Wednesday, December 27, 2023

தாண்டவம்

நேற்றுப் பார்த்தால் ”ஆரூத்ராத் தர்ஸனம், ஆருத்ரா அபிஷேகம், ஆரூத்ரா ரதோற்சவம்” என்று எல்லாம் சங்கத மயம்.

ஆரூத்ராவை மூன்றுவிதமாய் அணுகலாம். முதல் வகைக்கு வருவோம்.

இது சிவன் பற்றியது. நடவரசன் தொன்மம் எழாத ஆதிக்காலத்தில் ஆதித் தமிழ்மாந்தன் எரியும் நெருப்பைக் கண்டு அச்சப் பட்டான். அது அவனை உலுக்கியது. உருக்கியது. ஒளித்தது. பின் ஒழிக்கவும் செய்தது.

எல்லாம் உல் எனும் வேரில் தொடங்கிய சொற்கள். உருத்தது முதலில் எருத்தது. பின் எரித்தது, உரு> எரு> எரி. உல்> ஒல்> ஒள்> ஒளி. ஒளியில் பொன்னிறமும், சிவப்பு நிறமும் தெரிந்தன. சிவப்புப் பொருளில், உருத்தது, அருத்து, அரத்து, அரத்தமானது. சிவன் இன்னும் திரிந்து அருத்தன்> அர்த்தன்> ஆர்த்தன் ஆனான். ஆர்த்தன் என்பது சிவனுக்கு இன்னொரு பெயர். ஆர்த்தனைச் சங்கதம் ஆ(ர்/)ருத்ரா> ஆரூத்ரா என்றாக்கும். மீளக் கடன்வாங்கிப் பயன் உறுத்துகையில் அரத்தன் என்ற சொல்லின் இணைப்பை நாம் மறப்போம்.

அடுத்து இரண்டாம் வகைக்கு வருவோம்.

அதே ஆதித் தமிழ்மாந்தன் இரவு நேரத்தில் வானத்தின் உடுக்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வானத்தின் ஒரு பக்கலில் ஒவ்வொரு ஆண்டின் குறித்த மாதங்களில் 7,8 உடுக்கள் மிகவும் சொலித்தும், அவற்றின் நடுவில் சிவந்த உடுவொன்று வெகுதொலைவில் தெரிவதையும் கண்டான்

அதற்கு ஆர்த்தை> ஆர்த்திரை> ஆத்திரை> ஆதிரை என்ற செம்பொருள் பெயரை இட்டான். தான் வணங்கும் ஆர்த்தன் ஆர்த்தையில் வதிவதாய் ஒரு தொன்மம் கற்பித்துக் கொண்டான். எனவே சிவனுக்கு ஆதிரையான் என்பது இன்னொரு பெயராயிற்று.

திகரம் தவிர்த்த ஆரையான் என்ற சொல் இன்று மேலை வானியலில் Orion உடுக்கூட்டத்திற்குப் பயன்படும் இந்த ஆரையான் உடுக்கூட்டத்தின் நடுவே ஆதிரை (Betelgeuse is the brightest near-infrared source in the sky with a J band magnitude of −2.99; only about 13% of the star's radiant energy is emitted as visible light. If human eyes were sensitive to radiation at all wavelengths, Betelgeuse would appear as the brightest star in the night sky.) தென்படும். ஆக இரண்டாம் வகையில் ஆதிரை என்பது சிவனின் விண்ணுலக இருப்பிடத் தொன்மம்.

இனி, மூன்றாம் வகைக்கு வந்துவிட்டோம்.

காலைத் தூக்கி நின்றாடும் தெய்வம் பற்றிய தொன்மம், பெரும்பாலும் 2000 ஆண்டுகளுக்கு முன் எழுந்திருக்கலாம். காலைத் தூக்கி உயர்த்துவதைத் தமிழில் உந்துதல்> உத்துதல் என்பார். உந்து, உத்து, உந்தம், உதை போன்ற சொற்களை இங்கே எண்ணிப் பாருக. உத்தம்>ஊர்த்தம் என்பது நிற்றலையும், உயர்த்தலையும் குறிக்கும்.

ஆல்-தல் = சுற்றல், ஆடல். ஆடு என்பதன் வேர் ஆல் தான். ஆல்> ஆலு> .ஆளு> ஆடு. ஆலூர்த்தம் = காலைத் தூக்கி நின்றாடும் ஆட்டம் இதில் மேலும் ல்>ர் மாற்றம் செய்வதும் தமிழில் உண்டு. ஆரூர்த்தம் என்பதற்கும் அதே பொருள் தான், வழக்கம் போல் ஆருர்த்தத்தில் ரகரம் நுழைத்து ”ஆரூர்த்ரா” என்று சங்கதம் ஆக்கும். இந்த மூன்றாம் கருத்தே நடவரசனைக் குறித்தது. நடத்தின் அரசன் நடவரசன்.

வழக்கம் போல் தமிழை விட்டுச் சங்கதத்தைப் பிடித்து நாம் தொங்குவோம். அம்மாவை எத்தனை தடவை வேண்டுமாயினும் உதைக்கலாம். அவள் பொறுத்துக் கொள்வாள் எனும் அலட்சியம் நமக்கு நிறையவே உண்டு..

இந் நடத்திற்கு இன்னொரு சொல்லும் உண்டு. காலைத் தூக்கி நின்றாடு-தல் எனும் நீள வினையைத் ”தாண்டு-தல்” என்றும் தமிழில் சுருங்கச் சொல்லலாம். அவன் ஆடுவது தாண்டவம். அவன் தாண்டவன். தாண்டுகை - dance. (ஆங்கில c ஒலிப்பை k என ஒலித்துப் பாருக. இரண்டிற்கும் உள்ள ஒற்றுமை புலப்படும்.)

”தாண்டவன் தெரியனம், தாண்டவன் முழுக்காட்டு, தாண்டவன் தேரோட்டம்” என்று எப்போது தமிழில் சொல்வோம்?

No comments: