Wednesday, May 12, 2010

சிலம்பின் காலம் - 4

வரந்தரு காதை ஊற்றாவணமா?:

முன்னே சொன்னது போல், இந்தக் காதையினுள் பல்வேறு முரண்கள் தென்படுகின்றன.

1. முதல் முரணே நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுகிறது. வாழ்த்துக் காதையில் மணிமேகலைத் துறவு பற்றி கண்ணகியின் அடித்தோழி (கண்ணகியின் இளமைக் காலத்திருந்து பழகிய வேலைக்காரத் தோழி) அரற்ற, வரந்தரு காதையின் 35-36 வரிகளிலோ, இன்னொரு தோழி தேவேந்தி அதே வாசகம் கூறி அரற்றுகிறாள். ஒரே துறவு பற்றி இரு வேறு மாந்தர் இருவேறு காதையில் வேறுபட்டு அரற்றுவதாய் ஒரேநூலின் ஆசிரியர் சொல்லுவாரோ?

2. ”வஞ்சியிற் பத்தினிக் கோட்டம்” என நடுகற்காதையும் (191-234), வாழ்த்துக் காதை உரைப்பாட்டு மடையும் புகலும். காப்பியத்தின் படி, சுள்ளியம் பேரியாற்றின் கரையில் சமதளத்தில் வஞ்சி இருக்கிறது. அங்கு “செங்கோட்டு உயர்வரைச் சேணுயர் சிலம்பு” என்பது கிடையாது. ஆனால், வஞ்சியின் பத்தினிக் கோட்டத்திற்கு அருகில், செங்கோட்டுச் சுனையிலிருந்து நீர் எடுத்து வருவதாய், வரந்தரு காதையின் 53-59 ஆம் வரிகள் சொல்லும். அப்படியானால் பத்தினிக் கோட்டம் எங்கிருந்தது? வஞ்சியா? செங்கோடா? ஒரே ஆசிரியர் பத்தினிக் கோட்டத்திற்கு இருவேறு இருப்பிடங்களைக் காட்டுவாரோ?

3. கேரளப் புரிதலில், பத்தினிக்கோட்டம் என்பது இற்றைக் கொடுங்களூர் பகவதி கோயில் தான். தமிழகப்புரிதலில், அது தேனிமாவட்டம் செங்கோட்டுமலையில் இருக்கிறது. எது சரி?

4. மறைந்த தமிழறிஞர் மயிலை. சீனி.வேங்கடசாமியாரின் கருத்தின்படி செங்குட்டுவனின் வஞ்சி குடநாட்டில் தான் உள்ளது. [கொங்கு வஞ்சி என்று ஆர்வத்திற் சொல்லுவோர் அங்குள்ள ஐவர்மலையை அயிரிமலையாக்குவர். இன்னுஞ்சிலர் திருச்செங்கோட்டுக்கும், சுருளி மலைக்கும் கூடப் பத்தினிக் கோட்டத்தைக் கொண்டு வருவர்.]

5. கொங்குக் கருவூரையும், குடக் கருவூரையும் குழம்பிக் கொள்வது தமிழாய்வின் நெடுகிலும் நடக்கிறது. குடக் கருவூர் பற்றிய இலக்கியச் செய்திகள் அதிகம், தொல்லியற் செய்திகள் குறைவு. அண்மையில் தான், குடக் கருவூருக்கு அருகிலிருந்த முசிறி பற்றிய தொல்லாய்வுச் செய்திகள் கேரளத்திற் பட்டணம் என்ற இடத்திற் கிடைத்தன(12). இது நடந்து கொண்டிருக்கும், முற்றுப்பெறாத, ஆய்வு. கொங்குக் கருவூர் பற்றிய ஆய்வு மிகுத்து நடந்த ஒன்றாகும். இரண்டிற்கும் உள்ள முகன்மையைக் குறைத்துப் ”பட்டிமண்டபம்” நடத்த முற்படுவது வரலாற்றுப் புரிதலுக்கு வழிவகுக்காது.

6. மாளுவம் என்ற அரசே கி.பி.2 ஆம் நூற்றாண்டில் இல்லை. ஆனாலும் மாளுவம் பற்றிப் பேசும் வரந்தருகாதை அதன் கூடவே கயவாகுவை அருகில் வைத்து கி.பி. 2 ஆம் நூற்றாண்டைச் சுட்டுகிறது. ஒரு பக்கம் மேலே சொன்னது போல் கால முரண்; இன்னொரு பக்கம் இருக்கவே வாய்ப்பில்லாத ஓர் அரசின் பெயர் சுட்டப்படுகிறது. [சக சத்ரப அரசர்கள் கி,மு 61-57 இலும், மீண்டும் கிபி.78க்கு அப்புறமும் மாளுவத்தை / அவந்தியை விழுங்கினர். அவர்களிடம் இருந்து சாதவா கன்னர் (நூற்றுவர் கன்னர்) அவந்தியிற் பாதியைப் பிடித்துக் கொண்டனர். மாளுவம் என்ற தனியரசு கி.பி.78க்கு அப்புறம் வரலாற்றிற் கிடையவே கிடையாது. [தென்னிந்தியாவிற் பெரிதும் பின்பற்றப் பட்ட சக என்னும் முற்றாண்டு சக சத்ரப அரசர் மாளுவத்தைப் பிடித்ததைக் கொண்டாடும் வகையில் தொடங்கிற்று.(13)] மாளுவர் என்ற தனியரசரே இல்லாத நிலையில் அவர் பெயரை இங்கு வரந்தரு காதையில் இணைக்கும் வரலாற்று முரணை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

7. வரந்தரு காதையில், வரும் நிகழ்ச்சிக் கோவையைப் பார்த்தால் இன்னொரு பொருந்தாமை புலப்படும். முதலில் அரசனுக்கு முன்னால், பார்ப்பனி மேல் பாசாண்டன் என்னும் சாமியேறி ”சிறுகுறு மகளிரின் ஒளித்த பிறப்பைக்” காணும்வகை சொல்லப்படும். பிறகு “தந்தேன் வரம்” என்று கண்ணகி வான்குரல் எழும். அடுத்து அரசன் போனபின், அதே பார்ப்பனி மேல் கண்ணகியின் ஆவி ஏறி இளங்கோவின் முன்கதையை உரைக்கும். “சாமி”வந்து ”குறி”சொல்லும் மரபு தமிழரிடம் உண்டென்றாலும், ஒருவர் மேல் ”இரு சாமிகள்” அடுத்தடுத்து வருவது, எங்குமே கேள்விப் படாதது. Succeesively two spirits on a single medium? Highly unlikely. இது என்ன மாகையா (magic)? நாட்டுப்புற மரபு அறிந்தவர் தான் வரந்தரு காதை எழுதினாரா? - என்ற கேள்வி நம் மனத்தில் எழுகிறது.

8. எந்தக் கூத்தும் தமிழர்மரபில் வாழ்த்திற்தான் முடியும். அதற்கப்புறம் வேறொரு நிகழ்வு காட்டமாட்டார். அப்படிப் பார்த்தாலும், வரந்தரு காதை என்பது உச்சத்திற்கு அப்புறம் சரிவாக (anticlimax) நேர்கிறது. தமிழ்மரபு மீறி ஒரு பழங்காப்பிய ஆசிரியர் செய்வாரா?

9. தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் 5 ஆம் நூற்பாவின் “காட்சி, கால்கோள், நீர்ப்படை, நடுகல், சீர்த்தகு சிறப்பின் பெரும்படை வாழ்த்தல்” என்ற வெட்சித் திணையின் துறைகளை வண்ணிக்கும் வரிசையை, அப்படியே பின்பற்றும் சிலப்பதிகாரம் “வாழ்த்தோடு” முடிக்காது, ”வரந்தருதல்” என்ற இன்னொரு காதை சொல்லுமா? இது தொல்காப்பிய மரபிற்கும் வேறுபட்டல்லவா அமைகிறது?

மொத்தத்தில் ”வரந்தரு காதை இளங்கோ எழுதியதா?” என்றகேள்வி நம்முன் எழுகிறது. (எப்பொழுது இளங்கோ எழுதியதல்ல என்ற முடிவிற்கு வருகிறோமோ, அப்பொழுதே) சிலம்பிற்கும், மணிமேகலைக்குமான காப்பியத் தொடர்வில் ஐயுறவு கொள்ளுகிறோம். இங்கே மணிமேகலை-மகளென்னும் செய்தியை நாம் ஒதுக்கவில்லை. மணிமேகலை என்ற காப்பியத்தையும், அதின் நிகழ்வுகளையும் பற்றியே எண்ணுகிறோம். மணிமேகலைக் காப்பியம் சிலம்போடு சேர்ந்தெழ வேண்டிய தேவையுண்டா? சிலம்பின் வரந்தரு காதையை ஒதுக்கினால், ”இந்தச் சமய நெறியே சிறந்தது” என்னுமாப்போல அழுத்திச் சொல்லும் நிகழ்வுகள் சிலம்பிற் கிடையாது. அதன் குறிக்கோள்கள் வேறானவையாகும். [அவற்றை விரிவாகப் பார்ப்போம்.] ஆனால் மணிமேகலைக் காப்பியமோ புத்தநெறியே வாழ்க்கைக்கு வழிதரும் என்று நிலைநிறுத்தப் பிறந்தது.

ஒரு காப்பியத்தை, இன்னொரு காப்பியத்தோடு தொடர்புறுத்துவது இதுதான் முதன்முறை என்று சொல்லமுடியாது. கம்பனின் இராம காதைக்கும், ஒட்டக் கூத்தனின் உத்தர காண்டத்திற்கும் கூட உறவு சொல்லுவார்கள். இராமகாதை எழுதிய கம்பன் யுத்த காண்டத்தோடு நிறுத்திக் கொண்டான். இராமனுக்கு முடிசூட்டுவதோடு கதை முடிந்து விடுகிறது, அதற்கப்புறம் ”அயோத்தியில் என்ன ஆனது? இராமனின் மக்கள் என்ன ஆனார்கள்? சீதைக்கு என்னவானது? இராமனுக்கு என்னவானது?” போன்ற செய்திகளை உள்ளடக்கியது உத்தர காண்டம் ஆகும்.

கம்பரின் காலம் தெளிவுற ஆயப்படாதது. அவரை 9, 12 என்று பல்வேறு நூற்றாண்டுகளில் ஆய்வாளர் பொருத்திச் சொல்லுவர். ஆனால், ஒட்டக் கூத்தரின் காலம் 12 ஆம் நூற்றாண்டு என்று தெளிவாகக் குறிக்கப் படும். [விக்கிரம சோழன் கி.பி.1118-1135, இரண்டாம் குலோத்துங்கன் கி.பி.1133-1150, இரண்டாம் இராசராசன் கி.பி.1146-1163](14)

பொதுவாகப் பின்னெழுந்த நூலில், முன்னெழுந்த நூலோடு அங்குமிங்கும் தொடக்கூடிய உறவுகள் சொல்லப் படலாம். இரண்டின் நடையும், சொல்லவந்த குறிக்கோளும் வேறுபடலாம். ஆழ்ந்த ஆய்வில்லாமல் இரண்டும் ஒரே காலம் என்று சொல்லிவிட முடியாது. [இராம காதையும், உத்தர காண்டமும் ஒரே காலத்தன என்று எப்படிச் சொல்லமுடியும்? ஒரு சில இலக்கிய நடைகள், வாசகங்கள், குறிப்புக்களைப் பார்த்தால், இராம காதை உத்தர காண்டத்திற்கு முற்பட்டது என்றே தோன்றுகிறது. ஆனாலும் காலக் கணிப்புக் குழப்பம் இன்றும் உண்டு,]

பல வரலாற்றாசிரியரும் மணிமேகலையையும், சிலம்பையும் ஒன்றுசேர்த்து ஓர் இரட்டைக் காப்பியம் போலவே காலங் கணிக்கிறார்கள். அப்படிச் செய்வது ஒரு முட்டுச் சந்திற்கே நம்மை இழுத்துச்செல்லும். ”இரட்டைக்காப்பியம்” என்னும் கருத்தீட்டை ஒதுக்கி, சிலம்பின் காலத்தை முதலிற் கணித்துப் பின் மணிமேகலையோடு உறவை நிலைநாட்டுவதே ஒருகாற் பயன்தரும்.

எடுகோள்கள்:

12. http://keralahistory.ac.in/researchprojects1.htm
13. Jyoti Prasad Jain, “The Jaina Sources of the History of Ancient India (100 BC-AD 900)”pp 42-48, Munshiram Manoharlal Publishers Pvt.Ltd. 2005.
14. தமிழ்வளர்ச்சித்துறை வெளியீடு, “தமிழ்நாட்டு வரலாறு சோழப் பெருவேந்தர் காலம் - முதற்தொகுதி” ப.224-234, தமிழ் வளர்ச்சி இயக்ககம், சென்னை 108, 1998

அன்புடன்,
இராம.கி.

2 comments:

குமரன் (Kumaran) said...

ஐயா,

இத்தொடரை எழுதுவதற்கு நன்றி. தொடர்ந்து படித்து வருகிறேன். இந்த இடுகை வரை எந்த கேள்வியும் வரவில்லை. இனி மேல் வந்தால் கேட்கிறேன்.

வெற்றிவேல் said...

வணக்கம் அய்யா...

செய்யுள்கள் உட்செலுத்துதல் என்பது தமிழில் புதிதல்ல. திருத்தக்க தேவர் எழுதியுள்ள சீவக சிந்தாமணியில் கிட்டத்தட்ட ஆயிரம் செய்யுள்களை ஒரு பெண்பால் சமண முனிவர் செலுத்தியதாக சமணமும் தமிழும் நூலில் மயிலையார் குறிப்பிடுவார்.
பெரும்பாலான அறிஞர்கள் சிலம்பும், மணிமேகலையும் ஒரே காலத்தில் ஏற்பட்ட இரட்டைக் காப்பியங்கள் என்றே முழங்குகின்றனர். நீங்கள் மாறுபட்டு சிந்தித்திருக்கிறீர்கள்.

பாராட்டுக்கள்...