Monday, December 18, 2023

சுவடிப் பதிப்பின் சிக்கல்கள்

 ”அல்லிகதை” என்ற நூலை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியத்துறைகளில் முன்னாள் தலைவர், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா. இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டார். அதன் பதிப்புரையில் வரும் ஒரு பகுதியைத் தட்டச்சி இங்கு கீழே தருகிறேன். Plain text, Word format, PDF என்று பொலப்பொலவெனக் கொட்டும் ஆவணங்களைச் சொடுக்கிப் பெற்று ஒருங்குறி எழுத்தில் படிப்பதற்கும், அச்சில் படியெடுப்பதற்கும், Tamil Concordance போன்ற பேரா. பாண்டியராசவின் தளத்தில் இருந்து எதையும் தேடுவதற்கும் வாய்ப்புப் பெற்ற நம் போன்றோர்  19 நூற்றாண்டின் கடைசியிலும். 20 ஆம் நூற்றாண்டு முழுதும் நமக்காக விழுந்து விழுந்து கண்வலிக்கப் பாடுபட்டுப் பதிப்பித்தோரைச் சட்டென்று குறை சொல்லிவிடுகிறோம். 

ஒழுங்கால இலக்கியப் பதிப்புகளைக் கூர்ந்துபடிக்காது, தம் அரைகுறை அறிவை மறைத்துக் கொண்டு, முகன அப்பாலியம் (post modeenism), இலக்கியக் கட்டமைவம் (structuralism in literature) என ஏதேதோ சொல்லிக் கொண்டும், நக்கீரரென தமை நினைத்துக் கொண்டும் குறை சொல்கிறவர் இன்னும் மோசம்.  

அருள்கூர்ந்து, நம் போன்றோர் எல்லோரும் சுவடிப் பதிப்பின் சிக்கல்களைப் புரிந்துகொள்ளட்டும்.  

------------------------------

நெடிய கால இடைவெளிக்குப் பின்னர் ஒரு நூலினைப் பதிப்பிக்கும் போது ஆசிரியரின் உண்மைப் பாடத்தைத் தெளிந்து பதிப்பிப்பது என்பது மிகவும் சிக்கலான செயலாகும். கிடைக்கின்ற பல்வேறு சுவடிகளையும் திரட்டி அவற்றில் காணும் பல்வேறு பாடங்களையும் நுணுகி ஆராய்ந்து உண்மைப் பாடல் கண்டு புதிப்பித்தல் வேண்டு. ’மூலபாட ஆய்வியல்’ (Textual criticism) என்னும் துறை இன்று விரிவாக ஆராயத்தக்க துறையாக வளர்ந்துள்ளது. இச்சுழலில் பண்டையோர் பதிப்பித்த்த நூலின் பதிப்பு நெறி முறைகளைக் காணும்போதுதான் அவர்களுடைய அரிய முயற்சி நன்கு புலனாகும்.

சுவடிகளில் ஒற்றெழுத்துகளுக்குப் புள்ளியும், நெட்டெழுத்தைச் சுட்டும் கொம்பு வேறுபாடுகளும் சீஇர் அடி பிரித்து எழுதிய முறைகளும் இரா. இவற்றைச் சுவடி இயல் புலமை கொண்டோரே ஓர்ந்து அறிந்து உணர்ந்து எழுதமுடியும், பொறுமையும், பயிற்சியும் இப்பணிக்குத் தேவையாகும். இப்பணியில் உள்ள அருமைப்பாடு குறித்து அறிஞர் முருகவேள் பின்வருமாறு கூறுவார்.

ஏடுபடித்தல் என்பது ஒரு கலை.

எல்லோரும் ஏடு படித்தல் இயலாது.

தனியே அதற்குத் தக்கநற் பயிற்சி

பெரிதும் உழைத்துப் பெறுதல் வேண்டும்.

செல்லும் பூச்சியும் ஏட்டைச் சிதைக்கும்.

ஏடுகள் ஒடிந்தும் கிழிந்தும் இருக்கும்.

மெய்யெ ழுத்துகள் புள்ளி எய்தா.

ஒன்றைக் கொம்பும் சுழீன் கொம்பும் 

வேறுபா டின்றி ஒத்து விளங்க்கும்.

காலும் ரகரமும் ஒன்றே போலு.

பகர யகரம் நிகர்உறத் திகழும்

கசதநற என்பவை  வசதியாய் மாறி

ஒன்றன் இடத்தை மற்றொன்று கவரும்.

எழுதுவோர் பலப்பல பிழைகளைப் புரிவர்.

பக்கங்கள் பலப்பல மாறிக் கிடக்கும்.

சீரும் தளையும் செய்யுள் வடிவும்

சரிவரத் தெரியா வரிகள் விடுபடும்.

இத்தகு நிலைகளால் எத்தனையோ பல

குழப்பமும் கலக்கமும் விளைத்து நிற்கும்.

‘தொன்றுமொழி’ அந்தோ ‘தோன்றுமொழி’ ஆகும்.

‘எதிபங்கம்’ அந்தோ ‘எதிர்பங்கம்’ என ஆம்.

‘யவ மத்திமம்’ எனும் எழிற் பெருஞ் சொல்தான.

’பவ மத்த்மம்’ எனப் பண்பிற் பிறழும்.

‘அரிய வழக்கு’ ஆன்னோ ‘ஆரிய வழக்காம்’.

‘போரவை’ மாறிப் ‘போர்வை’ எனப்படும்.

‘அல்குதடம்’ எனும் அழகிய தொடர்

‘அல்குற்றடமாய்’ அருவருப்புத் தரும்!

தகர சகரம் குறிக்கும் ‘தச்சகரம்’

‘தசக்கரம்’ ஆகித் தரங்கெட்டு நிற்கும்.

இனையபல் பிழைகளை யெல்லாம் களைந்து

செப்பண் இட்டுத் திருத்தி அமைத்து

அறிஞர்கள் ஏற்ப ஆய்ந்தாய்ந்து பதிக்கும்

பதிப்பாசிரியர் பணியின் சிறப்பு

பெரிது! பெரிது! மிகவும் பெரிதே!

எனச் சுவடி படிக்கும் போதும் எழுதும் போதும் ஏற்படுகின்ற பல்வேறு இடர்களையும் பாங்குறப் புலப்பௌத்துகின்றார். இத்தகு இடர்ககையெல்லாம் களைந்து பதிப்புப்பணியில் ஈடுபட்ட தமிழறிஞர்களின் பணியைப் பின்பற்றி உழைப்பதே நாம் அவர்கட்க்குச் செலுத்தும் நன்றியாகும்.

------------------------  

 


 


     

No comments: