Sunday, June 30, 2019

கூட்டாட்சி அரசமைப்பில் மொழியுரிமைகள்


கருத்தரங்கம் - இடம் : உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை.
நாள் : 29.06.2019 - நேரம் : பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை

அரங்கில் கூடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.

வழக்குரைஞர் அவையில் பொறிஞனுக்கு என்னவேலை? ஒருவேளை தமிழும், தருக்கமும் அறிந்ததால், அழைத்தாரோ, என்னவோ? அறியேன்.  ஒவ்வொரு மொழிபேசுநர்க்கும் மொழியுரிமை என்பது இயல்பானதே. ஒரு பன்மொழி மாநிலக் கூட்டரசில் என்மொழியார் கணிசமாய் (8 கோடிப்பேர்) இருக்கும் நிலையில் ”என் வீட்டில் மட்டுமே என் மொழி, வெளியே மாற்று மொழி, பேசு” என என்னைக் கட்டாயப்படுத்தினால், எனக்குள் உரிமையுணர்வு எழத்தானே செய்யும்? மாந்தவியலின் படி நாடும் தேசமும் வேறானவை. India is a multinational country and not a one nation one country entity. When we got independence a major question between us and the British was solved. But the multinational question among the various Indian nations and the direction in which the country had to move after independence had remained unsolved. 72 ஆண்டுகளாய் இதுவே நம் அடிப்படைச் சிக்கல். மொழிவழி மாநிலங்கள் ஏற்படுத்தி இச்சிக்கலை ஓரளவு தீர்க்கமுனைந்தார் தான். ஆனால் அவக்கர நிலைமைக்கு (emergency state) அப்புறம் இந்திய ஒன்றியக் கருத்தீடு (Concept of Indian Union) என்னும் நிலை குலைந்தது. இப்போது இந்தியக் குடியரசு (Republic of India) என்றே எங்கும் எவரும் பேசுகிறார். பெரும் உளவியல் மாற்றம் இங்கு நடந்திருக்கிறது.

மொழியுரிமை என்பது அறிவும், ஏரணமும், வரலாற்றுணர்வும், கணிசமான மக்கள் தொகையும் இருந்தாற்றான் புரிபடும். இதில் மிகத்தேவையானது விழிப்புணர்வு. "நம்மைச் சூழ்ந்த உலகில் என்ன நடக்கிறது? மற்ற நாடுகள் எல்லாம் என்ன செய்கின்றன? நாம் முன்னேறுகிறோமா? பின்னேறுகிறோமா? தேங்குகிறோமா? நம்மிருப்பின் காரணமென்ன?- என்ற விழிப்பு நமக்கு ஏற்படா விடில் மொழியுரிமை புலப்படாது. நம்முடைய போகூழ், நெடுங்காலம் மொழி யுரிமை ஏதென நாம் உணராது இருந்து விட்டோம். குறிப்பாக 1980 களிலிருந்து மிகப் பின்தங்கி விட்டோம். தமிழும் தமிழரும் இப்படி இருப்பதை ஓர் நுட்பியற் (Technology) சிக்கல் மூலம் உங்களுக்கு முதலில் உணர்த்த விழைகிறேன்.

மொழியுரிமைக் கருத்தரங்கில் என்ன பேசவேண்டுமென நண்பர் அருணாசலத்தைக் கேட்டால், மின்னஞ்சலில் ஒருகோப்பை அனுப்பினார். அதைத் திறந்தால் படிக்கமுடியவில்லை. ஒருவேளை பாமினி வார்ப்போ (Bamini) என ஐயுற்று NHM Converter வழி சோதித்தால். அது பாமினியே தான். ஒருங்குறிக்கு (Unicode) மாற்றியபின் 8 குறிப்புகள் கிடைத்தன. பாமினி குறியேற்றச் சிக்கல் என்பது கல்லூரி ஆசிரியருக்கு, குறிப்பாய்த் தமிழ் ஆசிரியருக்கு, மட்டுமென இதுநாள் வரை எண்ணியிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. உங்களைப் போன்ற வழக்குரைஞருக்கும் அது உண்டு போலும். இச் சிக்கலைப் புரிய கொஞ்சமாவது இதன் வரலாறு தெரிய வேண்டும்.

கணித்திரைகளில் எழுத்துக்கள் தெரிகின்றனவே அவற்றைக் குறியேற்றம் (encoding) என்பார்.  தொடக்க காலத்தில் 1960/70 களில் அமெரிக்க ஆங்கிலத்திற்கு மட்டுமே ASCII 7 மடைக் குறியீடு (128 இடங்கள்) எழுந்து. கணிவழி உலகையே ஆட்டிப்படைத்தது. ”ஆங்கிலத்தை இப்படியே விட்டால் நாம் என்னாவது?. நம் மொழிகளும் குலையுமே?. அமெரிக்கரோடு போட்டியிட்டு நம் மொழிகளுக்கு உரிமை பெறுவோம்” என்ற இரோப்பியர் 1970/80 களில் 256 இடங்கள் கொண்ட, extended ASCII எனும் 8 மடைக் குறியீட்டை உருவாக்கி. தம் மொழிகளுக்கு வேண்டியதைச் செய்துகொண்டார்.

நாமோ, அதுபோல் தமிழில் எதிர்காலப் பயன்பாட்டிற்காக ஆயுத்தமாய் எதுவுஞ் செய்யவில்லை. 65-67 மொழிப் போராட்ட உச்சத்தின்பின், பொது வாழ்வில் ”தமிழ்வாழ்க” வென முழக்கமிட்ட கழகங்களே நிலைத்தன. ”தமிழை இனி இவர் பார்த்துக்கொள்வார்” என நாமெல்லாம் மெத்தனமாய்க் காலங்கழித்தோம்.  இவரும் 5 ஆண்டுகள் ஆர்வத்தோடு ஏதேதோ செய்தார். 71-72 க்கு அப்பறம் கழகம் உடைந்தது, ஊழல் பெருகியது. அதன் விளைவாய், தமிழக அரசோ, தமிழறிஞரோ, ஆர்வலரோ, தம்மைச்சுற்றி உலகில் நடப்பது அறியாதிருந்தார். பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கமெனப் பொழுதுகள் கழிந்தன. ஆங்கில ஆதிக்கத்திலிருந்து வெளிவர, உலகோர் முயல்கையில். அதிகாரப் போதையில் கழகத்தார் ஆழ்ந்தார். தமிழுரிமைகள் அம்போவாயின. 2 கழகத்தாரும் ஆட்சியில் தமிழ், நீதிமன்றத்தில் தமிழ், கோயில்களில் தமிழ், கல்வியில் தமிழ், பொதுவழக்கில் தமிழ் என்று குறிக்கோள்களைத் தூக்கிக் கடாசித் “தமில் வால்க” சொல்லத் தொடங்கினார். இன்றுவரை அது மாற வில்லை. அண்ணன்-தம்பி சண்டை தான் நம்மூரில் பெருவலமாயிற்றே? 5 ஆண்டு அண்ணன், 5 ஆண்டு தம்பி என மாறிமாறி நாட்டாமை ஆனதுதான் மிச்சம். ஊழல் பெருத்து 47 ஆண்டுகள் ஓடிவிட்டன. தமிழ் இணையக் கல்விக் கழகம், ஒருசில அரசாணைகள் தவிர, அரசின்வழி பெரிதாய் தமிழ்க் கணிமைக்கு ஏதும் நடக்கவில்லை.

இவ்வோட்டத்தின் நடுவில் வெளியூர்த் தமிழர் ஒரு மூலையில் இயங்கித் தான் இருந்தார். 1980களில் ஈழத்தமிழரால் செய்யப்பட்ட பாமினி வார்ப்பு எழுந்தது. இதுவும் எண்மடைக் குறியீடே. (முதல் 128 இடங்களில் ஆங்கிலக் குறியீடுகள்;  பிந்தைய 128 இல் தமிழ்க் குறியீடுகள்.) இனப் படுகொலையால் உலகெங்கும் சிதறிய ஈழத்தமிழர் தமக்குள் செய்தி பரிமாற்றிக்கொள்ள உருவான வார்ப்பு இதுவாகும். மின்னஞ்சல் பரிமாற்றத் தேவை (demand) ஈழத் தமிழருள் எழுந்து, இதற்கான அளிப்பை (supply) உருவாக்கித் தமிழ்க்கணிமை நோக்கி நகர வைத்தது. ஒருபக்கம் பேரழிவேற்பட்டு, கொடுமை நடந்தபோது, அதிலிருந்து மீள, உறவுகளை ஒட்ட வைக்க, தமிழ்க் கணிமை உருவானது. உலகின் பல்வேறு போர்களால் ஏற்பட்ட அறிவியல்/ நுட்பியல் வளர்ச்சி போலவே, ஈழப்போரின் குழந்தையாய்த் தமிழ்க்கணிமை கிடைத்தது இதைத் தமிழர் யாரும் மறக்கக்கூடாது.

தமிழ்க்கணிமை நுட்பம் தமிழரின் ஒரு சாராரால் மட்டுமே எழவில்லை. ஈழம் தவிர்த்த மற்றநாட்டுத் தமிழரும் வாளாயிருக்கவில்லை. பல்வேறு வார்ப்புகள் எழுந்தன. முடிவில் 1997-99 இல் பெரும்பாலான உலகத் தமிழர் தகுதரக் (TSCII) குறியீட்டிலும், ஈழத் தமிழர் பாமினிக் குறியீட்டிலும் ஒருங்கு இணைந்தார். தமிழகமோ இக்காலத்தில் தடுமாறியே இருந்தது. பின் தமிழகத் தரமாய் TAB/TAM  குறியீடு எழுந்தது. தமிழகத் தாளிகைகளும், பல வெளியீட்டாளரும் 100 வகை எண்மடைக் குறியீடுகள் புழங்கியிருந்தார். இணையமெங்கும் ஒரே குழப்பம். 100 வித எழுத்துருக்களைக் கணிக்குள் இறக்க வேண்டியிருந்தது. இணையத்துள் ஒரு ”தமிழ்” இல்லாது ஓராயிரம் ”தமிழ்”கள் இருந்தன. எதையும் உடனே படிக்க, எழுத, படியெடுக்க, பரிமாற, திருத்த, சேமிக்க முடியாத நிலையிலிருந்தோம்.  நம் ஒற்றுமைக் குறைச்சல் தான் உலகறிந்த விதயமாயிற்றே?

இதற்கிடையில்  1987 க்கு அருகில் CDAC நிறுவனஞ் செய்த ISCII யின்  8 மடைக் குறியீட்டை 16 மடையின் பின்புலமாய் நடுவணரசு ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு (Unicode Consortium) அனுப்பியது. இரு பரிமானச் சதுரத்தால் முப்பரிமானக் கனவத்தைச் (cube) செய்யமுடியுமோ? நம்மொழியில் உயிர், மெய், உயிர்மெய் எனத் தனியமைப்பு இருந்தது. இரோப்பிய எழுத்துகளிலோ வெறும் உயிரும். மெய்களும் மட்டுமேயுண்டு. இரோப்பாவில் செய்த அடவை (design) இந்திய மொழிகளுக்குப் பயன்படுத்தியதே முதற்கோணலாகும். தப்புந் தவறுமாய்  உயிர்மெய் எழுத்துகளை உடைத்து, கால், கொம்பு, சுழி, கொக்கி என்று சினையுறுப்புகளை அடிப்படையான character-களாக்கி, அதன்மேல் எழுத்துக்களைக் கட்டி அதற்கும்மேல் இந்திய மொழிகளை ஒருங்குறி நுட்பம் கட்டுகிறது. குறைகள் கொண்ட அதன் செயற்பாட்டை எப்படியோ சரிசெய்தார். நம்மூர் மொழியுரிமையை ஒருங்குறியார் மதித்து இருந்தால், உயிர், மெய், உயிர்மெய் ஆகியவற்றை ஒருங்கிணைத்துப் புத்தம்புது அடவில் அணி முறையில் (matrix) 16 மடைக் குறியீட்டைச் செய்திருக்கலாம். இதற்குத் தான்  மொழியுரிமை விழிப்புணர்வு வேண்டுமென்றேன். 10, 15 ஆண்டு கழித்து ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் நாம் போனபோது, “முன்னரே ஏன் வரவில்லை? தூங்கினீரா?” என்று கேட்டார்.

உண்மையே. 16 மடைக் குறியேற்றத்தினுள் நாம் காலங் கழித்தே விழித்தோம். நம் உயிர்மெய்க் கருத்தீட்டைச் சரியான படி ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு உரைக்கவில்லை. தமிழுக்கு ஒவ்வாத ISCII குறியீட்டைக் கொண்டே 16மடை ஒருங்குறி செய்யப்பட்டது. நாளாவட்டத்தில் வணிக வல்லாண்மை கொண்ட ஒருங்குறிச் சேர்த்தியம் (உலகத் தர நிறுவனமான) ISO வின் அனைத்துநாட்டுப் பங்களிப்புடன் தமிழெழுத்தை நாட்டாமை செய்தது. இப்போது நம் மொழியின் உரிமை இந்திய நடுவணரசிடங் கூட இல்லை. அப்படியுள்ளதாய் நம்மில் பலர் எண்ணிக்கொள்கிறோம். அதுதவறு. எல்லா இந்தியமொழிகளுமே ஒருங்குறிச் சேர்த்தியத்திடம் மாட்டிவிழிக்கின்றன. ஒரு புதுவெழுத்தை நுழைக்க வேண்டுமா, பழைய கிரந்தத்தைத் தவிர்க்க வேண்டுமா, நீங்களாய் ஏதுஞ் செய்யமுடியாது, அவர் செய்தால். நீங்கள் அடிமை போல் அதை ஏற்றுக் கொள்ளலாம். இந்திய அரசும் அப்படித்தான் இருக்கிறது. ” இது புதுக் கிழக்கிந்தியக் கும்பணியா?” என்று கேட்டால்,  ஏறத்தாழ அப்படித் தான்.

காட்டாக நீங்களெலாம் படிக்காத, தமிழகப் பள்ளிப் பொத்தகங்களிலேயே இல்லாத, ஒரு ஶகரம் 0BB6 எனும் இடத்தில் ஒருங்குறிப் பட்டியலில் குடி இருக்கிறது. ஜ, ஸ, ஷ, ஹ என்று 4 கிரந்த எழுத்துகள் மட்டுமே தமிழோடு ஒட்டியதாய் நீங்கள் எண்ணலாம். உண்மையில் ஶ் ஶ ஶா ஶி ஶீ ஶு ஶூ ஶெ ஶே ஶை ஶொ ஶோ and ஶௌ எனும் 5 ஆவது கிரந்த எழுத்து வரிசையும் இருக்கிறது. அதற்கு ஒப்புதல்கொடுத்து உட்காரவைத்தது ஒருங்குறிச் சேர்த்தியமே. தடியெடுத்தவன் தண்டல்காரனாய், உலகிலுள்ள எவனும் தமிழ் எழுத்தை என்னவெனுஞ் செய்யலாம். ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு வேண்டியது எல்லாம் அச்சின் வழியாய் வெளிவந்த ஒரு கழிவேற்றமே  (printed salvation). தமிழக அரசோ, தமிழ் மக்களோ இந்த எழுத்துக்களை நுழைக்க வில்லை. இணையத்தில் நாளொரு பொழுதும். பொழுதொரு வண்ணமுமாய் இவ்வரிசையில் இப்போது சொற்கள் வளர்கின்றன. இதுபோல் தமிழெழுத்தை எப்படி வேண்டுமாயினும் ஒருங்குறியார் மாற்றலாம், குலைக்கலாம், பெருக்கலாம்.  நாமும் உப்பிற்குச் சப்பாணியாய் ”ஆமாஞ்சாமி” போடலாம்.

ஒருங்குறியேற்றத்தில், இரோப்பிய மொழிகளை ஒப்பிடுகையில் இந்திய மொழிகளைக் கணி கையாளும் நேரமும் மிகுதி, சேமிக்கும் கொள்ளளவு (memory), கையாளும் செலவு எல்லாமும் மிகுதி. காலகாலத்திற்கும்  நாம் 2 ஆம் தரமாய் இருப்போம்.  நம் மொழியுரிமைகளும் 2 ஆம் அளவில் அமையும். ”எசமான், பாத்துச் செய்ங்க” என்று கேட்கலாம். இதற்கு மாறாய் அனைத்து எழுத்துக் குறியேற்றம் (TACE) என்ற ஒன்றைப் பயன்படுத்தினால் கணி கையாளும் நேரம் குறைவு. சேமிப்புக் கொள்ளளவு குறைவு, கையாளும் செலவுங் குறைவு. இத்தகைய TACE ஐ Unicode consortium இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதெல்லாம் கண்டு உணர்ச்சிவயப்பட்டு வெறுமே புலம்புவதில் பயனில்லை, நாம் ஒருங்குறியை ஒதுக்கிவிடவும் முடியாது எவ்வளவு குறைப்படினும், நூற்றுக்கணக்கான உலக எழுத்துகளுக்குப் பரவிய ஒருங்குறியேற்றத்தை வேறுவழியின்றி ஏற்கவேண்டியுள்ளது.  தெரிந்தோ, தெரியாமலோ, அவருக்கு வாக்கப்பட்டாயிற்று. இனி என்ன செய்வது?

இனி TACE தொடர்பான இன்னொரு சிக்கலுக்கு வருகிறேன். நம் அச்சுத் தொழில் காரணமாய் அனைத்தெழுத்துக் குறியேற்றத்தையும் (TACE) பயன் படுத்தச் சொல்லித் தமிழக அரசு 2009 இல் ஆணை பிறப்பித்தது. இந்த TACE ஐ ஒருங்குறிச் சேர்த்தியம் ஏற்கவேண்டுமெனில், TACE இல் சில இலக்கம் பக்கங்களுக்காவது நம்மிடம் ஆவணங்கள் இருப்பதாய்க் காட்டி,. அவற்றைக் காப்பாற்றும் தேவையை ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு நாம் உணர்த்த வேண்டும். இதற்காகத் தமிழக அரசு TACE ஆவணங்களை உருவாக்க வேண்டும். தமிழக அரசோ வெறும் வாய் வார்த்தையிலேயே நிற்கிறது. 10 ஆண்டுகள் ஆகியும் இன்னும் உருப்படியான செயல்கள் செய்யவேயில்லை. 10 ஆண்டுகள் முன் தமிழர் தூங்காது இருந்திருப்பின், கட்சிச் சண்டையால் உள்ளூரில் தடுமாறாது இருந்திருப்பின், இன்று ஒருங்குறிச் சேர்த்தியமே அனைத்தெழுத்துக் குறியேற்றத்தை ஏற்க வைத்திருக்கலாம். நம் கணித் திரைகளில் ஏற்படும் மீள்தருகைச் சிக்கலை (rendering problem) முற்றாய்த் தீர்த்திருக்கலாம்.

சரி, வேறுவழியின்றி ஒருங்குறியை ஏற்குந்தேவை ஏற்பட்டது. அதையாவது  முழுக்கச் செய்தோமாவெனில் இல்லை. கடந்த 10/15  ஆண்டுகளாக எண் மடைக் (8 bit) குறியீட்டுப் பயன்பாடு குறைந்து, நம்மிற் சிலர் 16 மடைக் (16 bit) குறியீட்டுக்கு வந்துவிட்டோம். பல்வேறு தமிழ் ஆவணங்களைக் கணித் திரையில், அச்சியில், தொடர்பாடலில், மொழியியல் அலசலில், எந்திர மொழிபெயர்ப்பில், பேச்சிலிருந்து பனுவலுக்கும் பனுவலிலிருந்து பேச்சுக்கும் மாற்றுமளவிற்கு வளர்ந்துள்ளோம். இதன் பின்னும் பாமினி போன்ற 8 மடைக் குறியேற்றத்தில் நம்மில் பலர் ஆழ்ந்து தேங்குவது எப்படி? இணையமெங்கும் ஒருங்குறி பழகையில் அச்சடிக்கப் பாமினி பயிலுவீரா? ”தமிழாவணங்களில் ஒருங்குறியோ, அல்லது TACE எனப்படும் அனைத்தெழுத்துக் குறியேற்றமோ தான் இனிப் பழகவேண்டுமெ”ன 2009இல் தமிழக அரசே அரசாணை பிறப்பித்த பின்னும் பழகுவீரா? ”மற்ற பிள்ளைகள் ஏழாப்பு, எட்டாப்பு போனாலும் நாங்க ஒண்ணாப்புலே இருப்போம்”னா எப்படி?

நீங்கள் மட்டுமில்லை. அரசின் செயலக அதிகாரிகளும் ஊழியருங் கூட அரசு ஆணையைத் தூக்கியெறிந்து “வானவில்” எனும் தனியார் குறியீட்டைத் தொடர்ந்து பழகுகிறார். வானவில்லிற்கும் அரசினருக்கும் என்ன connection- ஓ தெரியாது. அதேபோல் அரசாதரவு பெற்ற பல்கலைத் தமிழ்த் துறைகளிலும் அரசாணையைத் தூக்கிக் கடாசித் ”உசிதம்” போல் பாமினி பழகுகிறார். தமிழ்த் துறையாரின் ஆய்வரங்க அழைப்புகளில் (இக் கருத்தரங்கையும் சேர்த்து), “பாமினி எழுத்துருவில்” செய்தியனுப்பியும், கட்டுரைகள் அனுப்பச் சொல்லியும் தொடர்ந்து கேட்கிறார். 10 வருசமாகியும் நம்மில் பலரும் திருந்தவேயில்லை. தமிழக அரசாணை செயற்படவேயில்லை. மொழி யுரிமை, மொழிக் கொள்கை என்பன பிறகு நமக்கு எப்படிப் புலப்படும், புரியும்? சொல்லுங்கள்.

இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கையில், அரசின் அமைச்சரோ, இந்திய ஆட்சிப் பணியினரோ, பெரும் அதிகாரிகளோ இல்லாது, அரசுச் செயலகத் தட்டச்சரே அரசின் மொழிக்கொள்கையை நிர்ணயிப்பதாய் நான் சொல்வது உண்டு. அதுபோல் தான் நாடெங்கிலும் உள்ள DTP கூடங்களும், அச்சுக் கூடங்களுமே நம்மூர்த் தமிழ்த்துறைகளின், வழக்குரைஞர்களின், ஆவண வெளிப்பாட்டை வழி நடத்துகின்றன. எத்தனை பேர் இன்னும் நுட்பியல் பூச்சாண்டியில் தடுமாறுகிறார், தெரியுமோ? நீதிமன்றங்கள் சுற்றியுள்ள DTP கூடங்கள் செய்வது அப்படியே இன்னும் தொடர்கிறதா, இல்லையா? நம் நாட்டில் பொள்ளிகைகளை (policies) யார் நிர்ணயிக்கிறாரென இப்போது புரிகிறதா? இந்நுணுக்கத்தை, நுட்பியலைக் கவனியாத தமிழர்க்கு, சிக்கல் எப்போதும் வந்துசேரும். பின் எப்படி மொழியுரிமை பற்றி நாம் பேசமுடியும்?

தமிழ்த்துறைகளிலும், பல குழுக்களிலும், இப்படி நடப்பது சோம்பலா? அறியாமையா? விதண்டா வாதமா? தெரியாது. தமிழ்க்கணிமைப் போக்கறிந்து தான் செயற்படுகிறோமா? அன்றி நுட்பியற் கல்லாமையா? ஓர்ந்து பாருங்கள். நுட்பியல் மறுத்து உரிமைகளைப் பேசமுடியுமா? நடவடிக்கைகள் தடுமாறாதா? செல்பேசியை, கணியை, மின்னியல் மாற்றத்தை ஒதுக்கி நாம் இயங்கமுடியுமா? இங்குளோர் என்மேற் சினங் கொள்ளாதீர். அருள்கூர்ந்து உள்ளமையோடு (realistic) பொருத்திப் பாருங்கள். நுட்பியலுக்கிணங்கத் தமிழார்வலர் நடந்துகொண்டால் மட்டுமே தமிழ்க்கணிமையில், தமிழுரிமைச் சிக்கலில், நாம் புதிதாய் ஏதாவது செய்யமுடியும். வெறுமே அரசை மட்டுங் குறைகூறிப் பயனில்லை.  குறை நம்மிடமும் உள்ளது. ஊரே திரண்டு வடம் பிடித்தால் தான் தேர் நகரும்.

இப்பொழுது கணிவழிப் பரிமாற்றத்திற்கு ஒருங்குறியையும், அச்சாவணப் பயன்பாட்டிற்கு அ.எ.கு/TACE (அனைத்து எழுத்துக் குறியேற்றம்/ Tamil All Character Encoding) பயன்படுத்துவதும் இன்றியமையாத் தேவைகள் இவற்றை மறந்து, தமிழரிற் கணிசமானோர் எண்மடைக் குறியேற்றமே புழங்கிக் கொண்டிருந்தால் நம் முன்னேற்றம் தள்ளித்தள்ளியே போகும். முன்னே வராது பின்தங்கியே இருப்போம். (நான் எண்மடைக் குறியேற்றம் பயில்வேன்  நீங்கள் NHM Converter ஐ வைத்து மாற்றிக்கொள்ளுங்கள் என்பது ஒருவகைச் சண்டித்தனம்.) நண்பர்களே! அருள்கூர்ந்து மாறுங்கள். ஊர்கூடித் தேர் இழுப்போம்.

இதுவரை நுட்பியற்சிக்கல் பற்றி நிறையவே பேசிவிட்டேன். எனவே அதை விடுத்து, நம்மூரின் மொழியுரிமையற்ற நிலைகளைச் சொல்ல விழைகிறேன்.

முதலில் வருவன அரசாவணங்கள், சட்டங்கள். தமிழக அரசினால் இவை ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிட படுகின்றன. இவற்றில் ஆங்கில ஆவணத்திற்கே முகன்மையென நான் கேள்விப்பட்டேன். தமிழாவணங்கள் நீதிமன்றங்களில் சட்டமதிப்புக் கொண்டவை அல்லவாம். இது உண்மையா, அல்லவா என்பதை நீங்கள் தாம் சொல்லவேண்டும். கொல்லன் தெருவில் நான் ஊசி விற்கக் கூடாது. இது மெய்யெனில், தமிழுக்கு எங்கே மொழியுரிமை உள்ளது? நீதிமன்றங்களில் தமிழில் வழக்காட அனுமதியுண்டா? இந்திக்கு 4 மாநிலங்களில் இது முடியுமெனில், தமிழுக்கு ஏன் உரிமைதர மறுக்கிறார்? வழக்குமன்றங்களில் தமிழுரிமை ஏன் சிக்கலாகிறது?

சரி, கல்வித்துறைக்கு வருவோம். இவ்விதயம் சற்று நீண்டது. நான் கேள்விப் பட்டவரை, தமிழ் நாட்டின் பல்கலைக்கழகங்களில் ஆங்கிலமே ஆட்சிமொழி. ஒரே விதிவிலக்காய்ப் பாரதிதாசன் பல்கலையில் பேரா. பொன்னவைக்கோ இருந்தவரை தமிழ் செல்லுபடியானது. அவருக்கு அப்புறம் ”பழைய குருடி கதவை திறடி” ஆனது. ஏனிது முடியவில்லை?. இங்கெலாம் தமிழ்க்கல்வி ஆவணங்கள் முன்னுரிமை கொள்ளாதாம். காட்டாக பாடத்திட்டங்கள், விண்ணப்பங்கள், வேண்டுகோள்கள், கல்வித்துறை அறிவிப்புகள், பல்கலைக் கழக ஆணைகள் என எல்லாவற்றிலும் ஆங்கில வடிவமே செல்லுபடி ஆகுமாம்.  தமிழுக்கு எங்கே உரிமையுள்ளது?

பல்கலைக் கழகங்களிலிருந்து இன்னொன்றைச் சொல்கிறேன். இளம் பொறியியல், இளநுட்பியல், முதுஅறிவியல், முதுகலை, முதுபொறியியல், முதுநுட்பியல், ஆய்வியல் நிறைஞர், ஆய்வியல் முனைவர் ஆகிய பட்டங்களின் புறத்திட்ட அறிக்கைகள் (project reports), ஆய்வேடுகள் (theses) என எல்லாமே (தமிழ்த்துறை தவிர) ஆங்கிலத்தில் இருக்கவேண்டும் நடைமுறை இன்றுமுண்டு. தமிழில் எதையும் சொல்லத் தெரியாமலேயே தமிழ்நாட்டில் பட்டம் பெறலாம். அப்புறம் எங்கே மொழியுரிமை உள்ளது? மற்ற நாடுகளிலோ குறைந்தது 5 பக்கமாவது அவ்வந்நாட்டு மொழிகளில் நூற்சுருக்கம் இருக்க வேண்டும். இக்கட்டாயம் இல்லெனில் அம்மொழிகளின் இருப்பு எப்படி நிலைக்குமென்றே எல்லா நாடுகளிலும் இப்படிச் செய்கிறார். இப்போது சொல்லுங்கள். தமிழின் மொழியுரிமை  எங்கே போயிற்று? இது மொழியுரிமை மட்டுமல்ல. தமிழ் படித்தவனுக்கு வேலைவாய்ப்பு. எத்தனை பேர் இளங்கலை (தமிழ்) படித்துவிட்டு வேலையில்லாதிருக்கிறார். பல கல்லூரிகளில் தமிழ்த் துறை மூடப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமோ?

அடுத்தது கல்விக்கொள்கை. அண்மையில் வெளிவந்த இந்திய நடுவணரசின் புதிய கல்விவரைவுத் திட்டம் மிகக் கொடூரமானது. ஒருகாலத்தில் அரசு அமைப்பு யாப்பின்படி, கல்வி என்பது மாநில ஆதிக்கத்திற்கு உட்பட்டது. அப்படியிருந்ததை அவக்கரநிலை காலத்தில் concurrent list இற்கு மாற்றினார். அண்மையில் வெளிவந்த கல்விக்கொள்கையின் வரைவுத்திட்டமோ நடுவணரசே எல்லாவற்றையும் செய்யத் தூண்டுகிறது. இந்தக் கொள்கை மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தவில்லை. பன்மொழிக் கொள்கையைப் பரிந்துரைக்கிறது. இளஞ்சிறார் தமிழ், ஆங்கிலம், இந்தி, சங்கதமென்று பல மொழிகளைப் படிக்கச்சொல்லிக் கட்டாயப் படுத்துகிறது. நமது மொழியுரிமைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. கூடவே இளஞ்சிறாரை 3, 5, 8, 12 ஆம் வகுப்புகளில் வடிகட்டுவேம் என்கிறது. மறு படியும் குலக்கல்வியா என்று அச்சப்பட வைக்கிறது. எங்கு பார்த்தாலும் “ஒரே” என்ற கூக்குரல் இப்போது பெரிதும் ஒலிக்கிறது. ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் ,ஒரே தேர்தல், ஒரே ration card. இந்தப் பட்டியல் முடிவில்லாது போகின்றது.  இந்திய ஒன்றியம் ஒற்றைக் குடியரசாய் மாறுவதால் ஏற்படுங் குழப்பமிது.

484 பக்கக் கல்விக் கொள்கையையே நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். இந்த வரைவுத் திட்ட்த்தைப் படித்து மறுவினை செய்வதற்கு மாறாய், அதன் ஓரத்தை இக்கருத்தரங்கு கிடுக்குவதில் (criticize) அவ்வளவு பயன் விளையாது ஐயா! மொழிக்கொள்கை என்பது கல்விக்கொள்கையில் ”துக்குணூண்டு சங்கதி”. இதை எதிர்க்க வேண்டும் தான். ஆனால் மலைமுழுங்கி மகா தேவனான கல்விக் கொள்கையைக் விவாதப்பொருள் ஆக்காமல் எப்படி? வழக்குரைஞர்களே! பென்னம்பெரிய கல்விக் கொள்கையைப் படியுங்கள். 6 மாதக் கலந்தாய்வு நேரமாவது அதற்குக் கிடைக்கவேண்டும். இப்போராட்டக் குழு அதற்கு முயலவேண்டும்.

இன்னொரு பார்வை. நாங்களெல்லாம் 1960 களில் பள்ளியில் படித்தபோது ஆறாம் வகுப்பில் தான் A,B,C.D படித்தோம். பள்ளியிறுதி வரை தமிழ்வழி படித்தோம். பேராயக்கட்சி ஆட்சியில் இதுவே நடைமுறை. தமிழ் நாடு எங்கணும்  13 பள்ளிகளே ஆங்கிலவழிப் பள்ளிகள். இப்போதோ 7000/8000 ஆங்கிலவழிப் பள்ளிகள். அரசுப்பள்ளிகளுங்கூட இப்போது ஆங்கிலவழி வகுப்பை வைத்துக்கொள்ளலாம். (நண்பர் ஒருவர் சொன்னார். சென்னையில் 100க்கு 95 பள்ளிகளில் ஆங்கிலவழிப் பள்ளிக்கூடங்கள் உண்டாம். இன்னும் 5 ஆண்டு காலத்தில் முற்ரிலும் ஆங்கிலவழிக்கு எல்லாப் பள்ளிகளும் மாறி விடும். அதிலிருந்து 10 ஆண்டில் தமிழ்நாடு முழுதும் மாறிவிடும். இதுபற்றி ஒரு அரசியல் கட்சியும் பேசவில்லை. எல்லாரும் வெறும் வாய்ப்பந்தல் போட்டுக் கொண்டிருக்கிறார்.)

,அக்காலத்தில் இந்தி விருப்பப் பாடம். 8 ஆவதில் தான் இந்தி படிக்கத் தொடங்குவோம். இந்தியில் தேர்வது கட்டாயமில்லை. படிப்பில் எந்தச் சிக்கலையும் நாங்கள் காணவில்லை. விருப்பப்பட்டோர் கல்லூரி போனோம், பெரிய ஆட்களாயும் ஆனோம். ஆங்கிலம் பின்னால் படித்ததால் எக்குறையும் எங்களுக்கு எழவில்லை. எங்களுக்கு நாட்டுப்பற்று ஒன்றுங் குறையவில்லை. இப்படி ஒரு கல்விமுறை நன்றாய் இருந்ததைச் சீரழித்து, இப்போது ஏன் ஆங்கிலத்திற்கும் இந்திக்கும் நாம் தாசனாகிறோம் என்பது புரிபடவேயில்லை. ஆழ்ந்து ஓர்ந்தால் இது இந்தியாவை ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு சந்தை என்றாக்கும் முயற்சி இது என்பது நன்றாகவே புலப்படுகிறது, .

1972க்குப் பின் தமிழகத்தில் எப்படி ஆங்கிலவழிப் பள்ளிகள் எப்படி முகன்மையுற்றன? ஆங்கிலத்தை மழலையர் பள்ளிகளில் படிக்கவில்லை யென்றால் எதிர்காலமே போகுமென்று எப்படி எண்ணத் தலைப்பட்டார்? (Mummy, daddy என்பதில் எப்படி எல்லோரும் மகிழ்ந்துபோகிறார்?) ஒரு பெரும் உளவியல் மாற்றமே 50 ஆண்டுகளில் நம் மக்களிடத்தே நடந்துள்ளதே, அது ஏன்?. வெறும் முழக்கங்கள் இடுவதில் இனிமேல் பயனில்லை. பெரும் மூளைச்சலவை இங்கு நடந்து முடிந்திருக்கிறது. அதை எப்படித் தகர்ப்பதென்று பாராமல் மொழியுரிமை பேசினால் எப்படி? அரசுப்பள்ளிகளின் பாடத்திட்டத்தை மடிக்குழை (மெட்ரிக்குலேசன்) பாட்த்திட்டத்தோடு ஒன்றாக்கியதால் எதுவும் இங்கு முடிந்துவிடவில்லை. ஆங்கிலப் பித்து இன்னும் முற்றி CBSE பள்ளிகள் பெருகுகின்றன. பணம் படைத்த பகுதியினர் ஆங்கிலவழி படித்தால் நாங்கள் ஏன் ஆங்கிலவழி படிக்க்க்கூடாதெனும் சாதியவாதமும் இங்கெழுகிறது. கட்சித்தலைவர் வீட்டுப் பிள்ளைகள் இந்தி படித்தால் நாங்கள் ஏன் இந்தி படிக்கக்கூடாது? – என்று இன்னொரு வாதமும் எழுகிறது. மொத்தத்தில் இந்த உளவியல் மாற்றம் நடந்தற்கு ஊழலே அடிப்படைக் காரணம்.  நம்மைக் கெடுத்தது. குமுகயமெங்கணும் விரவிய ஊழலே காரணம். ஊழலைத் தகர்க்காது இதைச் சரிசெய்ய முடியாது.

ஒருசில ஓய்வுபெற்ற ஆங்கிலவாசிரியர் கல்வித்துறைக்குள் புகுந்து மடிக்குழை (மெட்ரிக்குலேஷன்) பள்ளிகளுக்கு ஒப்புதல் வாங்கினார்  கையூட்டு கொஞ்சங் கொஞ்சமாய்ப் பெரிதாயிற்று. இயல்பாக  இருந்த 13 முடிவில் 7000/8000 ஆயிற்று. நம் எதிர்காலத்தையே கல்வித்துறையின் ஊழல் குலைத்தெறிந்திருக்கிறது. மனம் வேதனையாகிறது. 1962/67களில் இருந்த அக்காலப் பேராயக் கட்சி கூட தமிழுக்கு நல்ல சேவை செய்தது போல் இப்போது தோன்றுகிறது. அவர் செய்த பணிகளை இப்போதும் தொடராது உள்ளோம். பின்தங்கியும் போனோம்.  எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்றுதான் அன்றிருந்தது. உண்மையிலேயே அவர் முயன்றார். கல்லூரியில் தமிழ்ப் பாடமொழியாக, ஏராளமான துறைப்பொத்தகங்கள் அப்போது வெளிவந்தன. 1967க்கு அப்புறம் கல்லூரிகளில் தமிழ்ப் பாடமொழியாகும் என்றார் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம். ஆலயங்களில் தமிழில் அர்ச்சனைப் பழக்கம் தொடங்கியது. வழக்கு மன்றங்களில், அரசின் செயலகத்தில், தமிழ் ஆட்சி மொழியாகும் என்றார். ஆனால் பேராயம் 1967க்கு முன் செய்ததை 72 க்கு அப்புறம் கழகங்கள் தொடரவேயில்லை.

கல்வியை அடுத்துப் பொதுவெளிக்கு வருவோம். ஆங்கிலத்தின் முன்னுரிமை தனியார் அலுவங்களிலும், அரசு அலுவங்களிலும் இன்றிருப்பதற்குக் காரணம் என்ன? எங்குமே தமிழ் நடைமுறையில் இல்லை. கடைவீதியில்  தமிழ் இருக்கிறதா? ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, அல்லது ஒரு மின்னிக்கருவி (electronic equipment) வாங்குகிறீர்கள். அந்தப் பெட்டியில் கருவியைக் கையாளும் கையேடு தமிழில் இருக்கிறதா? ஏன் தமிழக அரசு அதைக் கட்டாயம் ஆக்க வி்ல்லை எந்தவொரு அரபு நாட்டிலும், தென்கிழக்கு ஆசிய நாட்டிலும் அந்த ஊர்மொழியில் கையேடு இல்லையென்றால் பொருளை விற்க முடியாது. கடைகளில்தரும் பெறுதிச் சீட்டுகள் (receipts) ஏன் தமிழிலில்லை? நிறுவனங்களின் பொதுத்தொடர்பு ஏன் தமிழிலில்லை? இங்கு விற்கப்படும் கணிகள், மடிக்கணிகள், செல்பேசிகள் ஏன் Tamil enabled ஆகவில்லை? ஏன் கடைப்பெயர்கள் தமிழில் எழுதப்படவில்லை? இவற்றையொட்டி மொழி யுரிமை இல்லையா?

கூரையேறி கோழிபிடிக்கத் தெரியாதவன் வானமேறி வைகுந்தம் போக ஆசைப்பட்டானாம். அது மாதிரி இருக்கிறது நம் நிலை. ஏற்கனவே இருக்கும் சட்ட்திட்டங்களை வைத்தே பல செயல்களை நாம் செய்யலாம். இனிமேலும் கூட்டம்போட்டு, ”வியாக்கியானம்” செய்வதில் பொருளில்லை.  ”தமிழ் சோறு போடுமா?” என்ற கேள்வி நிலையை மாற்றுங்கள். “சோறு போடும்” என்று மக்களுக்கு உறுதி சொல்லுங்கள். அப்போது தான் ஆங்கில மோகம், இந்தி மோகம் மாறும்.   இந்த மாற்றங்களை அரசாங்கத்திற்கு எதிராக மட்டும் தான் செய்யமுடியும் என்றில்லை. அவருக்கு உணர்த்தியும் இதைச் செய்யலாம்.

நீங்கள் கேட்டிருந்த கேள்விகளுக்கான என் மறுமொழிகள்:

1. உலக மக்களால் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள மொழியுரிமைகளின் படி மும் மொழிக் கொள்கை சரியானதா?

சரியில்லை. பள்ளிக்கல்வி தாய்மொழியில், உலகைத் தொடர்பு கொள்ள ஆங்கிலம். மற்றவை அவரவர் விருப்பம்.

2. கூட்டாட்சி அமைப்பில் வாழும் பல்தேசிய இன மக்களின் மொழி யுரிமைகளை பாதுகாப்பது எப்படி?

இந்தியா பல்தேசிய ஒன்றியம் என்பதை மறவாது இருக்கவேண்டும். அவக்கர நிலைக்கு முந்தைய நம்முடைய பழைய யாப்பநிலைக்குப் போனாலே போதும். அதை முகன நிலைக்குக் கொண்டுவந்தால் போதும்.

3. மாநிலங்களில் செயல்படும் இந்திய நடுவணரசின் அலுவலகங்கள் அந்ததந்த மாநில மக்களின் மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை கூட்டாட்சி அரசமைப்புப்படி சரியானதா?

சரியே. நடுவணரசு அலுவங்கள் மட்டுமின்றி தமிழக அரசின் அலுவங்களும் ஆங்கிலவழி தான் பெரிதும் நடகின்றன. தமிழுக்கு முன்னுரிமை இன்னும் இல்லை. நடுவணரசின் குறையை மட்டும் பார்க்காது தமிழக அரசின் குறையையும் பாருங்கள்.

4. உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்ற நடவடிக்கைகளும் மாநில மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை சரியானதா?

சரியானதே! மாற்றமாநிலங்களில் நடைமுறைப்பட்ட்தை நாம் ஏன் செய்யக் கூடாது? இதில் நாம் ஏன் தயங்கிநிற்கிறோம்?

5. இந்திய நடுவணரசின் அலுவல் மொழியாக ஒரே மொழியாக இந்தி மொழி மட்டும் என்பது மக்களாட்சி மற்றும் கூட்டாட்சி அரசமைப்பு கோட்பாட்டின் சரியானதானா?

சரியில்லை. 22 மாநிலமொழிகளும் ஆட்சிமொழிகளாகவேண்டும்.

6. மூன்று மொழிகள் பயின்று தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டும் என்ற நிபந்தனை மாணவர்களின் கல்வியை பாதிக்குமா?

கட்டாயம் பாதிக்கும். மேலே மறுமொழி சொல்லியிருக்கிறேன்.

7. மும்மொழி பயிற்றுவிப்பு மாநில அரசின் கல்விச்செலவை விரையமாக்குமா?

விரையமாக்கும்.

8. தற்போதைய மொழிக் கொள்கை மற்றும் மும்மொழிக் கொள்கை மாநில மக்களின் தாய்மொழிகளின் வளர்ச்சிக்கு கேடு விளைவிக்கின்றனவா?

ஆமாம்.

அன்புடன், 
இராம.கி.

3 comments:

நனிநன்றியன் பெஞ்சமின் லெபோ said...

அறிஞர் பொறிஞர் இராம கி ஐயா அவர்களுக்கு
அன்பு வணக்கம்.
'கூட்டாட்சி அரசமைப்பில் மொழியுரிமைகள்' கட்டுரை படித்தேன்.
பொருத்தமான கருத்துக்களை அழுத்தமாகக் கூறி இருக்கிறீர்கள்.
ஒவ்வொரு கருத்தும் ஓராயிரம் பொன் பெறுமே!
உரியவர்கள் காதில் விழுமா ? பெரிய பயன் தருமா?

எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக
"”தமிழ் சோறு போடுமா?” என்ற கேள்வி நிலையை மாற்றுங்கள். “சோறு போடும்” என்று மக்களுக்கு உறுதி சொல்லுங்கள். அப்போது தான் ஆங்கில மோகம், இந்தி மோகம் மாறும்."
என்ற கருத்து ஏற்றமிகு கருத்து ; போற்றத்தக்க கருத்து ; மாற்றத்தை உருவாக்கும் கருத்து .
தமிழ்ப் பெரியார் ராமகி ஐயா வழி நின்று தமிழைப் பேணிக்காப்போம்.
அன்புடடன்
தமிழ்ப் பெரியார் வழி நிற்கும்
பெஞ்சமின் இலெபோ
பிரான்சில் இருந்து .

ruthraa e paramasivan said...


தமிழியல் சிந்தனைச் செல்வரே!

உங்கள் கணித்தமிழ் நுட்பியல் செறிந்த கட்டுரை மிக ஆழமானது.
அதை விட மிக மிகக்கூர்மையானதும் கூட.ஆங்கிலச்சொல்லுக்கு
நீங்கள் தரும் தூய தமிழ்ச்சொற்கள் மிகவும் உற்றுப்பார்க்க வைக்கும் "நுண்மாண் நுழைபுல"தன்மை கொண்டவை ஆகும்.
உங்கள் கட்டுரை கணி வெளியில் தமிழின் ஒரு நுண்வெளியைக் காட்டும் நுழைமுகம் ஆகும். அய்யா!உங்கள் தமிழ் ஆர்வ தமிழ் ஆய்வுத்திறன் எங்களுக்கு புத்துணர்வு ஊட்டுகிறது.
வளர்க உங்கள் தொண்டு.

மற்றும் மனம் திறந்த பாராட்டுக்களுடன்

ருத்ரா இ பரமசிவன்.

en valaipoo: oosiyilaikkaadukal.blogspot.com

https://oosiyilaikkaadukal.blogspot.com/

Anonymous said...

தமிழ் வழிக் கல்வி, சோறு போடும் என்ற நிலை உறுதியாக்கப்பட வேண்டும் என்றும் இதை மக்கள் உணருமாறு செய்ய வேண்டும் என்றும் கருத்து வெளியிட்டுள்ளீர்கள்; நன்றி. அதை இன்னும் செழுமைப்படுத்த வேண்டும் என்ற போக்கில், தமிழ்நாட்டில் அனைத்துக் கல்வியையும் தமிழ் வழியில் கற்றோருக்கு மட்டுமே தக்க வருவாயோடு அரசுப் பணியிலும் தனியார் பணியிலும் வாய்ப்பு உண்டு என்ற நிலை, தமிழ்நாட்டுச் சட்டப்படி உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தமிழ் வழியில் அறிவியலையும் மற்ற கலைகளையும் கற்றோர்க்குத் தமிழ்நாட்டில் முதன்மையான குமுக மதிப்பு உண்டு என்ற நிலையையும் உறுதி செய்ய வேண்டும். அதற்கான மக்கள் இயக்கம் நடத்தப்பட வேண்டும், உரிய அமைப்புக் கட்டுமானத்தோடு, தன்னலமற்றத் தமிழின மேம்பாட்டுத் தொண்டர்களால். அறிவார்ந்த தமிழர்களும் ஆற்றல் நிறைந்த தமிழர்களும் இணைந்து பெரும் திரள் மக்களிடையே இறங்கிப் பணி செய்யாமல் இனி உரிய மாற்றத்தைக் கொண்டு வரவே முடியாது என்பதை நாம் உணர்ந்தே ஆக வேண்டும்.