Monday, July 16, 2018

தூண்டல்

அண்மையில் நண்பர் நூ.த.லோ.சு, ”தூண்டு சுடரும், தூண்டா விளக்கும்” என்ற பொருண்மையில் சம்பந்தர்தேவாரம் 1.71.6, அப்பர்தேவாரம் 6.23.1, 6.35.1,7.52.3, சுந்தரர்தேவாரம் 7.52.3, திருவாசகம் 8.4.40, 8.4.88, திருக்கோவையார் 8.12.244, திருவிசைப்பா 9.185, திருமந்திரம் 10.178, 10.2222, 10.2978, பெரியபுராணம் 12.1316, 12.1489, 12.3391, 12.3819 கல்லாடம் .23-28 ஆகியவற்றிலிருந்து சிலவரிகளைக் கொடுத்து, “தூண்டுதல் எனுஞ்சொல் சங்ககாலத்தில் காணவில்லை பக்தியிலக்கிய காலத்திற்றான் பயனிலுள்ளதுபோல் தோன்றுகிறது” என்றுரைத்தார். முனைவர் இராசம் இதற்கு மறுப்புச் சொல்லி, ”தூண்டு, தூண்டில் போன்றவை சங்கப்பாடல்களில் உண்டெ”ன்றார். அடுத்துப் பேரா.பாண்டியராசா தொடரடைவைப் பயனுறுத்திப் பேரா.செல்வா, கீழ்க்கண்ட அடிகளை எடுத்துவைத்தார்.
 
நெடும் கழை தூண்டில் நடுங்க நாண் கொளீஇ - பெரும் 285
நிலையோர் இட்ட நெடு நாண் தூண்டில்/பிடி கை அன்ன செம் கண் வராஅல் - மலை 456,457
வாங்கு விசை தூண்டில் ஊங்கு_ஊங்கு ஆகி - நற் 199/7
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது - அகம் 36/6
நெடும் கழை தூண்டில் விடு மீன் நொடுத்து - புறம் 399/15
தூண்டிலா விட்டு துடக்கி தான் வேண்டியார் - கலி 85/23
நெடும் தூண்டிலில் காழ் சேர்த்திய - பட் 80
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் - குறு 54/4
மீன் எறி தூண்டிலின் நிவக்கும் நாடன் - ஐங் 278/3
வலையும் தூண்டிலும் பற்றி பெரும் கால் - நற் 207/10
தொடி மாண் உலக்கை தூண்டு உரல் பாணி - அகம் 9/12
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ - புறம் 82/4

இந்நண்பர்களின் தேடலால் தூண்டப்பட்ட நான், ”இதுபோலும் அடிப்படைச் சொல் பற்றியியக்கத்தின் முன்னே ஏனிருக்கக்கூடாது?” என்ற வினாவினுள் ஆழ்ந்தேன். என் பார்வை சொற்பிறப்பு வழியது. சங்கவிலக்கியம் என்பது பழந்தமிழ்ச் சொற்களின் அகரமுதலித் தொகுதியல்ல என்றுநான் பலகாலம் சொல்லிவந்திருக்கிறேன். பல சொற்கள் அக்காலப் புழக்கத்திலிருந்து அவை பொதிந்த பாக்கள் நமக்குக் கிடையாமலோ, அன்றி நூல்களிற் பதியப்படாமலோ போயிருக்கலாம். ஒருவகையிற் பார்த்தால், யானையின் கால், துதிக்கை, வால், உடல் போன்ற பகுதிகளைத் தனித்தனியே தொட்டுணர்ந்து, யானை இப்படி உள்ளதென 5 குருடர் விவரித்தது போற்றான் சங்கத்தமிழ் பற்றிய நம் பார்வையுள்ளது. பழவிலக்கியம், இலக்கணம், மக்கள்வழக்கு, பிந்தை இலக்கியவழக்கு ஆகியவற்றைக் கொண்டு, முறையாக ஏரணவழி அளந்தறிந்து “துண்டலின்” இயலுமையை இங்கு சுட்டிக்காட்ட விழைகிறேன்.

முதலில் துள்ளெனும் வேருக்கு வருவோம். இதற்கு 2 விதப் பொருள்வகை உண்டு. முதல்வகை வெட்டு, பிள, கிழி என்பதாகும். இரண்டாவது மேலெழு, குதி போன்றது (இரண்டாவதற்கு முன்தள்ளு. என்ற பொருளுமுண்டு. (துல்லெனும் அடிவேரில் துள் எழுந்தது. அடிவேருக்கும் துள்ளின் பொருளுண்டு. அடிவேரின் தொடர்செய்திகளை இங்குநான் முழுதுஞ் சொல்லவில்லை. ஒன்றிரண்டை மட்டுஞ் சொல்கிறேன்.) மேற்சொன்ன 2 வகைப் பொருள்களுமே சொல்வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. முதல்வகையில் துள் எனுஞ் சொல்லுக்கே துண்டுப் பொருளுண்டு. துள்ந்து>துண்டு எனத்திரியும். துள்ளப்பட்டது= வெட்டப்பட்டது. இதே பொருளில் துள்+து= துட்டுங் கிளைக்கும். (காரணம்புரியாச் சங்கதத்தாக்கில் thuttu ற்கு மாறாய் இன்றுபலரும் dhuddu எனப் பலுக்குவார். கேட்டால், ’தெலுங்கு வாசனை’ என்பார். சொற்பிழை பலுக்கிறவரிடம். உள்ளது.) துட்டு= சில்லறை, சிறு துண்டு. பணத்தின் சிறு பகுதியை, இச்சொல்லால் குறிக்கிறோம். இதனடிப்படை முன்சொன்ன துள்ளல்/வெட்டல் வினை தான். 1 உருவாயைப் துள்ளினால்/பிளந்தால் வரும் சிறு பகுதி துட்டு. துண்டு தமிழானால், துட்டும் தமிழ் தான்.       

துள்க்குதல்>துட்குதல் என்பது துள்ளலின் அடுத்த புடைப்பெயர்ச்சி. துட்கடு>துக்கடு>துக்கடை>துக்கடா= சிறுதுண்டு. துக்கடாவையுஞ் சிலர் தமிழில்லையென்பார். பேச்சுத்தமிழில் கடை, கடாவாகும். துள்க்குணி> துக்குணி= சிறிதளவு. செய்யெனும் வேரைச் செய்கெனத் திரிப்பதுபோல் சொற்கள் உருவாக்குவது தமிழிற் பரந்துபட்ட வழக்கம், துள்தல்>துள்குதல் ஆகித் துட்குதலாவதும் அதே பழக்கமே. துக்குதல், துகுதலெனச் சிறுகித் துண்டாடுஞ் செயலைக் குறிக்கும். ’துகு’வுடன் ஐ சேர்த்துத் துகையாகும். பல துண்டுகளென்பது இதன் பொருள். துகைத்தல்= துண்டாக்கல். அம்மியில் தேங்காயிட்டு, நையப்புடைத்துத் துகைக்கிறோம். பேச்சுவழக்கில் துகையல் துவையலாகும். துகுவின்பின் அள் ஈற்றைச் சேர்த்து துகு+அள்= துகள் பிறக்கும். மீச்சிறு துண்டு துகளெனப்படும்.

தமிழில் பலவிடத்துங்காணும் விதிமுறைப்படி (c1v1c2v2....>c1V1.... இங்கு v1 = குறில், V1= v1-இன் நெடில். திரிவில் c2v2 முற்றிலும் மறைந்து மீந்த எழுத்துக்கள் தொடரும்) துகுள்>தூள் ஆகும். தூள் நீண்டு தூளியாகினும் தூள்ப்பொருளுண்டு. சங்கதத்தில் தூளி, dhuli ஆகும். துகள்>தூள் திரிவிற்கப்புறம் பொருளில் சற்று வேறுபாடு கொள்ளும். நெடிலென்பது குறிலின் நீட்சி தானே? (துகளின் 2 1/2 மாத்திரை தூளில் வேறுவகையில் 2 1/2 மாத்திரையாகும்.) இன்னும் அளபெடுக்கையில் தூஉள் 3 1/2 மாத்திரையாகும். ஒலி வேறுபாட்டால் பொருளில் மீத்தன்மை/ இன்னுந் தன்மை காட்டுகிறோம். துகள், குருணை போன்றது. இன்னுஞ்சிறுத்தால் அது தூளாகும். இன்னொருவிதமாய்த் தூள் தூள்சி>தூய்சியாகித் தூசியாகும். துள்வு>தூவு>தூவி என்பதும் சிறிய, நுண்பொருள் உணர்த்தும். மீச்சிறிதாய்த் துள்ளப்பட்டது காற்றசைவில் மேலெழும். பொருளிலும் இம்மாற்றம் ஏற்படுவது அடுத்த புடைப்பெயர்ச்சி. காற்றியக்கால் தூள்/தூசி மேலெழுவதை இயற்கையிற் காண்கிறோம். துள்ளிற்கு ”மேலெழும்/ முன்தள்ளும்” இயக்கப்பொருள் சொன்னது இப்படித்தான்.

இதுவரை திண்மத்துகளை/தூளைப் பார்த்தநாம், துளியெனும் நீர்த்துகள் பார்ப்போம்.. மீச்சிறு துண்டுகள் மேலெழுவதுபோல், சில பூதி விசைகளால் (physical forces) நீரும் துள்ளி, மேலெழும், அசையும். இன்னும் ஆழமாய்த் “அசைந்தெழுந்த நீர்ச்சொட்டு” எனத் துளிக்குப் பொருள்சொல்வர். “மங்குலற்கமொடு பொங்குடி துளிப்ப”  என்பது அக.235; “துளியனுழந்த தோய்வருஞ் சிமைதொறும் என்பது பரிபா. 7, 13. துள்>துளும்பு>தளும்பு என்பதும் நீர்மம் அசைதல் குறிப்புத்தான். ளகர, டகரத் திரிவில் துளி>துடியும் அசைபொருள் காட்டும். துடிதுடித்தலும் அசைதலே. “துடிகொள் நுண்ணிடை” என்பது திவ்.பெரியதிருமொழி 1, 2-3 என்பதற்கான விளக்கவுரை காணலாம்.

“துள்ளித்தூண் முட்டுமாங் கீழ்” என்ற நாலடியார் 64 ஆம் பாட்டுத் தொடரும் அசைவை உணர்த்தும். அளவுக்கு மீறிய அசைவு, பதைத்தல் எனப்படும். “துள்ளுநர்க் காண்மார் தொடர்ந்து” என்பது கலித்தொகை 4 ஆம் பாவில் வருந்தொடர். ”பேயும் பேயும் துள்ளல் உறுமென” என்பது கலித்தொகை 94 ஆம் பா.. ”துள்ளலோசை கலியென மொழிப.“ என்பது தொல்கா. பொருள். செய்யுளியல் 82 ஆம் நூற்பா. ’துள்ளலின்’ காலம் 2700 ஆண்டுகள் போலும். தூளின் நீட்சியான தூசியுங் கூடத் தொல்காப்பியத்தில் பயிலும்..  .

துள்ளலின் மேலெழவைத்தற் பொருளால் துள்>துளு>துளுப்பு>துடுப்பு எழுந்தது. மேலும்மேலும் நீருள் அழுத்தி துடுப்பை மேலெழச்செய்தே படகு நகர்கிறது. துடு>துடுவையும் துடுப்பைக் குறிப்பதே. துள்> துடு>துடங்கு> தொடங்கு என்பதும் ”டக்”கென ஒரு நிகழ்வை மேலெழவைப்பதே. முன்சொன்ன துள்கு>துகு என்பதற்கும் மேலெழும் பொருளுண்டு. ககர/வகரத் திரிவில் துகக்கு>துவக்கு ஆகும். இதுவும் தொடங்கலின் வெளிப்பாடே. ”துவக்குதல் தமிழல்ல, தொடங்கலே தமிழ்” என்பார் சிலர். ஆழ்ந்துபார்த்தால் அப்படித் தெரியவில்லை. இரண்டும் இருவேறு வகையில் ஒரு பொருள் உணர்த்தியவையே. 

துடுத்தல் = மேலெழ வைத்தல் (துடுப்பை நினைவு கொள்ளுங்கள்) என்பதால் துடைத்தலும் மேலெழ வைப்பதே. ஒரு பரப்பில் ஒட்டிக்கிடக்கும் தூசியை துணியால் மேலெழ வைக்கிறோம். இனிமேல் ஒட்டியிராது. துள்>தூள்>தூர்> தூர்த்தலும் ஒட்டிய அழுக்கை மேலெழவைத்துப் பெருக்கித் தூய்மை செய்வதாகும். உடம்பில் ஒட்டிய நீர்த்துளியை மேலெழவைப்பது துவட்டலாகும். அதன்மூலம் நீரொட்டிய பொருள் நீரில்லாது போகிறது. எனவே உலர்கிறது. துவர்தலும் உலர்தலைக் குறிக்கும்.

துள்>தூள் வளர்ச்சியில் தூ(ள்)க்குதல்= உயர்த்துதல். ”முட்டுறு கவரி தூக்கி யன்ன” என்பது அகநா 156 ஆம் வரி. அசைத்தல் பொருளில் ”வாடை தூக்க வணங்கிய தாழை” - கலித்தொகை 128.2.  சட்டென அடிவயிறோ, உடம்போ மேலெழுவதைத் ”தூக்கிப் போடுகிறது” என வழக்குத்தமிழில் இன்றுஞ் சொல்வோம். பொதுவாகத் தூக்கிற்குத் தொங்கற் பொருளுண்டு. தொங்கவிடும் பொருளில் “மறுகு விளக்குறுத்து மாலை தூக்கி” எனும் அகநா 141 வரி வரும். சிலம்பு ஊர்காண் காதை 14.150 ஆம் வரியான “ஆடலும் பாடலும் பாணியும் தூக்கும்” என்பதற்கு விளக்கஞ் சொல்கையில் ”செந்தூக்கு, மதலைத்தூக்கு, துணிபுத்தூக்கு, கோயிற்றூக்கு, நிவப்புத்தூக்கு, கழாற்றூக்கு, நெடுந்தூக்கு எனப்படும் 7 வகைத் தாளங்கள்.சொல்லப்படும். ஒரு தட்டுக்கும் இன்னொன்றிற்கும் இடைப்பட்ட நேரத்தில் கையை மேலெழுப்புவதால், இது தூக்காயிற்று. 7 வகைத் தூக்கிலும் வெவ்வேறு கால எண்ணிக்கைகள் உண்டு..

அடுத்து து(ள்)ங்குதல்>தொங்குதலாவதும் தொங்கும் கிளையில் சாய்ந்து தொங்கியவண்ணம் துயிலுவது தூங்கலாயிற்று. தூங்கலின் பெயர்ச்சொல் தூக்கம். ஆதி காலத்தில் பூச்சி, பாம்பு, பட்டைகள் தீண்டாமல் துயில்வதற்கு நாராற்செய்த தொங்குபடுக்கை பயன்படுத்துவர். தொங்கலும் தூங்கலும் தொடர்புற்ற சொற்கள். இற்றைத்தூக்கம் தரையில், கட்டிலில் இருந்தாலும், தொடக்ககாலத் தூக்கம் தொங்கும் நார்ப்படுக்கையிற்றான். அதற்குத் தூள்>தூளி என்றும் பெயர். குழந்தையைத் தாலாட்ட நாட்டுப்புறங்களில் இன்றும் துணியால் (சேலையால்) தூளி கட்டுவர். ..

தூள்ந்தது தூணாகி மேலெழுந்தும் நின்று, கல், மர, மாழை, கற்காரைத் (concrete) தூண்களைக் குறிக்கும். தூணிற்கு இரு பொருள்களுண்டு. ஒன்று திரண்டது. இன்னொன்று குத்துக்காலாய் மேலெழுந்து நிற்பது. சொல்லின் வேர் மேலெழுந்து நிற்பதிற்றான் உள்ளது. அடங்கிப்போன விளக்குச்சுடரை மீண்டும் மேலெழ வைப்பதுங் கூடத் தூண்டலே. ”தூண்டு சுடரணைய சோதி கண்டாய்” - என்பது தேவாரம் .843 இல் வரும் தொடர். ”தூண்டா விளக்கின் வுடரணையாய்” என்பது திருவாசகம். 32:4. இன்னும்பல காட்டுகளை நூ.த.லோ.சு. வும், இரா.செ.யுங் கொடுத்திருக்கிறார். தூண்டென்ற சொல்

சங்ககாலத்திலேயே எழுந்திருக்க வாய்ப்புண்டு என்பதை மேலேசொன்ன மற்ற சொற்களின் வெளிச்சத்தில் உணரலாம். அடுத்தது தூண்டில். நீர்நிலைகளில் இருக்கும் மீன்களை மேலெழச் செய்யும் கருவி தூண்டில் (தூண்டு+இல்). இதுவும் சங்க காலத்தில் பழகியிருக்கிறது. தூண்டில் இருந்தால், தூண்டலும் புழக்கத்தில் இருந்திருக்குமே?

அரசகருமந் தொடர்பான குறிப்பிட்ட செய்தியை, ஓர் அரசன்/தலைவன் மற்றோர் அரசனுக்கு/தலைவனுக்கு அனுப்புவதும்/தெரிவிப்பதுங் கூட து(ல்)து>தூ(ல்)து (துல்லுதல்>துள்ளுதல் = முன்தள்ளுதல்) தூதென்ற அதிகாரமே திருக்குறளில் உண்டு. இது தொல்காப்பியத்திலும் பயிலும். இது வடசொல் என்பது அறியாதோர் கூற்று. மேலே சொன்ன அத்தனை சொற்களையும் ஒதுக்கிவிட்டுத்தான் அதை வடசொல் என்று கூறமுடியும். எதற்கெடுத்தாலும் சங்கதத்தை உதவிக்கு அழைப்போர் தனிப்பட்ட ஒரு சொல்லை மட்டுமே பார்க்கிறார். சொற்றொகுதியைப் பார்ப்பதில்லை. துல்லின் வழியெழும் சொற்கள் தூது மட்டுமல்ல, தொலைவு, தூரம் போன்றவையும் தான்.

நாம் இருக்கும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடம் எவ்வளவு முன்தள்ளி யிருக்கும் எனும்போது துல்>தொல்>தொலை என்ற சொல்லும் துல்>துர்> தூர்>தூரம் என்பதும் இயல்பாக அந்தப்பொருளை உணர்த்தும். இதிலும் சிலர் தொலைவு தமிழ், தூரம் வடசொல் என்பார். (நானும் அப்படி ஒருகால் எண்ணியிருந்தேன்.) வேர்ச்சொல் பார்த்தால் இருசொற்களும் தமிழே என்பது புலப்பட்டுப்போகும். துல் எனும் வேர் இங்கிருக்கும் போது dhuur என்ற சொல் வடக்கே எப்படி எழுந்ததாகும்? ஏன் அவர் நம்மிடமிருந்து கடன்வாங்கக் கூடாதா? அப்படியோர் இயலுமையை நாம் ஏன் ஒதுக்குகிறோம்?  ”சேய்மை தூற்றாதே தூரவிடல்” என்பது நாலடி 75.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, July 10, 2018

வங்கி

முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ”வங்கி” என்ற சொல்லின் பெயர்க் காரணத்தை வினவிக் கீழ்க்கண்டவாறு திரு. மணி மணிவண்ணன் ஒரு முறை எழுதி யிருந்தார்.
------------------------------------------
பாங்கி, வங்கி, பாங்கு என்ற சொற்கள் bank என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம். உண்டியல் என்ற சொல்லையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். தற்கால வங்கியின் மூலம் தமிழகத்தின் (நாட்டுக்கோட்டைச்) செட்டியார்களின் கடைகளிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்தை அமெரிக்கப் பொருளாதாரக் கட்டுரைகளில் படித்திருக்கிறேன். அதற்கு அவர்கள் தமிழில் என்ன பெயரிட்டு அழைத்தார்கள் என்று பார்க்க வேண்டும்.
-----------------------------------------
இதற்கு இன்னொரு செய்தியாய், என். சொக்கன் எழுதியிருந்தார்:

'Bank' (வங்கி) என்பதைக் கன்னடத்தில் எப்படிச் சொல்வது என்று கேட்டிருந்தேன். பலரும் 'கன்னடத்தில் இதற்கென்று தனிச்சொல் இருப்பதாகத் தெரியவில்லை. நாங்கள் Bank என்று தான் பேச்சுவழக்கில் சொல்கிறோம்' என்று பதில் எழுதியிருந்தார்கள். தமிழிலும் நிலைமை அதுதான். பெரும்பாலானோர் 'அந்த பேங்க் பக்கத்துல வீடு' என்று தான் பேசுகிறார்கள். 'வங்கி' என்ற சொல்லைப் பயன்படுத்துவோர் மிகச் சிலரே. ஆனால், பெரும்பான்மையினர் பேசுகிறார்கள் என்பதால் அது சரியாகிவிடாதல்லவா? இதை அப்படியே ஏற்றுக்கொண்டு விட்டால் நாளைக்கு ஒரு நல்ல சொல்லை இழக்க நேரிடும். அதுபோல, கன்னடத்திலும் வங்கிக்கு ஒரு சொல் இருக்கும் என்று உறுதியாகத் தோன்றியது. தொடர்ந்து தேடினேன். நண்பர் ஶ்ரீகாந்த் லட்சுமணன் 'ಹಣಮನೆ' (ஹணமனெ) என்ற சொல்லைக் குறிப்பிட்டார். இன்னும் சில நண்பர்களிடம் அதைக் கேட்டு உறுதிப்படுத்திக்கொண்டேன். 'ಹಣ' என்றால் பணம், 'ಮನೆ' என்றால் வீடு, 'ஹணமனெ' என்றால், 'பணவீடு'. அழகாக இருக்கிறது!
------------------------------------------

சரி 'வங்கி' என்ற சொல்லின் பெயர்க்காரணம் என்ன?

இதற்கான நீண்ட மறுமொழியை நான் முகநூலில் இடாது, மடற் குழுக்களில் தான் முதலில் இட்டேன். இது பலருக்கும் தெரியவேண்டிய ஒரு பொதுச்செய்தி. என்று முகநூலில் மடற்குழுச் சுட்டியை மட்டுங் கொடுத்தேன். இப்போது சேமிப்பிற்காக வேண்டி, என் வலைப்பதிவில் இடுகிறேன்.

தமிழில் வங்கியென்ற சொல் தவிரப் பண வாணிகம், வட்டிக்கடை போன்ற சொற்களுமுண்டு. தவிர, நாட்டுக்கோட்டை நகரத்தாரிடம் ”கொண்டு விற்றல்” என்ற சொல்லுமுண்டு.

[’உண்டியல்’ என்பது வங்கிக்கு மாற்றான சொல் அல்ல. அதன் பொருள் வேறு. அதன் சொற்பிறப்புப் புரியாது மேலையாசிரியர் அதைச் சங்கதமென்பார். (இப்படிப் பல தமிழ்ச்சொற்கள் இனம் புரியாமற் சங்கதத்திற் சேர்க்கப் படுகின்றன.)  

உள் (வி.) = இருத்து, வை, இடு. உள்+ந்+து= உண்டு = இருந்தது. உண்டி = இட்டு வைக்கும் பணம். உண்டிகை/உண்டியல் = பணம் இட்டு வைக்கும் பெட்டி/குடுவை. உண்டிச் சீட்டு (bill of exchange) என்பது 1930 களில் 2 வகையாய்க் கொள்ளப் பட்டது  ஒன்று, வரைவோலை (bank draft) என இன்று சொல்லப்படும் 

தெரியன (தெரிசன) உண்டி. 
இன்னொன்று, பரிமாற்றச்சீட்டு (bills of  exchange) போன்றது. 

இவற்றிற்கான நுட்பமான விளக்கங்களை இங்கு எழுதுவது பெரிய வேலை. ஆழமாய் அறிய, ”THE CHETTIARS IN BURMA - Sean Turnell, sturnell@efs.mq.edu.au” என்ற நூலையும், pdf வடிவில் ”caste and capitalism in colonial India - The Nattukottai chettiars - David Wset Rudner” என்ற நூலையும் இணையத்திற் பாருங்கள். இன்னும் பல எடுகோள்கள் (references) இப்புலனத்தில் உள்ளன. இங்கு நான் இரண்டை மட்டுஞ் சொன்னேன்.]

வங்கியென்ற சொல்லின் பொருள் புரியாது, அது Bank இன் தற்பவமோ என்றெண்ணித் தனித்தமிழன்பர் ”வைப்பகத்தைப்” பரிந்துரைப்பார். தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் கீழ் அச்சொல் வெகுவாகப் பரவியது. 

காரணம் புரியாது இன்றும் ’வங்கி’யை ஒதுக்குவாருண்டு. வங்கியின் அடிப்படைப் பணிகள் இரு வகையாகும்.

1. பணம் வைத்திருப்போரிடம் இருந்து பணத்தை வாங்குவது.
2. பணம் கேட்போருக்குப் பணத்தைக் கொடுப்பது.

இவை போகப் 
பணப் பட்டுவாடு (remittance of money), 
உண்டியற் கழிவு (discounting of bills of exchange), 
வெளியிலிருந்து வரும் காசோலைகளை மதித்துப் பணங் கொடுத்தல் (honoring cheques issued elsewhere, காசோலைகளை ஒரு காலத்தில் நடப்பு உண்டி என்றுஞ் சொன்னார்), 
பணத்தாள் மாற்றம் (currency exchange), 
சொத்து அடைமானம் (gold, property and valuables depository), 
நகைச் சேமக்கலன் (safe-keeping of jewels) 

போன்ற பல்வேறு பணிகளையும் இக்கால வங்கிகள் செய்து தம் பொலுவைக் (profit) கூட்டிக் கொள்கின்றன.
:
வைப்பாளர்/பொதிப்பாளரிடம் (depositors) பணம் வாங்கி வட்டி கொடுத்து, கேட்பாளர்/கடனாளரிடம் (debtors) கடன் கொடுத்து வட்டி வாங்கி ஒரு வங்கி செயற்படுகிறது. 

வங்கியின் கேட்புவீதம் வைப்புவீதத்தை விட சற்று அதிகமாய் இருக்கும். (காட்டாக, வைப்பு வட்டி 6.5% எனில், கேட்பு வட்டி 8.5/9.0 % ஆகலாம்). அப்போது தான் பரிமாற்றச் செலவு (transaction costs) போக வங்கிக்கு மேல்வருமானங் கிட்டும். பரிமாற்றச் செலவில் 

வாடிக்கையாளரின் தகுதி பற்றிய ஆய்வுச் செலவு, 
கடன் ஆவணங்களை உருவாக்க ஆகுஞ் செலவு, 
கடன் பணத்தைத் திருப்பிக் கட்டுகையில் வங்கிக்கு ஆகுஞ் செலவு, 
அடை மானம் இருந்தால் அதையொட்டிய செலவு, 
கடனைத் திரும்பக் கட்டாவிடில் ஆகுஞ் செலவு, 
அடையாப் பணம் (கட்டப்படாத கடன்பணம். இன்று இது distrssed loan என்று சொல்லப் படும்) 

போன்றவை இவற்றுள் அடங்கும். இச்செலவுகள் எல்லாம் கடன் தொகை அளவைப் பொறுத்தவையல்ல. சிறு கடன்களுக்கு இச்செலவு பெருஞ் சுமையாகும். 

சரி. வட்டி என்பதென்ன? இதைப் புரிந்து கொள்ள, இன்னொருவர் வீட்டிற்கு மாத வாடகை கொடுப்பதை எண்ணிப் பாருங்கள். ஓராண்டுத் தங்கலுக்கு வீடு எடுத்தால் 12 முறை வாடகை தருவதாய் ஒப்பந்தம் போட்டிருப்போம். 

முதலில் இன்னொரு தொடர்புச் சொல்லை எண்ணிப் பாருங்கள்: 

வாடு/வாட்டி = turn; ”எத்தனை வாட்டி உனக்குச் சொல்வது?” என்ற வாசகம் உங்கள் நினைவிற்கு வருகிறதா? 

வாட்டில்/வாட்டியில் கட்டுவது வாடகை. (=வாடு+அகை; அகைத்தல் = செலுத்தல்). இன்னொருவர் வீட்டை நாம் வைத்திருக்கும் வரை வாடகை கட்டத்தான் வேண்டும். 

வட்டி என்பதும் ஒரு வகையில் வாடகை போல் தான். இன்னொருவர் முதலை நாம் வைத்திருக்கும் வரை வாட்டி> வட்டிப் பணம் என்பதைக் கட்டத்தான் வேண்டும்  (வாட்டிப் பணம்> வட்டிப்பணமும் ”வாட்டிற்” பிறந்ததே) 

சிச்சிறிதாய் முதற்பணம் திருப்பிக் கட்டக்கட்ட, வட்டிப் பணம் என்பது குறையும். வட்டிப் பணம் என நீட்டாது (ஒரு பெயரடையே பெயராவது போல்) வட்டியென நாம் சுருக்குகிறோம். வட்டியைப் பொலிசையென்றும் பழங் காலத்திற் சொன்னார். (பொலி = ஓராண்டு நெல் விளைச்சல். அறுவடை அன்றைக்குக் களத்துமேட்டில் ”பொலியோ பொலி” என்ற கூச்சல் வானம் பிளக்கும்) பணம் பயன்பாட்டில் பொலிகிறதென்று (= பெருகுதல்) கொண்டு இங்கே பொலிசை யாயிற்று.

மொத்தத்தில் பண வணிகம் என்பது இதில் நடக்கிறது. இதில் பணமே சரக்கு. அதுவே வருமானமுங் கூட. இன்னொரு தொழிலில் சரக்கும் வருமானமும் வெவ்வேறு ஆகலாம். இவ்வணிகத்திற்கு வருமானம் என்பது வட்டியால் வருவதால் இது வட்டிக் கடையாயிற்று. 

வைப்பைக் கொண்டு கடன் விற்பதால் இது கொண்டு விற்றலும் ஆயிற்று. ”மூணு வருசம் கொண்டு விக்றதுக்குப் பர்மா போயிருக்காரு”. என்பது இற்றைப் புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் 1930/40 களில் புழங்கிய பேச்சாகும். 

மற்ற தொழில்களோடு ஒப்பிட்டால், பண வைப்பை இயல்பொருளாயும் (raw material), கடனை, மானுறுத்திய புதுக்கு (manufactured product) போலவுங் கொள்ளலாம். இத்தொழிலில் பணங்கேட்பு விற்றலுக்கும் (sale), பணம்வைப்பு, கொள்ளலுக்கும் (procurement) சமம். முடிவில் உருவாகும் ஐந்தொகைச் சிட்டையையும் (balance sheet , பொலுவு நட்டத் தேற்றத்தையும் (profit and loss statement) பார்த்தால் ஒரு வங்கியின் நிலைமை விளங்கிப் போகும். 

இப்படிப் பார்த்தால், அக்கால வட்டிக் கடைகளுக்கும் இக்கால வங்கிகளுக்கும் இடையே பெருத்த வேறுபாடு ஒன்றுங் கிடையாது. நடைமுறைகளில் மட்டுமே அவை வேறுபட்டன. நிலவுடைமைக் குமுகாய (feudal society) விளைஞருக்கும், வினைஞருக்கும் தேவையான எல்லா நிதித் தேவைகளையும் வட்டிக் கடைகள் ஒரு காலத்தில் நிறைவு செய்தன.

இங்கொன்றைச் சொல்ல வேண்டும். வட்டிக் கடைகள் என்பவை ஏதோ தனித் தனிக் கட்டிடங்களில் இருந்தவையல்ல. ஒரு கட்டின் முகப்பறையில், 10/15 வட்டிக் கடைகள் கூட அக்காலம் இருந்திருக்கலாம். (இத்தனை கடைகள் சேர்ந்திருக்கும் மனையைத்தான் பணமனை என்று கன்னடத்தில் அழைத்தாரோ? தெரியாது.) 

வட்டிக் கடையை மேற்பார்ப்பவர் முதலி (proprietor) ஆகவும் இருக்கலாம். 3 ஆண்டு ஒப்பந்தம் போட்டுவந்த முதலாளாகவும் (agent; இவரைப் பகராளி/முகவரென இக்காலஞ் சொல்கிறோம். 30/40 ஆண்டுகளுக்கு முன்கூட agent என்ற சொல் வங்கிகளில் பரவியிருந்தது, மேலாளாகவும் (manager) இருக்கலாம் முதலாள்/மேலாள் என்பவர் குறிப்பிட்ட காலத்திற்குக் கடையைக் கவனிப்பவர் என்பது இங்கே விளங்கிக்கொள்ள வேண்டியது. 

முதலியுடன் முதலாள் போட்ட ஒப்பந்தத்தோடு, கடை தொடர்பான வழக்கு வியவகாரங்களில் முதலி போலவே தோற்றும்படி ஓர் அதிகாரப் புயவையும் (power of attorney) முதலியிடமிருந்து இவர்பெற்று வந்திருப்பார். கடையின் பொலுவு-நட்டத்தில் (profit and loss) இவருக்கும் ஒரு குறிப்பிட்ட பங்குண்டு.

ஒரு காலத்தில் தென்கிழக்காசிய நாடுகளில் இருந்த ஒவ்வொரு வட்டிக் கடையிலும் வாங்கு (சாய்வு)ப் பலகை பொருத்திய, மரப்பெட்டி ஒன்றிருக்கும். இது தவிர, மேலும் ஒரு சிறிய இருப்புப்பெட்டி, மேலாளுக்குப்பின் பேரேடுகள் (ledgers) அடங்கிய பேழைகள் (cupboards) போன்றவை இருக்கும். மேலாளுக்கு உதவ அடுத்தாள்கள் (assistants), காட்டுக் கணக்குப்பிள்ளைகள் (field staffs; காடு = field) இருப்பார் 

(இன்றுங் கூட இந்தியாவின்  பழைய அஞ்சலகங்களில் வாடிக்கையாளர் எழுதுவதற்கு வாங்குப் பலகை ஒன்றைப் போட்டு வைத்திருப்பார்.) இதை வங்குப் பலகை என்றுஞ் சொல்வர். விடாது எழுதுவோரின் கணுக்கையில் வலி தெரியாமல் எழுத (இக்கால மடிக்கணியில் விடாது பொத்தான் தட்டும் கணியாளருக்கும் வலி தெரியாது தட்டச்ச) வாகானது வாங்குப்பலகையாகும்..

தவிர உடனடித் தேவைக்கான பணம், பேரெடுகள், எழுது பொருள்கள் வைக்கப் பயன்படும் பெட்டியின் மூடியாகவும் இந்த வாங்குப் பலகை அமையும். வாடிக்கையாளர் பக்கம் உயர்ந்தும் (வாடிக்கைச் சொற்பிறப்பும் வாட்டிலிருந்து அமையும். திரும்பத் திரும்ப வருபவர் வாடிக்கையாளர்.) மேலாள் பக்கம் தாழ்ந்தும் பலகையின் சாய்வு இருக்கும். மூடி திறக்கையில் மேலாளுக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே தடுப்பாகவும் இந்த வாங்குப் பலகை வேலை செய்யும். 

பலகை மூடிய பெட்டியினுள்ளே “என்ன ஆவணம் இருக்கிறது, எவ்வளவு நடப்புப் பணம் (current cash) மேலாள் வைத்திருக்கிறார்” என்பதில் ஓரளவு தனிநிலை (privacy) காட்டவும் முடியும். வட்டிக்கடை என்பதற்கு இந்த வங்குப் பெட்டியே, தனி அடையாளமாகி, வாங்கு> வங்கு>வங்கி என்றும் ஆனது. ”என்ன தம்பி, முடிஞ்சா எங்க வங்குப் பக்கம் வாங்க.”

மொத்த வணிக வங்கிகள் (அடத்திக் கடைகள். அடத்தம்= மொத்தம்) ஏற்பட்ட பின், தனிக் கட்டடம், பெட்டக ஏந்துகள் (locker facility), ஆவணக் காப்பகம் போன்றவை வங்கிகளில் எழுந்தன.  

ஆனாலும் வங்கி எனும் பெயர் நம் வழக்கில் மறையவில்லை. 

வட்டிக்குவிடும் பழக்கம் பெருஞ்சோழர் காலத்தின் முன்பே இருந்திருக்கலாம். இதை மேலையரே முதலில் கொணர்ந்தார் என்பது வெறுஞ் சொல்விப்பு. ஏனெனில் வங்கி நுட்பத்தை இரோப்பியர் அரபுகளிடம் இருந்தே கற்றார். அரபுகள் இதை இந்தியரிடமும் சீனரிடமுமிருந்துங் கற்றிருக்கலாம். 

”இக்கற்றல் எப்படி நடந்தது?” என யாரும் இதுவரை ஆயவில்லை. ஆனால் வியன்னா காட்சியகத்தில், ஒரு (பொ.உ. 1-3 ஆம் நூற்றாண்டு) கிரேக்க மொழி ஆவணத்தில், முசிறியில் மிளகேற்றி எகிப்துப் பெரினிசுக்குக் கப்பல் மூலங் கொணர்ந்து பின் வண்டி வழியே அலெக்சாந்திரியா வரை நகர்த்தி, மீளக் கடல் வழி உரோமுக்குக் கொண்டு சென்ற வணிகத்தில், வங்கிவழிப் பணம் பெற்றதும், வட்டிகட்டியதும் முன்சொன்ன உண்டி போன்றதும் பேசப்படுகிறது. எனவே கப்பல் வணிகத்திற்கு உதவ, யூத வங்கிகள் செயற்பட்டது தெரிகிறது. ”யூதருக்கும் தமிழருக்கும் என்ன மாதிரி உறவுகளிருந்தன?” தெரியாது. இவ் வங்கிமுறை மிளகேற்றிய தமிழருக்குத் தெரியாது போய்விடுமா, என்ன?     

ஒவ்வொரு நகரத்தார் வங்கியின் முதல் (capital) என்பது, ஆச்சிமார் பணத்தாலும், தனதுமுறைப் பணத்தாலும், கோயில்/தருமப் பணத்தாலும், அடத்திகடைப் பணத்தாலும், வாடிக்கையாளர் தந்த முதல்களாலும், வெள்ளைக்காரன் பணத்தாலும் ஆனது

[வெள்ளைக்காரன் பணம் என்ற விந்தைப் பெயர் இங்கு சொல்லப்பட்டது. இம்பீரியல் வங்கி (Imperial Bank) சுடாண்டர்ட் சார்ட்டட் வங்கி (அக்கால Charted Bank; இக்கால Standard Charted Bank), ஃகொங்காங் சாங்கை வங்கி (Hongkong and Shanghai  Bank) ஆகியவற்றில் இருந்து பெற்றதாகலாம்.] 

இது தவிர, தவணைப் (term deposits) பணங்களும் கடன் கொடுக்கப் பயன்பட்டன. முதல்களைக் காட்டிலும், தவணைக் கணக்குப் பணமே வங்கி நடத்தப் பெரிதும் பயன்பட்டது.   

வங்கியின் நடைமுறையில் வட்டிவீதத்தை நிருணயிப்பது முகன்மையான விதயம். இதில் இரு வேறு வட்டி வீதங்கள் புழக்கத்திலிருந்தன. முதல் வகை வட்டி, நடப்பு வட்டி எனப்பட்டது. இது இரங்கூன், கொழும்பு, பினாங்கு, சிங்கப்பூர், செய்கோன், கல்கத்தா, சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள நகரத்தார் வங்கிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்ட பணங்களுக்கு அவர் கொடுத்த வட்டிவீதம் ஆகும். 

இது இக்கால LIBOR (London Inter-Bank Operating Rate) போன்றது. 2 ஆம் வகையைத் தவணை வட்டிவீதம் என்பார்; தவணைப் பணங்களுக்குக் கொடுக்கப்படும் வட்டி வீதம் இதுவாகும். நடப்பு வட்டியையும், தனது கடைக்காகுஞ் செலவையும், மற்ற போட்டி வங்கிகளின் நடைமுறைகளையும் பொறுத்து இது அமையும். நடப்பு வட்டிவீதமும், தவணை வட்டிவீதமும் 15 நாட்களுக்கு ஒரு முறை வங்கிகளின் மேலாள்களால் ஊரின் பெரிய கோயிலிற் கூடி முடிவு செய்யப் பட்டது. கடனுக்கான வட்டி வீதம் தவணை வட்டி வீதத்தைக் காட்டிலும் கூட இருக்கும்.

இவ்வளவு சொல்லிய நான் வாங்குப் பலகையின் சொற்பிறப்பு பற்றியுஞ் சொல்லவேண்டும். ஆங்கிலத்தில் bank (n.1) "financial institution," late 15c., originally "money-dealer's counter or shop," from either Old Italian banca or Middle French banque (itself from the Italian word), both meaning "table," from a Germanic source (such as Old High German bank "bench, moneylender's table"), from Proto-Germanic *bankiz- "shelf," *bankon- (see bank (n.2)). The etymonlogical notion is of the moneylender's exchange table. As "institution for receiving and lending money" from 1620s. In games of chance, "the sum of money held by the proprietor or one who plays against the rest," by 1720. Bank holiday is from 1871, though the tradition is as old as the Bank of England. To cry all the way to the bank was coined 1956 by U.S. pianist Liberace (1919- 1987), after a Madison Square Garden concert that was panned by critics but packed with patrons. என்ற வரையறையைச் சொல்வர். இனி வாங்கு என்ற சொல்லின் பழமைக்கு வருகிறேன்.,

வல்லெனும் வேர் கோணற்பொருளையும், வளைபொருளையும் குறிக்கும். வல்>வலயம் என்பதை நினைவு கொள்ளுங்கள். 

வடிவியலில் (geometry) கிடைக்கோடு (horizontal line) கோணி விட்டால், சரிவு (slope) மாறியதாய்க் குறிக்கிறோமில்லையா? கோணம் (angle) = சரிவு (slope). சரிவு தொடர்ந்து மாறினால் (if the slope continually changes), கோடு வளைந்து சுருவி (curve) விட்டது என்போம். எனவே கிடையிலிருந்து கோணம், வளைவு, சுருவை, வட்டம் எனச் சொல்லாக்கம் மாறும் இயல்பைப் புரிந்து கொள்ளுங்கள். 

வல்> வள் எனத் திரிந்து வளைவு என்ற சொல்லையாக்கும். வள்ளிற் பிறந்தது வட்டம். வள்ளிற் பிறந்த சொற்கள் 200 க்கும் மேலுண்டு. 

வள்> வர்> வாரம் என்பதும் சாய்வைக் குறிக்கும். 'தாழ்வாரம்' என்ற சொல் நினைவிற்கு வருகிறதா? ஒரு வீட்டு முற்றத்தில் சாய்நிலையில் சட்டங்கள் அடித்து அதன் மேல் ஓடு வேய்ந்து தாழ்வாரம் அமைக்கிறோமே? 

வள்> வண்> வணங்கு = வளைநிலை. ’வணக்கம்’ என்று நாம் சொல்லும் போது வளைநிலையில் இருந்து கைகள் கூப்பும் பழக்கத்தை உணர்கிறோம். .

வள்>வாள் வளையக்கூடிய பட்டாக்கத்தி. வாள்>வாள்ங்கு>வாங்கு = கோணிய, வளைந்த பொருள். ”வாங்கு கதிர் வரகின் - என்பது முல்லைப்பாட்டு 98”. 

வாங்கரிவாள் = வளைந்த அரிவாள். 
வாங்கற் கழுத்து = கோணற் கழுத்து. ”இம்மனை ஈசானிய மூலையில் வாங்கலாய் உள்ளது” - கோணியுள்ளது. ”இந் நிலம் வாங்கலாய் உள்ளதால் வழுக்குகிறது.” (அதன் சரிவால் வழுக்குகிறது.). ”அக் கடைக்கதவு வாங்கியுள்ளது” - சற்று திறந்தாற் போலிருக்கிறது. 

வங்கா/வாங்கா = வளைந்த நாரை. ஊதுகொம்பு, வாங்கிற்கு இன்னும் பல பொருள்கள் உண்டு. 

வங்கம் = விலாவெலும்புபோல் வளைந்த சட்டங்கள் கொண்ட கடலிற் செல்லத்தக்க பெருங்கலம், அலையென்றும் பொருளுண்டு. 

வங்கர் = கலம் ஓட்டத்தெரிந்த நெய்தல் நில மாக்கள். 

வங்கரை = வளைகை, கோணுகை. “வங்கரை கொங்கரையாய் மாட்டிக்கொண்டான்.” 
வங்கன் = வறுமையாளன். (குனிந்து நிற்பவன்; “வங்கப் பயலுக்கு வாய்ப் பேச்சிற் குறைவில்லை.”); 
வங்கி = நெளிந்து காணும் தோளணி, நெளி வளையம், நெளி மோதிரம், நெளிவாள். 
வங்குக்கால் = சில மேசைகளுக்கு அமையும் வளை கால், கப்பலின் விலாப்பலகைகளை அடிக்கத் தோதான மரச்சட்டம்; விலா எலும்பு போன்றது.

வங்கின் திரிவாய் (வங்கு>அங்கு) அங்கு+அணம் = அங்கணம் என்ற சொல் எழுந்து சாய்க்கடையைக் குறிப்பிடும். 

அங்கு என்ற சொல் வளைவைக் குறிப்பதாய் கலித்தொகை 80 ஆம் பாடலில் “திகழொளி முத்தங்கு அரும்பாகத் தைஇ” என்று வரும்  

அங்குசம் என்பது வளைவுப்பொருளில் யானை கட்டுங் கருவியைக் (திருமுரு.110) குறிக்கும். 

கோணத்திற்கு இணையான angle க்கு ஆங்கிலத்தில் கொடுக்கும் விளக்கத்தைப் பாருங்கள். angle (n.) "space or difference in direction between intersecting lines," late 14c., from Old French angle "an angle, a corner" (12c.) and directly from Latin angulus "an angle, a corner," a diminutive form from PIE root *ang-/*ank- "to bend" (source also of Greek ankylos "bent, crooked," Latin ang(u)ere "to compress in a bend, fold, strangle;" Old Church Slavonic aglu "corner;" Lithuanian anka "loop;" Sanskrit ankah "hook, bent," angam "limb;" Old English ancleo "ankle;" Old High German ango "hook"). மீண்டும் மீண்டுஞ் சொல்கிறேன். தமிழிய மொழிகளுக்கும் இந்தை யிரோப்பிய மொழிகளுக்கும் இடையே எங்கோவொரு தொடர்புள்ளது. நம்பத் தான் பலரும் தயங்குகிறார். . 

இனி வாங்கல் வினைக்கு வருவோம். ஈ, தா, கொடு என்ற 3 நிலையிலும் (ஈ = உயர்ந்தோனிடம் தாழ்ந்தோன் கூறி இரக்கும் சொல். தா = தன்னையொத்த ஒருவனிடம் இரக்கும் போது கூறுஞ்சொல். கொடு = தாழ்ந்தோனிடம் உயர்ந்தோன் இரக்கையிற் கூறுஞ்சொல்). 

கைகளைச்சாய்த்துப் பொருள் பெறுவது வாங்கலாகும். (சாய்தலின்றி வாங்கலில்லை.) நம் வீட்டுச்சுவரின் மேற்பகுதியில், வருவோன் போவோன் எல்லாம் உட்காரக் கூடாதென்று, மேற்பகுதியைக் கிடையாய் அமைக்காமல் வாங்காயமைப்பர். இதேபோல் திண்ணையில் விருந்தாளிகள் முதுகு சாய்க்கவும், துயில்கையிற் தலை மாட்டிற்கும் தோதாக வாங்குத் திண்டு அமைப்பர். 

எனவே வாங்கு பலகை/வங்குப் பலகை என்பது உறுதியாகச் சாய்வுப்பலகை தான். சாய்பலகை கொண்ட பெட்டிக்குள் வட்டிக்கடைக்குத் தேவையான எல்லாவற்றையும் வைத்து இருந்ததால் ”வங்கி” என்று அதைக் குறிப்பதற்கு எந்தத் தடையும் கிடையாது. 

முடிக்குமுன் 2004 இல் எழுதிப் பின் 2014 இல் என் வலைப்பதிவில் மீள வெளியிட்ட இன்னொரு கட்டுரையையும் படிக்குமாறு அழைக்கிறேன். அது. சிவகங்கை மாவட்டப் பேச்சுநடையில் அமைந்தது. பேச்சுமொழியிலும் நிதியியலை பேசமுடியும் என்பதற்காய் அதையெழுதினேன்.

http://valavu.blogspot.in/2014/08/blog-post_29.html

அன்புடன்,
இராம.கி..

மேலேயுள்ள கட்டுரை சொல்லாய்வுக் குழுவில் வந்தபோது நண்பர் “துரை. மாணிக்கம்” கீழ்க்கண்ட முன்னிகையை அளித்திருந்தார்.
----------------------------------------------------------------------------------------
ஆங்கிலத்தில் கருத்துக்களை வைத்து தமிழில் அதை மொழி பெயர்ப்பு செய்வதாக உள்ளது ஐயா. வங்கியின் பல்வேறு செயல்பாடுகளை ஆராய்ந்து முன் வைத்து அதற்கான விளக்கமும் சிறப்பாக உள்ளது எனினும் பணம் என்பது உழைப்பை பரிமாற்றம் செய்யும் கருவி என்ற அடிப்படை கூறுகளை மறந்து விட்டீர்களோ என்ற ஐயம் எழுகிறது. டிராப்ட் / செக் / கிரெடிட் / டெபிட் போன்ற அனைத்தும் வைப்பகத்தில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு இட்ட பெயர்கள் தாமே..? வட்டி என்ற வழக்கமே தமிழ் கலாச்சாரத்தின் இருப்பதாக அறியவில்லையே? உழைக்காமல் சேர்த்துவைத்து அதை வட்டிக்கு விட்டு பிழைப்புச் செய்வதை இந்தத் தமிழ்சமூகம் ஏற்றதாக வரலாறு இல்லை ஆதலால் தான் இன்னும் தமிழர்கள் வைப்பகம் வைத்திருக்க வில்லை போலும். நம் உழைப்பை சேமித்து வைக்க பயன்படுவதே வைப்பு + அகம் = வைப்பகம் என்பது என்னுடைய கருத்து.
---------------------------------------------------------------------------------------
அவருக்கு நானளித்த மறுமொழி வருமாறு:

நண்பரே! என் கட்டுரைகளில் கலைச்சொற்கள் எப்போதுமே கணிசமாகத் தான் இருக்கும். இவை புழக்கத்தில் வரவேண்டும் என்பதற்காக ஆங்கிலச் சொற்களைப் பிறைக்குறிக்குள் கொடுப்பதும் என் வழக்கம். 1000 சொற்கள் இருக்குங் கட்டுரையில் 50 கலைச்சொற்கள் இருந்தால் அது 5% என்று தோற்றும். இப்படிச் சற்று மொழிபெயர்ப்புத் தோற்றங் காட்டத்தான் செய்யும். அக்கட்டுரையை இன்னும் நீட்டி முழக்கி 5000 சொற்களிற் சொன்னால் கலைச்சொற்களின் கணக்கு 1% ஆகிவிடுவதால் படிப்போரை ஒன்றும் உறுத்தாது. இப்படித் தான் கட்டுரையின் அளவு சுருங்கச் சுருங்க, கலைச்சொற்களைத் தவிர்க்கமுடியா நிலையில், பார்வையில் இப்படித் தோற்றுவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை..

உங்களின் கனிவிற்கு நன்றி.

”பணம், உழைப்பைப் பரிமாற்றஞ் செய்யுங் கருவி” என்பதை என் ”பணம் - பால பாடம்” என்ற கட்டுரையில் உணர்த்தியுள்ளேன். அதையும் படிக்கச் சொல்லி இக்கட்டுரையிற் சொல்லியிருந்தேன். அதை நீங்கள் படிக்கவில்லை போலும். டிராப்ட் / செக் / கிரெடிட் / டெபிட் போன்ற சொற்களை இனிமேலாவது தமிழிற் சொல்வோமென்று தான் வரைவோலை, காசோலை, கிட்டிப்பு, கடவிப்பு என்றவற்றைப் பரிந்துரை செய்கிறோம். (பார்க்க: http://valavu.blogspot.in/2007/12/blog-post.html).

வட்டிப் பழக்கம் தமிழர் நாகரிகத்தில் கட்டாயமுண்டு. வியன்னாக் காட்சி யகத்திலுள்ள கிரேக்கமொழி ஆவணம் பற்றி மேலே சொல்லியிருந்தேன். முசிறியிலிருந்து உரோமுக்கு மிளகேற்றிப் போனபோது ஒரு வங்கி கடன் கொடுத்ததையும், வட்டி, உண்டி, பணமுதலீடு பற்றியெலாஞ் அந்த ஆவணம் பேசியதையுஞ் சொன்னேனே? படிக்கவில்லையா/? இணையத்தில் அந்த ஆவணங் கிடைக்கும். நன்கு தேடிப் பாருங்கள். 

நம்மைப் பற்றியறியத் தமிழாவணங்கள் மட்டும் பற்றாது ஐயா. பிறமொழி ஆவணங்களையும் பார்க்க வேண்டும். கீழடித் தொல்லாய்வால் தமிழர் நகர நாகரிகம் அடைந்திருந்தார் என்று சொல்ல விழையும் நாம், இது போல் கப்பல் வணிக ஆவணங்களையும் படிக்க வேண்டும். இதுவும் நம் நகர நாகரிகத்திற்குச் சான்று தானே? ஒன்றைப் பார்ப்போம், இன்னொன்றைப் பார்க்கமாட்டோமா?

”உழைக்காமற் சேர்த்து வைத்து வட்டிக்கு விட்டுப் பிழைப்புச் செய்வதை இத் தமிழ்ச் சமூகம் ஏற்றதாக வரலாறில்லை” என்று நீங்கள் எழுதுவதைக் கண்டு என்னால் வியக்காதிருக்க முடியவில்லை. நீங்கள் ஏதோ ஒரு கற்பனை உலகில் உள்ளீர்கள் போலும். இது போல் இப்போதெல்லாம் யாரும் பேசுவதில்லை. இணையம் வந்த பிறகு நுட்பியல், பொருளியல், அறிவியல், பகுத்தறிவு என்ற பலவும் எல்லார்க்கும் எல்லா நேரங்களிலும் கிடைக்கின்றன. புரிகின்றன. நாம் கொண்ட கொள்கைக்காக வரலாற்றை மாற்றிவிட முடியாது. வரலாற்றைப் படித்து நம் கொள்கைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். புதுப் பழம்வரலாறு தெரியும்போது, நம் கொள்கைகளைத் தான் மறு ஆய்வு செய்யவேண்டும்.

வாடகையில்லாது இன்னொருவர் வீட்டில் நாம் குடியிருந்து விட முடியுமா? அது போல வட்டியில்லாது ஒரு கடன் வாங்கிவிட முடியுமா? வட்டியே இல்லாது தமிழர் வாழ்ந்தது பொ.உ.மு.600 களுக்கும் முந்தை நிலையாகும். 

சங்க காலத்திலேயே (பொ.உ.மு.600-பொ.உ.220) நிறுவனப்படுத்தப்பட்ட நிலவுடைமையும், நகர நாகரிகமும் இங்கு வந்துவிட்டன. ”எவ்வளவு வட்டி வாங்குவது? வரி வாங்குவது” என்ற அளவிற்றான் பொருளியலாளர் தமக்குள் வேறுபட்டாரே ஒழிய வட்டியே தவறென்று யாருஞ் சொல்லவில்லை. கடன் கட்டுவாரிடம் அதிக வட்டி கேட்கக் கூடாதென்பது ஞாயமான பேச்சு.

உலகிற்கே பொதுவுடைமைக் கொள்கையை விரித்துரைத்த காரல்மார்க்சு கூட வட்டியையும், வங்கிகளையுந் தவறென்று சொல்லவில்லை. அவனுடைய ”மூலதனம்” நூலை முழுதும் படித்தபின் தான் இப்படிச் சொல்கிறேன். 

தவிரப் பல்லவர் காலத்திலிருந்து 18 ஆம் நூற்றாண்டு வரை கிடைத்த பல்லாயிரங் கல்வெட்டுக்கள் ”கோயிற் பணத்திற்குக் கூட பொலிசை கட்டுவதைக்” குறிப்பிட்டுத் தான் உள்ளன. கிட்டத்தட்ட 60000/100000 தமிழ்க் கல்வெட்டுக்கள் இருப்பதாய் ஒரு கணக்குண்டு. அதிற் குறைந்தது 50000 கல்வெட்டுக்களாவது நிலம், பணம், பொலிசை, அடைமானம் பற்றிப் பேசும். இப்பேரரசுகள் இருந்த போது தமிழர் வங்கி வைத்திருந்ததுண்டு. இல்லாவிடில் பேரரசுப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. இல்லையென்று சொல்லும் நீங்கள் ஆதாரங்களைக் காட்டுங்களேன்? எங்களைப் போன்றோர் அறிந்துகொள்ள முடியும்.

வைப்பகத்தில் யாரும் உழைப்பைச் சேமித்து வைக்கவில்லை ஐயா! பணத்தைச் சிலர் சேமித்து வைக்கிறார்; வட்டி பெறுகிறார். இன்னுஞ் சிலர் கடன் வாங்குகிறார்; வட்டி கொடுக்கிறார். நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு. வைப்பகமென்ற சொல் ஒரு பக்கத்தை மட்டும் பார்க்கிறது. அது முழுமை அல்ல. அப்புறம் உங்கள் உகப்பு. முதலாளியப் பொருளியலையும், சமவுடமைப் பொருளியலையும் ஆழ்ந்து படித்ததனாலேயே இப்படிச் சொல்கிறேன்.

அன்புடன்,
இராம.கி.   .

Monday, July 09, 2018

அனு

அவன், அவள், அவர், அது, அவையெனுஞ் சொற்களைப் புழங்குகையில் முதலில் வருவது ’அ’ எனும் சேய்மைச்சுட்டே. அதேபோல் (காலத்தைக் குறிக்கும் ’அன்று’ என்பதில் வருவதும் சேய்மைச் சுட்டே. அந்த, அப்படி, அவ்வளவு என்பதிலும் சுட்டுண்டு. அ>அன்>அன்ன என்பதில் ’அத்தன்மைய, அத்தகைய, ஒத்த, போன்ற’ சுட்டுப்பொருள் கொள்கிறோம். அ>அன்>அனை> அனைத்து என்பதில், ’அதோடு சேர்ந்த எல்லாம்’ எனும் பன்மைப்பொருள் குறிக்கிறோம். அனைய= அதோடு சேர்ந்தவை, அத்தன்மைய. அனைவரும்= அதோடு/அவரோடு சேர்ந்த எல்லாவரும். அல்லாவரும் என்பதே எ/யகரத் திரிவில் எல்லாவரும் என்றாயிற்று. அல்லாமும்= எல்லாமும். இப்படிப் பல மாற்றங்களும், பொருள்நீட்சியும் சுட்டுவழக்கில் நடந்துள்ளன. தவிர, உல்> ஒல்>அல் எனுந் திரிவால் நெருங்கல், கலத்தல், அடுத்தல், பொருந்தல், முடைதல், பின்னல் எனும் பொருள்களும் ’அல்தலுக்கு’ அமையும். ’அல்கல்’ என்பதும் தங்கற்பொருளைச் காட்டும். இவ்வளவு ஏன்? இருவேறு உள்ளங்கள் பொருந்தலைக் குறிக்க நாம் அல்>அன்>அன்பு என்கிறோமே?. அன்பு மட்டும் அல்ல. தென்பு, நன்பு, வன்பென்ற சொற்களும் கூடத் தமிழ்ச் சொல்லாக்கங்கள் தான். இப்படி இரு வேறு கருத்தீடுகள் (சேய்மைச்சுட்டு, அல்லுதற் சொல்) ஊறிக் கலந்து மேலும் பல புதுச்சொற்களை உருவாக்கும்.

இனி அல்லின் நீட்சி அள். அல்>அள்>அள்ளுதல்= நெருங்குதல், செறிதல், பொருந்துதல். அள்>அளி=அன்பு, அருள்; அள்>அர்>அருள்=இரக்கங்காட்டுதல் (அருளென்ற சொல்லேற்படும்முறை புதிதல்ல; தெள்>தெர்>தெருள் எனும் காட்டையும் பாருங்கள்.) எல்படும் நேரம் (1400-1800 மணி. எற்பாடு எனும் அழகிய சொல்லைத் தொலைத்துவிட்டோம்.) மாறி ஒளியுமிருளும் மலங்கும்/மயங்கும் மாலை (1800 -2200) தொடங்குவதை அந்தியென்பர். அந்து>அந்தி = எற்பாடும் மாலையும் கலக்கும் நேரம். அந்துதல்=கலத்தல். 2/3 தெருக்கள் கூடும் சந்தியையையும் அந்தி என்போம். உம்முதல்>உந்து> அந்து>அந்தி என்றிதைப் புரிந்தாலுஞ் சரி தான். அள்>அண்> அண்டு>அண்டல்=நெருங்கல்; அண்டை அண்மை, அயல் என்பன அருகிலுள்ள இடங்கள். அண்ணல், அண்ணித்தல், அணத்தல், அணவுதல், அணுகுதல் என்பன நெருங்கலையும் பொருந்தலையுங் குறிக்கும். இத்தனையும் தமிழெனில் முதலிற் சொன்ன அன்னுதலும் தமிழல்லவா? அன்னுதல்=நெருங்கல், கலத்தல், அடுத்தல், பொருந்தல், முடைதல், பின்னுதல். ஆர்தல் = பொருந்தல்; ஆர்வம்=அன்பு. இந்த வளர்ச்சியில் பல்வேறு ”அனு”- தொடர்பான சொற்களைப் பார்க்க இருக்கிறோம்.

அனுவெனும் முன்னொட்டில் தமிழ்ச் சொற்களுமுண்டு. இருபிறப்பிகளும் உண்டு. முற்றிலும் சங்கதச் சொற்களுமுண்டு. அடையாளந் தெரிய விடாது எப்பேர்ப்பட்டவரையும் கவிழ்த்துவிடுந் தன்மை சில சொற்களுக்குண்டு. நான் சொல்வதை மறுத்தும் சிலரெழுத முடியும். அதற்காக எனக்குப்பட்டதை நான் சொல்லாதிருக்க முடியாது. இச்சொற்களில் முடிந்த முடிவு இன்னும் எட்ட வில்லை. சங்கதத்திற்கும் தமிழுக்குமான உறவு நாட்பட்டது. அதைத் தூக்கித் தள்ளவும் முடியாது. எடுத்து உறவாடவும் முடியாது. முகநூல் சொல்லாய்வுக் குழுவில் பலரும் துவளும் பான்மையில் (defeatist mentality) எதை எடுத்தாலுஞ் சங்கதமென்று சொல்லி இருக்குந் தமிழையும் தொலைத்து விடுவார் போலவே உள்ளது. அந்தப் போக்கு தவறு. இருக்குஞ் சிக்கல்களை நேரடியாக எதிர்கொள்ளத்தான் வேண்டும். சாதிப் போர்வையும், மதச்சாயலும் போர்த்திய நிலவுடைமைக் குமுகாயம் சங்கதத்தைத் தூக்கிவைத்தது. நாம் எல்லோரும் கூடிப் போராடித் தான் ஒவ்வொன்றையுஞ் சரி செய்ய வேண்டும்.]

முதலில் வருவது அன்னுவயம். இதன் பொருள் அடுத்தவரோடு கொள்ளும் வயம்/உறவு/பற்று என்பதாகும். இது தமிழே. அன்னுவயித்தல்= அடுத்தவரைப் பின்பற்றல். அன்னியன்= அடுத்தவன் எனவே பிறன். அடுத்தவன்/அயலானோடு கொள்ளும் ஒற்றுமை அன்னிய ஒன்னியம். ஒன்னியமென்பது ஒன்றியத்தில் கிளைத்தது. அன்னிய ஒன்னியம் என்பது சங்கதப்புணர்ச்சியில் அன்னியோன்னியம் ஆனது. ஆனால் சொல்லின் உள் இலங்குவது தமிழே. தமிழ்ப்புணர்ச்சியில் உடம்படுமெய் ஊடுவந்து அன்னியவொன்னியமாகும். அன்னுதல்= அதுபோலாதல். இதற்குப் படியெனப் பொருள் கொள்வார். தமிழ்ச் சொல்லான ’படி’, சங்கதத்தில் ப்ரதியாகும். பல்வேறு முகன (=நவீன) எழுத்தாளருக்கும் ப்ரதியை பிரதியென எழுதுவதில் கொள்ளை ஆசை. என்னைக் கேட்டால் சங்கதப் ப்ரதியைத் தூக்கியெறிந்து தமிழ்ப் “படி”யை வைத்துக்கொள்ளலாம். அனுக்காட்டல்= குறிப்புக்காட்டல். ஒன்றின் இருப்புக் காட்டுவது அனுக்காட்டல். இதுபோற் பலசொற்களில் ’அனு’வை அடுத்ததெனப் பொருள்கொள்ளலாம்.

அனுக்கிரகம் = அருள், இரக்கம். ஒருவரோடு அருகிருப்பதால் ஏற்படும் நெகிழ்வு. இதுவோர் இருபிறப்பிச் சொல். அனுக்கருமம் = ஒழுங்குமுறை, அடுத்தடுத்துச் செய்யும் முறை. தமிழ்ச்சொல் கருமம் சங்கதத்தில் க்ரமம் ஆகும். காரியஞ் செய்யும் முறையையே (காரியம் கருமத்தின் இன்னொரு சங்கதத்திரிவு.) க்ரமமென்பார். அனுக்கை = அடுத்திருக்கும் நிலை. அதற்கான இசைவு, அனுமதி. இனி, அனுச்சை, அனுஞ்ஞை என்ற சொற்கள் அனுக்கையின் திரிவுகள். அனுகதம்= அடுத்துவருவது. கதித்துவருவது, துள்ளிவருவது. ஒருகாலத்தில் 1960 களில் நாங்களெல்லாம் கதியை velocity க்கு இணையாகப் பயன்படுத்தினோம். இன்றும் அதைப் பயன்படுத்தலாம். அது என்னவோ தெரியவில்லை. இற்றை இளைஞர் ’கதி’யைத் தொலைத்து விட்டார். பலரும் இன்று சொல்லும் திசைவேகம் என்பது சுற்றி வளைத்துச் சொல்வது. அனுகதம் என்பது அடுத்துவரும் ஓசையெனப் பொருள்கொள்ளும். கதம் = ஓசை. பேச்சு அனுகம்பம் = இரக்கம். கம்பம்= நடுக்கம். இரக்கமென்பது கம்பத்திற்கு நெருங்கிய உணர்வு. இரக்கங்கூடியவர் நடுங்கவுஞ் செய்வார். அனுகமனம்= உடன்கட்டையேறல். கமத்தல்= பரவுதல்; கமனம்= செல்லல். உடன்கட்டையேறும் முட்டாள்பழக்கம் இது தமிழரிடமும் இருந்திருக்கிறது. புறநானூற்றில் பூதப்பெண்டு உடன்கட்டையேற முற்பட்டாளே? நாமேதொ, உயர்த்தி என்று எண்ணிக்கொள்ளவேண்டாம். மற்ற இந்தியர்போல முட்டாள் பழக்கங்கள் நம்மிடமும் இருந்துள்ளன.

அனுகரணம்= ஒன்றின்செயல்போற் செய்வது. கருமத்திற்கு இன்னொரு தமிழ்ச்சொல் கரணம். அனுகரணவோசை=ஒலிக்குறிப்பு ஒன்றைப்போல் இன்னொன்றைச் செய்வதால் வரும் மெல்லொலிக் குறிப்பு. ஓமின் இம்மை நீட்டி ஏற்படுமோசை. (இத்தப் பழக்கம் இசைபாடுவோரிடம் உண்டு. ”ஊம்ம்ம்ம்ம்ம்ம்......” என்று பாடத்தொடங்குமுன் இழுப்பார்கள். வடமொழி எழுத்தில் அம்மெனும் உயிரெழுத்தின் ஈற்றில் வரும் ஓசை. தமிழைக் காட்டிலும் வடமொழிப்பங்கே பெரிதும் ஆனது. அனுகரித்தல் = ஒன்றினைப் போல் ஒழுகுதல். கருத்தல்/கரித்தல் = செய்தல். அனுகூலம்= உதவி. அடிப்படையில் கூலம் = தானியம் (தானியம் என்பது வடசொல். அதற்கு இணையான கூலம் தமிழ்) வேளாண்மையில் உடன்வேலை செய்பவர்க்கு கூலங் கொடுத்ததால் அது கூலி ஆயிற்று,. கூலச்சொல் என்பது செய்யும் வேலைக்கும் கூடப் பெயராயிற்று. அனுகூலம் = செய்யும் முகனவேலையில் (main work) உதவியாவது.. அனு சந்தானம் = இடையறாது ஓதுகை. இருபிறப்பிச் சொல்.

இற்றை இலாகூருக்கருகில் பழகிய, பாணினியின் வட்டார மொழிக்குச் சந்தமென்ற பெயருண்டு. பாணினி காலத்தில் சங்கதமென்ற பெயரே கிடையாது. (முகநூல் சொல்லாய்வுக்குழுவில் ஓர் அன்பர் சங்கதமென்று சொல்லக் கூடாது. சம்ஸ்க்ருதமே சரியென்றார். இதெல்லாம் நாம் சங்கதத்தின் மேற்கொள்ளும் தேவையற்ற வழிபாட்டுப் பழக்கம். கதத்தின் முதல் அகரவொலியை விடுத்து ’ரு’ எனும் வடமொழி உயிரொலியைச் சேர்த்தால் கதம் க்ருதமாகும். இது வடமேற்கிந்திய வட்டாரப் பலுக்குமுறை. சம்முக்கும் க்ருதத்திற்கும் இடையில் ஸ் எனும் இடைநிலையைச் சேர்த்தால் சம்ஸ்க்ருதம் ஆகும். இதெல்லாம் அந்தூர் வட்டார வழக்கு. சங்கதம் என்பது தென்னக வழக்கு. ”நம்மூர் வழக்கு தப்பு, வடமேற்கு இலாகூர் வழக்குத்தான் சரி” என்பது அடிமைப் புத்தி. நம் வழக்கில் எந்தக் குறைச்சலும் இல்லை. இதை ஆனானப்பட்ட ஞானசம்பந்தரே தேவாரத்தில் சங்கதம் என்று பயன் உறுத்தியுள்ளார். பிறகென்ன? சம்ஸ்க்ருதம் என்று சொல்வது, ”ஆங்கிலந் தப்பு, இங்கிலீஷே சரி” என்பது போலுள்ளது. நமக்கெது வாகோ/தோதோ அதைச் சொல்வதில் தவறென்ன? தமிழராகிய நாம் ஏன் இப்படிப் பெருமிதமில்லாது இருக்கிறோம்? தமிழென்றால் மட்டமா?)

பிற்காலத்தில் மகத அரசுகளின் காலத்தில் சிறப்புற்ற மாகதம்/பாகதம்= பெரியபேச்சு/பரவியபேச்சு, அருத்த மாகதம் (= பாதி மாகதம்) என்ற வட்டார மொழிகளோடு சந்தம்/பாஷா கலந்து சம்+கதம் (கலப்புப் பேச்சு) என்பது உருவானது. சந்த மொழி அதிகமிருந்து மற்ற வட்டார மொழி வழக்குகள் குறைந்தால் அது செங்கதம் (செம்மையான பேச்சு) எனப்பட்டது. எப்படி மதுரை சுற்றிய பேச்சு ஒரு காலத்தில் செந்தமிழெனப் பட்டதோ அதுபோல் செங்கதம் என்பது தரமான மொழியாகக் கொள்ளப்பட்டது; அவ்வளவு தான். எப்படிச் செந்தமிழிலிருந்து தமிழெழாதோ, அதேபோல் செங்கதத்திலிருந்து வடமொழி எழாது. வடமொழி திருந்திச் செங்கதமானது என்பதே சரி. ’வடமொழி’ என்றசொல் செங்கதத்தைக் குறிக்கவில்லை. அது மாகதம், பாகதம், அருத்த மாகதம், பாலி எனப் பல்வேறு பேச்சுக்களை ஒரேயொரு ஒற்றைச்சொல்லால் பழந்தமிழிற் குறித்தது. தன்நூலில் சந்தஸ் மொழிக்கும் தம் வட்டாரப்பேச்சு (பேச்சு>basha) மொழிக்குமே பாணினி இலக்கணமெழுதினான். இருக்கு வேதம் சந்த மொழியில் இருந்ததாகவே சொல்லலாம். பல்வேறு மந்திரங்களை இதன் காரணமாகவே சந்தானமென்பர். சந்தத்திற் சொல்வது சந்தானம். மந்திரங்கள் என்ற பயன்பாட்டுப் பொருள் வரும்.

அனுசரணம், அனுசரணை, அனுசரித்தல் = சார்ந்தொழுகுதல். சாரணம், சாரணை, சாரித்தல் என்பவை வடநாட்டுப் பலுக்கலில் அப்படியானது. சாகாரம் வந்தால் அவை தமிழாகி விடும். அனுத்தல் = சார்தல்; அனு சாரி = பின்பற்றுபவன். அனுசன் = அடுத்தவன்; அனுசை = அடுத்தவள். அனியன், அனியத்தி என்றும் மலையாளத்தில் வழங்கும். அடிப்படையில் இது தமிழே. சட்டெனப் பார்க்கையில் வடமொழித் தோற்றங் காட்டுகிறது. இராமனுக்கு அனுசன் இராமனுசன். இச்சொல் இலக்குவனைக் குறிக்கும் பெயராகும். அனுசாகை = கிளைக்கு அடுத்தது; கிளைக்குள் கிளை மறவாதீர் சகுத்தது சாகை. நல்ல தமிழ். சகுத்தல்>செகுத்தல்= பிரித்தல், வெட்டுதல். இருக்கு, யசுர், சாமம் போன்ற வற்றில் பல்வேறு சாகை பிரிப்பர். பெருமானருள் இன்ன கூட்டம்>கோத்தம்>கோத்ரம், இன்ன சாகை என்றும் பிரிவு சொல்வர். அனுசாகை = கிளைக்குள் கிளை. பயன்பாடு சங்கதத்திலும், இதன் உள்வேர் தமிழிலும் இருக்கிறது.

அனுசாசனம் = அறிவுரை, அறவுரை. சாசனம் என்பது அரசனின் சீர்த்தி சொல்லி ”இப்படியிப்படி நடக்கவேண்டுமெ”ன்று பொதுமக்களுக்கு உரைக்கும் வடசொல். கட்டளையிடுவது என்று பொருள் கொள்ளும். சாற்றம் என்பது அதிகாரத்தோடு சொல்வதற்கான நல்ல தமிழ்ச்சொல். சுருதி என்பது செவிமடுப்பது. செவியோடு தொடர்புடைய செவுதி என்ற சொல், ரகரஞ் சேர்த்து ஸ்ருதியாயிற்று. எழுதாக்கிளவி என்று சங்கநூற்கள் இதைச் சொல்லும். சுருதி என்பவை மனப்பாடமாய்க் கேட்டப்பட்டவை. அனுசுருதி. மனப்பாடங் கேட்பவையோடு சேர்ந்தவை. துணைக்கு உதவும் சில செய்திகள். அனு சுருதி= சுருதியைச் சேர்ந்தது. .அனுசூதம்= இடைவிடாது சூழ்ந்திருப்பது. அனு சூதன் = விடாது தொடர்ந்திருப்பவன். சூழ்தல்>சூதமாகும். சூழ்தன் சூதனாவன். ழகரம் வந்துவிட்டால் உள்ளிருக்கும் தமிழ்மை புரிந்துவிடும். இங்கே ழகரம் மறைந்து நிற்பதால், உள்ளிருக்கும் தமிழ்மை சட்டெனப் புரியவில்லை. அனுத்தானம் = அனு+தானம் = ஒழுக்கம். இதை வலுக் கட்டாயமாய் அனுட்டானம், அனுட்டித்தல் என்றாக்கிச் சிவநெறியார் (சைவர்) பழகுவர். அனுத்தானம் என்று சொல்லிவிட்டால் முற்றிலும் தமிழாகிப் போகும். அனுத்தானித்தல் = ஒழுகுதல் தானத்தை த்யானம் என்று இன்னொரு முறையில் திரித்து சிந்தனையொழுங்கைக் குறிப்பிடுவார். நாமோ த்யானம் என்ற வடமொழிப் பலுக்கைப் பிடித்துத் தொங்குவோம். தானம் என்று சொல்லிப்பழகுங்கள். உள்ளேயிருக்கும் அழகுதமிழ் விளங்கிப்போகும். எத்தனை தமிழ்ச்சொற்களை இப்படி இழந்திருக்கிறோம், தெரியுமா? 

அனுத்தாவம் = இரக்கம்; தவிப்பது தாவம். மீண்டும் நல்ல தமிழ். தவிக்கும் வினை தமிழ்தானே? அனுதாவம்>அனுதாபம் என்றாக்கிப் பகரவோசை பழகுவது வடமொழித்தோற்றங் காட்டுவதற்குத்தான். தினம் என்ற தமிழ்ச் சொல்லில் தகரத்தை d எனவொலித்து வடசொல்லாக்கி அனுதினம் =அடுத்தடுத்த நாள் என்றாக்குவதும் சங்கதத்தாக்கம் தான். (தீ = ஒளி. அன்றாட வொளியைத் தினம் என்றோம். அனுத்தினம் என்பது தமிழ். அனுபந்தம் = உறவின் முறை, பிற்சேர்க்கை. பந்தம் என்பது உறவு. இதுவும் நல்ல தமிழ்ச் சொல்லே. இதன் பகரத்தை b என்றொலிப்பதே தவறு. அனுப்பந்தம் என்பது தமிழ். பல்லவி என்பது வடசொல். எடுப்பு என்பது அதற்கு இணையானது. அனுபல்லவி என்பது இருபிறப்பி. தொடுப்பு என்பது அதற்கு இணையான சொல். பவத்தல் என்பது படுத்தல் பொருள் கொண்டது. பவத்திலின் நீட்சியாய்ப் பாவித்தல் என்றசொல்லை ஈழத்தார் பயில்வார். அனுபவம் = பட்டறிவு. அனுபூதி = பட்டறிவு. பூது = physical என்ற பொருள் கொண்ட நல்ல தமிழ்ச்சொல். இதைக்கொண்டு தான் இயல்பியலுக்கு மாற்றாய்ப் பூதியல் என்று உரைத்தேன். (நாடெல்லாம் பரவிக் கிடக்கும் இயல்பியலை 1967-68 களில் மொழிந்தவனும் அடியேனே. எப்படியோ அது இயற்பியலென்று தவறாக நிலைபெற்றுவிட்டது. ஒருவர் கூட இன்னுங் கேள்வி கேட்கக் காணோம். இயற்பென்ற சொல்லே தமிழிற் கிடையாது தெரியுமோ? இயல்பே சரி. ஆனாலும் இயற்பியல் என்ற தவறான சொல் புழங்கிக்கொண்டே இருக்கிறது.  சொல் படைத்தவன் நிறுத்திவிட்டேன்.) பூதியலின் விளக்கம் பெரியது. ”பூதியல் இராம.கி” என்று இணைத்துவைத்துக் கூகுள் பண்ணிப் பாருங்கள் ஏராளங் கிடைக்கும்.

அனுமதி = அன்னோடு (அதோடு) நெருங்குவதற்குக் கொடுக்கும் இசைவு/ஒப்புதல்; அனுமானம் = அதோடு சேர்த்து கருதல்; அனுமோனை = அதோடு சேர்ந்த மோனை; அனுவட்டம் = அதோடு சேர்ந்த (கிட்டத்தட்ட) வட்டம்; அனுவுரு = அதோடு சேர்ந்த உரு, அனுவெதுகை = அதோடு சேர்ந்த எதுகை. அனுப்பு = அதோடு சேர்த்துப் போகச்செய்தல். இது அன்றாடம் அஞ்சல் அனுப்பும் போது நாம் பழகும் வினைச்சொல்

அனுவோடு சேராத ஒரு பொருள் நொகை (negative) ப்பொருள் கோட்டும். அல்லுதல். ”அது அல்ல”  என்கிறோமே? அந்தப்பொருள் அன்றுதல் = மாறுபடுதல். இன்னொரு அசைவுச் சொல்லும் உண்டு. அல்>அலு>அலுங்கு>அனுங்கு>அனுக்கு>அனுக்கம் = அசைவு.

அன்புடன்,
இராம.கி.

Saturday, July 07, 2018

அணில்

இந்த இடுகையில் அணிலின் கதையை விளக்கப்போகிறேன் ஒருமுறை அணிலின் சொற்பிறப்பை விளக்குவதாய்ச் செள்>செண்> செணி>செணில்> சணில்>அணில் என்று திரு.நாக.கணேசன் இட்ட முன்னீட்டை அசை போட்டபோது இந்த எடுகை எழுந்தது. தான்கொண்ட தேற்றத்திற்குத் தக்க விந்தையாய்ச் சொற்களை வளைப்பது திரு.கணேசனின் வழக்கம். இவருக்கு எப்போதும் தான்சொல்லும் தேற்றங்களே முக்கியம்; சிக்கல்தரும் பட்டகைகளைத் (facts) தூக்கி வெளியேகடாச என்றுந் தயங்கமாட்டார். இப்படி இவர் தொடர்ந்துசெய்வதைப் பல்லாண்டுகள் பார்த்துவருகிறேன். முதலில் சில தமிழ் மடற்குழுக்களிலும், பின் ஆங்கில மடற்குழுக்களிலும் தன் ”கண்டுபிடிப்புக்களைப்” போடுவார். எக்கச்சக்க இணைய இணைப்புக்களை எப்போதும் தன்மடல்களில் இவர் விரவித் தெளிப்பதால், “படிக்கக் கிடைக்கிறதே? இவரில்லாவிடில் நாமெங்கே இவற்றைத் தெரிந்து கொள்வோம்?” என்ற சோம்பலிற் பலரும் இவரைக் கேள்வி கேட்பதில்லை. தவிர, கூறியது கூறலை இவர் விடாது செய்வார்.

நாலுந்தெரிந்த தமிழாய்வரென்று இவரைப் பலரும் எண்ணிக்கொள்வதால், இவர் பாடு கொண்டாட்டம். அந்நாளைய ஆய்வர் பெயர்களை அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பதிந்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் இவர் சமைத்த விந்தைத் தேற்றங்களை அள்ளித் தெளிப்பார். ”எது பழையவருடையது, எது இவருடையது?” என்று நாம் பிரித்தறிவது பெரிதுங் கடினம். எப்பொழுதும் கழுவும் மீனில் நழுவும் மீனாய்த் திகழ்வார். இவர் கூற்றுக்களின் முறைமை, சரித்தன்மையைக் கேள்வி கேட்கப் பலரும் அணியமாவதில்லை. எங்களூர்ப் பக்கம் ”ஆலையிலா ஊருக்கு இலுப்பைப்பூச் சருக்கரை” என்பர். அப்படித்தான் ஆகிறது. (எங்கள் ஊருக்குப் பக்கத்தில் இலுப்பைக்குடி இருக்கிறது.) ஆழமான தமிழாய்வர் குறைந்து போன இந்நாளில் இவர்போன்றவர் ஆடுவது ஒய்யாரத் தாண்டவமாய்ப் பலருக்குத் தோன்றிவிடுகிறது.

(1 காதம் = 12மைல் என்பது இவரது கண்டுபிடிப்பு! கண்டுபிடிப்போடு மட்டுமின்றி கவுந்தியை அலாக்காய்த் தூக்கிக் கர்நாடகாவில் வைப்பார். பாவம் அந்த சமண மூதாட்டி! திருச்சித் திருவரங்கத்தை உருமாற்றிக் கர்நாடகச் சீரங்கப் பட்டினம் ஆக்குவார். சோழநாட்டு உறையூரை ”சூ, மந்திரக்காளி”யென இல்லாதது போல் ஆக்குவார். முடிவிற் சிலம்பைப் புதினமென அடித்துச் சொல்வார். உண்மையில் தென்புல அடிப்படையில் 1 காதமென்பது 4.167 மைல். வடபுல அடிப்படையில் 2.089 மைல். நண்பர் கணேசன் பெரும்பாலும் அருத்த சாற்றம் படித்ததில்லையென்றே தோன்றுகிறது. என்றுமே மூலம் (அர்த்த சாஸ்திரம், 2 ஆம் பாகம், 20 ஆம் அத்யாயம் “மாநாத்யக்ஷோ தேசகாலமானம்” என்று தொடங்கும் பகுதி) படிக்காதவரான இவர் குறைந்தது திரு. L.N.Rangarajan மொழிபெயர்த்து Penguin 1992 இல் வெளியிட்ட Kautilya - The Arthashastra என்ற நூலையாவது - பக்கம் 763/764 - படித்தால் காதம் பற்றிய தவற்றைப் புரிந்துகொள்ள வாய்ப்புண்டு. பரிந்துரைக்கிறேன்.)

இவருடைய சொற்பிறப்பு முறையை மறுக்கவேண்டுமெனில் ”உயிரொலிகள் எப்படி வாய்வழி பிறக்கும்? அவை திரிவதற்கான இயலுமைகளென்ன?” என்றுநாம் அறியவேண்டும். இவர் சொல்வதுபோல் ஏதொன்றும் கண்ட மேனிக்குத் தான்தோன்றியாய்த் திரிந்துவிடாது. எல்லாவற்றிற்கும் ஓர் ஒழுங்குமுறை, ஏரணம் வேண்டும். இம்மடலில் மெய்யொலிகளைப் பேசாது உயிரொலிகளை மட்டுமே பேச விழைகிறேன். ”பேச்சொலியியல்” என்று சி. சுப்பிரமணியன் எழுதி பாளையங்கோட்டை நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம் வெளியிட்ட நூலிலிருந்து 4 படங்களை இணைப்புக் கொடுக்கிறேன். வாசிப்போர் ஆழ்ந்து படங்களைக் கவனியுங்கள்.





இப்போது காற்றால் ஒலி எப்படி ஏற்படுகிறதென்று பார்ப்போம். ஒரு குழாயின்வழி காற்றோட்டம் செல்கிறதென வையுங்கள். குழாயின் குறுக்குச் செகுத்தம் (cross section), உட்பரப்பின் மேடுபள்ளம், சுவரின் சுரசுரப்பு ஆகியவை பொறுத்துக் காற்று, குழாயில் உராய்வதாலேயே ஒலியேற்படுகிறது. உராய்வு கூடின், ஒலி வெள்ளங் (volume) கூடும். குழாயின் தொடக்கத்திலிருந்து எந்தெந்த இடங்களில் குழாயோடு உராய்வு ஏற்படுகிறதென்பதைப் பொறுத்து ஒலி, பட்டிகை (pitch) போன்றவை மாறும். பொதுவாக வழவழப்பான குழாயில் ஒலி குறைந்தே எழும். இப்போது வாயொலிகளுக்கு வருவோம்.

பொதுவாய் நுரையீரலிலிருந்து மூக்கின் வழி வெளிப்படுங் காற்றை, வாய் வழியும் வெளியேற்ற முடியும். தொண்டையிலிருந்து வாய்க்குக் காற்று வருகையில், நாவின் தசைத்திரட்சி, உருட்சி, வளைவு ஆகியவற்றையும், மேலண்ணத்தையும் பொறுத்து வாயின் குறுக்குச்செகுத்தம் மாறுபடலாம். இம்மடலோடு கொடுத்துள்ள 4 படங்களில் முதற்படத்தில் வாய், நாக்கு, அண்ணம் ஆகியவற்றின் பெயர்விளக்கம் இருக்கிறது. இரண்டாவது படத்திலுள்ள தோற்றங்கள் முன்னுயிர் (front vowels), பின்னுயிர்களைப் (back vowels) பலுக்கையில் நாவளைவு எப்படி மேலண்ணத்தை நெருங்குமென்பதை விளக்குவதைக் காணலாம். ”நா எப்படி வளைகிறது? மேலண்ணத்தின் எப்பகுதியை நாவளைவு நெருங்குகிறது?. வாயிதழ்கள் எப்படி அமைகின்றன?” என்பவற்றைப் பொறுத்தே இவ்வுயிர்கள் அமையும். மூன்றாவது படம் ஒரு பட்டியலைத் தருகிறது. நாலாவது படம் இரண்டாம் படத்தை வேறுமுறையில் விளக்குகிறது.

மேலண்ண முன்பகுதியை (மண்டையோட்டின் மேல்தாடை எலும்பின் காரணமாய்) வல்லண்ணமென்றும் பின்பகுதியை (தொண்டையின் மேல்தசைப் பகுதியாதலால்) மெல்லண்ணமென்றுஞ் சொல்வர். இந்த அண்ணத்தில் மேல்தாடை எலும்பை ஒட்டிய பகுதியைத் தலையண்ணம் என்றும் அடுத்து வாய்க்குள் சற்று உள்தள்ளிய இடத்தை முன்னண்ணம் என்றும், மேலண்ண உச்சியை நடுவண்ணமென்றும், அடுத்து வாய்க்குள் உள்தள்ளியதைப் பின்னண்ணமென்றும், அதற்குந்தள்ளித் தொண்டையின் மேல்தசைப் பகுதியை ஒட்டியதைக் கடையண்ணமென்றும் ஐந்து வகையாய்க் குறிப்பர் (அதாவது தலை, முன், நடு, பின், கடை அண்ணங்கள்). இதேபோல நாவிலும், நுனிநா, முன்நா, நடுநா, பின்நா, கடைநா என்று 5 பகுதிகளுண்டு.

வளையக்கூடிய நாவை முற்றிலும் கிடையாக்கி, எந்த அண்ணத்தையும் தொடாது காற்றை வெளித்தள்ளுவதை அங்காத்தலென்பர். அடிப்படையான அகரவொலி என்பது அங்காத்தலிற் பிறக்கும். அடுத்து மேற்கூறிய நுனிநா, முன்நா, நடுநா, பின்நா, கடைநா ஆகியவற்றை பொருத்தினாற்போல் வளைவாக்கி, மேலண்ணத்தின் எப்பகுதியில் நாவுச்சி நெருங்குகிறதோ, அங்கு காற்றோட்டப் பரப்பு (இதைத் திறவை opening என்று சொல்லலாம்.) குறுகினால் (constricted), காற்றோட்டத்திற்குத் தடையேற்படும். இக்குறுக்கம் பின் அண்ணமும் பின்நாவும் பொருந்தும்படி அமைந்து, இதழ்கள் குவிந்தால் உகரவொலி தோன்றும். இக்குறுக்கம் முன்னண்ணமும் முன்நாவும் பொருந்தும்படியமைந்து இதழ்கள் விரிந்தால் இகரந்தோன்றும். உகரத்திற்கும் அகரத்திற்கும் நடுவே பின்நா எழுந்தால் ஒகரமும், குற்றியலுகரமும் பிறக்கும், இகரத்திற்கும் அகரத்திற்கும் நடுவே, முன்நா எழுந்தால் எகரமும், குற்றியலிகரமும் பிறக்கும். (2 ஆம் 4 ஆம் படங்களை நன்கு கூர்ந்து கவனியுங்கள்.)     

இவ்விதப் பலுக்கல் முறையால் தமிழில் உயிரினத் திரிவில் உகர முதலெழுத்து அகரமாயும், இன்னுந் திரிந்து இகரமாயும் திரிவதே பெரு வழக்காகும். அதேபோல ஊகாரம் ஆகாரமாயும், ஈகாரமாயும் திரியலாம். சில இடங்களில் உயிரினத் திரிவோடு மோனைத்திரிவும் ஏற்பட்டு, அகரம் எகரமாயும், ஒகரமாயும் திரிவதுண்டு. ஆனால் அங்காத்துப் பிறக்கும் அகரம் குறுக்குச் செகுத்த உகரமாயோ, இகரமாயோ ஆவது பெரிதுமரிது. இதே போல நடுவிலெழும் எகரம் அகரமாவதும், நடுவிலெழும் ஒகரம், அகரமாவதும் மிக அரிது. காட்டாகப் பருக்குதல் என்றசொல்லை எடுத்துக்கொள்ளுங்கள், இது பேச்சுவழக்கில் பெருக்குதலாகலாம். அதே போல திருநெல்வேலிப்பக்கம் கட்டுதல் என்பது கெட்டுதலாகும்; பலம் பெலமாகும். ஆனால் தலைகீழ் முறையாய் எகரம் அகரமாகிப் பெருக்குதல்> பருக்குதல் ஆனதாயும், கெட்டுதல்>கட்டுதல் என்றும், பெலம்>பலம் என்றும் அமைந்ததாய் யாருஞ் சொல்லி நான் எங்கும் கேள்விப்பட்டதில்லை. தமிழரின் சொற்பலுக்கலுக்கு மாறாய், செணில்>சணில் என்று நா.கணேசன் கூறுவது பேச்சொலியியலுக்கே புறம்பானது. இயல்பான முறையில் அப்படித் தமிழ்ச்சொற்கள் எழுவதை நான் பார்த்ததில்லை.

இன்னொரு விதியையும் திரு.கணேசன் சொல்லிப்போவார். ச், ந், ம் ஆகிய மெய்யொலிகள் முதலிலிருந்தால் அவை மறைந்து உயிரொலிகளாய்ப் பலுக்குவது தமிழருக்கு இயற்கை என்பார். இவர் சொல்வதுபோல் முதற்குறை மட்டுமே சொல்லாக்க வழியென்பது ஒருபக்கப் பார்வை. இதற்குக் காட்டாய் இங்கே சணிலென்ற சொல்லின் முதற் சகர மெய்யெழுத்து அழிந்து அணில் என்ற சொல் ஏற்பட்டதென்பார். ஆனால் சணிலு என்று இவர்காட்டும் சொல்மட்டும் துளுவிலில்லை தணிலு என்ற சொலொன்றும் அங்கே அணிலுக்குச் சொல்லப்படும். சணிலை முதற்சொல்லாய்க் காட்டினால் பின் துளுவின் தணிலுக்கு என்னசெய்வது? ஒருவேளை சகரம் தகரமாகுமோ? பொதுவாய்த் தகரம் சகரமாவதையே நான் கேள்விப்பட்டுள்ளேன். மிகவும் வாய்ப்பாகத் தணிலு என்ற சொல்லின் பட்டகையை திரு. நா.க. தன் முன்மொழிவில் மறைத்துவிட்டார். இடைஞ்சலான பட்டகைகளை மூடிமறைப்பது அவருக்கு எப்போதுமே வாடிக்கை. தவிர, பழங்கன்னடத்தில் சணில் உள்ளதென இவர் சொல்கிறார். ஆனாற் சான்றெதுவும் காட்டவில்லை. சணிலு என்ற சொல்லும் துளு, கன்னடத்தில் எப்பொழுதிலிருந்து புழக்கத்திலிருக்கிறதென்றும் இவர் விளக்கவில்லை. எல்லாமே ஒரு வகையான “குண்ட்ஸாகவே” இவருக்கு ஆகிறது. இவருக்குத் தோன்றியதைப் பந்தெனக் கருதி அடித்துவிட்டார். நாம்தான் இனிப் பந்தைத் தேடிப்போய் மறுபக்கஞ் செலுத்தவேண்டும்.

இதற்குமாறாய் முதல்மிகை என்பதும் சொல்லாக்கத்தில் ஒரு வழியே. தமிழ் அணிலிருந்து சகரஞ்சேர்த்து துளுவில் சணிலு என்று சொல்லக்கூடாதோ? (இத்தனைக்கும் ’அணில்’ பெரும்பாணாற்றுப்படை 85, குறுந்தொகை 41-4, 49-1, புறநானூறு 307-4 என்ற வரிகளிலுண்டு. மேலும் வரிப்புறம், வெளில் என்ற சொற்களும் தமிழிலுண்டு. அணிலைக் குறித்த வெளில் என்ற சொல் (பட்.172, மலை.326, நற் 12-3, பதி.84-3, கலி 97-16, அக.12-7, 109,6, புற.44-3, 127-3, 220-4.) போன்றவற்றிலுண்டு. வெளில் கன்னடம், துளுவில் வருகின்றதா, என்ன? வெளிலென்ற தமிழ்ச்சொல் இங்கேயே இருக்கும்போது சணிலு என்ற துளுச்சொல்லைத் தமிழிற் கடன்வாங்கிச் சகரந்தொலைத்து ஏன் அணிலாக்க வேண்டும்? உறுத்தை என்ற இன்னொரு சொல்கூடத் தமிழிலுண்டு. (இதன் இணைச்சொற்கள் தெலுங்கு, கன்னடத்திலுண்டு.) ஆனால் இது சங்க இலக்கியத்தில் பயிலவில்லை. ஆய்வுசெய்வோர் இத்தனை அணிற் சொற்களையும் ஒருசேரப் பார்க்கவேண்டாமா? வெறுமே சணிலு> அணில் என்று ஓசையைப் பார்த்து தேற்றஞ் சொல்வதில் என்ன ஞாயம் இருக்கிறது?

அதுவென்னவோ தெரியவில்லை. நா.கணேசன் மாதிரி ஆய்வாளர் ஒன்றை ஞாயமென்றும் இன்னொன்றை மறுப்பதற்கும் என்றுமே காரணஞ் சொல்வதில்லை. இன்னொரு சிக்கலும் திரு. நா.கணேசன் முறையிலுண்டு. பெயர்ச்சொற்கள் தங்களின் பொருண்மையால் எப்படி எழுகின்றன? செய்பொருள் என்பதாலா? செயப்படு பொருளாலா? செய்கருவியாலா? செய்தொழிலாலா? செய்யும் வினையென்ன? - என்று எதையும் விளக்காது, திரு.நா.கணேசன் போன்றோர் ”முதலில் இந்தவொலி, பிறகு இன்னொரு ஒலி, அப்புறம் வேறொருவொலி” என “அத்தரி பாச்சா” வேலைகாட்டுகிறாரே ஒழிய, பொருட் தொடர்பைச் காட்டுவதில்லை. பாவாணர்வழி வந்தோருக்கு பொருளே முதற் கைகாட்டி.பொருளைக் கைப்பிடித்துச் செல்லாததாற்றான், இந்தாலசிக்காரர் (Indologists) பெரும்பாலும் தடுமாறுகிறார். திரு.நா.க அடிப்படையில் பாதி இந்தாலசிக்காராரே.. வேண்டும் என்கிறபோது பாவாணர் பக்கம் வேண்டாதபோது இந்தாலசி பக்கமெனத் தடுமாறுவார். 

சரி அணில் என்ற சொல் எப்படியெழுந்திருக்கலாம்? அணிலைப்போல் மயில், குயில் (>குகில்>கொகில்>கோகிலம்) குக்கில் (= செம்போத்து) என்ற சொற்களுமுண்டு. இல்லெனும் ஈற்றிற்கு பெரும்பாலும் இருப்பது (being) என்றே பொருளுண்டு. மையாய் (கருப்பாய்) இருப்பது மயில். குய்யிக் கூவுவது குயில்; குக்கி குரலெழுப்புவது குக்கில். இதே போக்கிற்றான் அணிலுக்குப் பொருள்காண முடியும். அண்டுதலென்பது ஒட்டுதல். அண்டி/அண்டு என்பது ஒட்டிக்கிடக்கும் வால். முந்திரிப்பழத்தின் கீழே ஒட்டியிருக்கும் பருப்பு அண்டிப்பருப்பு. மர முந்திரிக் கொட்டைக்கு அண்டிமாங் கொட்டை என்று பெயர். அண்டியென்பது மலையாளத்தில் பொருள் நீட்சி பெற்று, வெளிநாட்டிலிருந்து இறக்குமதியான நிலக்கடலையைக் கப்பலண்டி என்பர். அண்டி/அண்டு தள்ளுகை என்பது ஆசனவாயின் உட்பகுதி வெளித்தள்ளி குறுவால் போல் நீட்டிக் கொண்டிருத்தல். பெண்ணுறுப்பின் சதை நழுவி வெளியே வந்தாலும் அதையும் அண்டு தள்ளுகை என்றே சொல்வர். அண்டின் முழு மெல்லின ஆக்கம் அண்ணு. அதன் பொருளும் வால் தான். அண்ணு+இல்= அண்ணில்>அணில்= வாலுயிரி. அவ்வளவுதான் அணிலின் பெயர்
   .   
அணிலுக்கு இன்னொரு பெயர் வெளில். இங்கேயும் வெளியே தொங்குவதால் வாலுக்கு ’வெள்’ ஆகுபெயராயிற்று. வெள்+இல்= வெள்ளில்>வெளில். சூடாமணி நிகண்டின் படி விலங்கின் வாலுக்கு உள்ள மற்ற பெயர்கள் கூலம், வேசகம், தோகை, இலாங்கூலம், வாலதி என்பதாகும் (இவற்றோடு நா,க. சொல்லும் செண் என்ற சொல் பட்டியல் இடப்படவில்லை.) தோகையைக் குறிக்கும் மற்ற சொற்களும் வாலைக் குறிக்கலாம். இன்னொரு சொல் உறுத்தை. இதன் விளக்கம் நீளமானது. உறுதல் = தொடுதல், ஒட்டுதல். உறுத்தல்= தொடுவித்தல். ஒட்டுவித்தல். உறு= மிகுதி; உறுத்து= ஒட்டிய பகுதி எனவே சுற்றிவளைத்து இதுவும் வாலையே குறித்தது. உறுத்தை= வாலுள்ள உயிரி. அடுத்த சொல் வரிப்புறம்= புறத்தே வரிகொண்ட உயிரி. இங்கே அணிலின் பல்வேறு வகைகளைக் குறிப்பிடவேண்டும். இந்தியாவில் அணில் தெற்குப்பக்கத்தில் கிளைத்ததாகவே விலங்கியலார் குறிப்பிடுகிறார். தெற்கு அணிலுக்கு மட்டுமே 3 கோடுகள் முதுகிலுண்டு. வடக்கு அணில்களுக்கு கோடுகள் இல்லாமலும், 5 கோடுகள் உள்ளதும் உண்டு. அணில்கள் பெரிதும் குளிருள்ள நாடுகளில் தோன்றியவையல்ல. அவை வெப்பநாடுகளிற் தோன்றிச் சற்று குளிருள்ள நாடுகளுக்கு போனவையென்றே இற்றை அறிவியல் சொல்கிறது. இந்த உயிரிகள் எந்த நாட்டில் முதலிற்றோன்றின எனபதில் இன்றும் தீர்வு ஏற்படவில்லை.

அப்புறம் அணில் சங்கதப்பெயர்களைச் சொல்லாவிட்டால் சிலருக்கு இருப்புக் கொள்ளாது. சங்கதத்தில் விருட்சசாயிகா, ரோமாஸி, விருட்சமார்க்கடிகா, சாகாம்ருகா, கலாந்தகா என்று 5 பெயர்களைச் சொல்வார். இவற்றில் ஒன்றுகூட முதற்பெயரில்லை. குளிர்நாட்டிலிருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவருக்கு இவ்வுயிரிகளைப் பார்த்த மாத்திரத்தில் நீண்ட பெயராகவே சொல்லத்தெரிந்தது. மரஞ் சார்ந்த உயிரி, ரோமங்கொண்ட உயிரி, மரக்குரங்கு போன்ற உயிரி என்பவை அணிலின் முதற்பெயர்களாய் இருக்க வழியில்லை. கலாந்தகா என்பது பாகதம், பாலியில் உள்ள சொல்லாகும். சிங்களத்திற் கூட கலாதயா என்று இச்சொல் அமையும். கலவம்>கலாம் என்ற சொல் தமிழில் தோகையைக் குறிக்கும். தோகையும், வாலைக் குறிக்குமென்பது மேலே சூடாமணி நிகண்டால் புலப்படும். தோகையைத் தன் அந்தகத்தில் உடைய உயிரி கலாந்தகா என்றாகும். (மயிலும் ஓர் இந்தியப் பறவை தான். அதன் சங்கதப் பெயர்களும் மொழிபெயர்ப்புக்கள் தான்.) கீழே சங்கதப்பெயர்களை நாகரி எழுத்திலும், எழுத்துபெயர்ப்பிலும் தந்துள்ளேன்.
   , 
वृक्षशायिका vRkSazAyikA   f..         squirrel மரத்திலிருக்கும் உயிரி
रोमशी          romazI         . f.         squirrel ரோமங் கொண்ட உயிரி
वृक्षमर्कटिका vRkSamarkaTikA f. squirrel மரக்குரங்கு போன்ற உயிரி
शाखामृग         zAkhAmRga m.         squirrel கிளைமிருக உயிரி
कलन्दक          kalandaka m.          squirrel
kaladayA - singalese
gilaharee, gilahari in Hindi, chikura, Chamarapuchchha, camarapuccha

இன்னும் ஒரு கருத்துண்டு. அதை ஏற்கப் பலருந் தயங்குவர். ஆங்கிலத்தில் squirrel என்ற சொல்லிற்குச் சொற்பிறப்பு சொல்லும் போது ”The name squirrel comes from the Greek skiouros, which means shadow-tailed, because the tail is big enough to shade the rest of the animal.”. That word "squirrel", first attested in 1327, comes from the Anglo-Norman esquirel which is from the Old French escurel, the reflex of a Latin word sciurus. This Latin word was borrowed from the Ancient Greek word σκίουρος, skiouros, which means shadow-tailed, referring to the bushy appendage possessed by many of its members.]. The native Old English word for the squirrel, ācweorna, survived only into Middle English (as aquerne) before being replaced. The Old English word is of Common Germanic origin, cognates of which are still used in other Germanic languages, including the German Eichhörnchen (diminutive of Eichhorn, which is not as frequently used), the Norwegian ikorn/ekorn, the Dutch eekhoorn, the Swedish ekorre and the Danish egern” என்று ஆங்கில விக்கிப்பீடியா சொல்லும்.

அணிலின் பின்னால் வாலிருந்தது அது உயர்ந்திருந்தால் அணிலுக்கே நிழல் கொடுத்தது. அப்படியொரு காரணத்தால் squirrel என்ற பெயர் ஏற்பட்டதென்று மேலே சொல்வது எனக்கு வேடிக்கையாயும் பொருந்தக் கூறுவதாயும் உள்ளது. எந்த அணிலின் வால் நிழல்தரும் அளவிற்குநீண்டு பின் தூக்கி நின்றது? கண்ணாற்பார்த்தால் அணில்வால் அழகாயிருப்பதையும், அதையொட்டிப் பெயர் அமையலாம் என்பதையும் நான் ஏற்கிறேன். (சிகையையொட்டிச் சிங்கப்பெயர் அமைந்ததே?). ஆனால் ஏற்கனவே குறுகிய சொல்லை இப்படி இன்னும் உடைத்துச் சுற்றிவளைத்துப் பொருள் சொல்வதைக் காட்டிலும். squirrel என்ற சொல் அற்றை இந்தியாவிலிருந்து அப்படியே கடன்வாங்கி ஸகரவொட்டுப் பெற்ற சொல் என்பதே எனக்குப் பொருத்தமாயுள்ளது.

ஒருவேளை கிரேக்கர் இவ்வுயிரியைத் தென்னிந்தியத் (தமிழகத்) துறைகலில் இருந்து தம் கலங்களில் பயணஞ்செய்யும் உயிரியாய்க் (stowaway) கொண்டு போயிருக்கலாம். பின் இரோப் எங்கும் இது பரவியிருக்கலாம் என்பது என்னால் நம்பக்கூடிய கதையாய்த் தெரிகிறது. ஏனெனில் குரலென்பது தமிழில் தோகையைக் குறிக்குஞ் சொல்லாகும். நெற்கதிற்றோகை கூடக் குரலென்று சொல்லப்படும். எல்லாக் கதிர்களும் குரல்களே. வாலுக்கும் குரலென்று உவமப்பெயர் சொல்லலாம். கிரேக்கமுறைப்படி ஸகரஞ் சேர்த்து squirrel என்றாயிற்று என்பது எனக்கு நம்புங்கதையாய்த் தெரிகிறது. குறிப்பாகக் qui என்ற எழுத்துவரிசை, rrel/ரல் என்றொலித்து இரு irr போட்டு எழுதும் முறை எனக்கு வியப்பைத் தருகிறது. எங்கோவொரு தொடர்புள்ளது? ஆனால் என்னால் அழுந்தச் சொல்லமுடியவில்லை. என்றை வியக்கமட்டும் வைக்கிறது.

அணிலின் கதை அவ்வளவு தான்..
             .
அன்புடன்,
இராம.கி.

Thursday, July 05, 2018

சாத்தன் - 2


வேதமறுப்பு நெறிகள் அடிப்படையில் கடவுள் மறுப்பு நெறிகளே. தம்முள் அவை வேறுபடினும், சில பொது ஒர்மைகளைச் சுட்டின. 

பொ.உ.மு.500 களில் வேத மறுப்பு ஆசான்களின் பாதப் படிமங்கள் வைத்தும், பின் உருவங்கள் வைத்தும் மக்கள் தொழத் தொடங்கினர். கொஞ்சங் கொஞ்சமாய் பள்ளிகள் என்பவை கோயிற் கருத்தீட்டுக்குள் மெல்ல வந்தன. 

இனக்குழுப் படையல்கள், பழக்க வழக்கங்கள், கொண்டாட்டங்கள், நினைவேந்தல்கள் போன்றவை பள்ளிகளில் நடக்கத் தொடங்கின. (நிக்கந்தநாதர்/ மகாவீரர் உட்பட்ட) செயினத் தீர்த்தங்கரர், அற்றுவிகத்தின் மற்கலி கோசாளர் (மகாவீரர் தவிர்த்த தீர்த்தங்கரர் அனைவரும் அற்றுவிகத்திற்கும் ஏற்றவரே), பூரண காயவர், பக்குடுக்கை நன்கணியார், நரிவெரூஉத் தலையார் (எனப்பட்ட அஜிதகேச கம்பலர்), சஞ்சய (ஐயம்) வேளத்து (> பேலட்ட) புத்தர், (இன்று நாமெல்லோரும் அறிந்த) கோதம புத்தர் (முந்தைய 23 தீர்த்தங்கரர் பற்றிப் புத்தருங் கேள்வி கேட்கமாட்டார்.) ஆகியோர் அனைவரும் குமுகாயத்தில், நாளா வட்டத்தில் ”ஐயன்= ஆத்தன்/ஆதன்/ ஆசான்/ஆசன்/ ஆஸ்ரியன்” என அறியப்பட்டார்.  

(தமிழ் ஐயனும் பாகதப் பகவானும் கூட ஒரே பொருளன) இக்காலத்தில் சில பெருமானரை ஐயர் என்கிறோம் அல்லவா? பெருமானரே கூடத் தம் ஆசானை உவ ஆத்தன்> உபஆத்யன்> உபாத்யன்> வாத்யான் என்றழைப்பர். நாளா வட்டத்தில் ஆத்தனுக்கு மாறாய்ச் ”சாமான்யம் ஆனவன்” என்ற பொருளும் சாத்தனுக்கு ஏற்பட்டது. காட்டாக நீலகேசி மொக்கல வாதம் 413 ஆம் பாட்டில்,

ஆத்தன் உரைத்த பொருள் தன்னை அவ்வாகமத்தால்
சாத்தன் பயின்றால் அறியாவிடுந் தன்மை உண்டோ?
வீரத்து இங்குரைத்த பல தம்முள் ஒன்று இன்னதென்ன
ஓத்தின் வகையால் பெயரொடு உணர்வின்மைக்கு என்றாள்

என வரும். 50 ஆண்டுகள் முன் நம்மூரில் ’குப்பன், சுப்பன்’ என்ற பெயர்கள் பழகியது போல் (இப்போது இஷ்/புஷ் என்று பொருள் புரியாது வடமொழிப் பெயர் இடுகிறார்.) சங்க காலத்தில் கண்ணன், சாத்தன், ஆதன், அத்தன், ஆந்தை, சேந்தன், நாகன், தேவன், பூதன் போன்ற பெயர்களே மிக்கிருந்தன. இன்றைக்கும் மிச்ச சொச்சங்களாய், திருச்சிக்குத் தெற்கில் தென்பாண்டியில் சாத்தையா, சாத்தப்பன் எனும் பெயர்கள் உண்டு.]

நந்தர் காலத்தில், அவர் தவிர்த்த வட புலத்தரசர் வடமேற்கிருந்து வந்த வேத நெறியால் கவரப்பட்டு ஏராளமான வேள்விகளை பென்னம் பெரியதாய்ச் செய்யத் தொடங்கினார். பல்வேறு விலங்குகள் குறிப்பாய் ஆடு, மாடு, குதிரைகள் போன்றவை ஆகுதிகளாகின. 

கொஞ்சம் அசந்தால் இக் கால்நடைகளை அரசச் சேவுகர் பிடித்துப் போகும் நிலையும் ஏற்பட்டது. கால்நடைகள் என்பன சாதாரண வாழ்வாதாரத்திற்கு மிகவும் தேவையான இந்த நடவடிக்கை பெரும் இடரை குமுகாயத்தில்  ஏற்படுத்தியது. மக்கள் கொதித்தெழுந்தார். பார்சுவ நாதரின் கூற்று பொதுமக்களுக்குப் பெரிதானது. கொல்லாமை என்பது பெரிய அறமாய் நாடெங்கும் போதிக்கப் பட்டது. 

ஓரிடந் தங்காது ஊரூராய் பரிவரைந்து (வட்டமாய்) அலைந்தவரைப் பரிவரையர் (>பரிவ்ராஜக) என்று சொல்வது வட இந்தியா எங்கணும் எடுபட்டது. இதனால் வேதநெறி தாக்கிற்கு இலக்கானது. 

வேதநெறியைக் கேள்விமேல் கேள்வி கேட்டுக் கொக்கி போட்ட எழுவரும் தாமே சம்மணங் கூட்டித் தானத்தில் (த்யானத்தில்) ஆழ்ந்ததால் சமணர் எனப்பட்டார். இவரைப் பின்பற்றியோரும் சமணர் என்றானார். பொ.உ. 800 க்கு அருகிற்றான் சமணர்> ஸ்ரமண என்பது செயினரை மட்டும் விதப்பாய்க் குறித்தார். (ஒரு காலத்தில் புத்தரையே கூடச் சமண என்று அழைத்தார்.)

சமணருக்குச் சாத்தரே (பொதுமக்களே) பெரும் ஆதரவு நல்கினார். நந்தரை எதிர்த்து எழுந்த மோரியருக்கு வேறு வழியில்லாது போனது. அவரும் வேத மறுப்பு நெறிகளையே சார வேண்டியிருந்தது. வேத நெறியை முற்றிலும் சாடாது, அதே போது வேத மறுப்பு நெறிகளைப் புரந்து மோரியர் ஆட்சி நடத்தினார். 

வேத நெறியினர் மோரியரின் கீழிருந்த படை வல்லுநரின் உதவியை நாடிக் காத்திருந்தார். சுங்கரும், கனகரும் மகதத்தில் அரசேறிய காலத்தில் தான் வேதநெறி என்பது மீண்டும் தழைக்கத் தொடங்கியது. 

இவ்விரு குலத்தாரும் மோரியருக்குத் தலைகீழாய் மாறினர். வேத மறுப்பு நெறிகளை முற்றிலும் சாடாது, அதே பொழுது வேத நெறியைப் புரந்து வந்தார். நந்தர்/மோரியர் காலத்தில் தாம், தம் இயக்க வெளி வடக்கே குறைந்த காலத்தில் தாம் தமிழகம் நோக்கி வேதநெறியார் நடந்து வந்தார். 

(மகதம் கெட்டால் தமிழகம், தமிழகம் கெட்டால் மகதம் என்பதே அன்றைக்கு இருந்த போக்கு.)

சங்க இலக்கியத்தில், உலகாய்தம், சாங்கியம், ஞாயம், விதப்பியம், அற்றுவிகம், செயினம், புத்தம் ஆகிய நெறிகளின் கருத்துகளோடு வேத நெறியும் இழையும். இப்பொதுமையை முழுதும் உணராது சங்க காலக் குமுகாயம் என்பது ஒரு நெறியை மட்டுமே சார்ந்தது எனச் சொல்ல முற்படுவது குறைந்த அவதானிப்பு ஆகும். 

சங்க காலத்தில் சிவ, விண்ணவ வழிபாடுகளும் உண்டு. ஆனால் சிவ, விண்ணவ நெறிகள் இங்கு கிடையா. சங்கம் மருவிய காலத்திற்றான் அவை சமய நெறிகளாய் எழுந்தன. ஆழ்ந்து நோக்கின் அவை இளைய நெறிகள் தாம்; 

அவை தனிப்பட்டு எழுந்தவையாகவும் தெரியவில்லை. வேத நெறியின் அடி தொட்டு அதன் மேற்கட்டுமானமாய்ச் சிவ, விண்ணவ வழிபாடுகளைக் கொண்டு, பின்னாற்றான் தம் மெய்யியல்களை இந்நெறிகள் எழுப்பின. 

நானறிய மாணிக்க வாசகரும் (அவரைநான் 4/5 ஆம் நூற்றாண்டாய்க் கொள்வேன். நானெழுதிய ’மாணிக்கவாசகர் காலம்’ தொடர்கட்டுரை இன்னும் முடிபடாதிருக்கிறது) திருமூலருமே சிவநெறி மெய்யியலுக்கு வழி வகுத்ததில் முதன்மையானவர் ஆகும். மணிமேகலையே (பொ.உ.450) சிவநெறியின் இருப்பை முதன் முறையாகத் தமிழிற் சொல்லும். (மணிமேகலையைச் சிவ நெறியாளர் படித்து இவ்வுண்மையைப் புரிந்துகொள்ளட்டும்.)

இனி வாணிகத்தைப் பார்ப்போம். அற்றை மக்கள் ஊடாட்டத்தில், வடபுலத்தில்/ தக்கணத்தில் பொருள் பரிமாறும் வாணிகத்தில் பெரிதாய் இருந்தவை 3 பகுதிகளே. ஒன்று மகத நகரங்கள், இன்னொன்று தக்க சீலம், மூன்றாவது நூற்றுவர் கன்னரின் (சதகர்ணிகளின்) தலைநகரான படித்தானம்/Paithaan nearer to Modern Aurangabad (மேலும் அது அழைத்துச் செல்லும் தமிழக நகரங்கள்.) 

இரு வேறு வணிகப் பாதைகள் அன்று இயல்பாய் எழுந்தன. (”சிலம்பின் காலம்” என்ற நூலில் இதைப் பற்றி விரிவாய்ப் பேசினேன். இதை விரும்பும் ஆர்வலர் அதைப் போய்ப் படியுங்கள்.) 

உத்தரப் பாதை, மகதத்தைத் தக்க சீலத்தோடு கணுத்தும் (connect). தக்கணப் பாதை மகதத்தைக் கோதாவரிக் கரையில் இருந்த படித்தானத்தோடு இணைக்கும். படித்தானத்திலிருந்து இற்றை கருநாடக ஐஹோலெ (=ஐம்பொழில்) வழி தகடூருக்கு நீட்சி ஏற்பட்டது. மூவேந்தர் நகர்களிலிருந்து தகடூருக்குத் தனித் தனிச் சாலைகள் இருந்தன. 

மூவேந்தருக்குச் சமமாய் வடக்கே அதியமான் (சத்ய புத்ரன் என்று) சிறப்புப் பெற்றது பூகோளத்தால் மட்டுமே. தெற்கிருந்து கிளம்பும் சாத்துக்கள் தகடூர், ஐம்பொழில், படித்தானம் வழியே மகதம் போய்ச்சேரும். தமிழகத்தில் உருவான ஏதொன்றையும் விற்க வேண்டுமெனில் உள்ளூரை விட்டால் மகதம் போகலாம். இன்றேல் கலமேறி கடல்கடந்த நாடுகளுக்குப் போகலாம்.

[சிலப்பதிகாரத்தில் கோவலன் தந்தை மாசாத்துவான் ஓர் உள்நாட்டு வாணிகன். சிலம்பு முழுக்க அவன் இயற்பெயர் நமக்குத் தெரியவே தெரியாது. அவனின் தொழிற் பெயர் பாண்டி நாட்டிலும் தெரிந்திருக்க வேண்டும். அதனாற்றான் பாண்டிய அவையில் கண்ணகி தன்னை அறிமுகப் படுத்துகையில் “மாசாத்தன் மருமகள்” என்று சொல்கிறாள். கோவலன் அவ்வளவாய் அடையாளந் தெரியாத ஆள். 

கண்ணகியின் தந்தை பெருங்கடலோடி. (மாநாய்கன்/மாநாவிகன்) பல கப்பல்களுக்குச் சொந்தக்காரன். நாவுதல்= கொழித்தல், கப்பலோட்டல். பல தமிழாசிரியரும் தவறாக அவனைக் கடல்வாணிகனென, அறியாது சொல்வார். அவ்வளவு பேரெடுக்காது, தன் வாணிகத்தைச் சரியே கவனிக்காது கோட்டை விட்ட கோவலனே உண்மையில் கடல் வாணிகன்.]

சங்க இலக்கியத்தில் 50 விழுக்காட்டுப் பாட்டுகள் பாலைப் பாட்டுகளே. அதில் வரும் பாலை நிலம் இன்றும் பெரிதாய்ச் சொல்லப்படும் இராயல சீமையே. தக்கணப் பாதைக்குக் கொண்டுசெல்லும் இந்த அணுக்கப் பாதை ஐம்பொழில் (இற்றை பெல்லாரி மாவட்டத்திற்கு) எனும் இடத்திற்கு இட்டுச்செல்லும். அதை ஒட்டிய இற்றை ஆந்திரக் கர்நூல், கடப்பா மாவட்டங்களும் இதிற் சேரும். இவற்றின் விவரிப்புகளும் சங்க இலக்கியங்களிலுண்டு. 

சாத்து வேலை என்பது அவ்வளவு எளிதானதல்ல. முதலில் கடின வேலை என்று பொருள்பட்டுப் பின் பல்வேறு சாத்தரும் தக்கணப் பாதையின் நெளிவு சுளிவு தெரிந்து போய்வந்த காரணத்தால் சாத்தார வேலையானது. (சாத்தம்> சாத்தாரம்> சாத்தாரன்> சாதாரண். இதன் இற்றைப் பொருள் சாதாரணம்= எளிமை என்பதே. 

இதற்கு இன்னொரு பெயருமுண்டு. சமண>சாமாண> சாமண்ய>சாமான்ய வேலை. வேடிக்கை என்னவெனில், சமணர் என்ற சொல் பொதுமக்களையே குறித்திருக்கிறது என்பது தான். சாதாரணம், சாமான்யம் என்ற இரு சொற்களும் வடமொழி போல் தோற்றம் கொண்டாலும் அவற்றின் அடிப்படைக் கருத்து தமிழிற்றான் உள்ளது.     
 
இனி சாத்தாரின் கோயில்களுக்கு வருவோம். இன்றைக்கு நாம் பார்க்கும் பல்வேறு ஐயனார் கோயில்களிற் சில பார்சுவருக்கு எழுந்தவை சில மற்கலிக்கு எழுந்தவை, சில பூரணருக்கு எழுந்தவை சில பக்குடுக்கை நன்கணியாருக்கு எழுந்தவை, சில நிக்கந்த நாதருக்கு எழுந்தவை, சில கோதம புத்தருக்கு எழுந்தவை. 

(தென்பாண்டி நாட்டில் பல்வேறு சாத்தருக்கு ஐயனார் கோயில்களும் காளி கோயில்களுமே இன்றும் குலதெய்வக் கோயில்களாம். எங்கள் குடும்பத்திற்கு சிவகங்கை மாவட்டம் சொக்கநாதபுரத்துக்கு அடுத்தாற் போலுள்ள கத்தப் பட்டு சேவுகப் பெருமாள் ஐயனாரே குலதெய்வம். இப்படி அந்தப் பக்கம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு இடங்களில் குலதெய்வக் கோயில்கள் உண்டு.) 

சாத்தன் கோயில்களைச் சாஸ்தா கோயில் என்று சங்கதஞ் சொல்லும். பொ.உ.500-900 களில் எழுந்த பக்தியியக்கத்தின் வாயிலாய், இவை போன்ற ஐயனார் கோயில்களிற் பலவும் சிவன் கோயிலாகவும், சில விண்ணவன் கோயிலாகவும் மாறின. (அவற்றை நானிங்கு சொன்னால் பலருக்கும் வியப்பாகும்.) 

சில இரண்டுங் கெட்டான் ஆயின (ஐயனார் கோயிலில் ஐயனாருக்கு முன் யானை வாகனமும், அதற்குச் சற்று பின்னால் ஓர் இலிங்கமும் வைக்கப் பட்டிருக்கும்.) முந்நாளைய நடைமுறைகள் திரிந்து, இப்போது ஐயனாருக்கு தீவங் காட்டித் திருநீறு கொடுப்பார்.

ஆனாலும் இன்னொரு பக்கம் இக்கோயில்களுக்கே சிறப்பாய் உள்ளதாய்ப் பெரிய கருப்பர், சின்னக் கருப்பர், பதினெட்டாம்படிக் கருப்பர், தொட்டியக்  கருப்பரெனப் பல்வேறு காவல் தெய்வங்களும் உண்டு. 

காவல் தெய்வங்களுக்கு எனக் களிமண் புரவி, களிறு பொம்மைகள் வைக்கப் படும். புரவியின் முன் அரிவாளேந்திய கத்தியரும், வேலேந்திய சூலத்தாரும் காட்சி தருவர். ஆண்டுக்கு ஒருமுறை ஊரில் யாரேனும் வேண்டிப் புதிய புரவி எடுப்புகள் நடக்கும். ஆண்டுக்கு ஒரு முறை சிவன் இராத்திரி அன்று படையல் கொடுக்கப் படும். கருப்பருக்கு அலங்காரஞ் செய்வர். கோழி, ஆடு படைப்பர், ஆனால் ஐயனார் திருநிலைக்கு முன் திரை போட்டு மறைத்து விடுவார். ஏனெனில் ஐயனார் முற்றிலும் மரக்கறி அல்லவா? அவருக்குக் கறி ஆகாது.

கொஞ்சம் ஆழப் பார்த்தாலே இற்றை வேத நெறி தழுவிய சிவ நெறிக்கும், விண்ணவ நெறிக்கும் புறம்பான பல செய்முறைகள் ஐயனார் கோயில்களில் நடைபெறுவது தென்படும். ஆயினும் அவை எல்லாமே மேலோட்டச் சிவநெறிப் பூச்சுக் கொள்ளும். ஓவென்று பெரிதாயெழுந்த சிவநெறிக்கு முன் தம் அடையாளங்களை மூடி மறைத்து வெளித்தோற்றங் காட்டும் பாதுகாப்பு நடவடிக்கைகளோ இவை என நம்மை எண்ணவைக்கும். 

எத்தனை ஊர்களில் மகாவீரருக்கும், பார்சுவருக்கும்., நேமிநாதருக்கும், ஆதிநாதருக்கும். புத்தருக்கும் மற்கலிக்கும், பூரணருக்கும், நன்கணியாருக்கும் நெற்றியில் திருநீறு பூசி துணி சுற்றி இன்னும் இரு கைகளைச் சுதைப்பூச்சில் வலிந்து ஏற்படுத்திக் கலிகாலத்தில் இப் படிமங்களைக் காப்பாற்றினாரோ? தெரியாது. 

சில வேதமறுப்பு நூல்கள்கூட அங்குமிங்கும் வேதம் போற்றும் சொலவங்களை, பாட்டுகளைத் தம் பாயிரத்திலும், உள்ளிலும் தூவிக்  கொண்டு, தம்மைக் காப்பாற்றிக் கொண்டன. 2600 ஆண்டுகளிற் சில போதுகளில் சாத்தார மதங்களால் (வேதமறுப்பு நெறிகளால்) தம் வளர்ச்சி தடைப்பட்டதால், வேதநெறிக்கு இந்நெறிகளின் மீது பெரும் முரண்பாடுகளும் உண்டு. ”இச்சாத்தான்கள் நம்மைச் சாடுகிறாரே?” என்ற கோவமும் கூட வருவதுண்டு. 

வேதநெறிப் பட்ட சிவநெறியும், விண்ணவநெறியுங் கூட வேதமறுப்பு நெறிகளைத் தம் எதிரிகளாகவே பார்த்தன. பொ.உ.500-இலிருந்து பொ.உ.1000 வரை தெற்கே நம்மிடை நடந்த பக்தி இயக்கம் சாத்தாரம் ஆனதில்லை. இது பற்றிய ஆய்வுங் கூடக் குறைவு. ”இந்துத்துவம்” கூடிய இந்நாளில் இதை எல்லாஞ் செய்யப் பலரும் தயங்குகிறார். (பலருக்கும் உண்மை தெரிவதில்லை. ஏராள மிகைப்படுத்தல்களும் உள்ளன. ஒரேயடியாய்ச் சிவ நெறி, விண்ணெறியாரைச் சாடுவதும் தவறு; சமண நெறிகளைச் சாடுவதும் தவறு. 

இவை இரண்டிற்கும் இடையில் தாம் சரியான புரிதல் உள்ளது. இரண்டின் விரவல் தாம் இற்றைத் தமிழரின் நடைமுறைகள் ஆகும். குலதெய்வங்களும் பெருந்தெய்வங்களும் நம்மின் 2 முனைகள். இரண்டையுமே நம் பொதுமக்கள் சார்ந்துள்ளார்.

அடுத்தது சாட்டுதல். சால்>சாள் என்பது இன்னொரு வகையில் சார்தலை/சார்த்தலைக் குறிக்கும். ஒரு குறிப்பிட்ட அடையாளத்தைக் காட்டுவது சாட்டுதலாகும். சாட்டுதல் = பிறனிடம் சார்த்துதல், குற்றஞ் சுமத்தல், அடித்தல். ஏதோவொன்று விரும்பிய வகையில் நடக்காமற் போவதற்கு ஒருவன் காரணன் என்று பேசுவது சாடுதலாகும். to accuse என்று ஆங்கிலத்தில் பொருள்கொள்ளும். 

சாடுதல் = அடித்தல், மோதுதல், துகைத்தல், குத்திக் கிழித்தல், வடுச்செய்தல், ஒடித்தல், கொல்லுதல், ஆசைதல், ஒரு கட்சிக்குச் சார்பாய் இருத்தல். சாட்டியம் = வஞ்சகம், பொய். சாத்தான் என்ற சொல்லிற்கு மேலை நாகரிகங்களில் தொடக்கமில்லை. அது யூத வழக்கத்திலிருந்து மேலை நாகரிகத்திற்கு வந்தது. 

தேவனை ஏற்காதவர் சாத்தர் எனப்பட்டார். சாத்தரின் தலைவன் சாத்தான் என ப் பட்வைகுன்,டான். சாத்தான் தேவனைச் சாடுகிறானாம் என்றே மேலையரின் கிறித்தவ, யூதச் சிந்தனை இருந்தது. நம்மூர்ச் சாடலும், மேலையர் சாடலும் ஒன்று போலவே தெரிகிறது. இரு நிலங்களிலும் இருந்த சாத்தான் -சாடல் தொடர்பு நம்மை வியக்க வைக்கும் 

ஒருவேளை ”காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையா? அல்லது இரண்டிற்கும் ஏதோவொரு காலத்தில் தொடர்புண்டா?” தெரியாது. வரலாற்றின் எத்தனையோ கதவுகள் நமக்குத் திறக்காமலேயே போயுள்ளன. அவற்றில் இதுவொன்றோ?.  சாத்தான் என்ற வேத மறுப்புத் தலைவருக்கும் சாத்தான் என்கிற மேலைச் சிந்தனையின் devil குறிப்பும் நம்மைத் தடுமாற வைக்கின்றன என்பது உண்மை தான்.

அன்புடன்,
இராம.கி.


Wednesday, July 04, 2018

சாத்தன் - 1


”சாத்தன் என்ற சொல் தமிழா?” என்றும், ”இதற்கும் மேலை நாகரிகத்தில் சொல்லப்படும் சாத்தானுக்கும் தொடர்புண்டா?” என்றும் முகநூல் சொல்லாய்வுக் குழுவில் ஒரு முறை கேட்கப்பட்டது. இதன் மறுமொழியை சட்டெனச் சொல்ல முடியாது. பழங்குடிகளின் தொழிற்பிரிவு, சாதி/வருணத் தோற்றம், தமிழ்/சங்கத ஊடாட்டமெனப் பலவும் சொன்னால் தான் ”சாத்தனின்” ஆழம் புரிபடும். 

சாத்தான் தொடர்பு வேறு வழிப்பட்டது. ஏற்கனவே. தப்பும் தவறுமாய் நம்மைச் சுற்றியும், இணையத்திலும் ஏராளம் சொல்லப் பட்டுள்ளது. இவற்றையும் மீறி ஒழுங்குறப் புரிந்து கொள்ளப் பெருமுயற்சி தேவை. மெதுவாய்ப் படித்து, அசை போட்டு ஓர்ந்து பார்த்துப் புரிய வேண்டும். 

சாத்தனைத் தனிவாணிகன் என்றும் வணிகக்கூட்டத்தில் ஒருவனென்றும் 2 விதங் காணலாம். வணிகத்தையும் 2-ஆய்ப் புரிந்துகொள்ளலாம். வாணியம்/வாணிகத்தின் குறுக்கம் என்பது ஒன்று. பண்ணியம்/பண்ணிகம்>பணிகம்> வணிகம் எனுந் திரிவு இரண்டாவது. ’பண்ணிகத்தை’ விட ’வாணியம்’ மாந்தர் சிந்தனையில் முந்தையது. இவற்றைப் புரிந்துகொள்ள, பழந்தமிழர் குமுகாயப் பழக்கங்களை நாம் அறியவேண்டும்.

புதுக் கற்கால நாகரிகத்தில் வெவ்வேறு இனக்குழுக்களாய் (பொ..உ. மு 2000 க்கும் முன்னர்) .குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் எனத் திரிந்த காலையில், கூர்த்த கல்முனை கொண்ட சூலம்/வேல் போன்றவற்றால் விலங்குகளை குத்தித் தின்றதும். மீன்களைக் குத்திக் கொன்றதும் போக, குழுக்கள் தம்மிடையேயும் சண்டை/போட்டி போட்டுக்கொண்டார். 

பிழைபட்டுச் சரி செய்யும் முறையில் (trial and error) செம்பும், இரும்பும் ஆக்கும் நுட்பத்தைக் கற்றதால், கல்முனைகள், பொ.உ.மு. 2000 க்கு அருகிலேயே, மாழை முனைகளாய் மாறி, மாந்த நாகரிகத்திற்குப் பெரும் உந்தலைக் கொடுத்தன. விலங்கு வேட்டையிலும், மாற்றாரை வெல்வதிலும் வெற்றி கூடின. ஒவ்வோர் இனக் குழுவினரும் அவரவர் புழங்கும் நிலம் அவரவர்க்கே சொந்தம் என உரிமை பாராட்டத் தொடங்கினர். தனிச்சொத்து கூடக்கூடக் குழுக்களின் கட்டமைப்பு, குறிப்பாக அவர்களின் இருப்பை உறுதிசெய்யும் பாதுகாப்புக் கட்டமைப்பு இன்னும் அகன்று, இறுகியது; அதிகாரம் கூடியது.

சூலம்/வேலுக்கு அடுத்ததாய்த் தென்னக மேற்குக்கடற்கரை நெய்தலிலும், அதையொட்டிய குறிஞ்சியிலும் வில்/அம்பு ஆயுதம் போன்றவை எழுந்தன. (வில்லடையாளம் சேரருக்கு.) 

விலங்குகளையும், வேற்று மாந்தக் கூட்டத்தையும் அருகிற் சென்று கொல்வதினும் தொலைவில் நின்று, வில்லை வளைத்து, அம்பெய்திக் கொல்வது இன்னும் நேர்த்தியானது என ஒருவேளை நினைத்தரோ?!? தெரியாது.! தம் குழுவின் இழப்பைக் குறைத்து, மாற்றாரின் இழப்பைக் கூட்டப் பழந்தமிழருக்கு வில்/அம்பு உறுதியாய் வகைசெய்தது. 

இதற்கப்புறம் நேரடிச் சண்டையிற் கொலை செய்யச் சூலம்/வேலை விட செம்பு/இரும்பால் ஆன அரிவாள்/கத்தி வாகாய் ஆனது. (ஆதிச்ச நல்லூரின் செம்பும், கொங்கின் இரும்பும் ஆயுதம் நாடி உருக்கப்பட்டதை ஆய்வாளர் மறவார். ஆதிச்ச நல்லூரின் காலம் பொ.உ.மு.2000க்கும் முந்தையது. இரும்பு செய்தது பொ.உ.மு.2000/1200 ஆக இருக்கலாம். கொங்கில் இருந்த இரும்பு, தங்கம், மணிகள் என்பவற்றிற்கே தமிழக இனக்குழுக்கள் தொடர்ந்து தமக்குள் மோதின.)

இம்மோதல்களின் முடிவில் சேர, சோழ, பாண்டியப் பெருங்குடிகள் எழுந்தன. இவற்றுள் வேளிரும் பிறரும் ஆன இனக்குடிகள் கொஞ்சங் கொஞ்சமாய் கரைந்து போனார். சேர, சோழ, பாண்டியர்க்கு முன் கணக்கற்ற இனக் குழுக்கள் தமிழகத்துள் இருந்திருக்கும். அவற்றின் பாதுகாப்பைக் கவனிக்க அக்குழுக்களுள் மூவேறு வகையார் விதப்பாய் எழுந்தார். 

ஆயுத வழி பார்த்தால் முதல்வகையாரைச் சூலத்தார் (= வேலார்) என்றும், இரண்டாம் வகையாரை வில்லியர் (=அம்பார்) என்றும், மூன்றாம் வகையாரைக் கத்தியர் (=அரையர்) என்றும் அழைக்கலாம். 

முதல் வகையார் மிக நிறைந்தும், அடுத்தார் குறைந்தும், மூன்றாமவர் மேலுங் குறைந்தும் இருந்திருக்கலாம். எண்ணிக்கை குறைந்த பெருமானரின் (இவர் ஏதோ வடக்கிருந்து வந்தார் என்பது ஒருதலைச் செய்தி. இங்கிருந்த பெருமானரோடு வந்து சேர்ந்தவர் இணைந்து கொண்டார் என்பதே உண்மை) ஓர்தலோடு கிழார்/அரயர்/மன்னர்/வேந்தர் அரசியலதிகாரம் பெற்றார்.

வேட்டையிலாக் காலங்களில் இனக்குழுவின் பொதுக்கடன்களை அந்தந்தக் குழுவின் சூலத்தார்/வேலார் கவனித்தார். குறித்தவிடத்தில் ஓர் இனக்குழு தண்டுற்று உறைகையில், எல்லை தாண்டி மற்ற இனக்குழுக்களோடு சிறு பொருதல்களையும், விலங்கு கவர்தலையும் வில்லியரே செய்தார்.

------------------------------------
இங்கோர் இடைவிலகல். சங்கதம் கத்தியரைக் கத்ரியர்>க்ஷத்ரியர் என்றாக்கும். (தமிழில் நாம் அவரை அரயர்>அரசர் என்போம். வேறு வகையில் கத்தியின் இன்னொரு வடிவான வாளைக் கொண்டு வாள்மர்> வார்மர்>வர்ம என்றும் சங்கதம் கையாளும்) 

இதே போல் வித்தையரை/விச்சியரை சங்கதம் விசையர்/வைசியர் என்றாக்கும்.(தமிழில் நாம் அவரை வாணிகர் என்போம்.) 

சூலத்தரைச் சங்கதம் சூல்த்தர்/சூத்தர்/சூத்ரர் என்றாக்கும். (தமிழில் வேலரை வேல்>வேள்>வேளாளர் என்போம்.). 

”வேலைப் பகிர்வில்” தொடங்கிய தொழிற் பிரிவு நெடுங்காலங் கழித்து, பொ.உ.300 இல் குப்த அரசின் காலத்தில் இந்தியா எங்கணும் அகமுறைத் திருமணத்தால்/ பிறப்புமுறைப் பிரிவால் நிலைப்படுத்தப் பட்டது. முட்டாள் தனமான சாதி/வருணத் தோற்றம் நம்மூரில் இப்படி எழுந்ததே.

சங்க காலத்தில் அகமுறைத் திருமணங்கள் மிக மிகக் குறைவு. சங்க இலக்கியத்தில் கற்பிலும் மேலாய்க் களவே கொள்ளப்பட்டது. இன்றுங் கூட அகமுறைத் திருமணம் ஒழிந்தால் (காதல் திருமணங் கூடினால்) தமிழ்க் குமுகாயத்தில் சாதி/வருணம் என்பதே இல்லாது போகும். அப்பன் வேலையை மகன் செய்வது இன்று மிகக் குறைந்து போனது. ஆயினும் வருக்கத் தாக்கம் அழியவில்லை.) 

பழந்தமிழ்க் குடிகளிடம் ஏற்பட்ட அதே தொழிற்பிரிவு தமிழகம், வட இந்தியா, உலகின் மற்ற குடியினர் என எல்லோரிடமும் இருந்தது. அவரவர் கையாண்ட பெயர் வேறாகலாம். ஆனால் கருத்தீடு என்பது ஒன்றே. நால்வகையார் இருந்த குழுக்கள் பெருகி பல்வேறு சண்டைகளில் ஒரு குழு இன்னொன்றிற் கரைந்து அதிகாரக் கட்டுமானம் கூடிக் கிழார், அரயர் (>அரசர்), மன்னர், வேந்தரென மேலும் இறுகியது. வேந்தர் சங்க காலத்திலேயே வந்துவிட்டார்.
---------------------------------------.     
நாளா வட்டத்தில் அடுத்த இனக்குழுக்களுடன் எப்போதுமே போர் செய்ய முற்படாது, சில போது ஒன்றுகூடி உறவாடிப் பேசி, தம் பொருள்/பண்டத்தை மாற்றார் பொருள்/பண்டத்திற்கு மாற்றி வரவும் வில்லியர் என்பார் முற்பட்டார் கொஞ்சங் கொஞ்சமாய் இனக்குழுக்களிடையே பொருதுகள் குறைந்து, பேச்சும், உறவுங் கூடின. இதனால் ஏற்பட்ட பண்டமாற்றில் சில குறிப்பிடத் தக்க வில்லியர் இன்னும் விதந்த திறம் ஒன்றைப் பெற்றார். வில்லறிவு, இங்கு வில்+தை= விற்றை>வித்தை>விச்சை எனச் சொல்லப்படலாயிற்று. 

வில்லியர், வித்தையர்> விச்சையரென்றும் சொல்லப்பட்டார். வில்+தல் விற்றலாயிற்று. விற்றையும் விற்றலும், (போர்த்திறமை, பண்டமாற்று என்ற) 2 வேறு வில்லியர் செயல்களையுந் தொடக்கத்திற் குறித்தன. முடிவில் தகரம் பயின்ற சொல் போர்த் திறமையையும், றகரம் பயின்ற சொல் பண்ட மாற்றையும் குறிக்கத் தொடங்கிற்று.

(இம்மெய் வேறுபாட்டை இன்றும் நாம் பயில்கிறோம்.) வில்லியருக்கு இன்னொரு பெயரும் அவர் கையாண்ட, சிறுவுருவங் கொண்ட கூர் அம்பு/வாளி/வாணியால் ஏற்பட்டது. வில்லியர் என்பார், வாணியர் என்றும் இங்கு சொல்லப்பட்டார். பண்டமாற்று வேலைக்கு வாணியம்>வாணிகம் என்ற விதப்புப் பெயர் உருவானது. [ஆங்கிலத்தில் இவரை தடகர் (trader) என்பார்.]

2 ஆம் வகை வளர்ச்சியாய்ப் பிற்காலத்தில் இயல்பொருள்களின் மேல் மாந்தவுழைப்பைச் செலுத்தி நெளிவு சுளிவு, சுவை, நேர்த்திகளைக் கூட்டிப் பயனுறப் பண்ணும் நுட்பம் சிச்சிறிதாய்ப் பிழைபட்டுச் சரி செய்வதாய் எழுந்தது. பண்ணல் பழகாக் காலத்தில் உலர்ந்து வறண்டு, சருகாகிய (உப்புக் கண்டம், கருவாடு, தோல், எலும்பு, கொம்பு, உலர்காய்கள், இலைகள், பயிர்கள், கூலங்கள் போன்ற வறள்/ வறைப் பொருள்களையே மாந்தர் பரிமாறிக் கொண்டார். இப்பரிமாற்றமே வாணிகம் எனப்பட்டது. 

பின்னால் பண்ணல் பழகிய காலத்தில் பண்ணம்>பண்டம் என்ற சொல்லும், பண்ணிகம்> பணிகம்> வணிகம் (= பண்ணி விற்பது; manufacture and sale) என்ற சொல்லும் எழுந்தன. முடிவில் வாணிகம், வணிகமென்னும் 2 சொற்கள்  ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தன. அவற்றின் வேறுபாட்டை இன்று நாம் உணர்வதில்லை.

விற்றலிற் கிளைத்த சொல் விலையாகும். இதையொட்டிய கூட்டுச்சொற்களும் தமிழில் உண்டு. எல்லோருமறிய விலை பகர்வது பகர்ச்சி (=price). விலை ஏல்த்துவது ஏற்றல்/ஏலம். இந்தையிரோப்பியனில் கீழே சொல்லப்படும் சாலும் ஏலும் கலந்து sale ஆகும். 

வில் கொண்டு விற்பென்றுஞ் சொல்வோம். விற்பிப்பது விற்பனை. விலை படியும் வரை, நிறையும் வரை, சாலும் வரை பரக்கப் பேசுவது சால்+தல்= சாற்றல்/ சாத்தலாயிற்று. சால்தல்என்பது, விற்பனையாளருக்கு இருக்க வேண்டிய இயல்பு. 

சாத்தல் தொழில் செய்வோன் சாத்தன். இன்னொரு பக்கம் வில்லால் வேட்டையாடும் தொழிலில், வில்லிற் சிக்கியது (அங்கியது)/ வில்லால் அழிப்பது விலங்கு. (பாணிக்கிற/அசைகிற காரணத்தால் சங்கதத்தில் அதைப் ப்ராணி என்றார். உய்கின்ற/மூச்சு விடுகின்ற காரணத்தால் தமிழில் உயிரி.) 

ஓரிடத்தின் எல்லையை அம்பு தைத்து அக் காலத்தில் குறித்ததால், வில்லால் அங்கப்பட்ட (உறுப்பாக்கிய) நிலம், முன்னுரிமையைக் குறிக்கும். தற்கால வில்லங்கப் பொருளும் வில்லடி, வில்லடை போன்றனவும் தொடர்புள்ள பொருள்களைக் குறிக்கும். 

வில்லியரின் பண்டமாற்றில் நடக்கும் கூடல், சொல்லல் குறித்தே மேற்சொன்ன ”சால்” எனும் வினையெழும். அகரமுதலிகளில் ”சாலுக்கு” 2 வகைப் பொருள் சொல்வர். முதல் வகை என்பது நிறைதல், பொருந்தல், முற்றல், மாட்சி பெறுதலைக் குறிக்கும். இரண்டாம் வகை என்பது விளம்பரப்படுத்தல், விரித்துரைத்தல், சொல்லல், நிறைத்தல், அடித்தல், புகழ்தல், அமைத்தல் போன்றவையாகும்.

முதற்சொல் சால்> சார்> சார்தலெனத் திரியும். 2 ஆவது சால்+தல்/சாற்றலாகும். அணிதல், தரித்தல், பூசுதல் என்பது சார்த்தலாகும். மனம் நிறைதலுக்கு/ அமைதியடைவதற்கு ஆடுங் கூத்து சா(ர்)ந்திக் கூத்து. 

ஏற்கனவே கல்யாணமாகி, 60 அகவை நிரம்பியவன் மனைவியோடு மீளத் திருமணஞ் செய்வது சாந்திக் கல்யாணம். இளம் ஆணும் பெண்ணும், திருமணத்தின் பின் கூடுவதும் சாந்திக் கல்யாணமே. 

சார்= கூடுகை. சார்தல்= சென்றடைதல், புகலடைதல், அடுத்தல், பொருந்தி யிருத்தல், சார்பெழுத்து = முப்பது தலையெழுத்துக்களைச் சார்ந்த குற்றியலிகரம், குற்றியலுகரம், ஆய்தம். 

சால்= நிறைவு; சால்பு= மேன்மை, சான்றாண்மை, தன்மை, மனவமைதி; சாலை= ஓரிடத்திலிருந்து இன்னோரிடத்திற்குக் கூட்டிச்சொல்லும் பாதை. சான்றார்/சான்றோர்= (நற்குணங்கள்) நிறைந்தவர். சாதுவன்= நல்லவன், ஐம்புலன் அடக்கியவன், அருகன், ஆதிரை கணவன்; சாந்தன்= அமைதி யுடையோன், அருகன், புத்தன்; சாந்தி= அமைதி, தணிவு, மேல் சா(ர்)ந்தி= மேலேயுள்ள ஐயனார் கோயிலில் பூசைகளைச் செய்கிறவன்.

பலரறிய வெளிப்படச் சொல்லலால் சாற்றல்/ சாத்தலுக்கு வேதமென்ற பொருளும் உண்டு. வேதத்தின் இறைச்சிப் பொருள் கருதி மறையென்பார். (நாளா வட்டத்தில் வேதமுடிவான வேதாந்தம், தருக்கம் போன்ற நூல்களும் சாற்றமாயின. 

சாற்றம்> சாத்தம்> சாத்ரம்> சாஸ்த்ர என்று சங்கதத்தில் வரும். சாஸ்த்ரம் தெரிந்தவன் சாஸ்த்ரி. பெருமானரிற் படித்தவன். இவனே சால்மன்> சார்மன்> சர்மனும் ஆனான். படித்தவன் என்பது பொருள். 

”முதலிற் சொல்வது, அடுத்தது, இன்னும் அடுத்தது” என வெவ்வேறு தோத்திரங்களையும், பாசுரங்களையும் பெருமாள் கோயிலிற் சொல்லும் முறைக்குச் சாற்று முறை என்று பெயர். 

சால்ந்ததை, நிறைந்ததை, முடிந்ததைச் சொல்வது சான்றானது. இதைச் சால்க்கு>சாக்கு என்றுஞ் சொல்வர். சால்க்கைச் சொல்பவன் சால்க்கி> சாக்கி. சங்கதத்தில் இது சாக்ஷியாகும். முடிக்கத் தகுந்தது சால்த்த>சார்த்தத் தகுந்தது எனப்படும். சாத்து> சாத்தியம் இப்படி எழுந்ததே. “இப்படி நடக்கக் கூடுமா? இது சாத்தியமா?” எனும் போதும் உள்ளிருப்பது சாலெனும் வினையடியே. 

சாத்தவன்/சாத்தன் = வாணிகன், ஐயனார், அருகன், புத்தன், வாணிகக் கூட்டத் தலைவன். சாத்து = வணிகர் கூட்டம். ஐயனார் கோயில் பூசாரி சாமியாடி எதிர் காலம் பற்றி ஏதேனுஞ் சொல்வான் ஆனால் அவனும் சாத்தன் எனப்படுவான். ஐயனார் கோயில் சாத்தன் சாமி (இதையே பழந்தமிழ் இலக்கியம் அணங்கு என்னும்) ஆடுவான். சாலினி= தேவராட்டி, சாமியாடும் பெண்பூசாரி. 

குறிப்பிட்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தின் பலவிடங்களில் வேதநெறியை ஏற்க அரையர் தயங்கினர். பொ.உ.மு.800-500 களில் வேதமறுப்பு வடக்கே பெரிதாகிப் போனது. 

அற்றுவிகம் (=ஆசீவிகம்), செயினம், புத்தம் என்ற மூன்றும், இவைகளுக்கு முந்தைய சாங்கியம், விதப்பியம் (வைஷேஷிகம்), சாருவாகம் (உலகாய்தம்), ஞாயம் (ந்யாயம்) போன்றவற்றையும் வேதமறுப்பு நெறிகள் என்பார். இவற்றை வாணிகரே முதலில் பெரிதும் புரந்தார். பின் அரசரும் சேர்ந்து கொண்டார். வடமேற்கிருந்து வந்த வேதருக்கு இந்தியக் கிழக்கில் புரவலர் குறைந்ததால், வேறு வழியின்றி அவர் தெற்கு நோக்கி வரத் தொடங்கினார்.

அன்புடன்,
இராம.கி.