Friday, August 10, 2018

அளவைகளும் சாரியைகளும் - 2

ஏழு அளவைமுறைகளை இப்பகுதியில் பார்க்கப்போகிறோம். படிப்போருக்குச் சற்று பொறுமை வேண்டும். ஒழுங்கான அளவைமுறை இல்லையேல் அறிவியல் இல்லை.

1. நிறுத்தளத்தல் (அல்லது எடுத்தளத்தல்) என்பது எடையளைவைக் குறிக்கும். நிறையும், எடையும் தமிழில் ஒன்றுதானே? பொன்னளவை, பண்ட அளவை என 2 வித நிறுத்தளத்தற் பயன்பாடுகள் உண்டு. நெல்(லெடை), மா(வெடை), பிளவு, குன்றிமணி, மஞ்சாடி, பண(வெடை), கழஞ்சு, வராக(னெடை), கஃசு, பலம், சேர், வீசை, தூக்கு, துலாம், மணங்கு, பாரம் போன்ற அளவைகள் இரு வேறு நிறுத்தலில் வரும் எடையளவைகளாகும். (இப்பொழுது இவை யெல்லாம் மறைந்துபோய்ப் பலருக்கும் கிலோ, கிராம், டன் என்றாகிப் போயின.) இன்னுஞ் சில அளவைகளும், நிறுத்தற் சமன்பாடுகளும் உண்டு. நாம் பயன்படுத்திய நாணய அளவைகளுங்கூட இதிற் கிளர்ந்தவையே. (மாடை, காசு போன்றவை இன்னும் விதப்பானவை.) ஒவ்வொன்றையும் பற்றி நீள எழுதவேண்டும் என்பதால், அவற்றை இங்கு நான் பேசவில்லை. (வாய்ப்பு இருப்பின் இன்னொரு நாள் பார்ப்போம்.) இங்கே சொல்லவேண்டியதை மட்டும் சொல்வேன்..

2. பெய்தளத்தல் என்பது நீர்மப் பெருக்கையும், வாழ்வின் வெவ்வேறு சமயங்களிற் குறிப்பாக வேளாண்மையில் விளையும் கூலப் பெருக்கையும் (திண்மப் பொடிகள், தூள்களுக்கும் இது வளர்ந்தது.) குறிக்க எழுந்தது. செவிடு, ஆழாக்கு, உழக்கு உரி, படி, மரக்கால் (=குறுணி), பறை, கரிசை, பதக்கு, தூணி என்பன தமிழரின் பெய்தளவைகள். இன்று யாருக்கும் பெய்தற்கருத்து நினைவுக்கு வருவதே இல்லை. மாறாக, அதை முகத்தளவை என்கிறோம். (இலிட்டர் கணக்கு வந்ததால் எல்லோர்க்கும் மற்றவை மறந்துபோனது.) நாழி என்பது பெரும்பாலும் படியையும், சிறுபால் உரியையும் குறிக்கும். ஒரு படியில் அரிசியளக்கையில் படியின் விளிம்போடு பெய்த கூம்பு குலையாது (அரிசியை மட்டப் படுத்தாது) அளந்து போடுவர். திண்மத்துகள்களை எப்படி ஒரு கலத்தில் நெறித்து அடைக்கிறோம் - how do we pack solid powders? - என்பதைப் பொறுத்து ஏற்படும் பருமச் சிக்கலை (volume defects) நாளாவட்டத்தில் அறிந்ததால், தேங்க முகத்தளத்தல் என்றமுறையைத் திண்மத் துகள்களுக்கு எனப் (solid particles) பின்னால் பழந்தமிழர் கையாண்டார். அதைக் கீழே பார்ப்போம்.
 .
3. நீட்டியளத்தலில் விரற்கிடை, பெருவிரல், சாண் (இதை அடி/பாதம் என்பர். தமிழ்முறைப்படி, 1 அடி என்பது இன்று பலரும் அறிந்த 8.25 அங்குலமாகும். இதைக் கொடுமுடி சண்முகம் தன் ஆய்வுப் பட்ட நூலில் நிறுவியிருப்பார். வடமுறைப்படி இது 9 அங்குலம். 1 ஆங்கில அடி, 12 அங்குலமாகும். இக் காலத்தில் ஆங்கில அடியையும் மீறி மீட்டரென்று அளவீடு பயில்வதால் நம் ஊற்றுக்களிற் புதைந்துகிடக்கும் செய்தியைப் பலரும் மறந்துவிட்டார். கலைச்சொல் புரிவதற்காக அடி, ஆங்கில அடியை நான் பிரித்தெழுதுகிறேன்.), முழம், சிறுகோல், கோல், பெருங்கோல் (=தண்டம்), கயிறு, கூப்பீடு, காதம், யோசனை என்ற அளவைகள் நீட்டளவையில் அடங்கும்.1 கோலென்பது ஓராளுயரம் அதை 5 ஆங்கில அடி, 5 1/2 ஆங்கில அடி, 6 ஆங்கில அடி என வெவ்வேறு வகையில் நம் நாட்டிற் புரிந்துகொண்டுள்ளார்.

1 கோலுக்கு 5 ஆ.அடி என்பது ஆரியபட்டாவின் அளவுகோலாகும். 5 1/2 ஆ.அடியென்பது தமிழர்வழிப் புரிதல். 6 ஆ.அடியென்பது வடபுலத்துப் புரிதல். வடக்குப்புரிதலே மேலையாசியா, மேலை இரோப்பிய நாடுகளிற் சென்றது. (இன்னும் முடியாத “பழந்தமிழர் நீட்டளவை”த் தொடரை என் வலைப்பதிவில் தேடிப் படிக்கலாம்.) நாமுங்கூட விசயநகர ஆட்சிக்குச் சற்றுமுன், சிறிது சிறிதாக வடவர் அளவைகளுக்கு ஆட்பட்டு விட்டோம். இன்று நம் பிள்ளைகளுக்குத் தமிழரளவைகள் எதுவுமே தெரியாது. அவற்றைச் சொல்லிக் கொடுக்கவும் நாம் அணியமாயில்லை. காலம்போகும் போக்கு அப்படி இருக்கிறது. எங்கு பார்க்கினும் globalization; becoming orphans; without moorings என்ற நிலை நிலவுகிறது. எண்சாண் உடம்பு, நாலுமுழ வேட்டி, கோலாட்டம், கயிறுகட்டியளத்தல், கூப்பீட்டுத் தூரம், கங்கை குமரியிடை 700 காதம் - என்ற பழக்கங்கள், கருத்தீடுகள், சொலவடைகள் எங்கேயென்று கேட்கவேண்டி யுள்ளது. இதையெலாஞ் சொல்லும் இராம.கி. போன்றோர் மடையராய்த் தெரிகிறார்.
 
மேற்சொன்ன அளவை முறைகளில் பரப்பளவையைக் காணாது ஒருகாலம் வியந்திருக்கிறேன். ஆய்ந்துபார்த்ததில் ”நீட்டளவை வழியாகவே பரப்பளவை எழுந்தது” என்பது புரிபட்டது. சதுர வடிவத்தை அடிப்படை வரையறையாகத் (Basic definition) தமிழர்கொண்டதால் இம்மாற்றுப்புரிதல் வந்தது. 1 குழியென்பது 1 தண்டச்சதுரம் (தமிழரின் பழம்புரிதலின் படி இது 121 சதுர ஆங்கில அடிகள். வடவர் முறையில் 144 ச.ஆ.அடிகள். ஆரியபட்டா அளவையில் 100 ச.ஆ.அடிகள்) என்று வரையறுப்பார். வரலாற்றிற் பலவிடங்களில் இந்நுணுக்க வேறுபாடு புரியாது பரப்பளவை, நில அளவைகளில் தவறான சமன்பாடுகளைத் தெரிவிக்கிறார். இக்காலத்தில் விவரம்புரியாது வடவர் அளவையையே தமிழ்ச்சிறார்க்கு நாம் கற்பிப்பதால், நம் மரபுகளையுந் தொலைக்கிறோம். குழியோடு குண்டு (குண்டும் குழியுமாக என்பது சொலவடை), மா, வேலி, பாடகம் என்று நீட்டளவையிற் கிளர்ந்த பரப்பளவைகளுமுண்டு. அம்முறையின் பரிமானத்தை இளம்பூரணர் உரைவழி நாம் உணரவில்லை.

இன்னொன்றையும் சொல்லவேண்டும். பரப்பளவையை நீட்டளவை நீட்சியாக்கிய தமிழர் பருமவளவையை நீட்டளவையின் 3 ஆம் பரிமான நீட்சியாய்க் கொள்ளவில்லை. இற்றை அறிவியலில் 1 litre = 1000 cubic centimetre என்று சொல்லும் நாம், உழக்கிற்கும் விரற்கிடைக்குமான சமன்பாட்டை நேரடிப் பழஞ்செய்திகளாற் சொல்வதில்லை. சுற்றிவளைத்து முக்கைத் தொடுவதுபோல், மேலைப்புரிதலுக்கு வந்தே மறுமொழி சொல்கிறோம். [காட்டாக, 1 விரற்கிடை = 11/16 அங்குலம் = 1.74625 செ.மீ; எனவே, 1 பரும விரற்கிடை = 5.3249957 cubic centimetre; அப்படியெனில், 1 உழக்கு = 336 cubic centimetre = 63.098643 பரும விரற்கிடை என்று சுற்றிவளைத்துச் சொல்வோம்.) பரும விரற்கிடை/சாண்/முழம்/கோல் போன்ற அலகுகள் நம்மிடம் ஏற்படவேயில்லை. இது பெய்தளத்தலுக்கும், கீழே வரும் தேங்க முகத்தளத்தலுக்கும் பொருந்தும்.   .

4. தெறித்தளவை பற்றி முன்னிருந்த கேள்விகளில் இப்போது எனக்குத் தெளிவு ஏற்பட்டுள்ளது. நீர்/மணற் கடிகையை வைத்தே சங்ககாலத்தில் கால இடைவெளியை அளந்தார். ஞாவகங் கொள்க! கால இடைவெளியை நாம் அளக்கலாம், முற்றைக் காலத்தை (absolute time) அளக்கமுடியாது. அதுவொரு தேற்றக் கட்டுமானம் (theoretical construct). எப்படி ஒரு, இரு பரிமானங்கள் இயல்புநிலை மீறிய தேற்றக்கற்பிதக் கட்டுமானங்களோ, அப்படியே தனிப்பட்ட காலப்பரிமானமும் எழுந்தது. நால்-பரிமான இருப்பு அப்படி நம்மைக் கட்டிவைத்தது. பூதியலார் (physicist) ஐன்சுடீன் சொல்லும்வரை நமக்கிது புரியவில்லை. மேலுங்கீழுமாய் இரு குடுவைகளும், இரண்டிற்கும் நடுவே ஒடுங்கிய நாளமும் இருக்கும் நீர்க்கடிகை, (இல்லாவிடில் பெரிய குடுவையிலுள்ள நீரில் அமிழும் சிற்றாழங் கொண்ட கிண்ணம் அல்லது வட்டில்போன்ற நீர்க்கடிகை)க் கருவியை வைத்தே அக்காலத்தில் கால இடைவெளியை அளந்தார். இரண்டாம்வகை நீர்க்கடிகையே/நாழிகை வட்டிலே நம்மூரில் மிகுந்திருந்தது. செய்முறையிலும் இரண்டாம் வகை எளிதானது.

முதல்வகைக் கடிகையில் மேலிருக்கும் நீரோ, மணலோ ஒடுங்கிய நாளத்தின் வழி கீழிறங்கித்தங்கும். இரண்டாம்வகைக் கடிகையில் துளைவழிக் கசியும் நீரால் கிண்ணம்/வட்டில் பெருங்குடுவை நீரில் அமிழும். இரண்டு கடிகைகளுக்கும் வெவ்வேறு அடவுகளுண்டு (designs). அவற்றின் அடவிற்குத் தக்கக் காலநேரம் மாறும். முதல்வகை நீர்க்கடிகையில் கீழ்க்குடுவை நிறைந்து மேற்குடுவை வெற்றும் வரையுள்ள நேரம் குடுவைக் கொள்ளளவையும், நாளக் குறுக்குவெட்டையும் பொறுத்தது. இரண்டாம் வகைக் கடிகையில் கிண்ணத்தின்/வட்டிலின் கொள்ளளவையும், கிண்ணத்தின்/வட்டிலின் அடியிலுள்ள நாளக் குறுக்குவெட்டையும் பொறுத்து அடவிய நேரம் மாறும். நாளத்தால், நேரங் கடியுங் (கணக்குச் செய்யும்) கருவியைக் கடிகையென்றும், நேரத்தை நாளிகை/நாழிகை என்றுஞ் சொல்வர்.

பொதுவாக ஒருநாழிகையையோ, சிறுபொழுதையோ (10 நாழிகை) காணுங் கருவிகளைச் செய்வார். (அடுத்தடுத்து நாழிகைகளை அறிவிக்குமிடத்தில் 7,8 நீர்க்கடிகைகள் இருந்தாற்றான். தொடர்ந்து நாழிகளைகளைக் கணக்கிட முடியும். நாழிகைக் கணக்ரென்ற வேலையாட்கள் கடிகைக் கூடத்திலிருப்பார். அக்காலத்தில் 60 நாழிகைக்கும் நேரங்காணுவது என்பது மாந்தவுழைப்பு மிகுந்தது. இன்று ஆளேயின்றி எல்லாவற்றிற்கும் எந்திரங்கொண்டு செய்யும் நுட்பம் வந்துவிட்டது.) பாகதம்/சங்கதத்திற் கடிகை என்றசொல் கடிகாவாகிக் நேரத்தையும், கருவியையும் சேர்ந்தே குறித்தது. கண்ணிமை, கைநொடி, மாத்திரை, விநாழிகை, நாழிகை, சிறுபொழுது, பொழுது, நாள், வாரம், பக்கம், மாதம், பெரும்பொழுது, அயனம், ஆண்டு என்பன காலத்தைக் குறிக்கும் அலகுகள்.

அறிவியலில் தடநிலை (state), செலுத்தம் (process; தொடர்நிகழ்ச்சி) என இரண்டுமே முகன்மையானவை.

”இறப்பே நிகழ்வே எதிரது என்னும்
திறத்தியல் மருங்கின் தெரிந்தனருள்ளப்
பொருள்நிகழ்வு உரைப்பது காலமாகும்”

என்று தொல்காப்பியர் பொருளதிகாரம் செய்யுளியல் 202 ஆம் நூற்பாவிற் காலத்தைச் செலுத்த வழி வரையறுப்பார். (இதற்கு முந்திய 201ஆம் நூற்பாவில் கரும நிகழ்வு நடப்பதன் வழி இடத்தை அவர் வரையறைசெய்வது இன்னொரு விதப்பு. ஐன்சுடைனுக்கு முன், space-time ஐ இப்படி வரையறுத்தவர் யாருமிலர். நம்சிறப்பு நம்தமிழருக்கே தெரிவதில்லை.) தொல்காப்பியரின் வாசகப்படி, Time is perceived through narration of event-sequence. சுணக்கம், தங்கல், தாமதம், தோயம்/தாயம் [ஒவ்வோரிடத்தும் தோய்ந்துதங்கி நகருகிற ஆட்டம் தாயக்கட்டம் (time-slot game) எனப்படும். தாயம் என்பது தங்கல், time என்னும் ஆங்கிலச்சொல் இதுதான்] போன்ற சொற்களெல்லாமே இருப்பிற்கு நேரங்கழியும் ”செலுத்தத்தைக்” குறிப்பன. தொல்காப்பியரின் வரையறை நேரங்கழியும் நிகழ்வுத் தொகுதிகளைக் குறிக்கும். மாறாக, ஒளிப்படக் கருவியால் ஓராயிரம் உறைபடங்களாய் (event freezes) நிகழ்வுகளைப் பதிக்கும்முறை 2-ஆவதாகும். நேரம், கணம், காலம், சமயம் போன்ற குறிப்பிட்ட instant ஐக் குறிக்கும் சொற்கள் 2ஆம் முறையைச் சார்ந்தவை. 2 முறைகளுமே காலத்தைப் புரிந்துகொள்ளும் வழிமுறைகள் தாம். கணக்கற்ற கலைஞரால் உறைபடங்கள் உருவாக்கி camera graphics மூலந் தொகுத்து, கண்முன் நிகழ்வு நடந்ததுபோல் ஓட்டிக்காட்டுவது இக்காலத்திற் ”பாகுபலி” போன்ற திரைப்படங்களில் நடக்கிறது. .

நாளாவட்டத்தில் ஒருசெயலை விடாது திருப்பிச்செய்யும் அதிர்வுகளின் துடிப்பை எண்ணுவதன்மூலமே நேரத்தை அளக்கமுற்பட்டனர். இளம்பூரணரும், நச்சினார்க்கினியரும் தெறித்தளத்தல் என்றது கண்ணிமை, கைநொடி போன்ற அதிர்வு நேரங் குறித்ததே. ஒரு விநாழிகை நேரத்தில் (1 விநாழிகை = 0.4 minutes = 24 seconds; இக்கால விநாடியோடு விநாழிகையைக் குழப்பிக்கொள்ளக் கூடாது.) 100 முறை கண்ணிமைக்க/நொடிக்க முடியும் என்று கொண்டார். (எனவே 1 கண்ணிமை = 0.24 seconds) அகரமுதலியின்படி, இசைக்கருவியின் நரம்பைத்தெறித்து (=சுண்டி) செவியருகேவைத்து அளப்பது தெறித்தளத்தலாகும். இம்முறையில், செவியருகே அதிர்வேற்படுத்தி அதிர்வெண்ணையோ அல்லது அதிர்வின் நேர அளவையோ கண்டுபிடிக்கிறாரென ஊகிக்கலாம்.

மேற்சொன்ன கால அளவைகள் போக, வடவர் பழக்கத்தால் முழுத்தம் (= 2 நாழிகை; இதைத்தான் முகூர்த்தமென்று சொல்கிறார். தென்பாண்டிநாட்டில் முழுத்தமென்ற நல்லதமிழே புழங்கும்.), சாமம் (= 3 மணி; யாமமென்ற தமிழ்ச்சொல் இரவு 10 மணியிலிருந்து 2 மணி வரையுள்ள நேரத்தைக் குறிக்கும். கும்மிருட்டை அது குறிப்பதால் முன்னால் ஸகரஞ்சேர்த்துச் மாலை 6 மணியிலிருந்து விடியல் 6 மணிவரை குறிக்குஞ்சொல்லாகச் சங்கதங்கொண்டது. 12 மணியை 4ஆல் வகுத்தால் ஒருசாமம் = 3 மணி என்றசமன்பாடு கிடைக்கும். 1 இரவு = 4 சாமம் என்பது வடமொழிவழக்கு.), இருது (= இரு மாதம்; இதில் இகரத்தைத் தொலைத்து ருது என்று சங்கதங்கொள்ளும்.) போன்ற அளவைகளும் நம்மிடையே ஏற்பட்டன. இக்காலத்தில் விநாடி, நிமிடம், மணி என்ற அளவுகளும் புழக்கத்திலுள்ளன.

5. தேங்க முகத்தளவை என்பது கூலங்கள், திண்மத்துகள், பொடிகளை அளக்கையில் புரைகளை (pores) நெறிப்பது குறித்தது. ஆழ்ந்து பார்த்தால், இது திண்மத்துகளின் பருமனை அளப்பதிற் சரியான ஒழுங்குமுறை அளத்தல் ஆகும். திண்மத்துகளைக் கொட்டுகையில், எப்படியடைக்கிறோம் என்பதைப் பொறுத்து வெவ்வேறு புரைமைகள் (porosities) குவியலுக்கு ஏற்படும். அரிசிப் புரைமையும், அரிசிமாப் புரைமையும் ஒன்றா? இல்லையே? தவிர தேங்க முகத்தளத்தலில் படியின்மேற் குவியும் கூம்பை மட்டத்தோடு வழித்துப் பின் தட்டித்தட்டி, அமுக்கி மீண்டும் திண்மத்துகளால் நிரப்பி, பன்முறை செய்து (iteration) இறுக்கம் ஏற்பட்டபிறகே அளப்பார். துகள்களுக்கு இடையிருக்கும் இறுக்கத்திற்குத் தக்கப் பெய்தளந்த பருமன் வேறுபடும்.

பெய்தளத்தலில் பெய்திணிவோடு (pouring density) அளந்தால், இங்கே நெறித் திணிவோடு (compact density) அளக்கிறோம். தேங்குதலென்பது அடைதலையும், இறுக்கத்தையும் (compaction) குறிக்கும். திண்மப்பொடியை தேக்கிமுகந்து அளக்காவிடில், இயல்பான புரைமையோடு (natural porosity) கூடிய வெள்ளத்தையே (volume) அளக்கமுடியும். இற்றை அறிவியலில் மெய்த் திணிவு (true density), மொத்தைத் திணிவு (bulk density), பெய் திணிவு (pour density), இறுக்கத் திணிவு (compact density) என வெவ்வேறு திணிவுகளை, திண்மப் பொடிகளையொட்டிப் பேசுவர். தேங்க முகத்தளத்தலென்பது தமிழரின் அறிவியற் சிறப்பாகும். வேறெந்த மரபினரிடம் இந்த அளத்தல் முறை கிடையாது. நாம்தான் மற்றார்க்கு இச்சிறப்பைச் சொல்லாதுள்ளோம். (அதுசரி, நமக்கே முதலில் விளங்கவேண்டுமே?)

மேலேசொன்ன அறிவியற் சிறப்பிற்கு இன்னொரு பக்கமுமுண்டு. அதாவது, தேங்க முகத்தளவையையும், பெய்தளவையையும் ஒன்றிற்கொன்று இணைக்கத் தவறிவிட்டோம். புரைமையுள்ளதை உணர்ந்த நாம், அதைத் தனிப்பட வரையறை செய்து, பல்வேறு வாகைகளை (phases) விளக்கி, திண்மத்துகள் என்பது வெறும் திண்மம் மட்டுமல்ல, திண்மமும் காற்றுஞ் சேர்ந்த இருவாகைப் பொதி (a body with two phases) என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கத் தவறிவிட்டோம். இதற்கும் மேலையர் புரிதலுக்கே நாம் காத்து நிற்க வேண்டியதாகிவிட்டது.   

6. சார்த்தியளத்தல் என்பது ஒன்றை இன்னொன்றோடு சார்த்தி ஒப்பிட்டு அளப்பதாகும். கண்ணிமைக்கும் நேரம், விரல் நொடிக்கும் நேரம் என்று சொல்கிறோமே, அவையெல்லாம் ஒப்பீட்டளவுகள் தாம். நேரம், காலம் என்பவை ஒருவகையில் relative units. இளம்பூரணர், நச்சினார்க்கினியரின் படி, கண்ணிமைக் காலமும் சார்த்தியளத்தலே. வேறொரு எடுத்துக்காட்டும் தரமுடியும். இதள் தெறுமமானியைப் (Mercury thermometer; தெறுதல் = சுடுதல்) பயனுறுத்தி அளக்கும்போது, வெம்மை (temperature) கூடக்கூட, இதள் தண்டின் நீட்டங் கூடுகிறதல்லவா? இங்கே இதளின் நீட்டத்தை வெம்மையிற் சார்த்தி, அளக்கிறோம். ஆலி (ice), உறைபனி (frigid), சிந்து (snow), சிலிர் (chill); சிலிதை (sleet), குளிர் (cold), வெதுமை (warm), இளஞ்சூடு (mild hot), கடுஞ்சூடு (very hot), கொதி (boiling) என்று பல்வேறு சூட்டு நிலைகளுக்கும் நீரைக் கொண்டு ஓர் எண்ணைத் தொடர்புறுத்துகிறோமே அதெல்லாம் சார்த்தியளத்தலே.

இன்னுஞ் சொன்னால், இற்றை அறிவியலில் மின்சார, காந்தப் புலங்களில் அளக்கப்படும் மின்னோட்டம், மின்னழுத்தம், மின்னாற்றல், காந்தவோட்டம், காந்தவழுத்தம், காந்தவிசை போன்ற பல்வேறு அலகுகளும் சார்த்தியளத்தல் முறையிலே அளக்கப்படுகின்றன. ஒருவகையிற் பார்த்தால் சார்த்தியளத்தல் முறையில்லாவிடில், அறிவியல், நுட்பியல் வளர்ந்தேயிருக்காது எனலாம். இன்னுஞ் சொல்லக் கூடிய சார்த்தியளத்தலின் விரிவு இங்கே முகன்மை இல்லையென்பதால் விடுக்கிறேன்.
.
7. எண்ணியளத்தல் என்பதும் நேரத்தை, அதிர்வெண்ணை, பயன்படுத்துவது போலத்தான். அறிவியல், நுட்பியற் துறைகள் மேற்சொன்ன 6 முறைகளைப் பயன்படுத்தி எல்லாவற்றையும் எண்ணியல் மயமாக்கி 7ஆம் முறைக்கு மாற்றிவிடுகின்றன. நீரின் உறைநிலை செண்டிகிரேடுப் பாகையில் 0 எனும் போது, அவ்வெண்ணே நமக்குப் பலவற்றையும் உணர்த்துகிறது. இங்கிருந்து ஓரிடம் எத்தனை தொலைவு? 350 கிலோ மீட்டர் என்றால், ஏதோ புரிகிறது அல்லவா? ஒருநாளைக்கு எவ்வளவு பால் வாங்குவீர்கள்? 1 இலிட்டர். இப்படி எல்லாவற்றையும் எண்மயப்படுத்துவதே இற்றை அறிவியல் வழியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

No comments: