Thursday, September 20, 2018

கட்சி

ஒருமுறை மிடையத் (media) துறையில் இருக்கும் நண்பர் பிரகாசு கட்சி பற்றிக் கேட்டிருந்தார். அவர் கேள்வி: "கட்சி என்பது தமிழா? அல்லது வேற்றுமொழியா?". தெக்சாசில் இருக்கும்l முனைவர் நா.கணேசன் அதை கக்ஷி எனும் வடமொழி என்றே சொல்லிக்கொண்டிருந்தார். அதை மறுத்து எழுதியது இது.

கள் என்னும் வேர்ச்சொல் கட்டுதலைக் குறிக்கும். கூட்டமாய் இருப்பதையும் கள்ளுதலென்றே குறிக்கிறோம். பறவை கள், விலங்கு கள், மாந்தர் கள், தமிழர் கள் என்கிறோமில்லையா? அந்தக் கள் என்பது கூட்டப்பொருளைத் குறிக்கிறது. களமென்ற சொல்லும் மக்கள் கூடும் இடத்தைக் குறிக்கும். கட்சிக்கும் களமென்ற பொருளுண்டு. களம்/கூட்டம் என்ற பொருளில் கட்சி என்ற சொல் ஆளப் பட்டிருக்கிறது. கள் + சி = கள்சி ஆகிப் புணர்ச்சிவிதியால் அது கட்சியாகும். (சி என்பது பெயர்ச்சொல்லாக்க ஈறுகளில் ஒன்று.) கூட்டமாய் இருப்போர் என்று பொருள். எதற்கு வேண்டுமானாலும் கூட்டஞ் சேரலாம். மக்களாட்சி மிகுந்த இந்நாளில் இச்சொல்லின் பயன்பாடு கூடிப்போனது.

ஒருகாலத்தில் வெவ்வேறூ மெய்யியலார், சமயத்தார் பட்டி மண்டபங்களில் “நாவலோ நாவல்” என்று முழக்கமிட்டுத் தம் கொள்கைவாதங்களைப் பேசுவர். இதுபற்றி மணிமேகலை, நீலகேசி போன்ற நூல்களில் அறியலாம் (வளையாபதி, குண்டலகேசியைத் தொலைத்துவிட்டோம். அவையும் அதுபோன்ற நூல்கள் தான்.) இது போன்ற பட்டிமண்டபங்கள் அக்கால மகதத்திலும், தமிழகத்திலும், கி.மு.600க்கு முன்னிருந்தே பழக்கமாய் இருந்திருக்கவேண்டும். (நம்மூரில் இன்றும் இருக்கிறது.) ”இந்தாப் பார்றா! இவனும் கட்சி கட்டிக்கினு பேசுறான்” என்று இன்றுவரை இச்சொல் நாட்டுப்புறத்திற் பயன்படுகிறது. (கட்டுதல் வினைச்சொல்லைப் பாருங்கள். கட்சியின் சொற்பிறப்பு புரிந்துவிடும்.) ”கட்சி” வடசொல் என்றால் கள்ளில் அமையும் நூற்றுக்கணக்கான சொற்களெல்லாந் தமிழிலாது போகும். நான் பார்த்தவரை ”கட்சி” முதலில் ஆளப்பட்டது சிலப்பதிகாரத்திற்றான்.. 


மறைமுது முதல்வன் பின்னர் மேய
பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக்
கட்சியும் கரந்தையும் பாழ்பட
வெட்சிசூடுக விறல்வெய் யோனே!

என்று சிலப்பதிகாரம் வேட்டுவ வரியின் கடைசி 4 வரிகளில் ”கட்சி” என்ற சொல் வரும். ”மறைமுது முதல்வன்” என்பது இங்கே சிவனைக் (செயினர் ஆதிநாதர் என்பார்) குறிக்கும். பாண்டியர் செயினராகவோ, சிவநெறியாளர் ஆகவோ தான் பெரும்பாலும் இருந்தார். ”பொறையுயர் பொதியிற் பொருப்பன்” என்பது பொதியமலையைக் கொண்ட பாண்டியனைக் குறிக்கும். பிறர் நாட்டு கட்சி என்பது கரந்தைப்போர் செய்து தம் ஆக்களைக் காப்பற்றிக் கொள்ளும் பிறர் நாட்டுக் கூட்டம், கரந்தை என்பது ஆக்களைக் காக்கும் தொழில். வெட்சி என்பது ஆக்களைக் கவருந் தொழில். அக் காலத்தில் பல்வேறு சண்டைகளில் வெட்சி X கரந்தைச் சண்டை என்பது முகன்மையானது. முல்லை நிலத்தில் பெரிதுஞ் செய்வது. இங்கே நாலு வரிகளில் ”பிறர்நாட்டு ஆக்களை பாண்டியன் கவர்ந்துவரட்டும்” என்று வேட்டுவ வரி சொல்கிறது. அந்த வெட்சிப்போரில், பிறர்நாட்டுக் கட்சி பாழ்படட்டும் என்றுஞ் சொல்கிறது.

விறல் வெய்யோன் என்பது திறமையான வெய்யை ஆற்றுக்காரனைக் குறிக்கும். வெய்யை= வையை. வெய்யோன்= பாண்டியன். வெள்கை என்பதே வெய்யையானது. இன்று இன்னுந்திரித்து வையை என்கிறோம். தொடக்க காலத்தில் வையைநீர் பெருக்கெடுத்துக் குறைந்ததொலைவில் பெருஞ் சரிவில் ஓடிவந்தமையால் வேகங்கூடி நுரைதள்ளி வெள்ளையாய் ஓடிவரும். பார்ப்பதற்கு வெள்ளையாய்த் தோற்றும். வையைப் பெயரின் உட்பொருள் இதுவே. தவிர, வெள்ளை, பாண்டியருக்கு மிகவும் வேண்டிய நிறம். நெற்றியில் வெள்ளை நிறம் பூசியவர். பாண்டில் என்றாலே வெள்ளைதான். மதுரைக் கோயிலும் வெள்ளியம்பலம் தான். வெள்ளையையும் பாண்டியரையும் பற்றி நிறையப் பேசலாம். வேறிடத்திற் பார்ப்போம். [வெள்ளைத் திருநீற்றை, சாம்பலைப் பூசுவது பாண்டியர் இனக்குடிப் பழக்கம். இதேபோல் கோழிநிறக் குங்குமந் தரிப்பது கோழியரான சோழியரின் பழக்கம். சாரலைத் தரிப்பது சாரலர்/சேரலர் பழக்கம். இன்றெல்லாங் கலந்துபோய் சமயப்பழக்கங்களாய்த் தோற்றுகின்றன.

இனி வடசொல் வழக்கிற்கு வருவோம். கள்ளுதல் என்பது உறுப்புகள் சேருவதற்கும் பயன்படும். கள்ளுதல் என்பது புணர்ச்சியில் கட்டுதல் என்றும் ஆகும். தோளும் மேற்கையும் சேருவது ஒரு கட்டு. மேற்கையும் முழங்கையும் சேர்வது இன்னொரு கட்டு. இதுபோல் உடம்பெங்கும் பல்வேறு கட்டுகள்/மூட்டுகள் உள்ளன. தோளும் மேற்கையும் சேருமிடத்தில் குழிவான இடம் உள்ளார்ந்திருக்கிறது. கள்ளுக்குள் என்ற பொருளில் அது கள்க்கு+உள்= கள்க்குள் என்றாகும். புணர்ச்சிவிதியால் கட்குளென்றும் பின் பேச்சுவழக்கில் கக்குளென்றுமாகும். முதற்ககரம் தவிர்த்து அக்குளென்றுஞ் சொல்வோம்.
கக்குள் கக்கமென்றுஞ் சொல்லப்படும். ”கக்கத்துக்குளே என்னடா வச்சிருக்கே?” கக்கமென்ற சொல் வடக்கே போய்க் கக்க என்றாகும். கட்சி சேர்பவரைக் கட்சிப்பெரியவர் எப்படி ஏற்றுக்கொள்வார்? தன் கக்குளில் அணைத்து, சேர்பவர் தோளில் கைபோட்டுச் சேர்ப்பாரில்லையா? இச்செயலுக்குக் கக்க>கக்ஷ என்று அங்கு பெயர்.. அப்படித்தான் மோனியர் வில்லியம்சு சங்கத அகரமுதலி சொல்லும்.. வடசொல் என்போர் அங்கு போய்த் தேடுங்கள். நான் சொல்வது புரிந்துபோகும். இச்சொல்லுக்கு இகர முடிப்பு சங்கதத்தில் வாராது. கக்ஷ மட்டுமேயுண்டு.

இரு மொழிச்சொற்களின் தோற்றம் இப்படித்தான். கக்ஷ என்ற சொல் மற்ற இந்தையிரோப்பிய மொழிகளில் நானறிந்தவரை இல்லை. பெரும்பாலும் தெற்கிருந்தே இச்சொல் சங்கதத்துள் போயிருக்க வாய்ப்புண்டு. இதன் முதற்பயன்பாடு சிருங்கேரி சாரதாபீடத்தின் 12 ஆவது சங்கராச்சாரியார் (இவர்தான் விசயநகரப் பேரரசின் அரசகுரு. வித்யாரண்யர் என்று பெயர். கி.பி. 1380-86 இல் ஆச்சாரிய பட்டம் பெற்றார்.) எழுதிய “சர்வதர்ஷன சங்க்ரஹ” என்ற நூலில் உள்ளது. அதுவும் வெவ்வேறு சமயக் கொள்கைகளை விளக்கும் நூல்தான். முடிவில் அல்லிருமைக் (அத்வைதம்) கொள்கையை உயர்த்திச் சொல்லும். (இது .சிவநெறிக் கொள்கையை உயர்த்திச் சொல்லும் சிவஞான சித்தியார் போன்றது.) அருமையான நூல். மெய்யியலில் ஆர்வமுள்ளோர் படிக்கவேண்டியது.

புரியாமல் இங்கொருவர் கக்ஷி கட்டிக்கொண்டிருக்கிறார். பேசாமல் கட்சி என்றெழுதலாம். நாம்சொல்லிக் கேட்கவா போகிறார்?

அன்புடன்,
இராம.கி.

3 comments:

செவ்வால் said...

அருமையான விளக்கம் அய்யா. நன்றி!

Athee said...

அருமை !

தமிழ் மொழியின் வடமாக நீட்சியுற்ற வடமொழியை ஏன் "சங்கதம்" என்ற சொல் கொண்டு அழைக்கவேண்டும் ?

இராம.கி said...

அது தமிழின் வடமாக நீட்சியுறவில்லை. அது வேதமொழியின் நீட்சி. வேதமொழி இந்தியத் துணைக்கண்டத்தில் உள்வந்தபோது, இங்கு தமிழிய மொழிகள் வடக்கே இருந்தன. தமிழிய மொழிகள் கொஞ்சங் கொஞ்சமாய்த் திரியத் தொடங்கின. இன்று தமிழோடு ஆங்கிலஞ் சேர்ந்து தமிழ் எப்படி தமிங்கிலமாய்த் திரிகின்றதோ அதுபோல் வடக்கிருந்த தமிழிய மொழிகள் பல்வேறு பாகதங்களாய் (ப்ராக்ருத. கதைத்தல் = பேசுதல். இன்றும் ஈழவழக்கில் புழங்கும் வினைச்சொல். கதம் = பேச்சு. பாவுதல் = பரவுதல். பா+கதம் = பரவலான பேச்சு) மாறின. பேச்சு>பாஷா, மாகதி, அறுத்த மாகதி, சூரசேனி, மாராட்டிரி>மகாராஷ்ட்ரி என்று இவை பல்வேறு வட்டார மொழிகளாகும். இந்த வட்டார மொழிகளை ஒன்றுசேர்த்து ஒரு கலவை மொழியைப் படித்தோர் உருவாக்கினார். இது இற்றை சர்க்காரி இந்திபோல் அன்றிருந்தது. (சம்+கதம் = கலப்புப் பேச்சு = சங்கதம். தமிழில் இப்படித்தான் இச்சொல் அமையும். தண்டமிழ் ஞான சம்பந்தர் இப்படித்தான் அதன் பெயரைத் தேவாரத்தில் அழைப்பார். சம் என்பது சம்ஸ் என்று வடக்கே பலுக்கப்படும். கதம், க்ருத என்றாகும். சம்ஸ்க்ருத என்று அப்படித்தான் பெயரெழுந்தது. சம்ஸ்க்ருத என்பது வடக்குப் பலுக்கல். சங்கதம் என்பது தமிழ்ப்பலுக்கல் (இங்கிலீஷ் என்பீர்களா? ஆங்கிலம் என்பீர்களா?) சங்கதம் கி.பி.300 களில் செந்தரமாக்கப் பட்டுச் செங்கதம் ஆகியது. நமக்குச் செந்தமிழ் போல அவருக்குச் செங்கதம் ஆனது. சங்கதம் முடிவில் செங்கதமாயிற்று. கொஞ்சம் மொழி வரலாற்றைக் கொஞ்சம் தேடிப்படியுங்கள். உங்கள் கற்பனைகளைச் சற்று தள்ளி வையுங்கள்