Thursday, August 02, 2018

உறவுகள் - தொடர்ச்சி

”தனக்குப்பின் பிறந்த பெண்மகவை தங்கை என்று அழைப்பதே இலக்கிய வழக்கு. பேச்சுவழக்கில் தங்கச்சி என்று சொல்வர். நண்பரொருவர் தங்கச்சீ என்ற விளியைத் தானெழுதிய கவிதையொன்றில் பயன்படுத்தி இருந்தார். அச்சொல்லாட்சி ஆர்வத்தைத் தூண்ட மேலும் அது பற்றி ஆராயலானேன். தங்கை தங்கச்சி இரண்டில் எது சரி?” என்று முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ஓர் அறி வினா கேட்கப்பட்டது. அக்கட்டுரையைப் படித்தநான் அதனின்று பெரிதும் வேறுபட்டேன். ”உறவுகள்” பற்றிச் சில செய்திகளை ’வளவு’ வலைப்பதிவில் http://valavu.blogspot.com/2005/04/blog-post_18.html என்ற இடுகையின் மூலம் 13 ஆண்டுகள் முன் அளித்திருந்தேன். மேலே வருங் கேள்வி அதன் தொடர்ச்சி. எனவே மீன்உம் வலைப்பதிவிற் பதிகிறேன்.

தமிழ்க்குமுகாயத்தில் உறவுப்பெயர்கள் எப்போது எழுந்தன? தெரியாது. தொடக்கம் பார்த்தால், தமிழ்க்குமுகாயமும் ஒரு தாய்வழிக் குமுகாயமே..50000/60000 ஆண்டுகள் முன்னால் இந்தியா நுழைந்த (ஏதோ வொரு மொழி பேசிய) M130 எனும் பழங்குடி மாந்தர் தாய்வழிக் குடியினரே! அவர்மொழி தமிழென ஒரு சாராரும், ”இல்லை, அவர் மொழியோடு தமிழுக்குத் தொடர்பிருக்கலாம்” என வேறு சிலரும் சொல்வார். இன்றைக்கு அருவருப்பாயினும் (எகிப்து அரசகுலத்தில் இருந்ததுபோல்) அப்பழங்குடியில் தலைமுறை கடந்த பாலுறவு இருந்திருக்கலாம். குடும்பம், குலம், கணம் பெரிதானபிறகு, தலைமுறைகளுக்கிடை பாலுறவு கூடாதெனுங் கட்டுப்பாடு வந்தது. இன்னும் சில ஆயிரமாண்டுகள் கழித்து, உடன்பிறந்தோர், பெரியப்பா/சிற்றப்பா மக்கள், பெரியம்மா/சின்னம்மா மக்களோடு புணர்ச்சி கூடாது என்றானது. இன்றோ, அக்காள் மக்கள், அத்தை/மாமன் மக்கள் உறவுங் கூடாதெனும் நிலைக்கு வந்துள்ளோம். இக்கட்டுப்பாடு முற்றிலும் பழக்கத்திற்கு வரவில்லை. ஆனாற் பெரிதுங் குறையத் தொடங்கியுள்ளது. இத்தனை மாற்றமும் மெதுவாய் 60000, 70000 ஆண்டுகளுக்குள் நடந்தவை. மேலே சொன்னவற்றின் மிச்சசொச்சத்தை நம் உறவுப்பெயர்கள் இன்றும் காட்டுகின்றன.

பொதுவுடைமைத் தலைவரான வெடரிக் எங்கல்சு, ”குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் (The origin of Family, Private property and state)” என்ற நூலிற் பழங்குடிக் குடும்பத்தை விவரிக்கும் 2ஆம் அதிகாரத்தில், ”பொதுக் குடிவழியில் வரும் 200 க்கும் மேற்பட்ட உறவுகளைச் சிக்கலின்றி அடையாளங் காட்டும் தமிழர் இலாவகத்தை விதந்துகூறியிருப்பார். அவர் கூற்று கீழே.

And these are not mere empty names, but expressions of actual conceptions of nearness and remoteness, of equality and difference in the degrees of consanguinity: these conceptions serve as
the foundation of a fully elaborated system of consanguinity through which several hundred different relationships of one individual can be expressed. What is more, this system is not only in full force among all American Indians (no exception has been found up to the present), but also retains its validity almost unchanged among the aborigines of India, the Dravidian tribes in the Deccan and the Gaura tribes in Hindustan. To this day the Tamils of southern India and the Iroquois Seneca Indians in New York State still express more than two hundred degrees of consanguinity in the same manner. And among these tribes of India, as among all the American Indians, the actual relationships arising out of the existing form of the family contradict the system of consanguinity.

என்ன போகூழோ தெரியவில்லை, நம்மூர்ப் பொதுமையர் இக்குறிப்பை ஒருநாள்கூட விதந்து ஓதியதில்லை. இந்தியாவில் பொதுவுடைமை கட்டுங் கவலையே அவருக்குப் பெரிதானது போலும். தமிழ்த் தேசிய இனமெல்லாம் அவருக்குப் பொருட்டில்லை. ”சேயோன், பூட்டன், பாட்டன், தந்தை, தான், மகன், பெயரன், கொள்ளுப் பெயரன், எள்ளுப் பெயரன்” என ஒவ்வொரு தமிழனும் தன்னோடு 8 தலைமுறைகளைப் பொருத்தவியலும் பெருமையை ஏன்சொல்ல வேண்டும் என நினைத்தாரோ?..(இதேபோல் பெண்களில் 8 தலைமுறையினரையும் பொருத்த இயலும்.)

முந்தைய இடுகையில், அம்மா>அம்பா>அப்பா என்ற சொற்கள் எழுந்ததை முதலிற் சொன்னேன். பின் ஆய் என்ற சொல்லுக்கு செலுத்தல், நடத்தல், தலைவி என்றெல்லாம் பொருள் ஏற்பட்டதைச் சொன்னேன். தாய்வழிக் குமுகாயம் மாறித் தந்தைவழிக் குமுகாயம் ஆனபோது அப்பன் ஆயன் ஆனதையும், அம்மை ஆயியானதையும் சொன்னேன். ஆயன்= மந்தைகளின் தலைவன். ஆயின் கூட்டம் ஆயமானது; அதாவது கணம். ஆய்த்தி>ஆய்ச்சி> ஆச்சி>அச்சி, ஆய்த்தன்>ஔத்தன்>அத்தன்>அச்சன் என்ற வளர்ச்சிகளையும் பேசினேன் அப்பனை அப்பு என்று தென்பாண்டியில் நெருக்கங் காட்டி அழைப்பது போல் அச்சன் அச்சு என்றும் அழைக்கப்பட்டார். அய்யை> அய்ஞை>அய்நை>அந்நை>அன்னை என்பது ஆய்க்கான இன்னொரு வளர்ச்சி. அய்யை>அய்ஞை>அய்ங்ஙை>அங்கை>அங்கை> அக்கை; அங்கை= தாய் என்பது மேலுமொரு வளர்ச்சி. பழங்குடிக் கணத்தில் குழந்தைக்குத் யார்தாயென்பது ஓரளவு தெரிந்தாலும் தாய் அக்காளாகவும் இருக்கலாமே?. அக்கைக்கும் அங்கைக்கும் வேறுபாடு தெரியாத காலம் அது. அத்தன்>அந்தன் என்றுஞ் சொல்லப்பட்டான்,. அந்தை என்பதும் அப்பனைக் குறித்தது.

இனி இன்னொருவகைப் பார்வையைப் பார்ப்போம். இது பழங்குடி மனப்பான்மைக்கு மாறானதில்லை. ஆனால் தனிச்சொத்து ஏற்பட்டபிறகு எழுந்தசொல். தனிச்சொத்து ஏற்பட்டபிறகு சொத்திருப்போர், சொத்திலாதோர் என்ற பிரிவு முல்லை நாகரிகத்தில் ஏற்பட்டது. மாடுகள், கால்நடைகளே அற்றைச் சொத்துக்கள். மேல், கீழ் என்றகருத்து இக் குமுகாயத்தில் ஏற்பட்டது. முன்பிறந்தானைக் குறிக்க ஐயன் என்றசொல் பற்றாமற்போனது. தலைமுறைப் பாலுறுவு தடுக்கப்பட்டதால், அள் எனும் வேர்ச்சொல் மேல், முன், முந்தைய என்ற பொருள்களைக் குறிக்கும் அள் எனும் வேர்ச்சொல்லில் இருந்து அள்நன்= அண்ணன் என்றசொல் எழுந்தது. அண்ணன் என்பது தனிச்சொத்து ஏற்பட்டபிறகு உருவான சொல். அள்+க்+கு என்ற சொல் மேல்நிலையைக் குறித்தது.. வடக்கு, தெற்கு, குடக்கும், குணக்கு போல் அள்க்கு>அக்கு என்பது உயரத் திசையைக் குறித்தது; அக்கு +ஆள் = அக்காள் ஆனாள். ’அத்து’ நெருக்கத்தைக் குறித்ததால், ”அத்தான்” எழுந்தது.

அக்கு எழுந்தபிறகு அதன் எதிர்ச்சொல் எழாதுபோமா? தாளென்பது அடி, கீழ் என்று பொருள்கொள்ளும். கிழாரியக் காரணங்காட்டி நம்மைத் தாழ்த்திக் கொள்ள எண்ணின் அடியேன் என்கிறோமே? தாளேன்>தாள்ன்>தான், தாளேம்>தாள்ம்>தாம். என்பன இயல்பான வளர்ச்சி.. இவையும் தனிச்சொத்து எழுந்தபின் உருவான சொற்கள். போன்ம் என்ற சங்ககாலச்சொல் இன்று போம், போன் என ஆகுகிறதே? தானும், தாமும் இன்னும் திரிந்து தன், தம் என ஆவது நெடில்>குறில் ஆகும் நிலை. தாள்ங்குதள்>தங்குதல் = கீழிருத்தல். இருத்தல்

ஆளுக்கு மாறாய் ஐ என்ற சொல்லும் பெண்ணைக் குறிக்கும் ஈறாக மாறியது. அக்கு+ ஆள்= அக்காள் என்பதுபோல் அக்கு+ஐ = அக்கை ஆயிற்று. கை என்பதற்கான சிறுமைப் பொருள் நாலடியார் காலத்திற்றான் (பொ.உ.400-500) ஏற்பட்டது. அக்+கை எனப்பிரிப்பது பொருளற்றது. என்னைக்கேட்டால் ஐயையைப் பெண்பால் விகுதியாய்க் கொள்வது நல்லது. அடுத்தது தங்கு+ஐ = கீழிருக்கும் ஐ. தனக்குப்பின் பிறந்தவள். தங்கின் வலிப்புச்சொல் தக்கு. அதிற்கிளர்ந்தது தக்கணம். தம்+ ஆய் >தம்மாய்>தவ்வாய்>தவ்வை (மகர, வகரப் போலி)> தய்யை (வகர, யகரப் போலி)>தாய் தம்+ அப்பன்> தமப்பன்> தகப்பன்; தம்+ அந்தை= தம்மந்தை>தவ்வந்தை>தய்யந்தை> தய்ந்தை>தந்தை; தம்+ அய்யன்= தமய்யன்>தமையன் (பழங்குடிப்பெயரான ஐயன் தனிச் சொத்துக் காலத்தில் பொருள் மாற்றமுற்றது) தம்+ அக்கை = தமக்கை (இதுவும் அப்படித்தான்.) தம்+பின் =தம்பின்>தம்பி. தம் அங்கையைத் தம்+ அங்கை= தமங்கை>தவங்கை>தய்ங்கை>தங்கை என்றும் புரிந்து கொள்ளலாம்.

தான், தாமிற்கு முந்தைய சொற்கள் யான், யாம். யாத்தல் = கட்டுதல்; யாம் கட்டப்பட்ட கூட்டம், கணம். யான் = கட்டிய கூட்டத்தில் ஒருவன். யான், யாம் என்ற சொற்கள் என், எம் என்ற சொற்களை உருவாக்கும். இதேபோல் நாம், நான் என்பது நெருங்கிய தன்மையைக் காட்டும். நள்ளுதல் = நெருங்குதல், நட்பாதல். நள்+ங்+கை = நங்கை இதை நம் + அங்கை >நங்கை = மங்கை (நகர, மகரப் போலி; நுப்பது - முப்பது, நுனி - முனி என்ற போலிகளை நோக்குங்கள்) என்றும் புரிந்துகொள்ளலாம். நம்+பின் = நம்பின்>நம்பி

அக்கச்சி, அத்தாச்சி, அண்ணாச்சு (அண்ணாச்சி என்பது இதன் பேச்சுவழக்கு), அப்பச்சு (>அப்பச்சி), அம்மச்சி என்ற கூட்டுப்பெயர்கல் எல்லாம் நெருக்கங் காட்டும் இயல்பான பெயர்கள். இவை ஏதோ கொச்சை என்பது மேல்தட்டுப் பார்வை. மேல்தட்டு மக்கள் அச்சி போட்டுப் பயன்படுத்தவில்லை என்பதால் அச்சி போடுவது கொச்சை வழக்காகாது. நாளாவட்டத்தில் னகர ஈறு ஆனைக்
குறிக்கவும், ளகர ஈறு பெண்ணைக் குறிக்கவும் தொடங்கியது. நல்ல தங்காள் என்ற கதை உங்களுக்கு ஞாவகம் வருகிறதோ? இதேபோல் அம்மாள் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.

அன்புடன்,
இராம.கி.

.

No comments: