Thursday, July 25, 2019

பூரியர் - bourgeoisie

திருவள்ளுவராண்டு பற்றிய https://valavu.blogspot.com/2018/07/3.html என்ற பதிவையோ அல்லது https://groups.google.com/forum/embed/#!topic/minTamil/jLTQAeW5U_U என்ற பதிவையோ அருள்கூர்ந்து பாருங்கள். அவற்றில் பூரியர் என்பது பற்றிப் பேசுகிறேன். அப்பதிவைப் படிக்காமல் நான் சொல்ல வருவது புரியாது. இருப்பினும் தேவைப்பட்டதை இங்கு 2 முன்னிகைகளாகப் பிரித்து வெட்டி ஒட்டுகிறேன்.

முதல் பகுதி:
--------------------------------------------
வரைவில்மகளிர் என்பது நட்பு வகைப்பாட்டின்கீழ் திருக்குறள் பொருட்பாலில் ஏழுறுப்புக் கொள்கையிற் பேசப்படுகிறது. அரசரும் அரசரைச் சேர்ந்தவரும். இன்னின்ன வகையில் நட்பு தொடர்பாய் நடந்துகொள்ளலாம்  என்பது இங்கே உரைக்கப்படுகிறது. அதில் வரைவில்மகளிரின் நட்பு பூரியர்களுக்குக் கூடாத நட்பென்று குறள் சொல்லுகிறது. 

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு

இங்கே கள் எனும் விகுதி பூரியருக்கேன் வந்தது? பூரியர் யார்?- என்ற கேள்விகள் எழுகின்றன. துறவறவியலின் முதலதிகாரம் அருளுடைமையின் முதற்குறளிலும் (241) ”பூரியர்” வரும்.

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்
பூரியர் கண்ணும் உள.

இதேபோல், பரிபாடல் ஆறில் 46-50 ஆம் வரிகள் பூரியர் பற்றிச் சொல்லும்.

மாறுமென் மலரும் தாரும் கோதையும்
வேரும் தூரும் காயுங் கிழங்கும்
பூரிய மாக்கள் உண்பது மண்டி
நார் அரி நறவம் உகுப்புநலன் அழிந்து
வேறா கின்றுஇவ் விரிபுனல் வரவென

புல்>புர் என்ற வேர்ச்சொல் பொருத்தல், பெருத்தல்/மிகுதியாதல்/உயர்தல், துளைத்தல்/புகுதல்/நிறைத்தல் என்ற பொருட்களைக் கொண்ட பல் சொற்களுக்கு அடிப்படையாகும். இவற்றில் எது இங்கே சரிவரும்? முதல் இரண்டும் பொதிவுப் (positive) பொருள் கொண்டவை, கடைசி நொகைப் (negative) பொருளானது. (13இற்கு முந்தைய நூற்றாண்டுகளைச்சேர்ந்த) மணக்குடவரும், (13ஆம் நூற்றாண்டுப்) பரிமேலழகரும், இவருக்கும் பின்வந்த உரையாசிரியரும், ”கீழ்மக்கள்” எனும் நொகைப் பொருளையே பூரியருக்குச் சொல்வர். பல தமிழ் அகராதிகளிலும் ”இழிந்தவர், கொடியவர்” என்றே சொல்வர்.  "சீரியன வுள்ளிப் பூரியன மறத்தல் வேண்டும்" என்பது. குறள் 1206க்கு மணக்குடவர் உரையில் வரும் ஒரு வாசகம். பூரியர் என்பவர் இழிந்தவர் என்று இங்கு பொருள் கொள்ளப்படுகிறார். "பூரியரேனும் தம்மைப் புகல் புகுந்தார்க்குப் பொன்றா ஆருயிர் கொடுத்துக் காத்தார்" என்பது கம்ப ராமாயணத்தில் யுத்த காண்டம் வீடணன் அடைக்கலப்படலம் 116 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இங்கே பூரியரென்பது இழிந்தவரென்ற பொருளிலேயே வருகிறது.
.
ஆனால் ”புரையிலாப் பூரியர்” என்கையில் புரையும் பூரியரும் ஒன்றிற்கு ஒன்று தொடர்புடையவை, அவற்றை மாற்றிக் காட்ட ”இலா” என்ற சொல்ல வந்தது புரியும். 241ஆம் குறளில் ”பொருட் செல்வம் பூரியர் கண்ணும் உள” என்பதால் பூரியருக்குக் ”கீழ்மக்கள்” என்ற பொருள் பொருந்தாது. பரிபாடல் வரிகளில் “பூரியர் உண்ணும் பொருள்கள் மண்டி வருவதால், சூடிக் களைந்த பின் வாடிப்போன மலரும், ஆண்களணியும் தாரும், பெண்களணியும் கோதையும், வெட்டிவேர் போன்ற மணவேரும், மணமுள்ள தூருங், காயும், கிழங்கும், நார்களோடு உகுக்கும் மணம் அழிந்து வைகையின் விரிபுனல் விவரிக்கப்படுகிறது. அப்படியானால் இந்நிலை கீழ்மக்களால் ஆகியிருக்க முடியுமோ? பெருஞ்செல்வர் உண்ணும் பண்டங்கள், நீர்மங்கள், தேறல் வகைகள் ஆகியவை கூடி ஒருவகை வெறிய (alcohol) நாற்றம் அந்தக் கரையில் ஆற்றுநீரிற் கூடிப்போனதாகவே எண்ணவேண்டும் அல்லவா? அப்பொழுது பூரியருக்கு என்னபொருள் அமையும்? பெருஞ்செல்வர் என்பதுதானே?
------------------------------------
அடுத்த பகுதி:
-------------------------------
புல்>புர்>பர்>பரு>பெரு என்ற திரிவு பருத்தல், பெருத்தல் வினைகளையும்,. புல்>புர்>புரம் என்பது பெருத்த, உயரமான வீடுகளையும், அவைநிறைந்த நகரையுங் குறிக்கும். கவாடபுரம், திருவனந்தபுரம், காஞ்சிபுரமென்ற சொல் ஆட்சிகளை எண்ணிப்பாருங்கள். எத்தனையெத்தனை புரங்கள் தமிழ் நாட்டிலும், இந்தியத் துணைக்கண்டமெங்கினும் உள்ளன? புர், பூர் என்றும் புரி என்றும் திரிந்து இன்னும் பல்வேறு கணக்கற்ற நகரங்களைக் குறிக்கும் அல்லவா?. புரிதலுக்கு பெருத்தல்/உயர்தல் பொருள்போக வளைதற் பொருளும் உண்டு. புரமென்பது கோட்டையில்லாத பெருநகரையும், புரி, கோடையுள்ள நகரையுங் குறித்துப் பின் தம்முள் குழம்பியும் போயின. இதேசொல் சங்கதத்திலும் எடுத்தாளப்பட்டது..இந்தையிரோப்பிய நாடுகளுக்கும் பரவியது burg burgh, bury என்று முடியும் நகர ஈறாகவும் மாறியது. (Brandenburg, Magdeburg, Edinburgh, Hamburg, Strasburg, Canterbury என்ற இரோப்பிய நகரங்களை எண்ணுங்கள்) வடக்கே பல பூர்கள், புரிகள் உள்ளன. புரங்களைக் கொண்ட அகன்ற பரப்புக்கூட borough என்றழைக்கப் பட்டது. புரம், பூர், புரிகளில் இருந்த பெருஞ்செல்வரைப் பூரியர் என்றழைப்பது முற்றிலுஞ்சரி. இதே பொருளில் bourgeois என்றசொல் மேலைமொழிகளில் ஆளப்படும்.
       
bourgeoisie (n.) 1707, "body of freemen in a French town; the French middle class," from French bourgeois, from Old French burgeis, borjois (12c.) "town dweller" (as distinct from "peasant"), from borc "town, village," from Frankish *burg "city" (see borough). Communist use for "the capitalist class generally" attested from 1886.

ஆகப் பூரியர் என்பார் கடைசியிற் பார்த்தால் ஆங்கிலத்திற் சொல்லும் bourgeoisie தான். (நம்மூர் இடதுசாரிகள் எவ்வளவு ஆண்டுகள் இதையறியாது அவர்களின் நூல்களிற் பூர்ஷுவாக்கள் என்றே எழுதியிருப்பார்கள்? தமிழிலக்கியம் படிக்காமல் வறட்டுத்தனமாய் “தத்துவம்” பேசிக்கொண்டு இருந்தால் எப்படி? இப்படிப் பேசித்தானே Burten stein- ஐப் பின்பற்றி, கா. சிவத் தம்பியைப் பின்பற்றிச் சங்க காலத்தை segmentary states காலம் என்று நம்மூர் இடதுசாரியார் சொன்னார்? தமிழகத்தில் CPM/தமிழ்த்தேச மா.லெ. வேறுபாடு ஏற்பட்டதில் இதுவும் ஒன்று தானே? தமிழர் வரலாற்றை ஒழுங்காய்ப் புரிந்து கொண்டிருந்தால் தமிழகத்தில் பொதுவுடைமையர் இவ்வளவு பின்தங்கி இருக்க மாட்டார். இன்றுங்கூடத் தமிழ்த்தேச வரலாறு புரியாத மா.லெ. ஆட்கள் நிறையப்பேர் உள்ளார்.)

இப்போது மேலுள்ள 2 குறள்களையும், பரிபாடலையும் படியுங்கள். சரியான பொருள் சட்டென்று வந்து வீழும். வள்ளுவர் பேசுவதும் புரியும். 

அன்புடன்,
இராம.கி.

2 comments:

Unknown said...

ஐயா தங்களுடைய கவுதம சன்னாவிற்கான பதில் கட்டுரையை பார்த்தேன் தங்களிடம் இதைப்பற்றி பேச வேண்டும். இதில் நாங்கள் ஆய்வு செய்து கொண்டு உள்ளோம். Please share your number.thanks

இராம.கி said...

என் மின்னஞ்சல் முகவரி iraamaki@bsnl.in. தனிமடலில் உங்கள் பெயரை வெளிப்படுத்தி மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். உரையாடுவோம்.