Thursday, August 09, 2018

சங்கம் - 4

கப்பல் நுட்பத்திற்கும் நெய்தல் வாழ்க்கைக்குமான இடையாற்றம் ஒரு பக்கம் இருக்க, கடற்கரைகளிற் கிடக்கும் தொல்பழங் கடலுணவு எச்சங்களின் அகழாய்வுச் செய்திகளை இன்னொரு பக்கம் பார்ப்போம். கடலுணவின் பரிமானம் அகன்றது. .ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா வழி ஆத்திரேலியா போய் நகர்ந்த நெய்தலார் ஆயிரமாயிரம் ஆண்டுகள் முதலுயிரி (Protozoa), புரையுடலி (Porifera), குழிக்குடலி (Coelentterata), மெல்லுடலி (Mollusca), கணுக்காலி (Arthropoda), தண்டுடை (Chordata) ஆகிய பொலியங்களைச் (Phylum; பொலிதல்= தோன்றி மிகுதல். கணமும் பொலியமும் ஒரே பொருளன.) சேர்ந்த பல்வேறு உயிரிகளை உண்டார். இவற்றில் தான் மீன், நண்டு, இறால், கடல் நத்தை போன்ற உயிரிகளும் உண்டு.

கடல் நத்தைகளும் நில நத்தைகள் போன்று முதுகிற் கூடுகளைக் கொண்டவை [அகட்டுக் காலி (gastropoda; அகடு = வயிறு) வகுப்பில் உள்ள நில நத்தைகள் தம் வயிற்றையே காலாக்கி முன் தள்ளி நகர்வதால் நத்தைப் பெயர் ஏற்பட்டது. நுந்துவது தமிழில் முன்தள்ளலைக் குறிக்கும்.) இவற்றின் கூடுகள் வீடுகளாய்த் தோற்றும். மெல்லுடலி வகையில் துருவலைக் (Turbinella) குடும்பஞ் சேர்ந்த துருவலைப் புருவம் (Turbinella pyrum) எனும் கடல் நத்தையும் (sea snail with a gill and an operculum, a marine gastropod mollusk in the family Turbinellidae. இதையே சங்குயிரி என்கிறோம்), இன்னும் நால் வேறு கடல் நத்தைகளும் (நத்திலிகள் எனும் nautilus கள் அவற்றிலொரு வகை) கூடவே இறாலும் தென்னிந்தியக் கடற்கரையில், குறிப்பாகத் தமிழகத்தில், இணைந்தே வளர்கின்றன.    .

இந்தியாவில் கச்சு (130கி.மீ கடற்கரை நீளம்), கேரளம் (65கி.மீ), தமிழகம் (720கி.மீ), ஆந்திரம் (கோதாவரிக் கழிமுகம்) வரை சங்குயிரி வளர்கிறது. (ஆந்திரத்தில் சங்குயிரி வளர்ச்சி மிகக் குறைவு.) குறிப்பாக, வழுவழுப்பான, ஆழமில்லாத, வண்டல் கலந்த கடல் மணற்பகுதியில் (கடலுள் ஏறத்தாழ 16 கி.மீ அகலம் வரை), பவளப் பாறை/ கடற்பாசிப் பகுதிகளில் சங்குயிரி வளர்கிறது. கடந்த 5000 ஆண்டுகளில் மேற்சொன்ன பகுதிகள் தவிர்த்து வேறிடங்களில் இது வளர்வதாய்த் தெரியவில்லை. கடலிற் கரைந்த உப்புச் சுண்ணாம்பே திரைந்து போய் பீங்கான் படிகமாகிச் சுரித்துச் சங்குக்கூடு ஆகிறது. The shell surface is strong, hard, shiny, and somewhat translucent, like porcelain. இந்தச் சங்குக் கூடுகளும், சிப்பிகளும், கிளிஞ்சல்களுமே நெய்தற் பகுதியில் சுண்ணாம்புத் தேவைக்கான இயல்பொருட்கள்.

2 பரிமானத்தில் புரிச்சுருவை (spiral curve) எப்படி அமையுமோ, அது போல் முப் பரிமானத்தில் 3 சங்குப்புரிகள் ஒன்றிற்குள் இன்னொன்றாய் அமையும். புரிகளுக்குள் பதுங்குவதும் வெளி வருவதுமாய் நத்தை தன் சேமத்தை (safety) நிலைநிறுத்தும் .(கடல் நத்தையின் குறுக்கு வெட்டைப் புரி>spiral என்பார். தோற்றம் புரியாது நாமும் ஆங்கிலச் சொல்லைக் கையாளுவோம்.) சங்கில் இடம்புரி, வலம்புரி, சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என 4 வகையுண்டு. புரியும் சலமும் (சுல்>சல்>சலம் = சுற்று), சுன்னமும் (சுல்+நம்=சுன்னம் = சுற்று) சுற்று, சுரி, சுழிகளைக் குறிக்கும். (சொற்பிறப்புத் தெரியாது சிலர் சலஞ்சலம், ஐஞ்சுன்னத்தைச் சங்கதம் என்பார். எத்தனை தமிழ்ச்சொற்களைத் தான் சங்கதமென்று சொல்லி நாம் இழப்போமோ தெரியவில்லை. ஐஞ்சுன்னத்தைப் பாஞ்சசன்யமெனச் சங்கதத்தில் மொழிபெயர்ப்பார்.)

புரி/புரியத்திற்கே (pyrum) சங்குப் பொருளுண்டு. (கடிகைச் சுற்றாய்) வலம் இருந்து இடமாகப் புரிகள் எழுந்தால் இடம்புரியென்றும். (எதிர்க்கடிகைச் சுற்றாய்) வலம் எழுந்தால் வலம்புரியென்றுஞ் சொல்வர். இடம்புரிச் சங்குகளே எளிதிற் கிட்டும். பெருதகையின்(Probability) படி, 1000 இடம்புரிகளுக்கு 1 வலம்புரி கிட்டுமென்பர். (1 வலம்புரிக்கு 1000 இடம்புரி விலையுண்டு.) சலம்புரி= சங்கு. சலம்= நீர்வட்டம்; முத்துக் குளிக்கும் துறை. சலஞ்சலம் 4 புரிகளானது; வலம்புரியினும் அரிது. 1000 வலம்புரிகளுக்கு 1 சலஞ்சலம் கிட்டுமாம். 5 புரிகள் கொண்ட  ஐஞ்சுன்னம் இன்னும் அரிது. 1000 சலஞ்சலங்களுக்கு 1 ஐஞ்சுன்னம் கிட்டுமாம். சலஞ்சலம், ஐஞ்சுன்னம் என எதுவும் இன்று கிடைப்பதாய் யாருங் கூறுவதில்லை.

கம்பு>கம்புள், கவடு>கோடு, சுரிமுகம், நத்து>நத்தை, நந்து>நந்தம், நாகு, பணிலம், வளை போன்ற சொற்களும் சங்கைக் குறித்தன. கொற்கை அருகே கடலுள் இந்தச் சங்குகள் நிறையக் கிடைத்த ஊர் கவாடபுரம் ஆகும். (மேற் குறித்த இலக்கியச் சொற்கள் பேச்சு வழக்கின்றி தென்பாண்டியிற் சங்கேயென்று வழக்கிலுள்ளது.) ”விளங்குகொடி நந்தின் வீங்கிசை” என்ற சிலம்பு 26:203 வரியால் ”நந்து” சங்கிற்கு இணையாய்ப் பயன்பட்டதும், சங்கோசை தமிழர் வாழ்வில் இருந்ததும் விளங்கும். நுகும் (முன்தள்ளும்) வினை, நுகு>நுகல்> நகலென விரியும். நகல்தல் நகர்தலாகி move ற்கு இணையாய் இன்று பயனுறுத்துகிறோம். நகலும் உயிரி நகலியாகும். நாகு> நாவு> நாவாய்= துடுப்பால் முன்தள்ளப் படும் கப்பல். நாகுதல்>நாவுதலை ஒட்டிப் பல சொற்கள் தமிழிலுள்ளன. அவற்றை இங்கு விரிக்கின் பெருகும்.

ஆங்கில snail என்பது நம்மூர் நகலியின் திரிவே. snail (n.) Old English snægl, from Proto-Germanic *snagila (source also of Old Saxon snegil, Old Norse snigill, Danish snegl, Swedish snigel, Middle High German snegel, dialectal German Schnegel, Old High German snecko, German Schnecke "snail"), from *snog-, variant of PIE root *sneg-"to crawl, creep; creeping thing" (see snake (n.)). The word essentially is a diminutive form of Old English snaca "snake," which literally means "creeping thing." Also formerly used of slugs. Symbolic of slowness since at least c. 1000; snail's pace is attested from c. 1400.

வளர்ச்சியுறாச் சங்குகளைச் சங்குப் பூக்கள், இளநாடுகள் என்று சொல்வர். கடல் நீரில் முக்குளித்துச் சங்கைப் புரட்டி எடுத்து வருவது சலம்பல்> சலப்பலாகும். சலம்புமிடம் சலாபம். பரந்து கிடக்கும் சங்கு, முத்து விளையிடங்கள் ”பார்” என்றுஞ் சொல்லப் படும். கடல்நத்தைக் கறியை அதன் மென்தசை காரணமாய்ப் பச்சையாகவும், சமைத்துஞ் சாப்பிடுவர். மிஞ்சும் கழிவுகளும், கடல்தாவர வழியில் பெற்ற பொருள்களும் ஆன சங்கு, மீனெலும்புகள், பல்வேறு உயிரி ஓடுகள், சிப்பிகள், கிளிஞ்சல்கள், முத்து, பவளம் போன்ற பொருள்களையும் தூக்கியெறியாது, செய்துபார்த்துத் பிழைதவிர்க்கும் (trial and error) முறையில் படைக்கலன், உண்கலன், கொள்கலன், அணிகலனெனப் புதுப்பயன் வடிவு கொண்ட பொருள்களை பழங்குடி மாந்தர் செய்தார்.

ஓய்வு நேரத்தில் அப்படிச் செய்ததின் முதற்படியாக்கமே, சங்கின் உச்சி வழி ஒரு துளையிட்டு [by cutting a hole in the spire of the shell near the apex] ஓசையெழுப்பி மற்றோரை அழைத்ததாகும். இன்றும் நாட்டுப்புற வாழ்வில், பிறப்பு, திருமண, பிற விழா, இறப்பு ஆகிய நிகழ்வுகளில் மற்றோரை அழைக்கச் சங்கு பயன் படும். பழங்காலக் குடியிருப்புகளில் நாட்டுப் புறங்களில் 6 மணிக்குச் சங்கூதுவதும் உண்டு. இன்றும் பலவூர்களில் மின்சங்கை ஊதுவர். (தமிழரோடு ஈனியல் உறவு கொண்ட ஆத்திரேலியப் பழங்குடிகளின் நடுவிலும் சங்கு ஊதும் பழக்கம் உண்டு.) ஒரு காலத்தில் கப்பலோட்டத்திலும் ஒருங்கு முயற்சிக்குக் கடலோடிகளை அழைக்கச் சங்கே பயன்பட்டது. போர் தொடங்கவும் சங்கே பயன்பட்டது. இற்றை வீளைக்கு (whistle) மாறாய்ச் சங்கு பயனாகியது. ”சங்கே முழங்கு” என்ற கூவல் வெற்றானதல்ல.. இந்தியா எங்கணும் கால காலமாய் உள்ள சங்குப் பயன்பாடு தமிழகத்திலிருந்து கிளைத்தது. அப்புறம் போய் அது தமிழ்ச்சொல்; இல்லையென்றால்  என்னவொரு ஏமாற்றுத்தனம்? - என்று எண்ணிப் பாருக.

நெய்தல் வாழ்க்கையிற் சங்கு மட்டுமல்ல முத்தும் பவளமுங் கூடக் கிடைத்தன. சிப்பியில் மட்டுமின்றி, கடல் நத்தை போன்ற மெல்லுடலிகளிலும் முத்து பிறக்கும். இவ்வுயிரிகளுக்குள் ஒரு நுண் குருணை (grain) புகுந்து உறுத்துகையில் உமிழ்நீர் சுரந்து குருணை மேல் தொடர்ந்து படிந்து சுண்ணாம்புப் படிகமாகி உருள் முத்தாய் (முள்> முட்டு> முத்து) மாறி வளரும். மு>நு திரிவில் முத்தை நுத்தென்றுஞ் சொல்வர். நுத்து> நித்து> நித்தில் ஆகும். வரலாற்று வளர்ச்சியில் நித்தில்> நிதில்> நிதியாகிச் செல்வங் குறித்தது. அக்காலத்தில் முத்தே சங்கநிதி ஆனது. (பாண்டியர்க்குப் பெரிதாயும் சேரர்க்குச் சிறிதாயுங் கிடைத்தது.) பவளம் பதும நிதி ஆயிற்று. (சோழ நாட்டில் பவளம் அதிகம் கிடைத்தது.) கடலிற் சோழி/ கவரி/ கவறு போன்றவையே 3 நாடுகளிலும் சிறுநாணயங்களாயின. மாழை கிடைத்து நாணயம் அச்சடித்தது நெடு நாட்கள் கழித்தேயாகும். (நாணயச் சிந்தனை கூட நெய்தலில் தொடங்கியிருக்கலாம்.) இது போக மேற்குத் தொடர்ச்சி மலையின் கிழக்குச் சாரலில் பல்வேறு வகைக் கனிமங்கள் கிடைத்த கதை இன்னும் பெரியது. (பாண்டியர்/ சேரரின்) முத்து, (சோழரின்) பவளம், (கொங்கின்) மணிகள், (கோலாரின்) தங்கம், (சேர்வராய மலையின்) கனிமமெனத் வளமான பொருளியல் வளர எல்லா வாய்ப்புக்களும் தமிழ் கூறும் நல்லுலகில் அமைந்தன. நாகரிகம் எழும் அளவிற்குப் பழங்குடி மாந்தர் இங்கேயே நெடுங்காலம் தங்கியிருந்தார். ஆனால் நாகரிகம் என்றெழுந்தது? சரியாய்த் தெரியாது. 

நெய்தல் நாகரிகம் படிப் படியாக வளர்ந்து மற்ற திணைகளுக்கும் பரவியது. பெருத்த ஆமையோடே குடிசைக் கவிப்பாயிற்று. பெருமீன்களின் தோல்கள் பல்வேறு ஆடைகளுக்குப் பயன்பட்டன. கடற் பாசிகள் சாப்பாட்டிற் சேர்ந்தன. பெருமீனின் விலாவெலும்பைத் தூக்கி எறிந்தால் சக்கரம்போற் சுழலும் வளை தடியானது. (மாலவன் கைச் சக்கரம் என்றவுடன் ஓவியர் கொண்டைய ராஜு வரைந்த சக்கரப் படிமையை நம்மிற் பலரும் எண்ணிக் கொள்கிறோம். ஆய்வு நோக்கிற் கண்டால், கடிதோச்சி மெல்ல எறியும் கைக்கு வாகாயும், தூக்கி எறிந்தால் பார்ப்போருக்குச் சக்கரம் போல் தோற்றந் தருவதும் வளைதடியே. இவ்வியலுமையை நம்மில் யாரும் எண்ணாது உள்ளோம். பெருமாளின் கைச் சக்கரம், பெரும்பாலும் வளைதடியாகலாம்.) பெருத்த எலும்புகளே நெய்தலிற் குண்டாந் தடிகளாயின. ஈட்டிகளும் சூலங்களும் எலும்பின் ஒடிப்பாலும் கல்லுடைப்பாலும் பெறப்பட்டன. வாள்தவிர்த்து நம்மூரில் சொல்லிய எல்லாக் கொலைக் கருவிகளின் முதன்மை இயல் பொருள் (raw material) எலும்பாகவே இருந்ததிருக்கலாம். கல்லையும், இரும்பையும் பின்னர் பழகியிருக்கலாம். .   

நெய்தல் நாகரிகத்திற் கிளைத்த அடுத்த ஆயுதம் வில்லாகும். பெருமீன்களின் (ஒல்லியான) மார்பு எலும்புகளை (கற்றாழைக் கயிறு போன்ற) நரற் கயிற்றால் கட்டி கல்முனை அம்புகளைப் பொருத்தி இதைச் செய்திருக்கலாம். எளிதில் ஒடியும் இவ்வகை வில்களிலிருந்து சிலகாலங் கழித்து ஆற்றுக் கழி முகங்களில் வளரும் பிரம்புத் தடியால் (Calamus rotang; முன்கூறிய பள்ளிக் கரணை, தைக்கால், பத்தமடை போன்றவற்றில் இதுவும் வளர்கிறது. கேரளத்திலும் வளரலாம்.) புதுவகை வில்களைச் செய்தார்; இன்னுங் காலஞ் செல்ல மலையில் வளரும் திண்மூங்கில்கள் (solid bamboos; கேரளம்/ தமிழ்நாடு எல்லையில் உள்ள ஆனை முடியில் வளரும் Arundinaria densifolia and Arundinaria walkeriana. எல்லா மூங்கில்களும் திண்மூங்கில்கள் அல்ல. பல மூங்கில்களின் கணுக்கள் (nodes) கூடானவை) கொண்டு செய்தார்.

மேலுங் காலங் கழித்து ஞெமை (Anogeissus latifolia. இதற்கு Dhavala என்ற சங்கதப் பெயருண்டு.) மரக்கிளைகளை நேராக்கிச் செய்தார். (சங்கநூல்களில் 9 வெள்ஞெமைக் குறிப்புகL uண்டு). அடுத்து வில்லைச் செய்யக் குங்கிலிய மரத்திற்கும் (Shorea robusta. இதை யா/ஆச்சாவோடு சிலர் குழப்புவர். யா/ஆச்சா= Hardwickia binata) என்று தாவினார். தெற்கே குங்கிலியம் வளர வாய்ப்புக் குறைவு. வடக்கு வணிகத்தில் தான் அது வர வேண்டும். வடக்கில் இதைச் சாலமரம் என்பார். மகதத்தின் வடபகுதிகளில் நன்றாகவே வளர்ந்தது.) முடிவில் உள்ளூர் வெண்மருதிற்கும் (Terminalia arjuna; சங்கதத்தில் Kukubha என்பர்) வந்து சேர்ந்தார். நெய்தலை ஒட்டி மற்ற திணைகளில் சில அயிர மாத்திரிகளில் இத்தனையும் கிடைத்ததால், எண்ணிக்கை கூடுமளவிற்கு நெய்தலில் பழங்குடிகள் நெடு நாள் வாழ்ந்திருக்கலாம்.

கத்தி/வாள் எனும் ஆயுதம் நெடுநாட் கழித்து, இரும்பைக் கண்டுபிடித்த பின்னர் முல்லை வாழ்க்கையில் நுழைந்தபின் எழுந்து குமுக மாற்றத்திற்குக் காரணமானது போல் தெரிகிறது. (செம்பு சிலவிடங்களிற் கிடைத்தது. ”செம்புக்குப் பின் இரும்பு” என்பது தமிழகத்தைப் பொருத்தவரை ஒரு வகை வறட்டு வாதமே. இக்காலத் தொல்லியலார் பலரும் இதைக் கேள்வி கேட்கிறார்). ஆயுதங்கள் போக, பேச்சிற்குப் பின் எழுந்த எழுத்தையுங் கூட நெய்தல் நிலத்தாரே முதலிற் பழகியிருக்கலாம். (எல்லாமே குறிஞ்சி என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும்.) தாழை, கடற்கரைப் பனையோலை வழி எழுத்துப் பழகுவதற்கும் நெய்தலில் வழிகளுண்டு. இவ்வளவு தொலைவு நெய்தல் பற்றி நான் சொல்லக் காரணம் நெய்தல் நிலத்தாரை வெறும் மீனவரென நம்மிற் பலர் குறைத்து மதிப்பிடுவதாலே தான். குறிஞ்சி/முல்லை/.மருதத்தின் பெருமையே நம்மூரில் பலவிடங்களில் பேசப் படுகின்றன. ஆனால், நெய்தலின் இயலுமையைக் காணும் மாற்றுக் கோணம் ஏன் உண்மையாகக் கூடாது?.

அன்புடன்,
இராம.கி.

No comments: