Tuesday, September 25, 2018

மறைக்காடு - 2

பொ.உ.மு. 100 களில் சேரநாடே பென்னம்பெரியது. [அதனாற்றான் செங்குட்டுவன் பெரிதும் துள்ளினான். தமிழருக்கே ஆழிவேந்தனாய்த் (சக்ரவர்த்தி) தன்னை எண்ணி வடக்கே படையெடுத்தான்.] பாண்டியநாடு அடுத்த அளவானது. இன்னுஞ் சிறிய சோழநாட்டில் நாகநாடும் (நாகநாட்டுள் வட இலங்கையும் சேர்ந்தது போலும். மணிபல்லவம்- நாயினார் தீவு தானே?. அண்மையில் இதிலும் ஒரு மாற்றுக் கருத்து எனக்கு வந்துள்ளது. வேறு கட்டுரையில் பார்ப்போம்.) வளநாடும் சிறு பகுதிகள். நாகநாட்டை விட மீச்சிறிய வளநாட்டிருப்பை உறுதி செய்தவன் செங்குட்டுவனே. தன் மாமன் மகனை (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) இருத்துவதற்காக 9 மன்னர்/வேந்தரைப் போரில் வென்றது சிலம்பிற் சொல்லப்படும். சிலம்பின் காலத்தை நான் கி.மு.75 என்றே சொல்வேன். அப்படியானாற்றான் சங்ககால வரலாறு பூதியற் சான்றுகளோடு (physical evidences) பல்வேறாய்ப் பொருத்த முடிகிறது. கி.பி. 144க்கு அருகில் சிலம்பு எழுந்திருக்கலாம் என்பதை நான் மறுப்பேன். வரலாறு மிகுந்து புனைவு குறைந்த சிலம்போடு, புனைவு மிகுந்த மணிமேகலையை இரட்டைக் காப்பியமாக்கிச் சிலம்பின் காலத்தைக் கீழ் இழுப்பதை நான் மறுப்பேன். பெரும்பாலும் மணிமேகலை காலம் கி.பி.285-390க்குள் தான். (இதை வேறு தொடரிற் பேசுவேன்.) கோடியக் கரையின் சிறப்பறிய செங்குட்டுவனின் தாய்வழித்தாத்தன் மணக்கிள்ளியிடம் போகவேண்டும்.

”வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்
குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்
சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்”

என்று பதிற்றுப்பத்தில் 5 ஆம்பத்தின் பதிகம் செங்குட்டுவனைக் குறிக்கும். இம்மணக்கிள்ளி யார்? மருவல்=தழுவல், சேர்தல். (”மருவுகை” இந்தை யிரோப்பிய மொழிகளுக்கும் -ஆங்கிலத்தில் marriage- போயிருக்கிறது.) மருமகன்/மகள் என்பார் தழுவிச் சேர்த்துக்கொண்ட மகனும் மகளுமாவர். மருவற் பொருளில் இன்னொரு சொல் மணத்தலாகும். ஒரு குடும்பம் இன்னொன்றைத் தழுவி உறவுகொள்ளும் நிகழ்வே மணமாகும். (அகம் 86-இன் படி மண்ணுதலெனும் மஞ்சள்நீராடலும். பூநெல் சொரிவதும், வாழ்த்தலுமே மணமாகும்.) மணமகனும் மணமகளும் பந்தங்கொண்ட மகனும் மகளும் ஆவர்.மணமகன்/ மணமகள் வீடு, மண/மரு வீடாகும். மணக்கிள்ளி = சம்பந்தங் கொண்ட கிள்ளி. மணக்கிள்ளியெனும் உறவுப் பெயரைப் பதிகம் பாடியோர் இயற்பெயர் ஆக்கிவிட்டார். பதிகத்திற்கு புத்துரை எழுதியோரும் இதை உணரவில்லை. சோழன் மணக்கிள்ளி(யின் வழி) நெடுஞ்சேரலாதற்கு ஈன்ற மகன்” என்றே மேலுள்ள அடியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

சேரரின் மணவீட்டைச் சேர்ந்த மணக்கிள்ளி (ஐயை/நற்சோணையின் தந்தை) உறையூர்ச்சோழன் தித்தனாவான். சமகால அரசர்/புலவர் இருப்புகளை அலசினால் இது புலப்படும். யா, இருளைக்குறிக்கும் இற்றல்= போக்குதல்; யாயிற்றன்= இருளை இற்றுகிறவன். யா>ஞா>நா திரிவில் யாயிற்றன் ஞாயிற்றனாவான். யாயிற்றன்> ஆயிற்றன்> ஆதிற்றன்> ஆதித்தன் என்பது சூரியனைக் குறித்தது. (”யா”வழிச் சொற்பிறப்புக்களை ப.அருளியின் நூலிற்காண்க.) ஆதித்தனின் முதற்குறை தித்தனாகும். முதற் குறைப் பெயர்கள் தமிழிற் பரவலாயுண்டு. தித்தன்= நெருப்பானவன், ஒளி பொருந்தியவன். இவன் பட்டம் ஏறுகையில் முடித்தலைக் கோப்பெரு நற்கிள்ளியெனும் பெயர்கொண்டான். புறம்13 இல் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், கொங்குக் கருவூரில் இவன் யானை மதங்கொண்டு தடுமாறியதை அந்துவஞ் சேரல் இரும்பொறைக்குக் காட்டுவார். செங்குட்டுவன் பாட்டனைத் திகழொளி ஞாயிற்றுச் சோழனெனச் சிலம்பு புகலும். பரணர் பாடிய சமகால அரசரை ஒருங்கே பார்க்கினும் இது விளங்கும்.

தித்தனின் மகன் வெளியன். (வெள்ளையன், வெள்ளைச்சாமி, வெள்ளை யப்பன் என்று சொல்கிறோமே?). இதன் பொருளை ”வெள்ளைப் பிள்ளை” என்னாது, வெளிறிய கருப்பெனலாம். ஏதோ காரணத்தால் அப்பனுக்கும் பிள்ளைக்கும் மனம் வேறாகி, மகன் உறையூர் விட்டு விலகி வளநாட்டுத் துறைமுகத்தில் வீர விளையாட்டு, இசை, கூத்தென்றே சிலகாலங் கழித்தான். தித்தனுக்குப் பின், வேற்பல்தடக்கை பெருவிறற்கிள்ளி (பல்வேறு தடங்களில் வேல்வீசுந் திறன்) என்றும் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி (உறையூருக்கு அருகில் பேட்டைவாய்த்தலை போர்வை எனப்பட்டதாம்) என்றும் அழைக்கப் பட்டு, வெளியன் உறையூரிலிருந்து ஆண்டான். நெடுஞ்சேரலாதனின் மைத்துனன் வெளியனே. மச்சான்கள் முரணிச் சண்டையிட்டு இருவரும் போர்க்களத்தில் இறந்ததைக் கழாத்தலையார் பாடுவார் (புறம் 62, 368). பெருவிறற்கிள்ளிக்குப் பின் வளநாடு தடுமாறி, செங்குட்டுவனே பங்காளிச் சண்டை தீர்த்து 9 அரசருடன் போரிட்டுத் தன் மாமன் மகனைப் (குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்) பட்டமேற்றுவான்.

தித்தனின் துறைமுகமாய் நாகநாட்டுப் பூம்புகாரிருக்க வழியில்லை. கடற்கரையின்றி, வளநாடு நிலத்தால் மூடிய நாடுமில்லை. வளநாட்டின் துறைமுகம் உறையூரின் கிழக்கே நாகைக்குத் தெற்கே தான் இருக்கமுடியும். பிற்றை வரலாறு நோக்கின், குணக்கடலும், (ஆங்கிலர் பெயரிட்ட) பால்க் ஒடுக்கமும் (Palk straits) சந்திக்கும் கோடியக்கரையே வளநாட்டின் முதல் துறையாக வாய்ப்புண்டு. (மன்னார் வளைகுடா பால்க் ஒடுக்கத்தின் கீழ் உள்ளது.) துருத்திய கோடியக்கரையை promontory என்று பொதுவாயும், கழிமேட்டு முனை (Point calimere) என விதப்பாயும் சொல்வர். திருவணைக் கரை, தொல்முது கோடி, தலைஞாயிறென்றும் சொல்லப்பட்டது. கோடியக் கரையின் வணிக வாய்ப்பை Ptolemyயும், Plinyயும், Periplus of the Erythraean Seaயும் பேசும். பெரும்படகுகளும், புணைகளும், மரக்கலங்களும் இத்துறையிற் தொடர்ந்து இயங்கின. பின்னால் நாம் ஆயப்போகும் தேவாரப்பாடல் வரிகளும் கோடியக் கரைத் துறைமுகம் பற்றிய முகனச் செய்தியைக் குறிப்பால் உணர்த்தும்.

கோடியக்கரைக்கு மேலே கோடியக்காடு, அணைக்காடு, மறைக்காடு, பூக்காடு (புஷ்பவனம்) எனப் பல்வேறு காடுகளிருந்தன. இப்பெயர்கள் எல்லாம் கோடியக்கரையைக் காரணங் காட்டியே அமையும். தலை ஞாயிற்றின் மேற்கே கோடியக்காடும், பஞ்சனடிக்குளமெனும் உப்புக் கடல் ஏரியும், அதன் மேற்கே முத்தூர்ப்பேட்டை அலையாற்றிக் காடுகளுமுண்டு. Mangrove= கழிக் கானல்; கானல்/கானம் என்ற சொற்பயன்பாட்டை ஆலங் கானம், கானப்பேர், மாமல்லைக்குத் தெற்கே ஆலம்பாறைக் கோட்டைக்கு அருகமைந்த மரக்கானம் (மரவக்காடு; சிறுபாணாற்றுப்படையின் எயிற்பட்டினத்தோடு சேர்ந்தது. கீழே விளக்குவேன். ஒரே பெயர் இருவேறிடங்களில் இருப்பது தமிழ் நாட்டிற்கொன்றும் புதிதல்ல) போன்ற பெயர்களாலறியலாம். (சிலம்பின் கானல்வரி நினைவிற்கு வருகிறதா? அது முல்லைக் காட்டிற் பாடியதா? கடலுக்கருகில் கழிக்கானலிற் பாடியதா?. இரண்டாம் கரிகாலன் மகள் ஆதிமந்தி சேரன் ஆட்டனத்தியோடு ஆடிப் பாடியதும் புகாரின் கானல் வெளியிற்றான்.)

கானல்களின் தாக்கம் தமிழகக் கடற்கரையில் மிகவுண்டு. சென்னை அடையாற்றங்கரை சுற்றி இன்றிருக்கும் கிண்டிக்காடு ஒரு நெய்தலங் கானலே (இதன் முற்காலத் தொடர்ச்சியே சம்பந்தர் காலத்து மயிலைப் புன்னையங் கானலாகும். சம்பந்தர் பாடல் நினைவிருக்கிறதா? (தேவாரத்திலும் நாலாயிரப் பனுவலிலும் ”பற்றியை” நாடியமைவதோடு வரலாற்றுச் செய்திகள் தேடுவதிலும் பயனுறுத்தலாம்.)

மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

அப் புன்னையங்கானலின் தொடர்ச்சியான இன்றைய கிண்டிக்காட்டில் மான்/மறிகள் இன்றும் உலவுகின்றன. உடனே அதை மரைக்காடு> மறைக்காடு எனலாமோ? மான்/மறிகள் உலவிய/உலவும் அலையாற்றிக் காடுகள் தமிழகத்திற் பலவுண்டு. மாமல்லை தாண்டி மரக்கானம் போனால் அங்கும் கானலே. (மான்கள் ஒரு காலத்தில் அங்குமிருந்தன) கடலூர், பிச்சாவரம், தில்லை போனால் அங்கும் கானலுண்டு; மான்களும் இருந்திருக்கலாம். (தில்லை பற்றிய முடிவுறா நெடுந்தொடரை பத்தாண்டுகளுக்கு முன் என் வலைப்பதிவில் எழுதினேன். சில மடற்குழுக்களிலும் இட்டேன். அப்போது எல்லாம் மின்தமிழில் எழுதுவதில்லை. பல புலனங்களை விளக்கும் அத் தொடரை இத்தோடு சேர்த்துப் படிக்கப் பரிந்துரைக்கிறேன். மரைக்காடு பற்றிய அற்றைக் குறைப்புரிதல் தவிர வேறொன்றும் மாற்றும்படி அதிலில்லை.)

http://valavu.blogspot.in/2006/07/1_31.html
http://valavu.blogspot.in/2006/07/2_31.html
http://valavu.blogspot.in/2006/07/2_31.html
http://valavu.blogspot.in/2006/08/4.html
http://valavu.blogspot.in/2006/08/5.html

இன்னும் தெற்கே மறைக்காடு அடங்கிய முத்துப்பேட்டை வட்டாரம். பொருநை கடல்புகும் இடத்திலுள்ள இற்றைப் புன்னைக்காயல் ஆகிய இடங்களிலும் நெய்தலங்கானலுண்டு. கானல்களின் புதலியற் (botanical) பார்வையைத் தேவார வழி கீழே கூறுவேன். கோடியக்கரையின் கிழக்கு, தெற்கில் அலைகுறைந்த ஆழமிலாக் கடலின் ஒருசில ஆழிடங்களில் வங்கங்களையும், கலங்களையும் நங்கூரமிட்டு நிறுத்திப் படகின்வழி பொருட்களை இறக்க முடியும். 50 ஆண்டுகள்முன் நாகபட்டினத்திற்கூட இப்படித்தான் கப்பல்களியங்கின. (சேரர் முசிறியும், சோழர் புகாருங் கூட இப்படியே. கப்பல்கள் தொலைவில் நிற்க, ஆட்கள் பண்டங்களோடு படகுகளில் இறங்கி வருவர். இக்காலத் துறைமுக நடைமுறைகள் அன்றும் இருந்ததாய் நாம் பெரிதுங் குழம்பிக் கொள்கிறோம். கடலைத் தோண்டி மண்ணை வாரித் துறையை ஆழப் படுத்துவது இக்கால முறை.) ஞாழலும், புன்னையும் நிறைந்த, கோடியக்காடும் தலைஞாயிறும் சேர்ந்த, ”கானலம் பெருந்துறை”க்கு (= காடுநிறைந்த பெருங்கடற்றுறை) இராமன் வந்ததாய்,

”பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானலம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவணி மகளிர் தழையணிக் கூட்டும்
வெள்வேற் கவுரியர் தொல்முது கோடி
முழங்கிரும் பௌவம் இரங்கும் முன்துறை
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த
பல்வீழ் அல்லம் போல
ஒலி அலிந்தன்று, இவ் அழுங்கல் ஊரே”

என அகம் 70 இல் மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன்மள்ளரின் நெய்தற்பாடல் சொல்லும். இதில் தொல்முதுகோடி என்ற பெயரும் கானலம்பெருந்துறை என்ற பெயரும் சேர்ந்துவருவதைக் காணுங்கள் இதைத் தவிர, ”கானலம் பெருந்துறை” என்ற கோடியக்கரை

நுண்கோல் அகவுநர்ப் புரந்த பேரிசைச்
சினங்கெழு தானைத் தித்தன் வெளியன்
இரங்குநீர்ப் பரப்பின் கானலம் பெருந்துறை
தனந்தரு நன்கலஞ் சிதையத் தாக்குஞ்
சிறுவெள் ளிறவின் குப்பை யன்ன

என்ற (அகம் 152இன் 4-8) வரிகளினூடே குறிக்கப்படும். இதுபோல் இன்னும் பல குறிப்புகள் சங்க இலக்கியத்திலுண்டு. அவற்றை ஆழவாய்ந்தோர் குறைவு. துறைமுகமென்று சொல்லக்கூடிய கானலம் பெருந்துறையில் உல்கு (உல்= ஆகு, ஆய்; அரசனுக்காகும் பங்கு; ஒரு காலத்தில் இது ஆறிலொருபங்கு. உல்கு= ஆயம். “உறுபொருளும் உல்குபொருளும் - குறள் 756), சுங்கம் [சுல் = சுற்றியாகு, சுல்ங்கு>சுங்கம்; நாட்டினுள் வந்திறங்கும் பண்டத்தின்மேல் அரசு விதிக்கும் ஆயம். உல்கிற்கும்/ சுங்கத்திற்கும் வேறுபாடின்றிப் பயன்படுத்திய காலமுண்டு. பின் இப்புழக்கம் மாறியது. ஓரிரு மாதங்கள் முன்வரை உல்கு= excise duty; சுங்கம்= customs duty; இப்போது சரக்கு சேவை வரி (Goods and Services Tax) என்கிறார்], அரச கருமங்கள் என்று பார்ப்பதற்கு எயில்கள், வாயில்களோடு ஒரு கோட்டை இருக்குமே? Every harbour those days would have a fort to conduct the Government functions.

கோட்டை சுற்றி அகழியும் (கழிகளே அகழியாகலாம்) அதைச்சுற்றி மிளைக் காடும் இருக்குமே? மிளைதல்= செறிதல். இக்காட்டில் மரங்கள் உயரா விடினும், அடர்த்தி (1 சதுரக் கி.மீ.யிலுள்ள மரங்களின் எண்ணிக்கை) கூடி, வெளியாருக்குக் கோட்டை தெரியாது மறைந்திருக்க வேண்டும். மாற்றிச் சொன்னால் காடு கோட்டையை மறைத்தது. முள்மரக்காட்டை ஒழித்து உள்ளே வருவதும் எளிதல்ல. எனவே இது காவற் காடுமாகும். மதுரை மிளைக் காட்டின் வெளியே புறஞ்சேரிகள் (suburban areas. புறஞ்சேரிகள் என்பதற்கு இற்றை மேட்டுக்குடியார் ஒப்புவரோ?) இருந்ததாய்ச் சிலம்பு சொல்லும். மறைக்காடு அற்றைக் கோடியக் கரையின் ஒரு புறஞ் சேரியே. வேதநெறி பழகும் பார்ப்பனச் சேரியாய்க் கூட அது இருந்திருக்கலாம். கழிக்கானல் பற்றிய மேல் விரிவைத் தேவாரங்களின் வழி கீழே பார்ப்போம்.

அன்புடன்,
இராம.கி.

No comments: