Thursday, May 20, 2010

சிலம்பின் காலம் - 9

வடசெலவின் போது சுங்கர், கனகரின் நிலை:

”செங்குட்டுவனின் வடசெலவு, மோரியருக்கு அடுத்த சுங்கர், கன்னர் ஆகியோரின் வலுவற்ற காலத்தில் நடந்திருக்கவே வாய்ப்புண்டு” என்னும் கூற்றை இக்கட்டுரையின் அடிக்கோளாய்க் கொண்டு, இனிவரும் பகுதிகளில் அதைப் பல்வேறு கோணங்களில் அலசுவோம்.

மகதத்தை ஆண்ட சுங்கர்களின் கடைசியரசன் தேவபூதியாவான் (கி.மு.83-73)(56). இவனுக்கு உடன்பிறந்தார் இருந்தாலும் அவர் யாரும் ஆட்சிக்கு வரவில்லை. நடு இந்தியாவிலுள்ள சாஞ்சி(=விதிசா)க் கல்வெட்டை வெட்டுவித்த ’காசிபுத்ர பாக பத்ர’ என்பவன் இவன் தந்தையாவான்(56) .கி.மு.180 இல் இருந்த சுங்க அரசின் விரிவு கீழேயுள்ள படத்தில் தரப்படுகிறது. இந்தக் கட்டுரையில் முன்பக்கங்களிற் குறிப்பிட்ட காரவேலன் கல்வெட்டை ஆழ்ந்து படித்தால், சுங்கர் அரசின் எல்லைகள் அவரின் கடைசிக் காலத்தில் (கி.மு.73) கீழே படத்திற் காட்டப்படும் விரிவில் இருந்தும் சுருங்கியிருக்க வேண்டும் என்பது புலப்படுகிறது. [குறிப்பாக அவந்திப்பகுதி (உஞ்சை) அவர்களிடம் இருந்து வழுவிப் போயிருக்கிறது.] ஆனால் எவ்வளவு சுருங்கியது என்று உறுதியாய்ச் சொல்லமுடியவில்லை. அதற்குரிய ஆய்வுகள் இதுவரையில்லை.


படம் 3: மோரியருக்கு அப்புறம் இருந்த சுங்கரின் அரச விரிவு

சுங்கன் தேவபூதியின் முதலமைச்சன் வசுதேவ கண்வன் என்னும் குறுநில மன்னன் ஆவான் (57). கி.மு.75 - இல் வசுதேவ கண்வனே அரண்மனைக் கலகத்தில் தேவபூதியை பாடலிப் பட்டணத்தில் இருந்து துரத்தி மகத அரசைக் கைப்பற்றியிருக்கிறான். கண்வரில் வரும் ”ண்வ” எனும் ஒலிக்கூட்டு பழந்தமிழில் இல்லை. (இற்றைத் தமிழிற் பயில்கிறார்கள்.) அதை உயிர்மெய்க் கூட்டாக்கி, கனுவர்>கனவர் என்றே பழந்தமிழர் பலுக்கியிருக்க வாய்ப்புண்டு. அதோடு வகரமும், ககரமும் தமிழிற் போலிகளாதலால் (காண்க: பாவற்காய்/ பாகற்காய், நாவற்பழம்/நாகற்பழம், குடவம்/குடகம், குணவம்/குணகம்). கனவர் என்னுஞ் சொல் தமிழொலிப்பில் கனகராகும்.

இன்னொரு செய்தியையும் வரலாற்றாசிரியர் ஏமச்சந்திர ராய்சௌதுரியால் அறிகிறோம். ”கண்வ” என்பது “கனுவ்வாயன” என்றும் சொல்லப் பட்டிருக்கிறது(58). வடமொழி - தமிழ்த் திரிவில் கனுவ வாசன்>கனுவ வாஸ்யன்>கனக வாஸ்யன்>கனக விசயன் என்றாகலாம். அப்படியெனில் ”சேரன், சோழன், பாண்டியன்” போலக் ”கனகவிசயன்” என்பது வெறும் குடிப்பெயராகலாம். இன்னொரு வகையில், ”கனகன்” குடிப் பெயராகி ”விசயன்” இயற்பெயராகலாம். எந்த இயலுமை உண்மை என்பதைப் பாகதச் செய்திகள் மூலமே அறியமுடியும். தமிழர் கண்ணோட்டத்திற் பார்த்தால், மோரியருக்குப் பின்னிருந்த சுங்கர், கண்வர் வரலாறு ஆயப்பட வேண்டிய தொன்றாகும்.

சுங்கருக்கு அடுத்து மகதத்தை ஆண்ட கனக அரசர் (கி.மு.75-26) நால்வராவர்(59). அவரில் முதல் அரசனான கனக வசுதேவனும் கனக விசயனும் ஒருவரா? அன்றி முன் சொன்னது போல் கனகவாஸ்யன் என்ற குடிப்பெயர் கனகவிசயன் என்று தமிழராற் புரிந்து கொள்ளப் பட்டதா? முன்றாவது முறையில், விசயன் – வசுதேவன் என்ற பெயர்கள் மாபாரதக் கதையின் தாக்கத்தால் வழிமுறை உறவுப் பெயர்களாய் அமைந்தனவா? [காட்டாகச் சிங்கள அரசின் முதல் அரசன் விசயனாய் இருக்க, அவன் மகன் பாண்டு வசுதேவன் எனப்படுவான்.(60)] என்ற கேள்விகளுக்குச் சரியான விடையில்லை. ”கனக விசயன் என்பது கனக வாசுதேவனின் தந்தையாய் இருக்கலாமோ?” என்ற ஐயமும் இக்கட்டுரையாசிரியனுக்கு உண்டு.

வடசெலவின் போது கன்னர் நிலை:

சுங்கரைப் பேசும் போது நூற்றுவர் கன்னர் பற்றியறிவதும் தேவையாகும். மகத வணிகத்திற்கான தென்னகப்பாதையின் (Dakshinapaatha) முடிவில் (இற்றை அவுரங்காபாத் அருகில்) கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானத்தைத் (படித்தானம்>பயித்தானம்>பைத்தான்>paithan என்பது இற்றைப் பெயர். நம்மூரில் ஆற்றங்கரையின் அருகில் உள்ள துறையை படித்துறை என்று சொல்வதில்லையா? படித்தானம் என்பதும் படித்துறை என்பதைப் போலத்தான்.) தலைநகராய்க் கொண்ட அரசராயும், மோரியரின் மாதண்டநாயகராகவும் நூற்றுவர் கன்னர் இருந்திருக்கின்றனர். மோரியருக்கு அப்புறம் நடுவணரசுப் பிடியிலிருந்து விடுபட்டு நூற்றுவர் கன்னர் தம் தனியாட்சியை நிறுவியிருக்கிறார்கள்(61). ஆனால் சுங்கரின் பிடியிலிருந்து அவர் முற்றிலும் விலகியதாய்ச் சொல்ல முடியவில்லை.

படித்தானத்திற்கு மேற்கில் விரைந்தால் இந்தக் கால லோனாவாலாவும், அந்தக் காலக் கார்லே குகைகளும் வந்துசேரும். (கார்லே குகையில் தான், இந்தியாவின் மிகப் பழமையான புத்த சேத்தியங்களில் ஒன்று (கி.மு.280) உள்ளது.) கார்லேயில் இருந்து இன்னும் மேற்கே போனால் மேற்குக் கடற்கரையில் இருக்கும் சோபாரா துறைமுகம் வந்து சேரும். (இது இன்றைய மும்பைக்கு மிக அருகில் உள்ளது. இந்தக் கால இந்தியத் துறைமுகங்களில் பலவும் பழைய துறைமுகங்களுக்கு அருகில் எழுந்தவை தான்; காட்டாக முசிறி/கொச்சின், கொற்கை/காயல்பட்டினம்/தூத்துக்குடி, புகார்/நாகப்பட்டினம், பாலூர்/பாரதீப், தாமலித்தி/ஆல்தியா, சோபாரா/மும்பை, பாருகச்சா/பரூச்).

சோபாரா துறைமுகம் (கூடவே சோபாராவுக்குச் சற்று முன்னே கன்னேரிக் குகைகள்) நூற்றுவர் கன்னரின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. நூற்றுவர் கன்னருக்கும் முன்னால், மகத அரசிற்கு முகன்மையாக சோபாராவும், நர்மதையின் கழிமுகத்தில் இருந்த பாரகச்சாவும் (இந்தக் கால பரூச் Bhaarukaccha>Broach) துறைமுகமாய் இருந்திருக்கிறன. இந்தத் துறைமுகங்கள் அரேபிய, உரோம வாணிகத்திற்கு உறுதுணையாய் இருந்தவை. இதே போல வங்க விரிகுடாவில் தாமலித்தி இருந்திருக்கிறது. அது கீழைக் கடல் வாணிகத்திற்குத் துணையாக இருந்திருக்கிறது.

நூற்றுவர் கன்னர் தமிழக வழக்கப்படி முறைப்பெண்களை மணமெடுத்துப் பழகியவர்(62). தமிழ், பாகதம் என ஈர் ஆட்சிமொழி நாணயம் வெளியிட்டவர்(63). (அவரரசில் இருமொழியும் அருகருகே புழங்கியிருக்கலாம். மாமூலனார் கூறிய மொழிபெயர்தேயத்தை இங்கு நினைவு கொள்ளுங்கள்.) தமிழ் அகநானூறு போலவே மரபு கொண்ட ”காதா சத்தசதி” என்னும் பாகத நூலுக்குக் காரணமானவர்(64). கன்னரின் மரபுகளைப் பார்த்தால், அவரைத் தமிழ்மரபுக்கு முரண்பட்டவராய்ச் சொல்ல முடியாது.

சாதவா கன்ன எனும் பாகதப் பெயரைப் பலரும் பலவிதமாய் அடையாளங் காணுவர். ”சாதவா கன்ன என்ற பெயர் Indo-Austric மொழிகளில் சாத = குதிரை; கன்னா = மகன் என்று எழுந்ததாகச் சிலர் சொல்வர்(65). ஆனால் சதைத்தல் > சாத்துதல் = நூறுதல் = நொறுக்குதல் என்ற வினையால்,”நூற்றுவர்” என்பதற்கு தமிழ்முறைப்படி ”எதிரிகளை நொறுக்குபவர்” என்றே பொருள் சொல்லமுடியும். சிலம்பும் அப்படித்தான் மொழிபெயர்க்கிறது. சடைத்தல், சதைத்தல் என்பது நொறுக்குதல்/நூறுதல் என்ற பொருட்பாடுகளைக் குறிக்கும். "அவனைப் போட்டுச் சாத்திட்டான்" என்று இன்றைய வழக்கிலும் சொல்லுகிறோம் அல்லவா?

அந்தச் சாற்றுதல்/சாத்துதல் என்ற சொல்லுக்கு நொறுக்குதல் என்னும் பொருட்பாடு உள்ளது. நூறுதலின் பெயர்ச்சொல் நூறு. நூறுதல் என்பது பொடியாக்குதல் என்ற பொருள்படும். (hundred - நூறு என்ற ஆங்கிலச் சொல்லும் கூடப் பொடி என்ற பொருளில் எழுந்தது தான்.) சதைக்கப் பட்டதும் பொடி என்னும் சதம் தான். ஆக சதவா என்பதன் உட்கருத்து தமிழே. பலரும் எண்ணுவது போல் அவர் 100 பேர் அல்லர், நூற்றுவர் (=சதைப்பவர்). ”நூற்றுவர்” என்பது கன்னர் குடியினருக்கோர் அடைமொழி, அவ்வளவுதான். இன்னும் ஒரு சிலர் சாதவா கன்னர் என்று படிக்காது சாத வாக(ன்)னர் என்று படிக்கிறார்கள்(66). அப்படிச் சொல் பிரிப்பது தவறென்றே தோன்றுகிறது. சதம்>சதவர்>சாதவர்>சாதவா = நூற்றுவர்.


படம் 4. நூற்றுவர் கன்னரின் அரச விரிவு

கன்னர் என்பது கர்ணி என்றும் திரிகிறது. இங்கே ”காது, கன்னக்குழி” போன்றவை பொருளற்றுப் போகின்றன. முதல் சாதவ கன்னன் சிமுகனைக் காட்டிலும் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் விதப்பாகச் சொல்லப்படுவான்(67). பாகதத்தில் கிருஷ்ண என்பது கன்ன என்றாகும். கன்னன் என்பது சேரன், சோழன், பாண்டியன், போல ஒரு குடிப்பெயராய் இருக்க முடியும். முன்னால் சேர, சோழ, பாண்டியருக்கு இன அடையாளம் சொன்னது போல, கருநிறம் பொருந்திய/பூசிய இனக்குழு கருநர்>கன்னர் என்று ஆகியிருக்க வாய்ப்புண்டு.

கன்னரின் ஆட்சிக்காலம் கி.மு.230 - கி.பி.220 ஆகும். கன்னரின் முதலரசன் சீமுகன். இவர்களின் முதற் பேரரசன் சாதகர்ணி I (கி.மு. 180-124) சுங்கரைக் கட்டுப்படுத்தி மாளுவம்/ அவந்தியைப் பிடித்தான். அத்திகும்பா கல்வெட்டும் (கி.மு.172) சாதகர்ணி I ஐப் பற்றிப் பேசுகிறது. முதலாம் சதகர்ணிக்கு அப்புறம் ஒரு பெருவீழ்ச்சி கன்னருக்கு ஏற்பட்டது(68). தாங்கள் பிடித்த நிலங்களிற் பெருவாரியை அவர்கள் இழந்திருக்கிறார்கள். மாளுவம் இவர் கைவிட்டுப் போயிற்று. அந்த வீழ்ச்சியால் கி.மு.87-69 இல் இலம்போதரன் என்னும் சாதவா கன்ன அரசன் காலத்தில், கன்னரின் அரச எல்லை பெரிதும் சுருங்கியது. இக்காலத்திற் கன்னர் சுங்கருக்கு இறைகூடச் செலுத்தியிருக்கலாம்(69). இலம்போதரனுக்குப் பின்வந்த அபிலகனும் மற்ற அறுவரும் கனகருக்குக் கீழ் சிற்றரசராகவே ஆயினர்(70). ஆனாலும் கன்னர் கருவிக் கொண்டே இருந்திருக்க வேண்டும். மீண்டும் வீறுகொண்டு எழுந்து கி.மு. 26-இல் சுங்கர் அரசை கன்னர் முற்றிலும் வீழ்த்தியிருக்கின்றனர். விதப்பாகப் கன்னன் புலிமாவியின் ஆட்சியில் மீண்டும் வலியுற்று, மகதத்தையே பிடித்தனர். பின்னர் கன்னர் அரசு பெரிதாக விரிவடைந்திருக்கிறது(71).

சாதவா கன்னரின் முகன்மை, அவர்கள் தக்கணப்பாதையின் வாயிலைக் காத்த மாதண்ட நாயகராய் இருந்ததாலே தான் ஏற்பட்டது. தவிர, அதே காரணத்தால், நூற்றுவர் கன்னரைத் தொடர்பு கொள்ளாமல், எந்தத் தமிழரசராலும் வடக்கே படையெடுக்க முடியாத நிலை அந்தக் காலத்தில் இருந்தது. தமிழக வரலாற்றை இந்திய வரலாற்றோடு பொருத்திக் காட்டுவது சாதவா கன்னர் என்னும் பற்றிய செய்தியே.

எடுகோள்கள்:

56. http://en.wikipedia.org/wiki/Sunga_Empire
57. http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
58. Hemachandra Raychaudhuri, “Political History of Ancient India” p 353, Oxford University Press, 1996 Seventh Inpression 2008..
59. வசுதேவ (கி.மு.75-66); பூமிபுத்ர (கி.மு.66-52); நாராயண (கி.மு.52-40); சுசர்மன் (கி.மு.40- 26) http://en.wikipedia.org/wiki/Kanva_dynasty
60. விஜயன் (தீப வம்ச வரி 9.42; மகா வம்ச வரி 7.74) - கி.மு.483-445; அரசனற்ற காலம் (தீப. வரி 11.9; மகா.வரி 8.5) - கி.மு.445-444; விஜயன் மகன் பாண்டு வாசுதேவன் (தீப. வரி 10.5; மகா.வரி 9.25) - கி.மு.444-414; விஜயன், வசுதேவன் என்ற பெயர் இணைகள் மா.பாரதத் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்துகின்றன. வசுதேவனுக்கு முந்திவரும் ”பாண்டு” என்னும் அடைமொழி, அவன் பாண்டிய அரசகுமாரிக்குப் பிறந்த மகன் என்னுஞ் செய்தியை உணர்த்துகின்றது. ”சிங்களவர் தமிழ்த் தாய்மாருக்கும், அங்கிருந்த பழங்குடித் தாய்மாருக்கும் பிறந்தவரே”. என்று அவர் நூல்களே தெளிவாகக் கூறுகின்றன.
வில்ஹெம் கெய்கர், தமிழில் மறவன்புலவு க. சச்சிதானந்தம், கவிஞர் அண்ணா கண்ணன், “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத்தன்மை” பக்கம் 53. காந்தளகம், 2002.
61. நூற்றுவர் கன்னர் ஆட்சி ஏற்படுத்தியது கி.மு..230. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.92, Oxford University Press, 1975.
62. நூற்றுவர் கன்னர் முறைப்பெண்ணை மணத்தல், ”Another Characteristic feature of the Satavahanas and many of their successors was the use of Metronyms, which took the form of brahminical gotra + puta (son); e.g., Gotamiputa, Vasithiputa, and so on. These are two of the most widely used metronyms among Satavahanas, which raises the possibility that several of the Satavahana queens were closely related to one another and that in consequence some of the Satavahana marriages were consanguineous. Once this is granted it follows almost immediately that Satavahanas had a rule of Cross Cousin Marriage. - By Thomas R Trautman “The Dravidian Kinship” p 375, Cambridge University Press, 1981.
63. நூற்றுவர் கன்னர் இருமொழி நாணயம் Iravatham Mahadevan, “Early Tamil Epigraphy”, pp 199- 204, Crea-A, Chennai and The Departmemt of Sanskrit and Indian Studies, Harvard University, U.S.A., 2003
64. நூற்றுவர் கன்னர் “காதா சத்தசதி”; K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.94, Oxford University Press, 1975
65. நூற்றுவர் கன்னரின் பெயர்விளக்கம். D.D.Kosambi, "Satavahana Origins". Introduction to the study of India history pp. 243 -244. Popular prakashan. Mumbai, 1975.
66. நூற்றுவர் கன்னர் பெயரை “சாத வாகனர்” என்று படித்தல். முனைவர் ஐராவதம் மகாதேவன், “சிந்துவெளிப் பண்பாடும், சங்க இலக்கியமும்” பக்.32, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை 600005., 2010.
67. நூற்றுவர் கன்னரின் இரண்டாம் அரசன் கிருஷ்ணன் பற்றிய செய்தி. K.A.Nilakanta Sastri, “A history of South India”, p.93, Oxford University Press, 1975
68. நூற்றுவர் கன்னரின் ஆட்சி விரிவும், சுருக்கமும்
http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty

Satakarni (c.180-124 BCE)
His successor Sātakarnī I was the sixth ruler of the Satavahana. He is said in the Puranas to have ruled for 56 years.

Satakarni defeated the Sunga dynasty of North India by wresting Western Malwa from them, and performed several Vedic sacrifices at huge cost, including the Horse Sacrifice - Ashwamedha yajna. He also was in conflict with the Kalinga ruler Kharavela, who mentions him in the Hathigumpha inscription. According to the Yuga Purana he conquered Kalinga following the death of Kharavela. He extended Satavahana rule over Madhya Pradesh and pushed back the Sakas from Pataliputra (he is thought to be the Yuga Purana's "Shata", an abbreviation of the full name “Shri Sata” that occurs on coins from Ujjain), where he subsequently ruled for 10 years.

By this time the dynasty was well established, with its capital at Pratishthānapura (Paithan) in Maharashtra, and its power spreading into all of South India.

Kanva suzerainty (75-35 BCE)

Many small rulers succeeded Satakarni, such as Lambodara, Apilaka, Meghasvati and Kuntala Satakarni, who are thought to have been under the suzerainty of the Kanva dynasty. The Puranas (the Matsya Purana, the Vayu Purana, the Brahmanda Purana, the Vishnu Purana) all state that the first of the Andhra kings rose to power in the 1st century BCE, by slaying Susarman, the last ruler of the Kanvas.[11] This feat is usually thought to have been accomplished by Pulomavi (c. 30-6 BCE), who then ruled over Pataliputra
69. இலம்போதரன்; http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty
70. அபிலகனும் அறுவரும் http://en.wikipedia.org/wiki/Satavahana_dynasty
71. நூற்றுவர் கன்னர் மீள்விரிவு K.A.Nilakanta Sastri “A History of South India”, pp 94-96, Oxford University Press, 1975

அன்புடன்,
இராம.கி.

1 comment:

Nagarajan Radhakrishnan said...

இதுவரை நான் அறிந்திராத தகவல்கள்.
சாதவாகனர் பற்றிய இந்த அலசல் முற்றிலும் மாறுபட்ட கோணத்தைக் காட்டுகிறது...
எங்களுக்கு எடுத்தியம்பிய ஐயா அவர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...
தங்களது தென்கிழக்கு ஆசிய தரவுகளை பற்றி அறிய ஆவல்...