Friday, September 06, 2019

சிலம்பு ஐயங்கள் - 14

நுள்ளிலிருந்து உருவான நுமுதல் ஒரு தனிப்பட்ட வளர்ச்சியன்று. அதுபோலப் பல சொற்கள் உள்ளன. நுள்> நுளு> நுழு> நுகு என்ற வளர்ச்சியில் நுகும்பு, நுகை, நுணங்கு, நுடங்கு, நெகு, நெக்கு, நெகிழ், நெளு, நெளி, நொளு, நொய், நொய்வு, நொம்பு, நொம்பலம் என்று பல்வேறு தனிச்சொற்களாலும், கூட்டுச் சொற்களாலும் தளர்ச்சி, குழைவு, இளகு, உருகு, வளைவுப் பொருட்களை உணர்த்தும். 200 சொற்களாவது குறைந்தது தேரும். நமல் நெமலாகி நேமியும் ஆகலாம். அது வளைந்து கிடக்கும் வட்டம், சக்கரத்தைக் குறிக்கும். சமணத்தின் 22 ஆம் தீர்ந்தங்கரர் நேமிநாதர் சக்கரப்பொருளாற் பெயர் கொண்டவர். மதுரைக்கு அருகிலுள்ள ஆனைமலைக் கல்வெட்டில் ”அரிட்ட நேமி” என்ற துறவி பற்றிச் சொல்லப்பட்டுள்ளது. 

”நமல்க” என்ற சொல்லை (நம்மாழ்வாரின் திருவாய்மொழியிற் காணாவிடில் எனக்குக் கொஞ்சமும் விளங்கியிருக்காது. நெடுங்காலம் ”நமக”வைச் சங்கதம் எனவே எண்ணியிருந்தேன்.) ஐந்தெழுத்து மந்திரத்தோடு சேர்ந்தால் எட்டெழுத்து மந்திரங் கிடைத்துவிடும். (கட்டளைப் பாவை மறந்துவிடாதீர். ஒற்றிற்கு மதிப்பு இல்லை என்பதால் மல்  என்பது ஓரெழுத்து.)

”ஓம் சிவசிவ நமல்க - சிவனே! (எம்மைக்) காப்பாற்று. (எல்லோரும்) வணங்குக”,
“ஓம் நாராயண நமல்க - நாராயணா (எம்மைக்) காப்பாற்று (எல்லோரும்) வணங்குக”

நாளாவட்டத்தில் நமல்க என்பது பேச்சுவழக்கில் நமக என்றாகிப் பின் சங்கதத் தாக்கில் நம: என்றாகும். அப்படியாகையில் ஓரெழுத்துக் குறையும்.  (ம: என்பது மஃ என்று ஒலிக்கும். அதை வைத்து நம் ஆய்தமும் வடவரின் விசர்க்கமும் ஒன்றென்று சிலர் சொல்வார். முற்றிலுங் கிடையாது. ஆனாற் சில ஒப்புமைகளுண்டு.) தவிர ஆய என்ற தமிழ்ச்சொல்லையுஞ் சங்கத முறையிற் கொண்டுவந்து சேர்ப்பர். [ஆகுதல்> ஆய்தல் என்பது ஆகுஞ் செயலைக்குறிக்கும். ஆயனென்ற பெயர்ச் சொல் ஆய என்றாகும்.) இந்தப் பிணைப்பால் ”நாராயண” என்பது ”நாராயணாய” என்றாகும் ”சிவ” என்பது ”சிவாய” என்றாகும். முடிவில் விண்ணவ எட்டெழுத்து மந்திரம் ”ஓம் நாராயணாய நம:” என்றாகும். இதைச் சற்று மாற்றி ”ஓம் நம: நாராயணாய / ஓம் நமோ நாராயணாய” என்றுஞ் சொல்லுவர். சிவ ஐந்தெழுத்து மந்திரம் ”ஓம் சிவசிவ” என்பதற்கு மாறாய் ஓமை விட்டுவிட்டு ”சிவாயநம:” என்று மாறிப்போகும். இதை ”நம:சிவாய/நமச்சிவாய” என்றும் பலுக்குவர். முடிவில் ”சிவனை வணங்குக” என்று மட்டுமே இம்மந்திரம் பொருள் தரும். சிவ எட்டெழுத்து மந்திரத்திற்கு ”ஒம் சிவசிவாய நம”: என்றமையும். மொத்தத்தில் பலரும் இன்று சொல்லும் சிவ, விண்ணவ மந்திரங்கள் தமிழுஞ் சங்கதமுங் கலந்த மந்திரங்களே. தமிழ் மந்திரம் வேண்டுமெனில் மேலே கூறியவற்றைப் பலுக்கவேண்டும்.

இதேபோல் ஐந்தெழுத்து, எட்டெழுத்து மந்திரங்கள் அற்றுவிகத்திலும், செயினத்திலும், புத்தத்திலும் இருந்திருக்கலாம். மணிமேகலையில்  ஓம் மணிபத்மேய நம: என்பது புத்த நெறியின் எட்டெழுத்து மந்திரமும், ஓம் மணிபத்மேய என்ற ஆறெழுத்து மந்திரமும் பற்றிக் குறிப்புச் சொல்வர்.. மணிபதும/மணிபத்ம என்பது ”மணிபோன்ற பாதத் தாமரைகளைக்” குறிக்கும். பல ஆங்கில உரையாசிரியர் இது புரியாது juwel lotus என்றெழுதி ஆன்மீகப் பொருள் கொடுத்துக் குழப்பிக் கொண்டிருப்பர். (இணையத்தில் எங்கு தேடினும் இக்குழப்பம் நிகழ்வது புரியும்.) அடிப்படையில் பொருள் மிக எளிது. மகாயானம் தோன்றும் வரை புத்தனைப் பீடிகைகளாலே மக்கள் தொழுதார். புத்தனின் செங்காலடிகளுக்கு மணியும், பதுமமும் உவமங்கள். மணிப்பதுமம் என்பது இரட்டை உவமம் அவ்வளவு தான்.

இதேபோல் மந்திரங்கள் செயினத்திலும், அற்றுவிகத்திலும் இருக்கலாம். தேடிப் பார்க்க வேண்டும். தீர்த்தங்கரரை அழைத்தும், இயக்கிகளை அழைத்தும் மந்திரங்கள் இருக்கலாம் (அவையெலாம் இப்போது எனக்குத் தெரியாது.) தெரிந்தவர் சொன்னால் கேட்டுக் கொள்வேன். இனி காடுகாண் காதையின் முடிவிற்கு வருவோம்.

கோவலனைப் பொறுத்தவரையில் காடுகாண் காதையில் வசந்தமாலை தன் முன் நேரேவந்ததாகவே முதலிலுணர்கிறான். (ஆனால் வசந்தமாலையாய்த் தோற்றமளித்த கானுறை தெய்வமே நேரே வந்தது.) கோவலனிடம் அத் தெய்வம் கேட்டதற்கு கோவலன் என்ன செய்திருக்கலாம்? கண்ணகியையும் கவுந்தியையும் கானுறைதெய்வ வளாகத்திலிருத்தித் தான்மட்டும் வசந்த மாலையோடு நகர்ந்து வேறெங்கோ போக எண்ணலாம். அன்றேல் “இவள் ஏன் தன்னைத் தேடிவந்தாள்?” என்று குடையலாம். மாதவியை நாடியும் போகலாம். அன்றேல் ”நடந்தது நடந்ததே; மாதவியோடும் இனி வாழேன்; இவளோடும் குலவேன். என் மனையாளொடு மதுரைக்குச் செல்வதே சரி” யென்று திருந்தியும் அமையலாம்.

இந்நிலையிற்றான், ”இந்த வலிய காட்டினுள் மயக்கும் தெய்வமும் உண்டு” என மாங்காட்டுப் பார்ப்பான் கூறிய சொற்கள் நினைவிற்கு வருகின்றன. “ஒருவேளை ’ஐஞ்சில் ஓதி’போல் வந்து எனைக் கானுறைதெய்வம் குழப்ப முற்படுகிறதோ?” என ஐயுறுகிறான். (ஐஞ்சில் ஓதி= ஐந்தாகிய கூந்தல். பொதுவாய்ப் பெண்கள் முடியை மூன்றாய்ப் பிரித்துச் சடைபின்னுவர். கலை நயம் பொருந்தியோர், அக்காலத்தில் தங்குழலை ஐந்தாய்ப் பிரித்துச் சடை பின்னிக்கொள்வர். மாதவியும் வசந்தமாலையும் இப்படிச்செய்வார் போலும்.) சோதனையிற் தப்பிக்கக் கொற்றவையை விரும்பி அழைத்துத் “தாயே காப்பாற்று” எனக் கோவலன் சொல்வது முற்றிலும் இயல்பான செய்கை. நம்மிற்பலர் எண்ணங்குழம்பிய நிலையில் இன்றும் விருப்புத்தெய்வத்தை விளித்து, “தெய்வமே! காப்பாற்று” என்கிறார் அல்லவா? ”காப்பாற்று” என்ற பின், சோதனை தொடருமோ?

கோவலன் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திரம் ஆதலின், கானுறை தெய்வம்/ வனசாரினி கோவலனிடம் தன்னுருவைக் காட்டி ”உன்னைச் சோதிக்கவே மயக்கினேன். நான் செய்ததை கான மயிற் சாயல் கொண்ட நின் மனைவிக்கும். புண்ணிய முதல்விக்கும் உரைக்காது இங்கிருந்து செல்” என்றதாம். பாய் கலைப் பாவை என்பது கொற்றவையைக் குறிப்பதாய்ப் பல்வேறு உரையாசிரியர் கூறுவர். ஆனால் அடியார்க்குநல்லார் “அந்தரி” என்று வேறு சொல் தொடுத்துச்சொல்வார். அந்தரி என்பவள் கொற்றவையா இயக்கியா? சற்று தடுமாறுகிறோம். ஏனெனில் 11 ஆம் தீர்த்தங்கரரான ஸ்ரேயம்ஸ நாதருக்கு இயக்கி/மாணவி ஆன கௌரி கலைமானை ஊர்தி ஆக்கியவள்.(http://www.lchr.org/a/42/m9/sasandevs/) ஒருவேளை இக்கௌரியும் கொற்றவையும் ஒன்றோ, என்னவோ? தவிர, காடுகாண் காதையை அடுத்து வேட்டுவ வரியில் கலைமானைக் கொற்றவை ஊர்தியாக்கிப் பல அடிகள் வரும். புலி/சிங்கமும் கலைமானும் கொற்றவை ஊர்திகளாய்ச் சொல்லப் பட்டவை. நமக்குத் தெரியாத ஊடாட்டங்கள் சமணத்திற்கும் வேதநெறிப் பட்ட சிவ, விண்ணவ நெறிகளுக்கும் இடை இருந்துள்ளன. நாம் இற்றைப் புரிதலிலேயே பேசிக்கொண்டுள்ளோம்.

பொய்கையிலிருந்து தாமரையிலைத் தொன்னையால் நீரெடுத்து வந்து, தளர்ந்திருந்த கண்ணகி மடந்தைக்குக் கொடுக்கிறான். (மடந்தைப் பருவம் என்பது 13-19 வயதிற்குள் இருக்கும். கண்ணகிக்கு 17 வயது இருக்கலாமென்று முன்னே சொன்னேன்.) கோவலன் நீர்கொடுத்த பின் ”வெய்யில் ஏறுகிறது. தீயகாட்டின் வழி இனிச் செல்வதரிது” என்றெண்ணிய கவுந்தி, குரவம், மரவம், கோங்கம், வேங்கை நிறைந்த இடைவழியே, மயக்குஞ் சாலைப் பரப்பில், நடப்போர் தவிர வேறுயாரும் இல்லாநிலையில், [மாரி வளம் பெறா வில்லேருழவர், கூற்றைவிட மிகுந்த வலியொடு வில்லேந்தி, வேற்றுப் புலம் ஏகினும் நல்வெற்றி தந்து அதனாற் கழிபேராண்மைக் கடன் எதிர்பார்த்து இருக்கும் நெற்றிக்கண்ணுடையவளும், விண்ணவர் மகளும், குற்றமற்ற சிறப்புடைய வான்நாட்டவளும் ஆன] ஐயை கோட்டத்திற்கு கோவலன், கண்ணகியொடு வந்தடைகிறார்.

மூன்று வழிகள் சேருமிடத்தில் கானுறைதெய்வக் கோட்டமிருந்தது. அது இற்றை மதுரை மேம்பாலத்திற்கு அருகிலென முன்னால் ஊகித்திருந்தோம். இக் கானுறை தெய்வக் கோட்டமே முதல்நாள் மூவரும் தங்கிய இடமாகும். ஒருநாளைக்கு ஒரு காதமே (4 கூப்பீடு = 1 காதம் = 22000 அடி = 4.166667 மைல் = 6.7050438 கி.மீ) இவர் நடப்பதாலும், ஐயைக் கோட்டம் மதுரைக் கோட்டைக்குச் சற்றுமுன் இருக்கலாம் என்பதாலும் [பொதுவாகக் கொற்றங்களுக்கு - கோட்டைகளுக்கு- அருகிற் சற்றுமுன் ஐயைக் கோட்டங்கள் (கொற்றவைக் கோட்டங்கள்) இருப்பது தமிழக வழக்கம். இன்றும் இடிந்த கோட்டைகளுக்கு அருகில் இதுபோல் அம்மன்கோயில்களைக் காணலாம்], இற்றை மேம்பாலத்தில் இருந்து வைகை வடகரையில் கிட்டத்தட்ட 7/7.5 கி.மீ. நடந்து வந்தால், பழமதுரைக்கருகில் வரலாமென்ற முடிவிற்கு வரவேண்டியுள்ளது.. இவ்விடத்திற்குத் தெற்கே ஆற்றைத் தாண்டிப் பழமதுரை இருக்கலாம். இன்று தொல்லியல் மூலம் கண்டுபிடித்துக்கொண்டிருக்கும் சிலைமான் கீழடிப்பகுதி இக்கணக்கோடு சரியாய்ப் பொருந்துகிறது. ஒருவேளை பழ மதுரையைத் தொல்லியல் நெருங்கிவிட்டதோ, என்னவோ? 
 ..
காடுகாண் காதையை நாம் பெரிதுங் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆழ்ந்து படித்தால் இதுவரை புரியாத தமிழர் வரலாறு இப்போது பெரிதும் புரியும். அதைப் புதினமென்று என்னாற் கொள்ள இயலாது. அப்படிச் செய்பவர் தன் கண்ணை மூடிக்கொள்கிறார் என்றே சொல்லுவேன். பூனை தன் கண்ணை மூடிக்கொண்டால் உலகமே இருண்டுவிடாமா, என்ன?

அன்புடன்,
இராம.கி.

No comments: