Thursday, April 03, 2008

திசைகள் - 2

திசைகளைப் பற்றிய பொதுவான சொற்களாய்

மாதிரம், திகை, திசை, வம்பல், விசும்பே,
ஆசை, புலமே, உலகு, கோ, காட்டை,
அரிதம், அம்பரம், ககுபம், அனைத்தும் திக்கே

என்று 14 சொற்களை, பிங்கல நிகண்டு 11 ஆம் நூற்பாவில் பதிவு செய்யும். எழுத்து வரிசையில் இவற்றை "அம்பரம், அரிதம், ஆசை, உலகு, ககுபம், காட்டை, கோ, திக்கு, திகை, திசை, புலம், மாதிரம், வம்பல், விசும்பு" என்று முறைப்படுத்தலாம். 

[இவை தவிர இன்னும் சில சொற்களும் இருக்கின்றன; அவை சாலை, வழி குறித்து அமைபவையாகும். அவற்றையும் திசை என்ற பொருளில் தான், பல பொழுதுகளில் நாம் பேச்சு வழக்கிற் கையாள்கிறோம். காட்டாக நேரி, நெறி என்ற சொற்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவற்றைக் கடைசியில் பார்ப்போம்.]

முதலில் வருவது அம்பரம். உம்புதல் என்பது மேலே போதல். , உம்பு/உம்பர் என்பவை மேலென்று பொருள்கொள்ளும். உம்பரம் அம்பரமாய்த் திரிந்து, மேலுள்ள இடத்தைக் குறிக்கும். up, upper என்று ஆங்கிலத்தில் சொல்கிறோமே, அதையொட்டிய மேலைச் சொற்கள் எல்லாம் இந்த உம்பு, உம்பரை இணை கொண்டே அமையும். 

தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் உள்ள உறவில் இதுவும் ஒன்று. (வறட்டுப் போக்கில் இரு மொழிக் குடும்ப உறவை மறுப்பவரும் உள்ளார்.) உகர/அகரத் திரிவு என்பதோடு மேலை மொழிகளிலும் இச்சொல் உள்ளது.

அம்பரர்>அம்மரர்>அமரர் என்ற திரிவில், அமரர் எனுஞ் சொல் மேலுலக மீமாந்தரைக் குறிக்கும். உம்பரத் திசை>அம்பரத் திசை என்பது, மேல் நோக்கிய திசை. இங்கே அம்பரம் என்பது விதப்புப் பொருளைத் தவிர்த்து, பொதுமைப் பொருள் சுட்டுகிறது. 

[தில்லைச் சிதம்பரத்தை சித்+அம்பரம் என்று பிரித்துச் சில பண்டிதர் வானம், ஆகாயம் என்றெலாம் சொற்சிலம்பம் விளையாடுவார். அது ஓர் ஏமாற்றுப் பாடம். உண்மையில் அக்கோயில் சிறு+அம்பலம்= சிற்றம்பலமாய் முதலில் இருந்தது. பின், சிற்றம்பலம்> சித்தம்பரம்>சிதம்பரம் என்று வடபுலத்தார் வாயில் திரிந்து, இன்று நம்மவரே சிதம்பரமென்று சொல்லி அமைகிறோம். நடவரசத் திருமேனிக்கும் முன்னால் அங்கே ஒரு மூலத்தானம் உண்டு. பெரும்பற்றப் புலியூர் என்பது தில்லை ஊரின் முந்நாட் பெயர்.]

அடுத்தது அரிதம். இதை harit = point of compass என்று சென்னைப் பல்கலைக் கழகக் கலைக்களஞ்சியம் (lexicon) குறிக்கும். ஆனால் வடமொழிச் சொற் பிறப்பு அகரமுதலியான மோனியர் வில்லியம்சில் இதற்குச் சரியான விளக்கமும், ஊற்றுகையும் (source) கிடைக்கவில்லை. 

காந்த ஊசி என்ற பொருளை எங்கிருந்து சொன்னார் என்று விளங்கவில்லை; ஒருவேளை மூல நூல்களைப் பார்த்தாற் கிடைக்குமோ, என்னவோ? தமிழில், அரிதல் என்பது வெட்டுதல், நறுக்குதல் என்ற வினைகளைக் குறிக்கும். அரி என்பது ஒரு பயன்பாட்டில் அரிந்தெடுத்த, மிகத் தட்டையான, திண்ணம் (thickness) குறைந்த, ஒரு தகட்டுக் கூர்ப்பொருளைக் குறிக்கும். 

இதுவே கொஞ்சம் பொருள்நீண்டு அம்பு என்னும் பொருளையும் குறிக்கும். கூர்ச்சரத்தில் (Gujarat) தோலவீராவில் அம்புக்குறி போட்ட பெருங் கற்பலகை ஒன்று சிந்துவெளி நாகரிக அடையாளமாய்க் கிடைத்தது. இன்றும்கூட ஒரு சதுக்கத்தில் அம்புக் குறிப் பலகைகள் வைத்து, அங்கிருந்து விலகும் வெவ்வேறு மறுகுகளைக் குறிக்கிறோம் அல்லவா? 

ஒவ்வோர் மறுகும் [மறுகு>மறுகம்>மார்க்கம் எனும் வடமொழிச்சொல்.] ஒவ்வோர் திசையைத் தானே குறிக்கிறது? ஆக, அம்பு காட்டும் திசை அரிதமானது போலும். [அரியின் தொடர்புள்ள இன்னொரு சொல் ஆரம்; சக்கரத்தில் வரும் ஆரம் - radius. இதை விளக்கப் போனால் இன்னும் விரியும், எனவே விடுக்கிறேன்.]

அடுத்தது ஆசை. அகலமான மரம் ஆலமரமெனத் தமிழிலானது போல், அகுசை>அகசை என்பது இங்கு ஆசையாயிற்று. உள்ளே பொதிந்திருக்கும் வினைச்சொல் அல்குதலாகும். இது, அல்குதல்>அஃகுதல் = சுருங்குதல், குவிதல், கூராதல் என்று பொருள் கொள்ளும். 

[பொதுவாக ஒவ்வொரு பெயர்ச் சொல்லிற்குள்ளும் வினைச்சொல்லைத் தேடுவது நல்ல பழக்கம். அது நம் மொழி நடையைச் சிறக்க வைக்கும். பல் வேறு சொற்களுக்கு இடையே உள்ள பொருந்துமை அல்லது பொருந்தாமை புலப்படும்; விதப்புமை (specificity) என்பதும் விளங்கும்; நம்முடைய சொற்றொகுதியும் நாளடைவிற் கூடும்.]

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்

எனும் 175 ஆம் குறளில் ’அஃகுதல்’ கூர்மைப் பொருளைக் குறிக்கிறது. அஃகை> அஃசை> அகுசை> அகசை> ஆசை என்பது தமிழில் ஏற்படக்கூடிய இயல்பான திரிவே. கூர்ப்பொருள் இங்கே திசை குறித்தது. இருந்தாலும் இற்றைத்தமிழில், ஆசையின் வேறு பொருட்பாடுகளைக் கருதி, அகுசை என்றே திசைப் பொருள் சொல்லிப் பயிலலாம்.

மூன்றாம் சொல் உலகு. இதை எப்படிப் புரிந்து கொள்வது? ஒரு பாதையில் நாம் நடந்து போய்க்கொண்டே இருக்கிறோம். நம் கண்களுக்கு நேர்வருவது ஒரு திசை. சற்று திரும்பி, வேறு பக்கம் பார்த்தால், ”இன்னொரு திசையை நோக்குகிறோம்” என்கிறோம் அல்லவா? இப்படி ஒவ்வோர் திரும்பலும் ஒவவோர் திசையை நோக்குவதே. 

[திரும்பல் என்பதே வட்டப் பொருளின் வளர்ச்சி தான். ஒவ்வோர் பாகையும், அதன் நுணுத்தமும் (minute), ஒரு திசை தானே?] 

மேலை மொழிகளில் to turn இக்கு இணையான சொற்கள் எல்லாம் திரும்பலைக் குறிக்கும். மேலை மொழிகளுக்கும் தமிழிய மொழிகளுக்கும் உள்ள உறவு turn எனுஞ் சொல்லிலும் தென்படும். திரும்பலின் இன்னொரு தோற்றம் திரிதல்; மலையாளத்தில் "திரிஞ்ஞு வரு" என்பார். 

இப்படித் திரிந்து வரும் செயல் உலவுதல் (to go around) என்றும் தமிழில் சொல்லப் படும். உலத்தலும் வட்டமாய் வருவது தான். உலவுதல் எனும் வினை, உலா என்ற பெயர்ச் சொல்லையும் உருவாக்கும். கோயில்களுக்கு வெளியே உலவிச் சுற்றி வரும் திருமேனியை உலாத் திருமேனி (=உற்சவ மூர்த்தி என்பார்; உலாத் திருமேனி போய், உற்சவ மூர்த்தியே இப்பொழுது ஊரெங்கும் புழங்குகிறது. உலவெனும் பெயர்ச் சொல் உலகென்றும் திரியும். உலகெனும் சொல் திசையைக் குறித்தது இத் திரும்பலால் தான்.

அடுத்தது ககுபம் என்னும் இருபிறப்பிச் சொல். தமிழில் கழு என்பது கழி. [கழுவேற்றப் பட்டான் என்பது he was spiked என்ற பொருள்படும். நண்ணிலக் கடல் (நள் + நிலம் = நண்ணிலம் = mediteranian) நாடுகளில் வேண்டாதவரைக் குறுக்கையில் (cross) அறைவது ஒருகாலத்தில் பரவலாய் இருந்தது போல், நாவலந்தீவில் கழுவேற்றும் தண்டனை் பரவலாய் இருந்தது.] பல வட்டாரங்களில், பெரிய பாதைகள் பிரியும் இடத்தில், குச்சி, கழிகளை நாட்டுப்புறங்களில் நட்டு வைத்திருப்பார்; பக்கத்தில் ஒரு சுமைதாங்கிக் கல்லும் இருக்கும்.

கழுவிற் பெரியது கழுவம். ழகரமும், ககரமும் ஒன்றிற்கொன்று போலியாய் வடபால் திரியும். முழுத்தம் (=3 3/4 நாழிகை =1 1/2 மணி) என்ற கால அளவுச் சொல், முழுத்தம்> முகுத்தம்> முகூர்த்தம் என்று வடமொழியிற் திரிவது போல, கழுவம் என்ற தமிழ்ச்சொல்லும் கழுவம்> கழுபம்> ககுபம் எனத் திரிந்து நமக்கு வடமொழித் தோற்றம் காட்டுகிறது. 

(சிவகங்கை மாவட்டப் பெண்கள் மட்டும் இல்லையெனில் முழுத்தம் என்ற சொல் தமிழில்  மறைந்து இருக்கும் எனலாம்; நாமும் முகூர்த்தத்தின் தலைகீழ் கதையை படித்துக் கொண்டு இருப்போம்.) ஒரு திருமணத்தில் நடக்கும் முகனச் சடங்குகள் எல்லாம் ஒரு முழுத்தத்துள் முடியவேண்டும் என்பது நம் முன்னோர் மரபு. இதை அறியாத பலர் 3/4 மணி நேரம், 1 மணி நேரம் என்றெலாம் குறிப்பது அறியாமற் செய்கின்ற செயலே.

அடுத்தது காட்டை என்னும் சொல். நம் நாட்டுப்புறங்களில், முன் சொன்னது போன்ற கழி, அதாவது திசை காட்டும் குச்சி, காட்டை எனப்படும். கோயில், அரண்மனை, நகரம் ஆகியவற்றைச் சமைப்போர், அவ்விடத்தில் சரியான கிழக்குத் திசையை அறிவதற்காகவும், கதிரவன் செவ்விய உச்சிக்கு (right zenith) வரும் நாளை அளப்பதற்கும், நட்டுவைக்கும் குச்சிக்குக் காட்டை - காட்டுத் துரும்பு - என்று பெயர். 

வடமொழியில் kaas'ta என்பார். (தமிழக அரசு வெளியிட்டுள்ள செந்தமிழ்ச் சொற்பிறப்புப் பேரகரமுதலியில் இதற்கான விளக்கமுள்ளது.) பேச்சு வழக்கில் கைகாட்டி மரம் என்கிறோம் அல்லவா? அந்தக் காட்டியும், இந்தக் காட்டையும் ஒன்று தான். இது எல்லை என்ற பொருளும் கொள்ளும்; தவிர ஒரு பழைய கால அளவும் காட்டை எனப்படும். அந்த அளவைக் கீழே கொடுத்துள்ளேன். (இதுவும் முன்சொன்ன செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலியில் எடுத்தது.)

1 கணம் = இமையளவு
4 கணம் = 1 உயிர்
4 உயிர் = 1 நொடி = மாத்திரை
12 நொடி = 1 காட்டை
2 காட்டை = 1 வினாழி
60 வினாழி = 1 நாழிகை (24 நுணுத்தம் = 24 minutes)
3 3/4 நாழிகை = 1 முழுத்தம்
2 முழுத்தம் = 1 யாமம்
4 யாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்

மேலுள்ள கால அளவுத் தொகுதியில் ’முழுத்தம்’ இருப்பதையும் காணுங்கள்.

அடுத்த சொல் கோ. இது cardinal points, direction என்ற பொருட்பாடுகளைக் குறிப்பதாக அகரமுதலிகள் சொல்லும். குவ்வுதல் என்பது குவியும் வினையைக் குறிக்கும் சொல். குவ்வியது, குவளியது ஆகிப் பின் குவடு>கோடு என்ற பெயர்ச்சொல் வழி, குன்றைக் குறிக்கும். 

குவியல் (heap), குவியம் (focus) என்ற பெயர்ச்சொற்கள் நம் எல்லோருக்கும் தெரியும். புவ்வியது (=மலர்ந்தது) புவ்வு>பூவு ஆகிப் பின் பூ ஆனது. (இன்னமும் தென்பாண்டி மக்கள் பூவு என்றே சொல்வர்; பூ என்று நிறுத்த அவருக்குத் தெரியாது; அவர் பலுக்குவதைக் கேட்காவிட்டால் பூவின் சொற்பிறப்பு யாருக்கு விளங்கியிருக்கும்?) 

இதுபோல குவ்வு>கோவு>கோ என்று ஆகும். மீண்டும் கூர்ப்பொருள் உள் னிப்பதை உணரலாம். ஓரிடத்தில் நம் பார்வை குவ்வி, அதை நோக்கிப் பார்க்கும் போது அத்திசை கோ என்ற சொல்லால் புரிந்து கொள்ளப் படுகிறது.

இனி திக்கு, திகை, திசை என்று மூன்று சொற்களை ஒரு தொகுதியாகப் பார்க்கலாம். திரும்புதல் என்று முன்பார்த்த வினையின் அடிவேர்ச் சொல் துல்>தில் என்பதே. தில்> திர்> திரு> திருக்கு, தில்> திர்> திரு> திரும்பு, தில்> திர்> திரு> திருத்து எனப் பல்வேறு ஈறுகள் கொண்ட சொற்களை இங்கு எண்ணிப்பார்க்கலாம். 

அதே போல தில்> தில்க்குதல்> திக்குதல் என்பதும் to turn என்பதைக் குறிக்கும். ஒவ்வொரு திக்கும் ஒரு turning தான். இன்னொரு வளர்ச்சியில், தொடர்ந்து சீராய்ப் பேசி வந்த ஒருவன் மேற்கொண்டு அதே படி போக முடியாமல் தடுமாறுவதையும் திக்குதல் என்றே திசைப்பொருளில் (ஆனால் சிந்தனை ஒட்டத்தைக் குறிப்பது போல்) ஆள்கிறோம் அல்லவா? திரிகை என்பது change என்ற பொருளைக் குறிக்கும். திருகு என்ற சொல் கன்னடத்தில் turning, திசை என்பதைக் குறிக்கும்.

திக்கு என்பது திக்கை என்ற பெயர்ச் சொல்லை மேலும் உருவாக்கி, மீண்டும் திகைதல் என்ற வினைச்சொல்லையும் உருவாக்கும். சில இடங்களில் திக்கை என்பது, ஒரு ‘முட்டுத் திக்கை’ ஆகிவிடும். அதனால் திகை என்பதற்கு முடிவு, எல்லை என்ற பொருளும் அமையும். திகைதல் = முடிதல், தீர்தல்.(தீர்தல் என்பது கூடத் தில் என்னும் வேரில் தோன்றிய சொல் தான்.) "அதன் விலை இன்னும் திகையவில்லை" என்பது தென்னாட்டு வழக்கு. திகையம்> தெகையம்> தேயம்> தேசம் என்பது ஒரு திசையின் முடிவில் இருக்கும் இடம், மக்கள் கூட்டம்.

ஆகத் தேசம் என்றசொல்லின் பிறப்பு தமிழில் உள்ளது. அதை அடையாளம் காணத்தான் ஆட்கள் இல்லை. பெருமை தெரியாமல் நாம் வெறுமையாய்க் கிடக்கிறோம். தேசத்தில் கிளைத்த சொற்கள் பல இந்திய மொழிகளில் உண்டு. இன்றைக்கு தேசம் என்பது nation என்றும், நாடு என்பது country என்றும் புரிந்து கொள்ளப் படுகிறது. இந்தியா என்பது ஒரு பல்தேச நாடு. இதில் ஒரு காலத்தில் 56 தேசங்கள் இருந்ததாய்ச் சொல்வது தொன்மம்.

தயக்கம்>தியக்கம் எனும் சொல் கூட திகு>தி்க்கு எனும் இச் சொற் குடும்பத்திற் சேர்ந்ததே. செய்வதறியாது நிற்கும் நிலையைக் குறிக்கும்.

ககர/சகரப் போலியில் திகை, திசையாகும். இற்றைத்தமிழில் பரவலாய்  திசை அறியப்படும். திசையன்விளை =  தென்பாண்டி நாட்டில் ஓர் ஊர்.

அடுத்த சொல் புலம். புல்>புலம் என்பது சொல்வளர்ச்சி. நாம் ஏதோ ஓர் இடத்தில் நிற்கிறோம்; அதற்கப்புறம் போகும்வழி நமக்குத் தெரியவில்லை; இருந்தாலும் தூரத்தில் ஏதோ ஒன்று புலப்படுகிறது. இப்படிக் கண்ணுக்குப் புலப்படுவதாலே புலம் எனும் சொல் திசையைக் குறித்தது. (கண்ணுக்கும், பார்வைக்கும், திசைக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.)

தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை

என்று சொல்கிறதல்லவா, 43-ஆவது குறள்? இங்கே தென்புலத்தார் என்பது நம் முன்னோரைக் குறிப்பது. நம் முன்னோர் இறப்பிற்குப் பின் தென்திசை சேருகிறார் என்பது தமிழரின் தொன்மம். ஆண்டில் ஒரு நாள் பிண்டம் கொடுத்து தென்புலத்தாரை வணங்குவது தமிழர் மரபு. இன்றும் கூடக் குமரி மாவட்டத்தில் இப்பழக்கம் இடையறாது நீர்நிலைக் கரைகளில் கடைப் பிடிக்கப் படுகிறது. மற்றவர், முன்னோர் இறந்த திகழி(=திதி)யில் பிண்டம் கொடுப்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்கிறார். பிண்டம் கொடுப்பதன் பெயர்கூட வடசொல்லாய்த் திரிந்து தர்ப்பணமாகிப் போனது. (உண்மையில் அது தருப் பிண்டம்> தர்ப்பண்டம்> தர்ப்பண்ணம்> தர்ப்பணம் என்ற திரிவில் புரிந்துகொள்ள வேண்டிய சொல். எப்படி எல்லாம் தமிழ்மூலம் அழிந்தது, பாருங்கள்?) புலம் என்ற சொல் திசைக் குறிப்பது இப்படித்தான். கிட்டத்தட்ட region எனும் பொருள். வடபுலம், தென்புலம், மேம்புலம், கீழ்ப்புலம் என்ற சொற்கள் இப்படித்தான் பயிலுகின்றன.

அடுத்தது மாதிரம். மறுதல் வினை திரும்பற் செயலைக் குறிக்கும். மறித்தல்  பிறவினையாகி திருப்புதல் பொருளைக் கொடுக்கும். முன்னே சொன்னது போல் மறுதல் > மறுகுதல் ஆகி அங்குமிங்கும் திரும்பி நடைபோடுவதைக் குறிக்கும். "என்ன இவன் ஒன்றுஞ்சொல்லாது மறுகிக் கொண்டே உள்ளான் ?" மறுகு>மறுகம் என்ற தமிழ்ச்சொல் மார்க்கமென வடபால் திரிந்து தில்லி நகரெங்கும் Marg என்று அடையாளம் காட்டி நிற்கிறது. நாம் தான் மூலம் தெரியாது உள்ளோம். மறுதல் வினை இன்னோர் ஈற்றில் மறுதம்>மாறுதம் ஆகிப் பின் (பொக்குளம் கொப்புளம் ஆவது போல்) metathesis முறையில் திரிந்து, றகரம் ரகரமாய் மெலிந்து, மாதிரம் ஆகும்.

அடுத்தது வம்பல். எந்த ஓர் இடத்திலும் முன்வந்து தெரியும் பொருளை அடையாளம் காட்டியே திசை காட்டுகிறோம். "உங்கள் இடத்தை அடையக் கவனிக்க வேண்டிய Land mark என்ன?" முன்தள்ளி இருப்பதை எப்படிச் சொல்லுகிறோம்? "அதோ, அந்தத் தொலைவில் பொம்மிக் கொண்டு ( = பொம்பிக் கொண்டு), பம்மிக் கொண்டு (= பம்பிக் கொண்டு) தெரிகிறது பார் அம்மரத்திற்கு அருகில் நாம் போக வேண்டும்" பம்பல் (=to show prominent) என்ற சொல் வம்பல் என இயல்பான பகர/வகரப் போலியில் மாறுகிறது. (Landmark =  பொம்பல் என்று சொல்ல எத்தனை பேர்  முன்வருவோம். லாண்ட்மார்க் என்றோ இடக்குறி என்று சொல்வதற்கே பலரும் முயலுவார்.) பரன் என்பது மேல் என்னும் பொருளில் வரன் என்றும் திரிகிறது அல்லவா?

வம்புதல் என்பது முன்வந்து தெரிந்த காரணத்தால் புதிதாதல் என்றும் பொருளுங் கொள்ளும். "வம்ப மோரியர்" என்ற சொல்லால் மகதத்தில் நந்தருக்கப்புறம் புதிதாக எழுந்த கூட்டத்தைச் சங்கத்தமிழர் அழைத்தனர். இன்னொருவரை வம்பரென்று யார் அழைப்பார்? நாட்பட இருந்த பழையவர் தானே புதியவரை அப்படி அழைக்க முடியும்? அப்புறம் எப்படி, மோரியர்கள் சங்க காலத்திற்கு முன்னவர் ஆனார்? என்ன, கந்தர கோளம், பாருங்கள்? வம்பரெனும் தமிழ்ச் சொற்பிறப்பைச் சரியாகப் புரிந்து கொண்டால், சங்க காலம் மோரியருக்கும் முந்திய நிலையில் தொடங்கியிருக்கக் கூடிய ஒன்று என்று புரிந்துபோகாதோ? இதைவிடுத்து, இன்று நாம் கற்றுக் கொள்ளும் வரலாறு தலைகீழ்ப் பாடமாய் அல்லவா உள்ளது? தாத்தனைப் பேரன் என்று சொல்லும் நடைமுறையில் வம்பரை முந்தையராக்கி், பழையரைப் பிந்தையராக்கி, இந்திய வரலாற்று ஆசிரியர் குழப்படியல்லவா பண்ணிக் கொண்டு இருக்கிறார்? நாமும் அவரோடு சேர்ந்து ஊம் கொட்டி ”ஆமாம் சாமி” போடுகிறோமே?. ஒரு முட்டாள்தனமான புரிதலுக்கு தமிழரும் துணை போகிறோமே? (என்செய்வது? அவ்வளவு ஏமாளியாகத் தமிழர் இருக்கிறோம், சரியாக ஆய்ந்தால் நந்தர் காலத்திலேயே சங்க காலம் தொடங்கிவிடுகிறது. இருந்தாலும் தமிழரைப் புறந்தள்ளியே இந்திய வரலாறு எழுதப்படுகிறது.)

திசைபற்றிய 14 ஆவது சொல் விசும்பு இது areal region, sky என்பதைக் குறிக்கிறது. ஒருகுன்றின் மேட்டுநிலையில் இருந்து கீழ்நோக்கிப் பார்த்த நிலையில், "அதோ அங்கு வியல்ந்து விரிந்து தெரிகிறதே சமவெளி அதைநோக்கி நாம் போகவேண்டும்." என்று சொல்லலாம் தானே?

மேலே மலையின்மேல் பரந்து கிடந்து மக்கள் வாழும்படி ஒரு மிசைநிலமாய் [ = table land like in Cape town, S.Africa, அல்லது புனைக்கு (Pune) அருகில் சகயத்திரி மலையில் பார்க்கும் மிசைநிலம் போன்றது] இருக்கும் இடம் பரம்பு> பறம்பு. பறம்பு இருக்கும் மலை பறம்பு மலை. பறம்பு மலையில் தன்னைத் தானே புரந்து கொள்ளும் நிலையில் விளைபொருட்களும், மற்றவையும் கிடைத்தமையாலே ஒரு மாதத்திற்கு மேல் மூவேந்தர் முற்றுகையிட்டும் வள்ளல் பாரியால் தாக்குப்பிடிக்க முடிந்தது என்று புறப்பாட்டுக்களால் அறிகிறோம். ஆக விரிந்துபரந்து மிசைநிலமாய்க் கிடந்தது பறம்பு. அப் பறம்பு மலை இன்று பிரான் மலை எனப்படுகிறது. பறம்பக்குடி>பரமக் குடி ஆனது வேறு விளக்கத்தைக் காட்டும். [அந்த மாற்று விளக்கத்தை இங்கு தவிர்க்கிறேன்.]

பறம்பைப் போல இங்கு வியல்ம்பு>வியம்பு>விசும்பு என்பது விரிந்து கிடக்கும் இன்னொரு வகை நிலம். பின்னால் இதே சொல் நிலத்திற்கு மாறாய் விண்ணைக் குறிக்கவும் பயன்பட்டது.

திசைகள் பற்றி பிங்கல நிகண்டு உரைத்த 14 சொற்களைச் சொன்னதோடு, முன்னே சொன்னது போல் நேரி, நெறி என்ற சொற்ளைப் புறனடையாகச் சொல்லுகிறேன். இவையும் தமிழில் திசையைக் குறிப்பனவே.

திருநெல்வேலி தாண்டி நாகர்கோவில் போகும் வழியில் 4 திசைகளாய்ப் பிரியும் ஓரிடத்திற்கு நான்குநேரி என்று பெயர் (விண்ணவத் தலம்); இதே போல தூத்துக்குடி/நெல்லையில் இருந்துவரும் சாலைகள் சேர்ந்து திருச்செந்தூரை நோக்கி (ஆறுமுகனை நோக்கி) இட்டுச் செல்லும் திசையைக் காட்டும் ஊர் ஆறுமுக நேரி. இது போலப் பல்வேறு நேரிகள் தென்பாண்டி நாட்டில் உண்டு.

நேரி, பருப் பொருட்திசையைக் காட்ட, நெறி, சிந்தைப் பொருட்திசையைக் காட்டும். அற நெறி, அன்பு நெறி, நெறிபிறழ்தல் என்றெலாம் சொல்கிறோம் அல்லவா? இதிலெலாம் சிந்தைப் பொருள் திசையைக் காட்ட நெறியே பயன் படுகிறது. இச்சொல்லை திரைப்பட நெறியாளர் தங்கர் பச்சான் கூட, தன் ஆக்கங்களில் கையாளுகிறார்; நெறியாள்கை = direction என்று அவர் போட்டுக் கொள்கிறார். திரு. சீமானும் இதேபோலப் போட்டுக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். (நானும் கூட என் அலுவல் பொறுப்பில் தமிழில் எழுத வேண்டிய இடங்களில் செயல் நெறியாளர் (executive director), நுட்பியல் நெறியாளர் (technical director), புறத்திட்ட நெறியாளர் (project director), நிர்வாக நெறியாளர் (managing director) என்று வெவ்வேறு காலங்களில் பயன்படுத்தி இருக்கிறேன். (நிர்வாக நெறியாளர் என்று சொல்ல விழையாத இடங்களில் மானகை நெறியாளர் எனலாம்.) ஒரு நிறுவனம் (corporation) தொடர்பான எல்லாப் பயன்பாடுகளுக்கும் நெறியாளர் என்பதே சரியாக வரும். இயக்குநர் என்ற சொல்லாக்கம் சரியாக அமையாது. ஒரு நிறுவனத்தில் director, operator என்ற இருவரும் உண்டு. முதலாமவரை நெறியாளர் என்றும் இரண்டாமவரை இயக்குநர் என்றும் சொல்வதே பொருள் பொதிந்து இருக்கும்.)

இனி அடுத்த பகுதியில் விதப்பான திசைகளைப் பார்க்கலாம்.

அன்புடன்,
இராம.கி.

Wednesday, April 02, 2008

திசைகள் - 1

"பழங்கால, இடைக்கால இந்திய வடிவியல்" எனனும் பொத்தகத்தை (Geometry in Ancient and Medieval India - Dr.T.A.Sarasvati Amma, Motilal Banarsidass Publishers, Delhi, First Edition 1979, Second Revised Edition, 1999, Reprint 2007.) படித்துக் கொண்டிருந்தேன். 

[அந்த நூலைப் பற்றியும், அதில் வரும் செய்திகள் பற்றியும் இன்னொரு இடுகையில் பேசலாம்.] அந்தப் பொத்தகத்தில் வரும் ”ப்ராசி” என்ற சொல் இத்தொடரை எழுத எனக்குத் தூண்டுகோலாய் அமைந்தது.

வடிவியற் கணிதம் நாவலந்தீவின் பல பகுதிகளில் எழுந்திருந்தாலும், அதன் நூல்கள் வட்டார மொழிகளிலன்றி, சங்கதத்திலேயே ஒருகாலம் எழுதப் பட்டன. (இது இரோப்பாவில் இலத்தீனிலும், கிரேக்கத்திலும் ஒரு காலத்தில் எழுதியதைப் போன்றது.) 

ஆனாலும் வடிவியற் கலைச்சொற்கள் பலவும் சங்கதத்திற் கிளைத்தவை அல்ல. அவற்றின் வேர்கள் தமிழ் போன்ற வட்டார மொழிகளில் இன்றுமுள. ஆழ்ந்துபார்த்தால், தமிழில் இவை மிகுதியாகவே உள்ளன.

வடிவியலைப் பயனாக்கிய நம்மூர்த் தச்சர், கொல்லர், சிற்பிகள், தாவதிகள் (>ஸ்தபதிகள்) ஆகியோர் தமிழ்வழி தான் தம் தொழில்களைப் புரிந்தார். அந்நிலையில், அவர் பயன்படுத்திய கலைச்சொற்கள் உள்ளார்ந்த தமிழ் மூலம் காட்டாது இருக்கமுடியுமோ? 

தவிர, வடமொழிக் கணித நூல்களை எழுதிய பலரும் தென்னகத்தைச் சேர்ந்தவர் எனும் போது, இவர் தமிழை அறியாது இருந்திருப்பாரோ? (தியாகையர் தெலுங்கிலே இசைப்பாட்டு எழுதினாலும், தமிழை அறியாமலா, திருவையாற்றில் வாழ்ந்திருப்பார்? தமிழிசை ஓட்டம் அவருக்குத் தெரியாது இருந்திருக்குமோ? “கர்நாடக இசை”  தமிழிசை வழியன்றி, அந்தரத்தில் டங்கென்று  குதித்திருக்குமோ? ஏன் நாம் இதை ஓர்ந்து பார்க்க மாட்டேம் என்கிறோம்?)

பொதுவாகச் சங்கதம் எனும் கலப்புப் பேச்சு ( ஆம், அது சம்+கதம் = கலந்த பேச்சு; இருந்தாலும் கலப்புப் பேச்சு என்று ஏற்பதற்குப் பலரும் தயங்குகிறார். அது ஏதோ ஒரு சொயம்பு போலவும், மற்றவை அதன் மடியில் உதித்தவை என்றே ஒரு தொன்மம் இந்நாட்டில் வலிந்து பரப்பப்பட்டு வருகிறது.) 

இக் காலத்து ஆங்கிலம் போலவே, ஒரு செந்தரப் படுத்தலுக்கும், மண்டலங்கள் இடையே உள்ள பரிமாற்றத்திற்குமாக, அக்காலப் படித்தவரிடையே சங்கதம் எனும் கலப்புப் பேச்சுப் புழங்கியிருந்தது. இதனால், இந்திய அறிவியற் கலைச் சொற்களின் ஊற்றுக்கண்கள் வட்டார மொழிகளில் இருந்தும் கூட, அவற்றை ஒதுக்கிச் சங்கதப் பெருந்தெய்வத்திற்கே பல அறிவாளர்களும் படையல் இட்டிருக்கிறார்; ஏன், "மற்ற இந்திய மொழிகளில் ஒன்றுமே இல்லை"யென்று கூட சிலர் சல்லியடித்திருக்கிறார்.

 இப்படி, வட்டார மொழிகளில் இருந்த முதல்நிலை உசாக்கள் (references) எல்லாம் ஆவணமாகாமல், இன்றுள்ள வழிநிலைச் சங்கத நூல்களே, பெருவுதியாகக் (priority) கொள்ளப்பட்டன. பெரும்பாலும் (சங்கதத் துபாசிகளாலேயே) இந்திய மரபுகளை 18, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் அறிந்த மேலையாய்வாளரும் கூட இத்தோற்றத்தில் தடுமாறிப் போயிருக்கிறார்; ”எல்லாமே சங்கதம்” என்ற வலைக்குள் அவரும் விழுந்திருக்கிறார். இன்று வரை அதுவே பழக்கமாய் இருக்கிறது. 

காட்டாக, இன்றைக்கு உலகு எங்கும் பயனாகும் பதின்ம (decimal) எண்களின் வரலாற்றை ஆய்ந்து, The Universal History of Numbers என்ற அருமையான 3 தொகுதி நூலை (Penguin Books Limited; 1st Indian edition 2005; பலரும் படிக்க நான் பரிந்துரைக்கும் பொத்தகம்.) வெளியிட்ட Georges Ifrah கூடத் "தமிழர் தம் எண்முறையில் சுழியை (zero) பயன்படுத்தியதில்லை, அவருடைய எண்மானம் தான-மதிப்பு கட்டகத்தைச் (place-value system) சாராமல், கூட்டல், பெருக்கல் ஆகிய இரண்டும் விரவிய ஒரு கலவைக் கட்டகத்தையே (hybrid system) சார்ந்தது" என்று தன் பொத்தகத்தில் சொல்வார். 

[zero, சூன்யம் ஆகியவற்றின் சொற்பிறப்பு ’சுழி’க்குள் சுருண்டு கிடக்கிறது என்ற சூழ்க்குமத்தை யார்  சூல்ந்து (=தோண்டிப்) பார்க்கிறார், சொல்லுங்கள்? அதுவும், சுழியை மறக்கடித்து ”பூஜ்யம்” என்றே எல்லா இடத்தும் பரப்பிவிட்ட நிலையில்......:-). பாழைச் சுட்டும் பரிபாடல்.....?]

7659 என்று, தான-மதிப்புக் கட்டக முறையில் எழுதாமல், 7  6 ௱ 5  9 என்று ௲/1000, ௱/100, ௰/10 ஆகிய குறியீடுகளைச் சேர்த்து அண்மைக்காலம் வரை, எண்களைத் தமிழர் எழுதி வந்ததாகவும், "சுழிக் கருத்தீட்டை அவர் அறிந்திருக்கவில்லை" என்றும் இர்வா சொல்லும்போது,  சட்டென மறுக்க முடியாது, நாம் தடுமாறித் தான் போகிறோம்.

[ஏனெனில், அவர்கூற்றில் உண்மையில்லை எனினும், ஓர் உள்ளமைத் (reality) தோற்றம் தெரி்கிறது. 1950 களின் தொடக்கத்தில் கூடத் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ” 7  6 ௱  9” என்றே, என்போன்றோர் எண்களை ஏடுகளிலும், கரும்பலகைளிலும், மணலிலும் எழுதிப் படித்துவந்தோம். 

அப்பொழுது எல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்களே மிகுதி; அரசு வாரியத் தொடக்கப் பள்ளிகள் மிக மிகக் குறைவு) ஆயிரம், நூறு, பத்து ஆகிய குறியீடுகளோடு் தான் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் கணக்குகளை நாங்கள் போட்டு வந்தோம். 

தான மதிப்பு முறை, எம் போன்றோருக்குத் திண்ணைப் பள்ளிப் படிப்பின் 2 ஆம்/ 3 ஆம் ஆண்டுகளில் தான் சொல்லித் தரப் பட்டது. தான-மதிப்பு முறையில் அல்லாத பழங்கணித முறை வழக்கம் தமிழ்நாட்டில் நீண்ட நெடுநாட்கள் இருந்தது. திண்ணைப் பள்ளிக்கூடங்கள் மறைந்து, அரசின் கல்விவாரிய மெக்காலே முறை பரவிய பின்னரே, தான மதிப்பு முறை தமிழ்நாட்டிற் விரிவாகச் சொல்லித் தரப்பட்டது.]

இந்த உள்ளமை நிலையைக் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், பழைய ஆவணங்கள் வழி அறியலாம். தமிழ்த் தடவரைகளில் (Tamil texts) தான மதிப்பு முதன் முதலில் தோற்றம் காட்டுவது 16/17ஆம் நூற்றாண்டுக் கொங்கு மண்டலச் செப்பேடுகளில் தான். 

அவற்றிற்கு முன், ஆயிரம், நூறு, பத்து ஆகிய தானங்களுக்குக் குறியீடிட்டே தமிழில் கல்வெட்டுக்கள் இருந்துள்ளன. அப்படியானால், தான-மதிப்பு முறையை 16-ஆம் நூற்றாண்டிற்கு முன் தமிழர் அறியாதவரா, என்ன? - இது வருங்காலக் கல்வெட்டு ஆய்வாளர் ஆழமாய் ஆய வேண்டிய கேள்வி. 

[வருந்தத்தக்க வகையில் இந்த ஆய்வு இன்னும் நம்மூரில் நடைபெறவே இல்லை. இதையெலாம் செய்ய யார் முன்வருகிறார், சொல்லுங்கள்? :-( ]

அதே பொழுது, இதுவரை கிடைத்த ஆவணங்களில், தான மதிப்பைப் பயன் படுத்திய, ஆகப் பழமையான இந்தியத் தடவரை ஆவணமாய், "லோக விபாக ( = உலகின் பாகங்கள்)" எனும் செயினக் காயவியல் தடவரையை (Jaina cosmological text) Georges Ifrah நூலில் எடுத்துரைப்பார்; 

மிகத் துல்லியமாக அத் தடவரையில் காலத்தைத் "திங்கள், 25 ஆகசுடு, கி.பி.458" என்றும்  குறிப்பார். இப்படிப் பெருமை பெற்ற "லோக விபாக" என்ற செயின நூல் எங்கு எழுந்தது என்றெண்ணினால், நீங்கள் வியந்து போவீர்கள்! வேறெங்கும் இல்லை, நம் "நகரேஷு காஞ்சி"யில் தான். [மறவாதீர், அக் காலத்திற் செயினத்தை உச்சப் புரந்தது இங்கிருந்த பல்லவப் பேரரசே.  சிவநெறியும், அப்பரும், செயினத்தை இங்கிருந்து தொலைத்தெறியாக் காலத்தை நான் குறிக்கிறேன்.]

இவ்வேடிக்கையைப் பார்த்தீர்களா? எண்முறை பற்றிய, இந்தியாவிலே எழுந்த, ஓர் அறதப் பழைய ஆவணம், சுற்றிலும் தமிழ்புழங்கும் ஓரிடத்தில் எழுகிறது; அதுவும் தமிழில் எழாமல், பாகதத்தில் எழுகிறது; இருந்தாலும், தண்ணீர் ஒட்டாத் தாமரையிலை போல், அக்காலத் தமிழ் வழக்கில் தான மதிப்பு இல்லையாம், சுழிக்குறியீடும், கருத்தீடும் கூட இங்கு இல்லையாம். எப்படி ஒரு முரண்நகை? ”கேப்பையில் நெய் வடிகிறதென்றால் கேட்பாருக்கு எங்கே புத்தி போனது?” என்பார் எங்களூர்ப் பக்கம். "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்ற சொலவடையும், சிரிப்பும் கூட என்னுள் எழுகின்றன.

"சுற்றியிருக்கும் சூழலை மீறி ஓர் அறிவு நூலும், அதிற் பயிலும் கலைச் சொற்களும் எழ முடியும்" என்று அறிவியற் சிந்தனையாளர் எப்படி ஒரு முடிவிற்கு வருகிறாரோ? "சகலம் சமஸ்க்ருதாய நமக" என்ற பாராயனமும் எப்பொழுது நிற்குமோ, தெரியவில்லை? - இது போன்ற கேள்விகளைச் சற்று அந்தரத்தில் விட்டுவிட்டு, திசைகள் பற்றிய கலைச்சொற்களுக்கு  வருவோம்.

மேற்சொன்ன வடிவியற் நூல், மகாவேதி, யஞ்யம் போன்ற குண்டங்களை வேத விற்பன்னர்கள் அமைக்கும் வழிமுறைகளைச் சொல்லும், கி.மு.800-500 -ஐச் சேர்ந்த, "சுல்ப சாஸ்த்ரத்தில்" இருந்து தொடங்கும். 

இக் குண்டங்களின் அளவீடுகள் பித்தகோரசின் எண்களாகவே இருப்பதையும், அதே நேரத்தில் ஒரு செங்கோண முக்கோணத்தின் குறுனச் சதுரத்திற்கும் (குறுனம்> கரணம் = hypotenuse; கரணம் என்று திரிந்த சொல்லையே புழங்கிக் குறுனம் என்ற பொருள்விளங்கும் முதற்சொல்லை நாமெல்லோரும் மறந்தாயிற்று. குறுனச் சதுரம் = square of the hypotenuse) பக்கச் சதுரங்களுக்கும் (squares of the sides) இடையே உள்ள உறவைப் பித்தகோரசிற்கு முந்திய காலத்திலேயே புரிந்து வைத்திருந்தனர் என்றும் அந்த வடிவியற் பொத்தகம் சொல்ல முற்படும்.

பொதுவாக வேதியர் தம்முடைய வேதி, யாகக் குண்டங்கள் அமைப்பதற்கு முன்னால் கிழக்கு-மேற்குக் கோட்டை வரையறுத்துக் கொள்வார். [இக் கோட்டை வரையறுப்பதற்கு, சூரியன் நகர்வதுபோல் தோற்றங்காட்டும் பாதை, அந்நகர்ச்சியால் பகற்பொழுதில் புவியின் மேல்விழும் குச்சி நிழலின் பாகை (degree), வானியல் நகர்ச்சி போன்றவை தெரிந்திருக்க வேண்டும்.] எல்லா வடிவியற் கணக்குகளிலும், இக் கிழக்கு-மேற்குக் கோட்டை ஒரு சம-அளவீட்டுக் கோடாக்கி (symmetric line), ப்ராசி என்ற சொல்லால் இந்திய வடிவியல் அழைக்கும்.

இச் செய்தி படித்தவுடன், எனக்குப் புறநானூறு 229 ஆம் பாடல் நினைவிற்கு வந்தது. அதில் யானைக்கண் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் இறப்பைக் குறித்த செய்தியைக் கூடலூர் கிழார் வானிலையோடு பொருத்தி, எரிமீன் போகும் பாதையையும், அற்றை மூட நம்பிக்கையையும் தொட்டுக் காண்பிப்பார். 

அந்தப் பாட்டை முழுக்கவும் சொல்லாது, அதில் வரும் "பாசிச் செல்லாது, ஊசி முன்னாது" என்ற ஒரு தொடரை மட்டும் (கிழக்கிலும் போகாது, வடக்கிலும் நகராது - என்பது இத்தொடருக்கான பொருள்) நினைவு கூர்கிறேன். தொடரில் வரும் பாசி (=ப்ராசி) என்பது கிழக்குத் திசையைக் காட்டும்; இதே போல (உகசி>) ஊசி என்பது வட திசையைக் காட்டும்.

பொதுவாக இக்காலத் தமிழர் திசைகள் பற்றிச் சொல்லும்போது, 'கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு' என்ற சொற்களை மட்டுமே சட்டென்று தம் சொல் தொகுதியிலிருந்து வெளியெடுத்து நினைவு கொள்கின்றனர். 

இன்னும் கொஞ்சம் தமிழ் இலக்கியம் தெரிந்தவர் குணக்கு (=கிழக்கு), குடக்கு (=மேற்கு) போன்றவற்றை அடையாளம் காட்டுவர். சற்றே வடமொழிப் பயிற்சி உள்ளவர் உத்தரம், தக்கணம் என்ற இருபிறப்பிச் சொற்களை முன்னெடுத்து வைப்பார். (உத்தரப் ப்ரதேஷ் என்பது வடக்கில் உள்ள பெரிய தேசம்; தக்ஷிணப் ப்ரதேஷ் என்பது இன்று நான்கு மாநிலங்களாய்ப் பிரிந்து கிடக்கும் தக்கணப் பெருந் தேசம்.)

ஆனால், திசைகளைப் பொதுவாய்க் குறிக்கவும், விதப்பாக 4 திசைகளைக் குறிக்கவும் இன்னுஞ் சில சொற்கள் தமிழாயும், சில இருபிறப்பியாகவும் உள்ளன. அவற்றை விவரித்து உரையாடுவதே இத்தொடர் கட்டுரையின் நோக்கமாகும். (தம் சொற்றொகுதிகளைக் கூட்டிக் கொள்ளாமல், குண்டு சட்டிக்குள்ளே குதிரையோட்டிக் கொண்டிருக்கும் நண்பர் இனிமேலாவது சற்று உகந்து, பழம் இலக்கியங்களுக்குள், ஆழவும், அகலவும் உழுவாரோ?)

அன்புடன்,
இராம.கி.

Monday, March 24, 2008

ஏழு சுரங்கள் - 4

ஆறாவது சுரம் தைவதம். இதைத் தெய்வதம் என்று சொல்லித் தெய்வத்தோடு தொடுக்கும் சங்கத விளக்கம் தட்டையாகவே தெரிகிறது. அது எப்படி இந்தச் சுரம் மட்டும் தெய்வம் நாடுவதாய் இருக்க முடியும்? மற்றவை எல்லாம் தெய்வம் ஏற்காதவையா? "ஏழிசையாய், இசைப்பயனாய், இன்னமுதாய்......" என்றெலாம் பழம் பஞ்சுரப்பண்ணில், சுந்தரர் திருவாரூர் இறைவனை அழைத்திருக்கும் போது, எல்லாச் சுரமும் தெய்வத்தொடர்பு கொண்டவை என்றல்லவா சொல்ல வேண்டும்? இச்சிந்தனை தான், வெளிர்கருப்பு என்ற சொல்லாடல் வழி, என்னைத் துய் என்னும் தமிழ்ச் சொல்லை நோக்கித் தேட வைத்தது.

pure என்ற பொருட்பாட்டைக் குறிக்கும் தூய என்ற சொல் துய் என்ற வேரில் கிளைத்தது; அதற்கு வெண்மைப் பொருளும் உண்டு. வெள்ளைப் பஞ்சைத் துய் என்று சங்க இலக்கியம் சொல்லும். துய்யித்தல்/துய்வித்தல் என்பது to make it pure என்று வினையைக் காட்டும். துய்ய = கலப்பற்ற, துய்ய மல்லி = 4 முதல் 6 மாதங்களில் விளையக்கூடிய வெள்ளைச் சம்பா நெல், துய்ய பால் = நீர் கலக்காத பால், துய்யன் = வெள்ளி மணல் ஆகிய சொற்களையும் இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

வெள்ளை நிறப் பருத்தியில் ஆன துணி துய்>துய்கு>துகு>துகில் என்று சொல்லப் படும். பருத்தித் துகிலை உலகிற்கு அறிமுகப் படுத்தியது இந்தியத் துணைக் கண்டமாகலாம் என்றே புதலியர் (botanists) கூறுகிறார். துகில் என்ற சொல்லுக்கும் textile என்ற மேலைச் சொல்லுக்கும் சொற்பிறப்புத் தொடர்பு உண்டு. அதன்காரணமாகத் தான் textile science ஐத் துகிலியலென இக்காலம்  சொல்கிறோம். [வேறு சிலர் textile யை தச்சுதலோடு தொடர்புறுத்துவார்; நான் அவரிலிருந்து மாறுபடுவேன். தச்சு வினையை techne என்பதோடு இணைத்துப் பார்ப்பதே பொருத்தமாகும்.]

துகிலில், மைக்குழம்பு கொண்டெழுதியது text. [ எழுதுபொருளின் வாயிலாய், எழுதிய உரைக்கு வந்த பெயர் துகில் - text. இப்படி ஓர் இயலுமை (possibility) இருந்தும், "சிந்து சமவெளி நாகரிகத்தாருக்கு எழுத்தே கிடையாது, அங்கு கிடைத்த கீற்றுகள் எல்லாம் மொழியையும் பேச்சையும் குறிப்பனவே அல்ல" என்று இக்காலத்தில் ஒரு மேலையாய்வாளர் குழு சொல்ல முற்படுகிறது. என்ன செய்வது? வெள்ளைப் பருத்தித் துணியோ, வெண்பட்டோ கால காலத்திற்கும் நிலைத்திருக்குமா என்ன, ஒரு தலைமுறையில் இற்றுப்போய் விடாதோ?] வெள்நூலைத் துகுநூலென்றும், வெண்பட்டைத் துகுலமென்றும்,  வெண்காரத்தை (borax) துடங்கணம் என்றும் நம் அகரமுதலிகள் குறித்து வைக்கின்றன.

துய்யின் திரிவாய்த் துல்>துலங்கு>துலக்கு என்ற சொல்லும், அழுக்கைப் போக்கும் வினையைக் குறிக்கும். துலம், துலவம் என்ற சொற்களும் பருத்தியையே குறிக்கின்றன. துல்>துங்கம் என்ற சொல் தூய்மையையும், வெள்ளையையும் குறிக்கிறது. வெள்நுரை பொங்கப் புரண்டெழுந்து வரும் [கன்ன பெருநையின் (River Krishna)] துணையாறு துங்கப் பெருநை>துங்கப் பெருதை>துங்க பெதுரை>துங்க பத்ரா என இன்று குறிக்கப் படுகிறது. [நாவலந்தீவின் ஆற்றுப் பெயர்களிற் பலவும் தமிழ்த் தொடர்பையே காட்டுகின்றன. ஆய்ந்து பார்க்கத் தான் ஆட்களைக் காணோம்.]

துய்ய நிறத்தில் (வெள்ளை நிறத்தில்) உள்ள நீர்மம் துய்த்தம்>துத்தம் என்றாகிப் பாலைக் குறிக்கும். அதேசொல் வடபுலத்தில் தூத் (dhuuth) என்று ஆகும். வெறுமே குடிக்கும் பால் மட்டும் தூத் என்று வடபுலத்திற் சொல்லப் படுவதில்லை. எங்கெல்லாம் பால்வடியும் மரங்களுக்குப் பாலை என்று நாம் சொல்கிறோமோ, அந்த மரங்களுக்கு dhuthi என்றே ஓர் ஒழுங்கு முறையில் அவர் சொல்கிறார். காட்டாக, பால்வடியும் பல்வேறு கள்ளிச் செடிகளும் அதே காரணத்தாற் தூதி என்றே வடபுலத்திற் சொல்லப் படும். இதேபோல குடசப் பாலை மரமும் துத்குரி, துதாரி என்று சொல்லப்படும். வெட்பாலை எனும் மரமும் dhudi என்றே சொல்லப் படுகிறது. ஆக, பால் / துத்தி>தூதி என்ற சொற்களிடையே நாவலந்தீவு முழுவதும் ஓர் ஒழுங்கிணை தென்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், துய்ப்பு>துப்பு>துப்பம் என்ற தமிழ்ச் சொற்கள் பாலில் கிடைக்கும் நெய்யைக் குறிக்கின்றன. துப்புருவும் (=சுத்தமாக்கும்) செயலில் விளையும் துப்புரவு என்ற பெயர்ச்சொல்லும் தூய்மை செய்தலையே குறிக்கிறது. போரில் பகைவரோடு பொருதும் வீரர்கள் அணிந்து கொள்ளும் சிறிய வெள்ளை நிறப் பூ நம் இலக்கியங்களில் தும்பைப் பூ என்றே சொல்லப்படும். துப்பு>தும்பு என்ற சொல் வெண்மையைக் குறிக்காமல் தும்பை என்ற பூப்பெயர் தோன்ற முடியுமா?

துத்தம் (=பால்) பற்றி இவ்வளவு விரிவாகப்பார்த்த நாம், அது பெயரடையாகப் (adjective) பயன்படும் விதயத்தை இனிப் பார்ப்போம். நாகம் என்ற சொல் இரும்பு தவிர்த்த கருநிற மாழைகளைக் (காட்டாக lead, zinc) குறிக்கும் ஒரு தமிழ்ச்சொல். பல்வேறு நாக மாழைகளில், கொஞ்சம் வெளிறிய கருப்புக் கொண்ட நாகத்தைத் துத்த நாகம் (=zinc) என்கிறோம். இதேபோல வெள்ளைப் படிகாரம் (copper sulphate) ஒன்று கொஞ்சங் கொஞ்சமாய் நீரேற, மயில் நிறம்ப் (=நீல நிறம்) பெற்றதால் மயில் துத்தம் (வெளிறிய நீலம்) எனப்படுகிறது.

இனி வெள்ளை நிறத்தைக் குறிக்கும் துய் என்ற வேரின் இன்னொரு திரிவாய், தய்யில் விளைந்த சொற்களைப் பார்க்கலாம். பாலிற் பிரை குத்திக் (பிரை குத்துதல் = to inoculate) குறிப்பிட்ட நேரம் நொதிக்க (to ferment) வைத்தபின் உருவாகும் பொருள் இன்னும் அதிக வெள்ளை நிறம் பெற்றுத் தயிர் என்றே குறிக்கப் படும். எயிர்>எகிர் ஆவது போல, வயிர்>வகிர் ஆவது போல வடபுலத்தில் இச்சொல் தயிர்>தகிர்>dhahi என்றாகி ஒலிக்கும். ஆனாலும் வெள்ளை நிறப் பொருள் என்ற உண்மை உள்ளே நிறைந்து நிற்கும்.

தய் என்னும் சொல் வெள்ளை நிறம் குறிப்பதை இன்னொரு இலக்கியச் சான்றின் வழியும் பார்க்கலாம். முன்னே "சிலம்பில் வரலாறு' என்ற கட்டுரையில், வெள்ளைச் சாம்பலை (திருநீறாய்ப்) பூசிக்கொள்வதும், மாலை அணிவதும் ஆகிய பழக்கங்கள் தமிழர்போலவே ஆத்திரேலியப் பழங்குடியினருக்கு உண்டென்பதையும், ஆத்திரேலியப் பழங்குடியினருக்கும், வரலாற்றுப் பழந்தமிழருக்கு முந்திய நிலையில் இருந்த குடியினருக்கும் இடையே இருக்கக் கூடும் ஈனியல் ஓரிமை (genetic uniformity) பற்றியும், மேலோட்டமாய்ச் சொல்லியிருந்தேன். இந்தப் பின்புலத்தோடு, அரக்கர், அசுரர் என்பவரை வடபுலத்துத் தொன்மங்கள் சிவநெறியாளராயும், திருநீற்றுச் சாம்பல் பூசியவராயும் காட்டுவதைப் பொருத்திப் பார்த்தால், ஒரு சில மாந்தவியற் தொடர்புகள் விளங்கும். காட்டாக, கந்த புராணம், தட்ச காண்டம், கயமுகன் உற்பத்திப் படலத்தின் 43 ஆம் பாடலில் மகரந்தம் பொருந்திய பூமாலை அணிந்து, வெள்ளைச் சாம்பலைப் பூசிக் கொண்ட அரக்கரின் தலைவனைக் குறிக்கும் படி,

"தாதுலாந் தெரிய லாகத் தயித்தியர்க்கு இறைபால் எய்தி"

என்ற ஓரடி பயிலும். இதில் அரக்கர்/அசுரர், தயித்தியர் என்றே கூறப் படுவார். அடிப்படையில் அரக்குநிறம் கொண்ட அரக்கர் தம் உடலின் பல பகுதிகளில் சாம்பலைப் பூசியிருந்தால் ஒழிய, வேறு எப்படி தயித்தியர் ஆக முடியும்?

ஆக விளிரிய தாரத்தில், தாரம் தவிர்த்து விளரி என்றானது போல், இங்கு நிஷாதம் தவிர்த்து தய்வதம் என்று ஆனது போலும். தய்வதம் = விளர்த்தது, வெளிறியது.

கடைசியாக நிஷாதம். இதற்கான வடமொழி விளக்கம், 'ஆறு சுரங்களும் படிப்படியாய் உயர்ந்து தன்னிடம் சேரப் பெற்றது' என்ற சுற்றி வளைத்து அமையும். சட்டென்று உப-நி-ஷத் என்ற சொல்லும், 'உடன் - கீழ் - இருத்தல்' என்ற அதன் பொருளும் நமக்கு நினைவு வரலாம். இங்கே நி-ஷாத என்பதை, மற்றவைகளைக் "கீழே இருக்க வைத்த" என்ற வகையில் பிறவினையாகப் பொருள்கொள்ள வேண்டும் போலும்! ஆனாலும் அதன் பொருந்தாமை நம்மை ஓர்ந்துபார்க்க வைக்கிறது. இப்படிச் சொற்களை உடைத்துக் கூறுகள் ஆக்கி, அவற்றைப் பின் அலசிப் பெருஞ்சொல்லுக்குப் பொருள் காண்பது மோனியர் வில்லிம்சுக்கும், பாணினி வழியாருக்கும் விடாதுள்ள வழக்கம். தமிழில் சொற்களை உடைத்துப் பார்க்கும் வழக்கம் பெரும்பாலுமில்லை. பொதுவாய், உள்ளே துலங்கும் வினைச்சொல் என்ன என்று பார்ப்போம். அடுத்து, உட்பொருள் மாறாமல் பலுக்கத் திரிவு ஏற்படுவதையும், திரிவுக்குப் பின் பொருள்நீட்சி ஏற்படுவதையும் கவனிப்போம்.

காட்டாகத் தருவது என்னும் வினை உருவாக்கும் பெயர்ச்சொல் தார். (வாழைத் தாரை இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்.) தருவது என்னும் வினை முன்னே தருவது, மேலே தருவது என்று இருவகைப் படும். தாரின் நீட்சியான தாரம் என்ற சொல் உச்சம், ஏற்றம் என்ற பொருட்பாடுகளை நேரடியாகக் காட்டும். இன்னும் நீளுதலில், ஏறி உயர்ந்து நிற்கும் தாரகை (star), தாரணி>தரணி (= ஏற்றம் பெற்ற உலகு) என்ற சொற்கள் ஏற்றப் பொருளைச் சரியாகவே குறிப்பதைப் பார்க்கலாம்.

நிஷாத என்பதை நி-ஷாத என நறுக்கிப் பார்க்காமல், நிவதம்> நியதம்> நியாதம்>நிஷாதம் என்று பார்க்க முயன்றால் சட்டென்று உட்பொருள் விளங்கிவிடும்.

கோயில்களில் மூலத் திருமேனிக்கு முன் குருக்கள்மார் படையலை எடுத்துக் காட்டுகிறார் அல்லவா? அதை வடமொழிப் பலுக்கில் நைவேத்யம் என்று சொல்வார். உண்மையில் நிவதம் எனும் நல்ல தமிழ்ச்சொல் அங்கே திரிந்து ஒலிக்கிறது.

நிவதல் = உயர்தல்; நிவத்தல் = உயர்த்தல். "மாக்கடல் நிவந்து எழுதருஞ் செஞ்ஞாயிற்றுக் கவினை" என்பது சோழன் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியைப் பரணர் பாடிய புறநானூறு 4 ஆம் பாடலில் வரும் ஒரு வரி. இது கடலிருந்து உயர்ந்து வரும் செஞ்ஞாயிற்றின் அழகைக் குறிக்கிறது. இதே போல நீரின் மேலே வரும் தோற்றத்தைக் குறிக்கும் முகமாக "இருஞ்சேற்று ஈர் அளை அலவன் நிவப்ப வழங்குநர் இன்மையிற் பாடு ஆன்றன்றே" என்பது சேந்தன் கண்ணனார் பாடிய அகநானூறு 350 ல் வரும் வரி (நிவப்ப என்பது நீப்ப என்று பாட வேறுபாடாய் வருவதும் உண்டு.) "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல்" என்பது கயமனார் பாடிய குறுந்தொகை 9 ஆம் பாட்டு (பச்சை இலைகளுக்கு மேல் உயர்ந்து தோன்றும் திரண்ட காம்புடைய நெய்தற் பூ). "கான யானை கைவிடு பசுங்கழை மீன் எறி தூண்டிலின் நிவக்கும்" என்பது மீனெறி தூண்டிலார் பாடிய குறுந்தொகை 54 (கான் யானை கைவிட்ட பச்சை மூங்கில் மீன் எறி தூண்டிலைக் காட்டிலும் உயரும்). இன்னும் சிலம்பு, பரிபாடல் போன்ற நூல்களும் உயர்ந்து என்னும் பொருளில் நிவந்து என்ற சொல்லைப் புழங்குகின்றன.

ஆக நிவத்தல் என்பது நல்ல தமிழே. இனி, நிவந்தது நிவதம் எனப் பெயர்ச் சொல்லாய் மாறும். இன்னும் திரிந்து, வடபுலத்தார் நாவில் நிவதம்> நிவத்தம்>நிவத்யம்>நிவேத்யம்>நைவேத்யம் என்று திரியும். நாமும் அதைக் கோயில்களில் கேட்டு, இனம் தெரியாமல் மருண்டு, 'நம் குருக்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்' என்று வெள்ளந்தியாக ஏற்று, இன்னொரு தமிழ்ச் சொல்லை இழந்துநிற்போம். இப்படி வடமொழிப் பலுக்கற் திரிவில் தொலைத்த தமிழ்ச் சொற்கள் ஏராளம் ஏராளம்.

இவ்வளவு இலக்கியச் சொல்லாட்சிகளை மேலே பார்த்ததுபோக, உயர்ச்சிப் பொருளில் இசையியலிலேயே ஒன்றைப் பார்க்கலாம். தாளத்தைக் குறிக்கும் எழுவகைத் தூக்குகளில், நிவப்புத் தூக்கு என்ற ஒன்று தமிழிசையில் உண்டு. சிலம்பின் அரங்கேற்று காதையில் வரும் 16 ஆம் வரிக்கு, அடியார்க்கு நல்லார் கொடுக்கும் உரையில், கீழ்வரும் பாடலைச் சொல்லுவார்.

ஒருசீர் செந்தூக்கு இருசீர் மதலை
முச்சீர் துணிபு நாற்சீர் கோயில்
ஐஞ்சீர் நிவப்பு அறுசீர் கழாஅலே
எழுசீர் நெடுந்தூக்கு என்மனார் புலவர்

- சிலம்பு 3.16 உரை

நிவப்பு, நிவதம் என்ற இரு பெயர்ச்சொற்களும் நிவத்தல் என்ற ஒரே வினையில் இருந்து கிளைத்த இருவேறு சொற்கள். நிவப்பு என்பது உயர்ச்சிப் பொருளில் ஒருவகைத் தாளத்தைக் குறிக்கிறது நிவதம் என்பது ஏழாம் சுரத்தைக் குறிக்க முடியும்.

இனி கோவில் என்பது கோயில் என்று திரியுமாப் போல, கயிறு என்பது கவுறு என்றும் சொல்லப் படுமாப் போல, நிவதம் என்பது நியதம் என்றும் திரியும். பின்னால், வடமொழித் திரிவில் நியதம்>நியாதம்>நிஷாதம் என்று ஆவது நடக்கக் கூடியதே. ஆனாலும், உயர்ச்சிப் பொருள் இந்தச் சொல்லுக்கு அடித்தளமாய் இருப்பதை உன்னித்து அறியலாம்.

ஆக இந்த நான்கு பகுதியில் சொன்னதைத் தொகுத்துச் சொன்னால்

குரல் என்பது அடி ஒலி
குரலுக்குத் துத்தம் உயர் ஒலி
குரலுக்குக் கய்க்கிளை (குரலொடு காய்ந்த கிளை) பகையொலி
குரலுக்கு உழை, பக்க ஒலி (அதாவது நள்ளிய ஒலி).
குரலுக்கு இளி இணங்கிய ஒலி
தாரத்திற்கு விளரி வெளிரிய ஒலி
தாரம் குரலுக்கு நீண்ட ஒலி

இதே கருத்து இன்னொரு விதமாய் மணிப்பவள நடையில், சங்கதத்துள் நுழைந்துள்ளது.

குரல் = சத்தம்>சக்தம்>சக்சம்>சக்ஷம்>சட்சம்
துத்தம் = உயர் ஒலி = பெரு ஒலி = விடை ஒலி, விடைமம்>விடமம்>வ்ரிஷமம்>ரிஷபம்
கய்க்கிளை > காய்க் கிளை = பகை யொலி = காய்ந்த ஆரம் = காய்ந்தாரம் > காந்தாரம்
உழை = உள் ஒலி = நட்டுமம் > மத்திமம்,
இளி = இணங்கும் ஒலி = பொஞ்சும் ஒலி = பொஞ்சுமம் > பஞ்சுமம்
விளரி = விளர் ஒலி = தய்வத ஒலி = தய்வதம்
தாரம் = உச்ச ஒலி = நிவந்த ஒலி = நிவதம்>நியதம்>நியாதம்>நிஷாதம்

தமிழிசை பற்றிய வேறு செய்திகளை முனைவர் வீ.பா.க. சுந்தரத்தின் நூல்களில் பார்த்து அறியுமாறு வேண்டுகிறேன். எனக்கு வேறு சிந்தனைகள் உருவாகும் பொழுது மீண்டும் தமிழிசைக்குள் வரக் கூடும்.

அதுவரை அன்புடன்,
இராம.கி.

Sunday, March 23, 2008

ஏழு சுரங்கள் - 3

தமிழ்ச் சுரப்பெயர்கள் காரணப்பெயர்களாய் இருப்பதை முந்தைப் பகுதியிற் பார்த்தோம். இனி, சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் எனும் சங்கதப் பெயர்களின் விளக்கத்தைத் தமிழ்வழியே பெற முயல்வோம்.

முன் சொன்னது போல் பல சங்கதச் சொற்களின் தொடக்கம் பாகதத்துள் உள்ளது. அதே பொழுதில், சமகால மொழிகளான பாகதத்திற்கும் பழந் தமிழுக்கும் உறவு இருந்துள்ளது. நான் தமிழின் பாற்பட்டு, ஒரு பக்கமாய்ச் சொல்நகர்ச்சியை விவரித்தாலும், இரு பக்க பரிமாறல் நெடுங்காலம் நடந்துள்ளது. குறிப்பாக, அற்றுவிக (ஆசீவிக), செயின, புத்த நெறிகளின் ஊடாட்டத்திலும், 'சாரிபுத்தன்' போல ஏது சாற்றம் (Logic) கற்கக் காஞ்சி வந்த கல்விப் பயிற்சியிலும், மகதத்திற்கும் தமிழகத்திற்கும் நடைபெற்ற வணிகத்திலும், இப் பரிமாற்றத்தைப் பார்க்க வேண்டும். பின்னால் வேதநெறி தெற்கே ஆழமாய்த் தொடர்புற்ற பின்னால், இது படிப்படியாகச் சங்கதம் நோக்கி மாறியுள்ளது.

[பல நேரம் சொல்லிணைகளை ஆயும்போது, தமிழோடு பாகதத்தைப் பார்க்காமல், சட்டெனச் சங்கதத்துள் நுழைவது, நம்மைக் குழப்பத்திற்கே கொண்டு செல்கிறது. பாகதம் - சங்கதம் என்ற இரட்டையில் பாகதம்   முந்தையது ; சங்கதம் பிந்தையது. பாணினி இலக்கணம் சொல்லியது பாஷா என்னும் பாகத வட்டார மொழிக்கும், அதனோடு சேர்ந்த சந்தம் எனும் செய்யுள் வழக்கிற்குமே ஒழிய, சங்கதத்திற்கு அல்ல. 

இன்னும் சரியாகச் சொன்னால் பாணினி காலத்தில் ”சங்கதம்” என்ற சொல் கூட ஏற்படவில்லை. எத்தனையோ முறை இதைச் சொல்லியுள்ளேன், சங்கதம் என்ற மொழியை யாரும் குறை சொல்லவில்லை; தமிழ், பாகதம் ஆகிய ஊற்று வளங்களை முற்றிலும் மறைத்து எல்லாமே சங்கதமென முன்வைக்கும் முற்றாளுமையை மட்டுமே நாம் குறைசொல்கிறோம் "பொய்யுடை யொருவன் சொல்வன்மையினால் மெய் போலும்மே, மெய் போலும்மே" என்ற வாக்கை இங்கு எண்ணிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

பல காலம் நான் சொல்வது போல தமிழ் முந்தியது; தொல்காப்பியன் வரையறுத்த செந்தமிழ் பிந்தியது. "செந்தமிழ் சீரழிந்து, தமிழில் பேச்சு வழக்குத் தளைத்தது" என நாம் சொல்லப்புகுவது எப்படி முட்டாள்தனமோ, அதைப் போல, "பாணினியின் சந்தமே பின்னால் சங்கதமாகி, அடுத்துப்  பாகதமாகி, மேலும் அவப்பிரம்சம் ஆகி, முடிவில் இற்றை வடபுல மொழிகள் உருவாகின" என்று சொல்வது தலைகீழான பேச்சு. பேரனைத் தாத்தன் என்பதும், தாத்தனைப் பேரன் என்பதுமாய் பாகதம் - சங்கதத்திற்கு இடையே ஒரு தவறான சிந்தனை எப்படியோ இந்திய மொழி ஆராய்ச்சியில் கலந்து விட்டது. இதற்கு மொத்தக் குமுகாயமே காரணமாய் இருக்கும் பொழுது, குறிப்பிட்ட ஒரு சாராரை மட்டும் குறைகூறிப் பயனில்லை. இனிமேலாவது யார் தாத்தன், யார் பெயரனென்று சரியாகப்புரிந்து ஆய்வு தொடர்ந்தால், இந்தியவியலில் இதுவரை நடந்த பல்வேறு குழப்பங்களைத் தீர்க்கலாம்.]

தமிழுக்கும் பாகதத்திற்கும் இடையே காணும் பலுக்கல் திரிவுக்குக் காட்டாக அத்தன் என்ற சொல்லைப் பார்க்கலாம். இது பாகதத்தில் adhdha என்று அதிரொலியில் (voiced) அமையும். அதுபோல அச்சனென்பதும்  அதிரொலியில் ajja ஆகும். இன்னும் சொன்னால், வர்த்தனம் (வார்த்தையால் ஆனது வார்த்தனம்>வர்த்தனம்; வார்த்தது வார்த்தை; வார்த்தல் வினையைப் பொழிதல் வினை போல் புரிந்து கொள்ளலாம்.) வஜ்ஜனம் (பின்னிதுவே வசனம் என்று தமிழில்) ஆகும். 

இதே போல் திரிவுகள் வேதமொழியிலும் உண்டு. அதில் ”முழுகு”, ”மஜ்ஜ்” என்றாகும். ஆங்கிலத்தில் merge  ஆவது போல் இதைக் கொள்ளவேண்டும். எலும்பின் உள்ளிருக்கும் மாவு போன்ற மூளைப் பொருள் மஜ்ஜ என வேத மொழியில் ஆகும். ஆங்கிலத்தில் அது marrow என்றும், செருமனில் marg என்றுமாகும். இதுபோற் சடை, jadaa  என்றும், செரியகம்> சீரகம், jeera என்றும், சுரம் (=காய்ச்சல்),  jura> jvara என்றும், சொலி>jvali என்றும், புகு puj என்றும் ஆவதை எண்ணிப் பார்க்கலாம்.

இன்னுஞ் சொன்னால், வணிகன் vanij என்றும், வித்து>விதை என்பது viija>biija என இருக்கு வேதத்தில் ஆவதையும் எண்ணிப் பார்த்தால், க எனும் அடைப்பு வெடிப்பொலி (stop plosive) முதலில் ga என அதிர் வெடிப்பொலியாய் (voiced plosive) பலுக்கப் பட்டுப் பின் இந்தையிரோப்பிய மாற்றொலிப்பில் ஜ எனும் வேறு அதிரொலியாய் ஆவது முற்றிலும் வடபுல இயற்கையே என்பது புரியும். 

இதேபோல் தகரம், ஜகரம் ஆகும் வழக்கை விதை>வீஜ வழி புரிந்து கொள்ளலாம். மேலையர் நம் மதுரையை மெஜுரா என்று பலுக்கியதும், விவரந் தெரியாமல் போலிக் குரவத்தில் (=கௌரவத்தில்) 1960கள் வரை நம்மவர் அதைத் தாங்கித் திரிந்ததையும் (இது போல டூட்டுக்கோரின், ட்ரிச்சி, டாஞ்சூர் என்றெலாம் தமிழர் ஒயிலாடிய காலமுண்டு.) இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

ஆகக் ககரம், சகரம், தகரம் என்பவை இடம், பொருள், ஏவலுக்கேற்ப, வட புலத்திற் ஜகரமாகவது பெரிதும் நடந்துள்ளது. இம் முறையில் சர், சல் என்னும் ஒலிக்குறிப்பின் வழியாக உருவாகிய சத்தம், சருகம் எனும் தமிழ்ச்சொற்கள் வடபுலப் பலுக்கில் ஷட்ஜமாய் மாறுவது கொஞ்சமும் வியப்பில்லை. 

முன் சொன்னது போலச் சத்தம், சருகம் என்பவை குரல் எனும் அடிப்படை ஒலிப் பொருளையே குறித்தன. இப் பார்வையில், குரலும் சட்ஜமும் ஒரே பொருளை உணர்த்துகின்றன. "ஆறு சுரங்களை உருவாகக் காரணமானது" என்றெலாம் நாம் பொருந்தப் புகல வேண்டியதில்லை. செவ்வியல் இசையிலிருக்கும் தமிழ்த் தொடர்பை முற்றிலும் மறுக்க வேண்டிய தேவையிருப்பவர் மட்டுமே 6 சுரங்கள் பற்றி இட்டுக்கட்டிப் பொருந்தப் புகல்வார்.

இனி ரிஷபமெனும் சுரத்தைப் பார்ப்போம். ரிஷபமெனில் காளை என்றே வடமொழியில் பொருள். அப்படியானால், ரிஷபத்திற்கும் துத்தத்திற்கும் என்ன தொடர்பு?

இந்தியக் காளையின் விதப்புத் தோற்றங்களாய் விலங்கியலில் 2 குறிப்பார்; ஒன்று அதன் உயர் திமில் (சிந்துவெளி முத்திரைகளில் எருத்தின் திமில் சிறப்பாகக் காட்டப்படும்,) இன்னொன்று காளையின் பெருத்த வயிறு. காளை குறிக்கும் சொற்களான எருது, ஏறு போன்றவை, உயர் திமிலை வைத்தே எழுந்தன. விடை, நந்தி போன்ற சொற்கள், தொந்தி முன்தள்ளிப் பருத்து விடைத்து இருப்பதைக் குறிக்கும். ”விடைமா” வில்  வரும் 'மா'வெனும் விலங்குப் பெயரைத் தவிர்த்து விடவமென்றும் காளையைச் சொல்வதுண்டு.  முன்வந்து கிடக்கும் பெருவயிறு துந்தி>தொந்தி (அதேபோல் நுந்தி> நந்தி) என்று சொல்லப்படுகிறதே? துந்துதலின் பிறவினைச்சொல்லான துத்துதலும் முன்வந்து கிடத்தலையே குறிக்கும்; துருத்துதலும் முன்வந்து கிடத்தலே! துருத்தல் துரித்தலாகியும் அதே பொருள் குறிக்கும். துரியம், துரந்தரம், தூரியம், தூர்வகம் போல் இருபிறப்பிகள்  பொதியெருதைக் குறிக்கும் சொற்களே. தூரி என்ற சொல்லும் கூடப் பொதுவான எருதைக் குறிக்கும். துத்தம் என்ற சொல் உயர்ந்தது, முன்தள்ளிப் பெருத்தது என்று அதன் இயல்பை உணர்த்தற்கு மாறாய், துத்தம் எனும் பருப்பொருள் விலங்கைக் (முதலில் பெருவயிற்றைக் குறித்துப் பின்னால் எருதைக்) குறித்து அதை விடவம்>விடபம்>விஷபம்> வ்ரிஷபம்> ரிஷபம் என்ற இயல்திரிவில் வடபுலத்தில் புரிந்துகொள்ளப் பட்டது போலும்.

மூன்றாவது சுரப் பெயரான காந்தாரம் என்பது சங்கதம் விரவிக்கொண்ட நற்றமிழ்ப்பெயரே! காய்ந்த ஆரம்>காய்ந்தாரம்>காந்தாரம். (ஆரம் =  ஒலி; ஆர்தல்>ஆரித்தல் என்பது ஒலித்தல் வினையையும், ஆர ஆரித்தல் என்பது நிறைந்தொலித்தல் பொருளையும் சுட்டும்.) உள்ளிருக்கும் யகரம் தொகுத்த காரணத்தால், காந்தார மூலம் நமக்குச் சட்டென்று தெரியாமல் போகிறது. ”காய்ந்தாரமே”  பகையொலிப் பொருளை எனக்கு உணர்த்தியது. கைக்கிளையைக் காய்க்கிளை> கய்க்கிளை என்பதில் பொருளுண்டோ என்ற ஐயப்பாட்டை உருவாக்கியது. காய்க் கிளை (>கய்க்கிளை)= காய்ந்த ஆரம்= காய்ந்தாரம் = பகை யொலி. [காந்தாரம் என்ற சொல் சுரத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்ப்பண்ணுக்கும் பெயராய் இருக்கிறது.]

நாலாம் சுரம் மத்யமம். முன்சொன்னது போல, உழைக்கு ஒலி, பக்கம், என்பவை போக, உள்ளிருத்தல் பொருளும் உண்டு. உள் எனும் கருத்தை நள் என்ற சொல்லும் தமிழில் உணர்த்தும். நள்+து = நட்டு>நடு; நட்ட நடு என்கிறோம் இல்லையா? நடுவில் உள்ளது நட்டுமம். மத்ய அரசு என்னாமல், நடுவண் அரசு என்னும் இக்காலப் புழக்கத்தை எண்ணினால், இதைப் புரிந்து கொள்ளலாம். நகர/மகரப் போலியாலும், வடக்கே போகப் போக, அதிர்வுப் பலுக்கல் கூடுவதாலும், நட்டுமம்>மத்திமம் என்றாவதில் வியப்பில்லை. மத்திமா எனும் பாகதச்சொல் மத்யமா எனச் சங்கதத்தில் திரியும். (நடுமம் = median என்ற சொல்லையும் ஓர்ந்துபாருங்கள். centre இற்கு நடுவம் என்று புழங்காமல் மையமென்றோ, கூர்ந்தமென்றோ பயிலலாம். "கிடைத்ததை அள்ளிப்போட்டு மொழிபெயர்ப்பை முடித்துக்கொள்" என்ற அவக்கர நாட்டத்தால், தமிழ்நடையைத் தடுமாற வைக்கிறோம். 'இயக்குநர்' என்ற சொல் இந்நாட்டில் ஏற்படுத்திய குழப்பம் இன்று கொஞ்சங்கொஞ்சமாய் 'நெறியாளர்' மூலம் குறைகிறது அல்லவா?)

ஐந்தாம் சுரம் பஞ்சமம் எனப்படும். காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்தது என்ற பழமொழி போல, 'ஐந்து என்பது பஞ்ச' என்று பொருந்தப் புகல்வதைக் காட்டிலும், இளிதல் = இணங்குதல், ஒன்றுதல் பொருளோடு தொடரும் 'பொஞ்சுதலோடு' பொருத்திப் பார்த்தால், இன்னும் சிறப்பாகும். பொஞ்சுதல் என்பது பொந்துதலின் பேச்சுவழக்கே. பொந்துதல் என்பது பொருந்துதல் என்றும் தமிழில் வழங்கும். பொந்திகை = இணக்கம், மன நிறைவு, பொருந்தாமை = இணக்கமின்மை போன்றவற்றை எண்ணிப் பார்க்கலாம். பின்னால் ஐந்தாம் சுரம் என்றுகுறிக்கும் ”பஞ்சமம்” எதுகையாய் ஒலிக்க, இணங்குதல் கருத்து மறைந்து ”ஐந்தாவது” எனும் கருத்து நிலைப்பட்டது போலும். (பொக்குளம் metathesis முறையில் கொப்புளமென்றும், குமுடி,  குடுமி என்றும் மாறுவது பேச்சுவழக்கில் இயற்கையே. குமுடி மூலை என்பது தில்லைச் சிவனடியார் ஆறுமுகசாமியின் ஊர். வட்டியைக் - interest - குறிக்கும் பொலிசை, பலிசையாய்ப் பல்லவ, சோழர் கல்வெட்டுக்களில் மாறியதையும் எண்ணிப் பாருங்கள்.)

அன்புடன்,
இராம.கி.

Wednesday, March 19, 2008

ஏழு சுரங்கள் - 2

சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களுக்கும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற தமிழ்ப் பெயர்களுக்கும் உள்ள உறவைச் சட்டென்று ஆய்வின்றிச் சொல்ல முடியாது இருக்கிறது. சட்ஜம் என்பது குரல் என்றும் (இப்படிச் சொல்வது மேவுதிப் போக்கு - majority trend), இல்லையில்லை சட்ஜம் என்பது இளியே என்றும் (இப்படிச் சொல்வது நுணதிப் போக்கு - minority trend), இரு வேறு கருத்துக்கள் தமிழிசையாளரிடம் உண்டு. நான் இக்கேள்வியை ஆய்வு செய்தவனில்லை. மேவுதியாரோடு இணங்கி, பெயர்க் காரணங்களை மட்டும் இங்கு நான் சொல்ல முற்படுகிறேன்.

இசையறிஞர் முனைவர் வீ.பா.க. சுந்தரம் தன் ஆய்வில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்ற பெயர்கள் எப்படி எழுந்திருக்கலாம் என்று சொல்லியிருக்கிறார். [தமிழிசையில் ஆர்வம் கொண்டு, ஆய்வுக்கண் கொண்டு பல்வேறு செய்திகளை அணுக விழைவோர், கீழ் வரும் அவருடைய நான்கு நூல்களையும் உசாத் துணையாய்க் கொள்வது நல்லது. தவிர, இசைத்தமிழ் பற்றி அறிவது, இயற்கையைச் சுவைக்கவும், கலை நுகர்வைப் பெருக்கவும், உதவி செய்யும்.

பழந்தமிழ் இலக்கியத்தில் இசையியல், திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், 79, பிரகாசம் சாலை (பிராடுவே) சென்னை 108, வெளியீட்டு ஆண்டு 1986

தமிழிசை வளம், பதிப்புத் துறை, மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை 625 021, வெளியீட்டு ஆண்டு 1985

தமிழிசையியல், தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 005, வெளியீட்டு ஆண்டு 1994

தமிழிசைக் கலைக் களஞ்சியம், பாரதிதாசன் பல்கலைக் கழகம், திருச்சி 620 024 - 4 மடலங்கள், வெளியீட்டு ஆண்டுகள் 1992, 1994, 1997, 2000]

அதேபொழுது சங்கதப் பெயர்களுக்கு காலங் காலமாய்ச் சொல்லிவந்த விளக்கத்தையே அவரும் எடுத்துரைக்கிறார். இந்த 2 வரிசைகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்க வேண்டும் என்ற சிந்தனையில், இங்கே என் முன்னீடுகளை எடுத்து வைக்கிறேன்.

முதலில் தமிழ்ச் சுரப் பெயர்களைப் பார்ப்போம். இங்கே வீ.பா.க.சு. வின் ஆய்வைப் பெரிதும் சார்ந்து, இரண்டே சுரங்களில் மட்டும் அவரோடு  வேறுபட்டு, நான் சொல்ல முற்படுகிறேன்.

குரல் என்பதை 'ஒன்றோடு ஒன்றின் சேர்க்கை அதாவது பற்றுதல்' எனும் பொருளில் எழுந்த சொல்லாகவே அவர் உரைப்பார். (அவர் கூறிய விளக்கத்தில், குரவை என்பது கைப்பற்றி ஆடும் ஆட்டம்; குரால் என்பது தாய்ப்பற்றுடைய குட்டி; குரவர் என்பவர் பற்றுடைய குரு, பெற்றோர்.) 

நானோ, குரலைக் குர் எனும் ஒலிக்குறிப்பில் எழுந்த சொல்லாய்க் காண்பேன். ஒலி எனும் பொருளில் எழும் அடியோசைக்குக் (voice) குரலென்றே பெயர். குரத்தம் (= ஆரவாரம்), குரம் (= ஒலி), குரவை> குலவை (= மகிழ்ச்சியொலி), குருமித்தல் (= பேரொலி செய்தல்), குரைத்தல்> குலைத்தல் (= ஆரவாரித்தல்), குலிலி (= வீராவேச ஒலி), குழறுதல்/குளறுதல் (= பேச்சுத் தடுமாறல்), குளிறுதல் (= ஒலித்தல்), குறட்டை (= உறக்கத்தில் மூச்சுவிடும் ஒலி) என வரும் சொற்களைக் குரலோடு எண்ணிப் பார்த்தால், குர் எனும் ஒலிக்குறிப்பே குரலுக்கு அடிப்படை என்பதை உறுதிசெய்யும். 

தவிர, சிவநெறியாளரின் பதினோராம் திருமுறையில், தேவார மூவர்க்கும் மூத்தவரான காரைக்கால் அம்மையாரின்,

துத்தம் கைக்கிளை விளரி தாரம்
உழை இளி ஓசை பண் கெழுமப்பாடி
.....................
அத்தனை விரவினோடு ஆடும் எங்கள்
அப்பன் இடம் திரு ஆலங்காடே

எனும் பாடலில் ஓசை என்ற சொல்லே குரல் எனும் சுரத்தைக் குறிக்கும். பொதுவாக மற்ற சுரங்கள் குரலிலிருந்து கிளைத்தவையாகவே இசையியலார் சொல்வார். சங்க இலக்கியமான மலைபடுகடாத்தில், “குரல் ஓர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு” என்று வரும் 23 ஆம் அடியும் இதை உறுதி செய்யும்.

அடுத்து, துத்தமென்ற சொல்லுக்கு உயர்ந்ததென்ற பொருளையே வீ.பா.க.சு காட்டுவார் (துத்துதல் = உயர்த்துதல்; துத்தியது துத்தம். துத்தின் விரிவான துருத்தும் உயர்ந்ததை, வெளிவந்ததைக் குறிப்பதே. துத்து, துருத்து என்பதில் இருந்து பல்வேறு சொற்கள் கிளைக்கும்.) துத்திய குரல் = உயர்ந்த குரல் என்பதில் குரலை உள்ளார்ந்து வைத்து வெறுமே துத்தம் என்பது  ஏற்புடைத்தே. உயர்ந்தது என்பதோடு 'முன்தள்ளிப் பெருத்தது' என்றும் துத்தத்திற்குப் பொருளுண்டு. மொத்தத்தில், அவர் விளக்கத்தை அப்படியே மறுப்பில்லாமல் ஏற்றுக் கொள்கிறேன்.

மூன்றாவதாக, கைக்கிளைக்குக் கிளை = உறவு என்ற பொருளில் 'சிறுமை ஒலி உறவு' என்று அவர் அமைதி காணுவார். செவ்வியல் இசையில் இயல்புத் தொனிப்பில் (just intonation) ஒவ்வொரு சுரமும் படிப்படியாக அதற்கு அடுத்ததோடு ஒத்திசைப் புறக்கூட்டில் (harmonic progression) இருந்தாலும், ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு தாவும்போது, சில பொருத்துகள் ஒத்திசைந்தும், சில ஒத்திசையாமலும் அமைவது, எந்த இனிமையைத் தேடிக் கேட்கிறோம் என்பதைப் பொறுத்தது. பொதுவாய் முதற்சுரமும், நாலாஞ்சுரமும், அதேபோல முதற்சுரமும், ஐந்தாஞ்சுரமும் கேட்பதற்கு இனிமையாய் மிகுந்த ஒத்திசை கொண்டன என்பார். இதற்கு மாறாய், முதற்சுரமும், மூன்றாஞ்சுரமும், முதலும் ஆறாஞ்சுரமும், அவ்வளவு ஒத்திசையாமல், குறைந்து இருப்பதாகவே இசையிலாளர் கொள்வர்.

முனைவர் வீ.பா.க.சு.விலிருந்து சிறிதே மாறுபட்டு, கைக்கிளை என்ற சொல்லைச் சிறுமைக் கிளை என்று கொள்ளாது (கை எனும் முன்னொட்டு சிறு என்னும் பொருளைத் தமிழில் உணர்த்தும். கைக்குட்டை என்னும் சொல்லை இங்கு ஓர்ந்து பார்க்கலாம்), அதைக் காய்க்கிளையின் மரூஉ என்றே புரிந்து கொள்கிறேன். [இப்படிச் சொல்வதற்கு மணிப்பவளச் சொல்லான காந்தாரம் கூட ஒரு காரணம். அதைக் கீழே விளக்குவேன்.] சிறுவர் ஒருவரோடு ஒருவர் நட்பாய் இருப்பதை பழம் என்றும், எதிராய் இருப்பதைக் காய் என்றும் சொல்லும் பரந்த வழக்கை ஓர்ந்து பார்த்தால், காய்க்கிளை என்று சொல்லுவதில் உள்ள சீர்மை புலப்படும். கிளை என்பதற்கு ஒலி என்றே பொருள் கொள்ளலாம்.

கிளவுதல் என்ற பழையவினை தமிழில் ஒலித்தலென்றே பொருள் கொள்ளும். (இரட்டைக் கிளவி என்று சொல்லுகிறார் அல்லவா?) இன்னும், கிளவி என்ற சொல்லைக் clause என்பதற்கு இணையாய்ப் பொருள் கொள்வதையும், பேசிக்கொண்டே ஆடும் ஆட்டத்தைக் கிள்ளாக்கு என்பதையும், கிளி, கிள்ளை (= பேசும் கிளி) போன்ற பெயர்ச் சொற்களையும் கூர்ந்து பார்த்தால் கிளத்தல்>கிளை என்பதில், ஒலித்தல்>ஒலி என்ற பொருள் இருந்திருக்க வேண்டுமென உணரலாம். அவ்வகையில் காய்க்கிளை என்பது காய்ந்த ஒலி என்றும், பொருந்தா ஒலி என்றும், பகையொலி என்றும், பொருள் கொள்ளும்.

அடுத்துள்ள நாலாம் நரம்பு உழையாகும். உள்>உளை>உழை என்று இச் சொல் ஒலிப்பொருளில் விரியும். உளைதலின் திரிபான ஊளை என்பதும் பேரொலிப் பொருளைக் கொடுக்கும். howl என்ற மேலையர் சொல்லையும்  எண்ணிப் பார்க்கலாம். தவிர உழைக்கு உள்ளாதல், பக்கம் என்ற பொருளும் உண்டு. இந்நரம்பை, குரலோடு சேர்ந்த உள்ளிருக்கும் நட்பு நரம்பு என்றே இசையியலார் சொல்வார். குரலுக்குப் பக்கத்தில் நெருங்கி, நள்ளி இருக்கக் கூடிய உள்நரம்பு உழை நரம்பு ஆகும். (நள்ளுவது நட்பு. உள்ளிருத்தல் நடுவில் இருத்தல்.) இதில் முனைவர். வீ.பா.க.சு.வுடன் முழுதும் உடன்படுகிறேன்.

ஐந்தாவது இளி எனும் நரம்பு. ஒன்று இன்னொன்றோடு இணங்குதலை, அதாவது ஒன்றுதலை, தமிழில் இளிதல் வினையால் சொல்லலாம். இளி நரம்பை, கிளை நரம்பு என்றுகூடத் தமிழிசையிற் சொல்வதுண்டு. (தென் மாவட்டங்களில் ”இவனுக்கிவன் கிளைகாரன்” என்று சொல்லி சுற்றத்தையும், நண்பரையும் ஒருங்கிணைத்தாற் போற் குறிக்கும் ஒரு சொல்லாட்சி உண்டு.) இதிலும் என் கருத்து வீ.பா.க.சு. கருத்தே.

ஆறாம் நரம்பிற்குப் போகுமுன் ஏழாம் நரம்பின் பெயரைப் புரிந்து கொள்வது நல்லது. ஏழாம் நரம்பு, தாரம் எனப்படும். ஒரு சுரவரிசையில் இருக்கும் ஏழு நரம்புகளிலேயே, மிக உயர்ந்த, நீண்ட, உச்ச நரம்பு இதுவாகும். 'உச்சம் தாரம் ஓங்கும் வல்லிசை' என்று திவாகர நிகண்டின் நூற்பாவை வீ.பா.க.சு. குறிப்பார். தார் என்பதற்கு மேலோங்கியது, நீண்டது என்ற பொருளுண்டு. (தாராளம் என்ற சொல்லை இங்கு நினைவு கூருங்கள்.)

ஆறாம் நரம்பான விளரி என்பது, தாரத்தோடு ஒப்பிடத் தன் அதிர்விற் சற்று குறைந்தது. பேச்சு வழக்கில் கொஞ்சம் குறைந்த கருப்பை வெளிர்கருப்பு என்கிறோம் அல்லவா? வெளிர்தலும் விளர்தலும் ஒரே பொருட் சொற்கள் தாம். எனவே தாரத்தில் விளர்த்தது விளர்தாரம். இங்கு தாரம் என்ற ஈற்றுச் சொல்லை உள்ளார்ந்து வைத்து, விளரி என்றே சுருங்கச் சொல்லப்படுகிறது. (ஏற்கனவே மூன்றாஞ்சுரத்தை குரலுக்குக் காய்க்கிளை என்று சொல்லிய காரணத்தால், இன்னொரு காய்ந்த சுரமான ஆறாஞ் சுரத்தையும் குரலோடு பொருத்தாது, வேறு வகையில் தாரத்தோடு பொருத்திச் சொன்னார்.)

ஆகச் சுருங்கச் சொன்னால், தமிழ்ப் பெயர்களின் பெயர்க் காரணம் கீழ் வருமாறு அமையும்.

குரல் என்பது அடிப்படை ஒலி
குரலுக்குத் துத்தம் என்பது ”குரலுக்கு உயர்ந்த ஒலி”
குரலுக்குக் காய்க்கிளை என்பது ”குரலொடு காய்ந்த கிளை”, அதாவது குரலுக்குப் பகையொலி
குரலுக்கு உழை என்பது குரலுக்குப் பக்கமான ஒலி = குரலுக்கு நள்ளிய ஒலி (நள்ளுதல் = நெருங்குதல்)
குரலுக்கு இளி என்பது குரலுக்கு இணங்கிய ஒலி
தாரத்தின் விளரி என்பது தாரத்திலும் வெளிரிய ஒலி
தாரம் என்பது குரலைப் பார்க்க மிக மிக நீண்ட ஒலி

ஒரு சுர வரிசையை வட்டம், மண்டிலம், தானம், தாயி என்ற சொற்களால் தமிழிசையில் குறிப்பார். இவை அத்தனையும் தமிழ்ச் சொற்களே. ஒரு மண்டிலம் முடிய, அடுத்த மண்டிலம் வந்து விடும். மண்டிலம் என்ற சொல்லை சிலம்பில் ஆய்ச்சியர் குரவை 13 ஆம் அடிக்கு ஆன அடியார்க்கு நல்லார் உரை கீழ்க்கண்டவாறு உரைக்கும்.

வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓரேழ் தொடுத்த மண்டிலம் ஆகும்

வட்டி வருவது வட்டம் (வட்டுதல் = வளைதல்); மண்டித்து வருவது மண்டிலம் (மண்டலம் = region என்ற சொல்லும் நிலம் குறித்த வட்டம் தான். சிவகங்கைப் பக்கம் வட்டகை என்ற சொல் மண்டலத்தைக் குறிக்கும். மண்டிலம் என்ற கருத்தீட்டு வட்டத்திற்கும். மண்டலம் என்னும் பருப்பொருள் வட்டகைக்கும் உள்ள நுண்ணிய வேறுபாட்டை உணர்ந்து கொள்வது தமிழ்நடை சிறக்க வழி வகுக்கும். 

(இசையில் வரும் மண்டிலம் போல யாப்பில் ஒருவகைப் பாவினத்திற்கும் மண்டிலம் என்ற பெயருண்டு. காட்டாக, காய் - காய் - மா - தேமா எனும் ஒழுங்கு வாய்பாட்டில், 4 சீர்களையும் 8 அரையடிகளையும், அதோடு எதுகை மோனை அழகுகளையும் சேர்த்து, மீள மீள மடித்து வரும் பாவினம், எண்சீர் ஆசிரிய மண்டிலம் எனப் படும். 

பின்னால் மண்டிலம் என்ற சொல்லைப் புழங்காது வட்டம்> வ்ருத்தம்> விருத்தம் என்ற இரு பிறப்பிச் சொல்லையே நம்மவர் புழங்கியிருக்கிறார். இன்றைக்கு விருத்தம் என்றால் புரிந்து, அதே பொழுது மண்டிலம் என்றால் புரியாமல் தடுமாறும் மரபுக் கவிஞர் உண்டு. அந்த அளவிற்கு வடமொழி/மணிப்பவளச் சொற்கள் நம்மிடையே ஊடுருவியுள்ளன. ஆங்கிலத்தில் verse என்பது  விருத்தத்தோடு தொடர்புடையதே.)

தமிழிசையில் ஒவ்வொரு பண்ணிற்கும் மண்டிலம் சொல்லும் போது ஆரோசை (=ஆரோகணம், ஏறிவரும் ஓசை), அவரோசையில் ( = அவரோகணம், அவல்ந்து வரும் ஓசை; அவல் = கீழ்) சுரங்களைச் சொல்வார். மண்டிலத்தின் இன்னொரு சொல்லான தானம் என்பது, தண்டு கொண்டு நிலைத்து நிற்பது என்று பொருள் கொள்ளும். (சங்கத மயக்கத்தில் உள்ளவர் தானத்தையும் தமிழில்லை என்பார்.) வட்டம், மண்டிலம், தானம் என்பன போகத் தாயி என்ற சொல்லும் இதே கருத்தைக் குறிக்கத் தமிழிலுண்டு. தாயக்கட்ட ஆட்டத்தில் தாயமென்ற சொல்லை உன்னிப் பார்த்தால் தங்கும் இடம் என்ற பொருள் புரிபடும். தாயித்தல் = தங்குதல். (தாயி என்பதோடு முன்னால் ”ஸ்” என்பதைச் சேர்த்து ஸ்தாயி ஆக்கி வடமொழி பயின்று கொள்ளும். தானம் என்பது வேறு வகையில் ஸ்தானம் ஆகி நிலத்தைக் குறிப்பது போல இதைப் புரிந்து கொள்ளலாம். இந்துஸ்தானம் <  இந்துத்தானம் <  சிந்துத்தானம் =  சிந்து ஆறு பாயும் நிலம்)

ஓர் இசை மண்டிலத்தை மொத்தம் 22 சுருதிகளாய்ப் (அலகுகளாய்ப்) பிரிப்பது தமிழர் மரபாகும். அதோடு எழு சுரங்களுக்கும் 4,4,3,2,4,3,2 என்று அலகுகளைப் பிரிப்பர். இந்த ஏழு சுரங்களும் ஒன்றின் பின் ஒன்றாய்க் கிளைத்தது இயல்பான வளர்ச்சியே. எப்படி நீரின் உறைநிலை (freezing point), கொதிநிலை (boiling point) ஆகியவற்றைக் கொண்டு செல்சியசு, வாரன்ஃகீட் போன்ற வெம்மை அளவுகோல்கள் எழுந்தனவோ, அதுபோல் குரல் தாரம் என்று இரு ஈறுகளை வைத்துக் கொண்டு மற்ற சுரங்களை அடையாளங் காட்டும் நடைமுறை இது. இசை வளர்ச்சியில், ஏழு சுரங்களைப் பன்னிரண்டு அரைச் சுரங்களாய் நீட்டி அவற்றில் சிலவற்றை வெவ்வேறு வகையில் உகந்தெடுத்து, பெருமடக்கு (permutation), பிணைப்பு (combination) முறைகளில், ஆரோசை, அவரோசை வரிசைகளை அமைப்பதைப் பண்ணுவது என்பார். பண்ணிய இசை பண்ணாயிற்று.

பன்னிரண்டு அரைச்சுரங்களுக்கான தமிழ்ப்பெயர்களையும், இணை கொண்ட வடசொற்களையும், மேலைக் குறியீடுகளையும் கீழே கொடுத்திருக்கிறேன்.

குரல் - சட்ஜம் - C
மென் துத்தம் - சுத்த ரிஷபம் - D flat
வன் துத்தம் - சதுஸ்ருதி ரிஷபம் - D
மென் கைக்கிளை - சாதாரண காந்தாரம் - E flat
வன் கைக்கிளை - அந்தர காந்தாரம் - E
மெல்லுழை - சுத்த மத்யமம் - F
வல்லுழை - ப்ரதி மத்யமம் - F sharp
இளி - பஞ்சமம் - G
மென் விளரி - சுத்த தைவதம் - A flat
வன் விளரி - சதுஸ்ருதி தைவதம் - A
மென் தாரம் - கைசகி நிஷாதம் - B flat
வன் தாரம் - காகலி நிஷாதம் - B

காட்டாக, முல்லையாழ் என்றும், செம்பாலைப் பண் என்றும் பழங்காலத்தில் சொல்லப்பட்ட பண்ணை அரிகாம்போதி அராகமாக இன்று சொல்வார்.

அதன் ஆரோசை ச ரி2 க2 ம ப த2 நி ச்
அதன் அவரோசை ச நி த2 ப ம க2 ரி2 ச்

இப்படிப் பல்வேறு பண்கள் வெவ்வேறு சுரங்களைக் கொண்டு அமையும்.

ஒவ்வொரு சுரத்தையும் அதன் அதிர்ச்சிப் பருவெண்ணால் (vibrational frequency) ஒலித்துக் காட்டலாம். 12 அரைச்சுரங்களின் ழுழு அரங்கும் (full range) ஒரு மண்டிலமாகும். இசையியலில் மெலிவு மண்டிலம் (மந்த்ர ஸ்தாயி), சமன் மண்டிலம் (மத்திய ஸ்தாயி), வலிவு மண்டிலம் (தார ஸ்தாயி) என மூன்று மண்டிலங்களைச் சொல்வார். காண்க, - சிலம்பு அரங்கேற்று காதை 93-94 ஆம் அடிகள்.

வலிவும் மெலிவும் சமனும் எல்லாம்
பொலியக் கோத்த புலமையோனுடன்

ஒவ்வொரு மண்டிலத்திலும் ஒரு குரற் சுரம், ஒரு துத்தச் சுரம் ....... முடிவில் ஒரு தாரச் சுரம் என அமையும். அதேபொழுது, சமன் மண்டிலத்தில் வரும் குரற் சுரத்தின் பருவெண் மெலிவு மண்டிலத்தில் வரும் குரலின் பருவெண்ணைக் காட்டிலும் 2 மடங்கு இருக்கும். இதே போல வலிவுக் குரல், சமன் குரலைப் போல் இரு மடங்குப் பருவெண் கொண்டது. சிலம்பின் வழி இசையாய்வு செய்த சென்னைப் பல்களைக்கழக முன்னாள் பூதியற் பேராசிரியர் திரு. வீர பாண்டியன், ஒரே மண்டிலத்துள் இருக்கும் 7 சுரங்களுக்கு, கீழ்க் கண்ட பருவெண் மடங்குகளை இருவேறு முறைகளில் குறிப்பார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

இயல்புத் தொனிப்பு முறை (Just intonation)

ச  ரி2  க2  ம1  ப  த2  நி2  ச்
1    9/8  5/4  4/3  3/2  5/3 15/8 2

சிலம்பில் வரும் ஆராய்தல் தொனிப்பு முறை

ச  ரி2   க2      ம1  ப    த2      நி2      ச்
1   9/8  (9/8)^2  4/3  3/2  27/16  (4/3)^2  2

ஆகத் தமிழில் வரும் சுரப் பெயர்கள் எல்லாம் தானாய் எழுந்ததாய்த் தெரியவில்லை; இசையியலை நன்கு புரிந்து இசையடவு (musical design) செய்த ஒருவர் வேண்டுமென்றே ஆராய்ச்சிப் பொருளோடு இட்டிருக்கும் காரணப் பெயர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. அதோடு, சங்கதப் பெயர்களுக்குக் கொடுத்த விளக்கங்கள் போலத் தான்தோன்றித் தனமாய் அன்றி, உள்ளார்ந்த ஏரணத்தோடு இவை இருப்பதையும் உணர்கிறோம்.

அன்புடன்,
இராம.கி.

Tuesday, March 18, 2008

ஏழு சுரங்கள் - 1

தொய்வில்லா நாரை ஒரு கவட்டையிற் கட்டி, வலிந்து இழுத்தால் சுர்ர்ர்.... என்று அதிருமே, கவனித்திருக்கிறீர்களா? அந்த அதிர்ச்சியை ஒரு மொழிசாரா ஒலிக்குறிப்பு என்பார்; (நார் என்ற சொல் கூட நுர்>நர்.... எனும் ஒலிக்குறிப்பில் கிளைத்தது தான்.) இது போன்று வெவ்வேறு நிகழ்வுகளில் ஏற்படும் ஒலிக் குறிப்புகளைக் கொண்டு இயல் மொழிகள், தம் இயல்புக்கு ஏற்ப, ஒலிப் பொருளை உணர்த்தி, விதப்பான சொற்களை அமைத்துள்ளன.

ஒரு நாரை வலித்து இழுப்பதைத் தெறித்தல் என்றும் சுண்டுதல் என்றும் சொல்கிறோம். தொல்காப்பியத்திற்கான இளம்பூரணரின் உரையும், தெறித்து அளத்தல் என்ற முறையைக் கூறும். ஒவ்வொரு சுண்டும் (அல்லது தெறிப்பும்) தெறிப்பு விசை (deflective force), நாரின் நீளம்,  நாரின் தந்தத் திகை (tensile stress of the wire) ஆகியவற்றைப் பொறுத்து, ஒரு விதப்பான ஒலியை உண்டாக்குகிறது.

[தந்தத் திகை என்ற சொற்கூட்டு நாம் பார்ப்பதற்குப் புதுத்தோற்றம் காட்டினும், உள்ளிருக்கும் செய்தி என்னவோ பழையது தான். 'திகையாக இருக்கு, இந்த நடைக்கே இப்படித் திகைஞ்சு போனா, எப்படி?' என்று தென் மாவட்டங்களில் stress-க்கு இணையாகத் திகையுறுதலைப் பயில்வார். (திகைக்கு இருக்கும் மற்ற பயன்பாடுகளை நானிங்கு குறிக்கவில்லை.) 

தந்து என்பது நூலையும், மெல்லிய கயிற்றையும் குறிக்கும். தந்தின் நீட்சியான தந்தி என்பது ஒரு மாழைக் கம்பியைக் (metal wire) குறிக்கும். கம்பு>கம்பி என்பது போல் தந்து> தந்தி என்பதைப் புரிந்து கொள்ளலாம். தந்தித்தல் என்பது நூற்றல் என்றாகும். நூற்பது என்பது நாம் கொடுக்கும் இழுவிசையால் - drawing force - ஏற்படுவது. 

இழுவிசை என்ற சொல் பொதுமையாக நாம் கொடுக்கும் விசையையும், தந்த விசை என்பது தந்தின் உள்ளே துலங்கும் விதப்பான tensile force ஐயும் குறிக்கும். சுருக்கமாய் tension என்பதைத் தந்தம் என்றே நாம் சொல்லலாம். தந்த விசைக்கு எதிரான compressive force ஐ நாம் அமுக்குவிசை என்கிறோம். ஒரு சிலர் பயன்படுத்துவது போல, tensile force என்பதை இழுவிசை என்பது ஒரு சரியான மொழியாக்கமாய் இருக்கமுடியாது. பொதுமைச் சொற்களை விதப்பு நிகழ்வுகளுக்குப் புழங்குவது தமிழை அறிவியல் மொழியாய் வளப்படுத்தாது; அது தமிழை மொண்ணையாகவே வைத்திருக்கும்.]

சுர் எனும் ஒலிக்குறிப்பு வேறு வகையிலும் ஏற்படும்; காய்ந்த இரும்பில் நீரைச் சுண்டும் போது எழும் ஒலிக்குறிப்பும் சுரீர் என்றே சொல்லப்படும். சொர் என்று தாரை/தாரையாக பெய்யும் மழையைச் 'சொரிகிறது' என்கிறோம். சுர்> சர் என்ற திரிவில் சரசர, சரேர், சரக் என்றும், ரகர/லகரத் திரிவில் சலசல, சலேல் என்றும், இன்னும் கலவையாய் சரேல் என்றும் கூட ஒலிக்குறிப்புச் சொற்கள் தமிழிலுண்டு. சர என்பதில் கிளைத்த சரகம் என்ற சொல் தேனீயையும், வண்டையும், அவை எழுப்பும் சர்ர்ர்.... எனும் ரீங்காரத்தையும் கூடக் குறிக்கும்.

சுர் எனும் குறிப்பில் கிளைத்த சுரல் வினை, சுரம் என்ற பெயர்ச் சொல்லை உருவாக்கும். (இதேபோலக் குரல் என்பதும், நரல் என்பதும் குர், நுர் எனும் ஒலிக்குறிப்புக்களில் உருவானவையே. 'கொர கொரப் பேச்சு, நரநரவென்று பல்லைக் கடித்தான்' என்கிறோமே?) 

இன்னொரு வகையில் சுரல், சுருதலாகி, சுருதி என்ற சொல்லை உருவாக்கும். மொழிப் பயன்பாட்டில், சுரம் பெரியது; சுருதி சிறியது. (இற்றை இசையியலில் சுருதி என்ற சொல் pitch இற்கு இணையாகவும் பயன்படுகிறது.) சுருதியைத் தொகுத்து வரும் ”சுதி”,  இன்னொரு வகையில் நீண்டு, வண்டைக் குறிக்கும் சூதவம் என்ற சொல்லை உருவாக்கும். இதே போல அரசன் புகழை இசையாற் பாடும் பாணர் சூதர் எனப்படுவார். சுருதலின் இன்னொரு நீட்சியாய்ச் சுரும்புதல், சுரும்பித்தல் என்ற வினைகளும் எழும். முடிவில் சுரும்பு என்ற பெயரும் கூட வண்டைக் குறிக்க எழும்.

கல்தல் வினை, கத்தலாகிக் கத்தம்>கதம் என்ற சொல்லை உருவாக்குவது போல (பா கதம் = பரந்த பேச்சு, நாவலந்தீவின் வடபுலத்திற் பெரிதும் பரவி யிருந்த பேச்சு, சம் கதம்>சங்கதம் = கலப்புப் பேச்சு = நாவலந்தீவின் பல மொழிகளில் இருந்தும் சொற்களையும் இலக்கணங்களையும் எடுத்துக் கலந்து புனைந்த பேச்சு, செங்கதம்>செம்மையான பேச்சு, standardized speech, 

செந்தமிழ் போல), சர்> சல் என்னும் திரிவில் சல்தல் வினை எழுந்து சத்தம் எனும் பெயரை உருவாக்கும். கல்தல்> கத்தல் தமிழென்றால், சல்தல்> சத்தல்> சத்தமும் தமிழ் தான். சரகமும் சத்தமும் ஒரே பொருள குறிக்கும் ஒலிச் சொற்கள். அதே போல சத்தத்தில் சகரம் தவிர்த்த அத்தம் என்ற சொல்லும் சுருதியைக் குறிக்கும் சொல் என்று சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் பூதியற் (physics) பேராசிரியர் வீரபாண்டியன் நிறுவுவார்.

http://www.musicresearch.in/categorywise.php?authid=12&flag=R

 மேலுமுள்ள தமிழ்த் திரிவில், சுர் என்பது சுல்>சில் என்றாகிச் சிலம்பல், சிலைத்தல் என்ற வினைச்சொற்களையும், அவையொட்டிய பெயர்ச் சொற்களையும் உருவாக்கும். சிள்வண்டைக் குறிக்கும் சில்லி (இது வடமொழியில் ஜில்லி ஆகும்), சில்லிடுதல், சில்லெனல், சில்லி, சில்லிகை (= சிள்வண்டு, வட மொழியில் ஜில்லிகா), சில்லூறு (= வண்டு) போன்ற சொற்களையும் கூட இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

இன்னும் வேறு வகையில், சுல்>சொல் எனும் திரிவையும் கூர்ந்து காணலாம். மொல்லும் ஓசை எப்படி மொழிதற் சொல்லை உருவாக்கியதோ, அது போல் சொல்லுதல் என்பதும் இங்கே உருவாகிறது. இன்னொரு வளர்ச்சியில் சொல்ந்தது சொன் என்றும் திரியும். 

இதே ஒலிப்பில் வரும் anglo norman சொல்லான soun, Latin சொல்லான sonus, சங்கதச் சொல்லான svan ஆகியவற்றையும் ஒப்பு நோக்கலாம். (இது போன்ற இந்தையிரோப்பியச் சொல்லிணைகளை நான் எடுத்துக் காட்டினால், அவற்றை ஏற்பதற்குப் பலரும் தயக்கம் காட்டுகிறார்; உயர்குடும்பச் சொற்களோடு, ”தாழ்ந்த” தமிழியச் சொற்களை ஒப்பிடலாமோ? என்ன ஓர் அவச்சாரம்? :-) என்று அந்த அளவிற்கு ஒரு மாயத்திரையால் நம் கண்ணைக் கட்டி வைத்திருக்கிறது இந்தச் சிந்தனை.)

சுல்>சல் எனும் திரிவில் திமிலைப் பறையைக் குறிக்கும் சல்லரியும், தாள ஒலியைக் குறிக்கும் சல்லகத்தையும் (வடமொழியில் ஜல்லகம்), சல்லரை என்னும் இசைக்கருவியையும் (சல்லரை, வடமொழிப் பலுக்கில் ஜால்ரா ஆகும்.) இனங்காட்ட முடியும்.

தவசங்களைக் குந்தாணியில் போட்டு உலக்கையால் குற்றும் பொழுது எழும் ஓசைக்குறிப்பு சலுக்கு மொலுக்கு என்று தமிழில் சொல்லப்படும். தவிர, சள்ளட்டி, சளப்பு (ஜ்ல்ப் என்று வடமொழியாகும்.), சளபுள, சளக்குப் புளக்கு (நீர் அசையும் போது ஏற்படும் ஒலி), சளசள (அருவி நீர் கீழே விழும்போது ஏற்படும் ஓசை) போன்ற ஒலிக்குறிப்புகளும் உண்டு. இந்த ஒலிக்குறிப்புகளின் வழியாகச் சரகம் (=தேனி, வண்டு), சலம் (=ஓசையிடும் நீர்; சலம் தமிழே, அதை ஜலம் என்று ஒருசிலர் தவறாகப் பலுக்குவதால், வடமொழியோ என்று பலரும் எண்ணிக் கொள்கிறார்கள்), சலங்கை (ஓசையிடும் காலணி), சலித்தல் (=ஒலித்தல்), சள்ளுவாயன் (=ஓயாது பேசுபவன்) என்ற சொற்களும் உருவாகும். அடுத்து லகரம் தகரமாகும் போலியில், சலங்கை சதங்கையாகவும் ஆகும். கிண்ணங்களில் நீரை நிரப்பி, அவற்றைக் கோல் கொண்டு தட்டி ஓசை எழுப்பும் சல தரங்கம் என்ற கருவியையும் (அதுவும் தமிழ் தான்) இங்கு எண்ணிக் கொள்ளுங்கள்,

சுர் எனும் ஒலிக்குறிப்பு இத்தோடு இருப்பதில்லை. இன்னும் நீட்சி பெற்று, சகரம் தவிர்த்த வினைச்சொல்லாய் உர்தல், உருமுதல், உரைத்தல் என்ற விதப்பான வினைச்சொற்களை எழுப்பும்.

இவ்வளவு சொற்களை நீட்டிச் சொன்னதற்குக் காரணம், 'சுரம், சுருதி என்பவை முற்றிலும் தமிழே' என்று நிறுவத் தான். ஒரு சிலர் ஸ்வரம், ஸ்ருதி என்று வடமொழிப் பலுக்கில் சொல்வதாலேயே அவை வடசொற்கள் ஆகிவிடா. [பல தமிழ்ச் சொற்களில் இப்படி வகரத்தையும் ரகரத்தையும் நடுவில் நுழைத்து, வேறு தோற்றம் காட்டி, நம்மை மழுங்கடித்து, வேண்டுமெனில் எழுதாக் கிளவியையும் கொண்டுவந்து மருட்டி, தமிழை இல்லை என்றாக்குவது நடந்து கொண்டே தான் உள்ளது. அதே பொழுது, பாகதத்தில் வகர, ரகர உள்நுழைவு பெரும்பாலும் ஏற்படாது. பாகதம் சங்கதத்திற்கு முந்தியது என்ற அடிப்படையையும் மூடி மறைத்து, 'வல்லான் வகுத்ததே வாய்க்கால்' என்ற கொள்கையில் சங்கதத்தைத் தூக்கிவைப்பவர் எங்கிருந்தாலும் தம் வேலையைச் செய்து கொண்டிருப்பர். :-)]

சுரம் எனும் ஒலி முன்சொன்னது போல், தெறிப்பு விசை, நாரின் நீளம், நாரின் தந்தத் திகை ஆகியவற்றைப் பொறுத்து, ஒவ்வொரு தெறிப்பிற்கும், தன் அளவில் மாறு கொள்ளும். இருந்தாலும் அவற்றை 12 சுரங்களாயும், 7 சுரங்களாயும் பட்டறிவில் உணர்ந்து அடையாளம் காட்டுவது தமிழிசையின் மரபு. 

செவ்வியல் இசையில் சுருதி என்பதைச் சுரங்களைக் காட்டிலும் நுண்ணிய அளவீடாகக் குறிப்பார். சுருதி கூடுதலா, குறைச்சலா எனும் போது அதிர்ச்சியின் பருவெண் (frequency) கூடுதலா, குறைச்சலா என்றே பார்க்கிறோம். (பருவெண்ணைச் சிலர் அதிர்வெண் என்பார்; அது சரியல்ல. அதிர்ச்சி குறிக்காத பருவெண்களும் பல்லாயிரக் கணக்கில் அறிவியலில் உண்டு.)

இந்தியச் செவ்வியல் இசையில் எழு சுரங்கள் என்றவுடன் பலருக்கும் ச,ரி,க,ம,ப,த,நி என்ற குறியீடுகளே நினைவுக்கு வரும். (இதற்கு இணையான குறியீடுகளை ஆங்கிலத்தில் C,D,E,F,G,A,B என்றும், மேலைச் செவ்வியல் இசையில் Do, Re, Me, Fa, So, La, Ti என்றும் சொல்வார்.) 

இன்னும் ஆழமாய்க் கேட்டால், அக் குறியீடுகளுக்கு ஆன சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்ற சங்கதப் பெயர்களை எடுத்துச் சொல்வார் (இப் பெயர்களை ஆழப் பார்த்தால் அவை முழுதும் சங்கதம் அல்ல. சில தமிழாயும், சில இருபிறப்பியாயும் தோற்றமளிக்கின்றன. இருந்தாலும் பழக்கங் கருதி அவற்றைச் சங்கதப் பெயர்கள் என்றே சொல்கிறேன். இச்சுரங்களின் பெயர்களுக்கு இணையாய் மேலையிசையில் Tonic, Supertonic, Mediant. Subdominant, Dominant, Submediant, Leading notes என்றும் சொல்வார். அவை தமிழ்ப் பெயர்களோடு பெரிதும் பொருந்தியுள்ளன.) 

அதோடு, 

சட்ஜம் என்பதற்கு 'மேலும் 6 சுரம் பிறக்க ஏதுவானது' என்ற பொருளையும்,
ரிஷபம் என்பதற்கு காளைமாட்டின் ஒலி என்றும்,
காந்தரம் என்பதற்கு இன்பசுகம் தரும் காந்தர்வ ஒலி என்றும்,
மத்திமம் என்பதற்கு நடுவில் உள்ளது என்றும்,
பஞ்சமம் என்பதற்கு ஐந்தாவது என்றும்,
தைவதம் என்பதற்கு தெய்வத் தொடர்புடையது என்றும்,
நிஷாதம் என்பதற்கு '6 சுரங்கள் படிப்படி உயர்ந்து தன்னிற் சேரப்பெற்றன' என்றும்,

விளக்கம் சொல்லிப் பொருந்தப் புகல்வார். மோனியர் வில்லிம்சு அகர முதலியோ, இன்னும் மேலே போய், சட்ஜத்தை ஷட்ஜம் என்றே குறிக்கும். எந்தவொரு செவ்வியல் இசைக்காரரும் ஷ என்று சுரம்பாடி நான் கேட்டது இல்லை. ஆனாலும் அப்படித்தான் மோனியர் வில்லியம்சு குறிக்கிறது. தவிர ஷட்ஜம் என்பது 'நாக்கு, பல், அண்ணம், மூக்கு, தொண்டை, நெஞ்சு என்ற ஆறு உறுப்புக்கள் சேர்ந்தொலிக்கும் ஓசை' என்றும் அது குறிக்கிறது. "இப்படி ஆறு உறுப்புக்கள் சேராமலா மற்ற சுரங்களை ஒலிக்கிறோம்?" என்ற கேள்வியும் அதைப் படிக்கும் நமக்குச் சட்டென எழுகிறது.

ஷட்ஜத்தின் ஒலி மயில் அகவலையும், ரிஷப ஒலி காளைக் கத்தலையும், காந்தார ஒலி ஆட்டுக் கனைப்பையும், மத்யம ஒலி பெருங் கோட்டான், கொக்கு, நாரை போன்றவற்றின் ஒலிகளையும், பஞ்சம ஒலி குயிற் கூவுலையும், தைவத ஒலி குதிரைக் கனைப்பையும், நிஷாத ஒலி யானைப் பிளிறலையும் உணர்த்துவதாக மோனியர் வில்லிம்சு சொல்லும். 

வெவ்வேறு ஆசிரியர் இதுபோல் வெவ்வேறு உயிரின ஒலிகளை இச் சுரவொலிகளுக்கு ஈடாகச் சொல்வதுண்டு. அவற்றையெலாம் படிக்கும்போது தெளிவு கிடைப்பதற்கு மாறாய்க் குழப்பமே மிஞ்சும். மோனியர் வில்லியம்சு சொல்வது போலச் சுரக்குறியீடுகள் தம் முதலெழுத்தைக் குறிப்பதாயானால், ஷ, ரி, ga, ம, ப, தை, நி என்றல்லவோ இருந்திருக்க வேண்டும்? மாறாக, ச, ரி, க, ம, ப, த, நி என்றல்லோ நடைமுறையில் சொல்லப்படுகின்றன? (தைவதத்தை தய்வதம் என்றெழுதித் தகரக் குறியீடு எழுந்ததாகச் சொல்வதுமுண்டு. அதைக் கீழே பார்ப்போம்.) சுரங்களின் நடைமுறைக்கும் மோனியர் வில்லிம்சு விளக்கத்திற்கும் இடையே நெருடலும், தான்தோன்றித்தனமும் புலப்படும்.

இனி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' எனும் விளக்கத்தையும் அலசிப் பார்ப்போம். இராமகாதை நாயகனுக்கு, தசரதன் மகன் என்ற கருத்தில், தாசரதி என்றொரு பெயருண்டு. இதே போல் மா பாரதத்தில் பீஷ்மருக்கு கங்கை மகன் என்ற பொருளில் காங்கேயன் என்பார். இப்படிப் பெற்றோர், தாத்தன்/பாட்டி வழியிற் பிள்ளைகளுக்குப் பெயரிடுவது உலக வழக்கம் தான். 

இவ்வழக்கத்திற்கு மாறாய் 'நாலு மக்களைப் பெற ஏதுவானவன்' என்று தசரதனுக்குச்’ சதுரதி” என்று பெயரிடுவாரோ? அதே போல, பீஷ்மனைப் பெற்றவள் என்ற பொருளில் பீஷ்மை என்று கங்கைக்கு பெயரிடுவாரோ? அப்புறம் எப்படி '6 சுரங்கள் பிறக்க ஏதுவானது சட்ஜம்' என்கிறார்? மொத்தத்தில் சரியான பெயர்க் காரணம் அறியாது, தான்தோன்றி விளக்கமாய் இது இருக்கிறதே?

வேடிக்கை என்னவென்றால், இதுபோன்ற தான்தோன்றி விளக்கங்கள், காலங் காலமாய்ச் சொல்லப்பட்டு, அவையே நிலைத்து, மற்ற உருப்படியான விளக்கங்கள் மறைந்து போவதும் உலகிலுண்டு. காட்டாக, மரைக்காடு என்று ஊரின் பெயரை, சோழர் கழிக்கானப் (backwaters) பகுதியில் (அலையாத்திக் காடுகள் இருக்கும் பகுதி) யாரோ ஒருவர் தவறான எழுத்துக் கோவையில் மறைக்காடு என்று எழுதப்போக, அதை அப்படியே வேதாரண்யம் என மொழி பெயர்த்து, அப்பெயரும் நிலைபேறு கொண்டு, சமயக் குரவர் பாட்டுகளிலும் கூட ஆவணமாகி இருக்கிறது. "வேதங்கள் வந்து பூசித்த காரணத்தால் வேதாரண்யேஸ்வரர்" என்றெலாம் கதை கட்டுவதும் நாம் அறியாததல்ல. (இல்லை, மறைக்காடு என்பது வேறு பொருளில் எழுந்தது என்பாரும் உண்டு, நானே இந்த வேறு பொருள் காரன் தான்.)

மேற்கூறிய சுரங்களின் சங்கதப் பெயர்கள், நமக்கு இதுவரை கிடைத்த சான்றுகளின் படி, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திர பல்லவனின் குடுமியான்மலைக் கல்வெட்டில் தான் முதன்முதலில் ஆவணப் பட்டன. கல்வெட்டுத் தவிர்த்து இதே கருத்தை, நமக்குக் கிடைத்த நூல்களில், 7- ஆம் நூற்றாண்டு நிகண்டான சேந்தன் திவாகரம் (இதை 8 ஆம் நூற்றாண்டு என்று சொல்லுவாரும் உண்டு),

சவ்வும் ரிவ்வும் கவ்வும் மவ்வும்
பவ்வும் தவ்வும் நிவ்வும் என்றிவை
ஏழும் அவற்றின் எழுத்தே யாகும்

எனப் பதிவுசெய்யும். வடமொழி நூலான 'நாரத பரிவ்ராஜக உபநிடதம்' என்ற நூலில் (இது எந்த நூற்றாண்டுப் பொத்தகமென எனக்குத் தெரியவில்லை) முதன் முதலாக ச,ரி, க, ம, ப, த, நி என்ற சுரக்குறியீடுகள் குறிக்கப் பட்டதாக, 'சிலப்பதிகாரத்தில் இசைச் செல்வங்கள்' என்ற பொத்தகத்தில் சொல்லப் பட்டுள்ளது. (டாக்டர் சேலம் எஸ் செயலட்சுமி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 2000 பக்கம் 288).

மேலும், 11 ஆம் நூற்றாண்டில் சிலம்பிற்கு எழுந்த அடியார்க்கு நல்லார் உரையில்,

சரிகம பதநிஎன்(று) ஏழெழுத்தால் தானம்
வரிபார்த்த கண்ணினாய் வைத்து - தெரிவரிய
ஏழிசையும் தோன்றும் இவற்றுள்ளே பண்பிறக்கும்
சூழ்முதலாம் சுத்தத் துளை

என்ற வெண்பா (இது பஞ்ச மரபின் வங்கிய மரபு, குழலியல் வந்த முதல் வெண்பா) எடுத்துக்காட்டப் பட்டிருக்கும். இச்சொல்லாட்சியைக் குடுமியான் மலைக் கல்வெட்டோடு பொருத்திப்பார்த்தால், பஞ்சமரபு என்ற நூல் பெரும்பாலும் பல்லவர் காலத்திலிருந்த ஒரு பாண்டிய மன்னனை முன்னிறுத்தி எழுந்திருக்க வாய்ப்புண்டு என அறிகிறோம். (இக்காலக் குறிப்பிலும் சில இசையறிஞர் மாறுபடுவார்.)

இதற்கு மாறாய், சிலம்பின் மதுரைக் காண்டம் ஆய்ச்சியர் குரவையில் சங்கதப் பெயர்களை முன்னிறுத்தாது செந்தமிழ்ப் பெயர்களே இருக்கும். காட்டாக, ஆய்ச்சியர் குரவையில் ஏழு கன்னியரைக் குரவையில் நிறுத்தி அவருக்கு ஏழிசைப் பெயர்கள் இட்டுச் சொல்லும் இடத்தில், எடுத்துக் காட்டு என்னும் தலைப்பின் கீழ்,

குடமுதல் இடமுறையாக் குரல் துத்தம்
கைக்கிளை உழைஇளி விளரி தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே

என்ற வரிகளில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்று ஏழு சுரங்களின் தமிழ்ப்பெயர் தரப்படும். இதே பெயரைப் 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிங்கல நிகண்டும் (இதை 9 ஆம் நூற்றாண்டு என்பாரும் உண்டு),

குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை
ஏழும் யாழின் இசைகெழு நரம்பே

என்று வரிசைப் படுத்தும். இதே சுரங்களுக்கு சரிகமபதநி என்று சொல்லாமல்,

ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ வெனும்
இவ்வே ழெழுத்தும் ஏழிசைக் குரிய

என்று திவாகர நூற்பா பழைய குறியீடுகளைச் சுட்டிக்காட்டும். ஆகச் சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெயர்களும், அவற்றிற்கான குறியீடுகளும் பல்லவர் காலத்தில் முற்றிலும் மாறிப் போய்விட்டன என்றே கொள்ள வேண்டியுள்ளது.

அன்புடன்,
இராம.கி.

Thursday, March 06, 2008

சுழற்சி மீப்பேறு

அண்மையில் cyclical repair என்பதைத் தமிழில் எப்படிச் சொல்லுவது என்று தமிழுலகம் மடற்குழுவில் திரு. Jai Simman R. Rangasamy என்பவர் கேட்டிருந்தார். அதற்கு அளித்த மறுமொழி:

பொதுவாக repair என்பதைத் தமிழில் நேரடியாகச் சொல்லாமல், சுற்றிவளைத்துப் பழுது பார்த்தல் என்றே சொல்லுகிறார்கள். பழுது பார்த்தல் என்பது to rectify faults என்பதற்கே சரியாக வரும். பெரும்பாலான இடங்களில், repair என்பது to rectify faults என்ற பொருள் தான் கொள்ளும் என்றாலும், நாம் சுற்றி வளைத்துச் சொல்லுவதை உணர முடியும். இன்னொரு வகையில், to maintain என்பதைப் பேணுதல் என்றே சொல்லுகிறோம். (பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல்லையும் maintenance க்கு இணையாகச் சிலர் சொல்லுவார்கள். அதுபற்றிக் கீழே பார்ப்போம்.) ஏனென்றால், பழுது வராமலேயே, ஒரு கருவி அல்லது பொருளைப் பேணமுடியும். அப்படிச் செய்வதுதான், நுட்பியல் வரிதியில், நல்ல பேணுகை (maintenance) என்று சொல்லுவார்கள்.

அப்படியானால், repair என்பதற்கு ஈடாகத் தமிழில் நேரடியாக எப்படிச் சொல்லுவது? அதற்கு முன் repair உடன் தொடர்புடைய pare, parent, prepare போன்ற சொற்களின் பிறப்பையும் பார்த்துக் கொள்ளுவோம்.

முதலில் வருவது:

pare:
"to trim by cutting close," c.1320, from O.Fr. parer "arrange, prepare, trim," from L. parare "make ready," related to parere "produce, bring forth, give birth to," from PIE base *per- "to bring forward, bring forth" (cf. Lith. pariu "to brood," Gk. poris "calf, bull," O.H.G. farro, Ger. Farre "bullock," O.E. fearr "bull," Skt. prthukah "child, calf, young of an animal," Czech spratek "brat, urchin, premature calf"). Generalized meaning "to reduce something little by little" is from 1530.

மேலே குறிப்பிட்டிருப்பதில் PIE base *per- "to bring forward, bring forth" என்பதுதான் முகன்மையானது. தமிழில் பெறுதல்/பெறல் என்பது தன் வினையில் to obtain என்ற பொருள் கொள்ளும். அதே சொல் பிற வினையில் பெற்றுதல்/பெற்றல் என உருவங் கொண்டு to cause to obtain = to bring forward, bring forth என்ற பொருளை உணர்த்திக் காட்டும். பெற்றலின் பெயர்ச்சொல்லாய் எழும் பெற்றோன்/பெற்றோர் என்ற சொற்களை நாம் அனைவரும் அறிவோம். மேலைமொழிகளிலும் *per என்னும் PIE வேரே பெற்றோருக்கு இணையான சொல்லை ஏற்படுத்தும்.

parent:
1185, from O.Fr. parent (11c.), from L. parentem (nom. parens) "father or mother, ancestor," noun use of prp. of parere "bring forth, give birth to, produce," from PIE base *per- "to bring forth" (see pare). Began to replace native elder after c.1500. The verb is attested from 1663. The verbal noun parenting is first recorded 1959 (earlier term had been parentcraft, 1930).

தமிழிய மொழிகளுக்கும் இந்தையிரோப்பிய மொழிகளுக்கும் எப்பொழுதோ ஒரு காலத்தில் உறவு இருந்திருக்க வேண்டும் என்று நான் சொல்லுவதைப் பலரும் அவ நம்பிக்கையோடே பார்க்கின்றனர். ஆனாலும் என்கடன் பணி செய்து கிடப்பதே. ஆயிரத்திற்கும் மேல் பல இணைச் சொற்களைக் காட்டி வருகிறேன்; இன்னும் காட்டுவேன். (மேலே காட்டிய fault = பழுது என்பது கூட இன்னொரு இணை தான். இது போல வேரில் பழுத்துத் தொங்கும் பலாச்சுளைகள் பல; பலாவைப் பறிக்கத்தான் ஆளில்லை. அந்த அளவிற்கு வடமொழித் தாக்கம் காட்டும் மாக்சு முல்லரின் கருதுகோள் பலரையும் அலைக்கழிக்கிறது. வடமொழியா, இந்தையிரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது; தமிழிய மொழிகளா? ஊகூம்...... எவன் சொன்னான்?) நான் அறிந்தவரை, உறுதியாக *per>pare>parent என்பதற்கு இணையாகப் பெறு>பெற்று>பெற்றோர் என்ற தமிழ்ச் சொற்பிறப்பைச் சொல்ல முடியும்.

இந்த வரிசையில் அடுத்த சொல் prepare/preparation என்பதாகும்.

1390, "act of preparing," from L. praeparationem (nom. praeparatio) "a making ready," from praeparatus, pp. of praeparare "prepare," from prae- "before" + parare "make ready" (see pare). Meaning "a substance especially prepared" is from 1646. Verb prepare is attested from 1466, from M.Fr. preparer, from L. praeparare; slang shortening prep is from 1927. Preparatory is first recorded 1413, from L.L. praeparatorius, from L. praeparatus. Applied from 1822 to junior schools in which pupils are "prepared" for a higher school.

prae என்ற முன்னொட்டுக்கு இணை, அப்படியே புற என்ற தமிழ் முன்னொட்டோ டு பொருந்திவரும். நமக்கு முன்னால் இருப்பது புறத்தில் இருப்பதே. வீட்டிற்குப் புறத்தில் இருக்கும் பொருளைப் பேசும் நானூறு புற நானூறு. வீட்டிற்கு அகத்தில் (=உள்ளே) இருக்கும் பொருளைப் பேசும் நானூறு அக நானூறு.

இந்த நிலையில், புறப்பெற்றம் = preparation என்று சொல்லுதற்கு ஏதோ நாணிக் கொண்டு, "என்ன இது இராம.கி வெறுமே ட்ரான்ஸ்லிட்டெரேட் பண்ணி சொல்லைப் பரிந்துரைக்கிறார்?" என்று கேலியும் பேசிக் கொண்டு, தய்யார் செய்தல் என்று உருதுச் சொல்லைப் புழங்க முன்வருவோம். இந்த தேவையற்ற நாணத்தை மட்டும் தூக்கி எறிந்தால், தமிழின் அடிப்படை புலப்படும். (வடமொழி என்ற திரையும் நம்மிடமிருந்து விலகும்.) தமிழில் புழங்க ஒரு நல்ல சொல்லும் கிட்டும். (அதற்கு மேல் நான் சொல்ல ஒன்றுமில்லை.)

இனி அடுத்தது repair. இங்கே எழுத்துக் கூட்டு மாறினாலும், உள்ளே re-pare என்பது இனங் காட்டி நிற்கிறது.

"to mend, to put back in order," 1387, from O.Fr. reparer, from L. reparare "restore, put back in order," from re- "again" + parare "make ready, prepare" (see pare). The noun is attested from 1595.

மீள் பெற்றல் என்பது வினைச்சொல்லாகவும், மீள் பேறு>மீட்பேறு>மீப்பேறு என்பது பெயர்ச்சொல்லாகவும் அமையும்.

என் பரிந்துரையை முடிக்குமுன், பெற்றலின் தொடர்புடைய இன்னொரு வினையையும் கூறுகிறேன்.

பாரித்தல் = ஆயுத்தப் படுத்தல், to prepare "பாயியவெழுந்த வேங்கை பாரிக்கும் அளவில்" (சூளாமணி. துற.19)
பாரித்தல் = வளர்த்தல்; to foster. "பண்பின்மை பாரிக்கும் நோய்" (குறள்851)
பாரித்தல் = அமைத்துக் கொடுத்தல், to cause to be obtained, "பரமபதம் பாகவதர் அனைவருக்கும் பாரித்தானால்" (அரிசமய. பத்திசா.98)
பாரித்தல் = உண்டாக்குதல் to make, form, construct, create (வின்சுலோ அகராதி)

பராவரித்தல்>பராமரித்தல்>பராமரிப்பு என்ற இருபிறப்பிச் சொல் இந்தப் பாரித்தலின் வழியாகப் பிறந்தது தான். பராமரிப்பு என்பதன் இருபிறப்பியைத் தவிர்த்து, பாரிப்பு என்றே நல்ல தமிழில் சொல்லலாம். இந்தச் சொற்களின் அடிப்படையில் "மீண்டும் ஆயுத்தப் படுத்தலை, மீண்டும் அமைத்துக் கொடுத்தலை, மீண்டும் உண்டாக்குதலை, மீண்டும் வளர்த்தலை", மீள் பாரித்தல் என்று சொன்னாலும் தவறே இல்லை.

எனவே cyclical repair என்பதற்குச் சுழற்சி மீப்பேறு அல்லது சுழற்சி மீள்பாரிப்பு என்று எதை வேண்டுமானாலும் பயனாக்கலாம். தமிங்கிலமே கதியென்று இருப்பதால் சொல்லத் தயங்குபவர்கள், சுழற்சி ரிப்பேர் என்று பேஷிக் கொள்ளலாம். (:-))

அன்புடன்,
இராம.கி.

Sunday, February 24, 2008

தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்

தமிழில் மூன்று விதமான பெயர்களைச் சொல்லுவார்கள். "நான், நீ, அவன், இவள், உது, இவர், அவை" போன்றவை சுட்டுப் பெயர்கள். (அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளில் அமையும்.) "காலம், பந்து, மலர்" போன்றவை, பொருளைக் குறிப்பதால் பொருட் பெயர்கள். இவை தவிர, உடன் உய்யும் மாந்தர்களைக் குறிக்கும் படி, இராமன், இலக்குவன், இனியன், முகிலன் என்றும் பெயரிடுகிறோம்;

மூன்றாவதாய் உள்ளதை, இயற்பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். பேச்சு வழக்கில் இந்த இயற்பெயரும் இட்ட பெயர், கூப்பீட்டுப் பெயர் என்று இரண்டாக விரியும். "தமிழ்ச்செல்வன்" என்று பெயரிட்டு, வேறொரு பெயரால் கூப்பிடுவதும் நாட்டில் நடக்கிறது. தவிர ஒரு இயற்பெயரைச் சுருக்கியும் சிலர் அழைப்பதுண்டு, நாராயணன் என்பது நாணா என்று அழைக்கப் படுவதைப் போல. பொதுவாய், தமிழ் மரபில், தன் தந்தையின் பெயரை தன் மகனுக்கும், தாயின் பெயரைத் தன் மகளுக்கும் இடுவதே பழக்கம். இப்படிப் பெயரிடுவதால் தான் "பெயரன்/பெயர்த்தி" என்ற வழக்குகள் நம்மிடையே எழுந்தன. (தாய்வழிப் பாட்டன்/பாட்டியின் பெயர்களை இடுவதும் வழக்கம் தான்.)

பெயர்ச் சொல்லில் உள்ளுறையும் திணை மற்றும் பால் பார்த்தே தமிழ் வாக்கியங்களை முடிப்பதும் அமைகிறது. ஒரு வாக்கியத்தில் பல்வேறு வகைப் பட்ட பெயர்கள் ஒரு கொத்தாய்க் கலந்து வந்தால் அவற்றை விரவி வந்தவை என்று இலக்கணத்தில் சொல்லுவார்கள். விரவுதல் = to get mixed up. விரவுப் பெயர்கள் = வகை கலந்து கிடக்கும் பெயர்கள். "வடுகர், அருவாளர், கருநாடர், சுடுகாடு, பேய், எருமை ஆகிய இவை ஆறும்" என்று சொல்லும் போது திணை விரவிக் கிடக்கும் பெயர்ச்சொற்களைச் சொல்லுகிறோம். அது போல பால் விரவிய பெயர்ச்சொற்களும் ஒரு கொத்தில் அமையலாம். இனி, இன்னொரு விதமான விரவலைப் பார்ப்போமா?

நொபுரு கராசிமா, சூ லிங், விலி பிராண்ட், ழான் கார்ட்டிய, வான் மேர், ங்குரூமா, ஓ சீ மின்

இந்த இயற்பெயர்களை [அவர்களில் ஒரு சிலர் நன்கு பெருவலமானவர்கள் (ப்ரபலமானவர்கள்) என்பதை மறந்துவிட்டுப்] பார்த்தால், முதலில் வருபவர் ஒரு சப்பான்காரர், அடுத்தவர் சீனர், அடுத்தவர் செருமானியர், அதற்கும் அடுத்தவர் பிரஞ்சுக்காரர், அப்புறம் டச்சுக்காரர், அப்புறம் ஆப்பிரிக்கர், முடிவில் வியட்நாமியர் என்று ஓரளவாவது தடுமாறி அடையாளம் காணுவோம், இல்லையா? இனி இன்னொரு வரிசையைப் பார்போம்.

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

இந்த வரிசைப் பெயர்களைப் படித்தால், உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இவர்கள் இந்தியர்களாய் இருக்கலாம் என்று தோன்றும். ஆனால் அதற்கு மேல் இந்தத் துணைக் கண்டத்தில் எந்தப் பகுதி என்று சொல்லுவது கடினம். ஒருவேளை, "இந்த வரிசையில் கொடுத்திருப்பவை முதற்பெயர்கள்; மாறாக, குடும்பப் பெயர் வரிசையைக் கூறினால், இந்தியாவின் எந்த மாநிலம்?" என்று ஓரளவு சொல்லக் கூடலாம். (இங்கே சாதிப் பெயர்களை நான் சொல்லவில்லை.) காட்டாக,

அகர்கர், தேசாய், பியாந்த் சிங், பிஸ்வால்

என்ற வரிசையில் மாராட்டியர், குசராத்தி, பஞ்சாபியர், வங்காளி அல்லது ஒரியா என்று ஓரளவாவது சொல்ல முடியும் தான். அதே பொழுது, குடும்பப் பெயர் என்பது இந்தியாவின் ஒருசில மாநிலங்களில் அவ்வளவாய் வழக்கம் இல்லை. காட்டாகத் தமிழ்நாடு. இங்கு குடும்பப்பெயர் என்பது ஒரு சில பண்ணைக்காரர்களுக்கு இருந்திருக்கிறதே ஒழிய (காட்டு: மழவராயர், வாண்டையார், வில்லவராயர், மூப்பனார்; இந்தப் பெயர்களெல்லாம் விசயாலனுக்கு அப்புறம் வந்த சோழப்பேரரசு காலத்தில் அரச முறைப் பழக்கத்தில் ஏற்பட்ட பெயர்கள்), 99.9 விழுக்காடு மக்களுக்கு இருந்தது கிடையாது. பெரும்பாலான ஊர்களில், ஒரு பெருங்கூட்டத்தில் தங்களை அடையாளம் சொல்ல ஊர்ப்பெயர், தன்பெயர், தந்தைப்பெயர், தேவைப்பட்டால் தாத்தன் பெயர் சேர்த்துச் சொல்லுவார்கள். இப்படிச் சொல்லுவதற்கு விலாசம் என்று பெயர். "குடும்பப் பெயர் என்றால் வீசை என்ன விலை?" என்று கேட்பதே நம்முடைய வழக்காறு. (வெளிநாட்டில் இருக்கும் தமிழர் அங்கு உள்ள ஆவணங்களில், தங்களுக்குக் குடும்பப்பெயரைச் சுட்ட முடியாமற் சரவற் படுவது வேறொரு பெருங்கதை.)

இந்த இடத்தில், கொஞ்சம் இடைவிலகலாக, இரோப்பாவில் குடும்பப்பெயர் கட்டாயமாக்கப் பட்ட கதையைச் சொல்ல வேண்டும். இரோப்பாவில் பல நாடுகளைப் பிடித்து நெப்போலியன் பிரஞ்சுப் பேரசை உருவாக்குவதற்கு முன்னால், குடிமைச் சட்டம், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு போன்றவை ஏற்பட்டதே இல்லை. அதுவரை, நம் சோழப் பேரரசு காலம் போலவே, அரசனின் ஆட்சிக்குத் துணையாய் இருந்த பெரும்பண்ணையார்களுக்கு மட்டுமே குடும்பப் பெயர்கள் இருந்தன. நெப்போலியனின் கணக்கெடுப்பு நடந்த போது, செருமனி, பெல்சியம், நெதர்லந்து, டென்மார்க் போன்ற மேற்கு இரோப்பிய நாடுகளின் குடிமக்கள் குடும்பப்பெயர் சூட்டிக் கொள்ளக் கட்டாயப் படுத்தப் பட்டார்கள். புதுவிதமான குடும்பப்பெயர்களும் இந்தக் கணக்கெடுப்பில் அவர்கள் மேல் திணிக்கப் பட்டன. காட்டாக, எனக்குத் தெரிந்த நெதர்லந்துப் பழக்கத்தை உரையாடலாய்ச் சொல்லுகிறேன்.

கணக்கெடுப்பு அதிகாரி: இந்தாப்பா, இங்கே வா, உன் பெயரென்ன?

பீட்டுங்க

எங்கேர்ந்து வர்றே?

மலைப்பக்கமுங்க

இன்னையிலேர்ந்து உன்பேரு. மலையில் வந்த பீட்; உம் பொஞ்சாதி, புள்ளைகள் எல்லாருக்கும் "மலையில் வந்த"ங்குற பின்னொட்டைச் சேர்த்துச் சேர்த்து எழுதோணும், சரியா?

சரிங்க, எசமான்

van den Berg என்ற குடும்பப்பெயர் அப்படித்தான் வந்தது. இதுபோல நகரத்தில் இருந்து வந்தவர் van den Burg என்று ஆனார். ஏரிக்கு அருகில் இருந்து வந்தவர் van Meer ஆனார், ஆற்றின் தடுப்பணைக்கு அருகில் இருந்து வந்தவர் van Dam என்று ஆனார். இப்படி இட வழியாக மட்டுமல்லாமல், தொழில் வழியாகவும் குடும்பப்பெயர்களை கணக்கெடுப்பாளர்கள் இட்டார்கள்; ஒரு துன்னகாரர் - தையற்காரர்- Schneider என்று ஆனார்; நான் சொல்லிக் கொண்டே போகலாம். இரோப்பில் நெப்போலியனின் தாக்கம் மிகப் பெரிது. இந்தக் கணக்கெடுப்பால், நம்மூர் குப்பன்/சுப்பனைப் போன்று பீட், மிகேல் என்று முதற்பெயர் மட்டுமே கொண்ட சாத்தர் (=commoner) கூட்டத்திற்கு வலிந்து குடும்பப் பெயர்கள் திணிக்கப் பட்டன. ஒரு பெயர்ப் புரட்சியே அங்கு நடந்தது.

[சாத்தர் என்ற சொல்லையும், சாதாரணன் என்ற சொல்லின் தமிழ்வேரையும் இங்கு அறிந்து கொள்ளுவது நல்லது. ஐஞ்சிறு காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் ஆசீவக வாதச் சருக்கம் 683வது பாடலில், நீலகேசி ஓர் ஆசீவகத் துறவியிடம்

"ஆத்தன் அறிந்தன யாவையும் சொல்லலன் ஆய்விடின் இச்
சாத்தனும் யானும் அவன் தன்னில் சால இசையுடைய
நாத்தனை ஆட்டியோர்; நன்மை கண்டாலும் நினக்குரைத்தும்,
ஈத்தனம் உண்டு இருமைக்கும் ஏதும் இலம் பிறவோ?"

என்று சொல்லுவாள்: "தானறிந்ததைப் பிறருக்குச் சொல்லாமல் உன் ஆத்தன்(=தலைவன்) மோனம் கொள்வான் எனில், இதோ இங்கிருக்கும் சாத்தனும் (=சாதாரணனும்) யானும் மிகுந்த புகழுடையவர்கள்; ஏனென்றால், உயிரினங்களுக்கு நன்மை தருபவற்றைக் கூறியும், எம்மால் இயன்ற அளவு உணவு முதலியவற்றை ஈந்தும், இம்மைக்கும் மறுமைக்கும் ஆக்கம் தருமாறு ஆற்றுகின்றோம் அல்லவா?"

இந்தப் பாடல் மட்டும் கிடைத்திருக்கா விட்டால் சாத்தன் = commoner என்று அறுதியாகச் சொல்ல முடியாது. சார்ந்தது சாத்து (=கூட்டம்); கூட்டத்தைச் சார்ந்தவன் சாத்தன் (நேற்று ஒரு சந்திப்பில், பேரா. இல. மறைமலையும் நான் கொண்ட இந்தப் பொருளைச் சரியென்றே உறுதியளித்தார்.) பண்டன் என்பது பண்டாரன் ஆவது போலச் சாத்தன் என்பது சாத்தாரன் ஆவது தமிழில் உள்ள பழக்கம் தான். பின் சாத்தாரன் வெளிமொழியார் வழக்கில், இன்னும் நீண்டு சாத்தாரனன்>சாதாரணன் ஆகும். எப்படி அய்யன் (=பெரியவன்) பொருள் கொண்ட அந்தன் எனும் சொல் அந்தனன் என்று நீண்டு பின் அந்தணன் என்று திரிந்ததோ, அது போல, இரண்டாவது அன் சேருவது இயல்மொழி அல்லாதவரின் கொச்சைப் பேச்சு ஆகும். இதே வகையில் சாத்தாரன்>சாத்தாரனன்>சாதாரனன்>சாதாரணன் என்று ஆவது தமிழ்-வடமொழி ஊடாட்டில் நடக்கக் கூடியதே. (முடிவில் சாதாரணனின் தமிழ்வேரை மறந்து போய் அதை வடமொழியென்று வழக்கம் போல் சாதிப்போர் மிகப் பலர்.)]

இயற்பெயர் பற்றியல்லவா பேசிக் கொண்டிருந்தோம்?

இரோப்பியர் என்பவர் இன்றைக்கு ஒரே விதமான நாணயம் வைத்திருக்கிறார்கள், மேற்கு இரோப்பாவில் வசிக்கும் எல்லோரும் எங்கும் நுழைமதி (visa) தேவைப்படாமல் மேற்கு இரோப்பா முழுதும் போக முடிகிறது. மேற்கு இரோப்பாவில் நுழையும் நம்மைப் போன்றோர் "செங்கன்" என்ற ஒரே நுழைமதி எடுத்தால் மேற்கு இரோப்பா முழுக்கப் போக முடிகிறது. இந்த நாடுகள் எல்லாவற்றிலும் சுங்கமும் (customs duty)உல்கும் (excise duty) கிட்டத்தட்ட ஒரே அளவில் இருக்கின்றன. இந்த நாட்டுப் பொருளாதாரங்கள் தங்களுக்குள் பின்னிப் பிணைந்தே இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுப் பாராளுமன்றமும் இரோப்பியப் பாராளுமன்றத்தைப் பொருட்படுத்தாமல், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலைக்கு வந்து சேர்ந்திருக்கின்றன. இன்னும் மேற்கொண்டு உறவுகள் அவர்களிடையே இறுகிக் கொண்டு வருகின்றன. "இரோப்பிய ஒன்றிய நாடுகள் (United States of Europe)" என்ற மீநிலை ஒன்றியம் (supra union) அமையும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதே பொழுது, இந்த நாடுகளுக்கான தனிநிலைகளும் அழிந்து விடவில்லை. இன்னமும் செருமன்காரர், பிரெஞ்சுக்கார, டச்சுக் காரர்களின் பெயர்கள் ஏற்கனவே இருந்த படி, அவரவர் மரபில் தான் இருக்கின்றன. இரோப் என்று பொது அடையாளம் பெறுவதற்காகத் அவர்கள் தங்களின் தனி அடையாளத்தைத் துறக்கவில்லை.

இப்பொழுது இந்தியாவுக்கு வாருங்கள். விடுதலை பெற்ற போது இந்த நாடு இந்திய ஒன்றியம் என்ற பெயரைத்தான் எடுத்துக் கொண்டது. பின்னால் இந்திரா காந்தி காலத்தில் தான் இந்தியக் குடியரசு என்ற ஒற்றைமுகப் பெயரில் தன்னை வலிந்து மாற்றிக் கொண்டது. இருந்தாலும், ஒரு இயல்பான போக்கில், இந்த நாடு ஒரு பல்தேசியக் குடியரசாகத் தான் இன்றைக்கும் இருக்கிறது. ஒரு பெருங்கூட்டம் பல்தேசியப் பாங்கை முற்றிலும் ஒழித்து ஒற்றைப் பரிமானத்தைத் தந்து, இந்து-இந்தி-இந்துத்துவா என்று கொண்டுவர முயன்றாலும், இந்தியச் சாத்தர்கள் தங்கள் அடையாளத்தை முற்றிலும் தொலைத்து பொதுச் சோதியில் கரைந்து கொள்ள இன்னும் அணியமாகவில்லை. அப்படி இருக்கும் போது, தமிழரின் முகவரியான தமிழ் அடையாளத்தை ஏன் நாம் துறக்க முற்படுகிறோம்?

ஸ்ருதி, ஸ்வேதா, ஆதித்யா, ஆதர்ஷ்

என்ற பெயர்கள் தமிழ்க்குழந்தைகளுக்கு ஏன் சூட்டப்படுகின்றன என்பது சற்றும் விளங்கவில்லை. நல்ல தமிழ்ப் பெயர்களை தம் பிள்ளைகளுக்கு இடாமல், யாரோ ஒரு சோதியன் சொல்லும் தூண்டலுக்கு ஆட்பட்டு, "இந்த எழுத்தில் தொடங்கும் பெயர், இந்த முடிப்பில் இருக்கும் பெயர்" என்று ஈர்ப்பில், தமிழர்கள் வட இந்திய, வடமொழிப் பெயர்களையே பெரிதும் சூட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்களே, அது ஏன்? இது நம் அடையாளத்தை முற்றிலும் அழிக்கும் போக்கு அல்லவா? இதற்கு நாம் இணங்கலாமோ? எங்கோ ஒரு கடலில் கரையும் பெருங்காயம் போல் நாம் ஆவதற்கே இது வழிவகுக்கும் அல்லவா? நாலு இந்தியர் கூடும் இடத்தில் தமிழன் என்னும் அடையாளம் தென்பட வேண்டாம் என்னுமாப் போல, வடபுலப் பெயர்களைச் சூட்டுவது ஒரு பெருமிதமான பழக்கம் ஆகுமோ?தமிழர் என்று நம்மைச் சொல்லிக் கொள்ளுவதில் நாம் ஏன் வெட்கம் அடைய வேண்டும்?

இந்தத் தமிழ்ப்பெயர் சூட்டலில், சிலர் சமய நெறிகளால் தயங்கலாம். என்னைக் கேட்டால், இங்கே சமயநெறி குறுக்கிடத் தேவையில்லை. சமயமும், தமிழ்மையும் ஒன்றிற்கொன்று எதிரானவை அல்ல. சிவ, விண்ணவ நெறிகளில் இருப்பவருக்கு எண்ணற்ற தமிழ்ப்பெயர்கள் அவர் தொழும் தெய்வத்தைக் குறிப்பதாகவும், அன்றி பொதுத் தமிழ்ப்பெயர்களுமாய் இருக்கின்றன. கிறித்துவ, இசுலாமிய மற்றும் பிற சமய நெறியாளர்கள் ஒரு சமயப் பெயரையும், ஒரு தமிழ்ப் பெயரையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாமே? தவறென்ன? காட்டாக, Joseph Raj என்பவர், வளன் அரசு என்று வைத்துக் கொள்ளாவிட்டாலும், குறைந்தது, ஜோசப் அரசு என்றாவது பெயரிட்டுக் கொள்ளலாமே? இதே போல இசுலாம் மற்றும் பிற சமய நெறியாளரும் விதப்பான பெயர்களை வைத்துக் கொள்ளலாமே? இதை அவர்கள் சமய நெறி தடுக்குமா, என்ன?

என் வேண்டுகோள்:

தமிழரே!, உங்கள் பிள்ளைகளுக்குத் தமிழில் இயற்பெயர் சூட்டுங்கள்.

அன்புடன்,
இராம.கி.

Friday, February 22, 2008

சிலம்பில் வரலாறு - 2

2. சிலம்பின் பதிகம்

பதிகம் என்ற சொல்லிற்குத் தமிழிற் பல பொருண்மைகள் உண்டு என்றாலும், பலரும் இரு பொருண்மைகளைக் கவனத்தில் எடுத்துக் கொள்வார்கள்.

ஒன்று: தேவாரம், நாலாயிரப் பனுவல் போன்றவற்றில் பத்துப் பத்துப் பாடற்தொகுப்புகளாய் அமையும் தொகுதியைக் குறிப்பது. (பல்து>பத்து>பத்திகம்>பதிகம் என்று இங்கு புரிந்து கொள்ள வேண்டும். சிலபோது பத்திற்கும் மேலே போய், இந்தப் பதிகங்களில் இன்னார் பாடினார் என்று சொல்லுமாப் போல ஒன்றிரண்டு பாடல்கள் நீட்சி காட்டுவதுண்டு.)

இன்னொன்று: சில பழந்தமிழ் இலக்கியங்களில், முன்னுரை போல் வந்து, நூலிற் சொல்லாத சில செய்திகளைச் சொல்லுவதாகும். (பற்றுதல்>பற்றிகம்>பத்திகம்>பதிகம் என்று இந்தச் சொல்வளர்ச்சியைப் புரிந்து கொள்ளலாம்.)

இரண்டாம் வகைப் பதிகமானது, எல்லா இலக்கியங்களுக்கும் அமையாமல், சிலப்பதிகாரத்தைப் போல் ஒரு சிலவற்றிற்கு மட்டுமே அமைந்துள்ளது. இத்தகைய பதிகங்கள் பொதுவாக நூற் படைப்பாளராமல் எழுதப் படாமல், இன்னொருவரால் படைப்புக் காலத்திலேயோ, அல்லது அதற்குப் பின் வேறொரு எடுவிப்பிலேயோ (edition), எழுதப்பட்டுச் சேர்க்கப் பட்டிருக்கலாம். சிலம்பின் பதிகமும் "இது போலத் தானோ?" என்று தோற்றுகிறது; ஆழ்ந்த வாசிப்பில் பார்த்தால், சிலம்புப் பதிகம் இளங்கோவடிகளாலோ, அன்றி அவருடன் இருந்த சாத்தனாராலோ, எழுதப்பட்டதாகக் கொள்ள முடியவில்லை. இத்தகைய முடிவிற்கு நாம் வருவதற்கான காரணங்கள் வருமாறு:

1. இளங்கோவடிகள், சாத்தனார் ஆகிய இருவருமே தன்மை நிலையில் அல்லாது, படர்க்கையிலேயே பதிகத்தினுள் குறிக்கப் படுகின்றனர். தவிர, பதிகத்தின் தொடக்க வாசகம் நம்மைப் பெரிதும் வியக்க வைக்கிறது. உலக வாழ்வைத் தவிர்த்துத் துறவியான ஒருவர், "குடக்கோச் சேரல் இளங்கோவடிகள்" என்று அரசப் பீடும், பெருமையும், பெயரும் சேர்த்து தன்னைத் தானே அழைத்துக் கொள்வாரா என்ற அய்யமும் எழுகிறது.

2. பதிகத்தில், "கண்ணகி கட்புலம் காண விட்புலம் போன" செய்தி, இளங்கோவடிகளிடத்து குன்றக் குரவர் நேரடியாய்ச் சொல்வதாகவும், "இறும்பூது போலும் அஃது அறிந்து அருள் நீ" எனக் குன்றக் குரவர் இளங்கோவடிகளிடம் வேண்டுவதாகவும் சொல்லப் படுகிறது. இதற்கு மாறாய், வஞ்சிக் காண்டத்திலோ,

"கான வேங்கைக் கீழோர் காரிகை
தான்முலை இழந்து தபித்துயர் எய்தி
வானவர் போற்ற மன்னொடும் கூடி
வானவர் போற்ற வானகம் பெற்றனள்"

என்ற செய்தி சேர மன்னனிடம் தெரிவிக்கப் படுகிறது. (அந்த இடத்தில் இளங்கோவும் இருந்தார் என்பதும் உண்மைதான்.) ஒரே செய்தி நூலின் இரண்டு இடங்களில், இரண்டு விதங்களில் வெளிப்படுவது நமக்கு வியப்பளிக்கிறது. அதைச் சற்று ஓர்ந்து பார்ப்போம்.

ஓர் அரசனின் திருவோலக்கத்தில் (தர்பாரில்) அரசனைத் தவிர வேறொருவரை முன்னிலைப் படுத்திப் பேசுவது பழங்கால நிலவுடைமைக் குமுகாயத்தில் வழக்கமில்லை. அரசனிடம் குன்றக் குரவர் செய்தி தெரிவித்த போது, அடிகள் அருகிருந்து கேட்டிருக்கலாம்; ஆனால் வஞ்சிக் காண்டத்திற்கு மாறாய், "அடிகளிடம் குன்றக் குரவர் சொன்னார்கள்" என்று அடிகளை முன்னிலைப் படுத்திப் பதிகம் சொல்லுவது முரணாய்க் காட்சியளிக்கிறது.

அதே போல, வஞ்சிக் காண்டத்துக் காட்சிக் காதையில் அரசனின் முன்னிலையில் சாத்தனார் உரைக்கும் நிகழ்வுக்கு மாறாய், "யானறிகுவன் அது பட்டது" என்று இளங்கோவடிகளை நோக்கிச் சாத்தனார் உரைப்பதாகப் பதிகம் சொல்லுகிறது.

பதிகம் சொல்லும் செய்தி விவரிப்பில், அரசனும் இல்லை, அவன் பரிவாரங்களுமில்லை. ஏதோ அடிகளை மட்டுமே குன்றக் குரவர் கண்டு அவருக்கு மட்டுமே கண்ணகி வானம் புகுந்த செய்தியைக் கூறுவதாய் அமைகிறது.

குறிப்பிட்ட கட்டத்தில் அரசனில்லாமல் வஞ்சிக் காண்ட நிகழ்வுகள் நடந்திருக்குமா? இளங்கோ என்ற துறவியா, வஞ்சிக் காண்ட நிகழ்வுகளை நடத்துபவர்? இது ஒரு முரண் அல்லவா? இப்படியான நிகழ்வு முரண்களை, முற்றிலும் விவரம் அறிந்த இளங்கோ அடிகள் தம் பதிகத்தில் எழுதியிருக்க இயலுமோ? (இவை போன்ற சிந்தனைகளால் தான், சிலம்பின் பதிகம் பெரும்பாலும் வேறு யாராலோ எழுதப் பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.)

3. அடுத்து, கண்ணகி மதுரையை எரித்த கதையைச் சொல்லி அதை "வினை விளை காலம்" என்று சாத்தனார் குறிப்புக் காட்ட, "யாது அவர் வினை விளை?" என்று அடிகள் கேட்டதாகவும், அதற்கு மதுராபுரித் தெய்வம் கண்ணகிக்கு முற்பிறப்புச் செய்திகளைச் சொன்னபோது வெள்ளியம்பலத்து நள்ளிருளில் சாத்தனார் தாம் கிடந்த போது கேட்டதாகவும் பதிகத்தின் வழி சொல்லப் படுகிறது. (வினை விளை என்பது ஒரு மெய்யியற் குறிப்பு. "முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்" என்ற கருத்து ஒரு சில நெறியினருக்கு ஒத்துவரும்; மற்றவர்க்கு ஒத்து வராது.)

அதே பொழுது, வெள்ளியம்பலத்து நள்ளிருளில் கேட்டதாய்ச் சொல்லும் இந்த விவரிப்பு கட்டுரைக் காதையில் இது போன்று அமையாது, கதை மாந்தர் வழியாகவே நேராக நீட்டி விவரித்துச் சொல்லப் படுகிறது; சாத்தனாரின் விவரிப்பு கட்டுரைக் காதையில் இல்லை.

4. தவிர, கண்ணகியின் முன் மதுராபதித் தெய்வம் தோன்றிய நேரத்திலும் கட்டுரை சொல்லிய நேரத்திலும் கூடப் பதிகமும், நூலின் உள்ளே வரும் காதைகளும், வேறுபடுகின்றன. (மதுராபதித் தெய்வத்தின் விவரிப்பு இற்றைக்கால அங்கயற் கண்ணியம்மையின் விவரிப்புப் போலவே ஒரு பார்வையில் தோற்றுகிறது. அது நமக்கு வியப்பாகவும் இருக்கிறது. மதுரைக்கும் கயற்கண்ணிக்கும் உள்ள தொடர்பு மிகுந்த நாட்பட்டது போலும்.)

நூலின் உள்ளே, அழற்படு காதையின் முடிவில் தெளிவாகச் சொல்லப் படுவது போல், மதுராபதித் தெய்வம் கண்ணகியின் முன் வந்து தோன்றிக் கட்டுரை உரைக்கும் நேரம், அந்தி விழவு தொடங்கும் நேரம் ("மாலை அயர மனைவிளக்கு உறுத்தும் நேரம்") ஆகும். [கோயில்களில் இன்றைக்கும் அந்திக் கால பூசை தொடங்கும் நேரம் - அதாவது மாலை தொடங்கும் நேரம் 1800 மணியளவு ஆகும்.] கோவலன் இறப்பும், அதைத்தொடர்ந்து பாண்டியன், அவன் பெண்டு ஆகியோர் இறப்பும் முடிந்து, ஊரும், மக்களும் கொந்தளித்து அல்லோகலப்படும் அந்தி நேரத்தில் மதுராபதியின் கட்டுரை கண்ணகிக்குச் சொல்லப் படுகிறது. தவிர அழல் தொடங்கியது மாலை நேரம் தான்; யாமம் அல்ல.

பதிகத்திலோ, மதுராபதித் தெய்வத்தின் கட்டுரை இரவின் நடு யாமத்தில், நள்ளிருளில், சொல்லப்படுகிறது. ஆக, அழற்படு காதைக்கும், பதிகத்திற்கும் இடையே மதுராபதி தோன்றிய காலத்தைக் குறிப்பதில் ஒரு 15 நாழிகை (= 6 மணி நேர) முரண் ஏற்படுகிறது. இப்படி ஒரு காலமுரணை ஒரே ஆசிரியர் செய்வாரா? இருவேறு ஆசிரியராய் இருந்தால் தான், புரிதற் பிழையால் இப்படி ஒரு கால முரண் ஏற்படலாம்.

5. கண்ணகி, கோவலன் ஆகியோரின் முற்பிறப்புக் கதையை மதுராபுரித் தெய்வம் விவரித்ததாய்ச் சாத்தனார் சொல்ல, அதைக் கேட்ட அளவிலேயே,

"அரைசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவதூஉம்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்"

என்று காப்பியத்தின் குறிக்கோளை சட்டென்று அறிவுத் தெளிவோடு இளங்கோவடிகள் சொல்லி, "நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பதிகம் சொல்லுவது நமக்கு ஓர் நாடகத் தனமான கூற்றாகவே தோற்றுகிறது. "அப்படி ஓர் சிந்தனைத் தெளிவு, கதையை முதன் முதலாய்க் கேட்ட அளவிலேயே ஒரு படைப்பாளனுக்குச் சட்டென்று ஏற்பட்டுவிடுமா? கொஞ்சம் அலசி "அந்தக் கதை என்ன குறிக்கோளைக் குறிக்கிறது, எதை எடுத்துச் சொல்லுகிறது, ஊராருக்கு என்ன உணர்த்த வேண்டும் என்றெல்லாம் ஒருவர் நாட்பட ஓர்ந்து பார்க்க மாட்டாரா?" என்ற கேள்விகளும் நமக்குள் எழுகின்றன.

இத்தனைக்கும், குன்றக் குரவோர் வந்து கண்ணகி வானேறிய செய்தியைச் சொல்லும் போது, "உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தல்" என்ற குறிக்கோளைப் பின்னால் நிலைநிறுத்தும் கல்கோள் (கால்கோள் என்ற வாசிப்பு சரியில்லை என்றே புறப்பொருள் வெண்பாமாலை வழியாக உணருகிறோம். அது கால் கோளல்ல; கல் கோள்; கல்லைக் கொள்ளும் செயல்; இந்த வாசிப்புக் கோளாறை இன்னொரு முறை பார்க்கலாம்.), நீர்ப்படை, நடுகல், வாழ்த்து ஆகிய நிகழ்வுகளே கதையில் நடந்திருக்கவில்லை. தவிர, பதிகத்தின் படிதான், சேரன் செங்குட்டுவனும் மற்றோரும் அந்தக் காட்சியிலேயே இல்லையே? "உரைசால் பத்தினியை அரசனும் உயர்ந்தோரும் எப்படி ஏத்தப் போகிறார்கள்?" என்று தெரியாத நிலையில், வஞ்சிக் காண்டக் காதைகளின் தலைப்புகள் இங்கே பதிகத்தில் எப்படி விவரிக்கப் படுகின்றன? படிக்கும் நமக்கு வியப்பாக இருக்கிறது.

6. "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக" என்றாற்கு அவர்
........................
.......................
.......................

உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்
உரைசால் அடிகள் அருள"

என்ற வரிகளில் "உரைசால் அடிகள் அருள" என்று வந்த பின், "அவர்" என்னும் சொல் யாரைக் குறிக்கிறது? புரியவில்லை. தவிர, அரசன் இருக்கும் அவையில், இது போன்று சொல்ல வேறு யாரால் முடியும்? "முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது" என்று அரசன் கூறினால் அதில் ஓர் அமைதி இருக்கிறது; மற்றவர் அதைக் கூற முடியுமோ? இங்கு யார் அதிகாரத்தில் முன்னிலைப் படுத்தப் படுகிறார்கள்? அரசன் தான் இந்தக் கதையை எழுதச் சொன்னதாய் பதிகத்தின் வழி புரிந்து கொண்டால், அப்படி ஒரு கூற்று, வஞ்சிக் காண்டத்துள் எங்கும் வரவில்லையே?

7. .......................................... மதுரைக்
கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்
இது,
பால்வகை தெரிந்த பதிகத்தின் மரபென்

என்ற பதிகத்தின் முடிப்பு வரிகள் "பதிகத்தை வேறு யாரோ எழுதியிருக்க வேண்டும்" என்று தெளிவாக உணர்த்துகின்றன. இளங்கோ எழுதியிருந்தால், "அடிகள் அருள, சாத்தன் கேட்டனன்" என்று எழுத மாட்டார். "யான் சொல்ல, சாத்தன் கேட்டனன்" என்பதோடு அமைந்திருப்பார். சாத்தன் எழுதியிருந்தால், "அடிகள் சொல்ல, யான் கேட்டேன்" என்று எழுதியிருப்பார். எனவே, உறுதியாகப் பதிகம் என்பது, இளங்கோவாலும், சாத்தனாராலும் எழுதப் படவில்லை. இது யாரோ ஒரு மூன்றாம் மாந்தர் எழுதியது. அதோடு இல்லாமல், வஞ்சிக் காண்டம் வரை கதையை முற்றிலும் படித்த ஒருவர், அதன் விவரங்களைச் சுருக்கி, காதைத் தலைப்புகளையும் தந்து, "கதைக்களன் எப்படித் தோன்றியது?" என்று விளக்க முற்பட்டு, குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளை முன்பின்னாக எடுத்துக் காட்டி, அவற்றில் தன் சொந்தக் கருத்தையும் பொருத்தி (காட்டாக வினை விளை பற்றிய மெய்யியல்), முரண்பட்டு நிற்பதும் வெள்ளிடைமலையாய்த் தெரிகிறது.

இந்தச் சிலம்புப் பதிகம் என்பது நூல் எழுதப் பட்டு மிகுந்த நாட்கள் கழித்தே எழுந்திருக்க முடியும் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. அதே பொழுது அரும்பத உரைக்கும் முன்னால் எழுந்திருக்க வேண்டும்.

அன்புடன்,
இராம.கி.