Wednesday, August 21, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 4

4 பகுதிகளில் இத்தொடர் முடியுமென நினைத்தேன். ஆனால் 8 ஆம் சொல்லான சித்திரம் அதிகம் இழுக்கிறது. இதன்விளக்கம் சற்று நீளம். ஏற்கனவே இதற்கு விளக்கங்கூறிய பலரும்  திசைமாறிப் போனார். செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியும்,  அதன் ஆதாரப் பாவாணர் விளக்கமும் ( வடமொழி வரலாறு பகுதி 1, பக் 148-149) ஆழ ஓர்ந்தால்,  பொருந்தவில்லை என்பதே இப்போதைய என் முடிபு. பாவாணரை நான் மறுப்பது கண்டு சினங்கொள்ளாதீர். சிலபோது ஆசானை மீறுவதில் தவறில்லை. அதேபொழுது நான் சொல்வதே சரியென வாதாடவும் இல்லை. இது ஒருவித  முயற்சி. அவ்வளவு தான். இதை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் உகப்பு. சிலப்பதிகாரம் கானல்வரித் தொடக்கத்தில் வரும் கட்டுரையின் முதல் நாலு வரிகள்,

”சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து,
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்பெய்திப்
பத்தருங் கோடும் ஆணியும் நரம்புமென்று
இத்திறத்துக் குற்றநீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி”

என்று தொடங்கும். யாழைத் தொழுதுவாங்கி இசைக்கத்தொடங்கும் மாதவியை இவ்வரிகள் விவரிக்கின்றன.  செழுங்கோட்டின் மலர் என்பது கோட்டுப்பூ.  மைத்தடங்கண் மணமகளிர் என்பது கண்ணில் மைதீற்றிக் கொண்ட மகளிர். ”அது என்ன சித்திரப்படம்?”- என்பது நம்முன் எழுங் கேள்வி. ”சித்திரப்படம் ஓர் இரட்டைக்கிளவி” என்றே நம்மில்பலர் எண்ணிக் கொள்கிறோம். என்னைக் கேட்டால், சித்திரத்தின் அடிப்பொருள் ஓவியம்/படமாய் இருக்கத் தேவையில்லை . இங்கே அதுவொரு பெயரடை (adjective). சில போதுகளில் அதன் பொருள் படமாகலாம்.  சித்திரப் படத்தைப் புரிந்து கொள்ள நான் பலகாலம் சொல்லிவந்த  ”ஜல சமுத்ரம், நீர்க்கடல்” போன்ற கூட்டுச்சொற்களை ஓர்ந்து பாருங்கள். ஜலமும் சமுத்ரமும் ஒன்றா? நீரும், கடலும் ஒன்றா?

நீர் நிறைந்தது ஜல சமுத்ரம். கடலுக்கு என்ன பொருளென எண்ணுகிறீர்கள்? அகரமுதலி தேடுங்கள். கடல்= பரந்தது, அகன்றது, நிறைந்தது. அதுவொரு பண்புப் பெயர். பயன்பாட்டின் வழி தான் அதனுள் நீரைப் புரிந்து கொள்கிறோம். சமுத்ரத்திலும் ஜலமில்லை. நான் சொல்வது புரிகிறதா? கடல், ஓர் ஆகுபெயராய்  காலகாலமான மரபில், உலகில் பரந்துகிடக்கும் நீரைக் குறிக்கிறது. எல்லா மொழியிலும் இதுபோற் சொற்பயன்பாடுகள் ஓராயிரத்திற்கும் மேலுண்டு. Context determines the meaning here, while the basic meaning may be different. "நல்ல பையன்" என்று சொல்லிவிட்டு ஒரு கதையில் பையனைத் தவிர்த்து நல்லவன் என்று ஆசிரியர் எழுதிப் போவதில்லையா?  இன்னொரு கூட்டுச்சொல் பார்ப்போம்.

சித்திரச்சோறு (பெருமானர் சித்ரான்னம் என்பார் variety rice) என்று பல வீடுகளில் செய்வார். புளிச்சோறு, சருக்கரைச்சோறு,  எலுமிச்சைச் சோறு, எள்சோறு  என விதவிதமாய்ப் பல்வேறு சுவைகளில், பல்வேறு நிறங்களில்  சோறுபடைப்பது சிந்திரச் சோறு. இங்கே ”விதவிதமாய், வெவ்வேறாய்” என்ற பொருள் தான் முகன்மை. இன்னொரு காட்டைப் பார்ப்போம். ”செந்நூல் நிணந்த சித்திரக் கம்மத்து வெண்கால் அமளி விருப்பின் ஏற்றி” என்று பெருங்கதை உஞ்சைக்காண்டம், நருமதை சம்பந்தம் என்ற 35 ஆம் பகுதியில் :98-99 ஆம் அடிகளில்  வரும்.  அமளி =கட்டில். கம்மம்= வேலைப்பாடு. கம்மியர்= தச்சர், துன்னகாரர் (தையல்காரார்), கொல்லர், வினைஞர்= நுட்பியல்/கலை தெரிந்தோர்.

”செந்நூலால் முடைந்த, பின்னப்பட்ட, நெய்யப்பட்ட (=நிணந்த) சித்திரக் கம்மம்” என்பது  விதவிதமான, வெவ்வேறான, அடவுகளில் (design) செய்யப் பட்ட பொட்டு வேலையைக்  குறிக்கும். துணியில், புடவையில் அமையும் இப்பொட்டுகளை இக்கால மங்கையர் ”புட்டா” என்றழைப்பார். சவளிக் கடைகளில் விசாரித்துப் பாருங்கள். புடவையில் வரம்புகளில் அல்லாது உடற்பகுதியில் வரும். வட்டாரத்திற்குத் தக்க பல்வேறு பொட்டு அடவுகள் உண்டு. காஞ்சிபுரம் பட்டுப்புடவைகளில் மாங்காய், மயிலென விதப்புக் காட்டுவர் இராசபுதனப் புடவைகளில் ஒட்டகம், மயிலெனத் திகழும். ஊருக்கு ஊர் இதுமாறும். தமிழ் எழுத்துக்களைப் பொட்டாகப் போட்ட பட்டவங்களும் (pattern) உண்டு. ஒரு காலத்தில் மிகவும் விற்றது. சேரனின் ஒரு திரைப் படத்தில் விளம்பரப் படுத்தினார். பொதுவாய்ப் பொட்டில் காணும் நுணுக்கம், சிறுமை, detail என்பவையே முகன்மை. இப் ”புட்டாத்” தோற்றத்தையே சித்திரம் என்று இரு காட்டுகளிலும் அழைத்திருக்கிறார். இப்பொருட்பாட்டை வேறொரு காட்டின் மூலமும் தெளிவு பெறலாம். சிலப்பதிகாரம் ஊர்காண் காதையில் ,

”...............ஓங்கிரும் பரப்பின்
வங்க ஈட்டத்துத் தொண்டியோர் இட்ட
அகிலும் துகிலும் ஆரமும் வாசமும்
தொரு கருப்பூரமும் சுமந்துடன் வந்த
கொண்டலோடு புகுந்த கோமகன் கூடலை

என்று வரும் 104-109 ஆம் வரிகளுக்கு விளக்கமாய் அடியார்க்கு நல்லார் ”கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர் கோபம், சித்திரக் கம்மி, குருதி, சுரியல், பேடகம், பரியட்டக்காசு, வேதங்கம், புங்கர்க் காழகம், சில்லிகை, தூரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, கவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி” என்று 35 வகைத் துகில்களை எடுத்து உரைப்பார். இத்துகில்கள் சிலம்புக் காலத்தில் இருந்தனவா? அடியார்க்கு நல்லார் காலத்தவையா? - என்பது  நமக்குத் தெரியாது. ஆனாலும் இப் பெயர்கள் முழு ஆராய்ச்சிக்கு உரியவை. நம்மூர்த் தமிழ்த் துறைகள் இவற்றைச் செய்யவேண்டிக் கேட்டுக் கொள்வோம்.  நாம் புரிந்து கொண்ட அளவில்  சித்திரக் கம்மியும், சித்திரக் கம்மமும் ஒன்றே. துணிகளில் பின்னப்படும் பொட்டுக்களையே அவை குறிக்கும் என்று எண்ணுகிறேன். 

சாப்பாடுத் தட்டில் பொட்டுப்பொட்டாய் விதப்புச்சோறு (variety rice) இட்டுச் சித்திரச் சோறு என்கிறாரே, அங்கும் இதேதான். சித்திரக் கருங்கல்= அங்கங்கே பொட்டுப்பொட்டாய்க் கண்ணைக் கவரும் வண்ணம் இயல்பாய் அமையும் அடவுகளை அடையாளங் காட்டும் கருங்கல்.  இதுபோல், ஒரு குறிப்பிட்ட கோலத்தில் அல்லது கோட்டுப்படத்தில் எழுத்துக்களைப் பொட்டென வைத்து கவி செய்வது சித்திரப்பா. எல்லாக் கவிஞராலும் இது முடியாது. பொட்டுப் பொட்டாய்ப் புள்ளிகள் கொண்ட ஒரு சேரநாட்டு மீனைச் சித்திரக்காரை என்பார். சித்திரக்குள்ளன்/ சித்திரக் குத்தன் என்பவன். கூற்றுவனிடம் உயிர்களின்  நல்வினை./தீவினைக் கணக்கெழுதிப் படிப்பவனாகக் கருதப்படும் வேடிக்கைக் குள்ளன். சித்திர என்று தொடங்கும் கூட்டுச்சொற்கள் மிகுதி.

சித்திர அம்பலம் கேள்விப்பட்டிருக்கிறீரா? தில்லைப் பொன்னம்பலம், மதுரை வெள்ளியம்பலம், நெல்லைத் தாம்பர அம்பலம், ஆலங்காடு அரத்தின அம்பலம் போல், குற்றாலாத்தில் சித்திர அம்பலம் என்றொன்று உண்டு. நெடுநாள் அதன்பொருள் தெரியாதிருந்தேன். எல்லோரையும் போல் அது ஓவிய அம்பலம் என்றே எண்ணினேன். கம்போடியாவின் சியாம்ரீப் (Siem riep) போனபோது தான் புரிந்தது. சியாம்ரீப்பில் அங்கோர்வாட்டும், அங்கோர் தாமும் தான் சுற்றுலாப் பயணியருக்குப் பெரிதாய்த் தெரியும்.  அவை தவிர  7 ஆம் சூரியவர்மன் காலத்தில் 12 ஆம் நூறாண்டில் கட்டப்பட்ட Bayon. Ta Prohm, Preah Khan போன்ற ஆலயங்களும் அங்கு முகன்மையானவயே. இவற்றில் Preah Khan என்பது சற்று வியப்பானது. இன்னும் மீள்கட்டமைக்கப் படாத இக் கோயிற் பலக்கை (temple complex)யில் புத்தர் திருநிலைகளும் (சந்நிதிகளும்) சிவன் திருநிலைகளும், விண்ணவன் திருநிலைகளும் உண்டு. நான் இங்கே ஒரு சிவன் திருநிலையை விவரிக்கிறேன்.

8அடிக்கு 8 அடி கருவறை; கூம்புவடிவ விதானம்; நடுவே இலிங்கம்; சுற்றிலும் தரையிலும், சிவகங்கை மாவட்டத்தில் கிடைப்பதுபோல் செம்பாறாங்கல் (செம்புரான் கல்)  அதை மூடிப் போர்த்தியது போல் மாவுக்கல்லால் (sandstone) ஆன பட்டைச்சுவர். [நம்மூர்ச் சிற்பி/கற்றச்சர் அங்கு எளிதில் பொருந்திக் கொள்வார். இரு நாட்டவர் கலையும் நுட்பமும் ஒன்றுபோல் இருக்கும்.]. செம்புரான் கல்லைப் போர்த்திக் கிடக்கும் மாவுக்கல்லில் பொட்டுப் பொட்டாய்ச் சின்னஞ்சிறு ஒட்டைகளும் பொந்துகளும் இருந்தன.  கூடவந்த வழிகாட்டியிடம் ”இந்த ஓட்டைகள் ஏன்?” என்று கேட்டேன்.

”(1/2 அங்குலத்திலிருந்து 1 1/2 அங்குலம் வரை இருக்கும்) ஒவ்வொரு பொட்டிலும் ஏதோவொரு மணிக்கல் (ஆம், nine types of gems. ஒன்பான் மணிக் கல் - நவரத்னம்) அல்லது முத்து, பவளம் என்று ஏதோ) பதித்திருந்தது. 100, 200 ஆண்டுகளுக்கு ஒருமுறை கம்போடியருக்கும்  வியத்நாமியருக்கும் நடந்த சண்டையில் வியத்நாமியர் இவற்றைப் பறித்துப்போனார்" என்று வரலாற்றுச் சோகக் கதை படித்தார்,  கம்போடியருக்கும்  தாய்லந்து/சியாமியருக்கு இடையிலும் கூட இதுபோல் சதாப் போர்கள் நடந்துள்ளன. ஒருவருக்கொருவர் இப்படிக் கொள்ளையடித்தது அதிலும் அதிகம்தான். [நம் தமிழரசர் மட்டும் “யோக்கியரா” என்ன? மூவேந்தரும் ஒருவருக்கு ஒருவருடனும், குறுநில மன்னருடனும் சண்டையிட்டுச் செல்வம் கொள்ளை யடித்தது இதைவிட ஏராளம். வல்லான் வகுத்ததே அக்கால வாழ்க்கை.]  ஆக Preah Khan இல் நான் பார்த்தது சித்திரக் கருவறை. இப்போது குற்றாலம் சித்திர அம்பலத்தைக் கற்பனை செய்துகொள்ளுங்கள். பொட்டுப்பொட்டாய் சுவர் முழுவதும் மணிக் கற்கள், முத்து, பவளம் பதித்திருந்தால். பகைவர் விட்டு வைப்பாரா? முடிவில் சித்திரம் என்னும் பொருளை மாற்றி  ஓவியம் தான் வரையவேண்டும். 

இன்னொரு காட்சி காண்போமா? கேரளத் திருச் சிவபேரூர் (அதாங்க, திருச்சூர்) ஆடிப்பூரத்தில் நிற்கும் பற்பல யானைகளுக்கு பொட்டுக்கள அமைந்த முகபடாம் அணிவிக்கிறாரே அதைச் சித்திரப் படாம் என்றுஞ் சொல்வர்.  சித்திரத் தாளம் என்பது ஒன்பது வகைத் தாளம் சித்திரத் தையல் என்பது பல்வேறு பூவேலைப்பாடுகள் செய்த ஆடை.  சித்திரப்பாவாடை= பூவேலை செய்த பாவாடை. இன்னும் சித்திரத்தில் தொடங்கும் பல்வேறு கூட்டுச் சொற்களை நான் பட்டியலிடமுடியும். இங்கு எல்லாவற்றிலும் சித்திரம் என்பது ஒரு பெயரடை. அதன் பொருள் ”விதவிதம், வெவ்வேறு, பொட்டு, அழகு, நுணுக்கம், detail, something pleasant, intriguing, kaleidoscopic” - இப்படி விரியும்.  அதெப்படிச் சித்திரம் என்ற சொல் பிறந்தது? 

அடுத்த பதிவில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, August 20, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 3

ஆறாவது சொல்லான குருவிற்கு வருவோம். 

குல்>குள்>குரு என இச்சொல் வளரும். குல் எனும் வேர்ச்சொல், அடிப்படையில் தோன்றல் வினையைக் குறிக்கும். பின் முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற் செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்று பல்வேறு பொருட்பாடுகளை உணர்த்திச் சொற்களை உருவாக்கும். 

குல்லல்= தோன்றல். அன்றாட வாழ்க்கையில் குலம் என்கிறோமே? அது குல்லலில் எழுந்ததே. lineage என்பது அதன்பொருள். குல்>குழு= சேர்ந்து கொண்டது. இதைக் குழுவியது என்றுஞ்சொல்வார். குல்>குரு-த்தலில் எழுந்த பெயர்ச்சொல்  குருத்து என்பதாகும். ”வாழை, பனை, தென்னை, மரஞ் செடி கொடிகள்” எனப் பல்வேறு குருத்துகளை அன்றாட  வாழ்விற் சொல்வோம். குருத்து= sprout குருகெனினும் குருத்தென்றே பொருள். குருந்தென்றும் அமையும். குரு>குரும்பு>குரும்பை= தென்னை, பனங்காய்களின் பிஞ்சு. குரு= கொட்டை;  குழு>கொழு>கொழுந்து என்பது துள்>துளிர்> தளிரைக் குறிக்கும். குரல்= கூலக் கதிர். பூங்கொத்து என்றும், தினை, வாழை ஆகியவற்றின் தோகை என்றுஞ் சொல்வர்.  குரு>கூர்>கூலம் என்றும் தொடர்பு சொல்லலாம்.

குரல்>குரற்புல்>குரப்புல்= தருப்பைப் புல்= dharba grass. (பார்ப்பனத் துறவியர் மட்டுமின்றி) எல்லாத் துறவிகளும் தருப்பைப்புல் தடுக்கில் அமர்வராம்.  குரம்= தருப்பை;, குரமுளை= எல்லாவகை வித்துகளினின்றும் தோன்றும் முளை, குருக்கு= பிரம தண்டுச் செடி prickly poppy நெருஞ்சி முள்ளுக்கும் குருக்கென்ற பெயர், அதன் கூர்மையாலுண்டு, இன்னொருவரை வையும் போது  “உன் வீட்டிலே எருக்கும் குருக்கும் முளைக்க!” என்பாருண்டு.  சரி தாவரங்களுக்கு மட்டுமே குள்/குழு/கொழு என்ற அடிச்சொல் அமைந்ததா எனில் இல்லை. பல்வேறு உயிரிகள், விலங்குகளுக்கும் கூட அமைந்தது என்றே சொல்லவேண்டியுள்ளது.. 

குரு என்பது, கருவென்றும் திரியும். முட்டைக்குள்ளும் கருவுள்ளதே? குட்டிகள் பிறக்கும்போது  ஆண்விந்தும்,  பெண்முட்டையும் சேர்ந்து கருவாகிறது. கருவைச் சூல் என்கிறோமே?; குழவி, குழந்தை தொடர்பான சொற்களும் குல், குள், குழவில் எழுந்தவையே. அடிப்படையில் இவை இளமை குறிக்கும் சொற்கள்.  குழகு, குழகனும் குழந்தைப் பெயர்களே. குள்>குள்+து=குட்டு> குட்டி என்பதும் தோன்றல் கருத்தில் எழுந்ததே. குள்+ந்+சு>கு(ள்)ஞ்சு என்பதும் தோன்றல் கருத்து வளர்ச்சியே. குருள்>குருளை= குட்டி. ஆங்கிலத்தில் girl. குருத்துக் குழந்தை= அப்போது பிறந்த குழந்தை just-born kid; உடலில் பொக்குளம் ஏற்பட்டு எழுகிறதே? அதையும் குருத்தலென்பார். குரு குருத்தல் = வேர்க்குரு உண்டாதல், நமைத்தல், அம்மைக் கொப்புளமும் எழுவதும் குருத்தல் தான். குருப்பு = பரு; புண், குருப்பித்தல்= பருவுண்டாதல். குருமை= பருமை, பெருமை;  குருக்கல்= குரு (பொக்குளம்) உணடாதல்.

குழுத்தல்= பருத்தல், பெருத்தல். பெருத்தல் என்பது இரு பரிமானத்திலும், முப் பரிமானத்திலும் நடக்கலாம். பருமன் என்பது முப் பரிமானம். பரப்பு என்பது இரு பரிமானம். குழு>குழித்தல் என்பது இரு பரிமானச் சொல். குழுத்தல், குழுமுதல் என்பது, கூடலிற் தொடங்கி சொற்பொருள் வளர்ச்சியிற் குழித்தல் ஆகும். குழுத்தலின் திரிவான கொழுத்தல் திண்மப் பருமனையும் (solid expanse), குழித்தலின் திரிவான கொழித்தல் நீர்மப் பருமனையுங் (liquid expanse) குறிக்கின்றன. குழித்தல் என்ற சொல், முதலில் ஓர் எண்ணை அதே எண்ணாற் பெருக்குவதற்குப் பயனாகிப் பின் எல்லா எண்களையும் பெருக்குதற்கு ஆகியது. (சதுரத்திலிருந்து செவ்வகம் போய்ப் பரப்பைக் காணும் சிந்தனை விரிவை இங்கு அறியலாம்.)  காலங் காலமாய் தமிழகத்தின் செந்தரக் குழி என்பது 16 சாண் சதுரம் = 121 சதுர அடி.  (18 சாண் சதுரம், 12 சாண் சதுரம் போன்றவையும் சிலவட்டாரங்களில் சில காலங்களில் இருந்துள்ளன. 1 சாண்= 8.25 அங்குலம்; 16 சாண்= 132 அங்குலம்= 11 அடி.) குழியிலிருந்தே மா, வேலி என்ற பெரிய பரப்பளவைகள் உருவாகின.

இனிக் குருவின் பெருமைப் பொருளுக்கு வருவோம். குரு+அவன்= குரவன்= தலைவன்; குரு>குரம்>குரத்தி= தலைவி; இச்சொல் குருவின் மனைவி, குருப்பதவி ஏற்றிருப்பவள், சமணப் பெண்துறவி ஆகியோரையுங் குறிக்கலாம். ஐங்குரவர்= அரசன், ஆசிரியன், தாய், தந்தை, தமையன் ஆகியோரைக் குறிக்கும். பொதுவாய், குரு என்பது அறிவாசிரியனைக் குறிக்கும். சிவ சமயக் குரவர் நால்வர். என்பார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் என்பாரே அவராவர். குரவடிகள்= சமண ஆசிரியத் துறவி, குரவு= ஆசிரியத் தன்மை. குரிசில்= பெருமையிற் சிறந்தோன். வள்ளல். தலைவன், குரு= ஐங்கரணன் (பஞ்சாங்கக்காரர். இக்காலத்தில் பெருமானர் வாத்யார் என்றழைப்பார்), வியாழக் கோள்.  சிவன்கோயிலில் இறைவன் திருமேனிக்கு அலங்காரஞ் செய்து ஆகமம் பேணி, திருநீறு அளிப்பவர், (இவர் பெருமானர் மட்டுமென்று பொருளில்லை. சிவ வேளாளராகவும், வேளகாரர்/குயவராகவும் கூட இருக்கலாம். )  தவிர, குரு என்பதற்குக் குருகுலத் தலைவன், அமைச்சன், அயன் (பிரம்மன்) என்ற பொருட்பாடுகளும் உண்டு.  குழு>கெழு>கெழுமை>கிழமை>கிழவன்>கிழான் = உரியவன், தகைவன், கணவன், மருதநிலத் தலைவன் ஆகிய சொற்களும் இதே தொடர்பிள் கிளைத்தவை தாம்.

குரு என்பது பருமன், கனமென்ற பொருளின் நீட்சியாய் வடமொழியில் நிரையசையைக் குறிக்கும் வாய்ப்பாடாகும். நெடில், நெடிலொற்று, குறில், குறிலொற்று என்ற நாலையும் இரு மாத்திரையளவு கூடிய அசையாய் (வடமொழியொட்டி தமிழுக்கு இலக்கணஞ்சொன்ன) வீரசோழியம் அடையாளங்காட்டும்.  (இது நிரையை நிறையெனத் திரித்துப் புரிந்து கொண்டதன் பலன் ஆகும்.) குரு= நிறை ஆகி,  அதன் நீட்சியான குருவம் gravity என்ற பொருளைத் தந்தது.  குருவேற்றக் கொள்கை= gravitation theory.

சரி,  ”குரு தமிழா?” எனில் தமிழ் என்றே சொல்வேன்.. ”சங்கதத்தில் guru ஆகிறதே?”- எனில் மறுக்க முடியவில்லை. அதேபொழுது சில சொற்களின் தொடக்கம் அதிர்ந்து voiced வகையில் ஒலிப்பதாலேயே, சட்டெனச் சங்கதம் என்றுவிட முடியாது.  ஏனெனில், மேற்சொன்ன தோன்றல், முளைத்தல், எழுதல், இளமை, புதுமை, பசுமை, மென்மை, முன்மை, தருதல், முற்செலவு, மேற்செலவு, ஊக்கம், உயர்ச்சி, உச்சி, பெருமை என்ற இத்தனை பொருட்பாடுகளையும் பல்வேறு சங்கதச் சொற்கள் உணர்த்துவதில்லை. ஆனால் தமிழ்ச் சொற்கள் உணர்த்துகின்றன. மேலே கூறிய தமிழ்ச் சொற்களின் வளம், அகல்வரிசையைக் காணும்போது, தோற்றம் அங்கு தானா என்பதில் இன்னும் ஐயமுண்டு.  தமிழுக்கே ஆதாரம் அதிகம்.

ஏழாவது சொல்லான ஞானம் தமிழ் என்பதைச் சொல்லாய்வறிஞர் ப.அருளி தன்னுடைய, “யா” என்ற நூலில் மிக விரித்துச் சொல்லியுள்ளார். அதற்குமேல் சொல்வது கூறியது கூறலாகும். நண்பர் அந்த அருமையான நூலை வாங்கிப் படியுங்கள்.  உங்க்ளைப் போன்றோர் புரந்தால் தானே தமிழ்முயற்சிகள் நடக்கமுடியும். நம்மில் பலரும்  அதையேன் செய்யத் தயங்குகிறோம்?

அடுத்த பகுதியில் முடிவிற்கு வந்துவிடுவேன்.

அன்புடன்,
இராம.கி.

Monday, August 19, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 2

அடுத்தது வாயு. இது வாய் + ஊ >வாயூ>வாயு என்றபடி எழுந்தது. மூக்கால் மூச்சுவிடுவது போல் வாயாலும் காற்றை வெளியிடலாம். ஊ-தலை, ஊது-அல் எனவும் பிரிக்கலாம். ஊ, ஊது என்ற இரு சொற்களுமே தமிழ்தான். ஊது> ஊதை, என்பதும் காற்றுத்தான். ஊ>உய்>உயிர்= ஒருவன்/ஒருத்தி வாழ்கிறான்/ள் எனவுணர்த்தும் காற்று.  உய்தல்= living. உய்தலை விடுத்து உய்த்து>உச்சு> உச்சு-தல் வினையிலெழுந்து உஜ்ஜு-தல் என்றான வடமொழிப் பலுக்கில் பிறந்த ”ஜீவனில்” சிலர்தொங்குவார். ஜீவனென்பது மிகச்சிதைந்த வடதமிழ்ச் சொல். இதற்கு இணையான சொல் எந்த இந்தை யிரோப்பிய மொழியிலும் கிடையாது. ஆனாலும் சங்கதம் பழகுகிறதெனில் என்னபொருள்? கடன் வாங்கியதென்பது தானே? உயிர், சீவன் போன்ற சிந்தனை, நிலைத்த நாகரிகத்தார்க்கே எழும். நாடோடிகளுக்கு எழ வாய்ப்புக் குறைவு.  வாயூவிற்கு வருவோம்.

வாயால் ஊதுவது (ஊ செய்வது) வாயூ >வாயு. வாயுவை வடமொழி கடன் வாங்கிப் பயனுறுத்தி, அதற்கு வா எனும் தாதுவைக் காட்டும், ஆனால் எந்த இயற்கைச் செயலோடும் தொடர்புறுத்தாது. தாதுவாய்ச் சொல்லப்படும் ’வா’ வின் பொருளென்ன? தெரியாது. பாணினிவழித் தாதுகளின் சிக்கலே இதுதான். அவர்களின் தாதும் நம்வேரும் ஒன்றல்ல. அப்படி நாம் எண்ணிக் கொள்கிறோம்  அவ்வளவு தான். ஏறத்தாழ 2200 தாதுக்களை அவர் சங்கத அடிப்படையாக்குவர். தாதுவிற்குத் தண்டென்றும் பொருள் சொல்லலாம். அது உறுதியாக வேராகாது. தமிழ்வேர்கள் நானறிந்தவரை 81 ஐத் தாண்டுவதே அதிகம். (தமிழ்வேர்கள் பற்றி வேறொரு கட்டுரையில் எதிர்காலத்தில் சொல்வேன்.)

வாயை அறியச் சற்று ஆழம் போகவேண்டும். இங்கே சொல்லும் எல்லாச் சொற்களுக்கும் வள்ளே வேர். வள்ளுதல் என்பது வளைதல்/தோண்டல் எனும் 2 பொருள்களையும் குறிக்கும். மரத்தை வள்ளி உருவாக்கிய பரிசல் வள்ளம் ஆகும், மரத்தில், களிமண்ணில் வளைத்தோ, தோண்டியோ பெற்றது வட்டு. வட்டிற் சிறியது வட்டில், வள்ங்கு>வங்கு= பொந்து. வங்கை மூடிய சாய்வுப் பலகை வங்கு/ வாங்குப் பலகை. ”வங்கி (Bank) என்ற சொல் இப்படித்தான் எழுந்தது. வங்குதல்= தோண்டுதல். தென்பாண்டிநாட்டில் வினைச் சொற்களின் நடுவில் வரும் ஙகரம் சிலபோது பலுக்கப்படாது போய் விடும். வங்கு>வகுவாகி வகுதல்= இரண்டாய்ப் பிரிதலைக் குறிக்கும். பல்வேறாய்ப் வகுக்கப்பட்டவை வகை. வகு>வகிர் என்றும் நீளும். வகிர்>வயிர் என்றும் ககரம் யகரமாகிப் பலுக்கலில் திரியும். வள்>வய் என்றுந் திரியலாம். [தொள்> தொய், நொள்>நொய், வெள்>வெய் என்பதுபோல்  புரிந்துகொள்க.]

வகுபட்டது/வயிபட்டது வாயாகிக் கருவிப்பெயர் குறிக்கும். கவாலத்தின் மேல்த்தாடையிலிருந்து கீழ்த்தாடை பிரிந்து வகுபட்டுள்ளதால் வாய் எனப் பட்டது. தாடைகள் வகுபட்டதால்தான் உண்ணல், பேசல் போன்ற இயற் செயல்கள் எழுந்தன. வாய்ப்பட்டதை வாய்த்தல் என்றுஞ் சொல்வோம். வழிப்பட்டதென்று பொருள். வாய்து>வாது என்றும் பலுக்கப்படும்.  வாது என்பது வாயூவிற்கு இன்னொரு சொல். வாது+அம்= வாதம் என்பது சித்த மருத்துவக் கலைச்சொல். வாதம், பித்தம், கபம்/சிலேட்டுமம் என்ற 3 வகைகளில் சித்தமருத்துவம் மாந்த உடல்களை வகைப்படுத்தும்.  உண்ணல், அருந்தல் தொடர்பான பல சொற்களும் குழித் தன்மையையும் முகக் குழிக்குள் உணவை முழுக்கும்/விழுக்கும் தன்மையையும் உணர்த்தும். 

ஆங்கிலத்தில் mouth (n.) என்கிறாரே? அதன் வரையறையாய் Old English muþ "oral opening of an animal or human; opening of anything, door, gate," from Proto-Germanic *muntha- (source also of Old Saxon, Old Frisian muth, Old Norse munnr, Danish mund, Middle Dutch mont, Dutch mond, Old High German mund, German Mund, Gothic munþs "mouth"), with characteristic loss of nasal consonant in Old English (compare tooth), probably an IE word, but the exact etymology is disputed. Perhaps from the source of Latin mentum "chin" (from PIE root *men- (2) "to project," on the notion of "projecting body part"), presuming a semantic shift from "chin" to "mouth." என்று சொல்லப்படும்.  இங்கே   "chin" என்று சொல்லப்பட்டது என்னைப் பொறுத்தவரை தவறு.

வாய்ச்செயல் தொடர்பான எல்லாமே உள்ளிடுதலைக் குறிக்கும். உள்>உண்> உண்ணு>உணவு. முழுங்குதல் என்பது உள்ளிடுதலின் இன்னொருவகை. முழுங்குதல், முங்குதல் என்றுஞ் சொல்லப்படும். (இவ்வளவு சாப்பாட்டை உண்டைக்காட்டி போல் அப்படியே முங்குறானே?) முங்கல், மு(ழு)க்கல் என்றும் பலுக்கப்படும்  முக்கும் குழி முக்கமாயிற்று. சங்கதத்தில் இரண்டாம் ககரமிட்டு மு(க்)கமென்று சொல்லப்படும்  நம் முகமும்  இம் முக்கமும் வெவ்வேறு வகையில் பிறந்தவை.  மு(ழு)க்கலை மு(ழு)த்தலென்றுஞ் சொல்வோம்.  உணவை முழுக்காட்டும்> முக்கும்> முழுத்தும் குழி mouth. முழுத்து> முகுத்து>மூத்து>மௌத்>mouth என்பதே nostratic முறைப்படி சரி யாகும்.  (ழகரம் ககரமாவது பல தமிழ்ச் சொற்களில் நடந்துள்ளது.)  சங்கதத்தில் முக்கம் போக, முக்கவாத்ய (வாய்க்கருவி) என்ற சொல்லும் உண்டு.  இதுபோக, ஆசந், வக்த், ஆஸ்ய என்ற சொற்களும் வாய்க்கு உண்டு.

அடுத்த சொல் ஆகாயம். இது ஆ என்னும் முன்னொட்டுச் சேர்ந்த சொல். அடிப்படைத் தமிழிற் ’காய்ந்து கரிந்தது காயமாகும்’; விண்ணை அதன் நிறம் பற்றிக் காயம் என்பது தமிழர் வழக்கம். (”விண்ணென வரூஉம் காயப் பெயர்” - தொல், எழுத்து 305) காள்>காய்>காயம்  காள்= கருமை. காளி=கருப்பி ஆனவள்; காயாம்பூ = கருநீல வண்ணப் பூ. விண்ணவன் கருநீல வண்ணன். அகல் காயம், ஒலிப்பு நீண்டு, அகன்ற இருள்வெளி உணர்த்தி, ஆல்காயமாகி, ஆகாயமாகும். காயம் காசம் என்றும் வழங்கும்  காசினி என்பது காசத்தில் பிறந்த பெண்விளிப்புச் சொல். காசம்>காசுமம்> cosmology என்று கிரேக்க வழி ஆங்கிலத்தில் நுழையும்.  தமிழ்-கிரேக்கத் தொடர்புகளைக் குறைத்தே மதிப்பிடுகிறோம். அலெக்சாண்டர் தொடர்புக்கு முன்னாலும் யவனர் தமிழகம் வந்திருந்தார். இன்னுஞ் சொன்னால் இசுரேல் நாட்டு மன்னர் சாலமன் காலத்திலிருந்தே, பொனிசியர் காலத்திலிருந்தே தமிழர் தொடர்பு உண்டு.அதையெல்லாம் யார் படிக்கிறார்?! 

மூன்றாவது சொல் சவம்.  தமிழில், சாய்தல்>சாதல் = இறத்தல். இறந்தபின் ஓர் உடல் தானே நிற்காது. கீழே சாய்ந்துவிடும். சாதல்>சவுதல் என்பது நிலா> நிலவு போன்ற ஒலி மாற்றம். கணக்கற்ற சொற்கள் தமிழில் அப்படியாகி யுள்ளன. சாதல் தமிழென்றல் அப்புறம் சவமும் தமிழ் தான். சவுத்தான்> செத்தான் என்பதும் தமிழே. சாவை ஏற்போர் சவத்தை ஏற்கமறுப்பது வியப்பு ஆகிறது. எப்படியெல்லாம் இந்தச் சங்கதம் இவர்களைப் பாடுபடுத்துகிறது? மூளையையே வெட்டிவைத்து விடுவார்களோ, என்னவோ?

நாலாவது சடம். தமிழில் உயிர், உடம்பு பற்றியவற்றியவற்றுள் பொருள்முதல் வாதப் புரிதலும் உண்டு. கருத்துமுதல் வாதப் புரிதலும் உண்டு.  முன்னதச் சாருவாகப் பார்வை உலகாய்தப் பார்வை என்பர். பின்னதை ஆன்மவாதப் பார்வை என்பார். இந்தியாவில் எழுந்த கடவுள்மறுப்புச் சமயங்களான அற்றுவிகம் (>ஆசீவிகம்), செயினம், புத்தம் போன்றவை ஐம்பூதக் கொள்கையையும்  உயிர் என்பதின் இருப்பையும் ஏற்றுக்கொண்டவை தாம்.

எப்படி ஒரு பொருளைப் பொட்டணம்/பொட்டலம் போடும்போது சட்டங் கொண்டு அடித்துப் போர்த்துகிறோமோ, அது போல் உயிரெனும் பொருளைப் போர்த்தும் உடலும் ஒரு சட்டமே என்பது கடவுள் மறுப்புச் சமயங்களுக்கும் உகந்த சிந்தனை தான். கடவுள் ஏற்புச் சமயங்களான சிவமும், விண்ணவம் கூட இவற்றை இயல்பாய் ஏற்கும் யானையைக் கொன்று அதன் தோலைப் போர்த்திக்கொண்ட சீர்காழிச் சிவன், சட்டைநாதன் எனப்படுவான். நம் உடம்பின் மேல் போடப்படும் இன்னொரு covering-உம் சட்டை எனப்படும். சட்டையைத் தமிழென ஏற்போர், சட்டம்>சடம் என்பதை மறுப்பது விந்தையிலும் விந்தை. வடமொழியார் சடத்தை ஜடமென்று பலுக்குவார். அதனாலேயே சடம் அவர் சொல்லாகுமா? புழங்குபவன் சொல்வது சரியாம். உருவாக்கியவன், பண்ணியவன் சொல்வது சரியில்லையாம். இது என்ன புதுக்கதை?
     
ஐந்தாவது புத்தி.  இதன் வேர்ச்சொல் புல்.  பொழுது புலர்ந்தது என்கிறோமே? இருள் அகன்று வெளிச்சம் அல்லது தெளிவு வருகிறதென்றுதானே பொருள். புலவன் = அறிவில் தெளிந்தவன்.  புலமை = அறிவுத்தெளிவு. புலத்தன், புலத்தி, என்றசொற்களின் லகரத்தில் வரும் உயிர் இழிந்து புத்தன், புத்தி ஆகும்.  புத்தி பெண்பாலுக்கும், தெளிந்த அறிவிற்குமான சொல்லாகும். ஒரு செயலில், செய்தியில் நல்லது கெட்டது எனத் தெளிவுகாணும் அறிவு புத்தி. காரண, காரியம் தெரிந்தவன் புத்திசாலி எனப்படுவான். அறிவிற்கு அடுத்த நிலை புத்தி. Being familar is knowledge. (அறிவு). discerning the right from wrong is புத்தி.  ஆனாலும் 100 க்குத் 99 பேர் இதைச் சங்கதச்சொல் என்றே கருதுகிறார். நாம் சொல்வது புத்தியில் ஏறுவதேயில்லை. அந்தளவிற்கு முன்முடிவுகள் உள்ளன.

அன்புடன்,
இராம.கி.

Sunday, August 18, 2019

சங்கதமெனத் தவறாய்க் கொள்ளப்படும் சில தமிழ்ச்சொற்கள் - 1.

மணிப்பவள நடையைத் தவிர்க்கச்சொல்லி ”வாட்சப்”பில் பரிந்துரைத்ததாய், வடசொற்களுக்கு ஈடான சில தமிழ்ச் சொற்களை நண்பர் நாஞ்சில் பீற்றர் தன் முகநூல் பக்கத்தில் இட்டார். அதை என் முகநூல் பக்கத்தில் முன்வரித்தேன். அப் பட்டியலில் வரும் ”சூரியன், வாயு, ஆகாயம், சவம், சடம், புத்தி, குரு, ஞானம், சித்திரம், நடனம், தருமம், மா>மகா ஆகியவை தமிழ்தான். இவற்றைச் சங்கதமென்று பலரும் நினைத்துவிடுகிறார். ஆழவும் ஆய்ந்தால் இவை தமிழ் என அறியலாம்.” என்றுஞ் சொன்னேன். இதைப் படித்த நண்பர் ஞானப் பிரகாசன் அவற்றின் தமிழ்மையை விளக்கச் சொல்லிக் கேட்டார். சொந்த வேலையில் சில காலம் ஊர் சுற்றியதால் உடனே அவருக்கு விளக்க முடிய வில்லை. இப்போது முற்படுகிறேன். முதலில் சூரியனைப் பார்ப்போம்.

புவிக்கு வெளியிருந்து சூரிய விண்மீன் வெளிச்சம் தருகிறது; அதன் வெய்யில் சுடுகிறது, உறைக்கிறது, குத்துகிறது. பல விதங்களில் சூரியத் தாக்கை இப்படி உணர்கிறோம். கேட்பதற்கு வேறுபட்டாலும், இவ்வினைகள் குத்தலில்  தொடங்குவனவே. தோலின் தொடுவுணர்ச்சியால் சூட்டை உணர்கிறோம். உடம்பின் மேல் கூர்ம்பொருள் படுகையில், தொடுபுலனால் முதலில் குற்றல்> குத்தலையும். பின் உறைப்பையும், சூட்டையும், முடிவில் விழிப்புலனால் வெளிச்சத்தையும் அறிகிறோம். குற்றலின் வேர்ச்சொல் குல். இதே போல் சுல் வேருமுண்டு. நேரடியாய் அது பயக்காவிடினும், அதன் திரிவால் பல சொல் வளர்ச்சிகள் உண்டு. ”கொன்றையும் பொன்னும்” எனும் என் தொடர் 4 ஆம் பகுதியில் விளக்கியுள்ளேன். சுல்லின் அடுத்த நிலையான சுள்ளும் தமிழில் பற்பல சொற்களை உருவாக்கியுள்ளது.

”சுள்ளெனக் குத்தினான்” என்று தமிழில் pricking செய்கை குறிக்கப்படும். அடிப்படையில் சுள் என்பதும் ஓர் ஒலிக்குறிப்பே. ஒலிக்குறிப்புகள் மொழிகளின் யெல்லைகளைக் கடந்தவை. இவை எம்மொழிக்குச் சொந்தம் என அறுதியிட்டுக் கூறமுடியாது. ஒரு வேர்ச்சொல்லிலிருந்து மற்ற சொற்கள் எழும்போதுதான் மொழிச்சிறப்பு புரியும். முதலில் (ஊசிபோற் கூர்ங்கருவி) குத்தலாய், பின் உறைப்பதாய், பின் (நம் உடம்பின் நீர்) காய்வதாய், வறள்வதாய், முடிவில் எல்லாமுஞ் சேர்ந்து சுடுவதாய் உணர்வோம். கீழே நான் காட்டும் சொற்கள் இவற்றில் எதை வேண்டுமெனினும் குறிக்கும், ஒன்றிற்கு மேலும் பொருட் பாடுகளை இச்சொற்கள் குறிக்கலாம். குத்தல், உறைத்தல், காய்தல், வறள்தல், சுடுதல், எரிதல், வெள்ளுதல், சிவத்தல் என எல்லாமும் இவற்றோடு தொடர்புள்ளவை.

சுல்> சுல்லி= அடுப்பு, மடைப்பள்ளி. சுல்லு= வெள்நிற மாழை, வெள்ளி. சுல்லம்> சுல்வம் என்பது  இந்தையிரோப்பியச் சொல். சுல்லல்= குத்தல்; சூலுதல்= தோண்டுதல்; சூல்= குத்துங் கருவி, தோண்டுங் கருவி, கொற்றவையின் கைக்கருவி; சூலம்= சூலின் நீட்சி. முத்தலைக் கோல். பழங்குடிகளின் கொலைக்கருவி. சிவனின் ஆயுதம். சூலக் குழி= பிணக் கற்குழி சூலக் குறடு= சூட்டுக்கோல் சூலம்= சூலை= குத்தலும் குடைச்சலும் கொடுக்கும் சூலைநோய். சூலை= குத்தல்; சூல்த்தன்> சூ(ல்)த்தன்> சூத்ரன்= சூலத்தைக் கையில் வைத்த மாந்தன். பின்னால் சூத்ர வருணத்தாரைக் குறிக்கும். 

இதுபோல் கத்தி வைத்தோர் கத்தியர் என்ப்பட்டார். பின்னால் கத்தியர்> கத்ரியர்> க்ஷத்ரியர் என்று வட இந்தியாவில் திரியும்; இன்னொரு வகையில் வில் வைத்திருந்தோர் வில்> விற்றை> வித்தை> விச்சை> விச்சையர்> விசையர்> வைசியர்= வணிகர் என்று அறியப் பட்டார். குடிப் பெருமானர் ப்ராமணர் ஆனார். பெருமானர், கத்தியர், விசையர், சூலத்தர் என்பவை பழங்குடி வாழ்க்கையில் இயல்பான கருவித்தொழில் பெயர்கள். இவற்றை வருணமாக்கியது ஆரியர் வழிப் புரிதல்.
 
இனி வேறு சொற்களைப் பார்ப்போம். சுள்ளுச் சுள்ளு, இரட்டைக் கிளவியாகி குத்தல், உறைத்தலைக் குறிக்கும் சுள், சுளீரெனத் தனித்தும் நிற்கும்; சுரீர் என்றும் திரியும். சுள்ளெனக் கடிக்கும் எறும்பு சுள்ளெறும்பு ஆகும். சுள்ளெனக் குத்தும் எறும்பும் கொசுவும் சுள்ளான் எனப்பட்டன. சுள், உறைப்பெனும் பண்புப் பெயரையுங் குறிக்கும். சுள்= கருவாடு. சுள்ளக்கம் = வேர்க்குரு, சினம்; சுள்ளம்  மலையாளத்திலும் உண்டு. சுள்ளப்பு= உறைப்பு சுள்ளை, சூளை, காளவாயைக் குறிக்கும். சுளிதல்> சுளித்தல்= சினத்தல்; சுளுந்து> சுழுந்து= தீப்பந்தம்; சூள்= தீப்பந்தம். சூளுரை= தீப்பந்தம் பிடித்து ஓங்கியுரைத்தல். நாளா வட்டத்தில், கருத்தை ஓங்கியுரைப்பதற்கும் பெயரானது.  சுள்ளி= விறகுக் குச்சி; சுள்ளிடுதல்= உறைத்தல்; சுள்ளிவிறகு= காய்ந்தவிறகு. சுள்ளு= வெப்பம், உறைப்பு. நரம்பு பிரண்டு,  பிசகிப் போகையில் சுள்ளென வலிப்பதால் ”சுளுக்கல்” பிறந்தது.

சுள்+கு= சுட்கு>சுக்கு= வறள் மஞ்சள்; சுக்கல்= வறளல். சுள்ளு>சுளு= வெப்பம். ளகரம்/ழகரம் டகரமாவது தமிழிய மொழிகளில் உள்ள பழக்கம். காட்டாய், சோழமண்டலம் ஆந்திரத்தில் சோடமண்டல என்றாகும். இன்னும்வடக்கில், சோரமண்டலாகும். ஆங்கிலத்தார் coramandal என்பார். இம்முறையில் சுளுவது சுடுவதாகும். சுட்டது, சுடப்ப.ட்டது என்றசொற்களை உருவாக்கும். சுடல்= வெப்பத்துள் இடல், வறளவைத்தல். இது சூடென்ற பெயர்ச்சொல்லை உருவாக்கும். இந்தையிரோப்பிய heat இதோடு தொடர்புற்றது. இந்தை யிரோப்பியன் சொற்கள் பலவற்றை இங்குசொல்லலாம். நம்பத்தான் பலர் தயங்குகிறார். சூடு/நெருப்பு உறைக்கும். உடம்பு உறும்/உறைபடும். சூடு>சூடன் = கருப்பூரம்  சுடல்= காய்தல். சுடர்= ஒளி. சுடலை= சுடுகை, சுடுகாடு. சுட்கான்>சுக்கான்; சுள்>சுண்>சுண்ணம்> சுண்ணாம்பு= இயல் சங்கைச் [ca(OH)2]ச் சூடேற்றிப் பெறுவது  quick lime எனப்படும் CaO. 

சூட்டின் வளர்ச்சி சூர்.  சுல்>சுள்>சுர்>சுரண்டு= குத்தித் தோண்டுவது. சுர்>சுரணை= குத்துணர்ச்சி. சுரத்தும் இதே. சுர்>சுரம்= வெப்பநிலம் / பாதை. குறிப்பாய் இராயலசீமை. சங்க இலக்கியப் பாடல்களில் பாதி பாலைத் திணையே. வெப்பமிலாத் தென்னகம் உண்டோ? சுரங்கொண்டவர் சுரன்>சூரன். சுள்>சுர்>சூர்= கடுப்பு, கொடுமை, நோய், சூர்>சூரன்>சூரியன்.  சூரன்= கதிரவன், நெருப்பு; சூரி= ஞாயிறு; சூரசூதன்= கதிரவனின் தேரோட்டியாகிய அருணன்; சூரிக் கத்தி கூர்ங்கத்தி. சூர்+அன்= சூரைக் கொண்டவன். சூர்+இயன் = சூர் பொருந்தியவன். இயல்தல்= பொருந்தல். இன்னொரு வகையில் வடமொழியில் அவரியல்பின் படி சூரன், சூர்யனாகும் அது திரிந்து சூரியனென்று தமிழில் எழுதப்படும். ஒருவகை நேரடித்தமிழில் எழுவது. இன்னொன்று ”சூரன்” வடமொழிக்குப் போய் மீளவருவது. இரண்டின் முடிவும் ஒன்றுதான். ”ஒரு கண்ணால் மட்டுமே பார்ப்பேன், இன்னொரு கண்ணால் பாரேன்” என்பவரை நாமென்ன செய்ய? சூரியன் வடமொழியென்போர், நான்கூறிய பல சொற்களையும் என்னசெய்யச் சொல்கிறார்? தூக்கி எறிந்து விடுவோமா? இவையெலாம் தமிழெனில் சூரியனும் தமிழ்தான்.

அன்புடன்,
இராம.கி.

Thursday, July 25, 2019

பூரியர் - bourgeoisie

திருவள்ளுவராண்டு பற்றிய https://valavu.blogspot.com/2018/07/3.html என்ற பதிவையோ அல்லது https://groups.google.com/forum/embed/#!topic/minTamil/jLTQAeW5U_U என்ற பதிவையோ அருள்கூர்ந்து பாருங்கள். அவற்றில் பூரியர் என்பது பற்றிப் பேசுகிறேன். அப்பதிவைப் படிக்காமல் நான் சொல்ல வருவது புரியாது. இருப்பினும் தேவைப்பட்டதை இங்கு 2 முன்னிகைகளாகப் பிரித்து வெட்டி ஒட்டுகிறேன்.

முதல் பகுதி:
--------------------------------------------
வரைவில்மகளிர் என்பது நட்பு வகைப்பாட்டின்கீழ் திருக்குறள் பொருட்பாலில் ஏழுறுப்புக் கொள்கையிற் பேசப்படுகிறது. அரசரும் அரசரைச் சேர்ந்தவரும். இன்னின்ன வகையில் நட்பு தொடர்பாய் நடந்துகொள்ளலாம்  என்பது இங்கே உரைக்கப்படுகிறது. அதில் வரைவில்மகளிரின் நட்பு பூரியர்களுக்குக் கூடாத நட்பென்று குறள் சொல்லுகிறது. 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

இங்கே கள் எனும் விகுதி பூரியருக்கேன் வந்தது? பூரியர் யார்?- என்ற கேள்விகள் எழுகின்றன. துறவறவியலின் முதலதிகாரம் அருளுடைமையின் முதற்குறளிலும் (241) ”பூரியர்” வரும்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியர் கண்ணும் உள.

இதேபோல், பரிபாடல் ஆறில் 46-50 ஆம் வரிகள் பூரியர் பற்றிச் சொல்லும்.

மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயுங் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்புநலன் அழிந்து
வேறா கின்றுஇவ் விரிபுனல் வரவென

புல்>புர் என்ற வேர்ச்சொல் பொருத்தல், பெருத்தல்/மிகுதியாதல்/உயர்தல், துளைத்தல்/புகுதல்/நிறைத்தல் என்ற பொருட்களைக் கொண்ட பல் சொற்களுக்கு அடிப்படையாகும். இவற்றில் எது இங்கே சரிவரும்? முதல் இரண்டும் பொதிவுப் (positive) பொருள் கொண்டவை, கடைசி நொகைப் (negative) பொருளானது. (13இற்கு முந்தைய நூற்றாண்டுகளைச்சேர்ந்த) மணக்குடவரும், (13ஆம் நூற்றாண்டுப்) பரிமேலழகரும், இவருக்கும் பின்வந்த உரையாசிரியரும், ”கீழ்மக்கள்” எனும் நொகைப் பொருளையே பூரியருக்குச் சொல்வர். பல தமிழ் அகராதிகளிலும் ”இழிந்தவர், கொடியவர்” என்றே சொல்வர்.  "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவர் என்று இங்கு பொருள் கொள்ளப்படுகிறார். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப்படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கே பூரியரென்பது இழிந்தவரென்ற பொருளிலேயே வருகிறது.
.
ஆனால் ”புரையிலாப் பூரியர்” என்கையில் புரையும் பூரியரும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை, அவற்றை மாற்றிக் காட்ட ”இலா” என்ற சொல்ல வந்தது புரியும். 241ஆம் குறளில் ”பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்பதால் பூரியருக்குக் ”கீழ்மக்கள்” என்ற பொருள் பொருந்தாது. பரிபாடல் வரிகளில் “பூரியர் உண்ணும் பொருள்கள் மண்டி வருவதால், சூடிக் களைந்த பின் வாடிப்போன மலரும், ஆண்களணியும் தாரும், பெண்களணியும் கோதையும், வெட்டிவேர் போன்ற மணவேரும், மணமுள்ள தூருங், காயும், கிழங்கும், நார்களோடு உகுக்கும் மணம் அழிந்து வைகையின் விரிபுனல் விவரிக்கப்படுகிறது. அப்படியானால் இந்நிலை கீழ்மக்களால் ஆகியிருக்க முடியுமோ? பெருஞ்செல்வர் உண்ணும் பண்டங்கள், நீர்மங்கள், தேறல் வகைகள் ஆகியவை கூடி ஒருவகை வெறிய (alcohol) நாற்றம் அந்தக் கரையில் ஆற்றுநீரிற் கூடிப்போனதாகவே எண்ணவேண்டும் அல்லவா? அப்பொழுது பூரியருக்கு என்னபொருள் அமையும்? பெருஞ்செல்வர் என்பதுதானே?
------------------------------------
அடுத்த பகுதி:
-------------------------------
புல்>புர்>பர்>பரு>பெரு என்ற திரிவு பருத்தல், பெருத்தல் வினைகளையும்,. புல்>புர்>புரம் என்பது பெருத்த, உயரமான வீடுகளையும், அவைநிறைந்த நகரையுங் குறிக்கும். கவாடபுரம், திருவனந்தபுரம், காஞ்சிபுரமென்ற சொல் ஆட்சிகளை எண்ணிப்பாருங்கள். எத்தனையெத்தனை புரங்கள் தமிழ் நாட்டிலும், இந்தியத் துணைக்கண்டமெங்கினும் உள்ளன? புர், பூர் என்றும் புரி என்றும் திரிந்து இன்னும் பல்வேறு கணக்கற்ற நகரங்களைக் குறிக்கும் அல்லவா?. புரிதலுக்கு பெருத்தல்/உயர்தல் பொருள்போக வளைதற் பொருளும் உண்டு. புரமென்பது கோட்டையில்லாத பெருநகரையும், புரி, கோடையுள்ள நகரையுங் குறித்துப் பின் தம்முள் குழம்பியும் போயின. இதேசொல் சங்கதத்திலும் எடுத்தாளப்பட்டது..இந்தையிரோப்பிய நாடுகளுக்கும் பரவியது burg burgh, bury என்று முடியும் நகர ஈறாகவும் மாறியது. (Brandenburg, Magdeburg, Edinburgh, Hamburg, Strasburg, Canterbury என்ற இரோப்பிய நகரங்களை எண்ணுங்கள்) வடக்கே பல பூர்கள், புரிகள் உள்ளன. புரங்களைக் கொண்ட அகன்ற பரப்புக்கூட borough என்றழைக்கப் பட்டது. புரம், பூர், புரிகளில் இருந்த பெருஞ்செல்வரைப் பூரியர் என்றழைப்பது முற்றிலுஞ்சரி. இதே பொருளில் bourgeois என்றசொல் மேலைமொழிகளில் ஆளப்படும்.
       
bourgeoisie (n.) 1707, "body of freemen in a French town; the French middle class," from French bourgeois, from Old French burgeis, borjois (12c.) "town dweller" (as distinct from "peasant"), from borc "town, village," from Frankish *burg "city" (see borough). Communist use for "the capitalist class generally" attested from 1886.

ஆகப் பூரியர் என்பார் கடைசியிற் பார்த்தால் ஆங்கிலத்திற் சொல்லும் bourgeoisie தான். (நம்மூர் இடதுசாரிகள் எவ்வளவு ஆண்டுகள் இதையறியாது அவர்களின் நூல்களிற் பூர்ஷுவாக்கள் என்றே எழுதியிருப்பார்கள்? தமிழிலக்கியம் படிக்காமல் வறட்டுத்தனமாய் “தத்துவம்” பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? இப்படிப் பேசித்தானே Burten stein- ஐப் பின்பற்றி, கா. சிவத் தம்பியைப் பின்பற்றிச் சங்க காலத்தை segmentary states காலம் என்று நம்மூர் இடதுசாரியார் சொன்னார்? தமிழகத்தில் CPM/தமிழ்த்தேச மா.லெ. வேறுபாடு ஏற்பட்டதில் இதுவும் ஒன்று தானே? தமிழர் வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் பொதுவுடைமையர் இவ்வளவு பின்தங்கி இருக்க மாட்டார். இன்றுங்கூடத் தமிழ்த்தேச வரலாறு புரியாத மா.லெ. ஆட்கள் நிறையப்பேர் உள்ளார்.)

இப்போது மேலுள்ள 2 குறள்களையும், பரிபாடலையும் படியுங்கள். சரியான பொருள் சட்டென்று வந்து வீழும். வள்ளுவர் பேசுவதும் புரியும். 

அன்புடன்,
இராம.கி.

Wednesday, July 24, 2019

மாம வேவு.

அண்மையில் நண்பர் வினைதீர்த்தான் தன் பேர்த்தி வசந்தாவின் திருமணத்தில் மாம வேவு நடந்ததை ஒளிப்படங்கள் வழி தெரிவித்தார். அப்போது ஒரு நண்பர், 

“மாம வேவு என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்குத் திரு. வினைதீர்த்தான், ”மாம வேவு என்பது தாய்வீட்டுச் சீர்! மகள் வீட்டில் கல்யாணம் போன்ற முதல் சுப நிகழ்வுகளில் அந்தக் காலத்தில் ஓலைப்பெட்டியில் அரிசி, தேங்காய், கத்தரிக்காய் போன்றவற்றையும் பரங்கிக்காய், இலைக்கட்டு போன்ற கல்யாணத் தேவைக்கான பொருட்களையும் தர, அவற்றைப் பெண்வீட்டுப் பெண்பிள்ளைகள் பெற்றுக் கொண்டுள்ளார். தற்காலத்தில் அதன் குறீயீடாக வெள்ளிக் கடகத்தில் அரிசி கத்திரிக்காய், தேங்காய் வைத்து அதனை தாய் வீட்டுப் பங்காளி தலைப் பாகை கட்டி தலையில் வைத்து விளக்கினை நடுவில் வைத்து பெண் வீட்டார் அதனை இறக்கிக் கொள்கிறார். பொருட்களுக்காகத் தாய் வீட்டார் ஒரு தொகையும் கொடுக்கிறார். பதில் மரியாதை தாய் வீட்டாருக்கு மகள் வீட்டாரால் செய்யப்படுகிறது. 

கொடுத்தலும் கொள்ளலுமான மேன்மை உறவுக்கு முன்னோர் கண்ட வழிமுறை இம் மாம வேவு போன்றவையாகும். வேளென்ற வேர்ச்சொல்லும் கூறுகிறார். அறிஞர் திரு Krishnan Ramasamy மேல்விவரம் தரக்கூடும்” என்ற மறுமொழி அளித்தார்.

வினைதீர்த்தான் கேட்டதற்கான விளக்கத்தைச் சட்டெனச் சின்னஞ் சிறிதாய்ச் சொல்லிவிட முடியாது. சற்று நீளும். மாம வேவிற்கு மட்டுமின்றி (பல்வேறு குமுகங்கள் பின்பற்றிய, பொருள் விளங்காது சடங்காய் ஆகிப் போன) பெரும் பாலான பழக்க வழக்கங்களுக்கும் விளக்கம் சொல்ல வேண்டின், சடங்குகள், மரபுகள், சொற்களென எல்லாம் சேர்த்துப் பார்த்தால் தான் அவற்றின் பொருள் விளங்கும். 

முதலில் நகரத்தாரில் உள்ள 23 வகுப்பினரின் ஈனியல் விதப்பையும், அதன் பின் தாய்மாமன் விதப்பையும் (இது நகரத்தாரில் மட்டுமல்ல, பெரும் பாலான தமிழரிடையேயும் உண்டு.) முடிவில் மாம வேவு எனுங் கூட்டுச் சொல்லிலுள்ள பொருளையும் ஆழமாய்ப் பார்ப்போம்.

ஒவ்வொரு மாந்த உயிர்ச் சில்களிலும் (cell) 23 குருமயச் சோடிகள் (Chromosome pairs குருமம்= நிறம்; குருமயம் = நிறப்பொருள்) உள்ளன. 23 ஆம் சோடியைப் பாற்குருமயச் சோடி (pair of sex chromosomes) என்பார். பாற்குருமயச் சோடி யமைவதில் பெண்ணுக்கும் ஆணுக்கும் வேறுபாடுண்டு. 

குழவிக்குத் தாய்வழி வருவதைப் X பாற்குருமயம் என்றும். தந்தைவழி வருவதை Y பாற்குருமயம்  என்றுஞ் சொல்வர். ஒரு பெண் குழந்தையின் பாற்குருமயச் சோடியில் தந்தைக்கென பங்களிப்பில்லை. எல்லாப் பெண்களுக்கும் தாயின் X-ஏ இருபடியாகி XX எனப் பாற்குருமயச் சோடியே அமையும். (அதேபோது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பது உண்மையே). 

இது தவிர, தாயிடம் இருந்து அவளின் எல்லாக் குழந்தைகளுக்கும் நீட்குன்றிப் (mitachondria) பொருளும் வந்து சேரும். குன்றி போல் தோற்றி, நீள்வட்ட நூலாய்க் காட்சியளிப்பது நீட்குன்றி ஆகும். இந் நீட்குன்றி நம் எல்லோருடைய சில்களிலும் உண்டு. வேதியல் அடிப்படையில் நீட்குன்றி என்பது ஒரு வித அஃகில் அரப நெற்றுக் காடி (அஃகில் நெக் காடி) [Deoxyribo Nucleic Acid (DNA)] ஆகும். (இவ் வேதியற் பொருளை இங்கு நீளமாய் விளக்கத் தேவையில்லை.)

மேற்சொன்ன பாற்குருமய அமைப்பிற்கு மாறாய் ஆண்குழந்தையின் பாற்குருமயச் சோடியில், தாய்க்கும், தந்தைக்கும் சம பங்குண்டு. எல்லா ஆண்களுக்கும் XY என்றே பாற்குருமயச் சோடியமையும். (அதேபோது மற்ற 22 குருமயங்களில் தாயும் தந்தையும் வெவ்வேறு விகிதங்களில் பங்களிப்பர்.) ஒவ்வொரு ஆணுக்கும் அவன் தந்தை, தந்தையின் தந்தை (தாத்தன்/பாட்டன்), தந்தை வழிப் பாட்டனின் தந்தை (பூட்டன்), தந்தை வழிப் பூட்டனின் தந்தை (ஓட்டன்) என ஆண்குருமயமும் (Male Y chromosome), தாய், தாயின் தாய் (தாய்வழிப் பாட்டி), பாட்டியின் தாய் (தாய்வழிப் பாட்டியின் தாய்- பூட்டி), பூட்டியின் தாய் (தாய்வழிப் பூட்டியின் தாய் - ஓட்டி) என X பாற்குருமயமும், நீட்குன்றியில் அஃகில் நெக்காடியும் வந்து சேரும்.

நகரத்தாரில் 23 வகுப்பினரின் குருமயங்களை ஈனியல் வழி ஆராய்ந்த மதுரைப் பல்கலைப் பேராசிரியர் இராம. பிச்சப்பன் “ஆச்சி வந்தாச்சு” என்ற தமிழிலக்கிய மாதிகையில் 18 வகுப்பாரின் ஆண்குருமய அடையாளத்தையும், எக்காலத்தில் இவ்வகுப்பார் தமிழகம் சேர்ந்திருக்கலாம் எனும் விவரத்தையுங் கொடுத்தார். கவனங் கொள்க! ஈனியல் சொல்வது வரலாற்றுக்கு முற்பட்டது பற்றியாகும். 

[வரலாற்றுக் காலத்தில், பாண்டியன் நின்றசீர் நெடுமாறன் மகன் கோச்சடையன் காலத்தில் (பொ.உ.671-710) தான் காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து நகரத்தார் பாண்டி நாடு புகுந்திருக்கலாம் என்பது வேறோர்  ஆய்வுச் செய்தி.] காவிரிப் பூம்பட்டினத்திற்கும் முன்னால் தமிழகத்தில் நகரத்தார் எப்போது அடையாளங் கொண்டார்?- என்பதைத் தான் ஈனியல் இங்கு சொல்ல முற்படுகிறது. இவ்வாய்வின் வழி ”நகரத்தாருள் பல்வேறு கலப்புகள் பல்வேறு காலங்களில் எழுந்திருக்கலாம்” என்பதும் புலப்படுகிறது.

ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவில் முதலிற் குடியேறிய முகன மாந்தரான நெய்தலாரின் (coastal people) அடையாளங்களும் இவருள் விரவியுள்ளது. மேற்கு யூரேசியரின் (west Eurasian) கலப்பும் நகரத்தாரிடம் உள்ளது. ஆத்திரேலோ ஆசியர்களின் (Australo Asiatic. சங்க இலக்கியம் இவரை நாகர் என்னும்) கலப்பும் உள்ளது. தமிழ்நாட்டிலுள்ள மற்ற குமுகங்களுடனும் கூட நகரத்தாருக்கு ஒருமை காணப்படுகிறது. கொஞ்சங் கொஞ்சமாய் பல்வேறு குழுவினர் சேர்ந்து உருவானவரே நகரத்தார் ஆவர். 

தமிழகத்தின் இன்றுள்ள ஒவ்வொரு குமுகமுமே இப்படிக் கலப்பு உருவாக்கத்தில் ஏற்பட்டவர் தான். இது. ஈனியல் வழி பெறப்படும் அடிப்படைச் செய்தி. ”பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமையான்” எனுங் குறளை ஓர்ந்து பார்த்தால் அதில் ஆழமான பொருள் இருக்கிறது. 

கீழே 9 கோயில் நகரத்தாரின் வெவ்வேறு வகுப்பினரின் ஆண் குருமய ஈனியல் அடையாளத்தையும் அவர் தமிழகத்தில் உருப்பெற்ற கால ஆண்டுகளையும் கொடுத்துள்ளேன். இதில் பெறப்படும் முடிவுகளை வேறொரு கட்டுரையில் சொல்வேன். கீழுள்ளதில் வியப்பான குறிப்பு எதுவெனில் 23 வகுப்பினருக்கும் தனித்தனி ஈனியல் அடையாளங்கள் இருப்பதே..

இளையாத்தங்குடி: அரும்பாற் கிளையாரான பட்டினசாமி NRY H1a (48000); பெருமருதூர் 35000 NRY Ha-L1a; கிங்கிணிக்கூர் 35000 NRY Ha-L1a; ஒக்கூர் 25000 NRY HG J2a; கழனிவாசற் குடியார் 15000 NRY HG R1a1a; பெருஞ்சேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை); சிறுசேந்தூர் (இவரின் ஈனியற் கணிப்பும் தெரியவில்லை.)

மாற்றூர்: அரும்பாக்கூர் (55000) NRY HG F1; உறையூர் (48000) NRY H1a; மணலூர் 35000 NRY Ha-L1a; மண்ணூர் (இவரின் ஈனியற்கணிப்பு இன்னும் தெரிய வில்லை.); கண்ணூர் (இவரின் ஈனியற் கணிப்பும் தெரியவில்லை.); கருப்பூர் 15000 NRY HG R2a; குளத்தூர் 10000 NRY HG O2a1

ஏழகப் பெருந்திரு எனும் வயிரவன் கோயில் சிறுகுளத்தூர் 25000 NRY J2b; வயிரவன் கோயில் கழனிவாசல் 25000 NRY J2b; வயிரவன் கோயில் மருதேந்திரபுரம் 25000 NRY J2b

திருவேட்புர் மருதங்குடி இரணியூர் 35000 NRY Ha-L1a;

திருவேட்பூர் மருதங்குடி பிள்ளையார்பட்டி 35000 NRY Ha-L1a

இலுப்பைக்குடி சூடாமணிபுரம் NRY H1a (48000)

சூரக்குடி புகழ்வேண்டிய பாக்கம் 35000 NRY Ha-L1a

நேமம் இளநலம் 25000 NRY HG J2a

வேலங்குடி கழனிநல்லூர் (இவரின் ஈனியற் கணிப்பு இன்னும் தெரியவில்லை.)

15000 - 55000 ஆண்டுகள் இங்கு தமிழகத்தில் விரவியிருந்த நகரத்தாரிடம் சில பழங்குடிப் பழக்கங்கள் மிஞ்சிக் கிடப்பதும், மாமன் (அம்மான் என்றும் எங்கள் பக்கஞ் சொல்வர்) உறவிற்கான சிறப்பு இன்றுங் குறையாதிருப்பதும் ஆழ்ந்து நோக்கத் தக்கன. [சிலம்பைப் படித்தால் இன்றும் சில பழமரபுகள் மாறாது இருப்பது புரியும்,] தமிழ் நாட்டில் எல்லாக் குமுகத்தாருமே மாமனுக்கு (அப்பாவையும் மீறி) ஏன் இவ்வளவு முகன்மையளிக்கிறார்?- என்பதும் வியப்பானது. 

கூர்ந்து காணின் நகரத்தார் திருமணங்களை முன்நடத்தும் உரிமைபெற்றவர் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஆன தாய்மாமன்களே. அதே பொழுதில் திருமணங்களில் அப்பாக்களுக்கு எனச் சில சிறப்புகள் உண்டு தாம். ஆனால் அவை சட்டபூருவச் செயல்களுக்கும் வாழ்த்துக்கும் மட்டுமே முகன்மையுறும். சடங்குகளில் அப்பா சற்று ஒதுங்கியே நிற்பார். நகரத்தார் திருமணச் செயற்பாடுகளை இன்றும் நிருவகிப்பது பெரும்பாலும் பெண்களே. திருமண வீட்டு ஆண்கள், பெண்கள் சொல்வதற்குத் தக்க, கூடமாட, நடந்து கொள்வார். அவ்வளவு தான். தாய்வழி உறவினரே திருமணங்களில் முன்னுரிமை பெறுவார். மொய்ப்பணம் எழுதுவதிலும் கூடத் தாய்மாமன் எழுதும் தொகையே அதிகமாகும்.

தமக்குள் ஆண் குருமய உறவுள்ளவர் அனைவரையும் நகரத்தார் பங்காளிகள் என்றழைப்பார். ஆணாதிக்கக் குமுகாயத்தில் சொத்திலும், குமுகப் பொறுப்பிலும் பங்கு கேட்க உரிமை பெற்றவர் பங்காளிகள். (சற்று தொலைவில் உள்ளவர் கோயிற் பங்காளிகள்.) எவ்வளவு உரிமை என்பது வெவ்வேறு குமுகங்களின் மரபைப் பொறுத்தது. 

பெண்களின் நீட்குன்றி வழியான உறவினர் அனைவரையும் தாயத்தார் எனவும் தாய பிள்ளைகள் என்றும் நகரத்தார் அழைப்பார். தாயத்தாருக்குச் சில விதப்பான உரிமைகளிலுண்டு. உண்மையில் தமிழ்க் குமுகங்கள் அனைத்தும் ஒரு காலத்தில் பெண்வழிக் குமுகங்களே. ஆணாதிக்கம் ஏற்பட்ட பிறகே, தந்தைவழிக் குமுகங்களாய் நாம் மாறினோம். சொத்துடைமை ஏற்படாக் காலத்தில் தாயமே முகன்மை கொண்டது. சொத்து என்று வந்த பின்னரே பங்காளுமை, குமுகங்களில் பெரிதாயிற்று.

அப் பங்காளுமைக்குப் பின்னுங்கூட தாய உரிமைகள் இன்று வரை மறுக்கப் படவில்லை. தாய்க்கு, பாட்டிக்கு, பூட்டிக்கு, ஓட்டிக்கு மாறாய் அவரவரின் சோதரர் சடங்குகளில் முன்னிருப்பார். அதாவது அம்மாவை முன்னிறுத்துவதாய் அம்மான் (அம்மாவின் சோதரன்) நின்றிருப்பார். 

நினைவு கொள்க. ஒருத்தி தன் மகளுக்கு மட்டுமின்றி மகனுக்கும் கூடத் தன் X பாற்குருமயத்தையும், நீட்குன்றிப் படிமத்தையும் அளிக்கிறாள். அதாவது என் அம்மாவைப்போலவே என் அம்மானும் இவற்றின் படியைத் தம் அம்மாவிடம் இருந்து பெற்றிருப்பார். எனவே ஆணாதிக்கக் குமுகாயத்தில் பெண்ணுரிமையை மறைமுகமாக நிலைநாட்டுவதாய் என் அம்மான் என் அம்மாவிற்குப் பகரியாவது இயற்கை. இனித் திருமணக் கொண்டாடல் என்றால் என்னவென்று பார்ப்போம்.

திருமணத்திற் கூடுவோர்க்கு நல்ல சாப்பாடு கொடுத்து விருந்து வைத்தலும், உறவினர் ஆடிப்பாடிக் குலவுவதும், மணமக்களுக்குச் சீரும் பரிசுகளும் தருவதுமே குமுகக் கொண்டாட்டமாகும். பழங்குடிக் காலத்தில், தாய்வழிக் குமுகக் காலத்தில், திருமணம் (பெண்ணைப் பெற்றவரும், பிள்ளையைப் பெற்றவருங் கொண்டாடுவது), இன்னொரு வீட்டில் தம் பெண் குடிபுகுதல், அப்படிக் குடிபுகுந்த வீட்டில் தம்பெண் ”பிள்ளைபெறுதல்” போன்ற நல் நிகழ்ச்சிகளை தாயத்தார் சிறப்பாகக் கொண்டாடினார். ஏனெனில் பெண் வழியே குடி தொடரும் நிகழ்வுகள் அவையாகும். சொத்துரிமை, ஆணாதிக்கம் ஆகியவை ஏற்பட்ட பின்னுங் கூட இப்பழக்கத்தைத் தமிழர் தொடர்கிறார்.

சரி வேவெனுஞ் சொல்லிற்கு வருவோம். வணிக வருக்கம் என்பது முல்லை நிலத்திலேயே தமிழரிடை எழுந்து விட்டது. முல்லை வாழ்க்கையில் பழங் குடிகள் ஊர் வீட்டு ஊர் வந்து பெண்ணெடுப்பதும், கொடுப்பதுமான பழக்கம் இருந்திருக்கும். நம் வீட்டுப்பெண் இன்னொரு வீட்டிற்குக் குடிபுகுகிறாள் எனும் போது, பெண்ணின் மாமன், பெண்ணின் தாய்க்குப் பகரியாய், மாப்பிளை வீட்டிற்குச் சென்று குடிபுகற் சடங்கைக் கொண்டாடுவான். 

குடிபுகற் சடங்கைப் பெண்ணழைப்பு என்று நகரத்தார் சொல்வர். மாப்பிள்ளை வீட்டில் நடக்கும் இப்பெண்ணழைப்பிற்கு வரும் விருந்தினர் எல்லோருக்கும் பெண்வீட்டாரே விருந்து கொடுப்பதாய் ஓர் ஐதீகம் இதிலுண்டு  சாப்பாடெனில் வாழை இலையில் வெந்த சோறும், குழம்பும் (கத்திரிக்காய், பரங்கிக்காய் போன்றவை இருந்தால் இன்னுஞ் சிறப்பு), (பொரியல், மசியல், வதக்கல் முறைகளில் செய்யப்பட்ட) பல்வேறு காய்கறிகளும் பழங்களும் பாயசமும் இருக்க வேண்டும் தானே? இந்த வேவின் உள்ளார்ந்த பொருளாய், சாப்பாடு கொணர்வதே வெளிப்படுகிறது. எப்படி? .

வெள், வெட்கை> வெக்கை, வெள்> வெய்> வெய்யில், வெய்> வெய்யோன், வெய்> வெயர்> வெயர்வை> வேர்வை, வெய்> வே> வேகு, வேகு> வேகம் = கடுமை. வே> வெந்தை, வே> வேன்> வேனல்> வேனில், வே> வே> வேம்பு, வேம்>வேங்கை, வெய்ம்மை.வெம்மை, வெம்> வெம்பு> வெப்பு, வெள்> வெது> வெதும்பு> வெதுப்பு எனும் சொற்கள் எல்லாமே எரிதல், சூடு தொடர்பானவை. அரிசியை வேக வைக்காது நாம் சாப்பிட முடியுமோ? 

வேள்வு> வேவு என்பது வெந்த சோற்றுக்கு இன்னொரு பெயர். இதை வேள்வு= விருப்பம், வேய்வு= சூடிக் கொள்வது என்றெல்லாம் கருத்துமுதல் வாதத்தில் பொருள் சொல்ல முற்படுவது அவ்வளவு சரியென எனக்குத் தோன்றவில்லை. வேவு என்று சுடுசோற்றைக் குறிப்பது  இச்சடங்கில் அரிசி கொண்டு வரும் கடகத்தால் புலப்படுகிறது.

இன்றும் ஐயனார் கோயிலிலும், குலதெய்வக் கோயில்களிலும் படைக்கும் போது கூடியாக்கி உண்ண, அண்டா, அண்டாவாய்ச் சோறு வடித்துப் போடுகிறாரே? அதில் மலை மலையாகக் குவிந்து கிடக்கும் சோற்றை அள்ள ஓலைக் குடல், கடகம் போன்றவையே பயன்படும். ஓலைக் கடகத்தில் சோற்றை அள்ளி விருந்து கொடுக்கும் போது தோளிலோ, தலையிலோ சுமக்க முயன்றால் சூடு தாங்கத் துண்டு வேண்டுமே? 

எல்லா வேவுக் கடகங்களிலும் பழங்குடிக் காலத்தில் சுடுசோறே இருந்திருக்கும். (இன்று சுடு சோற்றைக் கொணராது சடங்கிற்காக அரிசி தூக்கி வருகிறார்). சுடுசோற்றை உணர்த்தும் முகமாய் தலையில் சும்மாடு கட்டித் தலைக்கு மேல் கடகத்தைக் காட்டிப் பின் இறக்குவார். 

செல்வம் பெருகிய வீட்டில் ஓலைக் கடகம், வெள்ளிக் கடகமாகும்., மற்றோர் வீட்டில் துருவேறா எஃகில் ஆன நிலைவெள்ளிக் (Eversilver) கடகமாகும். பெண்வீட்டு ஆண்கள் கடகத்தைத் தலையில் தூக்கி யிருக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் அதை இறக்குவர். சாப்பாட்டிற்குத் தேவையான பெரும்பாலான பொருட்கள் (வாழையிலை முதற்கொண்டு) வேவோடு வந்து சேரும். (இக்காலத்தில் பலரும் இந்த உடன்வரும் பொருட்களை மறந்து விடுகிறார். எல்லாம் அவக்கரமாகி விட்ட, செலவாகி விட்ட காலம். மரபுகள் கொஞ்சங் கொஞ்சமாய் குறைகின்றன, மாறுகின்றன, பொருள் புரியாது போகின்றன.) .       

இங்கே 3,4 வேவுகளை விளக்கவேண்டியுள்ளதால், முதலில் ஆயாள், தாய்/அம்மா, மகள் என்ற 3 தலைமுறைகளைப் பற்றி விவரிக்கிறேன்.. (அம்மாவின் தாய் எங்கள் பக்கத்தில் ஆயாளென அழைக்கப் படுவாள்.) பெண்ணழைப்பு வீட்டில் பெண்ணின் அண்ணன், தந்தை, சுற்றத்தார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டுப் பெண்கள் வேவை இறக்குவார். இதைப் பால்வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் பால்காய்ச்சினால் இது பால்வேவு), பொங்கல் வேவு (மாப்பிள்ளை வீட்டில் மணமாகிப் போகும் பெண் முதலில் சோறாக்கிப் பொங்கி வடித்தால் இது பொங்கல் வேவு) என்றும் கூறுவார்.

திருமணத்திற்கு முதல்நாளோ, திருமணத்தன்றோ நடக்கும் மாம வேவு திருமணப் பெண்ணின் தாயின் பொருட்டு, ஆயாள் வீட்டிலிருந்து வரும் தாய்மாமன் செய்வதாகும்.

திருமணவேவு என்பது பெண் வீட்டார் வேவு தூக்க, மாப்பிள்ளை வீட்டார் இறக்குவது. 

பிள்ளை பிறந்து சற்று வளர்ந்த பிறகு, பிள்ளையின் மாமன் விளையாட்டுப் பொருள்களுக்கான சீர்களுடன் வந்து தன் சோதரியின் வீட்டில் நிகழ்த்துவது விளையாட்டுப் பெட்டி வேவு. 

எல்லா வேவுகளிலும் வேவுக் கடகங்களின் எண்ணிக்கை ஒற்றைப் படையாகவே இருக்கும், (இரு வேறு பிரிவினர் ஒன்றாகவேண்டும் சடங்கல்லவா? எனவே ஒற்றைப் படை) இதில் இரட்டைப் படை வரக் கூடாது. (இரள்தல் - பிரிதல். ஒரு நற்சடங்கில் கூடலே எழவேண்டும். பிரிதல் எழக் கூடாது.). வேவைத் தூக்கி நிற்போருக்கும் இறக்குவோருக்கும் இடையே ஒரு சில்லேட்டு விளக்கும் தரையில் இருக்கும். இருவரும் ஒரு நடுவீட்டுக் கோலத்தின் மேல் நிற்பார்.


இச்சடங்கு மண்டப வாசலில் நடக்கும் (வருவோர், போவோர் இருப்பதால் அங்கு காற்று சற்று அதிகமாகலாம். எனவே சடங்கில் வைக்கப்படும் விளக்கு அணைந்து விடக் கூடாது என்பதற்காக ஒரு சில்லேட்டு விளக்கை வைப்பார் (சில்லேடு என்ற சொல் ஏற்பட்டவிதம் சிறப்பு. 

இற்றைக்கால கிளர்த் தகடுகளுக்கு -glass plates- முன்னால், சில குறிப்பிட்ட கொங்குநாட்டு மண்ணூறல் படிவங்களில் (mineral deposits) இருந்து பிரித்துப் பெறப்பட்ட சில்லேட்டுத் தகடுகளை பயன்படுத்தியே விளக்கின் சுவாலைக்கு அணைப்புக் கொடுப்பர். நாலு பக்கமும் சில்லேடுகள் பொருத்தப்பட்ட விளக்கு சில்லேட்டு விளக்கு. சில்லேடுகள் ஒளியை ஓரளவு கடத்தும். கொஞ்சம் மழுக்கும். 

இச் சில்லேடு மேலை மொழிகளில் போய் மீண்டும் வெள்ளையர் ஆட்சியில் நமக்குத் திருப்பி வந்தது..தோற்றுவாய் தெரியாத பலர் இச்சொல்லை மேலைச் சொல் என்பார். [slate (n.) mid-14c., from Old French esclate, fem. of esclat "split piece, splinter" (Modern French éclat; see slat), so called because the rock splits easily into thin plates. As an adjective, 1510s. As a color, first recorded 1813.] சில்லேட்டு விளக்குகள் நகரத்தார் திருமணங்களில் பெரும்பங்கு வகிக்கும்.

இறக்கப்பட்ட கடகங்கள் தூக்கி வந்தவராலும், இறக்கியவராலும் சேர்த்தே பூசையறைக்குக் கொண்டு போய் படையலாய் முன்னோருக்குப் (அவர் சார்பாய் ஒரு விளக்கு அந்த அறையில் இருக்கும்.) படைக்கப் பட்டுப் பின் விருந்திற்குக் கொள்வதாய்ப் புரிந்துகொள்ளப்படும்.

ஒரு காலத்தில் வெந்த சோறு வேவாகியது. இன்று வேகாத அரிசி அதற்குப் பகரியாகிறது.

அன்புடன்,
இராம.கி.

Sunday, July 07, 2019

Smombie

அண்மையில் நண்பர் சிங்கை பழனி, “Smombie எனும் ஆங்கிலச் சொல்லைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? Smartphone zombie எனும் இரு ஆங்கிலச் சொற்கள் சேர்த்து உருவாக்கப்பட்ட சொல் தான் smombie தங்கள் திறன்பேசியில் பேசுவதில் கவனம் செலுத்தி தங்களைச் சுற்றியுள்ள சூழலில் கவனம் செலுத்தாது செல்லும் பாதசாரிகளைக் குறிக்கும் சொல். Zombie எனும் சொல்லுக்கு இயந்திரன் போன்று இயங்குபவன் என்றும் நடைபிணம் என்றும் பொருள் கொள்வதுண்டு. திறன்பேசி நடை(ப்)பிணம் என்று Smombie க்கு இணையாகச் சொல்லை உருவாக்கலாமா? வேறு சொல் உண்டா?” என்று தன் முகநூல் பக்கத்தில் கேட்டிருந்தார். (https://www.facebook.com/groups/STC.Ilakkiya.Pannai/permalink/2077674829029008/)

நான் திறன்பேசி என்ற சொல்லை ஏற்பவனல்லன். திறன்/திறம் என்ற சொல் ability க்குச் சரிவரும். ”அவன் மிகத் திறமையானவன், திறன்கொண்டவன்” எனும்போது smartness என்று நாம் பொருள் கொள்வதில்லை. ”சமர்த்து” என்று பேச்சுவழக்கில் ஆங்கிலச்சொல்லைக் கையாளும் நாம் ஏற்கனவே நம் வழக்கிலிருந்த நல்ல தமிழ்ச்சொற்கள இழந்துவிட்டோம். சூட்டிக்கை (”சிறு வயதிலேயே அவன் சூட்டிக்கையாக இருந்தான்”, ”வேலைசெய்வதில் அவன் படு சூட்டிக்கை”), சூடிக்கை (சூட்டிக்கையின் தொகுப்பு) எனும்போது நாம் smartness என்ற பொருளைத்தான் குறிக்கிறோம். எம் சிவகங்கை வட்டாரத்தில் இச்சொல்லை இன்றும் புழங்குவதை நான் காண்கிறேன். பாமரர் புழங்குவதை நாம் புழங்கினால் அது கொச்சை என்றெண்ணி யாரோவொரு படித்த அறிவாளி ”திறன்” என்ற சொல்லைப் பரிந்துரைத்திருக்கிறார். என்னைக் கேட்டால், ”இப்பரிந்துரை தவறு. பாமரர் சொல்லும் சூடிக்கை சிறப்பு” என்பேன்.

சூட்டிக்கை என்பது சுடு>சுட்டு>சுட்டி>சுட்டிகை>சுட்டிக்கை>சூட்டிக்கை என்றபடி வளர்ந்த சொல். ஒரே கால நேரத்தில் ஒன்றின் செலவை (செலவு= செல்லும் தூரம்) இன்னொன்றின் செல்வோடு ஒப்பிட்டால், எதோவொன்று முற்படுவதை விரைவு என்கிறோம். இவ்விரைவு தன்முனைப்பாலும். அறிவு சேர்வதாலும், பல்வேறு திறமைகளாலும் ஏற்படலாம். எப்படி ஏற்பட்டது என்பது முகன்மையில்லை. விரைவாகச் செயல்படுகிறதா என்பதே முகன்மை. smartphoneகள் வெறும் phoneகளாக மட்டுமின்றி பல்வேறு செயற்பாடுகளுக்கும் ஆனவையாக இன்று மாறிவிட்டன. பேசுதலென்பது அதன் ஒருபகுதி. எதைச் செய்தாலும், நுட்பியல் வளரவளர, smartphone இன்னும் விரைவாகச் செய்கிறதென்பதே நுணுகி அறியவேண்டியதொன்றாகும்.

தமிழில் விரைவைக்குறிக்க பல ஈரொலிச் சொற்களைக் குறிப்பிடுவோம். பெரும்பாலும் இவை உயிர்மெய்க் குறிலை முதலெழுத்தாகவும், ல/ள/ய/வ. ர, ற/ன, ட/ண, த/ந, ச ஆகிய ஒலிகளை இரண்டாம் எழுத்தாகவும் கொண்டு அமையும். இனி வருவது பாவணரின் ”முதற்றாய்மொழி” நூலிலிருந்து எடுத்தது. (தமிழ்மண் பதிப்பு. பக். 63-67) (ஆங்காங்கே என் திருத்தமும் இருக்கிறது.)
-------------------------------------
காட்டாக ல/ள/யகர எதுகையில் ஒல்லென, ஒய்யென, துள்>துண்>துண்ணென, துல்>துன்>துனை>துனைவு = விரைவு, இயக்கம். thermodynamics தெறுமத் துனைமவியல் என்று பரிந்துரைத்தேன். ப. அருளியின் அருங்கலைச்சொல் அகரமுதலியிலும் துனைமவியல் = dynamics என்பதற்கு ஈடாக வருவதாய்ச் சொல்லப்படும். துவல், பொள், முண்>முண்டு>மண்டு = விரைவு, முள்>முய்> முயல் = விரைவாய் ஓடும் விலங்கு, வல்= விரைவு போன்ற சொற்களைச் சுட்டலாம்.

ரகர எதுகையில் சுரு>சுருக்கு = விரைவு, சுருசுருப்பு = ஊக்கம், சுரு>சரு>சரேல், சுரு>சரு>சர>சரசர, துர>துரை = வேகம் துரத்தல் = முடுக்குதல், (புரு)>பர>பரபர, (புரு)பரு>பரி = வேகம், பரிதல் = ஓடுதல், புரு>பொரு>பொருக்கு> பொருக்கென எழுந்தான். விரு>விருவிரு>விருவிருப்பு = விரைவு, விரு>விருட்டு, விரு> விர>விரை

றகர எதுகையில் குரு>குறுகுறு, குறு>குறும்பு, சுறு>சுறு>சுறுசுறுப்பு,  சுறு> சுறுதி= வேகம், துறு>துறுதுறு, (நுறு)>நொறு>நொறில்= விரைவு, பறு>பறுபறு> பறபற; பற>பறப்பு, பறவை, முறு>முருக்கு= வேகம், துடுக்கு

டகர எதுகையில் (உடு)>ஒடு>ஓடு = விரைந்துசெல், குடு>குடுகுடு> குடு>கடு. கடுத்தல்  விரைதல், கடு>கடுகு>கடுக்கம் = விரைவு, கடு>கடி>கடிது = விரைவு; சுடு>(சுட்டு)>சுட்டி = துடுக்கு, குறும்பு, சுட்டி>சுட்டிக்கை>சூட்டிக்கை = விரைவு, சுடு>சடு>சடுதி = விரைவு; சடு>சடுத்தம் = விரைவு. சடு>சட்டு>சட்டென, சட்டு> சட்ட = விரைவாக; துடு>துடுக்கு = வேகம், துணிவு, குறும்பு, துடு>திடு>திடும்> திடு>திடீர், துடு>துடி>துடிப்பு; (நுடு)>நொடு>நொடுநொடு, நொடு>நொடுக்கு, (புடு)>பொடு>பொடுக்கு, (புடு)>படு>படபட>படபடப்பு;  பட>படக்கு> படக்குப் படக்கு முடு>முடுகு>முடுக்கம்= acceleration; முடுகு வண்ணம், முடுக்கு> மொடுக்கு, முடு>மொடு>மொடுமொடு, முடு>(மடு)>மட>மடமட

தகர எதுகை குது>குதுகுது>குதுகுதுப்பு; குது>கது>கதும், கது>கதழ்>கதழ்வு = விரைவு; கது>கதி= விரைவு, வேகம்;ல் (புது)>(பது)>பதறு>பதற்றம்>பதட்டம், (பது)>பதை>பதைபதை; (முது>(மது)>மத>மதமத, விது>விதுவிது>விதுவிதுப்பு = நடுக்கம், விரைவு; விது>விதும்பு>விதுப்பு; விதும்பல் = விரைதல்,

சகர எதுகை (குசு)>கிழு>கிசுக்கு, புசு>புசுக்கு><பொசுக்கு, புசு>பொசு>பொசுபொசு, விசு<விசுவிசு; விசு>விசுக்கு, விசு>விசை = வேகம். விசை என்றால் force இந்தக் காலத்தில் புரிந்துகொள்கிறோம். அது வேகம், முடுக்கத்தின் வழி, நியூட்டன் விதிகளைப் புரிந்துகொண்டதால் பெற்ற பொருள்.     
------------------------------------

மேலேயுள்ளதைப் படித்தால் சூட்டிகையைச் சூடிதி என்றுஞ் சொல்லலாமென விளங்கும். சூட்டிகைபேசி என்பதில் பேசியை அழுத்தாமல் அதன் பொதுப் பொருளைச் சொல்லவேண்டுமெனில் சூடிதி என்றே அக்கருவியைச் சொல்லி விடலாம். சூட்டிகைக்கு தெலுங்கு, கன்னடத்தில் சூடி என்பது தான் இணைச் சொல். என்னைக்கேட்டால் சூடிதி என்பது smart phone க்கு இயல்பாகவும், மரபாய்ப். பொருந்துவதாயும், சுருக்கமாயும் அமையும்.

அடுத்தது zombie (n.) இதை ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகராதி 1871, of West African origin (compare Kikongo zumbi "fetish;" Kimbundu nzambi "god"), originally the name of a snake god, later with meaning "reanimated corpse" in voodoo cult. But perhaps also from Louisiana creole word meaning "phantom, ghost," from Spanish sombra "shade, ghost." Sense "slow-witted person" is recorded from 1936.Relate entries & more என்று சொல்லும். "reanimated corpse" என்ற பொருளை வைத்துக்கொண்டு யாரோ ஒருவர் நடைப்பிணம் என்றிருக்கிறார். மாறாகச் சாம்புதல் (= உணர்வழிதல், வாடுதல், கூம்புதல், ஒடுங்குதல், கெடுதல், குவிதல், ஒளிமழுங்குதல்( என்ற தமிழ்ச்சொல்லைக் கொண்டு சாம்பி என்றே சொல்லலாம். Smartphone zombie என்பதைச் சூடிதிச் சாம்பி>சூம்பி (மெலிந்து வாடுபவன்) என்றே சொல்லலாம்.

Smartphone zombie = சூடிதிச் சாம்பி
Smombie = சூம்பி

அன்புடன்,
இராம.கி.

Friday, July 05, 2019

ச‌துரம்

"ச‌துரம் தமிழா? நாற்கோணம் என்பது பொருந்துமா? ச‌துரம் நாற்கோணம் என்றால் செவ்வகம் என்பது தமிழா அல்லது வேறு பெயர்கள் உள்ளனவா?" என்று Prasanna Pna என்பவர் சொற்களம் முகநூல் குழுவில் 2 நாட்களுக்குமுன் ஒரு கேள்வி எழுப்பினார். 

அதற்கு மறுமொழிக்கும் விதமாய் நண்பர் கார்த்திக் கரன் (Karthik Karan) http://valavu.blogspot.com/2015/07/4.html?m=1 எனும் என் வலைப்பதிவுக் கட்டுரையைச் சுட்டிக் காட்டினார். (நான் அப்போது ஊர்சுற்றிக் கொண்டு இருந்ததால் இவ்வுரையாடலைச் செல்பேசியில் மோலோடப் படித்ததோடு சரி. முறையாக மறுமொழி தரவில்லை.) 

என் கட்டுரையில் சதுரம் பற்றியும், அதன் தமிழ்மை பற்றியும், சொற்பொருளும், சொல்லெழுந்த விதமும் கூறப் பட்டிருந்தது. உரையாடலில் கலந்து கொண்ட பலரையும் அக் கட்டுரை நெகிழ்த்தியது போல் தெரியவில்லை. 

நாக. இளங்கோவனையும், கார்த்திக் கரனையும் தவிர மற்றோரெலாம் சதுர், வடமொழிச்சொல்லென்றே எண்ணினார் போலும். தமிழின்மேல் அவ்வளவு அவநம்பிக்கை பலருக்கும் உள்ளது. ”இராம.கி.க்கு வேறு வேலையில்லை. இப்படி ஏதோ உளறுவார்” என்றெண்ணி அவரவரின் கருதுகோளுக்கே போய்விட்டார் போலும்..

இதில் வேடிக்கை என்ன தெரியுமோ? வடமொழியெனக் கருதும் பலரும் மோனியர் வில்லியம்சு அகரமுதலியைப் பார்ப்பதேயில்லை. ஒரு சொல் தமிழாவென ஐயுறுவதுபோல் அது சங்கதமாவென ஐயப்படார் போலும். தமிழுக்கு ஒரு ஆய்வுமுறை, சங்கதத்திற்கு இன்னொரு ஆய்வு முறையோ?தம்மை அறியாமலே ”சங்கதம் மேடு, தமிழ் பள்ளம்” எனும் முன்முடிவிற்கு எப்படியிவர் போன்றோர் வருகிறார்? வியப்புத்தான். 

பொ.உ..250 இலிருந்து பரப்பப்பட்டு வரும் சதுர்வருணக் கொள்கை நம்மை எப்படியெல்லாம் மழுங்கடிக்கிறது? அப்புறமென்ன பகுத்தறிவு பேசுகிறோம்? தமிழ்த்தேசியம் பேசுகிறோம்? நம் சிந்தனைச் செயற்பாட்டிலேயே (thought process)-நாம் அடிமை யுற்றுக் கிடக்கிறோமே? 

அது எப்படி? மற்றசொற்களைப் போலவே எண்கள் பற்றிய சொற்களிலும் நாம் பிறழ்ந்து கிடக்கிறோம் என்பதே என் புரிதல். ”எல்லாவற்றையும் சங்கதமே கடன்கொடுத்தது. நாம் கடனாளிகள்” என்று நம் நெற்றியில் எழுதி ஒட்டி உள்ளதா, என்ன? எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்தபின் தான் நான் அக் கட்டுரையை எழுதினேன். சதுருக்கு எந்த வேரும் மோனியர் வில்லியம்சில் தரப்படவில்லை.

ஆங்கிலச் சொற்பிறப்பியல் அகரமுதலியும் கூட எந்த வேரையுங் காட்டாது. (https://www.etymonline.com/), Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar என்ற இணைச்சொற்களைத் தொகுத்துக் காட்டி,. மொழியியலார் ஏற்றுக்கொண்ட இந்தையிரோப்பிய ஒலிமாற்றங்களைக் கொண்டு ”நாலு” எனும் பொருள் குறிக்கும் முந்தைய இந்தையிரோப்பிய அடிச்சொல்லாக (Proto-Indo-European root) *kwetwer-”ஐக் காட்டி கீழ்க்கண்டவாறு விளக்கம் சொல்லும்.  .

It forms all or part of: cadre; cahier; carillon; carrefour; catty-cornered; diatessaron; escadrille; farthing; firkin; fortnight; forty; four; fourteen; fourth; quadrant; quadraphonic; quadratic; quadri-; quadrilateral; quadriliteral; quadrille; quadriplegia; quadrivium; quadroon; quadru-; quadruped; quadruple; quadruplicate; quarantine; quarrel (n.2) "square-headed bolt for a crossbow;" quarry (n.2) "open place where rocks are excavated;" quart; quarter; quarterback; quartermaster; quarters; quartet; quarto; quaternary; quatrain; quattrocento; quire (n.1) "set of four folded pages for a book;" squad; square; tessellated; tetra-; tetracycline; tetrad; tetragrammaton; tetrameter; tetrarch; trapezium.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Sanskrit catvarah, Avestan čathwaro, Persian čatvar, Greek tessares, Latin quattuor, Oscan petora, Old Church Slavonic četyre, Lithuanian keturi, Old Irish cethir, Welsh pedwar. Related Entries: quadri-, quadru-, tetra-, cadre, cahier, carillon, carrefour, catty-cornered, contesseration, diatessaron, escadrille, farthing, firkin, fortnight, forty, four, fourteen, fourth, quadragesima, quadrangle

மேலுள்ளதைக் கூர்ந்துபடித்தால் உங்களுக்கே விளங்கும். க்வெத்தர் என்ற சொல்லின் உள்ளார்ந்த பொருளென்ன? எப்படியது எழுந்தது? - என்று ஏதாவது மேலே கூறப்பட்டுள்ளதா? நாலு என்று கருத்தீடு (concept) இந்தக் க்வெத்தரோடு எப்படி இழைந்தது?.

இவர் காட்டுவது தொல்காப்பிய இலக்கணத்தின் படி சொன்மை எனப்படும். பொருண்மை அல்ல. ”நாலு என்ற பொருள் காட்டும் சொல் இப்படி அமையும்” என்று இவர் காட்டுகிறார். ”நாலு என்ற பொருள் க்வெத்தருக்கு எப்படி வந்தது? அதன் பின்புலம் என்ன?” என்ற கேள்விகளுக்கான விடைகள்  எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் விளங்காது.

பல மேலைச்சொற்களுக்கும் இதே நிலைதான். மேலை இந்தையிரோப்பியச் சொற்பிறப்பியலுக்கும் பாவாணர்வழி என்று சொல்லப்படும் தமிழ்ச்சொற் பிறப்பியலுக்கும் உள்ள அடிப்படை வேறுபாடு இது தான். இது தெரியாமல் ”பாவாணர் தவறு, மேலையர் உசத்தி” என்று பலரும் சொல்லிவிடுவார். 

பத்து உறவுமொழிகளில் உள்ள ஒரு பொருட்சொற்களைத் தொகுத்து முன்கொண்ட விதிகளின்படி இட்டுக்கட்டிய சொல்லாய் ஒன்றைப் படைத்து, அதற்கு முன் ஓர் உடுக்குறியும் போட்டு, இதுதான் முந்தை இந்தையிரோப்பிய மூலச்சொல் என்று ஓதுவதோடு மேலைச் சொற்பிறப்பியல் நின்றுகொள்ளும்.

தமிழ்ச்சொற்பிறப்பியல் அப்படி நிற்காது, ”தமிழிலுள்ள எண்ணுச்சொற்கள் 0, 1, 2, 3, 5, 10, 100, 1000 என்பவற்றை ஒட்டியெழுந்தன மற்ற எண்ணுச்சொற்கள் எல்லாம் இவற்றிலிருந்து பெறப்பட்டவையே” என்ற ஒழுங்கை முதலிற் சொல்லும்..

அடுத்து, “நாலு என்பது ஐந்திற் குறைந்த பொருளில் (ஒருவிரல் மடங்கி) நலிந்த கையைக் குறித்து நலிகை>நாலிகை>நால்கை என்றானது” என்று ஒரு சொல் பிறந்த பொருளடிப்படையைச் சொல்லும். அடுத்து அதே பொருளின் அடிப்படையில் இன்னொரு சொல் பிறந்ததை இனங் காட்டும். 

”நலிதலின் இன்னொரு சொல் சொதுத்தல் ஆகும்; சொத்தை/சொட்டையென்ற சொல்லையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம். சொடுக்கை/சொதுக்கை = நலிந்த கை, (ஒரு விரல் இங்கும் மடங்கியது. இன்னொரு வகையிற் சொத்தாங்கை> சோத்தாங்கை என்றாகும், 

வலக்கைப் பழக்க ஆதிக்கத்தால் ”குறைந்த கை” என்று பொருள் கொண்டு இடக்கையைக் குறிக்கும்.)” என்று இன்னொரு சொல் வளர்ந்த ஏரணத்தைக் குறிக்கும். இந்த ஏரணம்தான் மேலை முறையில் சொல்லப்படாது. முடிவில் “கையின் இன்னொரு சொல் கரம். எனவே சொதுகரம்>சதுகரம்>சதுரம்” என்று இச்சொல் எழுந்த கதையைச் சொல்லும்.

”எனக்குக் க்வெத்தர் தான் முகன்மை, தமிழ்ச் சதுரம் முகன்மையில்லை” என்பவர் பொருண்மையை ஒதுக்குகிறார். மேலை மொழியாளர் சொல்வதை தலைமேல் கொள்ளுகிறார். பாவாணரைத் தூக்கியெறிகிறார் என்பது விளங்கும். ”இச்சொல் எப்படி எழுந்தது என்பதற்கு அப்புறம் தான் எப்பொழுது எழுந்தது?” என்று பார்க்கமுடியும். இதுதான் அறிவியல் முறை. மேலைச் சொற்பிறப்பியல் முறை பாதிக்கிணறு தாண்டுகிறது.

எங்கள் ஊர்ப்பக்கம் பாதிக்கிணறு தாண்டுவது நம்மை விழுத்தாட்டும் என்பார். கிணற்றைத் தாண்டுவது முகன்மை என்று எண்ணுவோர் பாவணரைப் படிப்பார். அப்புறம் உங்கள் உகப்பு. அடிமையாகவே இருப்போம் என்று நீங்கள் நினைத்தால் நானென்ன செய்யமுடியும்?. 

உங்களின் பலர் தமிழ்ச் சொற்களைச் சங்கதத்திற்குத் தானம் செய்துவிட்டு வேறு புதுச்சொற்களைக் கால காலத்திற்கும் தேடிக்கொண்டேயிருங்கள். நீங்கள் வள்ளல் பாம்பரையைச்  சேர்ந்தவர் அல்லவா?!.

அன்புடன்,
இராம.கி.

Sunday, June 30, 2019

கூட்டாட்சி அரசமைப்பில் மொழியுரிமைகள்


கருத்தரங்கம் - இடம் : உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
நாள் : 29.06.2019 - நேரம் : பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

அரங்கில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

வழக்குரைஞர் அவையில் பொறிஞனுக்கு என்னவேலை? ஒருவேளை தமிழும், தருக்கமும் அறிந்ததால், அழைத்தாரோ, என்னவோ? அறியேன்.  

ஒவ்வொரு மொழிபேசுநர்க்கும் மொழியுரிமை என்பது இயல்பானதே. ஒரு பன்மொழி மாநிலக் கூட்டரசில் என் மொழியார் கணிசமாய் (8 கோடிப்பேர்) இருக்கும் நிலையில் ”என் வீட்டில் மட்டுமே என் மொழி, வெளியே மாற்று மொழி, பேசு” என என்னைக் கட்டாயப்படுத்தினால், எனக்குள் உரிமையுணர்வு எழத்தானே செய்யும்? 

மாந்தவியலின் படி நாடும் தேசமும் வேறானவை. India is a multinational country and not a one nation one country entity. When we got independence a major question between us and the British was solved. But the multinational question among the various Indian nations and the direction in which the country had to move after independence had remained unsolved. 72 ஆண்டுகளாய் இதுவே நம் அடிப்படைச் சிக்கல். மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்தி இச் சிக்கலை ஓரளவு தீர்க்கமுனைந்தார் தான். ஆனால் அவக்கர நிலைமைக்கு (emergency state) அப்புறம் இந்திய ஒன்றியக் கருத்தீடு (Concept of Indian Union) எனும் நிலை குலைந்தது. இப்போது இந்தியக் குடியரசு (Republic of India) என்றே எங்கும் எவரும் பேசுகிறார். பெரும் உளவியல் மாற்றம் இங்கு நடந்துமுடிந்திருக்கிறது.

மொழியுரிமை என்பது அறிவும், ஏரணமும், வரலாற்றுணர்வும், கணிசமான மக்கள் தொகையும் இருந்தாற்றான் புரிபடும். இதில் மிகத் தேவையானது விழிப்புணர்வு. "நம்மைச் சூழ்ந்த உலகில் என்ன நடக்கிறது? மற்ற நாடுகள் என்ன செய்கின்றன? நாம் முன்னேறுகிறோமா? பின்னேறுகிறோமா? அல்லது தேங்குகிறோமா? நம்மிருப்பின் காரணமென்ன?- என்ற விழிப்பு நமக்கு ஏற்படா விடில் மொழியுரிமை எந்நாளும் புலப்படாது. நம் போகூழ், மொழி உரிமை ஏதென நெடுங்காலம் நாம் உணராது இருந்துவிட்டோம். குறிப்பாக 1980 களிலிருந்து பின்தங்கிவிட்டோம். தமிழும் தமிழரும் இப்படியுள்ளதை ஒரு நுட்பியற் (Technology) சிக்கல் மூலம் உங்களுக்கு உணர்த்த விழைகிறேன்.

மொழியுரிமைக் கருத்தரங்கில் என்ன பேசவேண்டுமென நண்பர் அருணாசலத்தைக் கேட்டால், மின்னஞ்சலில் ஒரு கோப்பை அனுப்பினார். அதைத் திறந்தால் என்னால் படிக்க முடியவில்லை. ஒருவேளை பாமினி வார்ப்போ (Bamini) என ஐயுற்று NHM Converter வழி சோதித்தால். அது பாமினியே தான். ஒருங்குறிக்கு (Unicode) மாற்றியபின் 8 குறிப்புகள் கிடைத்தன. பாமினி குறியேற்றச் சிக்கல் என்பது கல்லூரி ஆசிரியருக்கு, குறிப்பாய்த் தமிழ் ஆசிரியருக்கு, மட்டும் உள்ளதென இதுநாள் வரை எண்ணினேன். இப்போது தான் புரிகிறது. உங்களைப் போன்ற வழக்குரைஞருக்கும் அச்சிக்கல் உண்டு போலும். இச் சிக்கலைப் புரிந்துகொள்ளக்  கொஞ்சமாவது இதன் வரலாறு தெரிய வேண்டும்.

கணித்திரைகளில் எழுத்துக்கள் தெரிகின்றனவே அவற்றைக் குறியேற்றம் (encoding) என்பார்.  தொடக்க த்தில் 1960/70 களில் அமெரிக்க ஆங்கிலத்திற்கு மட்டுமே ASCII 7 மடைக் குறியீடு (128 இடங்கள்) எழுந்து. கணிவழி உலகையே ஆட்டிப் படைத்தது. ”ஆங்கிலத்தை இப்படியே விட்டால் நாம் என்னாவது?. நம் மொழிகள் குலையுமே?. அமெரிக்கரோடு போட்டியிட்டு நம் மொழிகளுக்கு உரிமை பெறுவோம்” என்ற இரோப்பியர் 1970/80 களில் 256 இடங்கள் கொண்ட, extended ASCII எனும் 8 மடைக் குறியீட்டை உருவாக்கி. தம் மொழிகளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டார்.

நாமோ, அப்போது, தமிழில் எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஆயுத்தமாய், ஏதுஞ் செய்யவில்லை. 65-67 மொழிப் போராட்ட உச்சத்தின்பின், பொது வாழ்வில் ”தமிழ்வாழ்க” வென முழக்கமிட்ட கழகங்களே நிலைத்தன. ”தமிழை இனி இவர் பார்த்துக்கொள்வார்” என மெத்தனமாய் நாம் காலங் கழித்தோம்.  இவரும் 5 ஆண்டுகள் ஆர்வத்தோடு ஏதேதோ செய்தார். 71-72 க்கு அப்பறம் கழகம் உடைந்தது, ஊழல் பெருகிற்று. அதன் விளைவாய், தமிழக அரசோ, தமிழறிஞரோ, ஆர்வலரோ, தம்மைச் சுற்றி உலகில் நடப்பது என்னவென அறியாதிருந்தார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கமெனப் பொழுதுகள் கழிந்தன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து வெளி வர, உலகோர் முயல்கையில். அதிகாரப் போதையில் கழகத்தார் ஆழ்ந்தார். தமிழுரிமைகள் அம்போ என்று ஆகின. 2 கழகத்தாரும் ஆட்சியில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், கல்வியில் தமிழ், பொதுவழக்கில் தமிழ் என்றிருந்த குறிக்கோள்களைத் தூக்கிக் கடாசித் “தமில் வால்க” என்று சொல்லத் தொடங்கினார். இன்றுவரை அது மாற வில்லை. அண்ணன்-தம்பி சண்டை தான் நம்மூரில் பெருவலம் ஆயிற்றே? 5 ஆண்டு அண்ணன், 5 ஆண்டு தம்பி என மாறி மாறி நாட்டாமை ஆனது தான் மிச்சம். ஊழல் பெருத்து 47 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் இணையக் கல்விக் கழகம், ஒரு சில அரசாணைகள் தவிர, அரசின் வழி பெரிதாய் தமிழ்க் கணிமைக்கு ஏதும் நடக்கவில்லை.

இவ்வோட்டத்தின் நடுவில் வெளியூர்த்தமிழர் ஒரு மூலையில் இயங்கிக் கொண்டுதான் இருந்தார். 1980களில் ஈழத்தமிழரால் செய்யப்பட்ட ”பாமினி வார்ப்பு” எழுந்தது. இதுவும் ஓர் எண்மடைக் குறியீடே. (முதல் 128 இடங்களில் ஆங்கிலக் குறியீடுகள்;  பிந்தைய 128 இல் தமிழ்க் குறியீடுகள்.) இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிய ஈழத்தமிழர் தமக்குள் செய்தி பரிமாறிக்கொள்ள உருவான வார்ப்பு இதுவாகும். மின்னஞ்சல் பரிமாற்றத் தேவை (demand) ஈழத் தமிழருள் எழுந்து, இதற்கான அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகர வைத்தது. ஒரு பக்கம் பேரழிவு ஏற்பட்டு, கொடுமை நடந்தபோது, இன்னொரு பக்கம் அதிலிருந்து மீள, சிதறிய உறவுகளை ஒட்ட வைக்க, தமிழ்க் கணிமை என்பது உருவானது. உலகின் பல்வேறு போர்களால் ஏற்பட்ட அறிவியல்/ நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய்த் தமிழ்க்கணிமை தோன்றியது. வளர்ந்தது; பயனுற்றது.  இதைத் தமிழர் யாரும் மறக்கக்கூடாது.

தமிழ்க்கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டுமே எழவில்லை. ஈழம் தவிர்த்த மற்ற நாட்டுத் தமிழரும் வாளாயிருக்கவில்லை. பல்வேறு வார்ப்புகள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத் தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத் தமிழர் பாமினிக் குறியீட்டிலும் ஒருங்கிணைந்தார். 

தமிழகமோ இக்காலத்தில் தடுமாறியே இருந்தது. பின் தமிழகத் தரமாய் TAB/TAM  குறியீடு எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல வெளியீட்டாளரும் அப்போது 100 வகை எண்மடைக் குறியீடுகளைக் கொண்டு புழங்கியிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணிக்குள் இறக்க வேண்டியிருந்தது. இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லாது ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம்.  நம் ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகறிந்த விதயமாயிற்றே?

இதற்கிடையில்  1987 க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII யின்  8 மடைக் குறியீட்டை 16 மடைப் பின்புலமாய் நடுவணரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) அனுப்பியது. இரு பரிமானச் சதுரத்தால் முப்பரிமானக் குவ்வத்தைச் (cube) செய்யமுடியுமோ? நம்மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எனத் தனியமைப்பு இருந்தது. இரோப்பிய எழுத்துகளிலோ உயிர், மெய்கள் மட்டுமேயுண்டு. 

இரோப்பாவில் செய்த அடவை (design) இந்திய மொழிகளுக்குப் பயனுறுத்தியது முதற் கோணலாகும். தப்புந் தவறுமாய்  உயிர்மெய் எழுத்துகளை உடைத்து, கால், கொம்பு, சுழி, கொக்கி என்று சினையுறுப்புகளை அடிப்படையான character-களாக்கி, அதன் மேல் எழுத்துக்களைக் கட்டி அதற்கும் மேல் இந்திய மொழிகளை ஒருங்குறி நுட்பம் கட்டுகிறது. குறைகள் கொண்ட அதன் செயற்பாட்டை எப்படியோ சரி செய்தார். 

நம்மூர் மொழியுரிமையை ஒருங்குறியார் மதித்திருந்தால், உயிர், மெய், உயிர்மெய் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் புத்தம்புது அடவில் அணி முறையில் (matrix) 16 மடைக் குறியீட்டைச் செய்திருக்கலாம். இதற்குத் தான்  மொழியுரிமை விழிப்புணர்வு வேண்டும் என்கிறேன். 10, 15 ஆண்டு கழித்து ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் நாம் போனபோது, “முன்னரே ஏன் வரவில்லை? தூங்கினீரா?” என்று கேட்டார்.

உண்மையே. 16 மடைக் குறியேற்றத்துள் நாம் காலங்கழித்தே விழித்தோம். நம் உயிர்மெய்க் கருத்தீட்டைச் சரியானபடி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு உரைக்கவில்லை. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டைக் கொண்டே 16 மடை ஒருங்குறி செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் வணிக வல்லாண்மை கொண்ட ஒருங்குறிச் சேர்த்தியம் (உலகத் தர நிறுவனமான) ISO வின் அனைத்துநாட்டுப் பங்களிப்புடன் தமிழெழுத்தை நாட்டாமை செய்தது. 

இப்போது நம் மொழியின் உரிமை இந்திய நடுவணரசிடங் கூட இல்லை. அப்படியுள்ளதாய் நம்மில் பலரும் எண்ணிக் கொள்கிறோம். அது தவறு. எல்லா இந்திய மொழிகளுமே ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் மாட்டிக்கொண்டு விழிக்கின்றன. ஒரு புதுவெழுத்தை நுழைக்க வேண்டுமா, பழைய கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டுமா, நீங்களாய் ஏதுஞ் செய்யமுடியாது, அவர் செய்தால். நீங்கள் அடிமை போல் அதை ஏற்றுக் கொள்ளலாம். இந்திய அரசும் அப்படித் தான் இருக்கிறது. ” இது புதுக் கிழக்கிந்தியக் கும்பணியா?” என்று கேட்டால்,  ஏறத்தாழ அப்படித் தான்.

காட்டாக நீங்களெலாம் படிக்காத, தமிழகப் பள்ளிப் பொத்தகங்களிலேயே இல்லாத, ஒரு ஶகரம் 0BB6 எனும் இடத்தில் ஒருங்குறிப் பட்டியலில் குடி இருக்கிறது. ஜ, ஸ, ஷ, ஹ என்று 4 கிரந்த எழுத்துகள் மட்டுமே தமிழோடு ஒட்டியதாய் நீங்கள் எண்ணிக் கொள்ளலாம். உண்மையில் ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ and ஶௌ எனும் 5 ஆவது கிரந்த எழுத்து வரிசையே இருக்கிறது. அதற்கு ஒப்புதல் கொடுத்து உட்கார வைத்தது ஒருங்குறிச் சேர்த்தியமே. தடியெடுத்தவன் தண்டல்காரனாய், உலகிலுள்ள எவனும் தமிழ் எழுத்தை என்ன வேண்டுமாயினும் செய்துகொள்ளலாம். ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு வேண்டியதெல்லாம் அச்சின்வழி வெளிவந்த ஒரு கழிவேற்றமே  (printed salvation). தமிழக அரசோ, தமிழ் மக்களோ இந்த எழுத்துக்களை நுழைக்க வில்லை. இணையத்தில் நாளொரு பொழுதும். பொழுதொரு வண்ணமுமே இவ்வரிசையில் சொற்கள் வளர்கின்றன. இது போல் தமிழெழுத்தை எப்படி வேண்டுமாயினும் ஒருங்குறியார் மாற்றலாம், குலைக்கலாம், பெருக்கலாம்.  நாமும் உப்பிற்குச் சப்பாணியாய் ”ஆமாஞ் சாமி” போடலாம்.

ஒருங்குறியேற்றத்தில், இரோப்பிய மொழிகளை ஒப்பிடுகையில் இந்திய மொழிகளைக் கணி கையாளும் நேரமும் மிகுதி, சேமிக்கும் கொள்ளளவும் (memory), கையாளும் செலவும் என எல்லாமுமே மிகுதி. கால காலத்திற்கும்  நாம் 2 ஆம் தரமாய் இருப்போம்.  நம் மொழியுரிமைகளும் 2 ஆம் அளவில் தரப்படும். ”எசமான், பாத்துச் செய்ங்க” என்று கேட்கலாம். 

இதற்கு மாறாய் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (TACE) என்ற ஒன்றைப் பயன்படுத்தினால் கணி கையாளும் நேரம் குறைவு. சேமிப்புக் கொள்ளளவு குறைவு, கையாளும் செலவுங் குறைவு. இத்தகைய TACE ஐ Unicode consortium இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதெல்லாம் கண்டு உணர்ச்சிவயப்பட்டு வெறுமே நாம் புலம்புவதில் பயனில்லை, நாம் ஒருங்குறியை ஒதுக்கிவிடவும் முடியாது எவ்வளவு குறைப்பட்டாலும், நூற்றுக்கணக்கான உலக எழுத்துகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழியின்றி நாம் ஏற்க வேண்டியுள்ளது.  தெரிந்தோ, தெரியாமலோ, அவருக்கு வாக்கப்பட்டாயிற்று. இனி என்ன செய்வது?

இனி TACE தொடர்பான இன்னொரு சிக்கலுக்கு வருகிறேன். நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன் படுத்தச் சொல்லித் தமிழக அரசு 2009 இல் ஓர் ஆணை பிறப்பித்தது. இந்த TACE ஐ ஒருங்குறிச் சேர்த்தியம் ஏற்க வேண்டுமெனில், TACE இல் சில இலக்கம் பக்கங்களுக்காவது நம்மிடம் ஆவணங்கள் இருப்பதாய்க் காட்டி,. அவற்றைக் காப்பாற்றும் தேவையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு நாம் உணர்த்த வேண்டும். இதற்காகத் தமிழக அரசு TACE ஆவணங்களை உருவாக்க வேண்டும். 

தமிழக அரசோ வெறும் வாய் வார்த்தையிலேயே நிற்கிறது. 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உருப்படியான செயல்களை இதை நோக்கிச் செய்யவே இல்லை. 10 ஆண்டுகளுக்கு முன் தமிழர் தூங்காது இருந்திருப்பின், கட்சிச் சண்டையால் உள்ளூரில் தடுமாறாது இருந்திருப்பின், இன்று ஒருங்குறிச் சேர்த்தியமே அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஏற்க வைத்திருக்கலாம். நம் கணித் திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) முற்றாய்த் தீர்த்திருக்கலாம். சரி, வேறுவழியின்றி ஒருங்குறியை ஏற்குந் தேவை நமக்கு ஏற்பட்டது. அதை யாவது  முழுக்கச் செய்தோமாவெனில் இல்லை. 

கடந்த 10/15  ஆண்டுகளாக எண் மடைக் (8 bit) குறியீட்டுப் பயன்பாடு குறைந்து, நம்மிற் சிலர் 16 மடைக் (16 bit) குறியீட்டுக்கு வந்துவிட்டோம். பல்வேறு தமிழ் ஆவணங்களைக் கணித்திரையில், அச்சியில், தொடர்பாடலில், மொழியியல் அலசலில், எந்திர மொழிபெயர்ப்பில், பேச்சிலிருந்து பனுவலுக்கும் பனுவலிலிருந்து பேச்சுக்கும் மாற்றுமளவிற்கு வளர்ந்துள்ளோம். இதன் பின்னும் பாமினி போன்ற 8 மடைக் குறியேற்றத்தில் நம்மில் பலர் ஆழ்ந்து தேங்குவது எப்படி? இணையமெங்கும் ஒருங்குறி பழகையில் அச்சடிக்கப் பாமினி பயிலுவீரா? ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அல்லது TACE எனப் படும் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ தான் இனிப் பழகவேண்டுமெ”ன 2009இல் தமிழக அரசே அரசாணை பிறப்பித்த பின்னும் பழகுவீரா? ”மற்ற பிள்ளைகள் ஏழாப்பு, எட்டாப்பு போனாலும் நாங்க ஒண்ணாப்புலே இருப்போம்”னா எப்படி?

நீங்கள் மட்டுமில்லை. அரசின் செயலக அதிகாரிகளும் ஊழியருங் கூட அரசு ஆணையைத் தூக்கியெறிந்து “வானவில்” எனும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறார். வானவில்லிற்கும் அரசினருக்கும் என்ன connection- ஓ எனக்குத் தெரியாது. அதேபோல் அரசாதரவு பெற்ற பல்கலைத் தமிழ்த் துறைகளிலும் அரசாணையைத் தூக்கிக் கடாசித்து ”உசிதம்” போல் பாமினி பழகுகிறார். 

தமிழ்த் துறையாரின் ஆய்வரங்க அழைப்புகளில் (இக் கருத்தரங்கையும் சேர்த்து), “பாமினி எழுத்துருவில்” செய்தியனுப்பியும், கட்டுரைகள் அனுப்பச் சொல்லியும் தொடர்ந்து கேட்கிறார். 10 வருசமாகியும் நம்மில் பலரும் திருந்தவேயில்லை. தமிழக அரசாணை செயற்படவேயில்லை. மொழி யுரிமை, மொழிக் கொள்கை என்பன பிறகு நமக்கு எப்படிப் புலப்படும், புரியும்? சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கையில், அரசின் அமைச்சரோ, இந்திய ஆட்சிப் பணியினரோ, பெரும் அதிகாரிகளோ இல்லாது, அரசுச் செயலகத் தட்டச்சரே தமிழ்நாட்டு அரசின் மொழிக்கொள்கையை நிர்ணயிப்பதாய் நான் சொல்வதுண்டு. அதுபோல் தான் நாடெங்கிலும் உள்ள DTP கூடங்களும், அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் தமிழ்த்துறைகளின், வழக்குரைஞர்களின், ஆவண வெளிப்பாட்டை வழி நடத்துகின்றன. எத்தனை பேர் இன்னும் நுட்பியல் பூச்சாண்டியில் தடுமாறுகிறார், தெரியுமோ? நீதிமன்றங்கள் சுற்றியுள்ள DTP கூடங்கள் செய்வது அப்படியே இன்னும் தொடர்கிறதா, இல்லையா? நம் நாட்டில் பொள்ளிகைகளை (policies) யார் நிர்ணயிக்கிறாரென இப்போது புரிகிறதா? இந்நுணுக்கத்தை, நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, சிக்கல் எப்போதும் வந்துசேரும். பின் எப்படி மொழியுரிமை பற்றி நாம் பேசமுடியும்?

தமிழ்த்துறைகளிலும், பல குழுக்களிலும், இப்படி நடப்பது சோம்பலா? அறியாமையா? விதண்டா வாதமா? தெரியாது. தமிழ்க்கணிமைப் போக்கை அறிந்து தான் செயற்படுகிறோமா? அன்றி நுட்பியற் கல்லாமையா? ஓர்ந்து பாருங்கள். நுட்பியல் மறுத்து உரிமைகளைப் பேசமுடியுமா? நடவடிக்கைகள் தடுமாறாதா? செல்பேசியை, கணியை, மின்னியல் மாற்றத்தை ஒதுக்கி நாம் இயங்கமுடியுமா? 

இங்குளோர் என்மேற் சினங் கொள்ளாதீர். அருள்கூர்ந்து உள்ளமையோடு (realistic) பொருத்திப் பாருங்கள். நுட்பியலுக்கிணங்கத் தமிழார்வலர் நடந்து கொண்டால் மட்டுமே தமிழ்க்கணிமையில், தமிழுரிமைச் சிக்கலில், நாம் புதிதாய் ஏதாவது செய்யமுடியும். வெறுமே அரசை மட்டுங் குறைகூறிப் பயனில்லை.  குறை நம்மிடமும் உள்ளது. ஊரே திரண்டு வடம் பிடித்தால் தான் தேர் நகரும்.

இப்பொழுது கணிவழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.எ.கு/TACE (அனைத்து எழுத்துக் குறியேற்றம்/ Tamil All Character Encoding) பயன்படுத்துவதும் இன்றியமையாத் தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக் கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் தள்ளித்தள்ளியே போகும். முன்னே வராது பின்தங்கியே இருப்போம். (நான் எண்மடைக் குறியேற்றம் பயில்வேன்  நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்பது ஒருவகைச் சண்டித்தனம்.) நண்பர்களே! அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர்கூடித் தேர் இழுப்போம்.

இதுவரை நுட்பியற்சிக்கல் பற்றி நிறையவே பேசிவிட்டேன். எனவே அதை விடுத்து, நம்மூரின் மொழியுரிமையற்ற நிலைகளைச் சொல்ல விழைகிறேன்.

முதலில் வருவன அரசாவணங்கள், சட்டங்கள். தமிழக அரசினால் இவை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட படுகின்றன. இவற்றில் ஆங்கில ஆவணத்திற்கே முகன்மையென நான் கேள்விப்பட்டேன். தமிழாவணங்கள் நீதிமன்றங்களில் சட்டமதிப்புக் கொண்டவை அல்லவாம். இது உண்மையா, அல்லவா என்பதை நீங்கள் தாம் சொல்லவேண்டும். கொல்லன் தெருவில் நான் ஊசி விற்கக் கூடாது. இது மெய்யெனில், தமிழுக்கு எங்கே மொழியுரிமை உள்ளது? நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதியுண்டா? இந்திக்கு 4 மாநிலங்களில் இது முடியுமெனில், தமிழுக்கு ஏன் உரிமை தர மறுக்கிறார்? வழக்கு மன்றங்களில் தமிழுரிமை ஏன் சிக்கலாகிறது?

சரி, கல்வித்துறைக்கு வருவோம். இவ்விதயம் சற்று நீண்டது. நான் கேள்விப் பட்டவரை, தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமே ஆட்சிமொழி. ஒரே விதிவிலக்காய்ப் பாரதிதாசன் பல்கலையில் பேரா. பொன்னவைக்கோ இருந்த வரை தமிழ் செல்லுபடியானது. அவருக்கு அப்புறம் ”பழைய குருடி கதவை திறடி” என்றானது. ஏனிது நம்மூரில் முடியவில்லை?. இங்கெல்லாம் தமிழ்க்கல்வி ஆவணங்கள் முன்னுரிமை கொள்ளாதாம். காட்டாக பாடத்திட்டங்கள், விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள், கல்வித்துறை அறிவிப்புகள், பல்கலைக் கழக ஆணைகள் என எல்லாவற்றிலும் ஆங்கில வடிவமே செல்லுபடி ஆகுமாம்.  தமிழுக்கு எங்கே உரிமையுள்ளது?

பல்கலைக் கழகங்களிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறேன். இளம் பொறியியல், இளநுட்பியல், முதுஅறிவியல், முதுகலை, முதுபொறியியல், முதுநுட்பியல், ஆய்வியல் நிறைஞர், ஆய்வியல் முனைவர் ஆகிய பட்டங்களின் புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) என எல்லாமே (தமிழ்த்துறை தவிர) ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் நடைமுறை இன்றும் உண்டு. தமிழில் எதையும் சொல்லத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் பட்டம் பெறலாம். அப்புறம் எங்கே மொழியுரிமை புலப்படும்? மற்ற நாடுகளிலோ குறைந்தது 5 பக்கமாவது அவ்வந்நாட்டு மொழிகளில் நூற்சுருக்கம் இருக்க வேண்டும். இக்கட்டாயம் இல்லெனில் அம்மொழிகளின் இருப்பு எப்படி நிலைக்குமென்றே எல்லா நாடுகளிலும் இப்படிச் செய்கிறார். இப்போது சொல்லுங்கள். தமிழின் மொழியுரிமை  எங்கே போயிற்று? இது மொழியுரிமை மட்டுமல்ல. தமிழ் படித்தவனுக்கு வேலைவாய்ப்பு. எத்தனை பேர் இளங்கலை (தமிழ்) படித்துவிட்டு வேலையில்லாதிருக்கிறார். பல கல்லூரிகளில் தமிழ்த் துறை மூடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமோ?

அடுத்தது கல்விக்கொள்கை. அண்மையில் வெளிவந்த இந்திய நடுவணரசின் புதிய கல்விவரைவுத் திட்டம் மிகக் கொடூரமானது. ஒருகாலத்தில் அரசு அமைப்பு யாப்பின்படி, கல்வி என்பது மாநில ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அப்படியிருந்ததை அவக்கரநிலை காலத்தில் concurrent list இற்கு மாற்றினார். அண்மையில் வெளிவந்த கல்விக்கொள்கையின் வரைவுத்திட்டமோ நடுவணரசே எல்லாவற்றையும் செய்யத் தூண்டுகிறது. இந்தக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தவில்லை. பன்மொழிக் கொள்கையைப் பரிந்துரைக்கிறது. இளஞ்சிறார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சங்கதமென்று பல மொழிகளைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப் படுத்துகிறது. நமது மொழியுரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே இளஞ்சிறாரை 3, 5, 8, 12 ஆம் வகுப்புகளில் வடிகட்டுவேம் என்கிறது. மறுபடியும் குலக்கல்வியா என்று அச்சப்பட வைக்கிறது. எங்கு பார்த்தாலும் “ஒரே” என்ற கூக்குரல் இப்போது பெரிதும் ஒலிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் ,ஒரே தேர்தல், ஒரே ration card. இப் பட்டியல் முடிவிலாது போகின்றது.  இந்திய ஒன்றியம் ஒற்றைக் குடியரசாய் மாறுவதால் ஏற்படுங் குழப்பமிது.

484 பக்கக் கல்விக் கொள்கையையே நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இந்த வரைவுத் திட்டத்தைப் படித்து மறுவினை செய்வதற்கு மாறாய், அதன் ஓரத்தை இக்கருத்தரங்கு கிடுக்குவதில் (criticize) அவ்வளவு பயன் விளையாது ஐயா! மொழிக்கொள்கை என்பது கல்விக்கொள்கையில் ”துக்குணூண்டு சங்கதி”. இதை எதிர்க்க வேண்டும் தான். ஆனால் மலைமுழுங்கி மகா தேவனான கல்விக் கொள்கையைக் விவாதப்பொருள் ஆக்காமல் எப்படி? வழக்குரைஞர்களே! பென்னம் பெரிய கல்விக் கொள்கையைப் படியுங்கள். 6 மாதக் கலந்தாய்வு நேரமாவது அதற்குக் கிடைக்கவேண்டும். இப்போராட்டக் குழு அதற்கு முயலவேண்டும்.

இன்னொரு பார்வை. நாங்களெல்லாம் 1960 களில் பள்ளியில் படித்தபோது ஆறாம் வகுப்பில் தான் A,B,C.D படித்தோம். பள்ளியிறுதி வரை தமிழ்வழி படித்தோம். பேராயக்கட்சி ஆட்சியில் இதுவே நடைமுறை. தமிழ் நாடு எங்கணும்  13 பள்ளிகளே ஆங்கிலவழிப் பள்ளிகள். இப்போதோ 7000/8000 ஆங்கிலவழிப் பள்ளிகள். அரசுப்பள்ளிகளுங்கூட இப்போது ஆங்கிலவழி வகுப்பை வைத்துக்கொள்ளலாம். (நண்பர் ஒருவர் சொன்னார். சென்னையில் 100க்கு 95 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள் உண்டாம். இன்னும் 5 ஆண்டு காலத்தில் முற்றிலும் ஆங்கிலவழிக்கு எல்லாப் பள்ளிகளும் மாறி விடும். அதிலிருந்து 10 ஆண்டில் தமிழ்நாடு முழுதும் மாறிவிடும். இதுபற்றி ஒரு அரசியல் கட்சியும் பேசவில்லை. எல்லாரும் வெறும் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார்.)

,அக்காலத்தில் இந்தி விருப்பப் பாடம். 8 ஆவதில் தான் இந்தி படிக்கத் தொடங்குவோம். இந்தியில் தேர்வது கட்டாயமில்லை. படிப்பில் எந்தச் சிக்கலையும் நாங்கள் காணவில்லை. விருப்பப்பட்டோர் கல்லூரி போனோம், பெரிய ஆட்களாயும் ஆனோம். ஆங்கிலம் பின்னால் படித்ததால் எக்குறையும் எமக்கு எழவில்லை. எங்களுக்கு நாட்டுப்பற்று ஒன்றுங் குறைந்துவிடவில்லை. இப்படி ஒரு கல்விமுறை நன்றாய் இருந்ததைச் சீரழித்து, ஏன் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் நாம் தாசனாகிறோம் என்பது புரிபடவேயில்லை. ஆழ்ந்து ஓர்ந்தால் இது இந்தியாவை ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு சந்தை என்றாக்கும் முயற்சி  என்பது நன்றாகவே புலப்படும், .

1972க்குப்பின் தமிழகத்தில் எப்படி ஆங்கிலவழிப் பள்ளிகள்  முகன்மையுற்றன? ஆங்கிலத்தை மழலையர் பள்ளிகளில் படிக்கவில்லை யென்றால் எதிர்காலமே போகுமென்று எப்படி எண்ணத் தலைப்பட்டார்? (Mummy, daddy என்பதில் எப்படி எல்லோரும் மகிழ்ந்துபோகிறார்?) ஒரு பெரும் உளவியல் மாற்றமே 50 ஆண்டுகளில் நம் மக்களிடத்தே நடந்துள்ளதே, அது ஏன்?.

வெறும் முழக்கங்கள் இடுவதில் இனிமேல் பயனில்லை. பெரும் மூளைச் சலவை இங்கு நடந்து முடிந்திருக்கிறது. அதை எப்படித் தகர்ப்பதென்று பாராமல் மொழியுரிமை மட்டும் பேசினால் எப்படி? அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மடிக்குழை (மெட்ரிக்குலேசன்) பாட்த்திட்டத்தோடு ஒன்றாக்கியதால் எதுவும் இங்கு முடிந்துவிடவில்லை. ஆங்கிலப் பித்து இன்னும் முற்றி CBSE பள்ளிகள் பெருகுகின்றன. 

பணம் படைத்த பகுதியினர் ஆங்கில வழி படித்தால் நாங்கள் ஏன் ஆங்கிலவழி படிக்க்க்கூடாதெனும் சாதிய வாதமும் இங்கெழுகிறது. கட்சித் தலைவர் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படித்தால் நாங்கள் ஏன் இந்தி படிக்கக்கூடாது? – என இன்னொரு வாதம் எழுகிறது. மொத்தத்தில் இவ் உளவியல் மாற்றம் நடந்தற்கு ஊழலே அடிப்படைக் காரணம்.  நம்மைக் கெடுத்தது. குமுகாயம் எங்கணும் விரவிய ஊழலே காரணம். ஊழலைத் தகர்க்காது இதைச் சரிசெய்ய முடியாது.

ஒருசில ஓய்வுபெற்ற ஆங்கிலவாசிரியர் கல்வித்துறைக்குள் புகுந்து மடிக்குழை (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளுக்கு ஒப்புதல் வாங்கினார்  கையூட்டு கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரிதாயிற்று. இயல்பாக  இருந்த 13 முடிவில் 7000/8000 ஆயிற்று. நம் எதிர்காலத்தையே கல்வித்துறையின் ஊழல் குலைத்தெறிந்திருக்கிறது. மனம் வேதனையாகிறது. 

1962/67களில் இருந்த அக்காலப் பேராயக் கட்சி கூட தமிழுக்கு நல்ல சேவை செய்தது போல் இப்போது தோன்றுகிறது. அவர் செய்த பணிகளை இப்போதும் தொடராது உள்ளோம். பின்தங்கியும் போனோம்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்று தான் அன்றிருந்தது. உண்மையிலேயே அவர் பெரிதும் முயன்றார். கல்லூரியில் தமிழ்ப் பாடமொழியாக, ஏராளமான துறைப்பொத்தகங்கள் அப்போது வெளிவந்தன. 1967க்கு அப்புறம் கல்லூரிகளில் தமிழ்ப் பாடமொழி ஆகும் என்றார் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம். ஆலயங்களில் தமிழில் அர்ச்சனைப் பழக்கம் தொடங்கியது. வழக்கு மன்றங்களில், அரசின் செயலகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகும் என்றார். ஆனால் பேராயம் 1967க்கு முன் செய்ததை 72 க்கு அப்புறம் கழகங்கள் தொடரவேயில்லை.

கல்வியை அடுத்துப் பொதுவெளிக்கு வருவோம். ஆங்கிலத்தின் முன்னுரிமை தனியார் அலுவங்களிலும், அரசு அலுவங்களிலும் இன்றிருப்பதற்குக் காரணம் என்ன? எங்குமே தமிழ் நடைமுறையில் இல்லை. கடைவீதியில்  தமிழ் இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, அல்லது ஒரு மின்னிக்கருவி (electronic equipment) வாங்குகிறீர்கள். அந்தப் பெட்டியில் கருவியைக் கையாளும் கையேடு தமிழில் இருக்கிறதா? ஏன் தமிழக அரசு அதைக் கட்டாயம் ஆக்க வி்ல்லை எந்தவொரு அரபு நாட்டிலும், தென்கிழக்கு ஆசிய நாட்டிலும் அந்த ஊர் மொழியில் கையேடு இல்லையென்றால் பொருளை விற்க முடியாது. கடைகளில் தரும் பெறுதிச் சீட்டுகள் (receipts) ஏன் தமிழிலில்லை? நிறுவனங்களின் பொதுத் தொடர்பு ஏன் தமிழிலில்லை? இங்கு விற்கப்படும் கணிகள், மடிக்கணிகள், செல்பேசிகள் ஏன் Tamil enabled ஆகவில்லை? ஏன் கடைப்பெயர்கள் தமிழில் எழுதப்படவில்லை? இவற்றையொட்டி மொழி யுரிமை இல்லையா?

கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். அது மாதிரி இருக்கிறது நம் நிலை. ஏற்கனவே இருக்கும் சட்ட்திட்டங்களை வைத்தே பல செயல்களை நாம் செய்யலாம். இனிமேலும் கூட்டம் போட்டு, ”வியாக்கியானம்” செய்வதில் பொருளில்லை.  ”தமிழ் சோறு போடுமா?” என்ற கேள்வி நிலையை மாற்றுங்கள். “சோறு போடும்” என்று மக்களுக்கு உறுதி சொல்லுங்கள். அப்போது தான் ஆங்கில மோகம், இந்தி மோகம் மாறும்.   இந்த மாற்றங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டும் தான் செய்யமுடியும் என்றில்லை. அவருக்கு உணர்த்தியும் இதைச் செய்யலாம்.

நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கான என் மறுமொழிகள்:

1. உலக மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள மொழியுரிமைகளின் படி மும் மொழிக் கொள்கை சரியானதா?

சரியில்லை. பள்ளிக்கல்வி தாய்மொழியில், உலகைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம். மற்றவை அவரவர் விருப்பம்.

2. கூட்டாட்சி அமைப்பில் வாழும் பல்தேசிய இன மக்களின் மொழி யுரிமைகளை பாதுகாப்பது எப்படி?

இந்தியா பல்தேசிய ஒன்றியம் என்பதை மறவாது இருக்கவேண்டும். அவக்கர நிலைக்கு முந்தைய நம்முடைய பழைய யாப்பநிலைக்குப் போனாலே போதும். அதை முகன நிலைக்குக் கொண்டுவந்தால் போதும்.

3. மாநிலங்களில் செயல்படும் இந்திய நடுவணரசின் அலுவலகங்கள் அந்ததந்த மாநில மக்களின் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டாட்சி அரசமைப்புப்படி சரியானதா?

சரியே. நடுவணரசு அலுவங்கள் மட்டுமின்றி தமிழக அரசின் அலுவங்களும் ஆங்கிலவழி தான் பெரிதும் நடகின்றன. தமிழுக்கு முன்னுரிமை இன்னும் இல்லை. நடுவணரசின் குறையை மட்டும் பார்க்காது தமிழக அரசின் குறையையும் பாருங்கள்.

4. உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா?

சரியானதே! மாற்றமாநிலங்களில் நடைமுறைப்பட்ட்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இதில் நாம் ஏன் தயங்கிநிற்கிறோம்?

5. இந்திய நடுவணரசின் அலுவல் மொழியாக ஒரே மொழியாக இந்தி மொழி மட்டும் என்பது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி அரசமைப்பு கோட்பாட்டின் சரியானதானா?

சரியில்லை. 22 மாநிலமொழிகளும் ஆட்சிமொழிகள் ஆகவேண்டும்.

6. மூன்று மொழிகள் பயின்று தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நிபந்தனை மாணவர்களின் கல்வியை பாதிக்குமா?

கட்டாயம் பாதிக்கும். மேலே மறுமொழி சொல்லியிருக்கிறேன்.

7. மும்மொழி பயிற்றுவிப்பு மாநில அரசின் கல்விச்செலவை விரையமாக்குமா?

விரையமாக்கும்.

8. தற்போதைய மொழிக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை மாநில மக்களின் தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கின்றனவா?

ஆமாம்.கேடு விளைவிக்கின்றன.

அன்புடன், 
இராம.கி.

Sunday, June 16, 2019

நெல்லும் தமிழரும் தென்கிழக்காசியாவும் - 8

முன்சொன்னதுபோல் யாங்க்சி ஆற்றங்கரையிலோ, யுன்னானிலோ, தென் கிழக்காசியாவிலோ நெல்விளைச்சல் தொடங்கியிருக்கலாம். ஆனால் அது பெரும்பாலும் புன்செய் விளைச்சலாய் இருக்கவே வாய்ப்புண்டு. ஏனெனில் நன்செய் விளைச்சலுக்கு, தேவையான அளவிலும் காலத்திலும் வயலில் நீர்தேங்க வேண்டும். பயிர் அழுகவுங் கூடாது. [”வரப்புயர நீருயரும் நீருயர நெல்லுயரும். நெல்லுயரக் குடியுயரும் குடியுயரக் கோலுயரும் கோலுயரக் கோனுயர்வான்” என்று பெருஞ்சோழர் கால ஔவை கூறுவாள்.] 

இந்த தேவையான அளவிலும், காலத்திலும் சாதிக்கும் படியான நீர்ப்பாசன நுட்பியல் என்பது ஒரு குமுகத்தில் உருவாக நெடுநாட்கள் ஆகும். தவிர, பென்னம்பெரு நுட்பியல்கள் எல்லாம் பெரும்பாலும் இயற்கையைப் படியெடுத்தே உருவாயின. 

புன்செய் நெல் விளைச்சலைக் கண்ட எந்த நாட்டின் வயல்களுக்கு நீரானது தானே 6 மாதம் உட்புகுந்து, ஊடுறுவி, சிச்சிறிதாய் நீர்மட்டம் உயர்ந்து, சில காலம் தேங்கிப் பின் சிச்சிறிதாய் வடிந்தது? அப்படியொரு நாடு உலகில் என்றேனும் எங்கேனும் இருந்ததா?- எனில் இருந்தது என்றே மறுமொழி சொல்லமுடியும். அந்நாடு இன்றுமுண்டு. ஆனால் நம்மில் பலரும் அதை மதிக்காது இருக்கிறோம். (நம்மின் படியெடுப்பு அப்படி.) இதற்கு விடைகாண முயல்வோம்.

[இங்கேயோர் இடைவிலகல். மேற்கூறிய நீர்ப்பாசனம் பொ.உ.மு. 2500 ஆண்டுகளில் (அவ்வளவு முந்தையான காலத்தில்) தமிழகத்தில் நடந்ததற்கு இது வரை சான்றெதுவுங் கிட்டவில்லை. இன்னுஞ் சொன்னால், ஆகப் பழம் நெல் நமக்குப் பொருந்தலிலும், கொடுமணத்திலும், இப்போது சிவகளையிலும் கிடைத்தது. பொருந்தலின், காலம் பொ.உ.மு.490 என்றே முனைவர் கா.இராசனின் ஆய்வு உணர்த்தியது. கொடுமணத்தின் காலம் ஏறத்தாழ அதே தான். சிவகளையின் காலம் பொ.உ.மு 900 க்கு அருகில். 

தவிர, இந்த இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டது இயல்நெல் அல்ல. பன்முறை பயிரிட்டு. செழுமையுற்ற நெல்மணியாகும். தமிழகத்தில் நெல்விளைவிப்பு பொ.உ.மு. 900க்கு முன் நடந்து இருக்கலாம். ஆனால் அதன் காலமென்ன? நமக்குத் தெரியாது. புன்செய்ப் பயிரோடு, நீர்ப் பாசன நுட்பியல் சேர்ந்த பின்னரே நன்செய் விளைப்பு தமிழகத்தில் ஏற்பட்டது. 

இதன்காலம் பற்றியும் எதிர்காலத்தில் ஆயவேண்டும். வெறும் வாய்ப்பந்தல் பற்றாது. இன்றைக்குக் கிட்டியிருக்கும் தமிழகப் பழம்நெல் வகைகளை ஈனியல் வழி ஆய்ந்து இதற்குத் தீர்வு காணலாம். அப்படி யெல்லாம் ஆயாது, வெறுமே தமிழ் ஆர்வலர் “எட்டுத்தொகை, பத்துப்பாட்டு” சொல்வதில் பொருள் இல்லை.]   

இனித் தென்கிழக்காசியாவிற்கு வருவோம். தென்கிழக்காசியாவில் வெண்கலங் கண்ட தமிழன், அதைக் கொணர்ந்து ஏற்கனவே தான் நடத்திவந்த முல்லை நிலப் பயிர்ச்செயலுக்குப் பயனுறுத்தியிருக்கலாம். ”காடுகொன்று நாடாக்கி குளங்தொட்டு வளம்பெருக்க” (பட்டினப்பாலை 283-4), மரக் கொழுவால் கொற்றுவதை விட வெண்கலக் கொழுவால் கொற்றுவது எளிது. அகண்ட வயற்பரப்புகளை வெண்கலப் பயன்பாட்டால் அதிகம் உருவாக்கலாம். 

முல்லை மருதமாய் மாறுவது வெண்கலக் கொழுக்களால் அதிகரிக்கும். விளைச்சலும் கூடும் இனக்குழு உறுப்பினர் கூடக்கூட உணவுத் தேவையும், போர்க் கருவிகள் தேவையும், உணவாக்கங்களும் தமிழரிடை மேலும் அதிகரித்திருக்கும். பொ. உ. மு. 2500 களில் தாய்லாந்துத் தக்கோலத்திற்கும் அப்பால், தகரத் தேவையை நிறைவு செய்யத் தமிழன் இன்னும் கிழக்கில் நகர்ந்தான். (முன்சொன்னது போல், தகரம் கிட்டிய இடம் யாருக்கும் தெரியாத படி மறைத்து தமிழ் வணிகர் தம்முள் கமுக்கமாய் வைத்திருக்கலாம். நடுக் கிழக்கு வணிகர் அப்படித்தான் செய்தார்.)

இந்த வெண்கலத் தேடலோடு மட்டும் தமிழர் நின்றாரா எனில் இல்லை. முத்து, வயிரம், அரத்தினம், பச்சை போன்ற ஒன்பான் மணிகளையும் தேடினார். தங்கம், செம்பு எனப் பலவற்றைத் தேடினார். இத்தேடலின் ஊடாய்த் தக்கோலத்திற்கு அப்புறம் நிலவழி நடந்து, சியாமிய வளைகுடாவையுங் கடந்து (அயுத்தயா, சுகோதை போன்ற) சியாமின் புது நகரப் பகுதிகளுக்கும் தமிழன் போயிருப்பார். 

இன்னுஞ் சொன்னால் தாம்பரலிங்கத்தின் கிழக்கிலும் கடற்பயணங்களைச் செய்திருக்கலாம். மறவாதீர்!. வெறும் 600 கி.மீ. கடல்வழி போனாலே கம்போடியா, வியத்நாம் சார்ந்த மீகாங் கழிமுகம் வந்து சேரும். அக்காலத்தில் கம்போடியரும் வியத்நாமியரும் சேர்ந்த பல்வேறு பழங் குடியார் அங்கிருந்தார். இன்றும் இவர் அருகருகே தாம் உள்ளார். இரு நாடுகளும் எப்போதும் எலியும் பூனையுமாகவே உள்ளன. இற்றை வியத்நாமின் ஓக்இயோ (Oc Eo. அன்று இது கம்போடியாப் பகுதி.) எனும் மீகாங் துறைக்கு இவ்வழியில் எளிதில் போகலாம்.

மேற்கே எகிப்தின் பெருனீசு போய், இன்னும் மேற்கே 300 கி.மீ. நிலம் வழி ”அசுவான்” போனால், வடக்கே ஏகும் நீலாறு வந்துவிடும். அதில் படகுப் பயணஞ் செய்தால் அலெக்சாந்திரியா போவது எளிது. அங்கிருந்து கிரேக்கம், உரோமம் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. 

இதே போல் தான் தாம்ப லிங்கத்தின் கிழக்கில் ஓக்இயோ போனால், அதற்கு அப்புறம் நிலவழி, ஆற்று வழியில் பயணஞ் செய்து கம்போடிய நாட்டிற்குள் போவது அப்படியொன்றுங் கடினமல்ல. தமிழருக்கும் கம்போடியாவிற்கும் நாட்பட்ட தொடர்பிருந்தது உண்மையே. (ஒருமுறை நீங்கள் அங்கு போய் வந்தால் உங்களுக்கே அது புலப்பட்டு விடும். அடுத்த பகுதியில் விவரிக்கிறேன்.) ஆக நம் குணக்கு, குடக்குப் பக்கங்களிலும் கடல், நிலம், ஆறு எனப் பயணஞ் செய்வதே நமக்குப் பழக்கமாய் இருந்துள்ளது.

ஆங்கிலப் பெயரான "Mekong" என்பது சயாமிலும், லாவோசிலுமுள்ள Mae Nam Khong என்ற பெயரின் சுருக்கமே என்பார். இம்மொழிகளில் நீர்ப்பெருக்கு, நீர்த் தாய் என்ற பொதுப்பொருளில் mae nam அமையும். Khong என்பது இயற்பெயர். எனவே Mae Nam Khong என்பதன் பொருள் "River Khong".என்பதாகும். அதே பொழுது Khong இற்கே ஆற்றுப்பொருள் சீனத்திலிருந்து வந்துசேரும். (Chinese 江 whose Old Chinese pronunciation has been reconstructed as /*kˤroŋ and which long served as the proper name of the Yangtze before becoming a generic word for major rivers.) இந்தியக் கங்கைக்கும் அதே பெயரா?- என்பதும் ஆராயற் பாலது. 

கம் என்பது தமிழில் நீரைக்குறிக்கும். கெமேர் மொழியில் mé ஐ, அம்மை என்றும், kôngk/kôngkea என்பதை நீருக்கு மாற்றாகவுங் பொருள் கொள்வர். எனவே Mékôngk இன் பொருள் நீர்த்தாய் ('mother of water') என்றாகும். தமிழில் காவிரித் தாய் என்கிறோமே? அதுபோலத் தான்.

மீகாங் ஆறு கூர்ந்து அறியப்படவேண்டிய ஒன்று. இமயமலையில் தோன்றும் இந்த ஆறு, திபெத், யுன்னான், லாவோசு, தாய்லந்து, கம்போடியா வழி தென் வியத்நாமிற்கு வந்து, முடிவில் கடலை அடைகிறது. இவ்வாற்றில் 2 வகையில் நீரோட்டப் பெருக்குண்டு. முதல்வழி இமயப் பனிக்கட்டிகள் உருகிப் பெருக்கு எடுப்பது. இரண்டாவது மே தொடங்கி அகுதோபர் வரை ஏற்படும் பருவ மழையால் பெருகி வருவது. 

இதுபோகக் கம்போடிய வடமேற்கு மலைத் தொடரில் பெய்யும் மழைநீர், சிற்றாறுகளாகி ”புத்தாற்றுப் பேரேரிக்கு”  (தோன்லே சாப் dtoo-un-lay saap என்று கெமேர் மொழியில் சொல்லப்படும். கம்போடியா வளத்திற்கு மிக ஆதாரமான ஏரி) வந்து சேரும். குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏரி நிறைந்து மிகுத்துப்பெருகும் நீர் ”புத்தாற்றில்” வழியும். (ஆற்றின் பெயர் புத்தாறு. ஏரியின் பெயர் புத்தாற்றுப் பேரேரி) 

இப்படி வழியும் புத்தாறு பென்னம்புன (Phnompenh) நகருக்கருகில் மீகாங்கோடு கலந்து, பசாக் (Bassac), மீகாங் (Mekong) எனும் கிளையாறுகளாய்ப் பிரிந்தோடும். இரு உள்ளேகும் ஆறுகளும், இரு வெளியேறும் ஆறுகளும் என நாலு முகங்கள் கொண்டதால், பென்னம்புன நகர் சதுமுகம் எனப்பட்டது. (சதுரம் தமிழ் தான். என் கட்டுரைகளில் தேடுக.)

இதன் புவியியல் அமைப்பு சற்று விதப்பானது. வெளியேறும் ஆறுகளின் கொண்மையை விட உள்ளேகும் மீகாங்கின் கொண்மை மழைக்காலத்தில் மிகுதி. எனவே மழைக்காலத்தில் புத்தாறு திசைமாறி வெளியேகும் ஆறாகும். அதாவது வழமை ஓட்டத்திற்கு எதிர்த் திசையில் அதிகநீர் ஓடி புத்தாற்று ஏரியின் நீர்ப்பிடிப்பு மெல்ல மெல்லக் கூடும். நாட்டின் நடுவே சியம்ரீப், பட்டம்பாங், புர்சாட், கம்போங்தாம், கம்போங்சின்னங், கம்பூங்சாம், கம்போங் சுபியூ, பென்னம்புனம் வரை வெள்ளம் அகன்று பரவும். 

இன்றுங் கூட இப்பகுதி ஏழைக் கம்போடிய வீடுகள் 12,16,24 மரக்கால்களில் 6 அடி உயரத்திற்கும் மேல் மரத்தால் தரைத்தளமும் நிலத்திலிருந்து அதற்குப் போக ஏணிப் படிக்கட்டும் கொண்டிருக்கும். தமிழக நாட்டுப்புறத்தார் போலவே ஆண்களின் உடல்மேற் பகுதியில் மீக்குறை ஆடைகளே இருக்கும். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளப் பெருக்கில் கால்நடைகளை வீட்டுத் தளத்தில் ஏற்றி விடுவார். பெரும்பாலும் அந்த நாடு முழுதும் தண்ணீரில் மிதக்கும். (செல்வர் வீடுகள் மட்டும் நிலம் தொட்டு அதே பொழுது 6 அடி உயர மண்மேட்டில் தரைத்தளம் கொண்டு காட்சியளிக்கும். படியில்லாதும், படகு கட்டத் தோதாய் வீட்டு வாசலில் தூண்கள் இல்லாதும் உள்ள செல்வர் வீடுகள் அங்கு அரிது.

[இதே நிலை சதுப்பு நிலத்தில் வீடு கட்டிய புகாரிலும் இருந்திருக்கலாம்  என ஊகிக்கலாம். செயமோகன் தன் ”கொற்றவை” நூலில் இதை விரித்துக் காட்டி இருப்பார். ஏனெனில் பொ.உ. 6-7 ஆம் நூற்றாண்டுகளில் புகாரிலிருந்து வெளியேறிப் பாண்டிநாட்டுக்குப் போந்த நகரத்தார் தமக்குத் தெரிந்த ஒரே ஒரு அடவில் (design) செட்டிநாட்டுப் பக்கம் இன்றும் வீடுகள் கட்டியுள்ளதைக் காணலாம். வீதியில் இருந்து பார்த்தால் கொடிக் கம்பும், வாசல் வளைவும், வீதியொட்டிய வெளிக் கதவும். கதவின் வெளிப்பக்கம் உட்கார 2 மாடங்களும், படகு கட்டத் தோதாய் 2 தூண்களும், படகுகள் அணையத் தோதாய்ப் படித்துறையும் கண்டாலே செட்டிநாட்டு நகரத்தார் வீடுகளின் முன்தோற்றம் வேடிக்கையாய்த் தோற்றும். நெய்தல்நிலத்தில் இருக்கவேண்டிய ஓர் அடவு (design) முரண்தொடையாய்ப் பாலை நிலத்தில் உள்ளது. 

கூர்ந்துநோக்கின் தென்கிழக்கு ஆசியச் செல்வர் வீடுகள் போன்றே பாலை நிலச் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்ட நகரத்தார் வீடுகள் அமையும். எது மூலம்? எது போல்மம்? - என அறிய முடியாத படி காலங் கடந்து நிற்கும்.] 
 
இம்முரண்தொடையை விடுத்து மீண்டும் தோன்லே சாப் ஏரிக்குப் போவோம். ஏரியின் கொள்ளளவு மழைக்காலத்தில் பெருமாண்டதாகும். 6 மாத காலம் இது நடக்கும். கம்போடிய நெல்விளைச்சலுக்கு இதுவே பெரு நன்மை கொடுத்தது. புத்தாற்றின் இரு கரையிலும் இயல்பாய் வளர்ந்த நெற்பயிர்கள் நீர்மட்டம் உயர அதை விட உயருங் கட்டாயம் ஏற்பட்டது. உயரமான சம்பா நெல் கதிர்கள் பெருத்து வளர்ந்தன. (வியத்நாம் நாட்டிற்கே சம்பா என்று தான் பெயர்.) சம்பா நாட்டில் விளைந்த நெல் சம்பாவானதோ? வியப்பாகிறது. நூற்றுக் கணக்கான சம்பா வகைகளை இன்று தமிழ்நாட்டில் அடையாளங் காட்டுகிறோமே? எல்லாச் சம்பாக்களும் பெரும்பாலும் ஏராளமாய் நீரைக் குடிக்கும் 150 நாள் பயிர்கள். நீர் நிறைய நிறைய, அதைக்காட்டிலும் உயரம் வளர முற்படும் நெட்டைப் பயிர்கள். ஆனாலும் நீர்மட்டம் கூட்டிச் சரியான படி நீரை வடிக்கவேண்டும். ஒரு தப்புச் செய்தால் பயிர் அழுகிவிடும். நீர்ப்பாசனம் என்பது அவ்வளவு நுணுகிப் பின்பற்ற வேண்டியது.

இத்தகைய நீர்ப்பாசனம் கம்போடியாவில் மிக இயல்பாய் ஏற்பட்டது. உலகிலேயே வேறெங்கும் இது போல் இயற்கை அமையுமா என்பது கேள்விக் குறி. மீகாங் ஆற்றுக் கழிமுகத்திலிருந்து படகில் மேற்குநோக்கி சியம்ரீப் வரை சென்ற தமிழ் வணிகர் கட்டாயம் புத்தாற்றின் விதப்பைப் புரிந்துகொண்டு இருப்பார். இயற்கைக் கால்வாய்கள் மூலம் நீர் பிரிந்து செல்வதையும் கண்டிருப்பார். நெல் வித்துகளைத் தமிழகம் கொணர்ந்த போது சரியான தருணத்தில் நீர் பாய்ச்ச வேண்டிய தேவையையும் கால்வாய் வெட்டையும் மனக்கற்பனையில் செய்து பார்த்திருப்பார். உலகில் மாந்தர் கண்டுபிடித்த ஒவ்வொரு நுட்பியலும் ஏதோவொரு இயல்நிகழ்வை புதுவிடத்தில், புதுக் காலத்தில் புதுப்போக்கில் செய்து பார்த்தது தானே?

அன்புடன்,
இராம.கி.