Thursday, May 13, 2010

சிலம்பின் காலம் - 5

மகதக் குறிப்பும் சங்க காலமும்: 

 சங்க காலம் தொடங்கியது மகதத்தில் ஆட்சி செய்த நந்தர் காலத்திற்குஞ் சற்று முன்பாகக் கொள்ளுவதே சரியாக இருக்கும். இனிமேலும் சங்ககாலத்தைக் கி.மு.300 ல் இருந்து கி.பி.300 வரையென்று அச்சடித்தாற்போலச் சொல்லிச் சுருக்க முடியாது. அதை கி.மு. 550/500 க்காவது நீள வைக்கும் சான்றுகள் இப்பொழுது கிடைத்துள்ளன. சங்கப் பாடல்கள் ஒருசிலவற்றால்(15) தமிழ்மன்னரோடு நந்தர்கள் நல்லுறவு கொண்டிருந்தார்கள் என்றே அறிகிறோம். 

 இந்த உறவு நந்தர்களுக்குப் பிறகு வந்த வம்ப மோரியரோடு தொடராமல், பகை ஏற்பட்டது. அசோகனின் தந்தையாகிய பிந்துசார மோரியன் தமிழெல்லை வரைக்கும் படையெடுத்து வந்திருப்பதும், நேரடியல்லா முறையில், சங்க இலக்கியத்தில் பதிவு செய்யப் பட்டிருக்கிறது (16). மோரியர் படையெடுப்பு இப்படித் தடுக்கப் பட்டதால், அத்தடுப்பு வலுவாக இருந்ததால், அதற்கும் தெற்கே அசோகன் வராமல் இருந்திருக்கிறான். இதன் விளைவால், தன் கல்வெட்டுக்களில் சேர, சோழ, பாண்டியர்,அதிகர் நாடுகளை எல்லையிலிருந்ததாகவே அசோகன் குறித்திருக்கிறான் (17)

 மோரியரை வம்பர் என்று குறிப்பிட்டிருப்பதை இங்கு நாம் சரியாய் விளங்கிக் கொள்ள வேண்டும். வம்பர் என்போர் வம்புடையவர் அல்ல; பழம்பொருளின் படி, அவர் புதியவர்; வம்பர் என்று சொன்னதாலேயே, சங்ககாலம் மோரியரின் காலத்திற்கு அண்மையில் இருந்திருக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளலாம். "இப்பத் தான் புதுசா வந்தவங்க" என்று நாம் ஒருவரை எப்பொழுது சொல்லுவோம்? நாம் முன்னவராய் இருந்து, மற்றவர் புதிதாய் வந்தவராய் இருந்தால் தானே? அதோடு, நாமும் புதியவரும் குறிப்பிட்ட சம காலத்தில் ஒருங்கிருந்தால் தானே? 

 இதுபோன்ற மோரியர், நந்தர் காலத்துக் குறிப்புகளை மறுத்து, சங்க காலத்தைப் பின்னுக்குத் தள்ளியவர்கள் ரொமிலா தாப்பரில் தொடங்கி, இந்திய, மேலை ஆய்வாளர்கள் மிகுதியாவர். நாவலந் தீவின் தென்கோடித் தமிழர்கள் மோரியருக்கும் முந்துபட்டவர்கள் என்பதை ஏற்றுச், சொல்வதில், பல வரலாற்றாசிரியருக்கும் ஏனோ தொண்டைக்குள் அடைத்துக்கொள்கிறது. [இல்லையேல் குறைந்தது அண்மையில் கி.மு.500 அளவிற் தமிழி எழுத்திற்குத் தொல்லியற் சான்று கிடைத்த பின்னும்(18), "அசோகன் பிரம்மியில் இருந்து தமிழ் பிரம்மி வந்தது" என்று மீட்டும் சொல்லிக் கொண்டிருப்பரா, என்ன? இதை மாற்றி, இந்திய வரலாறு எழுத வேண்டாமா?] 

 இது தவிர, ஆசீகம் பற்றிய தொடர்பும் சங்க காலத் தொடக்கத்தை நந்தருக்கும் முன்னதாய்க் கொண்டு போகும். புத்தம், செயினம் ஆகிய நெறிகளுக்குச் சம காலத்தில் தோன்றி, பின் அந்த இரு நெறிகளிலும், (ஏன், நம்மூர் சிவ, விண்ணவ நெறிகளிலும் கூடச்) செரித்துக் கொள்ளப்பட்ட ஆசீவக நெறியின் தோற்றம் கி.மு 600 அளவில் என்றே இந்திய வரலாற்றிற் சொல்லப்படுகிறது(19). கிட்டத் தட்ட மற்ற நெறிகளுக்குள் ஆசீவகம் முழுதாய்ச் செரித்துக் கொள்ளப்பட்ட காலம். கி.பி. 400 ஆகும். ஆசீவக நெறியைப் பற்றி, புறப்பற்றியாய் (பரபக்தியாய்) அல்லாது, நேரடிப் பங்களிப்பான பாடல்கள் இந்தியாவில் தமிழகத்தில் மட்டுமே, அதுவும் சங்க இலக்கியம், புறநானூற்றில் மட்டுமே, கிடைக்கின்றன. (பெரிதும் பேர்பெற்ற ”யாதும் ஊரே, யாவரும் கேளிர்...” என்ற கணியன் பூங்குன்றனார் பாடல் ஓர் ஆசீவகப் பாடலே. புறநானூற்றில் வரும் ஆசீவகப் பாடல்களை விளக்கி நிலைநிறுத்துவதற்கு இந்தக் கட்டுரை, களமில்லை. வேறொரு பொழுதில் அதைச் செய்யவேண்டும்) ஆசீவக நெறி தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கவே பெரும்வாய்ப்பு உண்டு என்று ஆசீவகம்-தமிழர் தொடர்பு பற்றி ஆய்ந்த பேரா. க.நெடுஞ்செழியனும், வெங்காலூர் குணாவும் தங்கள் நூல்களில் சொல்லுவார்கள்(20). இந்த ஆய்வு தொடரவேண்டியவொன்று. 

 இவர் ஆய்வு முடிவுகளை ஏற்றால், ஆசீவக நெறியின் உச்ச காலத்திற்குச் (நந்தர்-மோரியர் காலம்) சற்று முன்னர், அல்லது சம காலத்தில் சங்ககாலம் தொடங்கி இருக்க வேண்டும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. (இன்றைக்கோ ஆசீவக நெறி தமிழகத்தில் இருந்ததே அறியாமல், அதைச் செயின நெறிக்குள் பொருத்திச் சொல்லுவதும், அதைச் செரித்துக்கொண்ட சிவ, விண்ணவ நெறிகளுக்குள் கருத்துக்களைத் தேடுவதுமாய், காலம் மாறிப் போயிற்று. ஊழ் (விதி) பற்றி இன்றும் நிலவும் இந்திய அடிப்படைக்கருத்தும் ஆசீவக நெறிக்குச் சொந்தமானதே!) 

  வேடுவச் சேகரமும், பயிரீட்டுப் பொருளியலும்: 

 மூவேந்தர் பின்புலம் பற்றி ஆய்வதற்கு முன், சேர, சோழ, பாண்டியரின் குலப்பெயர்கள் இனக்குழுக்களை உணர்த்துகின்றன என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். வேடுவச்சேகர (hunter-gatherer) வாழ்க்கையில் ஒவ்வொரு பழங்குடியினரும் மற்ற குடியினரிடமிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட இனக்குழு அடையாளத்தைப் பூசியிருந்தனர். தொல்தமிழ் நாட்டின் பழங்குடியினர் பலர் சிறிது சிறிதாக மறைந்து போக, மூன்று குடியினர் மட்டுமே பெருநிலையை அடைந்திருக்க வேண்டும். நாளாவட்டத்தில் நாகர், வேளிர் போன்ற குடியினரும் இம் முப்பெருங் குடிக்குள் கரைந்து போயிருக்க வேண்டும். [துடியர், பாணர், பறையர், கடம்பர் என்னும் நாலு குடியினர் மட்டும் கரையாது நின்றதை புறம் 335 மாங்குடி கிழார் பாட்டால் அறிகிறோம்.] பெரும்நிலை அடைந்த மூன்று குடியினரும், சேர, சோழ, பாண்டியர் என்றழைக்கப் பட்டனர். 

 சந்தனம்/சாரல் பூசிய இனக்குழு சாரல்>சாரலர்>சேரலர் என்றும், பாண்டில் (= சாம்பல்) பூசிய இனக்குழு பாண்டியர் என்றும், கோழி நிறம் (= சிவந்த பொன்னிறம் அமிலச்செறிவைப் பொறுத்து இது மஞ்சளும்/சிவப்புமாய் மாறும் வேதிப்பொருளின் நிறம். கோழியூர் = உறையூர்) பூசிய இனக்குழு கோழி>சோழி>சோழியர் என்றும் அழைக்கப்பட்டன. இன்றைக்கும் சாரல் (=சந்தனம்), திருநீறு, மஞ்சள்/குங்குமம் ஆகியவற்றின் மிச்ச சொச்சம் தமிழர்/மலையாளிகளிடையே பெரிதும் விரிவாய்ப் பரவியிருப்பதை உணர்ந்தால் இனக்குழுப் பழக்கம் எங்கிருந்து பிறந்தது என்று உணர முடியும். சாரல், திருநீறு, மஞ்சள்/குங்குமம் பூசும் பழக்கங்கள் உறுதியாகச் சமய நெறி சார்ந்தவை அல்ல. [இவற்றை வடவர் தேடி அணிவதில்லை என்பதை எண்ணிப் பார்க்கலாம். தென்னாட்டிற்கு வந்தால் நம்மைப் பார்த்து அணிவர்.] அவை இனக்குழு (tribal) சார்ந்த வழக்கங்கள். இன்றைக்கும் ஆத்திரேலியப் பழங்குடிகள் பண்டிகை நாட்களில் பல்வேறு வண்ணம் பூசித் தம்மை அடையாளம் காண்பிப்பதை ஓர்ந்து பார்க்கலாம். [அவர்களில் ஒரு குடியினர், நம் தென்பாண்டியினரைப் போலவே முப்பட்டைத் திருநீறை உடலெங்கும் அணியும் வழக்கம் உண்டு. நம்மூர்ச் சிவநெறியா அவர்களுக்கு இருக்கிறது?] ஆத்திரேலியப் பழங்குடியினரும், பழந்தமிழரும் ஈனியல் முறையில் உறவுகொண்டவர் என்ற ஆய்வு முடிபையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்(21)

மூன்று பெருங்குடியினரும் வேடுவச்சேகர நிலையிலிருந்து பயிரிடும் நிலைக்கு வந்துசேர்ந்ததால் நிலைத்துநின்றனர் போலும். பொன்னி - வளநாடு/நாகநாடு, தண்பொருநை (தாம்பர பெருநை) - தென்பாண்டிநாடு, வெள்கை (வைகை) - மதிரையைச் சுற்றிய பாண்டிநாடு, ஆன்பொருநை (சுள்ளியம் பேரியாறு) - குட்டநாடு என்ற ஆறு-பயிர்த் தொடர்புகளும், பொருளியல் தொடர்பான குமுகவளர்ச்சிகளும் ஆய்வு செய்யப்பட வேண்டியவை. யாரும் இதுவரை அதுபோன்ற ஆய்வைச் செய்ததில்லை. செய்தால் நன்றாய் இருக்கும். காரணமில்லாது மூவேந்தர் என்ற பாகுபாடு நம்மூரில் ஏற்படவில்லை. அதற்கான அரசியற் பொருளியற் காரணங்களை அலசவேண்டும். மற்ற குடியினர் அவருக்கு கீழ்நின்றதற்கும் அரசியற் பொருளியல் தான் காரணமாய் இருக்கவேண்டும். பயிரீட்டுப் பொருளியலுக்கு முன் வேடுவச்சேகரப் பொருளியல் போட்டி போட முடியாது. பின்னது முன்னதற்கு முன் அடங்கித்தான் போகவேண்டும். ஆற்றங்கரை நாகரிகங்களே இறுதியில் வெல்லும். சங்கத்தமிழ் இலக்கியத்திலும் மருத நாகரிகத்திற்கு முன், குறிஞ்சி, முல்லை நாகரிகங்கள் அடிபணிந்தே போயிருக்கின்றன. நெய்தல் நாகரிகம் மருதத்தை ஒட்டி, அதைச் சந்தையாக்கியே, வளர்ந்திருக்கிறது. 

  மூவேந்தர் பின்புலமும், அற்றைத் தமிழகப் பொருளியலும்: முடியுடை 

மூவேந்தரும் சமகாலத்தில் பல்வேறு உட்கிளைகள் / பங்காளிகள் கொண்டிருந்தனர். காட்டாகச் சென்னி/செம்பியன், கிள்ளி/வளவன் என்ற குலப்பெயர்கள் சோழரின் உட்கிளைகளைக் குறித்தன. வழுதி, செழியன், மாறன் போன்றவை பாண்டியரைக் குறித்தன. ஒரே காலத்திற் பாண்டியர் ஐவர் இருந்தனர் என்பதும் பழைய புரிதலாகும். இதே போல ஆதன், இரும்பொறை, கோதை ஆகிய குலப்பெயர்கள் சேரரின் உட்கிளைகளைக் குறித்தன. 

 சம காலத்தில் உறையூர்/புகார், மதுரை, குடநாட்டு வஞ்சி ஆகியவற்றைத் தலையிடமாகக் கொண்ட அரசரே வேந்தர் என்று சொல்லப்பட்டனர். மற்ற நகரில் ஆட்சிபுரிந்தோர் அந்தந்தக் குலங்களின் பங்காளிகள், வேந்தருக்கு அடங்கியோர் என்றே அறியப்பட்டார்கள். 

 மூவேந்தரின் சமகாலத்திருந்த பல்வேறு குறுநில வேளிரும் யாரோ ஒரு வேந்தரின் மேலாண்மை ஏற்று, இறை செலுத்தியோ, அன்றி ஏற்காமலோ, தனியாட்சி நடத்தியிருக்கிறார்கள். காட்டாக, மூவேந்தர் நாட்டுக்கு நடுவில் கொங்குநாடு இருந்திருக்கிறது. [இது இன்றையக் கொங்கு மண்டலம் மட்டுமல்ல; இதற்கும் விரிந்தது, இற்றைக் கருநாடகக் குவலாளபுரம் (கோலார்) உட்பட மேலும் சில பகுதிகளை உள்ளடக்கியது.] கொங்கின் கனிமவளம் கருதிப் பல்வேறு காலங்களில் மூவேந்தர் அதைத் தோற்கடித்து, இறைபெற்று, தம் ஆட்சியின்கீழ் கொண்டுவந்திருக்கின்றனர்; ஆனால் அதன் அரசரிமையை தமக்குச் சொந்தமாய் மாற்றியோர் குறைவு. காட்டாகச் சிலம்புக் காலத்தினும் முற்பட்ட பொழுதில், ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை கொங்குக் கருவூரில் ஏறியிருக்கிறான். ஆனால் தன்நாட்டோடு அதைச் சேர்த்துக்கொண்டதாய்த் தெரியவில்லை. 

 மூவேந்தர் பின்புலத்தில் இன்னொரு செய்தி கவனிக்கவேண்டும். அது வெளியார் படையெடுப்பும், தமிழகத்தில் இருந்து மகதம் வரை போய்வந்த வணிகச் சாத்துக்களைக் காத்ததும், எல்லைப்புறத் தேசங்களைக் காவல்செய்ததும் பற்றியதாகும். மோரியருக்கு முன்னால், வடக்கிருந்து யாரும் தமிழகத்தின் மேல் படையெடுத்தாய்த் தெரியவில்லை. இன்னுஞ் சொன்னால் விந்தியத்திற்குத் தெற்கேயிருந்த நாடுகள், மக்கள் பற்றிய புரிதல் கூட அவர்களிடம் குறைந்தேயிருந்தது. ஆனால் தமிழகத்தில் இருந்து வணிகத்தார் வடக்கே போய்வந்திருக்கிறார்கள். [தொல்காப்பியமும், சங்கத்தமிழின் அக இலக்கியங்களும் அதைத் தெளிவாக, ஆழமாக, உணர்த்துகின்றன.] 

 இரும்பு என்பது மகதத்திலும், தமிழ் மூவேந்தரின் பொதுக்களமான கொங்குநாட்டிலும் தான் அன்று பரவலாகக் கிடைத்தது. [இரும்புக் காலம் / பெருங்கற்படைக் காலம் கி.மு. 1000 இலேயே இந்தியாவிற் தொடங்கிவிட்டது.] மகதத்தில் இல்லாததாய், கொங்குநாட்டில் மட்டுமே பொன் கிடைத்தது. [அற்றைக் கொங்கு இந்தக் காலக் கொங்குமண்டலம் மட்டுமல்லாது, குவலாளபுரம் (கோலார்) பொருந்திய பழைய கங்கநாடும் சேர்ந்தது (கொங்கர்>கங்கர்.). இற்றைக் கொங்குமண்டலத்திற்கும் அதையொட்டிய இற்றைக் கருநாடகத் தென்பகுதிக்கும் இருக்கும் உறவுகள் மிகுதி.] பொன்வேண்டித் தெற்கே வருவது மோரியருக்குத் தேவையாயிற்று. [மறக்க வேண்டாம் அசோகனின் மாதண்ட நாயகன் கர்நாடகம் பிரம்மகிரியில் அரசப் பொறுப்பைப் பார்த்துவந்தான். அசோகனின் கல்வெட்டுக்கள் கருநாடகத்திலும் கிடைக்கின்றன.] 

 அதே போல வணிகத்திற் செலாவணிபோற் பயன்பட்ட முத்தும், பவளமும், மணிகளும் தென்னகத்திலேயே கிடைத்தன. நெத்தில்>நெத்தி>நெதி>நிதி போன்ற சொற்கள் நித்திலம்/முத்தை விதப்பாகக் குறித்துப் பின் செல்வத்தைப் பொதுமையிற் குறித்திருக்கின்றன. சங்கநிதி என்பது முத்தையும், பதுமநிதி என்பது பவளத்தையும் குறித்தது. முத்து பாண்டியருக்கும், பவளம் சோழருக்கும் மிகுந்த செல்வத்தைக் கொடுத்தன. முத்தும், மணிகளும், மிளகும் சேரருக்குச் செல்வத்தைக் கொடுத்தன, பொன், வெள்ளி, முத்து, பவளம், மணிகள் போன்றவை அன்று வணிகம் நடத்துவதிற் செலாவணிப் பொருள்களாய் (exchange goods) இருந்தன. இவற்றைக் கொண்டிருந்த நாடுகள் செல்வத்தில் இயற்கையாகவே சிறப்புற்றிருந்தன. அற்றை நாவலந்தீவில் தமிழகம் சிறப்புற்றதற்கு இதுவே காரணம் 

 இரும்புக் காலத்திற்குப் பிந்தைய குமுகாயநிலையில், இந்தியத் துணைக்கண்டத்தில் ஏறத்தாழ ஒரே வளர்ச்சியுற்ற இருவேறு அரசத்தொகுதிகள் மகதமும், தமிழகமும் மட்டுமே. இவை ஒன்றிற்கொன்று போட்டியாய், தம்முள் முனைப்புடன் பொருதியிருக்க வாய்ப்புகளுண்டு. தவிரச் செலாவணி கிடைக்க வேண்டியதன் காரணமாய், தமிழகத்துள் ஊடுறுவாமல், அற்றை மகதப் பொருளியல் இருந்திருக்க முடியாது. அதற்குக் கோசலம். மகதம் ஆகியவற்றிற் கிடைத்த உள்நாட்டுச் செம்பும், உத்தர பாதை வழியாக இற்றை இராசத்தானில் இருந்துபோன கேத்ரிச் செம்பும் (Khetri Copper) உதவியிருக்கலாம். [காசிச் செம்பு தமிழர் மரபில் என்றும் பேர்பெற்றது.] அதே போல மகதப் பொருளியலில் ஊடுறுவாமல், தமிழகம் இருந்திருக்க முடியாது. அந்தக் காலத்தில் தமிழகத்தில் பித்தளை/ வெண்கலம்/ செம்புத் தட்டுப்பாடு இருந்ததோ, என்னவோ? வரலாற்றுக் காலத்தில் ஈழத்தில் ஓரளவு செம்பு கிடைத்ததாக தெரனியாகல எடுத்துக் கூறுவார்(22)

 தவிர, தமிழகத்தில் வெள்ளி சுற்றரவாகக் கிடையாது. அது வெளியில் இருந்துதான் வரவேண்டும். உப்பும், மிளகும், மற்றிங்கு விளைந்த பொருட்களும் வெளியே விலைபோய், பலவுப் பணம் (surplus cash) ஈட்டும் தேவை இங்கிருந்தது.. என்னென்ன பொருட்கள் மகதத்திலிருந்து இங்கு இறங்கின என்பதும் ஆயப்பட வேண்டிய செய்தியாகும். காரணம் இல்லாமல் தக்கணப்பாதை விந்திய மலை தாண்டி, கோதாவரியின் வடகரையில் உள்ள படித்தானம் வரை நீண்டிருக்காது. சந்தையோ, விளைவிடமோ தெற்கே இருந்திருக்கவேண்டும். இரண்டு தேசங்களுக்கும் இடையில் வணிகம் பெருத்து நடந்திருக்கவேண்டும். சங்க இலக்கிய அகத்துறையில் பாதிக்கு மேற்பட்டவை பாலைத்துறைப் பாட்டுக்கள். பாலைத்திணையிலும், இற்றை இராயலசீமையைக் கடந்து வணிகம் செய்யப் போவதாகவே பெரும்பாலான பாட்டுக்கள் அமைந்துள்ளன. சங்க காலத்தில் இவர் எங்கு போய் வணிகஞ் செய்தார்கள்? அது மகதம் அன்றி வேறெங்கும் இருக்க முடியுமா? 

காலகாலமாய் வடக்கு என்றவுடன் நம்மில் பலரும் தில்லி, பாஞ்சாலம் என்றே எண்ணிக் கொள்கிறோம். அது இற்றைக்கு 1000 ஆண்டுச் சிந்தனை. அதற்கும் முன்னால், 2000 ஆண்டுகளில், வடக்கு என்பது கோசலம், மகதம், இமயம் என்றே விரிந்தது. ஒழுங்கான ஆய்வுகள் அமைய வேண்டுமானால் நம்முடைய பார்வையில் மாற்றம் வேண்டும். உத்தர, தக்கணப் பாதைகளைப் புரிந்து கொள்ளாமல் வரலாற்றுவழி ஒழுங்கான ஆய்வு அமையமுடியாது. தக்கணப் பாதையின் நுழைவாயிலான படித்தானத்திற்கு தெற்கில் இருந்து மொழிபெயர் தேயத்தின் வழி எப்படி வணிகத்தார் சென்றார்கள்? மொழிபெயர் தேயம் தமிழரின் பொருளியலுக்கு ஏன் முகன்மையானது? - போன்ற கேள்விகள் ஆய்வு செய்யப்படவேண்டியவை. 

 ------------------------- 
எடுகோள்கள்: 

15. மாமூலனார் பாடல் அகம் 251: 5, மாமூலனார் பாடல் அகம் 265: 4-6 
16. மாமூலனர் - அகம் 251: 12, அகம் 281:8; கள்ளில் ஆத்திரையனார் புறம் 175: 6-7, உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார் அகம் 69:10 
17. Rock Edicts No.II [Girnar Text}, Rock Edicts No.XIII [Shahbazgarhi Text], page 32 and 42, Inscriptions of Asoka D.C.Sircar, Publications Division, Ministry of Information and Braoadcasting, Government of India, 1998 
18. முனைவர். கா.ராஜன் “தொல்லியல் நோக்கில் சங்ககாலம்” பக.78, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், 2004. 
19. A.L.Basham, “History and Doctrines of the Ajivikas”, p.10, Motilal Banarsidass Publishers Pvt. Ltd, Delhi, 2009. 
20. பேரா. க. நெடுஞ்செழியன், “ஆசீவகம் என்னும் தமிழர் அணுவியம்”, மனிதம் பதிப்பகம், திருச்சிராப்பள்ளி - 21, 2002, வெங்காலூர் குணா “வள்ளுவத்தின் வீழ்ச்சி”, தமிழக ஆய்வரண், வெங்காலூர், 1996. 
21. Spencer Wells, Discussion about M130 marker in “The Journey of Man: A Genetic Odyssey”, Penguin Books, 2002 
22. http://www.lankalibrary.com/geo/dera2.html; It is now known that the only major source of copper ore south of Madhya Pradesh in central India is located at Seruvila (the ancient Tambapittha) in eastern Sri Lanka (Seneviratne 1984; 1994). It is very likely that this was known to the Chalcolithic peoples of India and that Sri Lanka exploited this resource. Mantai could well have been a port for shipping copper to India. 
----------------------- 
அன்புடன், 
இராம.கி.

2 comments:

Gurusamy Thangavel said...

படிப்பதற்கு ஆர்வமூட்டுவதாய் உள்ளது. நன்றி இராம.கி. ஐயா.

Ramkumar said...

Amazing