மயங்கிவிழுந்து,
’குமுகாயத்தில் மேலோராயினும், படித்தவராயினும்,
பல்வேறு வழிவகை தெரிந்தவராயினும்,
தம்மைப் பிடித்த பிணி எனக் கொண்டு
பின்தள்ளி விலகும் கணிகையர் வாழ்க்கை மிக இழிந்தது’ என்றாள்.
அடுத்துச் செவ்வரிபடர்ந்த.தன் செழுங்கடை மழைக்கண்ணிலிருந்து
முத்துப் போல நீருகுத்து,
வெண்ணிலாவாய்த் திகழும் தன் முத்துவடத்தை
தன்கையாலே அறுத்துவீசி,
வெகுண்டு என்னையும் துறந்தாள்
(என்னை வெளியே போகச்சொன்னாள்).

வெளியே வந்து உசாவிய போது, எதிர்வழிப் பட்டோர்
நீ மதுரை மூதூர் மாநகர் போந்ததை உரைத்தார்.
புகாரிற் புறப்பட்ட சாத்தோடு உடன்வந்து
அவரிடமிருந்து இங்கு பிரிந்து தனியாக உழந்துநிற்கிறேன்.

எல்லோருக்கும் பகுத்து அருளும் பண்புள்ளவனே,
எனக்கு நீ தரும் பணிமொழி யாது?”

என்று கானுறைதெய்வம் விருப்போடு சென்றுசொன்னது. வசந்தமாலையின் உருவமெடுத்து இதைச் சொல்லும்போது ”கோவலன் எப்படி மறுவினை செய்கிறான்? அவன் உறுதியென்ன? என்று தெய்வம் அறியவிரும்புகிறது. படிப்போருக்கும் முதன்முறையாக வசந்தமாலை - கோவலனின் கள்ளக் காதல் வெட்ட வெளிச்சம் ஆகிறது. காடுகாண் காதை கோவலனுக்குள் இருக்கும் கமுக்கத்தைக் காண வைக்கும் காதை. காடுகாண் காதை புரியாதவருக்குச் சிலம்பின் புகார்க் காண்டம் புரியவே புரியாது.

அன்புடன்,
இராம.கி.

No comments: